இது லேசர் தொழில்நுட்பத்தின் ஐம்பதாவது வருடம். அறிவியல் சமூகம் லேசர் தொழில்நுட்பத்தின் 50 வது பிறந்த நாளை மிகவும் விரிவாக இவ்வாண்டு முழுவதும் கொண்டாடுகின்றது.உலகெங்கிலும் லேசர் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கங்களும், கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு லேசர் தொழில்நுட்பத்தையும், பயன்பாடுகளையும் விளக்கும் சிறப்புக் கட்டுரையை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
இசைப்பிரியரான சிவகுமார், எல். சுப்பிரமணியத்தின் துள்ளல் பிளாஸம் சிடியை கேட்டுக்கொண்டே பயணத்தைத் தொடங்கினார். நெடுஞ்சாலையில் குஷியாகப் பாட்டு கேட்டுக் கொண்டு பயணித்த அவரைப் பின்னால் துரத்திய போலிஸ் சைரன் மிகவும் பாதித்தது. காரை நிறுத்தினார். காவல்துறை அதிகாரி மிகவும் சினேகமான குரலில், ‘உங்கள் லைஸன்ஸ் மற்றும் ஊர்திப் பதிவு ஆவணங்களை காட்டுகிறீர்களா?” என்றார். ”எங்களின் போக்குவரத்து டிடெக்டர் கணக்குப்படி வேக அளவுக்கு மேல் மணிக்கு 30 மைல்கள் வேகத்தில் பயணிக்கிறீர்களே? அடுத்த முறை சற்று நிதானமாய் ஓட்டுங்கள். நல்ல வயலின் இசை. நல்ல நாள் நண்பரே’ என்று $100 அபராத சீட்டைக் கொடுத்து விலக சிவா பயணத்தைத் தொடர்கிறார்.
சிவாவுக்கு அலுவலகத்தில் நிலத்தடி விசேஷ நிறுத்துமிடம். அவரது ப்ரியஸ் நிறுத்தும் இடம் அருகே வந்தவுடன், ஒரு பட்டனை அழுத்த தானே சரியாக நிறுத்திக் கொண்டது. அலுவலகம் சென்று தன் அடையாள அட்டையை ஒரு படிக்கும் கருவியில் வருடி உள்ளே செல்கிறார். தன் அலுவலகத்தில் கணினியில் தன் கடவுச்சொல்லை டைப் செய்து சில நொடிகளில் இணையத்தில் சுருக்கமாக செய்தித் தலைப்புகளை அலசுகிறார். அவருடைய அலுவலகம் இந்தியாவிலுள்ள பூனே நகரில் உள்ள பொறியாளர்களுடன் சேர்ந்து புதிய இன்ஜின் ஒன்றை வடிவமைக்கிறது. பூனேவுடன் 8:30 க்கு டெலிப்ரெஸன்ஸ் என்ற தொழில்நுட்ப உதவியோடு ஒரு தூரத்து நேர் உரையாடல். இந்திய பொறியாளர்கள் பக்கத்தில் முப்பரிமானத்தில் கலிபோர்னியாவுடன் உரையாடி வடிவமைப்பு முன்னேற்றம் மற்றும் சிக்கல்கள் பற்றிய அலசல். 12:00 மணிக்கு கேன்டீனுக்கு சென்று உணவு வாங்குகிறார் சிவா. அவர் ஒவ்வொரு பொருளாக வருடியின் அருகே பட்டை குறியீடை வருடி தன் ஐடி கார்டையும் வருடி சாப்பிடத் தொடங்கினார். மதியம் இன்னும் சில அலுவல்கள். வீட்டிற்கு எடுத்து சென்று படிப்பத்ற்காக சில வடிவமைப்பு குறிப்புக்களை சிவா அலுவலகத்தில் அழகாக கலரில் அச்சடித்துக் கொண்டார். மாலை 6:00 மணிக்கு ப்ரியஸை விரட்டி வீட்டில் நுழைகிறார். அவர் மனைவி அபர்ணா ராட்சச டிவியில் புளூ ரே டிவிடியில் பளிங்கு போல் ‘Blind side’ பார்த்துக் கொண்டிருக்கிறார். மகன் வருணை விசாரிக்கிறார், ‘இன்று பள்ளி எப்படி இருந்தது?”. வருண், ‘பிறகு சொல்கிறேன்’ என்று தன் கணினியில் விடியோ விளையாட்டான ’Command and Conquer 4’ ல் மீண்டும் மூழ்குகிறான்.
இரவு உணவுக்கு பிறகு, சென்னையில் உள்ள தன் அக்காவை தொலைபேசியில் அழைகிறார்.
‘டாக்டர் என்ன சொல்கிறார்?’
‘இப்போ புதிய வைத்திய முறை வந்துள்ளதாம். ஒரு சின்ன துவாரம் செய்து சன்னமான குழாய் ஒன்றை நுழைத்து படம் பிடித்து அசத்தி விட்டார்கள். அம்மாவுக்கு மருந்திலேயே குணப்படுத்திவிடலாமாம்’.
‘ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். நேற்று அப்பாவுக்கு கண் வைத்தியர் என்ன வைத்தியம் பார்த்தார்?’.
‘சிவா, நானும் என்னவோ ஏதோன்னு பயந்தேன். சர்ஜரி ஏதுமில்லாமல் புது மிஷினால் அரை மணி நேரத்தில் சரி செய்து கருப்புக் கண்ணாடி கொடுத்து வீட்டிற்கு உடனே அனுப்பி விட்டார்கள். கட்டு பிரிக்கும் விஷயம் ஒண்ணுமில்லை. வர வர உங்க அமெரிக்கா மாதிரி எல்லாம் வந்துருச்சு’.
மேலே சொன்ன அன்றாட விஷயங்களை படித்த நீங்கள், ‘இந்த எழுத்தாளரையும் சொல்வனம் ஆசிரியரையும் தனியாக கவனிக்க…’ என்று உடனே முடிவெடுக்குமுன் தடித்த வார்த்தைகளை (bold words) ஒரு முறை மீண்டும் படியுங்கள். அன்றாட வாழ்வில் அவை அத்தனையும் ஒரே தொழில்நுட்பத்தைக் குறிக்கும் வார்த்தைகள். ஐம்பது வருடங்கள் முன்பு இதில் எதுவும் சாத்தியமில்லை. நாம் இக்கட்டுரையில் அலசப் போவது லேசர் என்ற தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்கள், எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றி.
அப்படி என்ன விசேஷம் லேசரில்? மிகப் பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது பலரது பார்வையில் கார் மற்றும் செல்ஃபோன். முதலில் இவ்விரண்டும் கண்டுபிடித்து (தொலைபேசி) ஒரு 100 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இதன் பயன்கள் பரவலாகத் தோற்றமளித்தாலும் மிகக் குறுகியவை. கார் ஒரு போக்குவரத்து வசதி தொழில்நுட்பம். கைப்பேசி அடிப்படையில் ஒரு தொடர்பியல் கருவி (இது சற்று மாறி வருவது உண்மை). இவையெல்லாம் விஞ்ஞானப் பார்வையில் லேசர் முன் மிக சிறிய முன்னேற்றங்கள். 1960 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட லேசர் விஞ்ஞான, மருத்துவ, பொழுதுபோக்கு, தொடர்பியல் மற்றும் தொழில்நுட்ப உலகிலும் 50 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஸ்டீவன் சூ (Stephen Chu), நோபல் பரிசு பெற்ற ஒபாமா அரசில் பணியாற்றும் விஞ்ஞானி. சமீபத்தில் லேசரின் 50 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு உரையாடுகையில் மிகவும் சுவாரசியமான விஷயம் ஒன்றைச் சொன்னார். இந்த 50 ஆண்டுகளில் 4 வருடத்திற்கு ஒரு முறை லேசர் சம்மந்தபட்ட நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது (அவரும் இதில் ஒருவர்). கடைசியாக 2006 ஆம் ஆண்டில் இத்துறையில் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. இக்கணக்குப்படி இவ்வாண்டு இன்னொரு பரிசு கொடுக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
சொல்லப்போனால் இக்கட்டுரையை நீங்கள் படிப்பதற்குக் காரணம் லேசர் சார்ந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இக்கட்டுரையின் எழுத்து வடிவம் கலிபோர்னியாவில் எங்கோ ஒரு வழங்கி கணினியில் (computer server) சேமிக்கப்பட்டுள்ளது. நீங்கள் க்ரோம் மற்றும் ஃபயர்ஃபாக்ஸில் ‘சொல்வனம்’ இணைத்தளத்திற்கு சென்று ‘அரை செஞ்சுரி துல்லியம்’ கட்டுரையை (இம்முறை ஆசிரியரிடமிருந்து தப்பினேன். அப்படியே தலைப்பு கட்டுரையில் வந்து விட்டது!) க்ளிக்கினால் எப்படி கலிபோர்னியா எழுத்து வடிவத்தை உங்களால் படிக்க முடிகிறது? உங்களைப் போல இன்னும் பல பேர் இதே கட்டுரையை படிக்க முயற்சிக்கலாம். எப்படி பல நுகர்வோருக்குக் க்ளிக்கினவுடன் கட்டுரையை வழங்குவது? மிக சக்தி வாய்ந்த இந்த வழங்கி கணினிகளை இணைப்பது நுண்ணிய கண்ணாடிக் குழாய்கள் உள்ள கேபிள்கள் (fiber optic cable). இக்கட்டுரையின் எழுத்துக்கள் டிஜிட்டல் முறையில் படு பயங்கர வேகத்தில் லேசர் கதிர் மூலம் அனுப்பப்படுகிறது. இத்தொழில்நுட்பம் இல்லையேல், ஒவ்வொரு எழுத்தாய் கணினித்திரையில் வருவதற்குள் எல்லோருக்கும் பைத்தியம் பிடித்து பத்திரிகையின் பெயரை ‘எழுத்து வனம்’ என்று மாற்ற வேண்டிவரும்!
இத்தனை ஏன் – உங்களது மடி மற்றும் இதர வகை கணினிகளே லேசர் தொழில்நுட்பம் இன்றி சாத்தியமில்லை. கணினியை திறந்து பார்த்திருக்கிறீர்களா? அல்லது பழுது பார்க்கும் நிலயங்களில் பார்த்திருக்கக்கூடும். பல கரப்பான்பூச்சிகள் போன்ற பாகங்கள் ஒரு சர்க்யூட் போர்டில் சால்டர் செய்து வைத்திருப்பதைக் காணலாம். அந்த சர்க்யூட் போர்டை லேசரின்றி உருவாக்க முடியாது. (டெல்டா பகுதி நதி ஓட்ட்ம் போல தோற்றமளிக்கும் சமாச்சாரம்). அதில் சால்டர் செய்துள்ள கணினி சிப்கள் ஒரு லேசரால் பொறுமையாக, மிக சுத்தமான அறையில் ராட்சச எந்திரங்களுடன் உருவாக்கப்பட்டவை. இதை photo lithography என்று அழைக்கிறார்கள்.
இத்தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த தியோடார் மெய்மான் (Theodore Maiman) – சுறுக்கமாக டெட், சில புகைப்பட பற்றும் மின்னணுப் பட்டியல்களில் தேடி 1960 ல் கண்டுபிடித்தபோது இதை எல்லோரும் கேள்வி தேடும் விடையாகத்தான் பார்த்தார்கள். பல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களைக் கவர்ந்து நம் வாழ்கையை தலைகீழாய் மாற்றிய லேசர் நுட்பத்தை ஆரம்பத்திலிருந்து அலசுவோம்.
லேசர் கால முன்னேற்றம்
1960 ல் டெட் கண்டுபிடித்த லேசர் துறையில் ஏறக்குறைய 55,000 பேடண்டுகள் அமெரிக்காவில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன என்றால் பாருங்களேன் – அத்தனை முன்னேற்றம் இத்துறையில். இதன் அடிப்படைத் தத்துவங்களை ஐன்ஸ்டீன் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அழகாகச் சொல்லிவிட்டார். முதலில் என்னவோ இது ஒரு நுண்அலை நுட்பமாகத்தான் கருத்ப்பட்டது. இதன் ஆரம்பப் பெயரான ‘ஆப்டிக்கல் மேஸர்’ ஆரம்ப நாட்களின் மனப்போக்கைக் காட்டுகிறது. கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த சார்லஸ் ட்வுன்ஸ் (Charles Townes) மற்றும் ஆர்தர் ஷாலோ (Arthur Schawlow) ஆரம்ப கால லேசர் ஆராய்ச்சியில் டெட்டுடன் முக்கியமானவர்கள்.
லேசர் தொழில்நுட்பம், 1961-ஆம் ஆண்டு முதல் முறையாக மருத்துவத் துறையில் உபயோகப்படுத்தப்பட்டது. ரூபி என்ற கல், டெட் உருவாக்கிய லேசரில் உபயோகப்படுத்தப்பட்டது. விழித்திரை கழலையை (retinal tumor) அழிக்க முதல் முறையாக டெட்டின் நுட்பம் உபயோகப்பட, ஒரு கேள்விக்காவது பதிலளித்தது ஆரம்ப லேசர். இதே ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நியோடிமியம் கண்ணாடி லேசர் (neodymium glass laser) ராணுவ ஆராய்ச்சிகளை துவக்கிவிட்டது. லேசரை ஒரு ராணுவ ஆயுதமாய் பயன்படுத்த பலர் முயற்சி செய்யத் தொடங்கினர். 1962 ஆம் ஆண்டு டையோடு லேஸர் என்ற சிறிதான லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று வர்த்தக காட்சியளிப்பிலிருந்து (சிறு $2 லேசர் சுட்டி கருவியின்றி எந்த பொருளும் விற்க முடிவதில்லை), ரஹ்மான் இசை நிகழ்ச்சிவரை இந்த நுட்பம் கலக்குகிறது. சின்ன குழந்தைகள் விளையாட்டு சாமானிலிருந்து, சிவா நுழைத்த சிடி, அபர்னா பார்த்த ப்ளூ ரே மற்றும் இக்கட்டுரையை படிக்க உதவும் ஃபைபர் தொழில்நுட்பம் வரை எல்லாம் இதனால் சாத்தியமாகியது.
இதே காலகட்டத்தில் யாக் (YAG) லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. பல தொழில்சாலைகளில் துல்லியமாக அளப்பது, வெட்டுவது, எரிப்பது, போன்ற சக்திவாய்ந்த உபயோகங்கள் வரத் தொடங்கின. 1964 ஆம் ஆண்டு முதன் முறையாக மூவருக்கு லேசர் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு குறுந்தட்டு இயக்கி (CD Player) கண்டுபிடிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு, மிக முக்கியமான தொலைத்தொடர்பு தொடர்பான லேசர் முன்னேற்றம் ஒன்று நடைபெற்றது. கண்ணாடி இழைகளை (fiber optic strands) மிகத் தூய்மையாகத் தயாரிக்க முடிந்தால், லேசர் ஒளியை அதிக தூரம் மிக துல்லியமாகவும், வேகமாகவும், அதிக இழப்பின்றியும் அனுப்பமுடியும் என்று அறியப்பட்டது. முன்சாய்ந்த (italicized) இவ்வர்த்தைகளை நீங்கள் இன்று படிப்பது இந்த முடிவினால்தான்! 1966 ல் மீண்டும் நோபல் லேசருக்கு.
1970 ல் எக்ஸைமர் லேசர் (Excimer) கண்டுபிடித்ததால் நுண்ணிய சிப்கள் (microchips) உருவாக வழிவகுத்தது. இந்த லேசர் மிகவும் துல்லியமான கதிரைத் தருவதால், அது கணினி சிப் செய்வதற்கான photo lithography முறைக்கு உதவியதால், பல கோடி மின்னணு உறுப்புகளை மிகச் சிறிய சிலிகான் தகட்டில் தயாரிக்க முடிந்தது. கண் அறுவை மருத்துவத்துக்கும் மிக முக்கியமானது எக்ஸைமர். 1971 ஆம் ஆண்டு டென்னிஸ் கேபர் (Dennis Gabor) என்ற விஞ்ஞானிக்கு ஹோலோகிராம் என்ற முப்பரிமாண ஒளி உருவமைப்பு கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிவா பூனே பொறியாளர்களுடன் அளவளாவிய டெலிப்ரஸன்ஸ் திரு.கேபரின் கைங்கரியம்.
ஜூலை 26, 1974 முதன் முறையாக ஒரு 10 ரிக்லி சூயிங்கம் பெட்டி ‘பட்டை குறியீடை வருடியின்’ (bar code reader) மூலம் படிக்கப்பட்டபோது, அத்தொழில்நுட்பம் வியாபார உலகத்தையே கலக்கப் போவதை யாரும் உணரவில்லை. 1977 ஆம் ஆண்டு முதன் முறையாக கண்ணாடி இழைகள் வழியாக தொலைத்தொடர்பு சோதிக்கப்பட்டது. காந்தி ஜெயின் என்னும் இந்தியர் 1982ல் முதன் முறையாக எக்ஸைமர் லேசர் கொண்டு கணினி சிப் செய்வதற்கான photo lithography முறையை விவரித்தார். 1985 ல் முதன் முறையாக எக்ஸைமர் லேசர் கொண்டு கண் அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
1988 ல் அட்லாண்டிக் கடல் அடியே உலகின் இரு கண்டங்களை இணைக்கும் நுண்ணிய கண்ணாடி குழாய்கள் உள்ள கேபிள்கள் நிறுவப்பட்டன. பன்னாட்டு தொலைத்தொடர்பு துல்லியமாகக் கேட்கத் துவங்கியது. காது கிழிய ஹலோ சொல்லியே காசை வீணாக்கும் யுகம் முடியத் தொடங்கியது. கண்ணாடி இழைகளைத் தாங்கிய கேபிள் ஒன்றில் பல டிவி, தொலைபேசி மற்றும் டேடா சானல்களை அடக்கலாம். 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு கண்ணாடி இழைகளில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கியவர்களிக்கு வழங்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு லாசிக் என்ற லேசர் மூலம் கண் சிகிச்சை முறை (சிவாவின் அப்பா உதாரணத்தில்) கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுவாக ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும். பல தேவைகளுக்காக பல வித லேசர் முறைகள் உள்ளன. சிறுவர் விளையாடும் பொம்மை லேசருக்கும், ராமன் லேசருக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.
எப்படி வேலை செய்கிறது?
தமிழில் ஒரே வார்த்தையில் ‘ஒளிபெருக்கி’ என்று சொல்லலாம் (Optical Amplifier). உங்கள் வீட்டு ஸ்டீரியோவில் ஒலியை கூட்டிக் கொண்டே வந்தால் பெரிதாக கேட்குமே தவிர அதன் ஒலித் துல்லியம் ஒரு அளவுக்கு மேல் மேம்படாது. ஆனால் லேசர் விஷயத்தில் ஒளி அளவைப் பெருக்கினாலும் துல்லியத்தையும் கூட்ட முடியும். சூரிய ஒளியைப் போலல்லாமல் ஒரே சீராக (coherent) நேராக, நிறத்தில், ஒளியைப் பெருக்க முடியும். இவை பல வண்ணங்களில் வந்தாலும், சிவப்புதான் லேசருக்கு பிடித்த கலரு! பல பொருட்கள், வாயுக்கள் லேசர் உருவாக பயன்படுத்தப்படுவதால் அவை பல நிறங்கள், மற்றும் சக்தியுடன் இயங்கக்கூடியவை.
சாதாரண சிடி மற்றும் டிவிடி கருவிகளில் உபயோகிக்கப்படும் லேசரை குறைகடத்தி டையோடு லேசர் (semiconductor diode laser) என்று அழைக்கிறார்கள். பொதுவாக டையோடு ஒரு மின்னணு விசை (electronic switch). அதாவது எலெக்ட்ரான்களை போக விடும், இல்லயேல் விடாது. லேசருக்கான டையோடுகள் விசேஷப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இவை உள்வாங்கிய எலெக்ட்ரான்களைக் கொண்டு மேன்மேலும் ஒளித்துகள்களை உருவாக்கும் (photons). லேசர் டையோடுகளின் மேல்பகுதி தெளிவாக இருக்கும் – ஒரு சின்ன ப்ளாஸ்டிக் லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். உங்கள் பழைய டிஸ்க்மேனை திறந்தால் எளிதாகப் பார்க்கலாம். ஏராளமான ஒளித்துகள்கள் உருவான பிறகு அவை சீரான கதிராக லென்ஸ் வழியாக வெளிவருகிறது. அதிகமாக சிவப்பு லேசரே சிடி மற்றும் டிவிடி கருவிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. நீல லேசர் சிவப்பைவிட துல்லியமானது. புளூ ரே கருவிகளில் நீல லேசர்கள் ஒளி மற்றும் ஒலியை மிக தெளிவாக பிரதி செய்ய உதவுகின்றன. இதைத்தவிர பச்சை லேசர்களும் நடன அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பரவலாக உபயோகப்படுத்தப்படுகின்றன. மிக அழகாக கொலராடோ பல்கலைகழக இணைத்தளத்தில் இங்கே விளக்கியுள்ளார்கள்:
http://www.colorado.edu/physics/2000/lasers/index.html
லேசர் மருத்துவம்
பல பெரிய மருத்துவ நிலயங்களில் லேசர் மருத்துவம் ஒரு தனி பகுதியாகும் அளவுக்கு வளர்ந்து விட்டது. ஆரோக்கிய விஷயத்தில் லேசரின் பணி மிக முக்கியமானது.
கேத்தீட்டர் (catheter) என்பது மிக நுண்ணிய குழாய். இன்று பல கேத்தீட்டர்கள் வளையக்கூடிய கண்ணாடிக் குழாயில் லேசரைத் தாங்கிச் செல்கின்றன. இருதயம் வரை பல பாகங்களுக்கு நுழைக்கப்பட்டு மருத்துவர்களுக்கு அழகாக பாதிக்கப்பட்ட பாகங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. பல நாட்கள் மருத்துவமனையில் தங்கி நடத்தப்பட்டு வந்த பல சிகிச்சைகள் இன்று ஒரே நாள் சிகிச்சையாக (same day surgery) மாறுவதற்கு லேசர்கள் முக்கிய காரணம். சிறுநீரகக் கல் நீக்கல் (kidney stones) போன்ற சிகிச்சைகள் எண்டாஸ்கோப்பி என்ற லேசர் முறையில் அதிகம் அறுவைசிகிச்சை இல்லாமல் பல நோயாளிகளையும் கவனிக்க முடிகிறது. இந்த கற்களை லேசர் மூலம் கரைத்து விடுகிறார்கள்.
ஒரு வகை சருமப் புற்று நோயை லேசர் மூலம் குணப்படுத்துகிறார்கள். இதை photo dynamic therapy என்கிறார்கள். ஒளியால் பாதிக்கப்படும் ரசாயனம் ஒன்றை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி விடுகிறார்கள். அப்பகுதியில் லேசர் ஒன்றினால் சிறு தாக்குதல் நடத்துகிறர்ர்கள். புற்று நோய் உயிரணுக்களை கொன்றுவிடும் முயற்சி இது.
கண் சிகிச்சை லேசரால் மிகவும் மாறிவிட்டது. சிவாவின் அப்பாவுக்கு நம் உதாரணத்தில் நடந்த லாசிக் அறுவை சிகிச்சையைப் பற்றி அறுக்காமல் சின்ன விளக்கம். நாம் சொன்ன தினத்திற்கு சில நாட்கள் முன்பு சிவாவின் அப்பா சில சோதனைகளுக்காக கண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அவருக்கு என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி அதிகம் தெரியவில்லை – ஹிண்டு பேப்பரில் சிறிதாக அச்சடிக்கத் தொடங்கிவிட்டதாக அவரது தியரி. விழித்திரையின் ஏற்ற இறக்கங்களை சன்னமான லேசரைக் கொண்டு சோதனையாளர் பதிவு செய்தார் – அவருக்கு topographer என்றே தொழில்முறை பெயர். சிகிச்சை அன்று ஒரு எக்ஸைமர் லேசர் விழித்திரை ஏற்ற இறக்கங்களை சிறு எரித்தல் மூலம் சரி செய்கிறது. சிறு கண் சொட்டு மருந்துகள் கொடுத்து, ஒரு வாரத்திற்குள் ஹிண்டு பேப்பர் சரியாகத்தான் அச்சிடப்படுவது, தெளிவாவது எல்லாம் லேசர் மகிமை!
பொதுவாக அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு, முன்பு செல்ல முடியாத இடங்களுக்கு கேத்தீட்டர் மற்றும் லேசர் மூலம் சென்று, கோளாறு என்னவென்று சரியாகச் சொல்ல முடிகிறது. மேலும் லேசரின் மிக முக்கிய சேவை: கெட்ட உயிரணுக்களை மட்டும் அழிக்கும் சக்தி. பக்கத்தில் உள்ள நல்ல உயிரணுக்களை அப்படியே விட்டு விட முடிகிறது. நோயாளிக்கும் அதிக பாதிப்பின்றி, வலியின்றி செய்யக்கூடிய பல லேசர் செய்முறைகள் மனிதகுலத்திற்கே ஒரு விஞ்ஞானப் பிரசாதம்.
லேசர் மருத்துவத்தின் இன்னொரு முகம் ஒப்பனை சிகிச்சை முறைகள் (cosmetic care procedures). இதை photo-rejuvenation என்கிறார்கள், ஓரளவுக்கு விளையாட்டாக சொல்லப் போனால் சினிமாக்காரர்களின் மருத்துவ சமாச்சாரம். முகச்சுருக்கங்களை நீக்க, லேசர் துடிப்புகள் உபயோகிக்கப்படுகின்றன. வேண்டாத இடங்களில் மயிரை நீக்குவதற்கும் லேசர்கள் கைவருகின்றன. சினிமாவில் close up ல் வழ வழ அழகு மிக முக்கியம்!
லேசர் உற்பத்தி
உற்பத்தித் துறையில் அதிகம் CO2 லேசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதைக் கண்டுபிடித்தவர் குமார் படேல் என்ற இந்தியர். CO2 லேசர்கள் அதன் சக்தியை பொருத்து சற்று அபாயமானவை. இவை பல்வேறு சக்திகளில் கிடைக்கும். துல்லியமாக உலோகங்களை வெட்டுவது, வெல்டிங் போன்ற துல்லிய உற்பத்தி (precision manufacturing) தொழில்களுக்கு வரபிரசாதம். அதெப்படி விமான மற்றும் ரோபோ உறுப்புகள் அவ்வளவு சரியாக சீராக அமைக்கப்படுகின்றன? எப்படிப் பல்லாயிரக் கணக்கான மாருதி கார்கள் சீராக வெல்டிங் செய்து ஒவ்வொரு நாளும் வெளிவருகின்றன? எல்லாம் லேசர் மற்றும் கணினியால் இயக்கப்படும் தொழில்நுட்பப்பயன்.
பல உற்பத்திப் பொருட்களில் பெயர்கள் மற்றும் தன்மைகள் (specifications) பொருளின் மேலேயே பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். மரம், ப்ளாஸ்டிக், உலோகம் எல்லா பொருட்களிலும் லேசர் மூலம் எழுத்துக்களை பொறிக்க முடியும். இதை laser engraving என்கிறார்கள்.
மிகச் சிறிய அளவில் துவாரங்கள் செய்வது மற்றும் வெட்டுவது (அதுவும் சிக்கலான வடிவங்களில்) போன்ற விஷயங்களை micromachining என்கிறார்கள். உதாரணத்திற்கு கணினி சர்க்யூட் போர்டில் பல நூறு துல்லிய துவாரங்கள் உள்ளன. சற்று விலகினாலும் பாகங்களை நுழைத்து வடிவமைக்க முடியாது. இது போன்ற துல்லிய விஷயங்களுக்கு லேசரே கதி.
மிக மெல்லிய கோட்டிங் தேவையா? அதிக உஷ்ணத்தைக் கிளப்பாமல் அதிகப் பொருள் விரயமில்லாமல் வேலையை முடிக்க laser alloying என்ற முறை உபயோகப்படுத்தப்படுகிறது.
சில உயர்தர லென்சுகளைத் தயாரிக்க லேசர்கள் உப்யோகப்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு தூரப்பார்வை மற்றும் பக்கப்பார்வை குறைகளை ஒரே கண்ணாடியில் வழக்கமான முறைகளில் தயாரித்து வந்தார்கள். இன்று இது மேலும் வளர்ந்து, மிகவும் துல்லியமாக progressive lens வடிவமைப்பதில் லேசர் மூலம் அசத்துகிறார்கள். உயர்தர காமிரா லென்சுகளும் இதே முறையில் லேசர் உதவியுடன் தயாரிக்கிறார்கள்.
லேசர் வியாபாரம்
”பெரிய சூப்பர்மார்கெட்டில் இதுதான் தொல்லை. பொருளுக்கும் விலைக்கும் சம்மந்தமில்லை”, என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு என்றே விலை அறிந்து கொள்ளும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் அதன் அட்டையில் UPC என அழைக்கப்படும் பட்டைக் குறியீட்டை அச்சடித்துவிடுகிறார்கள். பத்தாயிரம் சதுர அடியிருக்கும் பெரிய கடைகளில் ஆங்காங்கே விலை அறிய உதவும் வருடிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை லேசர் கதிர் உதவியுடன் பட்டைக் குறியீட்டைப் படித்து, கணினியுடன் தொடர்பு கொண்டு உடனே விலையைச் சொல்லிவிடுகின்றன.
ஆரம்ப காலங்களில் சில குளறுபடிகள் நடந்தாலும் இப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது. உதாரணத்திற்கு, ஒரு பால் டைரி பட்டை குறியீட்டை சிகப்பாக அச்சடித்துவிட்டார்கள். லேசர் வருடிகள் படிக்க முடியாமல் திண்டாடியதாம். சிகப்பு லேசருக்கு கருப்பு பட்டை குறியீடுதான் பிடிக்கும்!
பல விதமான லேசர் வருடிகள் பொருட்களை பில் செய்வதற்கு உதவுகின்றன. இன்று சிறிய 500 சதுர அடி கடையிலிருந்து ராட்சச டிபார்ட்மெண்ட் கடை வரக்கும் பில் செய்யும் கணினியும் (point of sale machines) பட்டைக் குறியீடு வருடியும் இன்றி வியாபாரம் நடக்காது என்றே சொல்லலாம்.
சரக்கு கணக்கு எடுப்பதற்கு (inventory control) லேசர் வருடிகள் மிகவும் உதவியாக உள்ளன. ஃபெட் எக்ஸில் பொருள் ஏதாவது அனுப்பியுள்ளீர்களா? ஏஜண்ட் ஒருவர் சிறிய கையளவு கணினியுடன் வந்து உங்கள் பார்சலை லேசரால் வருடுவார். அதிலுள்ள குட்டி அச்சுப்பொறி (printer) லேபிளை அழகாக அச்சடிக்கும்.
வட அமெரிக்காவில் வாடகைக் காரை திருப்பிக் கொடுப்பது மிக சுலபம். காரணம் ஃபெட் எக்ஸை போல குட்டி கையளவு கணினி மற்றும் லேசர் வருடியுடன் சகல கார் திருப்பும் வேலைகளை 1 நிமிடத்தில் முடித்து விடுகிறார்கள்.
(தொடரும்)
[லேசரின் மேலும் சில பயன்பாடுகளைக் குறித்தும், லேசர் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்தும் அடுத்த இதழில் படிக்கலாம்.]