சாப்பிட்டு விட்டுப் பின் சினிமாவிற்குப் போகலாம் என்று முதலில் இருந்த திட்டமே முரளிக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு அப்படியே பௌலிங்குக்குச் செல்லலாம் என்று திடீரென்று சுதா இடைமறித்து சொன்னதும் அவனுக்கு ஒருவிதமான அசௌகரியம் உண்டானது. எல்லோரும் ஆமோதித்து தலையாட்டியவுடன் பதறிப்போனான். ‘சுற்றிப்பார்க்க எவ்வளவோ இருக்கும் போது பௌலிங் விளையாடப் போக வேண்டுமா?’ என்று இரண்டொரு முறை சொல்லிப் பார்த்தான். யாரும் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை.
இரண்டாவது தடவையாக முரளி புது தில்லி வந்திருக்கிறான். இருபத்திநான்கு ஆண்டுகளாக தூரமாகிக் கொண்டே போன நெருங்கிய சொந்தங்கள் மறுபடியும் உறவாட தொடங்கியிருப்பதன் அடையாளமே முரளியின் தில்லி விஜயம். சென்ற முறை தில்லி வந்த போது அவனுக்கு ஒன்றரை வயது. புது தில்லியின் குளிரும், தண்ணீரும் ஒத்துக் கொள்ளாமல் கைக்குழந்தையாக அவன் அவதிபட்டதையும், பாஷை தெரியாத ஊரில் டாக்டருக்கும், மருந்து கடைக்கும் மாறி மாறி அலைந்ததையும் அம்மா ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பாள். ஒவ்வொரு முறையும் அதே தவிப்புடன்.
‘பௌலிங் வேண்டாம்’ என்பதற்கு புது ஊரைச் சுற்றிப் பார்க்கும் நியாயமான ஆர்வத்தை அவன் சொல்லியிருந்தாலும், நிஜம் பயம்! அவனுள் எப்போதும் புதைந்து கிடக்கும் தோல்வியின் பயம். விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க முடியாத இயலாமையால் ஏற்படும் பயம். அதையெல்லாம் இவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதான் ஊர் சுற்ற நேரம் வேண்டும் என்றான்… நாசூக்காக! இந்த சுதாவோ கேட்க மாட்டேன் என்கிறாள். பௌலிங் போயே தீருவேன் அடம் பண்ணுகிறாள். இவள் என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டான்.
தில்லி வந்ததிலிருந்தே அவனுக்கு ஆச்சரியங்கள் தொடங்கிவிட்டன. சுதாவும், பிரேமும் தனக்குத் தங்கை, மற்றும் தம்பி முறை ஆவார்கள் என்று அறிந்தே இருந்தாலும், வந்து இறங்கிய நொடியிலிருந்தே ‘அண்ணா! அண்ணா!’ என்று கூப்பிடுவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சுதா பி.ஈ.படிக்கிறாள் என்று நினைத்திருந்தான். அதுவும் தப்பு. பி. ஆர்க்காம். பிரேமின் முழுப் பெயர் பிரேம்குமார் என்று ஒரு ஞாபகம். அதுவுமில்லை. அவன் பெயர் பிரேம் கிஷோர். எல்லாவற்றுக்கும் மேலாக தன் வருகை இங்கே விரும்பப்படாது என்றும், ஒருமாதிரியான முதுகுப்புறம் பார்த்த விருந்தோம்பல் தான் கிடைக்கும் என்றும் எண்ணியிருந்தான். இங்கே என்னவென்றால் இப்படி விழுந்தடித்துக் கொண்டு கவனிக்கிறார்கள்! சொல்லப்போனால் அவன் இவ்வளவு அன்பையும் சமாளிக்கத் திணறினான்… பௌலிங் விளையாடுவதைத் தவிர்க்கத் திணறுவதைப் போல!
முரளி இதற்கு முன் ஒரே ஒருமுறை பௌலிங் ஆடியிருக்கிறான். அலுவலக சகாக்களில் ஒருவன் அமெரிக்கா செல்லுமுன் மாயாஜாலில் ட்ரீட் கொடுத்தான். அப்போதும் இப்படித்தான். கும்பலாகச் சென்று படம் பார்த்துவிட்டு, பௌலிங் ஆடினார்கள். பந்தை உருட்டி, வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குழவிகளை வீழ்த்த வேண்டும். இதை செய்து முடிக்க ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒருவருக்கு இரண்டு வாய்ப்புகள் தரப்படும். கேட்பதற்கும், பார்ப்பதற்கும் சுலபம்தான். ஆனால் விளையாடினால் தானே தெரிகிறது கஷ்டம்! எல்லா விளையாட்டிற்கும் இருப்பதைப் போன்று இதற்கும் சில செய்முறை நுணுக்கங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு ஆனதுபோல தான் ஆகும். பாதி நேரம் பந்து நேராகவே செல்லவில்லை. இடையிலேயே குழிக்குள் விழுந்து ஓடியது. அப்படியே சென்றாலும் ஒரு முறை கூட பத்து குமிழ்களையும் வீழ்த்தவில்லை. அட ஒன்பதாவது? ம்ஹூம்! ஒரே முறை எட்டை வீழ்த்தினான். சதீஷ் கூட அடிக்கடி வந்து இப்படி நில், அப்படி திரும்பு, முன்னங்காலை நேராக்கு, முட்டியை மடக்காதே, மணிக்கட்டை திருப்பாதே என்று என்னவெல்லாமோ அறிவுரை சொன்னான். எதுவும் உதவவில்லை. மாறாக முரளிக்கு கோபமே வந்தது. பெண்கள் எல்லாம் நன்றாக விளையாடினார்கள். அதிலும் கவிதா இருக்கிறாளே… அடேயப்பா என்னமா ஆடினாள்! அன்று அவளுக்கும் சதீஷுக்குமே முதலிடத்துக்குப் போட்டி. முரளிக்கு அங்கிருந்து சீக்கிரம் கிளம்பினால் போதும் என்றாகிவிட்டது.
அதன் பிறகு அவன் பௌலிங்கே ஆடவில்லை. மாயாஜால் செல்வதைக் கூட குறைத்துக் கொண்டான். மற்றவர்கள் சென்றாலும் இவன் போக மாட்டான். வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போன போதெல்லாம் கூட சினிமா முடிந்தவுடன் நைசாகக் கழண்டுவிடுவான்.
இப்போது இங்கே மாட்டிக்கொண்டான். எல்லோரும் பௌலிங் ஆடுவது என்ற முடிவில் தீர்க்கமாக இருந்தார்கள். சுதாவும், பிரேமும், சுதாவின் இரண்டு தோழிகளும், பிரேமின் இரண்டு நண்பர்களும், கூடிய அத்தனை பெரும் உற்சாகமாக தயாரானார்கள். “சலோ யார்! இட் வில் பி ரியலி ஃபன்” என்று அவனையும் உற்சாகப்படுத்தினார்கள்… படுத்தினார்கள்! அவனுக்கு மாயாஜால் சம்பவம் நினைவுக்கு வந்தது. அன்று இரவு தூக்கம் வர நேரமானதும், நீண்ட நேரம் யாருக்கும் தெரியாமல் அழுததும் சேர்ந்து நினைவுக்கு வந்தது. இங்கேயும் பெண்கள் இருக்கிறார்கள். அவனை விட சின்ன பயல்கள் இருக்கிறார்கள். அதிலும் பிரேமின் நண்பன் ரிங்கு வயதில் இளையவனாய் இருந்தாலும், உருவத்தில் ஆஜானுபாகுவாகத் தெரிகிறான். தினமும் ஜிம்முக்கு போவானோ இவன்? இவர்கள் முன்னே அசிங்கப்படுவதா? மெல்ல மெல்ல முரளியின் சிந்தனையில் பௌலிங்கைத் தவிர மற்றதெல்லாம் மறைந்து போனது. அதையே நினைத்துக் கொண்டு குளித்தான். கிளம்பினான். காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
பௌலிங் என்றில்லை. முரளிக்கு பொதுவாகவே விளையாட்டுகளில் ஆர்வமில்லை. சிறுபிள்ளையிலிருந்த அப்படித்தான். நாடே கொண்டாடும் கிரிக்கெட்டைக் கூட அவன் அதிகம் பார்த்ததில்லை; விளையாடியதுமில்லை. இதுவரை அவன் வாழ்க்கையில் மூன்றே முறை தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறான். முதல் முறை ஆறாவது படிக்கும் போது. அந்த பி.டி. மாஸ்டர், அவர் பெயர் கூட துளசிராமனோ, கல்யாணராமனோ… ரொம்ப ஸ்ட்ரிக்ட். வழக்கத்துக்கு மாறாக அன்று கணக்கு டீச்சருக்கு வகுப்பை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு பசங்களை கிரிக்கெட் விளையாடச் செய்தார். முரளியும் ஃபீல்டிங் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஒரு மூலையில் நின்று கொண்டான். அதோடு சரி.
அடுத்ததாக ஒன்பதாவது படிக்கும் போது, மூன்றாவது தெரு பையன்களோடு விளையாடியிருக்கிறான். அவர்களெல்லாம் இவனை சீண்ட கூட மாட்டார்கள். ஏனோ தெரியவில்லை. ஒருநாள், அந்த கூட்டத்தில் குண்டாக இருந்த ஒருவன் ‘ஆட வருகிறாயா?’ என்று கேட்டுக் கொண்டு வந்தான். “எனக்கு அவ்வளவா கிரிக்கெட் ஆட வராது” என்று முரளி சொன்ன போது, “நாங்க மட்டும் என்ன இன்டர்நேஷனல் பிளேயர்சா? எல்லாம் சும்மா தானே ஆடறோம். வா பாத்துக்கலாம்” என்று சமாதானம் சொல்லி அழைத்துப் போனான். அங்கே எல்லோரும் இவனை விட பெரியவர்கள். சிலருக்கு மீசை, தாடியெல்லாம் கூட இருந்தது. மிகுந்த அக்கறையுடன் விளையாடினார்கள். கல்லி, பாயிண்ட், கவர், ஃபைன்-லெக், ஒன் ஜி, டூ ஜி, என்று ஏராளமான வார்த்தைகள் அப்போதுதான் அவனுக்கு அறிமுகமாயின.
கடைசி விக்கட்டுக்காக அவனும், இன்னொருவனும் ஆடிக்கொண்டிருந்தார்கள். முதல்முறையாக பேட்டிங் எண்டில் முரளி! கண்ணாடி அணிந்த நெட்டையான பையன் வந்து ஏதோ சொன்னான். முக்கால்வாசி புரியவில்லை. ‘பொறுமையா ஆடு’ மட்டுந்தான் புரிந்தது. பந்து வந்தவுடன் கண்மூடித்தனமாக மட்டையை சுற்றினான். வந்த வேகத்தில் பந்து எந்த பக்கமோ போனது. பார்க்கக்கூட இல்லை. வேகமாக ஓடினான். இரண்டு ரன்கள் எடுத்தான். நெட்டைப் பையன் என்னமோ கத்திக் கொண்டிருந்தான். மூன்றாவதுக்கு ஓடும் போது எதிர்முனையில் இருப்பவன் திரும்பவில்லை. இவனாலும் திரும்ப இயலவில்லை. பழமான ரன்-அவுட்! கண்ணாடி அணிந்த நெட்டைப் பையன் கெட்ட வார்த்தைகளில் வையத் தொடங்கினான். அத்தனை பேருக்கும் முன்பு அசிங்கமாக இருந்தது. முரளி அழுதுக் கொண்டே வீட்டுக்கு ஓடிப்போனான். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடவில்லை.
மூன்றாவதாக பதினொன்றாவது படிக்கும் போது விளையாட நேர்ந்தது. அவன் படித்த பயாலாஜி வகுப்பில் பதினோரு மாணவர்கள் மட்டும் தான். மற்றதெல்லாம் மாணவிகள். வகுப்பு அணியில் அத்தனை பெரும் இருக்க வேண்டிய கட்டாயம். ஆரம்பத்திலேயே தனக்கு விளையாட வராது என்று பல முறை சொல்லிவிட்டான். அப்பவும் “பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டார்கள். போட்டியில் இவன் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தான்… சுசீந்தரனின் கால் திருகிக் கொள்ளும் வரை. பின் இவனை அழைத்து சுசீந்தரனுடைய ஓவரில் இருக்கும் மீதி மூன்று பந்துகளை வீசச் சொன்னார்கள். பேபி ஓவராம்! வைடு, நோ-பால்களை எல்லாம் சேர்த்து ஐந்து பந்துகள் வீசினான். எதிரணி ஆட்டக்காரன் ஒரு சிக்சரும், இரண்டு பௌண்டரிகளும் அடித்தான். இவர்கள் அணி தோற்றது. பையன்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கொஞ்ச நாளைக்கு அவனை ‘முத்தையா முரளிதரன்’ என்று கிண்டல் செய்தார்கள். அப்புறம் மறந்துவிட்டார்கள்.
இது இப்படியாக, கல்லூரியில் அவனுக்கு கிடைத்த அனுபவமோ வேறு. அதுவரை இந்தியர்கள் அனைவரும் கிரிக்கெட் மட்டுமே பார்ப்பார்கள், விளையாடுவார்கள் என்று எண்ணியிருந்த அவனுக்கு மற்ற விளையாட்டுகளையும் கவனிக்கும் மக்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது கல்லூரியில் தான் புரிந்தது. வகுப்பில் பசங்களெல்லாம் எதைப் பற்றி எல்லாமோ பேசுவார்கள். சாக்கர் என்பார்கள். மேன் யூ என்பார்கள். ஸ்பானிஷ் லீக் பார்ப்பார்கள். பிரெஞ்சு ஓபெனை அலசுவார்கள். எஃப் ஒன்னை தொடருவார்கள். என்.பி.ஏ, என்.எஃப்.எல்., எம்.எல்.பி…. என்று கேள்வியேபடாத என்னவெல்லாமோ அவர்கள் உரையாடலில் இருக்கும். முரளி இதெல்லாம் தெரியவில்லையே என்று கவலைப் பட்டதில்லை. அவர்களோடு கலந்து அரட்டையடிக்க முடியாத வருத்தம் மட்டும் தான் அவனுக்கு. கூட்டத்தோடு கலக்கும் முயற்சியாக, ஒன்றிரண்டு முறை ஈ.எஸ்.பி.என்னில் இதையெல்லாம் பார்த்திருக்கிறான். ஆனால் தொடர்ந்து பார்க்கத் தோன்றவில்லை. மற்ற விஷயங்களில் எல்லாம் சகஜமாக பழகுபவன், விளையாட்டு என்று வரும் போது ஒதுங்கிவிடுவான். சில நேரங்களில் ஒதுக்கிவிடுவார்கள். அப்போது மட்டும் கொஞ்சமாய் வலிக்கும்.
அப்படி வலிக்கும் போதெல்லாம் சங்கடம் தான்! பள்ளியில் படிக்கும் போதாவது வெளிப்படையாக அழலாம். அம்மாவிடம் சொல்லலாம். சொல்லியும் இருக்கிறான். ‘அவர்கள் எல்லாம் முரட்டு தடியன்கள். சின்னப் பையன் உன்னை ஏமாற்றுகிறார்கள். விட்டுத் தள்ளு’ என்று அம்மாவும் தன் பங்குக்கு சொல்லிவிட்டுப் போவாள். கல்லூரிப் பருவத்தில் அழவா முடியும்? அழுதால் சிரிக்கமாட்டாளா? பின் வலியை எப்படித்தான் குறைத்துக் கொள்வதாம்? யாருக்கும் தெரியாமால் அழப் பழகினான். பாத்ரூமில், மொட்டை மாடியில், தனிமை கிடைக்கும் இதர இடங்களில்…தனியாக அழுது, கோபத்தை குறைத்துக் கொள்வான்.
வேலைக்கு வந்த பிறகு இப்படிப்பட்ட சிக்கல் எல்லாம் இல்லை. இங்கே யாருக்கும் விளையாட நேரமில்லை. தினசரி வாழ்க்கை ஓட்டத்திற்கு இடையே கிடைக்கும் நேரத்தில் விளையாட்டைப் பார்ப்பார்கள். அவ்வவ்போது பேசுவார்கள். அந்த கணங்கள் எல்லாம் மின்னலாக மறைந்துவிடும். எப்போதாவது மாயாஜால் சம்பவம் ஏற்படுகிறது. அப்போது மறுபடியும் நோவுகிறது. இதோ! இங்கே அப்படியொரு நிகழ்வுக்கான அறிகுறி அவனுக்குத் தெரிகிறது.
ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணம் என்றார்கள். புறப்பட்டு கிட்டத்தட்ட முக்கால் மணி ஆகிவிட்டது. காரில் எல்லோரும் குஷியாக இருந்தார்கள். சுதாவைத் தொட்டால் ஷாக்கே அடித்துவிடும் அளவிற்கு அவள் ஒரு ‘லைவ் வைராக’ இருந்தாள். சித்தி-சித்தப்பா மீது கோபம் வந்தது. இப்படி செல்லம் கொடுத்து பிடிவாதக்காரியாக வளர்த்திருக்கிறார்களே! முரளி முகத்தைத் திருப்பிக் கொண்டு சன்னல் வழியே பார்த்தான். சாலையில் சில குப்பைகள் பறந்து கொண்டிருந்தன. அதெல்லாம் அவன் தோற்ற போது கலைத்த கேரம் காய்களாகவும், கிழித்த சீட்டுத் துண்டுகளாகவும் தெரிந்தன.
அடுத்த அரை மணியில் அந்த மாலுக்கு வந்தார்கள். பெரிதாக இருந்தது. பூமிக்கு அடியில் மூன்று தளங்களில் பார்கிங் வசதி இருந்தது. காரை நிறுத்திவிட்டு மேலே நுழைந்தவுடன் சுதாவைப் பார்த்தான். அவள் முகத்தில் அப்படியொரு பிரகாசம். “தும்பி வா”வை இன்னுமொரு முறை கேட்க ஆயத்தம் ஆகும் ராஜா ரசிகனின் முகத்தில் காணப்படும் பரவசம் அவள் முகத்திலும் தெரிந்தது. ‘நூற்றுக்கும் மேலான கடைகள் இருக்கும் போல. பௌலிங் ஆடும் களம் எங்கே இருக்குமோ? ஒருவேளை, எதாவது காரணத்தால் அது மூடியிருந்தால் நன்றாக இருக்குமே!’ என்று நப்பாசைப் பட்டான்.
அரை மணியாக ‘பசி, பசி’ என்று நச்சரித்து வந்த ரிங்கு சாப்பிடத் துடித்தான். பயணத்தால் எல்லோருக்குமே பசித்தது. எங்கே சாப்பிடலாம் என்ற குழப்பம் வேறு. சிலர் சைனீஸ் என்றார்கள். சிலர் தாய் போகலாம் என்றார்கள். பிரேமோ பீட்சா சாப்பிட ஆசைப்பட்டான். முரளியை கேட்டார்கள். “எதுவானாலும் பரவாயில்லை” என்றான். அவனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவன் கூட்டமாக வெளியே செல்லும் போதெல்லாம் இப்படித்தான் ஆகும். இங்கே ஏழு பேர்தான் இருக்கிறார்கள். அவனோ பன்னிரண்டு, பதினைந்து பேருடன் எல்லாம் வெளியே போயிருக்கிறான். விவாதம் முடிந்து முடிவு எடுப்பதற்குள் பசியே போன கதைகள் எல்லாம் உண்டு. ஏறக்குறைய பதினைந்து நிமிடங்களில் பீட்சா சாப்பிட முடிவானது.
சாப்பிட செல்லும் வழியில் பௌலிங் ஆடும் இடம் தெரிந்தது. திறந்திருந்தது. சிலர் ஆடிக் கொண்டிருந்தார்கள். “இதான் பௌலிங் ஆலி. ரொம்ப கூட்டம் இல்லை. நாம வரும் பொது எப்படி இருக்குமோ?” என்று சொன்னாள் சுதா. சொல்லும் போது உதட்டில் ஒரு லேசான புன்னகை இருந்தது. ‘இவள் என்ன அதே நினைப்போடு இருக்கிறாள்’ என்று அலுத்துக் கொண்டான் முரளி.
“பீட்சா பிடிச்சிருக்கா அண்ணா?” என்று பிரேம் கேட்டதற்கு போதுவாக தலையாட்டினான். அவனால் அதன் சுவையை ரசித்து ருசித்து சாப்பிடவெல்லாம் முடியவில்லை. எதோ பசி அடங்க தின்று கொண்டிருந்தான். இங்கே நடப்பவை எல்லாம் எதோ ஒரு ‘தே ஜாவூ’வைப் போல இருந்தது. அவன் மெல்ல தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்.
ஒருவழியாக சாப்பிட்டப் பின் திரையரங்குக்குச் சென்றார்கள். ஏற்கனவே முடிவு செய்த ஒரு ஹிந்தி படம். இவர்கள் பயந்த மாதிரி டிக்கெட் கிடைப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. முரளிக்கு அவ்வளவாக ஹிந்தி தெரியாது. படம் சுமாராகத்தான் புரிந்தது. புரிந்த வரையிலும் சுமாராகத்தான் இருந்தது. இடைவேளைக்கு பிறகு ஒரு காட்சியில் பௌலிங் ஆடும் களத்தை காட்டினார்கள். நாயகன் ஒரே பந்தில் பத்து குழவிகளையும் லாவகமாகத் தட்டினான். உடனே நாயகி ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். பின் எதோ பாடினார்கள். முரளிக்கு எரிச்சலாக வந்தது. அதன் பின் படம் பார்க்கும் ஆர்வம் சுத்தமாக போய்விட்டது. ஒரு கணம் ‘எப்படா இது முடியும்?’ என்று நினைத்தான். மறு கணமே ‘இந்த திரைப்படம் முடியாமல் காலம் இந்த நொடியே உறைந்து விடாதா?’ என்று ஆசைப் பட்டான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின் படம் முடிந்தது. விளக்குகள் மெல்ல தூக்கத்திலிருந்து எழுந்தன. திரையில் எழுத்துகள் கீழிருந்து மேலாக ஊர்ந்து போயின. மக்கள் எல்லோரும் எழுந்து வெளியே செல்ல ஆரம்பித்தனர். முரளியும் மெல்ல தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.