இருப்பு

‘தென்கலம் சைவத்திரு.காசியாபிள்ளையின் மனைவியும், எங்களின் தாயாருமான திருமதி.சிவகாமியம்மாள் இன்ன தேதியில் சிவலோக பதவி அடைந்தார்கள். அன்னாரது பதினாறாவது நாள் விசேஷக் காரியங்கள் இன்ன தேதியில் நடைபெறும். இப்படிக்கு, கா.சுப்பையா, கா.சங்கரலிங்கம்.’ கருப்பு எழுத்துகளில் அச்சடிக்கப்பட்ட அஞ்சலட்டை வந்தவுடன் விவரம் தெரிந்து கொண்டு உடனேயே அதை கிழித்துப் போடச் சொல்வார்கள் பெரியவர்கள். தொலைபேசிவசதி வந்தபிறகும் கூட இந்த வழக்கம் இருந்தது. இப்போது மாறிவரும் கைபேசி கலாச்சாரத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்.ஸிலேயே எல்லோருக்கும் எல்லா விஷயத்தையும் கடத்தி விடுகிறார்கள். சென்ற வாரம் அப்படி ஒரு எஸ்.எம்.எஸ். எனக்கு வந்தது.

அண்ணனின் பெரிய மாமனார் தனது எண்பத்து நான்காவது வயதில் காலமானார் என்னும் செய்திதான் அது. பதிலுக்கு நானும் எஸ்.எம்.எஸ்.ஸிலேயே அனுதாபித்தேன். அண்ணனின் மாமனாருக்கும் அவரது அண்ணனுக்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம். இறக்கும் தறுவாயில் தன் அண்ணன் இருக்கும் போது எழுபத்திரண்டு வயது தம்பி சொன்னாராம். ‘நீ தைரியமா முன்னால போ. நான் பின்னாலேயே வாரேன்’ என்று. கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் பெருக சிறிது நேரத்திலேயே காலமாகிவிட்டாராம் பெரியவர்.

அறுபதாவது வயதை அடைந்த சில மாதங்களிலேயே இறந்து போன தன் கணவர், அடுத்த சில ஆண்டுகளிலேயே தன்னை பரிதவிக்க விட்டுவிட்டு தனது நாற்பதாவது வயதில் கண்மூடிய தனது மூத்த மகன், அதற்கடுத்து சொல்லிவைத்த மாதிரி தன் அண்ணனுக்குப் பின் தனது இருபத்தேழாவது வயதில் கிளம்பிச் சென்ற தனது கடைக்குட்டி மகன், இப்படி மூன்று உயிர்களை அடுத்தடுத்து பறி கொடுத்த அப்பாவைப் பெற்ற ஆச்சியின் முகத்தை என்னால் கண்ணீரில்லாத முகமாக கற்பனையில் கூட பார்க்க முடியவில்லை. சில சமயங்களில் எங்கள் வீட்டு பூஜையறையின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு நாட்கணக்காக ஆச்சி அழுது கொண்டிருப்பாள். பூஜையறையில் அம்மையப்பன்,  அவர்களின் மகன் கணபதி, இளையவன் குமரன் அனைவரையும் திட்டியபடியே ஆச்சி அழும் குரல் மெலிதாக வெளியே விட்டு விட்டு கேட்கும்.

ஆச்சிக்கும் காலம் வந்தது. படுத்த படுக்கையானாள். அவளது வயதையொத்த தோழிகள் ஒவ்வொருவராக வந்து பார்க்கலாயினர். களக்காட்டாச்சி, பத்தமடையாச்சி, கருங்குளத்தாச்சி, ஆறுமுகநேரியாச்சி இப்படி பலர்.
பார்த்துவிட்டு செல்லும் போது ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு உணர்ச்சிகள். அவர்களில் ஒருவரின் பெயர் கூட எனக்கு இன்றைக்கும் தெரியாது.

ஆராம்புளியாச்சி எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் இருந்தாள்.

பார்த்தாலே தெரியும் அவள் நாஞ்சில் நாட்டுக்காரியென்று. செக்கசெவேலென வாட்டசாட்டமாக இருப்பாள். எந்த சூழலிலும் அவளால் சிரிக்க முடியும். அபார நகைச்சுவையுணர்வுடையவள். ஆச்சியைவிட வயதில் இளையவளான ஆராம்புளியாச்சி, ஆச்சியை ‘மதினி’ என்றே அழைப்பாள். அவள் வந்து பார்க்கும் போது ஆச்சி பேசமுடியாத நிலையிலிருந்தாள். இருந்தாலும் உடலில் அசைவிருந்தது.
ஆராம்புளியாச்சி வந்து ஆச்சியின் அருகில் உட்கார்ந்து அவள் கையைப் பிடித்து நீவிக் கொண்டே சொன்னாள். ‘ மதினி, நீங்க போயி லெட்டெர் போடுங்கோ. நான் கெளம்பி வாரென்’. ஆராம்புளியாச்சியின் வேண்டுகோளுக்கிணங்க ஆச்சி அனுப்பிய லெட்டர் கொஞ்சம் தாமதமாக பத்து வருடங்கள் கழித்து ஆராம்புளியாச்சிக்கு வந்தது.

தாமிரபரணியாற்றங்கரையில் உள்ள சுடுகாடான கருப்பந்துறையின் மண்டபத்தில் இறந்தவர் எரிந்து கொண்டிருக்க அவர் வயதையொத்தவர்கள் பேசிக் கொள்வது புதிதாகக் கேட்பதற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், வாழ்வின் யதார்த்தத்தை அட்டகாசமாக நமக்கு உணர்த்தும். சுப்ரமணியபிள்ளை தாத்தா எரிந்து கொண்டிருக்கிறார். அவர் வயதையொத்த அவரது தோழர்கள் பெருமாள் பிள்ளையும், வெங்கடாசல ரெட்டியாரும் பேசிக் கொள்கிறார்கள்.

‘எல பெருமாளு, அடுத்த டிக்கட்டு யாரு? நீயா, நானா?’

‘செவஞானந்தான்’

‘அதெப்படி அவன் நம்மளுக்கு முந்திருவாங்கே?’

‘எல மயிராண்டி. அவன் ஆர்.ஏ.ஸி. நாம வெயிட்டிங் லிஸ்ட்டுல்லாலெ மூதி’.

சிவஞானம் பிள்ளை தாத்தா அப்போது படுக்கையிலிருந்தார்.

மரணத்தை இப்படி வேடிக்கையாக எதிர்கொள்ளும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதை நினைத்து பயந்து நடுங்கியபடியே காலத்தைத் தள்ளிய தாத்தாக்களும் இருக்கத்தான் செய்தார்கள். எனது சின்னத் தாத்தாவை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே சிவலோகபயம் பிடித்து ஆட்டி வந்தது. நான் பார்க்கப் போகும் போதெல்லாம், ‘பேரா, என் கையைக் கொஞ்சம் பிடிச்சுக்கோயேன். பயமா இருக்கு’ என்பார். இத்தனைக்கும் அவருக்கு ஒரு வியாதியும் கிடையாது. கொஞ்சம் பார்வை கோளாறு. அவ்வளவுதான். ஆனாலும் ஒரு ரூபாய் நாணயத்தைக் கீழே போட்டால் பாய்ந்து எடுத்து வேஷ்டியில் முடிந்து கொள்வார். பார்க்கும் போதெல்லாம் ‘ஒங்களுக்கு ஒண்ணும் இல்ல.தைரியமா இருங்க’ என்று எல்லோரும் சொல்லி வந்தோம். சின்னத் தாத்தாவை விட ஆச்சிக்கு ஒரு வயது அதிகம் என்பார்கள். இருவருமே கனிந்து படுக்கையில் விழுந்துவிட்டார்கள். ஆறு மாதத்துக்கு முன் தாத்தா காலமாகிவிட்டார். வீட்டின் வேறோர் அறையில் போடப்பட்டிருந்த கட்டிலில் கிடந்த ஆச்சியிடம் போய் மெல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ நான்தான் முந்துவேன்னு நெனச்சேன். அவரு பொறப்புட்டாராக்கும். சரி சரி. ஆக வேண்டியத கவனிங்க’.
எவ்வித உணர்ச்சியுமில்லாமல் இதைச் சொன்ன ஆச்சி கொஞ்சம் கூட கலங்கவில்லையாம்.

ஏ.வி.எம். நிறுவனத்தின் ஆரம்ப கால ஊழியர்களான டி.எம்.ஆரும், ஈ.வி.கே.நாயரும் பிற்காலத்தில் எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவின் யூனிட்டில் இருந்தனர். இவர்கள் இருவருமே ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடியில் இருந்த போதே அங்கு வேலை செய்தவர்கள். இவர்களில் டி.எம்.ஆர் மேக்கப்மேன். ஈ.வி.கே.நாயர் ஸ்டில் ·போட்டோகிரா·பர். ‘பராசக்தி’யில் கணேசனுக்கு முதலில் மேக்கப் போட்டவர் டி.எம்.ஆர். ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்துக்குப் பின் கே.பாலச்சந்தருடன் ஈ.வி.கே.நாயர் இணைந்து கொண்டார். கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரையும் அவர்களின் ஆரம்ப காலத்திலிருந்தே அறிந்தவர். அதுவும் ரஜினிகாந்தை முதன் முதலில் டெஸ்ட் ஸ்டில் எடுத்து ஓகே சொன்னவர். ரஜினியை ரெஜினி என்றே அழைப்பார். பழைய நன்றியில் ரெஜினி ஈ.வி.கெ.நாயரிடம் பணிவுடன் நின்று பேசுவதைப் பார்த்திருக்கிறேன். ‘சதிலீலாவதி’ படத்தின் போது ஈ.வி.கே.நாயர் புற்று நோயால் அவதிப்பட்டு வீட்டிலேயே இருந்தார். வேலை எதுவும் செய்வதில்லை. அவருக்கு எதற்கு வேலை? அவரை தினமும் படப்பிடிப்புக்கு அழைத்து வாருங்கள் என்று கமல் சொல்லிவிட்டார். தினமும் அவருடன் சேர்ந்து கொண்டு சிரிப்பும், கூத்துமாக இருப்பார் கமல்.

சதிலீலாவதி படப்பிடிப்பின் போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி ஈ.வி.கே.நாயரை அவரது ஆரம்ப கால நண்பர் டி.எம்.ஆர். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். காரில் அவருடன் வருவது, அவருக்குப் பிடித்தமான உணவைப் பரிமாறுவது, மதியம் சிறிது நேரம் அவரை தூங்கச் செய்வது என நண்பருக்கு டி.எம்.ஆர். செய்த பணிவிடைகள் நிறைய. படம் முடிந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது ஈ.வி.கே.நாயர் எங்களைப் பார்க்க டப்பிங் ஸ்டூடியோவுக்கு வந்தார். டப்பிங் இடைவேளையில் வெளியே வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் உள்ளிருந்து ஸவுண்ட் அஸிஸ்டண்ட் வந்து ‘ஸார், ரீல் ரெடி’ என்றார். தர்மசங்கடத்துடன் எழுந்து நின்றேன்.

உடனே தானும் எழுந்துகொண்டு, ‘ஓகே ஸார். யூ கேரி ஆன்’ என்று சொல்லிவிட்டு என் கைகளைப் பிடித்துக் குலுக்கி ‘மை டேஸ் ஆர் நம்பர்ட்’ என்றார். ‘ ஸார் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க’ என்று சொல்லி வழியனுப்பினேன்.
அடுத்த வாரமே நாயர் கிளம்பிவிட்டார் என்ற தகவல் வந்த போது அவருடனான கடைசி உரையாடல் எனக்கு நினைவு வந்து சங்கடப்படுத்தியது.

நாயர் மறைந்த செய்தியை டி.எம்.ஆருக்கு தொலைபேசியில் சொன்னேன். ‘எப்போ?’ என்று கேட்டவர் வேறேதும் பேசாமல் அமைதியாக இருந்தார். ‘நான் வந்து உங்களை நாயர் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன். நீங்க தனியா போக வேண்டாம்’ என்று சொல்லி ·போனை வைத்துவிட்டு சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்குப் போனேன். தட்டு நிறைய சோறு வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் டி.எம்.ஆர்.