“உங்க பேரக்குழந்தையா?” என்று சறுக்குமரத்தின் ஏணியில் நிதானமாகக் காலைவைத்து ஏறிக்கொண்டிருந்த நசியைச் சுட்டிக்காட்டிக் கேட்டவளும் ஒருபாட்டிதான். நீண்ட பின்னலிட்ட ஜடை, பருமனான இடை, நிதானமான நடை. அவளுக்குச் சற்றுப்பின்னால் நரைத்த ஆனால் முறுக்கிய மீசையோடு, இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்போல் வந்தவரின் கையைப்பிடித்துநடந்த சிறுவன் அவளுடைய பேரனென்பதில் சந்தேகமில்லை.
“ஒருவிதத்திலே” என்று சரவணப்ரியா நிறுத்திக்கொண்டாள். ‘அவளுடைய பாட்டி எனக்கு சின்னவயதிலிருந்தே பழக்கம், அக்காமாதிரி. முழங்கால் முட்டியில் அறுவைசிகிச்சை முடித்து வெள்ளிதான் அவளை வீட்டிற்கு அழைத்துவந்தார்கள். காலைஊன்றி நடக்க ஒருவாரமாகும். அவள் தனியாக இருப்பதால் அவளுக்கு உதவ வந்தேன்’ என்கிற நீண்ட விளக்கம் நூறுவீடுகள் கொண்ட தொகுப்பில் முதன்முறை – கடைசியாகவும் இருக்கலாம் – சந்திக்கும் ஒருத்திக்கு எதற்கு?
“ஊர்லேர்ந்து குழந்தையைப் பாத்துக்க வந்திருக்கீங்களா?”
‘ஒருவிதத்திலே’ என்கிற பதில் இரண்டாவது கேள்விக்கும் பொருந்தும். மூன்றரைவயது நசி செல்லும் குழந்தைகள் காப்பகத்திற்கு ஒருவாரம் இளவேனில் விடுமுறை. நோயாளியின் தேவைகளைப் பூர்த்திசெய்வதோடு நசியைக் கவனிக்கும் பொறுப்பும் சரவணப்ரியாவுக்கு. முதல்முறை பார்த்தபோதே நசிக்கு ‘சாரா’வைப் பிடித்துவிட்டது. அறிமுகம்வரைகூட காத்திருக்கவில்லை. சரவணப்ரியாவின் மடியில் உட்கார்ந்து உறவுகொண்டாடினாள். இன்றுபிற்பகல் தூங்கி எழுந்ததும் அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்துவந்தாள். வீடுகளுக்கு நடுவில் செயற்கையான நீர்வீழ்ச்சி, நீரூற்று, குளம் எல்லாம் காட்டியபிறகு, குழந்தைகளுக்கான மணல்திடலில் விளையாடத் தொடங்கினாள்.
ஊரென்பதை இந்தியாவென்று அர்த்தம்செய்து சரவணப்ரியா, “இல்லீங்க. நான் இங்கியே இருக்கிறவள்” என்றாள்.
“எத்தனை வருஷமா இருக்கீங்க?”
“முப்பத்தஞ்சுக்கும் மேலே.”
“அப்ப உங்களுக்கு ரிடைர் ஆகிற வயசு. பார்க்க ஐம்பதுதான் சொல்லலாம்” என்கிற பாராட்டில் பொறாமை தொனித்தது.
பாராட்டை மட்டும் பிரித்தெடுத்து சரவணப்ரியா, “தாங்க்ஸ்” என்றாள்.
பையன் தாத்தாவிடமிருந்து பிரிந்து சறுக்குமரத்தின் உச்சிக்குச்சென்றான். நசியைப்போல் சாய்வுத்தளத்தில் வழுக்கிக்கொண்டு கீழே வரவில்லை. சறுக்குமரத்தை ஒட்டியிருந்த கம்பத்திற்குத்தாவி, “லுக்!” என்று கத்திக்கொண்டே தீயணைக்கும் படையினர்போல் வேகமாகச் சரிந்தான். நசியால் அது முடியுமென்று சரவணப்ரியா நினைக்கவில்லை. அவளும் அதைச்செய்ய முயற்சிக்கவில்லை.
“உன் பெயரென்ன?”
“நசி.”
“நான் திலீப். நீ எந்த வீட்டில் இருக்கிறாய்?”
“இங்கே இல்லை.”
“இங்கே இருப்பது யார்?”
“பாட்டி.”
“சிவப்பு சட்டை போட்டிருக்கிறாளே, அவளா?” என்று சரவணப்ரியாவைச் சுட்டிக்காட்டினான்.
“அவள் சாரா.”
“உனக்கு என்ன வயது?”
நசி மூன்று நடுவிரல்களை நீட்டினாள்.
“எனக்கு நான்காகிவிட்டது.”
பாட்டிகளும் தாத்தாவும் பெஞ்ச்சில் அமர்ந்து அவர்களை வேடிக்கைபார்த்தார்கள்.
“பெண்ணோட அம்மா நம்ம ஊர் இல்லை போலிருக்கு? கொஞ்சம் சீனக்களை தெரியுது” என்றாள் மற்றவள்
நசியின் கண்களிலோ, உடல்நிறத்திலோ இரண்டுநாளாக சரவணப்ரியாவின் பார்வைக்குத் தெரியாத சீனக்களை மற்றவள் கண்ணில் பட்டிருக்கிறது, அதிசயம்தான்.
“அம்மா பாதி ஃப்ரென்ச், பாதி சைனீஸ்.”
என்ன தோன்றியதோ, திலீப்பின் பாட்டி எழுந்துசென்று அவர்கள் விளையாடுவதைப் பக்கதில்நின்று கவனித்தாள். நசியும், திலீப்பும் சறுக்குமரத்தைவிட்டு ஊஞ்சல்களுக்குச் சென்றார்கள். நசியைவிட வேகமாகவும், உயரமாகவும் தன்னால் ஆடமுடியுமென்று திலீப் காட்டிக்கொண்டான். பிறகு, திண்ணைவைத்த ஒரு பொம்மைவீட்டில் புகுந்து வெளிப்பட்டார்கள். அங்கே போட்டியிட எதுவுமில்லாததால், தான் செய்வதை நசி பின்பற்றவேண்டுமென திலீப் எதிர்பார்த்ததாகத் தெரிந்தது.
திரும்பிவந்த பாட்டி தன் கண்டுபிடிப்பை வெளியிட்டாள். அவள் மனிதயியலில் மட்டுமின்றி உளவியலிலும் தேர்ச்சிபெற்றவள்போல. “முதல்லியே எனக்கு சந்தேகமாக இருந்திச்சு. உங்க பேத்தி தானா எதுவும் பேசறதில்லை. எங்க பேரன் கேள்விகளுக்கு நிதானமா யோசிச்சுதான் பதில்சொல்றா, அதுவும் ஒண்ணிரண்டு வார்த்தைதான். அவளுக்கு எதாவது குறைபாடா?”
இரண்டுநாள் பழக்கத்திலேயே நசி சராசரியிலிருந்து விலகிய பெண்ணென்பதை சரவணப்ரியா உணர்ந்திருந்தாள். மற்ற மூன்றுவயதுப்பெண்கள் போல அவளிடம் டோரா படம்போட்ட சட்டையோ, காலணிகளோ இல்லை. ஓரங்களை வெட்டிய வெள்ளை ப்ரெட் அவளுக்கு வேண்டாம். பழுப்பு ப்ரெட்டில் செய்த சான்ட்விச்தான் பிடிக்கும். ப்ராக்கோலியும், ஸ்ட்ராபெர்ரியும் தின்னப் படுத்துவதில்லை. அவள் கவனத்தை நீண்டநேரம் பிடித்துவைக்க சரவணப்ரியாவுக்கும் ஆழ்ந்த கவனம் தேவைப்பட்டது.
“நசி! நீ செல்லும் குழந்தைகள் காப்பகம் எங்கே இருக்கிறது?”
“இருபதுமாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில்.”
“இருபது மாடிகள் இருக்கின்றன என்று உனக்கு எப்படித் தெரியும்?”
“அப்பாவும் நானும் மூன்றாவது மாடியில் நுழைந்து மின்தூக்கியில் கீழே செல்வோம். அதில் தளங்களின் எண்கள் 1,2 3,4 … 19,20 என்று இரண்டு வரிசைகளில். நான்தான் ஒன்றாவது பட்டனை அழுத்துவேன்.”
“காப்பகத்தில் என்ன செய்வாய்?”
“புத்தகங்கள் படிப்பேன். படித்ததைக் கற்பனை செய்வேன்.”
“எங்கே? இந்த செய்தித்தாளின் பெரிய எழுத்துகளைப்படி, பார்க்கலாம்!”
“ஓபாமா விசிட்ஸ் மெக்சிகோ.”
“வெரிகுட்!”
அடுத்து என்ன கேட்கலாமென்று சரவணப்ரியா யோசிக்கையில் அவளே, “சாரா! நாம் விளையாடலாமா?” என்றாள்.
“ஷூர். உனக்கு எது பிடிக்கும்?”
“ஊனோ. ஆனால் ஊனோ அட்டைகள் இந்தவீட்டில் இல்லையே.”
“புத்தக அலமாரியில் ஒருசீட்டுக்கட்டு பார்த்தேன். அதைவைத்துக்கூட ஊனோ விளையாடலாம்.”
“எப்படி?”
“சொல்லித்தருகிறேன். முதலில் சீட்டுக்கட்டை எடுத்துவா!”
புதிதாக ஒன்றைத் தெரிந்துகொள்வதில் நசிக்கு எத்தனை ஆர்வம்!
சரவணப்ரியா அழுத்தமாக, “எனக்குத் தெரிஞ்சு நசிக்கு எந்தக் குறையுமில்லை” என்றாள். மற்றவள் அதை நம்பினாளாவென்று தெரியவில்லை.
நசிக்கு சமீபகாலமாக வாழ்க்கையில் அதிருப்தி. மற்றவர்களின் விருப்பத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக எதாவது செய்ய ஆசை. ஆனால், அன்றுகாலை விழித்ததிலிருந்தே அது நடக்கவில்லை. ‘காப்பகத்திற்கு வரும் மற்ற பெண்கள் பார்ப்பதற்குத் தங்களுடைய அம்மாக்களைப்போல இருக்கும்போது நான் ஏன் வித்தியாசமாக இருக்கிறேன்?’ என்று படுக்கையில் படுத்தபடி யோசிப்பதற்குள் அவளப்பா கிளப்பிவிட்டார். பான்கேக் தின்பதற்குமுன் அதற்குக் கண், மூக்கு, வாய் வைத்து அழகுபார்க்க அவளம்மா நேரம்தரவில்லை.
காரில் சென்றபோது அவள் அப்பா சொன்ன செய்தியும் நல்லதாக இல்லை. “இன்றுகாலை நம் பாட்டியின் சினேகிதி சாரா ஊருக்குத் திரும்பிச்செல்கிறாள்.” இனி நசி சாராவுடன் வம்புபேசமுடியாது. அவள் குக்கி செய்யும்போது அவளுக்கு உதவிசெய்கிறேன் பேர்வழியென்று மாவை வழித்துத் தின்னமுடியாது. போட்டிபோட்டு சீட்டு விளையாட துணைகிடையாது. எல்லாம் போய்விட்டது. மிஸ் எட்னாவும் அவள் கும்பலும்தான்.
அந்தக் குழந்தைகளுக்கு அலுக்காத உரையாடல்.
“உன் பெயரென்ன?”
“நசி.”
“நெல்லி, நிக்கி, நீனா, லூசி என்றில்லாமல் என்ன விசித்திரமான பெயர்! நீ கூட விசித்திரம்தான்.”
கட்டடத்தின் அடுக்கில் கார் நின்றது. நசி இறங்கியதும் அவள் பையை அவளப்பா எடுத்துக்கொண்டான். மின்தூக்கியில் ஒன்று பட்டனை அழுத்தியபோதுதான் நசி கவனித்தாள். கண்களை ஒருமுறை மூடித்திறந்து பார்த்தாள். சந்தேகமேயில்லை, தளங்களின் எண்களில் என்றுமில்லாத ஒருமாற்றம். அவை மூன்று வரிசைகளில் தொங்கின. கீழே 1,2,3 என்று ஆரம்பித்து மேல்வரியில் 19,20,21 என்று முடிந்தன. அலைபேசியில் ஆழ்ந்திருந்த அப்பாவுக்கு அந்த அதிசயத்தைக்காட்டி அதற்குக்காரணம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்குள் கீழ்த்தளம் வந்துவிட்டது. மேலே பேசவிடாமல் அவன் அவளை இழுத்துச்சென்று மிஸ் எட்னாவிடம் ஒப்படைத்துவிட்டு, “பை!” சொன்னான். எதையும் ஒருவழியில் செய்யத்தான் மிஸ் எட்னாவுக்குத் தெரியும். அவளுக்குப் புதிதாக ஒன்றைச்சொல்லி புரியவைப்பது மகாசிரமம். அதனால், அவளிடம் மேல்மாடியைப்பற்றி நசி கேட்கவில்லை.
காலை சிற்றுணவுக்குப்பின் மிஸ் எட்னா பதினோரு மூன்றுவயதுக் குழந்தைகளைப் பின்கதவு வழியாக தோட்டத்துக்கு அழைத்துச்சென்றாள். அவள் ஏற்கனவே குண்டு, நீண்டகாதுகள் தொங்கிய முயல்வேஷத்தில் பூதம்போல் தெரிந்தாள். குழந்தைகள் வரிசையாக நின்றதும் ஒவ்வொருவருக்கும் ஒருகாகிதப்பை தந்தாள். நசி பார்வையை ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு ஓட்டினாள். நீலம், இளஞ்சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் பிளாஸ்டிக் முட்டைகள் புல்வெளியில் தலைநீட்டின. இருபத்தொன்பதை எண்ணினாள். அடுத்தமுறை பார்வையைக்கூராக்கி நகர்த்தினாள். இன்னொரு பதினாறு கண்ணில்பட்டன. இன்னும்சில செடிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும்.
மிஸ் எட்னா, “ரெடிஈஈ” என்று நீட்டிவிட்டு, “கோ!” என்று சுருக்கிமுடித்தாள். சிலகுழந்தைகள் திக்குதிசைதெரியாமல் பாய்ந்தன. இன்னும்சில நேராக முட்டைகளை நோக்கி ஓடி, வேகமாக எடுத்து பைக்குள் போட்டன. நசி நகராமல் அவர்களை வேடிக்கை பார்த்தாள்.
‘தன்வயதுக் குழந்தைகளுடன் சேராமல் தனியாக விளையாடுகிறாள். அடிக்கடி கற்பனையில் மூழ்கிவிடுகிறாள். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. பேசினாலும் முழு வாக்கியங்களாக இல்லை’ என்று நசியைப்பற்றிய குறிப்பை அவள் தந்தை மிஸ்டர் ஸ்ரீ கேதனுக்கு மிஸ் எட்னா அனுப்பியிருந்தாள். அதனால், நசி நின்றது அவளுக்கு ஆச்சரியமாக இல்லை. “நசி! நீ ஏன் முட்டைவேட்டை செய்யவில்லை?”
“நிஜமுட்டைகள் இல்லை.”
“அதனாலென்ன? அவற்றுக்குள் மிட்டாய் இருக்கும்.”
“பிடிக்காது.”
“அதிகமுட்டைகள் சேர்த்தால் ஒருபரிசு கிடைக்கும்.”
நசிக்கு முட்டைகளைப் பொறுக்குவது ஒருசவாலாகத் தோன்றவில்லை, வெறுமனே தோட்டத்தைப் பார்த்தாள்.
“ஈஸ்டரின்போது முட்டைவேட்டை செய்தாக வேண்டும். ம்ம். கிளம்பு! சும்மா நிற்காதே!”
கட்டாயத்தின்பேரில் நசி அடிமேல்அடி வைத்து நடந்தாள். தோட்டத்தின் ஓரத்தைச் சுற்றிவந்தாள். யார்கண்ணிலும் படாமல் அகன்றஇலைச் செடிகளுக்குக்கீழே ஒளிந்திருந்த ஒருபச்சைமுட்டையைத் தேடியெடுத்தாள். அதையும், பெண்களுடன் போட்டியிடமுடியாமல் காலிப்பையுடன் அழுதுகொண்டிருந்த ஒருபையனின் பையில் போட்டாள். வேலை முடிந்தது, திரும்பிவந்தாள்.
முட்டைவேட்டையில் எட்டு முட்டைகளைச் சேர்த்த வயலட்டிற்கு ஒரு முயல்பொம்மை பரிசு. எல்லோருக்கும் பற்களில் ஒட்டிக்கொள்ளும் மிட்டாய்.
பிறகு, தூங்கும்நேரம். எல்லா ஜன்னல்திரைகளையும் இறக்கிவிட்டு பெரிய விளக்குகளை அணைத்ததும் மற்ற குழந்தைகள் காத்திருந்ததுபோல் குறட்டைவிட்டார்கள். தோட்டத்தில் ஓடியலைந்ததன்பலன். நசிக்குத் தூக்கம்வரவில்லை. அவள் முட்டைகளைத் தேடியோடாதது மட்டுமல்ல, ஏதோவொரு கேள்வி அவள் மனதை அலைத்தது. அது இபத்தியோராவது மாடியைப் பற்றியதாக இருக்குமோ? இருபதாவது மாடி மொட்டைமாடி. அங்கிருந்து ஊர்முழுக்கத் தெரியும். வேடிக்கைபார்க்க எப்போதாவது அங்கே மிஸ் எட்னா அழைத்துச்சென்றதுண்டு. இன்னொருமாடி எப்படித் திடீரென்று முளைக்கும்?
குழந்தைகளின் தூங்கும் நேரத்தைப்பயன்படுத்தி மிஸ் எட்னாவும் இன்னொருத்தியும் வம்புபேசினார்கள். “எனக்கு மற்றவர்கள் உபயோகித்த கார் ஒன்று நல்லதாக வேண்டும். பழையது ரொம்பத்தொந்தரவு கொடுக்கிறது.”
“ஒரு அட்டையில் ‘கார் தேவை’ என்று பெரிதாக எழுதி நுழைவிடத்தில் வை! அதைப்பார்த்து, பணக்காரப் பெற்றோர்களில் யாராவது புதியகார் வாங்கும் ஆசையில் பழையதை மலிவாகக் கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் எனக்கொரு நல்ல டிஜிடல்டிவி ஐம்பது டாலருக்கே கிடைத்தது.”
“தாங்க்ஸ். அப்படியே செய்கிறேன்.”
நசி வெளியே நழுவினாள். அவளுக்காக மின்தூக்கி கதவைத்திறந்து காத்துநின்றது. நல்லவேளை, உள்ளே யாருமில்லை. நசியை ஏமாற்றாமல் மின்தூக்கியை இயக்கும் பட்டன்களின் வலதுபுறத்து மேல்கோடியில் இருபத்தொன்று எண். ‘என்னை அழுத்து! அழுத்து!’ என்று கெஞ்சியது. அதை எட்டி அழுத்தியதில் நசிக்கு ஒரு சுதந்திரஉணர்ச்சி. அங்கே என்னதான் இருக்கிதென்று பார்க்கலாம். கதவுகள் இணைந்ததும் மின்தூக்கி உயர்ந்தது. 5, 10, 15, 20. இருபதைத்தாண்டியபிறகு வெகுநேரம் கழித்துத்தான் நின்றது.
கதவுகள் பிரிந்தன. நசி வெளியே காலடி வைத்ததும் கதவுகள் ஒன்றுசேர்ந்து மின்தூக்கி உய்ங் என்று கீழே பாய்ந்தது. நசிக்குக் கொஞ்சம் பயம். யாராவது பார்த்து மிஸ் எட்னாவிடம் சொல்லிவிட்டால்? சுற்றிலும் பார்த்தாள், ஒருவருமில்லை. எதிரில் சிறுநடைவழி. அதற்கொரு கதவும், ஜன்னலும். ஜன்னலுக்கு அப்பால் கிளம்பத்தயாராக ஒரு ஹெலிகாப்டர். கதவின் குமிழைத்திருகி உள்ளே சென்றாள். பலவிதமான நவீன இயந்திரங்கள் கண்சிமிட்டிய அலுவலகம். உள்ளறைக்குச் செல்லும் கதவின்மேல் பெயர்ப்பலகை. ‘மதிப்புமிகு யமன்’ சிலநாட்களுக்குமுன், சாரா கோவிலில் வாங்கிய ஹிந்துக்கடவுள்களைப் பற்றிய ஒருபுத்தகத்தின் படங்களை அவளுக்குக்காட்டிப் படித்தாள். நசிக்குத் தெரியும், யமன் இறப்புக்குக் கடவுள். சரியான ஆளிடம்தான் அவள் வந்திருக்கிறாள். கதவைத்தட்டியதும், “வரலாம்” என்ற அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்தாள்.
படுக்கைபோன்ற பெரிய மேஜைக்குப்பின் சிம்மாசனம்போன்ற முதுகுயர்ந்த நாற்காலியில் மிஸ்டர் யமன். படத்தில் பார்த்ததுபோல் கம்பீரமான, சிறிது அச்சத்தைத் தரும் தோற்றம். அதற்கு மீசைதான் முக்கியகாரணம். கட்டான உடலின்மேல் நவீன உடை. காலரற்ற சட்டை சற்றே கலைந்திருந்தது. தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்த யமன் நசிக்காகத் தலைநிமிர்ந்தான். அவளைக்கண்டதும் அவன் நெற்றிச்சுருக்கம் மறைந்தது.
“ஹாய் மிஸ்டர் யமன்!”
“ஹாய் யங் உமன்!”
நசி, “நான் என் அப்பாவின் அலுவலகம் சென்றிருக்கிறேன். உனக்கு ஏன் காவல்காரனோ, வரவேற்புப்பெண்ணோ இல்லை?” என்று வெளியறையைக் காட்டிக்கேட்டாள்.
“யாரும் என்னைத்தேடி வருவதில்லை, யாரையும் நான் வரவேற்பதுமில்லை. மற்றவர் வீட்டிற்குச் சென்றாலும் நான் எப்போதும் அழைக்காத விருந்தாளி. அதுபோகட்டும், யார் நீ?”
“நசி கேதன்.”
யமன் அந்தப்பெயரை மேஜைமேலிருந்த விசைப்பலகையில் அடித்துத் திரையில் பார்த்தான்.
“வல்லப் கேதன், ஸ்ரீ கேதன். வரிசையின் கடைசியில் நசி கேதன். நாம் சந்திக்கும்நேரம் இன்னும் வரவில்லை. நீ வழிதவறி இங்கே வந்திருக்கவேண்டும். சமர்த்தாகத் திரும்பிப்போய்விடு!”
மிஸ் எட்னாவிடமிருந்து தப்பி இத்தனை தூரம் வந்துவிட்டு வெறுமனே திரும்பிப்போக நசிக்கு மனமில்லை. அவளை அலைக்கும் கேள்வியை அவனிடம் கேட்டாலென்ன? காலி நாற்காலியில் காலைநீட்டி அதன் முதுகில் சாய்ந்து சௌகரியமாக உட்கார்ந்தாள்.
“மிஸ்டர் யமன்! ஒருகேள்வி கேட்கலாமா?”
“நான் இன்னும் ஒருமணிக்குள் ஹெய்டி போக வேண்டும். முக்கியமான வேலை. அதற்காகத்தான் இங்கே வந்தேன். சீக்கிரம் கேள்!”
“வாழ்க்கையின் அர்த்தமென்ன?”
நசியின் கேள்வி யமனை வியக்கவைத்தது. அறிஞர்கள் ஆத்மவிசாரம்செய்து பதில்தேடும் கேள்வியை, ‘சக்-ஈ-சீஸி’ல் இதுவரை ஒரேயொரு பிறந்தநாள் கொண்டாடியவள் கேட்பது சரியாகப்படவில்லை.
“என்னை ஏன் கேட்கிறாய்?”
“இறப்புகளைத் தினம் பார்க்கிறவனுக்குத்தான் வாழ்க்கையின் அர்த்தம் தெரியும்.”
“உண்மைதான்.”
அடுத்ததாக நசி சொன்னது யமனை வருத்தப்படவைத்தது. “நான் வாழ்ந்தது போதுமென்று தோன்றுகிறது.”
வாழ்வின் உச்சம் கடந்து இனி இறங்குமுகம்தானென்று சலித்துக்கொள்ளும் நாற்பதுவயது தாண்டியவளுக்கும், ‘யமனே! நீ எப்போது என்பிள்ளைகளின் கொடுமையிலிருந்து என்னை மீட்டுச்செல்லப் போகிறாய்?’ என்று காத்துநிற்கும் கிழவிக்கும் வரவேண்டிய வெறுப்பு இவளுக்கு ஏன்?
நசியை சமாதானப்படுத்த, “உனக்கு டோரா புத்தகங்கள் தருகிறேன்” என்று ஆசைகாட்டினான் யமன். “எத்தனை வேண்டும்?”
“ஒன்று படித்திருக்கிறேன். அதுபோலத்தான் எல்லாமும்.”
“புத்தகம் வேண்டாமென்றால், டோரா படம்போட்ட போர்வை, புத்தகப்பை, மேல்கோட்டு எல்லாம் தருகிறேன்.”
“எதுவும் வேண்டாம். இப்போது டோரா. இன்னும் சில ஆண்டுகளில் ப்ரின்சஸ். பிறகு ஹான்னா மான்டானா. இவையெல்லாம் விரைவில் அர்த்தமிழக்கும் அற்ப விளையாட்டுப் பொருட்கள். ஒன்றிருந்தால் இன்னொன்றில்லையே என்கிற ஏக்கம்தான் மிஞ்சும். எனக்கு வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி வேண்டும்.”
நசியின் மனஉறுதி யமனைப் பிரமிக்கவைத்தது. “சரி. முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். வாழ்வதில் உனக்கு ஏன் ஆசையில்லை?”
“சுதந்திரமற்ற வாழ்க்கை பிடிக்கவில்லை. என்னைக் கேட்காமலேயே என்னைச்சுற்றி எல்லாம் நடக்கின்றன. என் கட்டுக்குள் எதுவுமில்லை.”
“உதாரணமாக…”
“என்னுடைய டிஎன்ஏ நான் கருவாக உருவானபோதே முடிவாகிவிட்டது.”
“ரொம்ப சரி.”
“என் உயிரணுக்கள் பலதலைமுறைகளில் பரிமாண மாற்றங்கள் அடைந்தவை.”
“உனக்குப் புரிந்திருக்கிறதே, வெரிகுட்!”
“அந்த டிஎன்ஏ, புரோட்டீன்களின் வழியாக, என்னுடலின் எல்லா இரசாயனப் பொருட்களையும் நிர்ணயிக்கிறது.”
“அப்படித்தான் விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.”
“என் டோபமின், செரடோனின் மண்டலங்கள்?”
“அவையும் நிர்மாணிக்கப்பட்டுவிட்டன.”
“அப்படியென்றால் நான் மற்றவர்களுடன் பழகும்விதம், ஆசைகளை அடக்கும் திறன், வலிகளைப்பொறுக்கும் குணம், பச்சாதாபம் போன்ற என்னுடைய ‘பெர்சனாலிடி’?”
“ஒருபகுதி முடிவாகிவிட்டது.”
“மீதி?”
“ஃப்ராய்ட் சொன்னதுபோல் குழந்தைப்பருவச் சுற்றுச்சூழலின் அடிப்படையில் உருவாகும்.”
“என் புத்திசாலித்தனம்.”
“உன் பெற்றோர்களின் புத்திசாலித்தனத்தைப் பொறுத்தது.”
“எல்லா வரையறைகளிலும் மிக முக்கியமானது எவ்வளவு காலம் நான் உயிர்வாழ்வேன் என்பது. அதைத் தீர்மானிப்பது நீ, சரியா?”
“அது என் தொழில்.”
“நான் பார்க்கப்போகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்?”
“பெரும்பாலும் தென்கலிஃபார்னியாவில் தயாரிக்கப்படும்.”
“திரைப்படங்கள்?”
“ஹாலிவுட், உலகில் அதற்கு ஒரேயொரு போட்டியான பாலிவுட், இரண்டும். நீ அந்தப்படங்களை வாங்கியோ, வலைத்தளத்திலிருந்து இறக்கியோ பார்க்கலாம்.”
“எனக்குத் தெரியவேண்டிய உலக செய்திகள்?”
“மர்டோக் சாம்ராஜ்யத்தைப் பெருக்கும் நோக்கில் சேகரித்துத்தரப்படும்.”
“என் பாடப்புத்தகங்கள்?”
“நீ இருப்பது ஹியுஸ்டனில். அதனால், டெக்சஸ் பள்ளிநிர்வாகக் குழுவினர் விருப்பப்படி அவை எழுதப்படும்.”
“வரலாற்றுப்பாடத்தில், சோஷலிஸ்ட்கள் என்கிற முத்திரைகுத்தி, மகாத்மா காந்தியையும், ஹெலன் கெல்லரையும் அவர்கள் அகற்றிவிட்டால்…”
“அதை மாற்ற நீ செய்யக்கூடியது எதுவுமில்லை.”
“ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் மனிதனும் டைனசாரும் சமகாலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லும் கட்டுக்கதையை நிஜமாக நடந்ததுபோல் அறிவியலில் போதித்தால்…”
“நீ கேட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்.”
“அப்படியென்றால், என் விருப்பத்திற்கு என்ன மிச்சமிருக்கறது? மிஸ்டர் யமன், இப்போது சொல்! நான் ஏன் தொடர்ந்து வாழவேண்டும்?”
‘வாயாடியாக இருக்கிறதே இந்தப்பெண்!’ என்று நினைத்தாலும் நசியின் நியாயமான கேள்வி யமனை யோசிக்கவைத்தது. பதில் கிடைத்ததும் நசியைப் பரிவுடன் பார்த்தான்.
“நசி! என் மடியில் வந்துஉட்கார்! கவலைப்படாதே! எனக்கு தர்மராஜன் என்று இன்னொரு பெயர். நேரம் வருவதற்குமுன் உயிர்களை நான் திருடமாட்டேன்.”
நசி நாற்காலியிலிருந்து இறங்கி, மேஜையைச் சுற்றிநடந்து, அவன் சொன்னதைச் செய்தாள். தோளுக்கும் கீழே இறங்கிய அவள் கரும்பழுப்புக் கூந்தலை யமன் அன்புடன் தடவினான்.
“நசி! நீ சொன்னது எல்லாம்சரி. இந்தச்சிறுவயதில் உனக்கு உலகத்தைப்பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது. ஆனால், ஐம்பதுசதம் விதியை விட்டுவிட்டாய்.”
“அதென்ன, நான் கேள்விப்படாத விதி?”
“ஒரேமாதிரியான இரட்டைக்குழந்தைகள் ஒரே சூழலில் வளரும்போது, ஒன்று மனநோயால் பாதிக்கப்பட்டால், இன்னொன்றுக்கும் அதேநோய் வருமென்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால், அப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறு ஐம்பதுசதம்தான்.”
“அதனால்…”
“உன் டிஎன்ஏ வரிசையை நீ தேர்ந்தெடுக்கவில்லை, நீ வளரும் சூழலையும் உன்னால் மாற்றமுடியாமல் போகலாம். ஆனால் அவற்றின் போக்கில் மிதந்துசெல்வதும், அவற்றுக்கு எதிராக நீந்துவதும் ஒருநாணயத்தின் இரண்டுபக்கங்களைப்போல். எது நடக்குமென்று தெரிய நான் இதைச் சுண்டப்போகிறேன்” என்று யமன் ஒருகாசை எடுத்துக்காட்டினான். அதன் ஒருபக்கம் எருமைக்கடாவின் தலை. இன்னொரு பக்கம் சுருக்குமுடியுடன் பூப்போல் சுற்றிய பாசக்கயிறு. “பூவா தலையா? சீக்கிரம் சொல்! பூவிழுந்தால் டிஎன்ஏ, டெக்சஸ் பள்ளிநிர்வாகக் குழு, ஹாலிவுட் நிர்ணயித்த பாதைதான் உன் வாழ்க்கையின் தலைவிதி. தலையென்றால் இயற்கை விதித்த எல்லைகளை உணர்ந்து அவற்றுக்குள் உன்விருப்பப்படி வாழ்க்கையை அமைத்து சந்தோஷப்படலாம்.”
“இது வெற்று அதிருஷ்டம்” என்று முகம்சுளித்தாள் நசி. “என் முயற்சியால் தலை விழச்செய்யவேண்டும்.”
அதைக்கேட்டு யமன் திருப்தியடைந்தான். “நீ புத்திசாலிப்பெண். இப்படிச்சொல்வாயென்று எதிர்பார்த்தேன். உயிரணுக்களும், சுற்றுச்சூழலும் ஒருமனிதனின் வாழ்க்கையை முழுமையாகச் சித்தரிப்பதில்லை. அவை தொடாத பகுதியைப் பயன்படுத்தித் தன் வாழ்க்கைக்கதையை விரும்பியபடி எழுத அவனுக்கு சுதந்திரம் இருக்கிறது. பலர் அதைப்பயன்படுத்துவதில்லை. நீயாக ஒருவிளையாட்டை ஆடும்போது, சொந்தக்கற்பனையில் லயிக்கும்போது, புதிதாக ஒன்றை சிருஷ்டிக்கும்போது சுண்டப்படும் இந்த நாணயத்தின் தலை உன்பக்கம் சாயும். ‘காஸிப் கர்ல்ஸ்’ நீ பார்த்தாக வேண்டுமென்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ரிச்சர்ட் டாக்கின்ஸின் ‘பூமியின் ஒப்பற்ற காவியம்’ (வுர்நு புசுநுயுவுநுளுவு ளுர்ழுறு ழுN நுயுசுவுர்) மற்றும் ஜேம்ஸ் லோவென் எழுதிய ‘ஆசிரியர்கள் சொன்ன பொய்கள்’ (டுஐநுளு ஆலு வுநுயுஊர்நுசு வுழுடுனு ஆநு) போன்ற புத்தகங்களைப் படிப்பதை யாராலும் தடுக்கமுடியாது.”
“அவ்வளவுதானா?”
யமன் குறும்புடன் சிரித்தான்.
“இன்னும் எவ்வளவோ. அதையெல்லாம் தேடுவதுதான் வாழ்க்கையின் அர்த்தம். நானே சொல்லிவிட்டால் மீதிவாழ்க்கை உனக்கு எப்படி சுவாரசியமாக இருக்கும்?”
“நானே கண்டுபிடித்துக்கொள்வேன்.”
நசியின் தன்னம்பிக்கையில் யமனுக்குச் சந்தேகம் சிறிதுமில்லை.
அவன் மடியில் கட்டிய அலைபேசி அதிர்ந்தது. “நான் கிளம்ப வேண்டும்.”
“ஹெய்டியில் என்ன அவசரவேலை?”
“நீதான் நியுயார்க் டைம்ஸின் தலைப்புகளைப் படிக்கிறாயே. நாளை தெரியும்.”
“என்னை அலட்சியம்செய்யாமல் நேரம்தந்து பேசியதற்கு நன்றி, மிஸ்டர் யமன்” என்று நசி அவன் மடியிலிருந்து இறங்கினாள்.
“துயரங்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது என்தொழில்.”
“யாராவது அதைச்செய்துதானே ஆகவேண்டும்.”
“சரியாகச் சொன்னாய். சிறிதுநேரம் உன்னோடு பேசி என்னை மறந்திருந்தேன். உனக்குத்தான் நன்றி!” என்று அவனும் எழுந்தான்.
நசியின் கையைப்பிடித்து இரண்டுகதவுகளைத் தாண்டி நடைவழிக்கு வந்து, மின்தூக்கியை அழைத்தான்.
“உன் மனம்செல்லும் வழியில் உன் கால்கள் நடக்கட்டும்! உயிர்ச்சக்தி உன் பயணத்திற்கு ஒளி வீசட்டும்! நீ ஆத்மதிருப்தி அடைவதற்கான அறிவும், மனத்திண்மையும் உனக்குக் கிடைக்கட்டும்!” என்று ஆசீர்வதிப்பதுபோல் யமன் சொன்னான். “அடுத்தமுறை சந்திக்கும்வரை நாம் நண்பர்களாகப் பிரிவோம்!”
மின்தூக்கி வந்துநின்றதும், குனிந்த யமனின் கன்னத்தில் முத்தமிட்டு நசி, “பை!” சொன்னாள். திறந்த கதவுகளுக்கிடையே நுழைந்தாள். கதவுகள் மூடிக்கொள்ள யமனின் உருவம் மறைந்தது. மின்தூக்கி வேகமாகக் கீழே இறங்கியது. மற்ற குழந்தைகள் விழிப்பதற்குமுன் அவள் திரும்பிவிடலாம். ஒன்றாவது பட்டனை அழுத்தப்போகும்போது நசி கவனித்தாள். தளங்களின் எண்கள் பழையபடி இரண்டுவரிசைகளில் தொங்கின, ஒன்றிலிருந்து இருபதுவரைக்கும்.
கதோபநிஷத் ஆசிரியருக்கு நன்றி!