இறந்து கொண்டிருக்கும் இயற்கையின் அற்புதங்கள்

mast3

சீனத்துப் பெருஞ்சுவர்கள், தாஜ்மகால், பிரமிடுகள், என்றெல்லாம் உலக அதிசயம் பேசப்பட்டுக் காண்பவர்கள் வியப்பதில் அதிசயம் இல்லை. கண்முன் தெரியக்கூடிய மிகவும் அதிசயமான இயற்கையின் அற்புதங்கள் மறைந்து வருவதை மனிதன் நினைப்பது இல்லை. எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக அதிசயமாயுள்ளது.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று சங்காலத்தமிழன் இலக்கணம் சொன்னான். மலையைப் பார்த்த ஒரு அமைச்சரின் புதல்வன் நினைப்பது வேறு. குறிஞ்சியாவது உறிஞ்சியாவது இம்மலையை வெடிவைத்துத் தகர்த்தால் எவ்வளவு கல் அறுக்கலாம்? அறுத்த கற்களை ஏற்றுமதி செய்தால் எத்தனை தேறும்? மலை மீது சந்தனம் உண்டு. தேக்கு உண்டு. தான்றி உண்டு. வெட்டி விற்றால் எவ்வளவு லட்சம் தேறும்? தான் நேரிடையாக சம்பந்தப்படாமல் மரக்கடையுடன் ஒரு பேரமே முடிந்து விடுகிறது.

tree-fellingமரங்களை எழுப்பி மாளிகைகள் கட்டிய பொற்காலம் மறைந்து, மலையை வெட்டி கற்களை விற்கும் இக்காலக் கற்காலத்தில் மனிதன் மரங்களை வெட்டி மாளிகைகளை எழுப்புகிறான். உயிர்க்காற்றை இழந்து நோயாளியான மனிதனுக்கு இன்று நிறையவே அச்சடித்த ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. முதல் தர மருத்துவம் செய்து கொள்ளலாம். நோயிலே பிறந்து நோயிலே வாழ்ந்து நோயில் மடியும் மனிதனுக்கு மரங்களின் அருமை புரியவில்லை.

மனிதனின் துன்பங்களுக்கு விடை கிடைக்குமா என்று அண்ணாந்து பார்த்த புத்தனுக்கு ஒரு அரசமரம் தெரிந்தது. அப்படியே கீழே அமர்ந்துவிட்டான். சம்போதி ஞானம் பிறந்ததாம். புத்தன் மறைந்து 3000 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆசைகளே துன்பத்திற்குக் காரணம் என்றது புத்த சிந்தனை. மனிதனுக்கு ஆசைகள் தீரவில்லை. இறைச்சி விற்கும் கசாப்புக்கடைக்காரன் குடலைக்கூட விட்டு வைப்பதில்லை. குடலுக்கும் காசு உண்டு. எல்லோரும் சந்தன மரத்தைக் கடத்த முடியாது. வேலா மரத்தை வெட்டி விற்றால் கூட சில ஆயிரங்கள் உண்டு. விறகு விலை ஒரு டன் 3000 ரூபாய். மண்ணாசைக்கு மேல் மர ஆசையும் வந்துவிட்டதே. இறைவா?

நான் புத்தனும் இல்லை. ஆசைப்படவும் இல்லை. இருப்பினும் மனிதனை நேசிக்க முடியவில்லை. துரியோதனம் பார்வைதான் புரிகிறது. எதுவும் பிடிக்காமல் வெறுத்துப் போய் நானும் காட்டுவழியே நடந்தேன். எனக்கும் ஒரு அரசமரம் தெரிந்தது. நானும் அண்ணாந்து பார்த்தேன். மரத்தைப் பற்றி நான் படித்ததுதான் நினைவுக்கு வந்தது. உயிர்ச்சத்தை இழந்து நிற்கும் இந்திய விவசாய நிலங்களில் இம்மரத்தின் சருகுகளைப் பரப்பிவிட்டால் இறந்த நிலங்களுக்கு உயிருட்டலாமே. அதுதான் போகட்டும். அரச மரத்தைப் போல் அற்புதமான ஆக்சிஜன் தொழிற்சாலைகளை உலகத்தில் கட்ட முடியுமா? தாஜ்மகாலும் வேண்டாம். திருப்பதியும் வேண்டாம். அரசமர தரிசனம் செய்தாலே மாந்தர்க்குப் புண்ணியம் உண்டு. மனிதர்களுக்கு தட்சிணாமூர்த்தியாக விளங்கும் அரசமரம் – ஆலமரம் எல்லாமே அற்புதங்கள்தாம். மரங்களிடம் நாம் பாடம் கற்க மறந்துவிட்டு குருநாதர்களைக் கொலை செய்யத் துணிந்துவிட்டோமே. ஒரு காலத்தில் ஊர்தோறும் வளர்க்கப்பட்ட அரசமரங்களும் ஆலமரங்களும் அரிதாகிவிட்டன.

trees

அந்தக் கால மேடைநாடகங்களில் ராஜா ராணி கதைகள்அதிகம். மாமன்னர் அமைச்சரிடம் வழக்கமாக கேட்கும் ஒரு கேள்வி: ”அமைச்சரே மாதம் மும்மாறி மழை பெய்கிறதா?” ”ஆமாம் அரசே, மாதம் மும்மாறி மழை பெய்கிறது. நெற்களஞ்சியம் நிரம்பியுள்ளது.” என்பார். ஒவ்வொரு நாளும் உலகில் ஒரு மூலையில் ஒரு துளி மழை பெய்வதையெல்லாமல் மெட்ராலிஜிகல் டிபார்ட்மெண்டு தினமும் டி.வி,. பெட்டியில் ஒளிபரப்புகிறது. தட்ப வெப்பம் தடுமாறிவிட்டதால் ஆண்டுக்கு மும்மாறி மழை பெய்வதே அபூர்வமாகிவிட்டதுவே இன்றைய நிலை.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி. குறிஞ்சி நிலத்தில் குறிஞ்சி வனம் இருந்தது. குறிஞ்சி நிலத்தில் விளையாத மரங்களே இல்லை. கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். நெய்தலில் நெருக்கமான மரங்கள் உண்டு. அலையாத்திக்காடுகளும் பூவரசுகளும் நிறைய இருந்தன. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். உலகிலேயே உயரமாகவும், பரந்தும் விரிந்தும் வளரக்கூடிய மருத மரங்களை மருதவனங்களில் காணலாம். நீர் மருது, வெண்மருது செம்மருது மருத மரங்களில் பல வகை உண்டு. அர்ஜூன மரம் என்பதும் மருதமே. காவிரி பாயும் தஞ்சை – திருவாரூர் மாவட்டங்களில் மருதநில இலக்கணத்தைக் கொண்டிருந்தாலும் அங்குள்ள மருதவனம் என்றோ விறகுகளாகிவிட்டன.

சங்க இலக்கியத்தில் ஐவகை நிலப்பகுதிகள் பற்றிய குறிப்பும் அங்கு வளரக்கூடிய மரங்கள், தாவரங்கள், பயிர்கள், மிருகங்கள், உணவு பழங்குடி மக்கள் பற்றிய குறிப்பும் உண்டு. பாலை நிலம் என்றால் அது பல பொருள்களைக் கொண்டது. பாலைவனம் என்றால் சாகாராவா, தார்பாலைவனமா என்று ஒப்பிடத்தக்க நிலப்பகுதி தமிழ்நாட்டில் இல்லை. ராமேஸ்வரத்தைச் சுற்றியுள்ள நிலைப்பரப்பு நெய்தலுக்குரியது. அங்கும் மணல் பரப்பு உள்ளது. வறட்சியான நிலப்பகுதி ”பாலைவனம்” என்றால் மணல் நிலப்பரப்பு அல்ல. பாலை நில இலக்கணப்படியாக, பாலை, பனை, ஈச்சை ஆகியவற்றையும் சொல்லலாம். பால் தரும் மரங்களையும் பாலை மரங்கள் எனலாம். ஆல், ரப்பர், இலுப்பை, புன்னை, அயினிப்பலா, மாவிலங்கம் என்ற பர்ணா, பராய், கண்ணுப்பாலை, அத்தி, இச்சி, வேங்கை என்று பால்தரும் மரங்கள் (Latex tree) சூழந்த வனங்களைப் பாலை வனம் என்று கூற இயலாதா? பால் தரும் மரங்களை நட்டால் மழைபெய்யும் என்பது நமது முன்னோர்களின் பட்டறிவு. ஒரு ஆலமரம் 10 இதர மரங்களுக்குச் சமம். ஊர்தோறும் ஆலமரங்கள் இருந்த காலகட்டத்தில் மாதம் மும்மாறி மழை இருந்திருக்கும். பாலை மரத்தைப் பற்றிய ஒரு எச்சரிக்கை விருட்சாயுர் வேததத்தில் உண்டு.

”வீட்டருகில்… பாலை மரம்(க்ஷீரணி) நட்டால்
செல்வம் பறிபோகும் – இம்மரம்
பழம் தந்தாலும் சந்ததிகளை இழப்பர்.
வீடு கட்டவும் இம்மரத்தைப் பயன்படுத்த வேண்டாம்.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ள மரம் பாலாமரம். இதன் பழம் ஈச்சம் பழம் போல் இருக்கும். உண்ணச் சுவையாக இருக்கும். இது வீட்டருகில் நடப்படுவது இல்லை. இம்மரம் (Manikara Hexandna) புதுக்கோட்டை – சிவகங்கை புதர்க்காடுகளில் காணப்படும். ஒரு காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குட்பட்ட இன்று தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் செறுவாவிடுதி என்று ஊரில் போத்தியம்மான் காடு மட்டும் 100 ஏக்கர் பரப்பில் சுருங்கி சற்று உருப்படியாக எஞ்சியுள்ளது. வனத்துறைக் காவலுக்கு உட்பட்ட இந்த புதர்க்காடு தமிழ்நாட்டில் இது ஒன்றுதான். சொல்லப்போனால் முன்னொரு காலத்தில் புதுக்கோட்டை – சிவகங்கை சமஸ்தான நிலப்பகுதிகள் சுமார் 70 சதவீதம் புதர்க்காடுகள் இருந்தன. புதர்க்காடுகளைப் பாலைவனங்கள், என்றால் இங்கும் பசுமை உண்டு.

முல்லை நிலத்தை எங்கே தேடுவது? முல்லை நிலம் நல்ல மேய்ச்சல் நிலமாயிருக்கலாம். முல்லை நில மக்களாயிருந்த ஆயர்கள் – அதாவது பால் வியாபாரம் செய்த கோனார்கள் நிறைந்த மதுரைப் பகுதியைச் சொல்வதா? முல்லைக்குத் தேர்தந்த பாரி வள்ளல் வாழ்ந்த நிலப்பகுதியா? அங்கும் மரங்கள் உண்டு. முல்லை வனம் என்றால் அங்கும் பலவகை மரங்கள் இருந்தன.

குறிஞ்சி வனம், முல்லை வனம், மருத வனம், நெய்தல் வனம், பாலைவனம் என்பதெல்லாம் தமிழ்நிலங்கள். தமிழையும் சேர்த்து இந்திய மொழி வாரி மாகாணங்களில் நிலவிய வனங்களைப் பற்றிய குறிப்பு காமசூத்திரத்தில் உண்டு. காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர், நகர்ப்புற பண்பாட்டுக்கு நல்ல விளக்கம் வழங்கியுள்ளார். சாதவாகன மன்னரால், கிராமங்களில் கலைக்குழுக்களை அமைத்து நற்பண்புகளையும், காதல் உணர்வுகளையும் மக்களிடையே பரப்புமாறு வாத்ஸ்யாயனர் – சாதவாகன அமைச்சர்களில் ஒருவர் – பணிக்கப்பட்டார். ஒரு நாகரசுர் அவ்வாறு கிராமப்பகுதிகளில் கலைக்குழுக்களை அமைத்து அங்குள்ள திறமைசாலிகளுக்கு நல்ல சொல்லாற்றல், நடிப்புத்திறன், கதை சொல்லும் திறன், காதல் செய்யும் நுட்பம், மகளிரை நிறைவுபடுத்தும் காம நுட்பங்கள் உட்பட பல திறமைகளைக் கற்பித்தார். ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்பதில் மன்மதக்கலை இந்த அறுபத்தி நான்கில் ஒன்றுதான். மீதி அறுபத்தி மூன்று கலைகளில் வீரம், கைத்தொழில், தோட்டக்கலை, மரம் நடுதல், அகடவிகடம், கவித்துவம், சொற்போர் (இக்காலப்பட்டிமன்றம்), வில்வித்தை என்று எவ்வளவோ உண்டு. இப்படிப்பட்ட 64 ஆயகலைகளில் விருட்சாயுர் வேதமும் ஒன்று. தோட்டம் போடுவது பற்றி வாத்ஸ்யாயனார் காதல் நயத்துடன் வனங்களை வித்தியாசப்படுத்தியுள்ளார். ஆங்கிலத்தில் ”Park” என்ற பூங்காக்கலையை வாத்ஸ்யாயனர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார். வனங்களை அவர் நான்கு வகையாக வித்தியாசப்படுத்தியுள்ளார்.

1. பிரமோத்யாய வனம்: இங்கு அழகு நிரம்பிய மலர் மரங்கள் இருக்கும். அரசனும் அரசியும் அந்தரங்கமாகப் பொழுதைக் கழிக்கும் அழகிய மரங்கள் வடிவமைக்கப்பட்டு ஆனந்தமான சூழ்நிலை உண்டு. வாசமுள்ள மலர்ச்செடிகள் நிறைய இருக்கும்.

2. உத்யான வனம்: இங்கும் அழகும் வாசமும் நிரம்பிய மரங்கள், மலர்ச்செடிகள் உண்டு. கணிகையர் (ராஜநர்த்தகி) நடனமிடுவர். மன்னர் தன் நண்பர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பார். சொக்கட்டான், கவறு ஆடும் வனச்சூழல் உண்டு.

3. விருட்ச வாடிக வனம்: இங்கு அழகு மரங்கள் பயிரிடப்படும். அமைச்சர்களும், பிரபுக்களும் தங்கள் மனைவிமார்களுடன் உல்லாசமாகப் பொழுது போக்கும் வனச்சூழல் உண்டு.

4. நந்தவனம்: இது இந்திரனுக்குரியது. இந்திரவிழா நிகழும். கோவிலுக்குரியது. மக்கள் புழக்கமுள்ள பெரிய காடு. ஏராளமாக மரங்களுடன் பூசனைக்குரிய புஷ்பங்கள் உற்பத்தியும் உண்டு.

ooty-tree_mainஅந்தக்காலத்தில் ஒரு நகரம் என்பதில் ஒரு அரண்மனை, கோட்டை, கோவில் ஆகியவற்றைச் சுற்றியே சுகாதாரமான குடியிருப்புகளுக்கு நடுவே அழகழகான வனங்கள் இருந்தன. வாத்ஸ்யாயனர் நான்கு வனங்களைக் குறிப்பிட்டாலும் கடம்பவனம், புன்னைவனம், சம்பகவனம், பாரிஜாதவனம், அரசவனம், இலுப்பைவனம், மகிழவனம், வேங்கைவனம், அசோகவனம், வன்னிவனம், வேப்பவனம், தில்லைவனம், இக்சிவனம், வில்வவனம், தாழைவனம், மருதவனம் என்ற பெயர்களிலும் ஏராளமான நந்தவனங்கள் இருந்தன. மனிதப் பெயர்களில் கூட சுகவனம், பூங்காவனம், உண்டு. நாம் நடத்தும் இந்த வலைப்பின்னலே சொல்வனம் அல்லவா!

மாசுகள் இல்லாத உலகில் அன்று மனிதர்கள் வாழ்ந்தார்கள். நோய் பயம் இல்லாமல் நீண்ட ஆயுள் பெறமுடிந்தது. காற்று மண்டலத்தில் உள்ள விண்வெளியை வனங்கள் தூய்மைப்படுத்தின. தொழில் புரட்சியின் விளைவால் வனங்களின் அழிவு தொடங்கியது. நெருக்கமான நகரக்குடியிருப்புகள் தோன்றின. ஒரு கிராமமாயிருந்த இடங்களில் மாநகரங்கள் தோன்றின. மாட்டுவண்டி, குதிரைவண்டி, மறைந்து கார், லாரி, டெம்போ வந்தன. உழவுமாடுகள் இறந்தன. டிராக்டர், டில்லர் வந்தன. விண்ணிலே விமானங்கள் பறந்த. ஒழுங்கைகள் எண்வழிச்சாலைகளாக மாறின. மனிதன் உயர்ந்தான் எண்ணிக்கையில். மனிதன் இறந்தான் பண்பாட்டில். நாகரிக மனிதனுக்கு உடலும் சுத்தமாயில்லை. உள்ளமும் சுத்தமாயில்லை.

விண்வெளியும், காற்று மண்டலமும் மாசானதைப் போலவே மனிதனும் மாசாகிப்போனான். பணத்திற்கு மயங்கும் சுயநலவாதியாகிவிட்டான். இயற்கையை அழித்தான். இப்போது தனது அழிவைத் தானே தேடிக்கொள்ளப் போகிறான். காலங்கடந்த நிலையிலாவது நல்ல மனம் படைத்த சில மனிதர்களின் முயற்சியால் மரம் வளர்க்க வேண்டும் என்ற கொள்கை மெள்ள மெள்ளப் பரவிவருகிறது. ஒரு மரம் தன்னைத்தானே வளர்த்துக் கொள்வதில் ஒரு அற்புதம் உள்ளது. பின்னர் அது மாசுகளை நீக்குவதிலும் பல அற்புதங்கள் உள்ளன. முதலில் பச்சை நிற அற்புதம், காகம் வேப்பம்பழம் தின்னும். குயில் சந்தனப்பழம் நன்னும். சம்போதி இலுப்பைப்பழம் தின்னும். வவ்வால் தின்னாத பழம் எதுவுமில. இவ்வாறு பறவை தின்ற பழங்கள் பறவையின் வயிற்றில் ஜீரணமாகிறது. ஜீரணிக்கமுடியாத விதை பறவைகளின் குடலில் நேர்த்தி செய்யப்பட்டு மண்ணில் விழுந்து மழை பெய்து மண்ணில் அமிழ்ந்திப் பின் கதிரவன் ஒளிபட்டு துளிர்விட்டுச் செடியாகி மரமாகிப் பசும்போர்வை போல் விண்ணில் குடைவிரிக்கும் ஒருமரம் எவ்வாறு உணவு சமைக்கிறது – இலைகளில் உள்ள பச்சைம் செய்யும் பணி என்ன? இப்பச்சையம் சூரிய ஒளியை உள்வாங்கி இலையினுள் உள்ள நீரைப் பிளக்கிறது. அப்போது நீரில் உள்ள ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் பிரிகிறது. H2Oவில் உள்ள O பிரிந்து பிராணவாயுவாக இலைத்துவாரங்களிலிருந்து வெளியேறும். ஹைட்ரஜன் சக்தி சூரிய ஒளிபட்டு மின்சக்தியாக மாறும் போது காற்றில் உள்ள கார்பன்டைஆக்சைடு -CO2வில் உள்ள கார்பன் ஹைட்ரஜனுடன் இணைந்து ஏற்படும் சக்தியில் சர்க்கரைப் பொருள் உருவாகி மரம் வளர்ந்து செழிக்கிறது. கார்பன்டைஆக்சைடில் உள்ள ஆக்சிஜனும் இலை வழியாக வெளியேறுகிறது. வேர் வழியாகவும் கார்பன் உள்ளிழுக்கப்பட்டு இலையை அடைகிறது. வேர்களில் உள்ள கரிமவிழுதுகளில் உள்ள நுண்ணுயிரிகள் காற்றில் உள்ள நைட்ரஜனையும் சத்தாக மாற்றக்கூடிய ரைசோபியத்தின் பணியும் உண்டு. வேர்களில் உள்ள கரிமவிழுதுகள் மண்ணில் உள்ள உலோகச் சத்தைக் கரைத்து இலைக்குச் செல்கிறது. வேர்வழிவந்த நீருட்டங்கள் எல்லாம் சூரிய ஒளியின் உதவியால் ஓங்கி வளர உதவும். பூ, காய், கனி பிறக்கின்றன.

உயிரினங்கள் சுவாசிக்கும் போதும் மனிதர்கள் சுவாசிக்கும் போதும் காற்றில் உள்ள ஆக்சிஜன் மட்டுமே உணவை எரித்து சக்தியாக்க உதவுகிறது. கார்பன் காற்று வெளியேறுகிறது. மரங்களோ கார்பன் – ஹைட்ரஜன் உட்கொண்டு உணவு சமைத்து, 3 பங்கு ஆக்சிஜனை இலை வழியே வெளியேற்றுகிறது. சூரிய ஒளியை உணவாக மாற்றுவதில் மரங்களின் சக்தி பெரிது. நன்கு வளர்ந்த ஒரு மரம் அரை ஏக்கர் நிலப்பரப்பல் பச்சையத்தைக் கொண்டு அதிகஅளவு கரியமில வாயுவை உட்கொண்டு அதிக அளவில் ஆக்சிஜனையும் வெளியேற்றும். ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள வனம் ஒரு ஆண்டுக்கு 4டன் கரியமில வாயுவை உட்கொண்டு 5டன் ஆக்சிஜனை வெளிப்படுத்துமாம். மனிதர்களும் விலங்குகளும் வாழ்வதற்கு உயிர்க்காற்றை வழங்கும் மரங்களை வெட்டும் மனிதன் தன்னை எப்படி ஒரு பகுத்தறிவாளன் என்று பெருமைப்பட முடியும்? ஒவ்வொரு மரமும் ஒரு ஆக்சிஜன் தொழிற்சாலையாக இயங்குவது இயற்கையின் அற்புதம் என்று நாம் இயற்கைக்குத் தலை வணங்க வேண்டும். ஆனால் மனிதர்களோ ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் தொழிற்சாலைகளை வெட்டி அழித்துவிட்டுக் கார்பனை மட்டும் வெளியேற்றும் ஆலைகளையும், அடுக்கு மாடிக்கட்டிடங்களையும், எண்வழிச்சாலைகளையும் அமைத்துக் கொண்டிருந்தால் தட்ப வெப்பம் தடுமாறாமல் என்ன செய்யும்? ஓசோன் படலத்தில் ஓட்டை விழாமல் என்ன செய்யும்? அமில மழை பொழிந்து வளமான மண்ணுக்கும் ஆபத்து காத்திருக்கிறது. ”மரங்களை நடுங்கள் சொர்க்கலோக வாழ்வைப் புவியில் பெறலாம்” என்று விருட்சாயுர் வேதம் கூறுவது பகுத்தறிவா? இயற்கைதான் கடவுள் என்று கூறி மரங்களை வெட்டுவது பகுத்தறிவா?

விடைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன் – சந்திப்போம்.