சென்ற வாரத்தில் ஓர் அபூர்வமான மீடியா தினம். அன்று விமானங்கள் எதுவும் விழவில்லை; காபினெட் அமைச்சர்களோ, காவி சாமியார்களோ கூட வம்பு வழக்கு எதிலும் சிக்கிக் கொள்ளவில்லை. எனவே விஞ்ஞான விஷயம் ஒன்று முதல் பக்கச் செய்தியாயிற்று: அமெரிக்காவில் க்ரெய்க் வெண்ட்டர் கழகத்தில் முதல் தடவையாக செயற்கை உயிரை உருவாக்கியிருக்கிறார்களாம்!
அவர்கள் உருவாக்கியது உயிர்தானா, அதில் எவ்வளவு சதவீதம் செயற்கை என்று பார்ப்பதற்கு முன், நம்மைப் பற்றியே கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.
வடை செய்வதற்கு உளுந்து தேவை. ஒரு மனிதனை, பசு மாட்டை அல்லது பாக்டீரியத்தைத் தயாரிப்பதற்கு ப்ரோட்டின்கள் தேவை. இந்த ப்ரோட்டின்கள் என்பவை, கெமிஸ்ட்ரியைப் பொறுத்தவரை அமைனோ அமிலங்கள். அமைனோ அமிலங்களை வித விதமாகக் கோர்த்து மாட்டினால் முடி, நகம், இதயம், கிட்னி எல்லாம் தயாரிக்கலாம்.
அமைனோ அமிலம் தயாரிப்பது எப்படி என்ற சமையல் குறிப்பு நம் டிஎன்ஏவில் உள்ள ஜீன்களில் பொதிந்திருக்கிறது. ஜீன் என்பது நான்கு வித மூலக்கூறுகளின் விதவிதமான சரளி வரிசைகள். அடினின், தைமின், குவானின், சைடோஸின் என்று பெயர். சுருக்கமாக A,T,G,C.
இந்த ATGC க்குள் புகுந்து பார்த்தால், கடைசியில் அவை வெறும் நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்களின் அமைப்புதான் என்று தெரிகிறது. எல்லாமே காற்றில் இருந்து எடுத்த சமாச்சாரம். நம் உடம்பைப் பற்றி ‘காற்றடைத்த பையடா’ என்று சித்தர் சொன்னது ஜெனடிக் சத்தியம்!
வேறொரு விதத்தில் சொல்ல முயன்றால், நாம் ஒரு பாட்டு. அ,டி,க,ஸ என்று நாலே ஸ்வரங்களால் ஆன ட்யூன். நாலு ஸ்வரங்களில் இயற்கை எத்தனை கோடி ட்யூன் போட்டிருக்கிறது. லட்சக்கணக்கான வருடமாக அவற்றை மெல்லக் கலைத்து மாற்றிப் புதிய ட்யூன்கள் முயன்று கொண்டிருக்கிறது…
இப்போது விஞ்ஞானிகள் இதே நாலு ஸ்வரங்களில் தாங்களாகவே இயற்கையின் முழுப் பாட்டு ஒன்றை வாசித்திருக்கிறார்கள். அதுதான் க்ரெய்க் வெண்ட்டரின் ப்ராஜெக்ட். இந்த இயல் இன்னும் வளர்ந்தால் ஒரு நாள் நாமே புதிய ட்யூன்கள் போடலாம். இது வரை இல்லாத புதிய உயிரினங்களை உருவாக்கலாம்.
வெண்ட்டர் குழுவினர், விண்டோஸ் 95 காலத்திலிருந்தே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்தது இதுதான் :
(1) ஆடு மாடுகளுக்கு டி.பி வியாதி வரவழைக்கும் கெட்ட பாக்டீரியா ஒன்று இருக்கிறது. மைகோப்ளாஸ்மா மைகாய்ட் என்ற இந்தக் கிருமியின் ஜெனோமில் உள்ள பரிணாமச் செய்தி அனைத்தையும் அலசிக் கண்டறிந்து கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
(2) கம்ப்யூட்டரிலிருந்து இந்தத் தகவல் டி.என்.ஏ தயாரிக்கும் சிந்தஸைஸர் கருவி ஒன்றுக்கு சிறுகச் சிறுகச் செல்கிறது. அதில் நான்கு பாட்டில்களில் வேதியியல் கலவைகள். (என்ன கலவை என்பது என் கண்ணுக்கெட்டியவரை அகப்படவில்லை. கோக்கோ கோலா ரகசியம் போலிருக்கிறது). கம்ப்யூட்டர் ஆணைப்படி கலவைகளைக் கலந்து புதிய மூலக்கூறுகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே கம்ப்யூட்டர்தான் இந்தப் புதிய உயிரினத்தின் அப்பா, அம்மா எல்லாம்.
(3) இப்படி உருவாவது, சின்னச் சின்ன துணுக்குகளாக இருக்கும் ஜெனோம். இவற்றை நீண்ட டிஎன்ஏ சரடாகக் கோர்த்து இணைப்பதற்கு யீஸ்ட், ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்களின் உதவியை நாடுகிறார்கள். அவை தமிழ் சினிமாவுக்குக் கதை தயாரிப்பது போல் துண்டு துணுக்குகளையெல்லாம் ஒட்டுப் போட்டு முழு நீள டிஎன்ஏவாக ஒப்பேற்றிக் காட்ட வல்லவை.
(4) இதை இப்படியே இயற்கையாக விடாமல் நடுநடுவே சில சங்கேதக் குறியீடுகளையும் பதித்து அனுப்புகிறார்கள். பாக்டீரியாவைப் பொறுத்த வரை இவை ஜெனடிக் குப்பை. ஆனால் பிறகு இந்த செய்திக் கோவைகள் ஜெனோமின் பயணத்தைப் பின்பற்ற விஞ்ஞானிகளுக்கு உதவும்.
(5) முழு டிஎன்ஏ தயாரான பிறகு அதை மற்றொரு பாக்டீரியாவுக்குள் பொதித்து வைத்து வளர்க்கிறார்கள். காப்ரிகோலம் என்ற பாக்டீரியா, முன்னே சொன்ன மைகாய்டின் சித்தப்பா. புதிய செயற்கை டிஎன்ஏவை அது தன்னுடைய சொந்த மகன் போலவே பாசத்துடன் வளர்க்கிறது; பல லட்சம் பிரதிகள் எடுக்கிறது.
(6) ‘செயற்கை உயிரைத் தயாரித்துவிட்டோம்’ என்று விஞ்ஞானிகள் கொஞ்சம் ஓவராகவே ரீல் சுத்துகிறார்கள்.
சரி. இந்த ஆராய்ச்சியின் தாக்கங்கள் என்ன?
இது நாள் வரை மரபீனிகள் இயற்கையில் தாமாகவே உருவானவைதான். பல்லாயிரம் வருடப் பரிணாமத்தில் புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகியவைதான் நமக்கு இது வரை தெரிந்த உயிரினங்கள். இப்போது செயற்கையாக ஜெனோம் சரடுளைத் தயாரிக்க முடிந்துவிட்டதால், கடவுளின் வேலையில் நாமும் கொஞ்சம் சப் காண்ட்ராக்ட் எடுக்கலாம். புதிய உயிரினங்களை உருவாக்கலாம்.
இதனால் ஸ்பீல்பர்க் படத்தில் வருவது போல் பல்லை நறநறக்கும் பயங்கரப் பிராணிகள் நாளைக்கே நம் வீட்டுக்குள் புகுந்து விடுமோ என்ற கவலை வேண்டாம். இன்னும் எவ்வளவோ ஆராய்ச்சிகளும் விபத்துக்களும் சட்டங்களும் லஞ்சங்களும் தாண்டித்தான் அது நடக்கும்.
ஆனால் குறுகிய காலத்தில் செய்யக்கூடியது, செயற்கை பாக்டீரியா – அல்லது வைரஸ் என்று சொல்வது அதிகப் பொருத்தமாக இருக்கும் – தயாரிக்க முடியும். அவற்றில் சிலவற்றை உருப்படியான வேலைகள் செய்ய வைக்கலாம். கடலில் குரூட் ஆயில் கொட்டிவிட்டால் அதை நீட்டாகச் சாப்பிட்டு சுத்தம் செய்ய ஒரு பாக்டீரியா. காற்றில் அதிகரித்துவிட்ட கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சிக் கொள்ள ஒரு பாக்டீரியா. புதிய மருந்துகள், வாக்ஸின்கள்… பகல் கனவுகள் நீள்கின்றன.
‘இப்படியெல்லாம் நல்ல நல்ல உதாரணங்களை மட்டுமே சுட்டிக் காட்டி யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் ?’ என்று கர்ஜிக்கிறார்கள் செயற்கை-உயிர் ஆராய்ச்சிகளை எதிர்ப்பவர்கள். எப்போதுமே மனிதன் நல்லது செய்வதை விட ‘அல்லது’ செய்வதற்கே அதிக ஆராய்ச்சி நிதிகள் கிடைப்பது வழக்கம். எனவே இதன் ராணுவ உபயோகங்கள், புதிய வியாதிகள், பேடண்ட் வாங்காத பயிர்களைக் கபளீகரம் செய்வதற்கு டிசைனர் பூச்சிகள் – இந்தத் திசையில்தான் நிறைய வேலை செய்யப் போகிறார்கள். மேலும் என்றைக்காவது ஒரு நாள் ஏதாவது ஒரு பரிசோதனைக் கூடத்தில் யாராவது ஒரு மடையன் கை தவறி ஒரு கண்ணாடிக் குடுவையைப் போட்டு உடைக்கத்தான் போகிறான். சந்தடி சாக்கில் செயற்கை பாக்டீரியா வெளியே தப்பித்து விட்டால் ? எதிர்பாராத விதங்களில் பரிணாம மாற்றங்கள் அடைந்து பூதாகாரமாப் பரவிவிட்டால் ?..
தேவாலயம் முதல் ஒபாமா வரை பலரும் அவசர அவசரமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்கள்; கமிட்டி அமைத்திருக்கிறார்கள். வயிற்றெரிச்சல் விஞ்ஞானிகள் ‘இது என்ன பிரமாதம்? எங்களாலும்தான் இதைச் செய்திருக்க முடியும்’ என்கிறார்கள். ஆனால் ஹைதராபாதில் பார்க்கவா போன்ற விஞ்ஞானிகள் கூட, ‘இது வழக்கமான ஜெனடிக் எஞ்சினியரிங்கில் இருந்து அதிகம் வித்தியாசமானது அல்ல. கொஞ்சம் பெரிய அளவில் அதையேதான் செய்திருக்கிறார்கள்’ என்றே சொல்கிறார்கள்.
ஒரு செல் என்பது வெறும் டிஎன்ஏ மட்டுமல்ல. அது ஒரு வாழும் உலகம். தனிப்பட்ட சிக்னல்கள் வைத்துக்கொண்டு வெளி உலகத்துடன் தொடர்பு கொள்கிறது; தன்னைத் தானே படி எடுத்துக் கொள்கிறது; ரிப்பேர் செய்து கொள்கிறது. ஆட்டோஃபேஜி, ட்ரான்ஸ்க்ரிப்ஷன், மெடபாலிசம் என்று பற்பல மைக்ரோ நாடகங்களை நடத்துகிறது. கடைசியாகத் தற்கொலை கூடச் செய்துகொள்கிறது. இதையெல்லாம் சோதனைச் சாலையில் செய்ய முடிந்தால் செயற்கை உயிர் என்று ஒத்துக் கொள்வது பற்றி யோசிக்கலாம்.
எப்படியோ, அடுத்த இரண்டொரு வருடங்களில் நிறைய நடக்கப் போகிறது. சின்த்தெடிக் பயாலஜி என்ற புதிய இயல் பெரிதாகக் கிளம்பப் போகிறது!
க்ரெய்கின் அணியில் மொத்தம் 24 பேர். அதில் மூன்று இந்தியர்கள். சஞ்சய், ராதா, பிரசாந்த்.
நல்ல வேளை, கடனை உடனை வாங்கியாவது அவர்கள் பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
–o00o–
இந்த வாரத்திற்கு இதுதான் ஜோக் :
விஞ்ஞானிகள் கடவுளிடம் போனார்களாம். ‘நாங்களே செயற்கையாக உயிரைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டதால் இனி சிருஷ்டியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எனவே நீங்கள் வி.ஆர்.எஸ் எடுத்துக்கொண்டு மறை மலை நகரில் அரை கிரவுண்டு வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக ஓய்வெடுக்கப் போகலாம்’ என்றார்கள்.
கடவுள் ஒத்துக்கொள்ளவில்லை. ‘அது எப்படி? நான் ஒரு பிடி மண்ணை எடுத்து மனிதனைப் படைப்பேன். உங்களால் முடியுமா?’ என்று சவால் விட்டாராம்.
போட்டிக்கு நாள் குறிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் பெரும் பெரும் கம்ப்யூட்டர்கள், பயோமெடிக்கல் கருவிகளுடன் வந்து இறங்கினார்கள்.
கடவுள் ஒரு பிடி மண்ணை எடுத்தார். உள்ளங்கையில் வைத்து ‘ஜீ பூம்பா’ என்றார். அது மனிதனாகி வணங்கி நின்றது.
விஞ்ஞானிகள் குனிந்து மண்ணை எடுத்து இயந்திரத்தில் போட முற்பட்டார்கள்.
‘வெயிட் எ மினிட்!’ என்றார் கடவுள். ‘இதெல்லாம் நான் படைத்த மண். போய் உங்களுடைய மண்ணைக் கொண்டு வாருங்கள்!’ என்றாராம்.