வெட்டுப்புலி

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இன்றைய திருவள்ளூர் மாவட்டத்து நிஜமான ஒரு கதாநாயகனை மையப்படுத்திப் படைக்கப்பட்ட நூல் ‘வெட்டுப்புலி’. இந்திய வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் ஷெர்ஷா சூரி என்கிற ஆப்கானிய வீரன் கையாலேயே புலியை வீழ்த்தி அதனாலேயே, ‘ஷெஹர்’ என்கிற புலி வழங்கும் பெயரையும் ஆட்கொண்டவன். ஆள்பவன் என்கிற ‘ஷா’வையும் சேர்த்து ஷெர்ஷா என அவன் அழைக்கப்பட்டான். ஆனால் இந்தப் படைப்பில் நிஜமாகவே தன் கருக்கரிவாளால், நேர்கொண்ட சிறுத்தையை வெட்டி வீழ்த்திய வீரனை சின்னா ரெட்டி என்ற சொந்தப் பெயராலேயே சனங்கள் வழங்கினர். வேறு அடைமொழி எதுவும் தரவில்லை. இன்றுள்ள நகரச்சுவர்களை நாறடிக்கும் சுவரொட்டிகளில் படையே நடத்தாமல் தளபதிகளும், பாதுகாப்பு வீரர்களுடன் உயிருக்கு பயந்து பயணம் செய்கிற மாவீரர்களும், மிரட்சியோடு எதையும் பார்க்கிற அஞ்சாநெஞ்சர்களும் இடம்பெறுவதைப் பார்க்கிறோம்.

சென்னை நகரமும், நகரம் சார்ந்து வளர்ந்துவரும் புறநகரமும் நாற்பதாண்டுகள் அளவில் பரிச்சயப்பட்டவர்களுக்கு இதன் களம் நன்கு உள்வாங்கப்பட்டு உணர்ந்து கொண்டாடப்படும். புதிதாய் இந்தக் களத்தைப் புரிந்து கொள்வது, அன்றைய பிரதேசங்களின் அழகைக்கொன்று வளர்ந்துநிற்கும் இன்றைய கான்கிரீட் கட்டடங்களின்மீது இனம்புரியா வெறுப்பை உருவாக்கும்.

சின்ன வயதில் கோலி, பம்பரம், தீப்பெட்டிமேல் ஒட்டும் வண்ணப்படங்கள், பழைய கில்லி-தண்டு, தேய்ந்துபோன கிரிக்கெட் மட்டை, மூன்று சக்கர சைக்கிள், டயர் ஓட்டிப்போதல், அக்காவின் வளையலை உடைத்து முப்பட்டைக் கண்ணாடிக்குள் போட்டுச் செய்த கலைடாஸ்கோப்… இப்படி என் ஏராளமான இளவயது விளையாட்டுப் பொருட்களை, அம்மா எதோ தேடச் சொன்னபோது பரணில் இருந்து மூட்டைபிரித்துப் பார்த்தாப் போல ஒரு நெருக்க உணர்வை இந்த நாவல் எனக்கு அளித்தது.

இந்த நூலில் நிகழும் சம்பவங்களின் இடங்கள் நான் கால்புழுதிபட சுற்றித் திரிந்தவை. பருவ வயதில் உடல் வலிமை பெற உடும்பு பிடித்துத் தின்னப் போனதெல்லாம் நினைவுமேல் வந்தது. நானும் நண்பன் பாச்சியும் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி எல்லாம் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் சென்று சத்தியவேடு காட்டை அடைவோம். உடும்பு தான் கவ்வியது தன் வால் என்றே உணராது. அதனால் உடும்பை வட்டமாகச் சுருட்டி அதன் வாலை அதன் வாய்க்குக்ளேயே திணித்து கொடிநாரால் கட்டி எடுத்துக் கொள்வோம். கூச்சமில்லாமல் சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக வருவோம். வரும் வழியில் பூண்டி ஏரி, பொன்னேரி அல்லது சோழாவரத்தில் வெயிலுக்கு இதமாக சுகமான குளியல். மூலக்கொத்தளத்து நரிககுறவன் வாகாக தலையை வெட்டி தோலைப் பிரித்து கறியை வெட்டித் தருவான். அதை இரும்பு உலக்கையில் பஞ்சுபோல் மென்மையாக இடிப்போம். பிறகு சமையல்! வீட்டுக்குத் தெரிந்தால் கொன்றுவிடுவார்கள். ஒவ்வொருத்தன் வீட்டிலிருந்தும் ஆளக்கொரு சாமான் கொண்டு வரவேண்டும். எண்ணெய். கடாய். கரண்டி. பூண்டு. வெங்காயம். சமையல் தெருவே மணக்கும். தெருப்போக்கிரியாக வலம்வந்த சின்னத்தம்பி நாயக்கர் எங்கள் ரகசியச் சமையலைப் பார்த்துவிட்டு வந்து மிரட்டுவார். அவருக்கும் பங்கு தர வேண்டியிருக்கும்.

”நல்ல ருசியா இருக்குடா, சுறா புட்டு மாறி… எங்கடா புட்சீங்க?”

”சத்யவேட்டுல…”

சீட்டா வெட்டுப்புலி ஊர்ப்பக்கமா போனீங்க?”

”ஆமா. அங்க நெசம்மாவே புலி இருந்திச்சா நைனா?”

”அதெல்லாங் காடுடா. நரி, பாம்பு, புலி எல்லாங் கெடக்கும். அப்டிதான் ஒரு பொதர்லேர்ந்து சீட்டாப்புலி வந்திச்சுதாங்காட்டியும் ஒரு ஆளு அதை வெட்டுனாரு… அதத்தான் தீப்பெட்டி படத்துல போட்டாங்க…”

முப்பதாண்டுக்கு முன்பு நைனா பேச்சுவாக்கில் சொன்ன தகவல். தமிழ்மகன்அந்தக் களத்துக்கே சென்று விசாரித்து உயிர்ப்போடு அதைப் படைத்துள்ளார்.

இன்றுள்ள அரசியல் போக்கில் திராவிட இயக்கங்கள் புரிந்துள்ள தாக்கம் மகத்தானது. தீண்டாமை நானறிந்தவரை நகருக்குள்ளும் நிலவியது. சோற்றுப்பஞ்ச காலத்தில் பெருகிய டீக்கடைகளில் கூட தாழ்ந்த சாதியினர் தனியே பித்தளை டீகுவளைகளைக் கொண்டுபோய் டீ வாங்கி அருந்துவார்கள். இந்த நிலையில் பொதுக்கூட்டம் என்றும், போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும் களைகட்டிய திராவிட இயக்க அரசியல் களம் தீண்டாமையை ஓரளவு விரட்டியது. இதில்வரும் இலட்சமணனின் குதிரையேற்றம்,, சக மனிதர்களாய் மற்றவரை பாவித்து, கூடமாட மண் சுமந்து ஒத்தாசை செய்வது, ஒடுக்கப்பட்ட குணவதிமீது அவன் கொண்ட காதல் ஊருக்குத் தெரிந்து, அந்த இனமே விரட்டியடிக்கப் படும்போது அவர்களைத் தானே தேடிப்போகும் இலட்சுமணன், பின்னர் வீடு திரும்புவது. வீட்டார் பேச்சை மதித்து, சொந்த இனத்தில் திருமணம் புரிவது, தானே சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு உயர்ந்தபோது, நீதிக்கட்சி, பெரியார் மீதான மரியாதை என வளர்ந்து, தன் வாரிசுக்கு ஜாதிவிட்டு ஜாதியில் திருமணம் செய்ய முயற்சிப்பது… இலட்சுமணன் என்கிற தனி நபரின் உள்ளே ஏற்பட்ட முற்போக்கு ரசவாதத்தால், தான் மாறி, ஊரையும் மாற்றி உடன்பட வைக்கும் செயல்கள் அனைத்துமூ திராவிட இயக்கத்தின் தாக்கம் அன்றி வேறென்ன?

இன்றைக்கு ரெண்டு படத்தில் தலைகாட்டி விட்டால் தான் ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. என நினைக்கிறான் நடிகன். அவனுக்குள் இந்தத் துணிச்சல் உருவாக என்ன காரணம்? பெரியாரின் சுயமரியாதைக் கட்சியில் அவருக்குக் கீழ் இருந்தவர்கள் பதவியாசை இல்லாத நிலையில் நாட்டிற்கு தியாகம் புரிந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வந்தனர். பொது மக்களுக்கு பயந்தனர். சு.ம. கட்சியில் உழைப்புக்கு இலாபம் இல்லை என்பதால், முதன்முதலாக பதவியில் இருந்த நீதிக்கட்சியையும் உள்ளிழுத்தனர். பெரியார் அமைதி காத்தார். மெல்ல மெல்ல அவரையும் தேர்தலில் போடடியிடும் அமைப்பாக கட்சியையே மாற்றிவிடுவார்களோ என அச்சம் ஏற்பட்டபோது சிலர் விலகினர். தி.மு.க. பிறந்தது.

இன்றைய சமூகத்தில் நிலவும் சர்வரோகங்களுக்கும் காரணமானதாக விவரமறிந்தோர் சினிமாவைக் கூறுவார்கள். அது, இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை சென்றுவிட்டது.

பலநாட்கள் தயாரித்த, ஆய்வுசெய்த அறிக்கைகளை அன்று மக்கள் முன்பு கொள்கைவிளக்கமாகக் கூட்டங்களில் பேசுவார்கள். மக்களைக் கூட்டம்சேர்க்கும் கழைக்கூத்தாடி டமடமவென்று தொடக்க மேளச்சத்தம் எழுப்புவதுபோல, கலைநிகழ்ச்சி போர்வையில் அரிதாரம் பூசியவர்கள் பின்னர் அரங்கேறலாயினர். நாளடைவில் இவர்கள் இருந்தால்தான் கொள்கையே பேசமுடியும் என்கிற அளவுக்கு மேடைகள் தலைகீழாயின. ஏனென்றால் தேசத்தொண்டு, தியாகம் புரிந்திருந்தால் அதைமதித்து கூட்டம் சேரும். ஒன்றுமில்லாத நிலையில் கூட்டம் சேர்க்க கலையுலகம் கைகொடுத்தது. இதை ‘வெட்டுப்புலி’ அழகாய்ப் பதிவு செய்திருக்கிறது.

தியாகராயநகர் சிவா விஷ்ணு கோவில் பூக்காரி ”ஐய்யரே, சும்மா இருக்க மாட்டியா நீ? எவங் காதுலயாவது விழுந்தா ரெண்டாப் பொளந்துருவான். ராமன் ஆண்டா இன்னா? ராவணன் ஆண்டா இன்னா? யார் ஆண்டாலும் நீ நாலு தர்ப்பைக் கட்டைவித்துத்தான் பொழைக்கணும். நான் நாலுமுழம் பூ வித்துத்தான் பொழைக்கணும்” எனும்போது இன்றைய சமூகத்தின் நிலையைப் புரிந்துகொள்ள வெட்டுப்புலி உதவுகிறது.

பிராம்மணர்கள் மீதான தாக்குதல் அன்று எவ்வாறெல்லாம் நடந்தது, என்கிற பதிவு இதில் காணக் கிடைக்கிறது. கூடவே எண்பதுகளுக்குப் பின்னால் என்ற பகுதியில் கிருஷ்ணப்ரியாவும் நடராஜனும் ஊரே அல்லோலகல்லோலப் படும்போது கன்னிமரா நூலகப் படிக்கட்டில் உலக விஷயம் பேசியபடி இருந்த நிலையில் போலிசார் நெருங்கி வந்து ”லவ்வா?” என்று கேட்க, கிருஷ்ணப்ரியா ”அப்டில்லாம் இல்ல சார். இது எங்க மாமா பையன், ஒண்ணாத்தான் படிக்கிறோம்” எனும்போதும், ”இவர் என்கூடப் படிக்கிறவர். தொணைக்கு வந்திருக்கார்” என்று தந்தையிடம் அறிமுகம் செய்யும்போதும், இத்தனைகாலம் பிராம்மணன், அப்பிராம்மணன் என்ற பேதத்தின் மேல் எழுப்பப்பட்ட எல்லாம் சிதறுகிறது.

நவீன உலகம்தான் ஆனாலும் ஒவ்வொருவர் உள்ளத்துள்ளேயும் சாதியம், சங்கம் இருந்தாலும், அதையும் தாண்டி சமூகத்திற்காகவே சிந்தித்த பெரியாரை ”ஐ லைக் பெரியார் யூ. நோ, புரோக்ரசிவ் மேன், அவர் இறந்து இத்தனை வருஷமாகியும் அவரை நம்மால பீட் பண்ண முடியலியே. எங்களைத் திட்டறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு. இப்ப இருந்திருந்தாருன்னா எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு. உங்களைத்தான் திட்டியிருப்பாரு” எனும்போது இன்றைய தலைமுறை எந்தளவுக்கு ஒவ்வொன்றையும் உள்வாங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி பிரபாஷ் உலக மனிதனாக, பார்வயாளனாகப் பேசுவது அருமை. பிரபாஷ் என்ற பிராம்மணன் பெரியாரின் உழைப்பை, ஆழமான சமூக சிந்தனையை, ”சாமிய வெச்சிப் பிழைப்பு நடத்தறவன் வேணுன்னா பெரியாரைத் திட்டுவான். யோசிச்சிப் பார்த்தா வெரி பிரில்லியண்ட்” என்று பாராட்டுகிறான்.

வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்ப விவரிக்கப்படுகிறது என்பது உகண்மைதான். ஆனாலும் நாவல் என்ற கோட்பாட்டுக்குள் நிஜமாய் நடந்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு சொல்வது சிரமம். தமிழ்மகன் லாவகமாகச் செய்திருக்கிறார்.

கடந்தகால எச்சங்களில் நிலவிய மங்கலானவற்றை வரும் தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கடமையைப் படைப்பாளியாக நிறைவேற்றியிருக்கிறார் தமிழ்மகன்.

சாதாரண சின்ன தீப்பெட்டியில் அச்சிடப்பட்ட படம், அதைச்சுற்றி நடந்த, நடந்துவரும் கால நிகழ்வுகள், அதை ஊடாடி எழும் பிரச்னைகள் என நாவல் தொட்டுச் செல்கிறது. இதை நாவல் என்பதைவிட பிரபலமான பத்திரிகையின் பைன்ட் செய்த ஒரு நூறாண்டிதழ்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.

சின்னா ரெட்டியின் கைக்கத்தி வெட்டுப்புலியின் தலையில் ஆழமாக இறங்கி, கத்தியோடு அது உருமிச் சென்றதாகப் பதிவு செய்துள்ளார்.

”பெரியாரின் பெரும் உழைப்பில் குத்தூசி குருசாமி அவர்களின் பங்களிப்பை, இன்றைய திராவிட இயக்கத்தவர்கள் ஏனோ அவ்வளவாகப் பதிவு செய்வதில்லை. தமிழ் எழுத்து சீர்திருத்தத்தில் அவர் பங்கு மகத்தானது. தமிழ்மகனின் இந்த நாவலிலும் அவரைப் பதிவு செய்யவில்லை.