முதலாளித்துவத்தின் மூலம் வறுமையை ஒழிக்க நினைத்த இந்திய மனம்

உலகில் வறுமைக் கோட்டிற்கும் கீழே ஏறக்குறைய 5 பில்லியன் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோருக்கு ஒரு நாளுக்கு 50 ரூபாய் தான் வருமானம். இதை ஒரு புள்ளி விவரமாகப் பார்க்காமல் வணிக நோக்கில் பார்த்தால் உலகின் மூன்றில் இரண்டு பங்குச் சந்தை அது, சமுக நோக்கில் பார்த்தால் மேம்படுத்தப்பட வேண்டிய சமூகம் உலகில் அத்தனை பெரிது. பணக்காரர்களைப் போலவே ஏழைகளுக்கும் தேவைகள் இருக்கின்றன. சுத்தமான ஆடை, சுகாதாரமான உணவு, தரமான கல்வி, சுகாதாரமான வசிப்பிடம் என பணக்காரர்களுக்கும், மத்தியதர மக்களுக்கும் உள்ள அனைத்து தேவைகளும் ஏழைகளுக்கும் உண்டு. ஆனால் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவர்களுக்கு வசதியும் கிடையாது, அவர்களுக்கான பண்டங்களையும் சேவைகளையும் வேண்டுமளவில் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களும் உலகில் குறைவு. பெரும்பாலும் வாங்கும் சக்தி அதிகம் கொண்ட மக்களை மனதில் வைத்தே பன்னாட்டு நிறுவனங்களும், பெரிய நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை வடிவமைக்கின்றன, வடிவமைத்தன. இப்போது இந்த நிலை மெல்ல மாறி வருகிறது.  அதெப்படி நேர்ந்தது, காரணமாக இருந்தவர்களில் முக்கியமான ஒருவர் யார் என்பதைப் பார்ப்போம்.

இந்த 5 பில்லியன் மக்கள் நலமாக வாழ உலகம் என்ன செய்யலாம் – தொடர்ந்து உதவிகள் செய்து கொண்டே இருக்கலாமா? அவர்களைப் பார்க்கும் இடத்தில் எல்லாம் தர்மம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றலாமா?  இப்படி யோசித்தால், செய்யலாம்தான். தப்பில்லை. ஆனால் இந்தக் கருத்துகளில் ஏதும் புதிதா, இவை முன்னால் யாராலும் எந்த சமூகத்தாலும் மேற்கொள்ளப்படவில்லையா?  அவற்றுக்கு என்ன விளைவு இருந்தது?

உலகம் தோன்றிய நாளிலிருந்து இத்தகைய நடவடிக்கைகள், கருத்துகள் ஆங்காங்கே  சிறுசிறு பகுதிகளில் நல்ல விளைவை தோற்றுவித்தாலும், அத்தகைய ஈகை நிலையான நீண்டகாலத் தீர்வுகளைக் கொணரவில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் வேகமாக வளர்ந்துதான் வருகின்றனர். இந்தப் பெருக்கம், எந்தத் தேசத்தின் வளர்ச்சிக்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டையாகவே இருக்கும்.  முட்டுக்கட்டைகளாக ஆகாமல், ஆக விடாமல்,  இவர்களையும் தேச வளர்ச்சியில் எப்படி ஈடுபடுத்திக் கொள்வது?   இந்த வடிவில் மிக எளியதாகத் தோன்றுகிற இக்கேள்வி, பதில் தேடுகையில் மிகவும் சிக்கலானதாகவே தெரிகிறது.  இதற்கு விடை தேடுவது எளிதென்றால் உலகில் எத்தனையோ நாடுகள் அந்த நிலையை அடைந்திருக்குமே? ஆனால் அப்படி வறுமையை ஒழித்த நாடுகள் உலகில் மிகக் குறைவாகத்தானே உள்ளன.  நாளாக ஆக, முன்பு வளமான நாடுகள், வறுமையை ஒழித்தவை என்று அறியப்பட்டவை கூட வறுமைச் சிக்கலை எதிர் நோக்கவேண்டிய நிலை இன்று எழுந்திருக்கிறதே?

சி.கே.ப்ரஹலாத்தின் சிந்தனை இந்த கடினமான கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றது. புதிய கண்டுபிடுப்புகள் மற்றும் உருவாக்கங்களைக் கொண்டு 5 பில்லியன் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை உலகத்தின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக மாற்ற முடியும் என்ற கருத்தை முன்வைத்தார்.

ஆனால் பெரும்பாலும் ஏழைகளுக்கான இந்தத தேவைகளைப் பூர்த்தி செய்வது யார்? அரசாங்கமோ, பொது நல அமைப்புகளோதானே.  இப்படி அரசாங்கமோ பொதுநல அமைப்புகளோ தரும் சேவைகளும் பண்டங்களும் எவ்வளவு பேரைச் சென்றடைந்து விடுகின்றன? பல்வேறு அரசியல், சமுக, பொருளாதார காரணங்களால் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கான நலத் திட்டங்கள் அவர்களுக்கு வேண்டுமளவில் சென்று சேர்வதில்லை. இந்த இடத்தில் இருக்கும் இடர்ப்பாட்டில்தான் ஏழைகளுக்கான  பண்டங்களை, சேவைகளை வழங்கக் கூடிய வாய்ப்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கோ அல்லது பன்னாட்டு நிறுவனத்திற்கோ எழுகிறது என்பது திரு. ப்ரஹ்லாத்தின் கருத்து.

இந்த எளிய ஆனால் சிறப்பான ஒரு  கருத்து, முதல்முறையாகக் கோர்வையாக அவரால் எடுத்துரைக்கப்பட்டபோது, பொதுவாக உலகெங்கும்  இதற்கு வரவேற்பு ஏதும் கிட்டவில்லை.

காரணம், தனியார் நிறுவனமோ பன்னாட்டு நிறுவனமோ சமுக சேவை செய்வதற்காக உருவாவதில்லை. அவற்றின் குறிக்கோள் லாபகரமான வியாபாரம், எனப் பொதுவாக வாதம் எழுந்தது. ஆனால் பிரஹலாத் முன்வைத்ததோ சமுக சேவை செய்வது எப்படி என்ற சிந்தனையை அல்ல, மாறாக வறுமையை, லாபகரமான வியாபாரம் செய்வதன் மூலம் எப்படி ஒழிப்பது என்பது தான். வறுமையை ஒரு தடையாக மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது அதுவே ஒரு திறப்பு, மூடிய கதவல்ல, அதை ஒழிக்கச் செய்யும் முயற்சிகளாலேயே ஒரு வெற்றி தரும் வணிகச் சூழலைக் கொணர முடியும் என்று அவர் சுட்டினார்.

அவர் உலத்தின் வியாபாரிகளுக்கு அது வரை யாரும் கவனிக்காது விட்டிருந்த ஒரு சந்தையை இனம் காட்டினார். அந்த சந்தைக்கு, சேவைகளையும் பண்டங்களையும் எப்படி லாபகரமாகத் தயார் செய்து விநியோகம் செய்யலாம் என்று விளக்கினார். வாங்கும் சக்தி அற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்ட ஒரு பெரிய மக்கள் கூட்டமே கூட வாங்கும் வகையில் சேவைகளையும் பண்டங்களையும் உற்பத்தி செய்வதன் மூலமும், அப்படி ஒரு உற்பத்தி முறையில் பங்கெடுக்க வைத்து அவர்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதன் மூலமும் இந்த இலக்கை அடைய முடியும் என்று தன் தொடர்ந்த ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துக் காட்டினார். ஆனால் அதற்கு முன் அந்த 5 பில்லியன் மக்களையும் நுகர்வோராகப் பாவிக்கும் மனப்பாங்கு தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படவேண்டியது அவசியம். அந்த மனமாற்றத்திற்கான அவசியம் ஆரம்பத்தில் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டாலும், மிகச் சீக்கிரமாகவே பன்னாட்டு நிறுவனங்கள் அந்த 5 பில்லியன் மக்களுக்குச் (பிரஹலாத் பாஷையில் Bottom of the Pyramid – BOP) சேவைகளையும், பண்டங்களையும் எடுத்துச் செல்வதன் அவசியத்தையும் அதில் இருக்கும் ஆதாயத்தையும் புரிந்து கொண்டார்கள்.

ஆனால் சிக்கல் என்னவென்றால், இந்த அடித்தள மக்களின் தேவைகளை எப்படித் தீர்த்து வைப்பது? அவர்களுக்குத் தேவையான பொருட்களின் விலை அவர்களால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் போது. அவர்களை நுகர்வோர்களாக மாற்ற வேண்டும்!! ஆனால் அவர்களை நுகர்வோர்களாக எப்படி மாற்றுவது? இரண்டு விதமாக அதைச் செய்யலாம். ஒரு விதம் – மலிவு விலையில் பொருட்களையும் பண்டங்களையும் உருவாக்குவது. அப்படி உருவாக்கினால் தரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். ஏன் செய்து கொள்ளக் கூடாது ? காசிற்கு ஏற்பத்தானே தோசையின் அளவும் இருக்கும்! அப்படித்தான் இம்மக்களை ஆரம்ப காலத்தில் அணுகியவர்கள் நினைத்தார்கள். அவர்கள் எடுத்துச் சென்ற பொருட்களும் பண்டங்களும் ஆரம்ப கால வெற்றிகளைப் பெற்றாலும் நாளாவட்டத்தில் சந்தையில் தங்கள் இடத்தை நிலை நாட்ட  முடியவில்லை.

இந்தியாவிலிருந்தே சில உதாரணங்களைக் காட்ட முடியும். இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ’சர்ஃப்’ என்னும் சலவைத்தூளைக் கொண்டு சலவைக்கான சந்தையில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது இப்போது இருக்கும் குறைந்த அளவு பாக்கெட்டுகளோ, வருமானம் கம்மியாக இருக்கும் சந்தைக்கான பண்டங்களையோ தயாரிக்கவில்லை. சர்ஃப் பிரபலமாக இருந்த போதும் பெருவாரி மக்களால் அதை வாங்கிப் ப்யன்படுத்த முடியவில்லை.  மத்தியவர்க்கத்திலேயே கூட நடுவில் இருந்தவர்களே இதை வாங்க முடிந்தது.  அகில இந்திய அளவில் பெரியது போல இருந்த இந்தச் சந்தை, உண்மையில் ஒவ்வொரு பகுதியிலும் சிறிய வட்டமாகவே இருந்தது.  யுனிலீவர் இச்சந்தை போதும் என்று மெத்தனமாக இருந்தது.

இந்த நிலையை முற்றிலும் புரட்டிப்போட்டது ’நிர்மா’ சலவைத் தூளின் வருகை- இதன் இலக்கு அடித்தள மக்கள் சந்தை.  இது கொணர்ந்ததோ, விலை குறைந்த, எளிமையாகத் தோற்றம் தந்த பொட்டலங்களில் தரப்பட்ட சலவைத்தூள். சர்ஃப் கிலோ 15 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த போது, கிலோ ரூ 3.50க்கு என்று அதிரடியாகச் சந்தையில் நுழைந்தது நிர்மா. அதிகக் காரம் இருந்த காரணத்தால், துணிகள் ஓரளவிற்கு நன்றாகப் பளிச்சிடவே செய்தன. நிர்மா உடனே அள்ளிக்கொண்டது சந்தையை. சில காலம் நிர்மாவை யூனிலீவர் அலட்சியப்படுத்தினாலும், தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை. காரணம் சராசரித் தனி நபர் வருமானம் குறைந்ததாக இருந்த இந்தியாவின் சந்தை பெரியதாக இருந்ததால் அதை அலட்சியம் செய்த யூனிலீவருக்கு வருவாய் இழப்பும் அதிகமானது – அதனால் அந்த சந்தைக்கான பண்டத்தைத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் யூனிலீவருக்கு ஏற்பட்டது -வீல், சன்லைட் என்று அந்த சந்தைக்கான பண்டங்களைக் களமிறக்கியது. அந்த புதிய பண்டங்களின் மூலம் இழந்த சந்தையில் மீண்டும் ஒரு பகுதியை கைப்பற்றியது. யூனிலீவர் நிர்மாவிற்கு எதிராக தொடுத்த வியாபாரப் போர் தனிக்கதை (மார்க்கெட்டிங் கேஸ் ஸ்டடியாகக்கூட லலிதாஜீ விளம்பரங்களைப் பார்க்கலாம்.) ஆனால் இவற்றில் முக்கியமான விஷயம், குறைந்த வருமானம் கொண்ட வர்களின் சந்தையை இந்தப் போட்டி விழிக்கச் செய்தது. மேலும் இதில் இன்னொரு விஷயத்தை நீங்கள் கவனித்தால், ஒரு வேளை குறைந்த விலையில் ஸர்ஃபைக் காட்டிலும் அதிக தரத்திலான பண்டமாக நிர்மா இருந்திருந்தால் யூனிலீவர் வீல், சன்லைட் எல்லாம் எதுவும் செய்ய முடியாமல் கூட போய் இருக்கலாம் (பிற்காலத்தில் நிர்மாவும் தன் தரத்தை முடிந்தவரை உயர்த்திக் கொண்டது.) அந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் நிர்மா ஆதிக்கம் செலுத்தியது. குறைந்த வருமானம் உடைய மக்களின் சந்தை என்பதற்காக தரத்தில் எந்த விதமான குறைவையும் அந்த சந்தை ஒத்துக் கொள்வதில்லை. நிர்மா அந்த சந்தைக்கான மிகச்சிறந்த புதிய உருவாக்கம் என்பதை மறுக்க முடியாது.

இதே போல ’ரஃப் அண்ட் டஃப்’ (Ruf and Tuf) என்னும் ஒரு ஜீன்ஸ் அரவிந்த மில்ஸ் கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அவர்கள் லீவைஸ் நிறுவனம் தன் உலகப் புகழ் பெற்ற பிராண்ட் பெயரின் வலுவை முன்வைத்து, தன் ஜீன்ஸ்களுக்கு அதிக விலை வைத்து பெருநகர இந்திய இளைஞர்களைக் கூவி அழைத்தபோது, குறைந்த விலையில் ’ரஃப் அண்ட் டஃப்’ ஜீன்ஸை அறிமுகப்படுத்திய, அரவிந்த் ஆலையினர் செய்த புதுமை, அதை விநியோகித்த முறை. உள்ளூர் தையல்காரர்களைக் கொண்டே விநியோகித்தார்கள் – ஜீன்ஸ் தைக்கப்படுவதற்குத் தேவையான துணி, ஜிப், பட்டன்கள், பின்புறம் வரும் லேபில், தடி நூல் என அனைத்தையும் ஒரு பேக்காக விற்று உள்ளூர் தையல்காரர்களைக் கொண்டே தைத்து விநியோகிக்கவும் செய்தார்கள். பிற்காலத்தில் தொழில் கற்றுக் கொண்ட தையல்காரர்கள் டெனிம் துணியை மட்டும் வாங்கிவரச் சொல்லி ’ரஃப் அண்ட் டஃப்’ ஜீன்ஸைக் காட்டிலும் குறைந்த விலையில் ஜீன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டனர். பலூன் பேகி ஸ்டைலில் 17 ப்ளீட்ஸ் வைத்து ஜீன்ஸ் தயாரித்ததெல்லாம் ஒரு காலம்.

இதே போலத்தான் குமார் சட்டைகள் – 90களில் இவை மிகவும் பிரபலம். 25 முதல் 150 ரூபாய் வரையிலான சட்டைகள். அதிக தரமெல்லாம் எதிர்பார்க்க முடியாது. 10 முதல் 20 முறை வரை தோய்த்து போடலாம். அப்புறம் பெரும்பாலும் கிழிந்து விடும். சில சமயம் தையல் பிரிந்து தான் கடை பேக்கிங்கிலேயே இருக்கும். இவர்களும் உள்ளூர் தையல்காரர்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டுதான் இந்த விலையில் தந்தார்கள். இப்போது குமார் சட்டைகள் மார்க்கெட்டில் இல்லாததற்கு காரணம் தரக்குறைவு தான். குறைந்த வருமானம் உடைய சந்தையானாலும், நுழைவு எளிதாகக் கிட்டினாலும்,  நெடுநாளில் தரம் குறைந்தே இருந்தால் பொருள் எடுபடாது என்பது இன்னொரு உதாரணம் குமார் சட்டைகள்.

இரண்டாவது விதம் – நீண்ட காலத் தீர்வாக குறைந்த விலையில் தரமான பொருட்களை கொடுப்பது. ஆரம்பத் தோல்விக்குப் பின் இரண்டாம் விதம் தான் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியது என்று சில இந்திய நிறுவனங்கள் புரிந்து கொண்டனர். சந்தையை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகத் துவங்கினர். அடித்தளத்துச் சந்தை மற்ற சந்தைகளைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாக இருந்தது – அந்த சந்தைக்கு அதிக தரத்திலான, எளிதாகக் கிடைக்கும் படியான பொருட்கள், அதே நேரம் மலிவு விலையில் தொடர்ந்து கிடைக்க வேண்டும். நான் மேலே சொன்ன வாக்கியத்தில் நான்கு விஷயங்கள் இருக்கின்றன -அதிகத் தரம், எளிதாக, பரவலாகக் கிடைப்பது, மலிவு விலை, தடையின்றி தொடர்ந்து எங்கும் கிடைக்கவும் வேண்டும். இப்படி பட்ட பொருட்கள் இன்று கூட இந்த சந்தைக்கு கிடைப்பதில்லை. இவற்றை சாத்தியப்படுத்தப் புதிய உருவாக்கங்கள் தேவை – உற்பத்தி செய்யும் வகையில், விநியோகிக்கும் முறையில், விலை நிர்ணயிக்கும் முறையில், விற்பனை செய்யும் முறையில் என அனைத்து வகையிலும் நாம் புதிய உருவாக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும். கடைசியாக இவை அனைத்தும் செய்த உற்பத்தியாளருக்கும் கையில் தேவையான, அவருக்கும் திருப்தி தரும் அளவில் லாபம் நிற்க வேண்டும்.

இதை சாத்தியப்படுத்த அடித்தள மக்களை (BOP) மையமாகக் கொண்ட ஒரு வியாபாரச் சூழல் ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டியதன் அவசியத்தைப் பல இந்திய நிறுவனங்கள் உணர்ந்தன. அந்தச் சூழலில் BOPஇல் இருக்கும் மக்களையும் ஒரு முக்கிய அங்கத்தினராகச் சேர்த்துக் கொண்டு, அவர்களுக்கான தீர்வுகளை அவர்களைக் கொண்டே உருவாக்க வேண்டும் (Co-creation). இதைத் தான் இன்றைய தேதியில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்து கொண்டிருக்கின்றன. உலகில் இருக்கும் மூலை முடுக்குகள் எல்லாம் சந்தைகளாகப் பார்க்கப்படும் நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஆனால் அடி நிலை மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்காத வரை அவர்களை நுகர்வுக்குக் கொணர்தல் என்பது முடியாத காரியம். அவர்களின் வாங்கும் சக்தியை எப்படி அதிகரிப்பது? இதற்கு ஒரு பதில் – ஒரே நேரத்தில் அவர்களை உற்பத்தியாளர்களாகவும், சேவை வழங்குபவர்களாகவும், நுகர்வோர்களாகவும் மாற்ற வேண்டும். ஒரு தொழில் இயக்கத்திற்குள் அவர்களை ஈர்க்க வேண்டும். இந்தியா போன்ற இளமையான தேசத்தில் இந்த சவாலைச் சற்றே எளிதாக எதிர் கொண்டே விடலாம். ஆனால் விஷயம் மனித வளம் சார்ந்தது மட்டுமே அன்று – விஷயம் புதிய உருவாக்கம் சார்ந்தது, தொழில் நுட்பம் சார்ந்தது.

புதிய உருவாக்கம் என்பதை நாம் கருத்தில் கொள்வோம். புதிய உருவாக்கங்கள் ஏன் முக்கியமானவை? ஒரு வாதத்திற்காக திடிரென ஒரு சுபதினத்தின் காலையில் நாம் கணக்கில் கொள்ளும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் வாங்கும் சக்தி வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உலகத்தின் தோற்றமே தலை கீழாக அல்லவா மாறிப் போகும்? ஏறக்குறைய 5 பில்லியன் மக்கள் சந்தையில் நுழைந்திருப்பார்கள் – அவ்வளவு பேருக்கும் விற்கப் பண்டங்கள் எங்கிருந்து தயாரிப்பது ? சேவைகளை எப்படி அளிப்பது ? ஒரு முடி வெட்டும் கடையில் சனிக்கிழமை காலையில் அதிகமாக ஆட்கள் வந்தாலே திக்கு முக்காடிப் போகும் போது, தொழில் நுட்பச் சேவைகள், பொருளாதாரச் சேவைகள், மற்றும் பல வாழ்வாதாரச் சேவைகளை வழங்குவதில் ஏற்படும் தடைகளை நினைத்துப் பாருங்கள். அதனாலேயே ஒரு வியாபாரச் சூழலைத் தோற்றுவிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதாகிறது. அந்த சூழலைத் தோற்றுவிக்கும்போது அதிலிருக்கும் பலருக்கும் தொழிலில் தாமாக முனையும் சாத்தியங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் வாழ்வில் பொருளாதார மேம்பாட்டிற்கு வழி பிறக்கிறது. இப்படித் தொழில் முனைபவர்கள் விநியோகஸ்தர்களாகவோ, உற்பத்தியாளர்களாகவோ, இடைத் தரகர்களாகவோ, யாராக வேண்டுமானாலும் ஆகலாம்.

இந்தியாவிலிருந்து ஒரு உதாரணம் – ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் ’ப்ராஜெக்ட் சக்தி’. அவர்கள் அதிக வளர்ச்சியடையாத மிகச்சிறிய கிராமங்களிலும் தங்கள் பண்டங்கள் கிடைக்க அவற்றை நேரிடையாக மக்களிடம் விற்பதே சிறந்த வழி என்று கண்டு கொண்டனர். அதன்படி பல ”சக்தி அம்மா”க்களை உருவாக்கினார்கள் (சக்தி அம்மா என்றால் வேறு யாரும் இல்லை, கிராமப்புறத்தில் யூனிலீவரின் சிறு பண்டங்களை நேரிடையாக மக்களுக்கு கொண்டு செல்லும் சிறு பெண் விநியோகஸ்தர்களுக்கு தான் அந்த பெயர்). அவர்கள் மூலம் பண்டங்களை விநியோகித்தார்கள். சக்தி அம்மாக்கள் பண்டங்களை யூனிலீவரிடமிருந்து பெற குறுங்கடன்களை(micro-credit) வழங்கும் நிறுவனங்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தினார்கள். அதன் மூலம் 10000-20000 மூல தனத்தில் உருவான  வியாபாரத்தில் சக்தி அம்மாக்களுக்கு 10-15% வரை உபரி கிடைத்தது. அந்த வருமானம் அது வரை அவர்களுக்கு எந்த வேலையாலும் கிடைத்து வந்த வருமானததைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். கடைக்கோடியில் இருக்கும் கிராமத்திற்கும் தரமான பொருள் சென்று சேர்ந்தது.

இதே இடத்திலிருந்து தோன்றியவை தான் நாம் இன்றும் பரவலாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு ரூபாய் சாஷேக்களுக்கான தேவையும். தரம் குறைந்த பண்டங்களை இந்த சந்தையில் விற்க முடியாதென உணர்ந்த பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் அதிக வருமானம் உடைய சந்தைக்காக தயாரிக்கும் அதே பொருளை குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் எடுத்துச் செல்ல கண்டு பிடித்த உத்தி அது. அதே தரம், ஆனால் தேவைக்கேற்ற படி பயன்படுத்திக் கொள்ளும் வசதி – குறைந்த விலை. இந்தியா மற்றுமல்ல, பிரேசில், மெக்ஸிகோ, பங்களாதேஷ், ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அடிநிலை மக்களுக்குச் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் துவங்கப்பட்டன. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பண்டங்களையும் சேவையையும் BOP-க்கு தக்கவாறு மாற்றி வடிவமைத்தனர்.

புதிய உருவாக்கங்கள் சமுகத்தின் அடித்தட்டிலிருந்து தோன்றும்போது அந்த உருவாக்கங்கள் ஸ்திரத்தன்மையை அடைகின்றன். ஏனெனில் அந்த உருவாக்கங்களில், அடிமட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான பெருவாரியான விடைகளும் இருக்கும். இந்த உருவாக்கங்கள் குறைந்த வருமானம் உடைய சந்தையின் உள்ளிருந்தே தோன்றுவதாக இருந்தால் அந்த சந்தைக்கான பண்டத்தை தயாரிக்கும் உற்பத்தியாளரையும் உருவாக்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட உருவாக்கங்களை ஏற்படுத்தகூடியவர்கள் தொழிலில் முனைய ஆதாரமான பண வசதி பெரும்பாலும் அவர்களிடம் இருப்பதில்லை. இதைவிட முக்கியமான விஷயம் அந்தச் சந்தையில் இருப்பவர்களிடம் சேமிப்பும் இருப்பதில்லை. வங்கிக் கணக்கு என்பதும் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாத ஒன்று. இந்த பிரச்சனையைப் பார்க்கும் போது வங்கி சார்ந்த சேவைகளை வழங்ககூடிய வாய்ப்பு உங்கள் கண்ணில் படலாம். அப்படிப்பட்ட சேவைகளைத் தென் ஆப்பிரிக்காவின் கிராமங்களுக்கு வழங்கி வருகிறது தென்னாப்பிரிக்காவின் ஸ்டாண்டர்ட் வங்கி (Standard Bank ).

ஒரு தனியார் நிறுவனம் BOP-இடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, பணப் புழக்கத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளைத் தீர்த்து வைத்த கதை ஒன்று மெக்ஸிகோவில் உண்டு. CEMEX என்னும் சிமெண்ட் கம்பெனி, மெக்ஸிகோவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, தங்களின் வியாபார வீழ்ச்சியை அளக்க நினைத்துத் தகவல்களை ஆராய்ந்தனர். அப்போது ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார்கள். அது சிமெண்ட-ஐ குறைந்த அளவில் வாங்கித் தாங்களே வீடு கட்டிக் கொள்ளும் அடிநிலை மக்கள் கூறில் வீழ்ச்சி குறைவாகவே இருந்தது. அவர்கள் மேலும் ஆராய்ந்த போது அந்தச் சந்தையின் தேவைகளையும், அவர்களின் வாழ்வு முறைகளையும் நன்கு அறிந்தனர். முக்கியமாக அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளத் தொழில் நுட்ப ஆலோசனையும், மூலப் பொருட்களின் விரயத்தையும் கட்டுப்படுத்தத் தெரியாமல் எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல் வீடுகள் கட்டி வருவதைக் கண்டுபிடித்தனர் – அப்படி கட்டப்பட்ட வீடுகள் பல பாதியிலேயே நின்று கொண்டிருந்தன. அந்த மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்த CEMEX அவர்களின் தேவைகளைச் சுற்றி தங்கள் பண்டங்களை விற்பனை செய்யும் முறையையும் விநியோகிக்கும் முறையையும் மாற்றி அமைத்தனர். சிமெண்ட்டோடு சேர்ந்து தொழில் நுட்ப ஆலோசனை, அவர்களுக்குத் தேவையான அளவில் தேவைப்படும் இடத்தில் தடையின்றி கிடைக்கும் சிமெண்ட் என சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த சந்தையில் இருப்பவர்களுக்கு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வைக்கும் கூட்டு அமைப்பான Patrimonio Hoy என்பதை தோற்று வித்தனர் (இந்த முன்மாதிரிதான் இந்தியாவில்  களஞ்சியம் பவுண்டேஷன் மூலம் மதுரைப் பகுதியில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது). இந்த சேமிப்பு மட்டுமின்றி அவர்கள் வீடு கட்ட தேவையான தொகைக்கு 80% வரை சிறு கடன் கிடைக்கும் முறையையும் தோற்றுவித்தனர்.

உலகெங்கிலும் வருமானம் குறைந்தவர்களின் வாழ்வாதாரத் தேவையைத் தீர்க்கும் வகையில் தொழிலில் முனையச் சிறு கடன் வழங்கும் முறை இப்போது ஊக்கம் பெற்று வருகிறது. பங்களாதேஷில் மொஹமத் யூனஸ்-ஆல் துவங்கப்பட்ட கிராமின் அமைப்பு உலகப் பிரசித்தி. இந்தியாவில் கூட இப்போது ஸ்பந்தானா, பந்தன், ரங்க் தே (Rang de) போன்ற பல நிறுவனங்கள் குறுங்கடன் வழங்கும் முறையைப் அமல்படுத்தியிருக்கிறார்கள். இதில் Rang de போன்ற சில நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இணையம் வழியாகக் கடன் தேவை இருப்பவர்களையும், கடன் கொடுப்பவர்களையும் இணைக்கும் தளத்தை அமைத்திருக்கின்றன. இதன் மூலம் சிறு கடன் அல்லாமல் வேறு எந்த வகையிலும் கடன் பெற இயலாத பல்லாயிரக்காண மக்கள் பயன் பெறுகிறார்கள். இந்த மக்கள் தொழிலில் முனையும் பொது சமுகத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காகத் தோன்றும் சமுகக் குற்றங்கள் பெருமளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதைத் தான் பிரஹலாத் ’நல்லதைச் செய்து வளமாக இருப்பது ’ (“Doing well by doing good”) என்று சொல்கிறார்.

இன்று இந்தியா போன்ற வளரும் நாடுகள் சந்திக்கும் மிகப் பெரிய சிக்கல் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி. இந்த இடைவெளி 1970களில் இருந்ததைக் காட்டிலும் இப்போது மிகவும் அதிகமாக இருக்கிறது – காரணம் உலகமயமாக்கல். உலகமயமாக்கல், அந்த அலைக்குத் தயாராக இருந்த பலருக்குச் சொர்க்க வாசலைத் திறந்து வைத்து அவர்களின் சொத்துவளத்தையோ, மதிப்பையோ பல மடங்கு உயர்த்திவிட்டது. ஆனால் மிகவும் அடி மட்டத்தில் இருப்பவர்களால் இந்த உலகமயமாக்கல் ஓட்டத்தில் சேர முடியவில்லை. விளைவு – பொருளாதார ஏற்றத்தாழ்வால் நிகழும் சமுக பிரச்சனைகள். உலகமயமாக்கலால் ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பிரஹலாத்தின் பதில் – வறுமையில் இருக்கும் மக்களின் தனி நபர் வருமானத்தை மேம்படுத்துவது மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிப்பதுமேயாகும். ப்ரஹலாத்தின் சிந்தனை ஒரு மேலாளரின் சிந்தனை மட்டுமேயன்று, ஒரு சமுக மாற்றத்திற்கான சிந்தனையும் கூட. இந்த சிந்தனையின் செயல் வடிவத்தையே, மேற்கூறிய உதாரணங்களில் நீங்கள் பார்த்தீர்கள்.

எளிதில் புறக்கணிக்கப்படக் கூடிய ஒரு சந்தையை லாபகரமானதாக மாற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்காக உலகெங்கிலும் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் அனுபவங்களையும் திரட்டி தன் ஆராய்ச்சியின் மூலம் முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த வியூகம் ஒன்றை வகுத்துத் தந்தவர் பிரஹலாத். இப்படிப்பட்ட சந்தையைப் பற்றிய சிந்தனைகளையும், அதை அணுகுவதற்கான உத்திகளை வகுப்பதில் சிறந்தவரான பிரஹலாத் இந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பூவுலக வாழ்வை நீத்தார். தன் வாழ்நாளில் இந்தியா என்னும் தேசத்தை ஏழைகளின் தேசம் என்ற பிம்பத்தை உடைத்து,  மாறாக இது உலகின் மிகப்பெரிய சந்தை   என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர்.

அவர் தன் வாழ்நாளில் உலகின் மிகச்சிறந்த விஷயங்கள் இந்தியாவில் எப்படி விலை குறைவாக அதே சமயம் உலகத் தரத்தில் உருவாக்கப்படுகின்றன என்பதை பல கேஸ் ஸடடிகளாக (ஜெய்பூர் செயற்கை கால்கள், அரவிந்த கண் மருத்துவமனை) எடுத்து உலகத்துக்குக் காட்டியவர். ரமா பிஜாபூர்கர் போன்ற பல தற்கால மேலாட்சித் துறைச் சிந்தனையாளர்களை உருவாக்கியவர். இந்தியா என்ற சந்தையை உலகம் புரிந்து கொள்ளும்படி எடுத்துச் சொல்லும் எந்த ஆராய்ச்சியையும் பிரஹலாத்தின் ஆராய்ச்சிகளைக் கணக்கிலெடுத்துக் (reference-ஆக) கொள்ளாமல் முடிக்க முடியாது. 1941ஆம் ஆண்டு பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் படித்து இளநிலைப் பட்டம் வாங்கினார். பின்னர் அஹமதாபாத்தில் உள்ள இந்திய மேலாட்சிப் பல்கலையில் (Indian Institute of Management – Ahmadabad) தன் மேலாட்சிப் பட்டத்தைப் பேற்றார். முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூலை ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் எழுதினார். இந்திய அரசால் 2009ஆம் ஆண்டிற்கான பதம்பூஷன் விருதும் பெற்றவர். அமெரிக்க மாநிலமான மிஷிகனில், ஆன் ஆர்பர் என்ற நகரில் உள்ல  மிச்சிகன் பல்கலைகழகத்தில் (University of Michigan, Ann Arbor) மேலாட்சித் துறைத் தலைவராகப்  பணியாற்றியவர் (Dean, School of Business Management) . வறுமையைப் போக்குவதற்கான முயற்சிகளில் தனியார்களின் பங்கு குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவித்த உயர்நிலைக் குழுவில் (Blue Ribbon Commission)  இடம்பெற்றவர்.

உலகின் ஏழை சமூகம் என்பது வேகமாகக்  நடுத்தர சமூகத்தின் அடித்தளமாக மாறிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்த உலகத்தின் கடைசி ஏழைக்கும் வாழ்வாதாரத் தேவைகளை எளிதே பூர்த்தி செய்து கொள்ளும் காலம் விரைவில் வரும். அதைப் பார்க்க பிரஹலாத் இல்லாது தான் சோகம். இவரது மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல மேலாட்சித் துறைச் சமுகத்திற்கே மிகப்பெரிய பெரிய இழப்பு.