மகரந்தத்தின் வாசனை
– ஆனந்த்
முதல் நாள்
பாதை மாறிய நேர்ப்பாதையில் போன பின்
தவளைகளின் மொழி புரிந்து
மின்மினிகளின் பாடல் கேட்டு
அசைவற்று நின்ற பெரும்பாறையிடம்
வீசிச் செல்லும் பெருங்காற்று
மலையுச்சியின் செய்தியைச்
சொல்லிச் சென்றது
மீன் பிடிக்கும் வலையில்
ஒளிபிடிக்க முயன்ற பேதமை புரிந்து
கடற்கனவில் இருந்து விழித்துக் கொண்டவன்
இப்போது மறந்துபோக முடியாத பாடல் ஒன்றைத்
தேடிக் கொண்டிருக்கிறான்
தூரத்தில் காற்றுடன் வருகிறது
வரிகளற்ற பாடல்
மகரந்தத்தின் வாசனையோடு
புதையல் தேடி
– இலா
பூக்களைப் பிரித்துப் பிரித்து
தேடிக்கொண்டிருந்தேன் புதையலை
விடியலின் பின்பொழுதில்
பூக்களின் உதிர்ந்த மலைக்குள்
கண்டுபிடித்தேன்
என்னைக் காணவில்லை
என்று அழுதுகொண்டிருக்கும்
என்னை.