இப்போதெல்லாம் சுடிதார் அணிந்து தெருவில் செல்லும் எந்த ஒரு இளம் பெண்ணின் காதிலிருந்தும் செல் போனைப் பிடுங்கிவிட்டால், இயல்பாக நடக்கவே தெரியாமல் திகைத்து நின்றுவிடுவாள். இளைஞர்களின் செல்பேசி பட்டன்களின் எண்களே அழிந்து மொக்கையாகிறவரை குறுஞ்செய்தியில் கட்டை விரல்கள் இரண்டும் விளையாடுகின்றன. பைக்கில் செல்லும் பலர் தோளில் போனை இடுக்கிக்கொண்டே ஓட்டுவதைப் பார்த்தால், இவர்களுக்கு கழுத்து நிரந்தரமாக இருபது டிகிரி சாய்ந்துவிட்ட குழந்தைகள் பிறக்குமோ என்று கவலையாக இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுபவர்களால் அமெரிக்காவில் மட்டும் வருடத்துக்கு 2600 உயிர்கள் போகின்றன (மாட் ரிக்டெல்).
1960களில் இன்றைய செல்போனின் தாத்தாவைக் கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பரிடம் அன்றே தீர்க்க தரிசனமாக ஒரு கேள்வி கேட்டார்கள்: ‘இந்தப் புதிய ஒயர்லெஸ் போனில் அபாயம் எதாவது இருக்கிறதா?’
ஆமாம் என்று ஒத்துக்கொண்டார் கூப்பர். ‘கார் ஓட்டுபவர்களின் கவனம் சாலையில் இல்லாமல் போன் பேசுவதில் திரும்பினால் விபத்து நடக்கலாம்; இது வெறும் காமன் சென்ஸ்தானே?’ என்றார் கூப்பர்.
ஆனால் விரைவிலேயே செல்போன் கம்பெனிக்காரர்கள் அந்தப் பொது அறிவைத் திட்டமிட்டு இழந்தார்கள்.
அந்தக் கால ஒயர்லெஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டு முதல் நடமாடும் போன் செய்யப்பட்ட வருடம், 1946. அன்று நீண்ட தூர லாரி டிரைவர்கள் தலைமையகத்துடன் தொடர்பு கொள்வதற்காகத்தான் இவை பயன்பட்டன. அதாவது, மொபைல் போனின் ஆரம்பமே தெருவில்தான். AT&T கம்பெனியின் முதல் விளம்பரங்களில் ஓர் ஆரோக்கியமான லாரி டிரைவரும் அவருடைய லாரியும் சிரித்துக்கொண்டு போஸ் கொடுப்பார்கள்.
அப்போது நியூயார்க் நகரிலேயே சுமார் 2000 வாடிக்கையாளர்கள்தான் இருந்தார்கள். போனில் டயல் எல்லாம் கிடையாது; ஆப்பரேட்டரைக் கூப்பிட்டு சொல்லி இணைப்பு வாங்குவதற்குள் வீடு வந்து சேர்ந்துவிடும்.
1987-ல் ‘வால் ஸ்ட்ரீட்’ திரைப் படத்தில் கதாநாயகன் ஒரு மொபைல் போனை ஒயிலாகத் தூக்கிப் போட்டுப் பிடித்துக் காதில் பொருத்திப் பேசுவதைப் பார்த்தவுடன், நடமாடும் போன் என்பது மனிதனின் அந்தஸ்தை நிலை நாட்டும் ஒரு கருவியாகிவிட்டது. அந்த போனில் பாட்டரி மட்டுமே செங்கல் பரிமாணத்திற்கு இருந்ததையோ, போனின் விலை இன்றைய மதிப்பில் மூன்று லட்சம் ரூபாய் என்பதையோ வால் வீதி சூதாடிகள் பொருட்படுத்தவில்லை.
செல்போன் இண்டஸ்ட்ரி, கிடைத்த லாபம் அத்தனையயும் திரும்ப முதலீடு செய்து ஊரெங்கும் டவர் எழுப்ப ஆரம்பித்தது. முக்கியமாக, ஹைவே சாலைகள் முழுவதும் செம சிக்னல்! திட்டமிட்டே வண்டி ஓட்டுபவர்களை ஸ்கெட்ச் போட்டுக் கவர் பண்ணியிருக்கிறார்கள். அதற்கேற்ப, அவர்களுடைய முக்கால்வாசி லாபமும் வாகன ஓட்டிகளிடமிருந்தே வந்தது.
இதெல்லாம் பாதுகாப்பான டெக்னாலஜிதானா என்று சந்தேகம் கிளப்பின இரண்டொரு இஞ்சினியர்களைக் காதைத் திருகி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். உள்ளிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்கள் அத்தனையும் சுப் சாப்!
ரொம்ப நாள் வரை எதிர்ப்புக் குரல்களே எழும்ப முடியாமல் போனதற்குக் காரணம், மொபைல் இண்டஸ்ட்ரியின் வளர்ச்சி. 1985-ல் 35 கோடி டாலர். பத்து வருடத்தில் இது 1600 கோடியாக உயர்ந்தது. 2008-ல் முழுசாக 14,800 கோடி.
அறுபதுகளில் செல்போன் என்பது காஸ்ட்லியான விளையாட்டு சாமான். அவ்வளவுதான். ஆனால் பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் கார்டுகள் கிடைக்க ஆரம்பித்த பிறகு செல்போனின் சாலை ஆபத்துக்கள் பல மடங்கு அதிகரித்துவிட்டன.
2007-ல் அமெரிக்க அரசாங்கம் செய்த ஆய்வில் 11 சதவீத டிரைவர்கள் செல்போன் பேசிக்கொண்டேதான் ஓட்டுகிறார்கள் என்பது வெளி வந்தது. அதற்கு ஏழு வருடம் முன்பே மொபைல் போன்களால் ஏற்பட்ட சாலை விபத்துக்கள் ஐந்தரை லட்சம். இதில் 2600 மரணங்கள்.
அதிலும் இப்போது கார் ஓட்டிக்கொண்டே எஸ்.எம்.எஸ் குறுஞ் செய்தி அனுப்புவதும் படிப்பதும் அதிகரித்துவிட்டது. அந்த நாலு வரி செய்தியை அனுப்புவதற்குள் ஆபிச்சுவரியில் இரண்டு வரி செய்தியானவர்கள் அனேகம்.
கடந்த பத்து வருடத்தில் எவ்வளவோ தன்னார்வ அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறைகள், நுகர்வோர் குழுக்கள் இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்து பலமாக அபாயச் சங்கு ஊதியிருக்கிறார்கள். அதன் ஜூஸ்: நீங்கள் போன் பேசிக்கொண்டே கார் ஓட்டும்போது விபத்துக்கான வாய்ப்பு 400 சதவீதம் அதிகரிக்கிறது.
அதை விட முக்கியம், ‘என்னிடம்தான் ப்ளூடூத் அல்லது இயர்போன் இருக்கிறது, கை இரண்டும் ஸ்டியரிங்கைத்தான் பிடித்திருக்கிறது’ என்று ஆறுதல் அடைய முடியாது. கையோடோ, கையில்லாமலோ, எப்படி போன் பேசினாலும் விபத்து வாய்ப்பு அதேதான். கையல்ல, மனம்தான் டிரைவிங்கில் குவிந்திருப்பது அவசியம்.
இன்றைய அமெரிக்க செல்பேசித் தொழில் 15 ஆயிரம் கோடி டாலர் இண்டஸ்ட்ரி. இவ்வளவு அசுரத்தனமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அவர்கள் முதலிலிருந்தே ஒரு முக்கியமான கஸ்டமரை வளைத்துப் போட்டதுதான் : டிரைவர்!
அமெரிக்க மக்களின் தலையெழுத்து, காலாற வாக்கிங் போக வேண்டுமென்றால் கூடக் காரை எடுக்க வேண்டும். ஹைவே, ஃப்ரீவே, எக்ஸ்ப்ரஸ்வே சாலைகளில் தினசரி இருநூறு மைல் கார் ஓட்டுபவர்கள் ஏராளம். இவர்களைக் குறி வைத்து உக்கிரமாக விளம்பரம் செய்தன, செல்போன் கம்பெனிகள்.
1984 விளம்பரம் ஒன்றில் ஒரு பிசியான பிசினஸ் மேன் காரில் உட்கார்ந்து காமிராவை நோக்கிக் கேட்கிறார்: ‘உங்களுடைய செகரட்ரியால் 55 மைல் வேகத்தில் நோட்ஸ் எடுத்துக்கொள்ள முடியுமா?’ காரில் உங்களைப் பேச வைப்பதற்கு என்னென்ன தகிடு தத்தங்கள் உண்டோ, அத்தனையும் செய்தார்கள்.
கார் ஓட்டும்போது செல்பேசியை உபயோகித்தால் ஆபத்து என்று சரமாரியாக ஆய்வு முடிவுகள் வர ஆரம்பித்த பிறகு கூட அவர்கள் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை. கன்ஸ்யூமர் பாதுகாப்பு சங்கங்கள், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என்று பல தரப்பினரும் உள் நாக்கு தெரியக் கத்தியதால், பல மாநிலங்கள் காரில் மொபைல் போன்களைத் தடை செய்ய சட்டம் கொண்டு வர முயற்சித்தன. செல்போன் கம்பெனிகள் தங்கள் லாபி இயந்திரம் முழுவதையும் முடுக்கி விட்டு, பணத்தை டாக் டைம் போலச் செலவழித்து சட்டத்தைத் தடுத்து நிறுத்தின.
மொபைல் போன் கம்பெனியின் சக்தி வாய்ந்த CTIA அமைப்பு, மிக சமீபம் வரை சட்டத்தை எதிர்த்துத் திரைக்கு முன்னாலும் பின்னாலும் தீவிரமாக வேலை செய்து வந்திருக்கிறது. இப்போது ஆவிகள் தொல்லை அதிகரித்துவிட்டதாலோ என்னவோ, ‘இந்தப் பிரச்னை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நோ கமெண்ட்ஸ்’ என்று சொல்கிற அளவுக்கு மிருதுவாகியிருக்கிறது. கல்லுடி மங்கன் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே ஆச்சரியம்தான்!
செல்போன் ஆபத்து பற்றி சிகரெட் பாக்கெட் மீது போடுவது போல் மண்டை ஓடு படம் போட்டு மொபைல் போனிலேயே எச்சரிக்கை வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. மொபைல் கம்பெனிகள் ‘அதெல்லாம் தேவையில்லை. நாங்களே வாடிக்கையாளர்களுக்கு புத்திமதி சொல்ல ஏராளமாகப் பணம் செலவழித்து விளம்பரம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்’ என்று சாதிக்கிறார்கள்.
இத்தனை வருடமாக ‘காரில் பேசு, பேசு’ என்று 72 பாயிண்ட் எழுத்தில் தூண்டி விட்டுவிட்டு, இப்போது ‘பேசாதே’ என்று 8 பாயிண்டில் கிசுகிசுப்பதால் எந்தப் பயனும் விளையவில்லை என்றுதான் நோக்கர்கள் சொல்கிறார்கள். அதைவிட மோசம், நவீன தொழில் நுட்பத்தில் காரைக் குறி வைத்துப் புதிய புதிய கருவிகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஜி.பி.ஆர்.எஸ், டிஜிட்டல் மேப்கள், வண்டி ஓட்ட வழி சொல்லித் தரும், டிராஃபிக் செய்திகள் தரும் ஆட்டோ சாரதிகள் என்று பற்பல. மின்னஞ்சல், நெட் எல்லாவற்றையும் போகிற இடமெல்லாம் கூடவே எடுத்துப் போவதற்கு ஐஃபோன், ப்ளாக் பெர்ரி போன்ற கைக்கு அடக்கமான உலகங்கள்…
உடா பல்கலைக் கழகம் செய்த ஆய்வு ஒன்று, குடித்துவிட்டுக் கார் ஓட்டுவதை விட செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுவது அதிக ரிஸ்க் என்று தெரிவித்தது.
லஞ்சத்துக்கே லட்சங்கோடி கொடுக்கத் தயங்காத செல்போன் கம்பெனிகளின் காதில் விழவா போகிறது?