ஹாலிவுட் பேயோட்டிகளும், உண்மைக் கதைகளும்

திரு.அரவிந்தன் நீலகண்டன் ஹாலிவுட் திரைப்படங்களில் அறிவியல், மூடநம்பிக்கை குறித்து எழுதும் புதிய தொடர் இது. இத்தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க : முதல் பகுதி | இரண்டாம் பகுதி | மூன்றாம் பகுதி

exorcist_poster1971 இல் வெளியான எக்ஸார்ஸிட் (Exorcist) நாவல் மூன்று வருடங்களில் திரைப்படமாக வெளியாகி சக்கை போடு போட்டது. நாவலிலும் சரி, திரைப்படத்திலும் சரி, பதின்ம வயதை நெருங்கும் பெண்ணுக்கு ஏற்படும் சில விபரீதங்களை, நவீன மருத்துவத்தாலும், உளவியல் ரீதியாகவும் விளக்க முடியாததால், இறுதியில் அப்பெண்ணின் தாய் ஒரு கத்தோலிக்கத் துறவியை நாடுகிறாள். இங்கு திரைப்படம் ஒரு முக்கிய வலையை விரிக்கிறது.

மனநிலை பிறழ்ந்த பெண்ணின் தாய் கணவனைப் பிரிந்து வாழும் நடிகை, மதத்தைக் குறித்த கவலையின்றி நவீன உலகில் வாழும் பெண். ஆண் துணையில்லாத பெண் தலைமை வீடு. தன் பெண்ணின் மனப்பிறழ்ச்சி (பாலியல் ரீதியாகவும், இறைநிந்தனையாகவும் அது வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது) குணமாக, அவள் தொடர்ந்து மதச்சார்பில்லாத மருத்துவத்தையும் உளவியலையுமே நம்பித் தோல்வியடைந்து கத்தோலிக்க நிறுவன மதத்தை நாடுகிறாள். பார்வையாளனை அந்தத் தாயின் மனநிலையில் இருத்தியே திரைப்படம் நகர்கிறது. திரைப்படத்தின் இறுதியில் பேயோட்டுபவராக வரும் கத்தோலிக்க சாமியார், ஆரம்பக் காட்சியில் சுமேரியாவில் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். அங்கே ஒரு பண்டைய சுமேரிய தெய்வத்தின் சிலை கிடைக்கிறது. அதனை உடனடியாகத் தன் எதிரி சைத்தானாக அந்த சாமியார் உணர்கிறார். இறுதியில் இங்கிலாந்தில் பேயோட்டியாக அவர் களமிறங்கும்போது இதே “கெட்ட ஆவியை” அவர் சந்திக்கிறார்.

இத்திரைப்படம் மேற்கின் சமூக உலகில் உருவாக்கிய அலைகள் விநோதமானவை. போப் பால் இதை வரவேற்றார். “தீமை” குறித்து போதுமான அளவு விவாதங்கள் அறிவுலகில் நடைபெறவில்லை எனக் கூறினார். கத்தோலிக்க சபைகளில் பேயோட்டுவதற்கான எண்ணிக்கை கணிசமாகக் கூடியது. மிகத்தீவிர அடிப்படைவாத புரோட்டஸ்டண்ட்கள், இந்த திரைப்படத்தில் பேய்கள் காட்டப்படுவதால் இத்திரைப்படத்தை பார்ப்பதன் மூலமாகவே கெட்ட ஆவிகள் பார்வையாளர்களில் புகுந்துவிட வாய்ப்புண்டு என இத்திரைப்படத்தை எதிர்த்தனர்.

exorcist003இத்திரைப்படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ‘இது பெயர்கள் மாற்றப்பட்ட, கதையாக்கப்பட்ட உண்மை சம்பவம்’ என மூலநாவலின் ஆசிரியர் வில்லியம் பிளேட்டி கூறியதுதான். 1949-இல் அமெரிக்காவில் மவுண்ட் ரெயினியர் என்ற இடத்தில் ஒரு சிறுவனுக்கு நடத்தப்பட்ட பேயோட்டும் கத்தோலிக்க சடங்கு குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வந்ததாகவும், மிகுந்த கஷ்டப்பட்டு அந்த கத்தோலிக்க சாமியாரைக் கண்டுபிடித்து தகவல்கள் சேகரித்து அதன் அடிப்படையில் இந்த நாவல் உருவாக்கப்பட்டதாகவும் பல இடங்களில் பிளேட்டி கூறினார். ஆனால் அதிசய அற்புத நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்யும் ஃபோர்ட்டியன் டைம்ஸ் எனும் பத்திரிகையின் நிருபர் இந்த ‘உண்மை’ கதையைத் தேடிப் போனபோது அந்தக் குறிப்பிட்ட வீட்டைக் கண்டுபிடித்தார். பேயோட்டும் சடங்கு நடந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் அந்த வீட்டில் பதின்ம வயது சிறுவன் இல்லை என்பது மட்டுமல்ல, அந்த வீட்டுக்காரர்களுக்கு குழந்தையே இருந்திருக்கவில்லை!

ஆனால் கெட்ட ஆவிகள் பிடித்தாட்டுவதும் பேயோட்டும் சடங்குகளும் மேற்கத்திய உலகில் மத்திய காலங்களுக்குப் பிறகு பெரிய கலாசார நிகழ்வாக மாற ஆரம்பித்தது. உளவியலாளர் ராபர்ட் பேக்கர் பெண்களுக்கு – குறிப்பாக கத்தோலிக்கத் துறவிகளுக்கு – பேய் பிடிப்பதென்பது பாலியல் விரக்திகள், தம்மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள் மீதான எதிர்ப்பு, பிடிக்காத வேலைகளிலிருந்து விடுபட விரும்புதல், பிறரது கவனத்தை தன்மீது ஈர்த்தல், பிராபல்யம் தேடல் போன்ற உந்துதல்களால் நிகழ்வதாக இருக்கும் எனக் கருதுகிறார். (17 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் ஒரு கன்னியாஸ்திரி மடாலயத்தில் நிகழ்ந்த புகழ்பெற்ற பேயோட்டுதல், அம்மடாலயத்தில் நடந்து கொண்டிருந்த பாலியல் சுரண்டல்களையும், கத்தோலிக்க சபைக்குள் நடந்துகொண்டிருந்த அதிகாரப் போட்டியையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அல்டஸ் ஹக்ஸிலியின் “லௌதூனின் பேய்கள்” எனும் நூலின் மூலம் இது பிரசித்தி பெற்றது.) இதே உந்துதல்கள் பதின்ம பருவத்தில் நுழையும் சிறார்களுக்கு அதிகமாக இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தின் மிக மோசமான விளைவுகள் அதிலிருந்துதான் தொடங்குகின்றன.

exorcism_of_emily_rose-posterஎக்ஸார்ஸிட்டுக்குப் பிறகு பல படங்கள் அதன் தொடர்ச்சி என வந்தாலும், உண்மையான அடுத்தப் பகுதி திரைப்படம் எமிலி ரோஸின் எக்ஸார்ஸிஸம் (பேயோட்டல்) என்கிற பெயரில் 2005-இல் வெளியானதுதான். எக்ஸார்ஸிஸ்ட் படத்தை விட இப்படம் ஒரு விதத்தில் முக்கியமானது. உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டதாக இது கூறப்படுகிறது. எமிலி ரோஸ் என்கிற கிராமப்புற கத்தோலிக்கப் பெண் நகரத்தில் பல்கலைக்கழகத்துக்குச் சென்று படிக்கப் போகிறாள். ஒரு நாள் அதிகாலையில் விடுதியில் அவள் தனியாக இருக்கும்போது அமானுஷ்ய சக்திகளால் தாக்கப்பட்டதாக உணர்கிறாள். தொடர்ந்து அவளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவளுக்கு வலிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலைமை மோசமாகவே கிராமவீட்டில் அவளுக்குப் பேய் ஓட்ட ஏற்பாடு செய்கிறார்கள். கத்தோலிக்க பாதிரியார் ரிச்சர்ட் மூர் என்பவர் ரோம கத்தோலிக்க பேயோட்டும் சடங்குகளைச் செய்கிறார். ஆனால் எமிலி ரோஸ் இறந்துவிடுகிறாள்.

இந்நிலையில் பாதிரியார் மீது அவரது அலட்சியத்தால் எமிலியின் மரணத்துக்குக் காரணமானதாக அரசு குற்றம் சாட்டுகிறது. பாதிரியாருக்காக இறைநம்பிக்கை இல்லாத எரின் ப்ரூனர் என்கிற பெண் வக்கீலும், பாதிரியாருக்கு எதிராக அரசுத் தரப்பில் கத்தோலிக்கரான ஈதன் தாமஸும் வாதாடுகிறார்கள். திகிலூட்டும் காட்சிகள் சாட்சிகளின் நினைவுகளூடே விரிகின்றன. எமிலிக்கு கிடைத்த அமானுஷ்ய அனுபவம், அவள் பட்ட வேதனைகள், அவள் பார்த்த அனைவரும் சாத்தானின் வடிவங்களாக அவள் கண்ட காட்சி என அவை காட்டப்படுகின்றன. இறுதியாக அவளுக்கு அன்னை மேரியின் தரிசனம் கிடைக்கிறது. துயரத்திலிருந்து அவளை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவள் துன்பப்படுவதன் மூலம் இறைவனின் புகழ் பரவும் எனவும் மேரி அவளிடம் சொல்வதாக எமிலி காண்கிறாள்.

எமிலி துன்பத்தைத் தேர்ந்தெடுக்கிறாள். அவள் உள்ளங்கைகளில் காயம் ஏற்படுகிறது. அது ஸ்டிக்மாட்டா எனும் ஏசுவின் புனிதக் காயத்தின் அமானுட வெளிப்பாடு என அவளும் பாதிரியாரும் கருதுகின்றனர். வழக்கு விசாரணையில் ஈதன் தாமஸ் அது அமானுஷ்யமாக ஏற்பட்டதல்ல, மனநிலை பாதிக்கப்பட்ட எமிலி இரும்பு வேலியை கையால் இறுக்கி ஏற்படுத்திக்கொண்டது எனக் கூறுகிறார். இறுதியில் எமிலி ஒரு புண்ணிய ஆத்மாவாக கடவுளுக்காகக் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு மரித்ததாக பாதிரியார் கூறுகிறார். பாதிரியார் அலட்சியம் காட்டவில்லை, மாறாக அவள் மீது அன்பே காட்டினார் என்பது ப்ரூனரின் வாதம்.

ப்ரூனருக்கும் சில விபரீத அனுபவங்கள் ஏற்படுகின்றன. பாதிரியாருக்கு ஆதரவான ஒரு முக்கிய சாட்சி விபத்தில் இறந்துவிடுகிறார். இறுதியில் பாதிரியாருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அவர் காவலில் வைக்கப்பட்ட காலத்தை கணக்கில் கொண்டு தண்டனைக்காலம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது. ப்ரூனர் அவள் பலகாலம் எதிர்பார்த்தபடி, தான் வேலை செய்யும் சட்ட மையத்தில் பங்குதாரராக ஏற்கப்படுகிறார். ஆனால் அவள் அதனை மறுத்துவிடுகிறாள். பாதிரியாரும் அவருக்காக வாதாடிய வக்கீலும் எமிலியின் கல்லறையில் சந்திக்கிறார்கள். இவை அனைத்தும் உண்மை எனவும் இன்று எமிலியின் கல்லறை ஒரு புனிதத்தலமாக கத்தோலிக்கர்களால் கருதப்படுகிறது எனக் கூறும் வார்த்தைகளுடன் படம் முடிவடைகிறது. இருபக்கமும் சாராமல் இருபக்க நியாயங்களையும் வாதங்களையும் கூறி எடுக்கப்பட்டதாக கூறினாலும் கூட இத்திரைப்படம் எந்த பக்கம் சார்ந்திருக்கிறது என்பது தெளிவாக வெளிப்படுகிறது.

இனி இத்திரைப்படத்தின் பின்னாலிருக்கும் உண்மை நிகழ்வைக் காணலாம்.

the_exorcism_of_emily_roseஜுலை 1 1976 இல் ஒரு ஜெர்மானிய கிராமத்தில் இறந்த அனலீஸ் மிக்கேல்தான் திரையின் எமிலி ரோஸ். மிகுந்த கட்டுப்பாடும் தீவிர மத வைராக்கியமும் கொண்ட கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்த இப்பெண், பதினாறு வயது முதல் மனநிலை சரியில்லாமல் மீண்டும் மீண்டும் அவதிப்பட்டு வந்தாள். 1973-இல் எர்ன்ஸ்ட் அல்ட் என்கிற பாதிரியார் இப்பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கலாம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேயோட்டும் சடங்கு நடத்தப்பட்டது. கிபி 1614 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சடங்கு விதிமுறைகளின் (Rituale Romanum) அடிப்படையில் நடத்தப்பட்ட பேயோட்டல்கள், 1975 இலிருந்து ஆறு மாதத்தில் 67 முறை இந்த பெண்ணுக்கு நடத்தப்பட்டன. (படத்தில் ஒரேமுறைதான் பேயோட்டும் சடங்கு நடத்தப்பட்டதாகக் காட்டப்படுகிறது.) முக்கியமாக கால் முட்டிக்கள் தரையில் இழுத்துச் சிராய்த்து, மண்டியிட்டு விழுந்து பாவங்களுக்கு பிராயசித்தம் செய்யும் சடங்குகளை அவள் மீண்டும் மீண்டும் செய்திருந்தாள். அவள் இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவள் மூட்டெலும்புகளின் இணைப்புகள் சிதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இறுதிக்கால கட்டத்தில் இந்த சடங்கினைச் செய்ய அவள் பெற்றோர்கள் உதவினார்கள். 67 முறை செய்யப்பட்ட இந்த சடங்குகளில் 42 பேயோட்டல்கள் டேப் ரெக்கார்டர்களில் பதிவு செய்யப்பட்டன. இந்த சடங்குகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் “ஏசுவின்/கடவுளின் பெயரால் கட்டளையிடுகிறேன். அசுத்த ஆவியே இந்த உடலை விட்டு விலகு” என்பது போன்ற வசனங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு தான் உண்மையிலேயே அசுத்த ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கிறது.

எக்ஸார்ஸிஸ்ட் திரைப்படத்துக்கும், இப்பெண்ணின் மனப்பிறழ்வுக்கும் பல இணைகள் காணப்படுகின்றன. இத்திரைப்படத்தில் அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பெண் குழந்தையின் மாறிய குரல் பேச்சினைப் போலவே, அனலீஸின் ‘அசுத்த ஆவி’யின் குரல் பேயோட்டும் சடங்கில் அமைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ அனலீஸ் இத்திரைப்படத்தினால் ஆழ்-மன தாக்கம் அடைந்திருக்கலாம். எக்ஸார்ஸிஸ்ட் திரைப்படத்தில் புனித நீர் தெளிக்கப்படும் போது கத்தி போல அச்சிறுபெண்ணின் காலை வெட்டி காயங்களை ஏற்படுத்தும். நிஜ வாழ்வில் அனலீஸின் கால்களே மிக மோசமாக சிதைக்கப்பட்டிருந்தன. அனைத்திற்கும் மேலாக எக்ஸார்ஸிஸ்ட் படத்தில் மிக நுட்பமாகப் பேய் பிடித்த பெண்ணின் தாயார் கணவனிடமிருந்து விலகியிருப்பதால் அந்த குடும்பச் சூழலும் தீய ஆவி நுழைந்துவிட ஏதுவாகிவிட்டதாகக் காட்டப்படுகிறது. தாயாரின் மண ஒழுக்கச் சீர்கேடு, குழந்தையைத் தீய ஆவி தீண்டுவதற்கான இலகுவான சூழலை உருவாக்கும் எனும் பதிவு அனலீஸுக்கு பெரும் ஆழ்மன கலக்கங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஏனெனில் அவளது அன்னை திருமணத்துக்கு முன்னர் குழந்தை பெற்றுக்கொண்டதற்காக சர்ச்சால் அவரது திருமண நாளன்று கறுப்பு கவுன் அணியுமாறு வற்புறுத்தப்பட்டவர். இவ்வாறு திருமண பந்தத்துக்கு அப்பால் பிறந்த பெண் -அனலீஸின் சகோதரி- சிறிய வயதில் இறந்தது தனது பாவத்துக்கான இறைத்தண்டனை என அனலீஸின் அன்னை நம்பினார்.

அனலீஸ் இறந்த பிறகு, பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில் அலட்சியத்தாலும், மதப்பிடிப்பாலும் அவளது மரணத்துக்குக் காரணமாக, அனலீஸின் தாய், தந்தை மற்றும் ‘பேயோட்டிய’ இருபாதிரிகள் என நான்கு நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. கத்தோலிக்க சபை தனது பாதிரிகளுக்காக நியமித்த எரிக் சிம்க்ட் என்ற வழக்கறிஞர், நாஸி போர்க்குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியவர். ஜெர்மானிய சட்டப்படி ரோமானிய பேயோட்டும் சடங்கு செல்லும் என அவர் வாதாடினார். இறுதியில் ‘அலட்சியத்தால் மரணம் சம்பவிக்க காரணமானவர்கள்’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையும் மூன்று வருட நன்னடத்தை கண்காணிப்பும் பெற்றார்கள். இந்த மோசமான வரலாற்றைத்தான் ‘எக்ஸார்சிஸம்’ திரைப்படம், ஒரு புனிதத் தியாகமாகவும், சிறைப்படுத்தப்பட்ட பாதிரிகள் ஏதோ ஒருவிதத்தில் மதநம்பிக்கையற்ற சமூகத்தால் கொடுமைப்படுத்தப்படும் மதத்தியாகிகள் எனவும் திறமையாக சித்தரிக்கிறது.

பேயோட்டுதல் ஒரு ஷாமானிய (தொல்-பழமையான இறையாவேசி) சடங்கு. மனப்பிறழ்வுக்கான ஒரு மாற்று சிகிச்சை மட்டுமே. அதிலிருந்து நவீன உளவியல் நிச்சயமாக பல சிறப்பான உட்பார்வைகளை பெற முடியும். ஆனால் நிறுவன மதங்கள் அந்த உரையாடல் வெளியை அழித்து அவற்றை தம் இறையியலுக்குள் இழுத்து விடுகின்றன. கிறிஸ்தவ பேயோட்டும் சடங்கு இந்த செயல்பாட்டின் ஒரு உச்சக் கட்டம் எனலாம். மத்திய கால ஐரோப்பாவில் பேயோட்டும் சடங்குகள் அரசியல் தீர்வாகவும் பாலியல் வன்முறையை பிரயோகிக்க அனுமதிக்கப்பட்ட சித்திரவதை செயல்பாடாகவும் அமைந்தது.

ஆனால் இத்தகைய ஊடகச் சித்தரிப்புக்கள் மூலம், நவீன காலத்தின் அச்சங்களைப் பயன்படுத்தி, பேயோட்டும் சடங்குகள் சமூக நோயாகவே பரவ வாய்ப்பிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய வலுவான சித்தரிப்புக்கள் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணமாக சூனியக்கிழவிகள் என்கிற சித்தரிப்பு எந்த இந்திய செவ்விலக்கியத்திலோ அல்லது நாட்டார் இலக்கியத்திலோ கிடையாது. ஆனால் சமீபகாலங்களாக கிறிஸ்தவ இறையியல் கொண்டு செல்லப்படும் வனவாசி சமுதாயங்களில் “சூனியக்காரிகள் வேட்டை” (Witch hunt) ஒரு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு ஒருவர் கிறிஸ்தவராக மாற வேண்டியது இல்லை. இந்த இறையியலை உள்வாங்கிக் கொண்டாலே போதும். அது மிஷினரிகள் மூலமாகக் கூட நடக்கவேண்டியதில்லை. இத்தகைய பெரும் வெற்றி பெறும் ஹாலிவுட் திரைப்படங்களும், அதனைத் தொடர்ந்து அவற்றை பிரதியெடுக்கும் இந்திய திரைப்படங்களும் (உதாரணமாக ராம்கோபால் வர்மாவின் அமானுஷ்ய படம் ஒன்றில் தீய ஆவியை எழுப்புபவர் பெண் தாந்திரீகராக இருக்கிறார்) இந்த மனநிலையை ஏற்கனவே சமூக-பொருளாதார அழுத்தங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் கொண்டு சென்றால் – அதன் விளைவுகள் மத்திய கால ஐரோப்பாவை விடவும், இன்றைய அமெரிக்க கிறிஸ்தவ அடிப்படைவாத மனநிலையை விடவும் மோசமாக இருக்கும்.