‘பூதங்கள்,மாயம்,மிருகங்கள் போன்றவை இன்றிரவுக் கதையில் இருக்கக்கூடாது’
ஆயிரத்தொரு இரவுகளின் ஓர் இரவில் பேரரசர் ஷாஹிரார் ஷரசாத்திடம் தன் நிபந்தனையைக் கூறினார். வழக்கமாக கதை சொல்லும் நேரம் வரும்போது மிருகங்கள், மந்திர மாயக் கதைகளைச் சொல்லி தன் உயிரைக் காத்து வந்த ஷரசாத்துக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. கதை கூறாமல் ஒரே ஒரு இரவைக் கடத்தினாலும் தனக்கு மரணம் நிச்சயம் என்பதால், வழக்கமாக அவள் மட்டுமே நிபந்தனை விதிப்பாள். ஆனால், பலதரப்பட்ட வினோதக் கதைகளைக் கூறியே நாட்களைக் கடத்தி விடுவாள் எனத் தெரிந்ததால் தொடங்குமுன் இந்த நிபந்தனையைப் பேரரசர் கூறினார்.
இதைக் கேட்ட ஷரசாத் மனம் தளராமல் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து கதைகளைச் சொல்லத் தொடங்கினாள் என ஆயிரத்தொரு இரவுகளைப் பற்றி செவி வழிக்கதை உண்டு.
நம் பஞ்சதந்திரக் கதைகள் போல, பெர்ஷியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைத் தொகுப்பு மாய மந்திரக் கதைகளின் தொடக்கம் மட்டுமல்லாது, மக்களின் வாழ்க்கையிலிருந்த சந்தோஷம், சோகம், அபத்தம் போன்ற அடிப்படை உணர்வுகளைப் பிரதிபலித்த கதைகளுக்கும் முன்னோடியாக அமைந்தன.
இன்றளவும் உலகின் பல மூலையிலுள்ள இலக்கியத்தின் மரபார்ந்த வேரைத் தொடர்ந்தால் இப்படிப்பட்ட நாட்டுப்புற/மாயக் கதைகளைச் சென்றடையலாம். ஆனாலும் இப்படிப் பல நூற்றாண்டுகளாக தழைத்து வரும் கதைகளின் பரிணாம வளர்ச்சி குறைவே. நூற்றாண்டுகள் கடந்தும் நாம் மனிதர்களின் பழக்க வழக்கங்கள், நண்பர்கள், பகைவர்கள், காதலி, மகிழ்ச்சி, சோகம் போன்ற சங்கதிகளையே மாற்றாமல் வெவ்வேறு பாணியில் கூறி வருகிறோம். சிறுகதை, நாவல் சொல்லும் கதையும் இதை நோக்கியே வளர்ந்து வந்துள்ளன. இப்படிப் பயணிக்கும் கதையின் நோக்கம் என்ன? கதைகள் கால இயந்திரமாக மாறி நம்மை கால தேச வர்த்தமானங்களைக் கடக்க வைக்கிறது. பல மனிதர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையை நமக்கு அளிக்கின்றன. இதனால் கதைகள் சித்தரிக்கும் சமூக குறிப்புகள் நம் புரிதலுக்கு முக்கியமாகின்றன. நாமறியாத அந்நிய உலகம் இக்கதைகள் மூலம் நம் முன்னே விரிவடைந்து, புதிய சமூகங்கள் நம்மிடையே உறவு கொள்கின்றன.
நேரடியாக புதிய உலகைத் தெரிந்துகொள்வதற்கு முன், கதைகள் வழியாக புரிந்துகொள்ள மொழி பெரிய தடையாகிறது. தமிழ் மக்களைப் பற்றி வெளிநாட்டவர் தெரிந்து கொள்ள முயன்றால், மிகச் சொற்பமான நூல்களே அவருக்குக் கிடைக்கக்கூடும். அப்படிக் கிடைக்கும் செய்திகளும் ஒரு முழு சித்திரத்தை அளிக்காது. இப்படி பூதம் காத்த புதையலாக பல சமூகங்களின் புத்தகங்கள் மொழி மாற்றம் செய்யப்படாமல் சிறைப்பட்டு கிடக்கின்றன. இவற்றை மீறி மொழிமாற்றம் செய்யப்படும் புத்தகங்கள் ஒரு சமூகத்தையே அறிமுகப்படுத்தக்கூடிய வல்லமை பெற்றவை.
அண்மைக்காலங்களில் அரபு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பல புத்தகங்கள் இந்த எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கின்றன.
கெய்ரோ, ரியாத் போன்ற நகரங்களில் வாழும் மக்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அன்றாட நிகழ்வுகள், குரூரப் போர்கள், பண்டைய சரித்திரம் என ஊடகங்கள் நமக்குக் காட்டும் உலகம் போதுமா?
இன்று ஆங்கில மொழியாக்கத்தில் வெளிவரும் அற்புதமான பல அரபு நாவல்களில் இக்கேள்விகளுக்கான பதில்களைத் தேடலாம். ஷரசாத்தின் உயிரைக் காப்பது போல், இக்கதைகளுக்கு உயிர்களைக் காக்கும் சக்தி இருக்கலாம். கதையெனும் அற்புத விளக்கிலிருந்து வரும் இந்த மனிதர்களின் புதிய வாழ்வு முறைகள் நம் அறிவை விரிவாக்கும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜப்பானைப் போல் இரும்புத் திரை இல்லாவிட்டாலும், அரபு இலக்கியம் மொழித் திரையால் கண்டம் தாண்டாமல் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. கடந்த முப்பது வருடங்களாக கெய்ரோவில் இயங்கும் அமெரிக்கன் பல்கலைக்கழகம், ஃபிராங்க்ளின் புத்தகத் திட்டம் போன்றவை பல நாவல்களை மொழியாக்கம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டு வருகின்றன. ஆனாலும், கடல் முழுவதும் இருக்கும் மீன்களை சிறு தூண்டிலில் பிடிக்க முயற்சிக்கும் கதையாகிப் போனது. அரபு இலக்கியத்தின் பெரும் செல்வத்திலிருந்து மிகக்குறைந்த அளவிலான புத்தகங்கள் மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டன.
1988 ஆம் ஆண்டு இந்த போக்கை மாற்றியது. எகிப்தின் பிரதான நாவலாசிரியரான நகூப் மஹ்ஃபோஸ் (Naguib Mahfouz) இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர்களின் பார்வை மெல்ல அரபு இலக்கியத்தின் பக்கம் திரும்பியது. அடுத்த சில வருடங்களில் ஆங்கிலமும் அரபு மொழியும் உரையாடத் தொடங்கின. முழு வீச்சில் பல அரிய நாவல்கள் இரு மொழித் தடைகளையும் தாண்டி வெளிவரத் தொடங்கின. மூல ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து மொழிபெயர்ப்பாளர்கள் படிக்கத் தடையில்லா வீச்சில் ஆங்கில மொழியாக்கங்களை வெளியிட்டனர். இந்த வளர்ச்சியின் முக்கிய கட்டமாக, 2007 ஆம் ஆண்டு அரபிய புக்கர் என்ற இலக்கிய பரிசு நிறுவப்பட்டது.
எந்த வகை நாவல்கள் அரபு மொழியில் வெளியாகின்றன?
கனவும், நடைமுறை வாழ்வில் இருக்கும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பின் தடைகளையும் பிரித்துப் பார்க்க இயலாத புனைவுகளே அரபு இலக்கியத்தின் பிரதான படைப்புகளாக வெளிவருகின்றன. சொல்லப்படும் கதைகளும் தனியொரு மனிதனின் போராட்டங்களை மையமாகக் கொண்டுள்ளன. பெண்களுக்கான அதீதக் கட்டுப்பாடுகள், சமூகத்தில் உலவும் சர்வாதிகார ஆண்கள்/ஆட்சியாளர்கள், மதத்தின் பெயரால் அடையாளங்கள் உருவாக்கி தனிப்பட்ட மனிதனிடம் திணிக்கும் மதவாதிகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர். மேலும் சமூக ஏற்றத்தாழ்வு, மதப்பற்று, பெண்களின் ஊமைக்காயங்கள் ஆழமான விவரணைகளால் வெளிப்படுகின்றன.
சமூகத்தின் சட்டதிட்டங்களை மீற முடியாத கதாபாத்திரங்கள், வீட்டில் சர்வாதிகாரியாகவும் சமூகத்தில் அடிமையாகவும் வாழ்ந்து வரும் ஆண்கள், குறுகிய எல்லைக்குள் சுருங்கி வாழும் பெண்கள், சர்வாதிகார ஆட்சியிலிருந்து தப்ப முயற்சிக்கும் மக்கள் என வாழ்வில் ஒடுக்கப்படும் குழுக்களின் குரல்கள் மட்டுமே ஒலிக்கின்றன.
மொராக்கோ நாட்டு எழுத்தாளர் முகமது பெர்ராரா எழுதிய `மறதியெனும் விளையாட்டு` (The Game of Forgetting) என்ற நாவலில் அரபு வாழ்வில் வெய்யிலென சுட்டெரித்த சுதந்திர போராட்ட நாட்களை நினைவுகூறுகிறார். மொராக்கோவின் எளிமையான வாழ்வில் வெளிப்படும் வண்ணமயமான கோலாகலம், பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தை எதிர்த்த புரட்சிக் குழுக்கள், பொருள் தேட அலைபாயும் ஆண்கள், நிம்மதியற்ற வீட்டுப் பெண்கள் போன்றவற்றை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. காலனியாதிக்கத்தில் வாழ்ந்த மக்களுக்கு இந்த சிக்கல்கள் புதிதல்ல. மேலும், இச்சிக்கல்கள் மூலம் அரபு சமுதாயத்தை நேர்கோட்டில் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆக்கமாக மாறாமல், பல முரண்களிலிருந்து கிளைக்கும் வாழ்வாக இந்நாவல் விரிகிறது.
ஆரவாரமில்லாத கிராம வாழ்விலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு வேறொரு நகரத்துக்கும், நாட்டின் எல்லைக்கும் பயணம் செய்யும் சாமானிய சாகஸக்காரர்களான இரண்டு சகோதரர்களைப் பற்றிய கதை. பிரெஞ்சு நாட்டு ராணுவத்தை எதிர்க்க திட்டமிடும் ஒரு சிறு புரட்சிக் குழுவில் சேர்கிறார்கள். பாரீஸ் நகரத்தில் மேற்படிப்பை முடித்த அண்ணன், கிராம வீட்டின் கூட்டுக் குடும்ப நிழலில் சுகமாக கழித்த தம்பி என அவர்கள் மேல் கவிழும் முரண்பாடுகள் விரிவடைகின்றன. பாரம்பரியமும் முற்போக்குவாதமும் மோதும் தருணங்கள். புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் விவாதங்கள். மதமேறி முட்டிக்கொள்ளும் ஆடுகளாக பழைமைவாதமும் வணிகமயமாக்கலும் கணந்தோறும் சந்திக்கின்றன. உரையாடல்கள் மூலம் நாட்டின் அழிவுக்கு காரணத்தைக் கண்டுபிடிக்க நடக்கும் விவாதங்கள் என நாவல் முழுவதும் எதிரியக்கங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.
பல தளங்களில் நடக்கும் மோதல்களுக்கு ஊடாக ஃபெஸ் (Fez) கிராமத்தின் அழகிய பக்கங்களை பெராரா நம் முன் கொண்டுவருகிறார். தத்துவமும் தரிசனமும் உச்சகட்டத்தில் பலகுரல்களாக ஒலிக்கின்றன. நவீன இலக்கியத்தின் கூறுகளான பல தரப்பு விவரணைகள், முன்னெடுத்துச் செல்லும் கச்சிதமான கதைக்களன், நேரடியான பத்திரிக்கை நடை வழியே கவித்துவ எழுச்சியைத் தவிர்த்தல் என நவீனத்துவத்தின் எல்லைகளை சோதிக்கும் படைப்பாக இந்நாவல் அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு முரணும் வெந்நீர் ஊற்று போல் சீறியபடி வெளிவருவதும், பின்னர் சமநிலை அடைந்து மறந்து நீர்த்துப் போவதுமாக மறதி விளையாட்டு சமூகத்தில் நடக்கிறது. மெல்ல காலனியாதிக்கத்துக்கு முன்னால் தாங்கள் சுதந்திரமாக இருந்த கிராமத்தையே மக்கள் மறந்துவிடுகின்றனர். சுதந்திரம் பறிபோனது கூட தெரியாமல் பிரஞையற்று வாழ்ந்து வருகின்றனர்.
மக்களின் குரலாக தனித்தனியாக ஒலிப்பதுபோல் இருந்தாலும், நாவல் முழுவதும் ஒரு சமூகத்தின் வாழ்வு முறை துள்ளியமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.இந்த கையடக்க நாவல் வழியே ஒரு சமூகத்தின் வெக்கையான விம்மல்களை நம்மால் உணர முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் `நெடுங்குருதி` நாவலில் வரும் சுட்டெரிக்கும் வெயிலைப் போல் இந்த நாவலிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலிலும் பாலைவன வெய்யிலின் தகிப்பு தெறிக்கிறது. பல நேரங்களில் கதை சொல்லுதல் என்ற வகைமையின் சாத்தியங்கள் எல்லையற்றது என்பதை உணர வைக்கிறது. மொராக்கோ இருக்கும் திசையறியாவிட்டாலும் கதாபாத்திரங்கள் நம்மிடம் நெருக்கமாக உரையாடுவது போலவே தோன்றுகிறது.
அரசியலே அரபு இலக்கியத்தின் மையமாகும். ஹாசன் கானாஃபெனி (Ghassan Kanafani) போல் அரசியல் ஈடுபாடு இல்லாமல் எழுத வந்தவர்களும் விரைவில் அரசியல் சார்பு எடுத்தனர். இவர் டமாஸ்கஸ் நகரில் அகதி முகாமில் வளர்ந்தவர். அதே முகாமில் ஆசிரியராக பணியாற்றிய பிறகு, குவைத்தில் பல வருடங்கள் பணி புரிந்தார். பாலஸ்தீனின் சுதந்திரக் கனவை நிலைநாட்ட பெய்ரூட் நகரில் வாழத் தொடங்கிய ஹாசன், புரட்சியின் குரலாக ஒரு புதிய பத்திரிக்கையைத் துவங்கினார். அங்கிருந்தபடி பாலஸ்தீன மக்களின் அரசியல் மனசாட்சியாக செயல்பட்டு வந்தார். மக்கள் படும் இன்னல்களையும், பாலஸ்தீன சமூகத்தின் ஒடுக்குமுறைகளையும் பல சமயங்களில் நேரடியாக எழுத முடியாமல் தவித்தார்.
அதன் காரணமாகவே `சூரியனுக்குள் இருக்கும் மனிதர்கள்` (Men in Sun) என்ற புத்தகத்தை 1962 ஆண்டு வெளியிட்டார். உண்மைகளின் முஸ்தீபுகளை பத்திரிக்கை வாயிலாக நேரடியாக சந்திக்க இயலாத மக்கள், இந்த புனைவின் வழி தங்களை அடையாளம் கண்டுகொண்டனர். இன்று வரை பாலஸ்தீன-அரபி இலக்கியத்துக்கு இப்புத்தகம் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது். ஒரே இரவில் ஹாசன் அரபு இலக்கியத்தின் மாஸ்டர் அந்தஸ்தை அடைந்தார்.
மூன்று பாலஸ்தீன அகதிகள் இராக் பகுதியிலிருந்த பாலைவனத்திலிருந்து குவைத்துக்குத் தப்பிச் செல்வதே இப்புத்தகத்தின் கதை. ஒரு கடத்தல் கும்பலிடம் பணம் கொடுத்து இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். மனிதர்களின் தோலைப் பொசுக்கி, கண்களை குருடாக்கும் பாலைவன வெப்பம் போல அனல் வீசும் படைப்பாக இப்புத்தகம் வெளிவந்த உடனே அங்கீகரிக்கப்பட்டது.
அன்று முதல் அரபி இலக்கியமும் அரசியலும் ஒன்றை ஒன்று நிரப்பும் சமன்பாடாக மாறியது. அரசியல் நிலைப்பாடுகள் இல்லாத படைப்புகளே அரபு இலக்கியத்தில் இல்லை என்றாகியது.
வெளிவந்த நாட்களிலேயே செவ்வியல் படைப்பாக அங்கீகரிக்கப்பட்ட இப்புத்தகம் பல அரசியல் கதைகளுக்கு வழிவகுத்தது. ஆனாலும், இன்றுவரை ஹாசன் ஆங்கில மொழி வாசகர்களை சென்றடையவில்லை. இன்று ஹாசனின் படைப்புகளைப் படிக்கும் வாசகர்களுக்கு குழப்பமான சித்திரமே கிடைக்கும். அவர் எழுதிய சில சிறுகதைகளில் இலக்கிய அந்தஸ்து இல்லாவிட்டாலும், `சூரியனுக்குள் இருக்கும் மனிதர்கள்` இன்றும் முக்கியமான நாவலாக தற்கால வாசகர்களால் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இப்புத்தகத்துடன் தங்களை அடையாளம் காணும் வாசகர்கள் இருவகைப்பட்டவர்கள். ஹிட்ச்காக்கின் திரைப்படங்கள் போன்ற விறுவிறுப்பும், மர்மமும் நிறைந்த முழுமையான படைப்பாக இதைக் கருதும் வாசகர்கள் ஒரு புறம். இப்புத்தகத்தின் செறிவான கவித்துவ நடையில் உள்ள தரத்தில் மயங்கிய மற்றொரு வகையினர்.
குறிப்பிடும்படியாக சில வர்ணனைகள் பாலைவனச் சூழலை நம் முன் நிறுத்துகிறது – `கொதிக்கும் தகரத்தின் மேல் உருண்டுச் செல்லும் அடர்த்தியான எண்ணையைப் போல், கறுத்த லாரி பாலைவனத்தை தனியொரு உலகமாகக் கடந்து கொண்டிருந்தது`
மூன்று அகதி கதாபாத்திரங்கள் வழியாக பாலஸ்தீன மக்களின் சுதந்திர வேட்கை, சுயமரியாதையின் தேவை நாவலில் வெளிப்படுகிறது. நழுவிக்கொண்டே செல்லும் எதிர்காலத்தை ஒரு பிடியில் அடைக்க நினைக்கும் வாழ்வாதார இச்சையையும் விவரிக்கிறது. இப்படிப்பட்டத் தேவைகளே பிச்சைக்காரன் போல வாழும் ஒரு அகதி கிழவனையும் துணிந்து இப்பயணத்தை மேற்கொள்ள வைக்கிறது.
அவன் வாழ்வை இரண்டே வரிகளில் ஆசிரியர் கடத்திவிடுகிறார் –
`கடைசி பத்து வருடங்களாக நீ காத்திருப்பதைத் தவிர வேறெதுவும் செய்ததில்லை. நீ இழந்த வீடு, மரங்கள், இளமை, கிராமம் எல்லாம் இழந்ததுதான் எனப் புரிய பசியுடன் தவித்த நீண்ட பத்து வருடங்கள் உனக்குத் தேவைப்பட்டிருக்கின்றன. எதற்காகக் காத்துக்கொண்டிருந்தாய்?`
*
இஸ்ரேல் படை வீரர்களை ரத்த வெறியர்களாக சித்தரித்த ஹாசன் பிற்காலத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பாலஸ்தீன அரசாங்கம் இஸ்ரேலிடம் 1964 ஆண்டு நடந்த போரில் தோற்ற பின்னர் எழுதிய ‘ஹைபாவுக்கு திரும்புதல்’ (Returning to Haifa) என்ற நாவலில் காசா பகுதியிலிருந்து ஹைஃபாவுக்குத் திரும்பும் வயதான விதவையின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை யூத ஆதரவாளனின் நிலைப்பாட்டிலிருந்து விவரித்திருக்கிறார். விதவையின் வீட்டில் வசித்து வந்த யூத குடும்பம் அவள் மகனை வளர்த்து வருகிறார்கள். யுத்தம் துவங்கும்போது தன் மகனை தொலைத்த விதவைக்கு திரும்ப வரும்போது மிக அதிர்ச்சியாக இருக்கிறது. எதிரியாக பாவித்து வரும் யூத குடும்பம் தன் மகனை வளர்ப்பார்கள் என்பது அவள் நினைத்துக் கூட பார்க்காத ஒன்று.மெல்ல யூத குடும்பத்தின் அறத்துக்கும் தன் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லாததை உணர்கிறாள். யூத குடும்பத்துக்கும், இழந்தவற்றை மீட்க வந்த விதவைக்கும் நடக்கும் உணர்வுப் போராட்டமே மீதிப் பகுதியை நிரப்புகிறது.
ஹாசனின் முந்தைய படைப்பை விட இந்நாவல் யுத்தத்தின் அரசியலை நமக்கு மிக நெருக்கமாய் உணர்த்துகிறது. யுத்தத்தின் இரு பக்கங்களின் சார்பில் விவரித்தபடி முடிவை நோக்கி கதை நகர்கிறது. சண்டையின் நிழலாக பிரிவு, இழப்பு, போராட்டம் தொடர்வதை மானிட சோகத்தின் அரைகூவலாக நம் முன் நிறுத்துகிறது. ஒரு புரட்சி இயக்கத்தின் நடைமுறைகள் மட்டுமல்லாது அதன் நீட்சியான தனி மனிதனின் தோல்விகளை எழுதியதன் மூலம் ஹாசன் கானாஃபானி பிற்கால அறம்-அரசியல்-இலக்கியம சார்ந்த படைப்புகளின் முன்னோடியானார். இவர் 1976 ஆம் ஆண்டு ஒரு குண்டு வெடிப்பில் இறந்து போனார்.
இவர் காலத்திலேயே வாழ்ந்த எமில் ஹபிபி (Emile Habiby) என்ற எழுத்தாளர் ஹைஃபாவில் (Haifa) இஸ்ரேலிய அரபு மக்களுக்கான போராட்டத்தை நடத்தி வந்தார். அரசியல் நிலைப்பாடுகளில் இந்த இருவரும் எதிரெதிர் துருவங்களில் நின்றிருந்தாலும், மனித மேம்பாட்டுக்காகவே இறக்கும் வரை போராடினார்கள். இவர் எழுதிய ‘மருள்-நம்பிக்கையாளன் சையத்தின் ரகசிய வாழ்க்கை’ (The Secret Life of Saeed the Pessoptimist) என்ற புத்தகத்தில் இஸ்ரேலில் தப்பிப் பிழைத்து மறைந்து வாழ்ந்து வந்த சையது என்பவனின் வாழ்க்கையை விவரிக்கிறார். ஹைஃபாவில் வாழும் அரபு மக்களை சரணடைய சொல்லும் ரேடியோ அறிவிப்புக்கு பயந்து தன் வீட்டு மாடியில் வெள்ளை சமாதானக் கோடியை பறக்க விடுகிறான் சையது. தன் அடையாளத்தை வெளியே சொல்ல அசிங்கப்பட்டு தான் யாரென்ற உண்மையை கூற மறுக்கிறான். புரட்சி கிளர்ச்சியாளன் என தவறாக குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் குரூரமாக அடிக்கப்படுகிறான். சுய அடையாளத்தை இழப்பது மட்டுமல்லாது, மறப்பதும் எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணர்ந்து மனவிடுதலை பெறுகிறான் –
‘அடிமைத்தனம், அவமானங்கள் , தேவைகள், மவுனங்கள் போன்றவை தெறித்து உடையும் வரை கைதட்டி, சந்தோஷ கூக்குரலிட்டு பாடவேண்டும் என்ற பேராவல் என்னை ஆட்கொண்டது. எப்போதும் ‘ஆமாம் சார்!’, ‘உங்கள் சித்தம் சார்!’ என்பதே வாழ்க்கையாகிருந்தது. இப்போது என் மனம் விட்டு விடுதலை அடைந்துவிட்டது’
எனக் கூப்பாடு போடுகிறான் சையது.
இவ்விரண்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் இருதூண்களாக பாலஸ்தீன இலக்கியத்தில் மதிக்கப்படுகின்றன. ரயில் தண்டவாளம் போல் அரசியலில் எதிர்தரப்புகளைக் கொண்டிருந்தாலும், இருவரின் எழுத்துகள் இருதயத்தின் அழுகையாக மனித சமுதாயத்திடம் சமாதானத்தை மன்றாடிக் கேட்கின்றன.
இலக்கியத்தில் அரசியலை பேசு பொருளாக கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
சமாதானக் காலங்களில் எழுத முற்பட்டால் அரசியல் இல்லாத அழகியல் சார்ந்த விவரிப்புகள் கொண்ட படைப்புகளை எழுதியிருப்பேன் என சொன்னார் ஜார்ஜ் ஆர்வெல். அமெரிக்க எழுத்தாளர்கள் கலைத்துவ படைப்புகள் உருவாக்குவதில் உள்ள சுதந்திரம் அரபு எழுத்தாளர்களுக்கு இல்லை. அரபு மொழியில் அரசியல் பாகுபாடுகளால் உந்தப்பட்டு எழுத்தாளர்களாக வளைய வருபவர்களே அதிகம். தங்கள் நிலைப்பாடுகளை சொல்லவும், உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கவும் புனைவு அவர்களுக்கு பல சாத்தியங்களைத் திறந்து வைக்கிறது. அதனால் முதலில் உண்மைகளை கூப்பாடு போடும் புரட்சியாளர்களாகவும், அதைத் தொடர்ந்து எழுத்தாளர்களாகவும் மதிக்கப்படுகிறார்கள். இவர்களால் புனைவு வழி மட்டுமே உண்மையை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. அரபு பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பெரும்பாலும் சார்பற்று இருப்பதில்லை. எழுத்தாளர்களுக்கும் அந்த சுதந்திரம் கிடைப்பதில்லை.அதனால் அரசியல் அநாகரிகங்கள் புனைவுக்குள் ஒளித்து வைக்கப்படுகின்றன.
அண்மைக்காலங்களில் அரபு இலக்கியத்தில் சில மாறுதல்கள் நடந்து வருகின்றன. எகிப்தின் சிவா பாலைவனச் சோலையை (Siwa Oasis) அடிப்படையாகக் கொண்டு பாஹா தஹார் (Bahaa Taher) எழுதிய `அந்தி நேர பாலைவனச்சோலை’ (Sunset Oasis) சரித்திரத்தை மறுவாசிப்புக்கு உள்ளாக்குகிறது. யுசுப் சையிடான் (Yusuf Zeydan) எழுதிய ‘Beelzebub’ என்ற நாவல் ஐந்தாம் நூற்றாண்டு அரபு வாழ்கையை விவரிக்கிறது. சம காலத்திலிருந்து தூர இருக்கும் வாழ்வைக் கூறினால் மட்டுமே நிகழ்கால அரசியலிலிருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டவை போல இருக்கிறது. அதே போல், இப்ராஹிம் அல் கோனி (Ibrahim al-Koni) எழுதிய ‘தங்க தூசி ‘ (Gold Dust) என்ற நாவல் அரபு பாலைவனத்தில் நடப்பதால் அரசியல் நிழலிலிருந்து தப்பிக்கிறது.
தொடர்ந்து ஆங்கிலத்தில் சிறகை விரித்து கவனத்தை பெற்று வருகின்ற அரபு இலக்கியம் வர்த்தக தேவைக்கேற்ப தன் சுயத்தை இழந்துவிடுமோ என்ற பயம் சில விமர்சகர்களுக்கு எழுந்துள்ளது. மேற்கில் பல கோடிகள் வர்த்தகம் நடக்கும் புத்தக சந்தை மக்களுக்கு ஏற்றவாறு சில வகை இலக்கியங்களை மட்டுமே வளர்க்கும். அரபு இலக்கியமும் இந்த சூழலில் சிக்கிவிட்டால் பெரும்பான்மையான மக்கள் ரசனைக்கு ஏற்றவாறு மட்டுமே ஜனரஞ்சக புத்தகங்கள் வெளிவரத் துவங்கும் அபாயம் உள்ளது. சமீபகாலமாக அல்லா அல் அஸ்வானி (Alaa Al Aswany) எழுதிய `சிகாகோ`(Chicago) நாவல் இந்த எல்லையைத் தொட்டிருக்கிறது. சிகாகோ நகரத்தில் வாழும் எகிப்திய மக்களின் வாழ்வை விவரிக்கும் இந்த புத்தகம் , மேற்கு – கிழக்கு உலகத்தின் சிக்கல்களையும் தொட்டுச் செல்லும் படைப்பாகும்.
எல்லா மொழியைப் போல அரபு இலக்கியத்திலும் கருத்தாழம் இல்லாத புத்தகங்களும் எதிர்காலத்தில் வெளிவரும். ஆனாலும் பொதுவான பிரச்சனைகளைப் பற்றிப் பேச நமக்கு கதைகள் எப்போதும் தேவை. இலக்கியத்தினால் எதையும் மாற்றி அமைக்க முடியாது என்பது உண்மையானாலும், அல்லா அல் அஸ்வானி கூறுவதுபோல் ‘இலக்கியம் இதை விட முக்கியமான ஒன்றைச் செய்கிறது – அது நம்மை மாற்றுகிறது ‘. இருபத்து இரண்டு நாடுகள் சேர்ந்து உருவாக்கும் அரபு இலக்கியம் ஒற்றைகோணத்தில் மட்டுமல்லாது சகலவிதமான விஷயங்களைப் பற்றி பேசும் நாள் கண்டிப்பாக உருவாகும். அன்று இந்த இருபத்து இரண்டு நாடுகளும் மொழி, அரசியலைத் தவிர தங்களை இணைக்கும் சக்தியாக இலக்கியத்தை அடையாளம் கண்டுகொள்ளும்.