1.
இருபது பனிபடர்ந்த மலைகளில்
ஒரே ஒரு அசைவு,
கரும்பறவையின் கண்.
2.
நான் மூன்று மனதாய்
இருந்தேன்,
மூன்று கரும்பறவைகள்
அமர்ந்த மரம் போல்.
3.
இலையுதிர்காலக் காற்றில்
சுழன்றுக் கொண்டிருந்தது கரும்பறவை.
அது கூத்தின் ஒரு காட்சி போல் இருந்தது.
4.
ஆணும் பெண்ணும் ஒன்று.
ஆணும் பெண்ணும் கரும்பறவையும் ஒன்று.
5.
எதை ரசிக்க?
வார்த்தைகளின் அழகையா?
அதன் அர்த்தங்களின் அழகையா?
கரும்பறவையின் கூவலையா?
அதன் மறுகணத்தையா?
6.
நீண்ட சாளரத்தின்
கரடு முரடானக்
கண்ணாடியில்,
நீர் உறைந்து நிறைந்தது.
அதன் குறுக்கும் நெடுக்குமாய்
கரும்பறவை நிழலாக நகர்கிறது.
நகர்வு ஒரு புரிபடாத
மன இருப்பாக.
7.
‘ஹத்தம்’இன் இளைத்த ஆண்களே,
ஏன் தங்கப் பறவைகளை நினைத்து
ஏங்குகிறீர்கள்?
பெண்களின் கால்களை சுற்றி வரும்
கரும்பறவைகள் தெரியவில்லையா, உங்களுக்கு?
8.
உயர் மொழிகள் அறிவேன்.
தெளிந்த தொலையாத ராகங்களும் அறிவேன்.
இன்னுன்றும் அறிவேன்,
என் அறிதலை,
கரும்பறவையும் அறியுமென்று.
9.
பார்வையைத் தாண்டி
பறந்தபோது,
பல வட்டங்களில் ஒன்றின்
விளிம்பைக் காட்டிச் சென்றது அது.
10.
பச்சை ஒளியில்
கரும்பறவைகள்
பறக்கக் கண்டால்,
தெளிந்த அறிஞரும்
திகைத்துத் தடுமாறுவர்.
11.
அவன் கண்ணாடிக் கூப்பையில்
‘கனெக்டிகுட்’ கடந்துக்கொண்டிருந்தான்.
ஒருமுறை அவனை பயம் துளைத்து.
அதில் அவன்,
கூப்பையை இழுக்கும் குதிரையின்
நிழலைக்
கரும்பறவைகளாகக் கண்டான்.
12.
ஆறு நகர்கின்றது.
கரும்பறவை பறந்துகொண்டிருக்க வேண்டும்.
13.
அன்று பகல் முழுவதும்
சாயும் காலமாக இருந்தது.
பனி பொழிந்து கொண்டிருந்தது.
பனி இன்னும் பொழியும் போலும் இருந்தது.
கரும்பறவை,
‘செடார்’ மர விரலில்
அமர்ந்திருந்தது.
இக்கவிதை வாலஸ் ஸ்டீவன்ஸ் எழுதிய “Thirteen ways of looking at a blackbird” என்ற ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு. பலராலும் கொண்டாடப்பட்ட நவீன அமெரிக்கக் கவிஞர் வாலஸ். அமெரிக்கக் கவிதைகளுக்குப் பல நவீன பரிமாணங்களையும், கோட்பாடுகளையும் கொண்டுவந்த வாலஸின் வெகு பிரபலமான இக்கவிதை, ஹைகூ கவிதைகளின் தாக்கத்தில் எழுதப்பட்டது. இக்கவிதையின் தாக்கத்தில் மூன்று இசைக்கோர்வைகள் கூட உருவாக்கப்பட்டிருக்கின்றன. வாலஸ் ஸ்டீவன்ஸ் தன்னுடைய 75-ஆவது வயதில் 1955-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
வாலஸ் ஸ்டீவன்ஸ் குறித்த மேல் விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Wallace_Stevens