மகரந்தம்

யுஷெங்கோ
யுஷெங்கோ

விஷ விஷயம்: ரஷ்யர்கள் விஷம் வைத்துக் கொல்வதில் நிபுணத்துவம் உள்ளவர்கள்.  ராஸ்புடின் காலத்திலிருந்துதான் இது துவங்கியது என்று நினைக்க வேண்டாம், அதற்கும் முன்பும் இந்த மாதிரி விவரங்கள் உண்டு.  லெனினையே ஸ்டாலின் விஷம் வைத்து ஒழித்தார் என்றும் வதந்திகள் உண்டு.  (முற்பகல் செய்யின்…) ஸ்டாலினின் மரணக் கணங்கள் பற்றிப் படித்தால் அவருமே அதிகாரத்தைக் கைப்பற்றிய நாளிலிருந்தே விஷ-மக்காரர்களின் கை வண்ணம் தன்னைக் கொல்லும் என்று பயந்தார் என்பது தெரியவருகிறது.  உணவை அவருக்கு முன் சாப்பிட்டுக் காட்டும் நபர்கள் எப்போதும் அவருடன் இருந்தார்கள்.  அவ்வளவுக்கு மக்கள் ஆதரவு இந்தப் பொதுவுடைமைத் திலகத்துக்கு இருந்திருக்கிறது.  இந்த விஷச் சுழல் எப்படி வளர்ந்திருக்கிறதென்றால், இன்று அது விஷச் சூழலாகவே ரஷ்யாவில் உள்ளது. முன்னாள் ரஷ்ய உளவாளிகள், மேலை நாடுகளுக்குக் கட்சி மாறிப் போனாலும், ரஷ்ய விஷமர்களின் நீண்ட கரங்களுக்குப் பலியாகிறார்கள்.  ரஷ்ய பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர், பல தொழிலதிபர்கள் என்று தொடரும் நாடகம் இது. ரஷ்யாவிடம் இருந்து பிரிய விரும்புபவர்களுக்குக் கிட்டும் ஒரே முடிவு, மரணம். உக்ரெய்னின் ஆரஞ்சுப் புரட்சி என்பது உருவாகக் காரணமாக இருந்த முன்னாள் அதிபர், விக்டர் யுஷ்செங்கோ (Viktor Yushchenko), இப்படித்தான் 2004 ஆம் வருடம் டயாக்ஸின் என்ற விஷத்தால் தாக்கப்பட்டார்.  குற்றுயிராகக் கிடந்தவண்ணமே உக்ரெயினின் மக்கள் ஆதரவால் அதிபர் தேர்தலில் ஜெயித்தார்.  அவர் ரஷ்ய உளவு அமைப்புகளால்தான் தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உக்ரெயினிய அரசு இன்றுவரை கருதி வருகிறது. கீழே உள்ள சுட்டியில் உக்ரெயின் அதிபர் பற்றிய செய்தி கிட்டும்.

http://seedmagazine.com/content/article/the_poisoning_of_ukraines_president/

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜ்யார்ஜ் W. புஷ்ஷுன் மனைவி லாவ்ரா புஷ், 2007 இல் தானும், தன் கணவரும் பல அமெரிக்க அதிகாரிகளும் யூரோப்பில் ஒரு மாநாட்டிற்கு வந்தபோது விஷமிட்ட உணவால் தாக்கப்பட்டோம் என்று தன் சுய சரிதைப் புத்தகத்தில் சமீபத்தில் எழுதி இருக்கிறாராம்.  அந்த மாநாட்டில் அமெரிக்கர்களுக்கு ஜெர்மன் உணவைத் தயாரித்த சமையல் நிபுணர்கள் இந்தக் கதையை

மறுக்கிறார்கள்.  அது பற்றிய சர்ச்சையை ஜெர்மன் கண்ணோட்டத்தில் இந்தப் பத்திரிகையில் படிக்கலாம்.

http://www.spiegel.de/international/germany/0,1518,692452,00.html

அமெரிக்காவிடமிருக்கும் அதி சிறந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள்: உலகின் மிக மிக சக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் பல, இன்று அமெரிக்க அரசிடம் இருக்கின்றன. சிறந்த பத்து சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஆறு கம்ப்யூட்டர்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. அறிவியல் ஆய்வு, வானிலை மாதிரியாக்கம், விண்கலங்களை உருவாக்குதல் எனப்பல அதீதத் தகவல் கணிப்புப் பயன்பாடுகளுக்கு சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்படுகின்றன.

govsupercomputerig_01_jaguar1_full

மேலுள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது ‘ஜாகுவார்’ என்ற உலகின் முதல் தரமான சூப்பர் கம்ப்யூட்டர். அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வுக்கூடத்தில் இருக்கிறது. இதைப்போல அமெரிக்காவிடமிருக்கும் பிற சூப்பர் கம்ப்யூட்டர்களின் புகைப்படங்களையும், அவற்றின் பயன்பாடுகளையும் இந்த சுட்டியில் பார்க்கலாம்.

http://www.informationweek.com/news/government/enterprise-apps/showArticle.jhtml?articleID=224700271&pgno=1&isPrev=

நாடுகள், ரசனைகள், புத்தக அட்டைகள்: புத்தகங்களின் அட்டைகளை வடிவமைப்பதும் ஒரு சிறந்த கலைதான். சத்யஜித் ராய் திரையுலகில் நுழைவதற்கு முன்னால் புத்தக அட்டைகளை வடிவமைப்பவராக இருந்திருக்கிறார். பார்த்தவுடனே பளீரென்று சுண்டியிழுக்கும் புத்தக அட்டைகளால் புத்தக விற்பனை அதிகமாகிறது என்பது ஒரு பொது உண்மைதான். இருந்தாலும் அது தேசத்துக்கு தேசம் மாறுகிறது என்று சொல்லுகிறது இந்த கார்டியன் கட்டுரை. உதாரணமாக மத்திய யூரோப்பில் நாவல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், புத்தக அட்டை எப்படியிருந்தாலும் நாவல்கள் விற்றுத் தீர்கின்றனவாம். அதனால் அவர்கள் அட்டையில் கவனம் செலுத்துவதில்லை. ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற மத்திய யூரோப் நாடுகளின் புத்தக அட்டைகள் அலங்காரமில்லாமல் படு சாதாரணமாக இருக்கிறன. ஆனால் பிரிட்டிஷ் நாடுகளின் அட்டைப்படம் சிரத்தையெடுத்து வடிவமைக்கப்பட்டிருந்தாலே அவற்றின் விற்பனை நன்றாக இருக்கிறது என்று ஒரு வடிவமைப்பாளர் கூறுகிறார். அமெரிக்காவின் அட்டை வடிவமைப்பு பிரிட்டிஷ் வடிவமைப்பை விட நேர்த்தியாகவும் இருக்கின்றன என்றும் இக்கட்டுரை தெரிவிக்கிறது. இந்தியப் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பைக் குறித்தும் யாராவது ஆராய்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.

கார்டியன் கட்டுரை:
http://www.guardian.co.uk/artanddesign/2010/may/09/judge-book-by-cover

சென்ற சொல்வனம் இதழில் ‘The Girl with the Dragon Tatoo’ என்ற நாவலைப் பற்றிய கட்டுரைத் தொடர் ஆரம்பமானது. அந்த நாவலுக்கு கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து என்ற மூன்று வெவ்வேறு நாடுகளில் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படங்களை கீழே பார்க்கலாம்.

cover-version

அணுசக்திக் கழிவுகள்: நாம் நம் அணுசக்தி நிலையங்களின் கழிவுப் பொருட்களை என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எங்கே புதைக்கிறோம்? யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். தில்லிப் பல்கலைக் கழகத்தின் அணுக் கழிவுகளால் சமீபத்தில் உயிரிழந்த பலரைப் பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அது குறித்த ஒரு பகிரங்க விசாரணையோ, அந்த மாதிரி மோசமான முறையில் கதிர்வீச்சு நிறைந்த பொருட்களை விட்டெறிந்த அலுவ்லர்கள், அறிவியலாளர்கள், பொறியியலாளர்களை இந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்கவைக்க ஏதும் முயற்சி செய்யப்பட்டதா? அல்லது அப்படி கழிவுப் பொருட்களை நிர்வகிக்க அரசு ஏதும் நடைமுறைகளை இன்னமுமே உருவாக்கவில்லையா?

11nuclear_ca0-articlelargeஎதிலும் வரைமுறைகளே இல்லாத ஒரு நாடாக இந்தியா இயங்குவதை ஏன் படித்த மக்களோ, மத்திய வர்க்கமோ சிறிதும் கவலைப்படாமல் ஏற்றுக் கொண்டிருக்கின்றன? ஃபின்லாந்தில் கதிரியக்கக் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துவது என்பதைப் பற்றிச் சிறிதாவது யோசித்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய தீர்வு முறை நல்லதா என்றால் சந்தேகம்தான். அமெரிக்காவில் பல ஆயிரம் டன்களுக்கு இந்த வகை கழிவுகள் கிடக்கின்றனவாம் அவை குறித்து அமெரிக்கர் ஏதும் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்ததாகத் தெரியவில்லை. இன்னும் பல நாடுகளிலும் அணு உலைகள், ஆயுதக் கிடங்குகள், என்று ஏதேதோ தொழில்கள் நடக்கின்றன. அவையுமே பெருமளவு ரகசிய அமைப்புகள் கையில் உள்ளன. பொதுமக்களை இருட்டில் வைப்பதில்தான் எல்லாவகை அரசுகளுக்கும் எப்படி ஒரே விதமான மனோபாவம், செயல்முறை அமைகிறது?

 

greenlantern_bigஒளியால் குணமாகும் காயங்கள்: காயங்களை ஆற்றப் புதுமுறை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவசரம் வேண்டாம், இன்னும் முழுவதும் நடைமுறைக்கு வந்து விடவில்லை. இப்போதைக்குப் போர்க்களங்களில் படையாட்களுக்கு ஏற்படும் காயங்களை உடனடியாகத் தையல் எல்லாம் போடாமல் மூடுவதற்கு இந்த முறை பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது ஏதோ அறிவியல் கதைகள், சினிமாக்களில் வருவது போல ஒரு ஐடியா. காயம்பட்ட இடத்தில் ஒரு பச்சைச் சாயத்தைப் பூசுகிறார்கள். இந்த சாயம் / திரவம் தோல் திசுப் புரதங்களை இணைய ஊக்குவிப்பது. இதற்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஏதும் மறுவினை செய்வதில்லை. இது ஒளிபட்டால் செயல்படத்துவங்கும் வகைப் பூச்சு. இதன் மீது ஒரு கருவியால் பச்சை ஒளிக்கற்றையை வீசினால் அந்தப் பூச்சு உடனே செயல்பட்டு விரிந்து காயம்பட்ட தோல் திசுக்களை ஒன்றிணைத்து நீர், தூசி, கிருமிகள் புகாவண்ணம் மூடி விடுகிறது. தோல் மறுபடி வளர்ந்ததும் அந்தப் பூச்சு தானாகவே கரைந்து விடும். தழும்புகளும் குறைவாகத் தெரியும் வகையில் அமையும். இதைப் பற்றியதொரு நல்ல கட்டுரையை இங்கே படிக்கலாம்:

http://www.gizmag.com/photochemical-tissue-bonding-treats-wounds-with-light/15034/