20-20ல் உலகக்கோப்பை வெல்லுவோமா மாட்டோமான்னு இந்தியா முழுவதும் காலைல காபி குடிச்சதுல இருந்து இரவு படுக்கையை போடற வரை பேசிக்கொண்டிருக்க, சத்தமேயில்லாம நம்மூரு விசுவநாதன் ஆனந்த் வெற்றிகரமா தன்னோட செஸ் உலக சாம்பியன் பட்டத்தை மற்றொரு முறை தக்க வச்சிட்டிருக்கார். பல பேருக்கு இந்த ‘தக்க வச்சிட்டிருக்கார்’ன்றதே ஆச்சரியமாகத்தான் இருக்கும். ‘ஆனந்தா முன்னாடி சேம்பியனா இருந்தாரு? இந்த காஸ்பரோவோ கார்ப்போவோ, ஒருத்தன் இருந்தானே, அவன் என்ன ஆனான்?’ அப்படீன்னு ஒரு கேள்வி உங்களுக்கு தோன்றினா, உங்களுக்கு ஒரு ஷொட்டு! ஏன்னா இந்த பெயர்கள் கூடத் தெரியாமல் – எல்லா நியூஸ் பேப்பர்லயும் விளையாட்டு பகுதியை ஒரு வார்த்தை விடாம படிக்கிறவங்க – பல பேரை எனக்கு தெரியும்.
பின்னணி
ஆனந்த் 2000லியே ஃபீடே (FIDE – நம்ம கிரிக்கெட் ICC மாதிரி) உலகக் கோப்பையை வென்றவர். ஆனால் அப்போ எது உலக சேம்பியன்ஷிப் அப்படின்றதுலயே பல குழப்பங்கள் நிலவி வந்தது. ஃபீடே உலகக் கோப்பை டோர்னமெண்ட்டில் காஸ்பரோவ் கிடையாது. ஃபீடேயை விட்டு வெளியே வந்து காஸ்பரோவ், ஷார்ட் போன்றவர்கள், தாங்களாகவே ஒரு உலக சேம்பியன்ஷிப் நடத்தி வந்தனர். காஸ்பரோவ்தான் கடைசியா ஃபீடே அங்கீகாரத்துடன் கார்ப்போவை தோக்கடிச்சு சாம்பியனா ஆனதுனால அவரோட பட்டத்துக்குத்தான் மதிப்பு கூட இருந்தது (classical world champion). தவிர காஸ்பரோவ் இல்லாம ஒரு உலக சேம்பியன்ஷிப் நடக்க வாய்ப்பே இல்லைன்ற அளவுக்கு காஸ்பரோவ் அப்போ உலக செஸ் ரேட்டிங் பட்டியல்ல எங்கயோ உசரத்துல இருந்தார். இந்தக் குழப்பங்களை தீர்க்க ஒரே வழி ஃபீடே சேம்பியன்ஷிப்பையும் க்ளாசிக்கல் சேம்பியன்ஷிப்பையும் ஒண்ணா சேர்த்து, திருப்பி உலக சேம்பியன்ஷிப் பட்டத்தை ஃபீடேக்குக் கீழே கொண்டு வருவதுதான். இதுல ஒரு பகுதிதான் 2005ல் அர்ஜெண்டினாவில் நடந்த டோர்னமெண்ட்டும் (டோப்பலோவ் ஜெயிச்சது), 2007ல் மெக்சிக்கோவில் நடந்த டோர்னமெண்ட்டும் (இதுல ஆனந்த ஜெயிச்சார்). இதுக்குள்ள பல விஷயங்கள் செஸ் உலகத்தில் நடந்திருந்தது. காஸ்பரோவ் க்ராம்னிக்கிடம் தன் க்ளாசிக்கல் சேம்பியன் பட்டத்தை தோற்றிருந்தார். மற்றொரு மேட்சுக்கு இடம் தராமல் க்ராம்னிக் காஸ்பரோவை அலைக்கழித்து பட்டத்தை தக்க வச்சிட்டிருந்தார். காஸ்பரோவும் 2005ல் போதுமடா சாமின்னு செஸ்ஸிலிருந்து ரிடையர் ஆகி அரசியலில் ஐக்கியமானார்.
2006ல் டோப்பலோவை க்ராம்னிக் ஒரு மேட்சில் தோக்கடிச்சதுதான் இந்த ஃபீடே/க்ளாசிக்கல் பட்டங்களை இணைத்த முதல் மேட்ச். ‘க்ராம்னிக் கம்ப்யூட்டர் உதவியோடத்தான் ஜெயிச்சாரு, என்னைய ஏமாத்திட்டார்’னு டோப்பலோவும் அவர் மேனேஜரும் சேர்ந்து ஒரு பெரிய குற்றச்சாட்டை க்ராம்னிக்கின் மேல் போட்டாங்க. இது வரைக்கும் எது உண்மைன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, இதுக்கப்புறம் டோப்பலோவை செஸ் உலகத்துல ஒரு நம்பியார் கணக்காத்தான் எல்லாரும் பார்க்க ஆரம்பிச்சாங்க. 2007ல் மெக்சிக்கோவில் க்ராம்னிக்கும் ஆடினார். அதனால அதுல ஜெயிச்ச ஆனந்த்தின் உலக சாம்பியன் பட்டத்திற்கு நல்ல மதிப்பு. ஆனா, டோர்னமெண்டில் ஜெயிக்கிறதெல்லாம் பட்டமே கிடையாது, உலக சேம்பியன்ஷிப் ஒரு மேட்ச்சாத்தான் இருக்கணும் சொன்னவங்களும் உண்டு (Side note: டோர்னமெண்ட்டில் பல பேர் ஆடுவாங்க. எல்லாருக்கும் எல்லாரோடயும் ஒரு ஆட்டமாவது இருக்கும். ஆனா, மேட்ச்ன்றது இரண்டே பேருத்தான் ஆடுவாங்க. அவங்க இரண்டு பேரே 15 ஆட்டம், இல்லை 20 ஆட்டம்னு ஆடுவாங்க). இதுக்கப்புறம் ஆனந்த் க்ராம்னிக்கோட ஒரு ரீ-மேட்ச் ஆடினார் (ஜெர்மனில 2008ல் நடந்தது). இதுலயும் ஆனந்த் ஜெயிச்சு உலக சேம்பியன் பட்டத்தை தக்க வச்சிக்கிட்டார். இதுக்குள்ள டோப்பலோவ் காம்ஸ்கின்னு ஒருத்தரை தோக்கடிச்சு ஆனந்துக்கு சேலஞ்சர் ஆனார், இந்த சாம்பியன்ஷிப்புக்கு.
ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?
2006 உலக சேம்பியன்ஷிப்பில் கிராம்னிக்குக்கு எதிராக டோப்பலோவ் அடிச்ச கூத்தை செஸ் உலகம் இன்னும் மறந்திருக்கவில்லை. ஆனந்தை என்ன பாடு படுத்த போறாங்களோன்னு பலரும் பல விதத்துல ஜோசியம் சொல்லிட்டிருந்தாங்க. இத்தைனைக்கும் இந்த தடவை ஆனந்த் விளையாடப்போறது டோப்பலோவின் சொந்த நாடான பல்கேரியாவிலேயே. ஆனந்தே சரின்னாலும், க்ராம்னிக் முதல் கொண்டு பலரும் இது ஒரு பெரிய தப்புன்னு சொன்னாங்க. ஆனந்த் இதை பத்தியெல்லாம் கவலை படாம ஜென்டில்மேன்தனமா எல்லாருக்கும் பேட்டி கொடுத்திட்டிருந்தார். சரியா பல்கேரியாக்கு அவர் கிளம்பிப் போற சமயத்துல ஐஸ்லாண்டு நாட்டு எரிமலை சாம்பலை கக்கி விமானங்கள் அத்தனையையும் தரையிறக்க, வேறு வழியில்லாமல் ஆனந்த் ஒரு வேன் வாடகைக்கு எடுத்துட்டு ரோடு வழியா கிட்டத்தட்ட 40 மணிநேரம் ஜெர்மனிலருந்து ஒவ்வொரு நாட்டு எல்லையா பிடிச்சு பல்கேரியாவுக்கு வந்து சேர்ந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கேன், ஒரு மூணு நாள் இந்த மேட்ச்சை தள்ளி போடுங்கப்பான்னு ஆனந்த் எவ்வளவோ கேட்டும், ஒரு நாள்தான் அவருக்கு நேரம் கிடைச்சது. ஆனந்த் கம்ப்ளெய்ன் பண்ணாம அதுக்கும் ஒத்துகிட்டார்.
மொத்தம் 12 ஆட்டங்கள். இதுல ட்ரா ஆச்சுன்னா, 4 ரேப்பிட் ஆட்டங்கள். இதுலயும் ட்ரா ஆச்சுன்னா ப்ளிட்ஸ், அதுக்கப்புறம் ஆர்மகடான்னு வழக்கமான விதிமுறைகள். ’12 ஆட்டங்கள்ன்றது ரொம்ப கம்மி, ஒரு வேர்ல்ட் சாம்பியனை தேர்ந்தெடுக்க இது போதுமா’ன்னு எல்லாருக்கும் ஒரே கவலை. இதுல டோப்பலோவைத் தோற்கடிக்க ஆனந்த்தோட திட்டம் என்னவாருக்கும்னு ஆளாளுக்கு போட்டி போட்டு வியூகம் அமைச்சிட்டிருந்தாங்க. டோப்பலோவ் ஆனந்தை விட 5 வயசு சின்னவர்ன்றது வேற ஒரு பெரிய விஷயமா பேசப்பட்டது (ஆனந்துக்கு 40 வயசு ).
டோப்பலோவ்வோட ஸ்டைல் என்னன்னா முடிஞ்ச அளவுல போர்ட்டுல குழப்பத்தை உண்டு பண்ணி, எதிராளியை ரொம்ப யோசிக்க வைச்சிடுவார். நேரம் வேற ஓடிட்டே இருக்கும். இதுலயே ரொம்பா டென்ஷனாகி எதிராளி ஏதாவது தப்பு பண்ணி வைக்க, அதை முழுசா தனக்கு சாதகமாக்கி ஜெயிச்சிட்டு போயிடுவார். ஆனந்தோட ஸ்டைல் போர்ட்டை விளையாடுவது. அதாவது போர்ட்ல இருக்கிற பொசிஷன் ட்ரா அப்படின்ற மாதிரி இருந்தா, எதிராளி எவ்வளவு சின்ன ஆளா இருந்தாலும் ட்ரா கொடுத்துட்டு போயிடுவார் ஆனந்த். அவரால டேக்டிக்ஸும் நல்லா விளையாட முடியும், பொசிஷனலாவும் நல்லா விளையாட முடியும். டோப்பலோவுக்கு எதிரா ஆனந்த் முடிஞ்ச அளவு பொசிஷனலாத்தான் விளையாடுவார்ன்றதுல யாருக்குமே சந்தேகமே இல்லை.
ஒரு வழியா முதல் ஆட்டம் ஆரம்பித்தது. முதலாம் ஆட்டத்தில் ஆனந்த் ப்ளாக். அவர் க்ருன்ஃபெல்ட் டிஃபன்ஸ் ஆட, எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். ஏன்னா இந்த டிஃபன்ஸ் கத்தி மேல நடக்கற மாதிரி. படு டேக்டிகலா மாற நிறைய வாய்ப்புகள் உண்டு. ‘ஏண்டா இவர் பாட்டுக்கு டோப்பலோவ்க்கு சான்ஸ் தராரு’ன்னு எல்லாருக்கும் ஆனந்தை பத்தி ஒரே கவலை. அதுக்கு ஏத்த மாதிரிதான் ஆச்சு. ஒரு விஷயம் கவனிக்கனும் — இந்த மாதிரி பெரிய லெவல்ல விளையாடற க்ராண்ட்மாஸ்டர்களெல்லாம் நிறைய ஹோம்வொர்க் பண்ணிட்டுத்தான் ஆட்டத்துக்கே வருவாங்க. அந்த விஷயங்கள்ல டோப்பலோவ் படு கில்லாடி. கம்ப்யூட்டர்களை உபயோகப்படுத்தி பல புது ஐடியாக்களோடத்தான் களத்துலயே இறங்கற டைப். ஆனந்த்தும் சளைச்சவர் இல்லை. ஆனா பாருங்க, அவர் நேரம், ஒரு மூவ்வை மாத்தி விளையாடிட்டாரு. 23)… Bd2 க்கு பதிலா 23)…Kf7? விளையாடிட்டாரு. 40மணி நேரம் பிரயாண களைப்பு இன்னும் போகலையா, இல்லை முதல் ஆட்ட டென்ஷனான்னு தெரியலை. இந்த ஒரு மூவ் தப்புனால அடுத்த 5 மூவ்ல ரிசைன் பண்ணற மாதிரி ஆயிடுச்சு. ரொம்ப மோசமான ஆரம்பம்! ஆனந்த் 0, டோப்பலோவ் 1.
இரண்டாம் ஆட்டத்துல ஆனந்த் வொயிட். கேட்டலான்னு ஒரு ஓப்பனிங் விளையாடினார். டோப்பலோவ் டக்கு டக்குன்னு எல்லாத்துக்கும் மூவ் ரிப்ளை பண்றதை பார்த்ததும் (டோப்பலோவ் ஹோம்வொர்க் அவ்வளவு ஸ்ட்ராங்!), புத்திசாலித்தனமா ஆனந்த் 15வது மூவில் க்வீன் எக்ஸ்சேஞ்சுக்கு போனார். டோப்பலோவ் அந்த இடத்துல க்வீனை எக்ஸ்சேஞ்ச் பண்ணனும்னு தேவையேயில்லை, ஆனா தீடீர்னு சொந்தமா யோசிக்கணும்னு ஆனபோது மனுஷன் உணர்ச்சி வசப்பட்டு எக்ஸ்சேஞ்ச் பண்ணிட்டார். அதுதான் அந்த ஆட்டத்தின் திருப்புமுனைன்னு சொல்லனும். அதுக்கப்புறம் தொடர்ச்சியா டோப்பலோவ் பண்ணின ஒவ்வொரு சின்ன சின்ன தப்பையும் ஆனந்த விடாம தனக்கு பயன்படுத்திக்க ஆரம்பிச்சார். 43ம் மூவில் இதுக்கு மேலே வொயிட் (அதாவது ஆனந்த்) ஜெயிப்பதை தடுக்க முடியாதுன்னு ஆனதுனால டோப்பலோவ் ரிசைன் பண்ணிட்டார். ஆக, ஆனந்த் 1, டோப்பலோவ் 1. ஆனந்துக்கு இது ஒரு பெரிய பூஸ்ட்டா இருந்திருக்கணும். மேட்ச் முதலாம் ஆட்டத்திலேயே தோத்து போயி, ஒரு வழியா இரண்டாம் ஆட்டத்தில் அதை சமப்படுத்திட்டனால, மீதி பத்து ஆட்டங்களையும் கொஞ்சம் டென்ஷன் கம்மியா ஆடலாம்.
மூன்றாம் ஆட்டம் ஆனந்த் ப்ளாக். முதலாம் ஆட்ட ப்ளாக் தோல்விக்கு பிறகு ரொம்பவும் ரிஸ்க் எடுக்காம ஆனந்த் ஒரு ஸ்லாவ் ஒப்பனிங் விளையாடிண்டாரு. டோப்பலோவ் எவ்வளவோ முயற்சி செஞ்சும் ஆட்டம் 46 மூவ்ல ட்ராவா முடிஞ்சது. உண்மையில் 39ம் மூவிலயே ஆட்டம் படு ட்ரா பொசிஷன்ல இருந்தது, ஆனா டோப்பலோவ் இந்த மேட்ச் ஆரம்பிக்கற முன்னாடியே ‘நான் ட்ரா கொடுக்கவும் மாட்டேன், கேட்கவும் மாட்டேன்’ன்னு ஒரு உதார் விட்டதுனால, வெட்டித்தனமா 46 மூவ் வரைக்கும் இழுத்தடிச்சார். ஆனந்த் – 1.5, டோப்பலோவ் – 1.5.
நாலாவது ஆட்டம் ஆனந்த் வொயிட். ஆனந்த் திருப்பியும் கேட்டலான்ல, அவரோட பத்தாவது மூவ்லியே ஒரு புது ஐடியா விளையாடினார். இருபத்தி ஒன்றாம் மூவில் ஆனந்த் அவரோட குதிரையை ப்ளாக் கிங் பக்கம் கொண்டுபோனார். (படம் 21ம் மூவிற்கு பிறகு)
இந்த பொசிஷன்ல கவனிச்சீங்கன்னா ப்ளாக்கின் எல்லா காய்களும் ப்ளாக் கிங்கை விட்டு தள்ளி இருக்கு. அதே நேரத்துல ஆனந்தோட காய்கள் எல்லாம் கரெக்ட்டா போர்ட் நடுவுல ப்ளாக் கிங்கை பார்த்த மாதிரி இருக்கு. இந்த இடத்துல தன்னோட கிங்குக்கு இருக்கிற ஆபத்தை கவனிக்காம ரூக் டி8 ஆடினார் டோப்பலோவ். ஆனந்த் உடனே குதிரையை பலி கொடுத்து கிங் சைட் அட்டாக்கை ஆரம்பிச்சார். அடுத்த 8 மூவ்ல டோப்பலோவ் ரிசைன் பண்ண வைத்து ஒரு முழு பாயிண்ட்டை எடுத்துக்கிட்டார் ஆனந்த். ஆக, ஆனந்த் 2.5 — டோப்பலோவ் 1.5.
அடுத்த மூணு ஆட்டங்கள் (5,6,7) ட்ரா. அஞ்சாவது ஆட்டம் ஒரு ஸ்லாவ். எண்ட்கேம்மில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் ஆனந்த்னால ட்ரா பண்ணிக்க முடிஞ்சது. 6ஆம் ஆட்டம் ஒரு கேட்டலான். இதுல ஆனந்த் அவரோட குதிரையை 13 தடவை தொடர்ச்சியா மூவ் பண்ணினது உலக சேம்பியன்ஷிப் வரலாற்றுல முதல் தடவை. 7ம் ஆட்டம் ட்ரால முடிஞ்சாலும் படு விறுவிறுப்பு. ஆனந்த் திருப்பி கேட்டலான் (போகோ இந்தியன் செட்டப்பா மாறினது) விளையாடப் போக, டோப்பலோவ் தன்னோட ஹோம்வொர்க்கின் ஆழத்தை காண்பிச்சார். படு சாலிட்டா விளையாடி ஒரு ட்ரா கொண்டு போனது மட்டுமில்லாம, கடைசில டோப்பலோவுக்கே பிரச்சினை கொடுத்து தன்னோட லெவலே வேறன்னு ஆனந்த் காண்பிச்சார் இந்த ஆட்டத்தில்.
எட்டாவது ஆட்டம் ஆரம்பிக்கும்போது ஆனந்த் 4 – 3ன்னு லீடிங்ல இருந்தார். திருப்பி ஒரு ஸ்லாவ். கொஞ்சம் மோசமான பொசிஷன்ல மாட்டிட்டாலும் ஆனந்த் மெதுவா எல்லா பிரச்சினைகளையும் சால்வ் பண்ணி ஒரு ட்ரா பொசிஷனுக்கு ஆட்டத்தை கொண்டு வந்தார். இன்னும் ஒரு மூவ் பண்ணினா ட்ரா, இதை டோப்பலோவ் நினைச்சாலும் தடுக்க முடியாதுன்னு இருந்த நேரத்துல, ஆனந்த் ஒரு பெரிய தப்பு பண்ணி முழு பாயிண்ட்டையும் டோப்பலோவ்க்கு தாரை வார்த்தது அநியாயம். ஆட்டத்தை நேரடியா பார்த்துட்டிருந்த யாராலயும் நம்பவே முடியலை — எப்படி ஆனந்த் அவ்வளவு சிம்பிள் ட்ராவை தவறவிட்டாருன்னு ஆளாளுக்கு புலம்பிட்டிருக்க, ஆனந்த்தோ இதெல்லாம் சகஜமப்பான்னு பேட்டில சொல்லிட்டு அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகப் போய்ட்டே இருந்தார். ஆக எட்டாவது ஆட்ட முடிவில் திருப்பி மேட்ச் ட்ரா — ஆனந்த் 4 – டோப்பலோவ் – 4.
ஒன்பதாவது ஆட்டத்துல ஆனந்த் கேட்டலான் ஓப்பனிங்கை தூக்கி போட்டுட்டு, நிம்ஜோ இந்தியன் விளையாண்டார். என்ட்கேம்ல டோப்பலோவ் பல தடவை தப்பு பண்ணியும் ஆனந்த் அந்த சான்ஸ் எல்லாத்தையும் மிஸ் பண்ணினது நிஜமாவே ஆச்சரியம். ஆனந்த் லெவல் ப்ளேயர்களெல்லாம் சுறா மாதிரி — 10மைல் தூரத்துல இருக்கிற இரத்த வாசனையையும் மிஸ் பண்ண மாட்டாங்க. என்ன ஆச்சு அந்த ஆட்டத்துலன்னு ஆனந்துக்கும் அந்த கடவுளுக்கும்தான் வெளிச்சம். 83 மூவ்ஸ்க்கு அப்புறம் இந்த ஆட்டமும் ட்ரா. ஸ்கோர் 4.5 – 4.5. பத்தாவது ஆட்டம் ஒரு க்ருன்ஃபெல்ட் (முதலாம் ஆட்டத்துக்கு அப்புறம்!)– ட்ரா. பதினொராவது ஆட்டத்துல ஆனந்த் இங்லீஷ் ஓப்பனிங் விளையாடினார். இன்னொரு ட்ரா. ஆக கடைசி ஆட்டத்துக்கு முன்னாடி இரண்டு பேரும் 5.5 – 5.5ன்னு இருந்தாங்க. கடைசி ஆட்டமும் ட்ரா ஆச்சுன்னா அடுத்து ரேப்பிட் ஆட்டங்கள். ஆனந்த்தான் ரேப்பிட் சேம்பியன், அதுனா டோப்பலோவ் எப்படியாவது இந்த 12வது ஆட்டத்தை ஜெயிச்சிடணும்னுதான் பார்த்துருப்பார்.
12வது ஆட்டத்துல ஆனந்த் ப்ளாக். க்வீன்ஸ் கேம்பிட் டிக்ளைன்ட் (லாஸ்கர் வேரியேஷன்) விளையாடினார். ஆட்ட ஆரம்பத்துல இருந்தே இரண்டு பேருக்கும் நிறைய வாய்ப்புக்கள், ஆனா ஆனந்த் தன்னோட பொசிஷனை படு ஸ்திரமாவே ஆட்டம் முழுவதும் வச்சிட்டிருந்தார். டோப்பலோவ்னால டென்ஷன் தாங்க முடியாம ஒரு தப்பு மூவ் பண்ண, இந்த தடவை ஆனந்த் அதை பக்காவா முழு பாயிண்ட்டா மாத்திக்கத் தவறிவிடவில்லை. ரேப்பிட் போகாமயே ஆனந்த் தன்னோட சேம்பியன் பட்டத்தை தக்க வச்சிக்கிட்டது பெரிய விஷயம்.
இன்னுமொரு இரண்டு வருஷத்துக்கு ஆனந்த்தான் சேம்பியன். ஒரு டோர்னமென்ட்லயும், இரண்டு மேட்சிலயும், அதுவும் இரண்டு பெரிய ஆட்களுக்கு எதிரா விளையாடி ஜெயிச்ச ஆனந்தின் இந்த உலக சேம்பியன் பட்டம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. யாராலயும் இனிமே ஆனந்த் இப்படி ஜெயிக்கவில்லை, இது பண்ணவில்லை, அது பண்ணவில்லைன்னு எதுவும் பேச முடியாது. டோப்பலோவ் திரும்பி க்ராம்னிக், ஆரோனியன், கார்ல்ஸன் போன்றவர்களோட விளையாடி தோற்கடிச்சாத்தான், ஆனந்த்தை சேலஞ்ச் பண்ண முடியும். செஸ் உலகமே கார்ல்ஸன் – ஆனந்த்துக்காக காத்திட்டிருக்கு. அது ஒரு மஹா மேட்ச்சா இருக்கும்ன்றதுல கொஞ்சமும் சந்தேகமே இல்லை.
ஆசிரியர் குறிப்பு: கணிப்பொறித் துறையில் பணிபுரியும் கண்ணன், சிறு வயது முதலே செஸ் ஆட்டத்தின் தீவிரமான மாணவர். செஸ் குறித்து பிரத்யேகமான வலைப்பதிவு ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறார். அந்த வலைப்பதிவு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரிவான ‘பாஷா இந்தியா’வால் 2006-ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு சார்ந்த வலைப்பதிவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. செஸ் குறித்துப் பல்வேறு இதழ்களில் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
விஸ்வநாதன் ஆனந்தின் நாற்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு சொல்வனம் வெளியிட்ட லலிதாராம் எழுதிய சிறப்புக்கட்டுரை: “ஆனந்த்-40 – ஒரு ரசிகானுபவம்”
ஆனந்த் – டொபலோவ் இடையே நடந்த இந்த உலக சாம்பியன்ஷிப் குறித்த சிறப்பு வலைத்தளம்: http://www.anand-topalov.com (இந்த வலைத்தளத்தில் இந்த சாம்பியன்ஷிப்பின் பல ஆட்டங்களை விளையாடிப் பார்க்கலாம்.)