மகரந்தம்

ரஷ்யா, உக்ரெயின், எரிவாயு

போலந்துக்கும் ரஷ்யாவுக்கும் எரிவாயு சம்பந்தமாக உரசல் புரசல் இருந்ததைப் பற்றிச் சென்ற இதழில் ஒரு கட்டுரை வெளியானது. இங்கே உக்ரெயின் கையில் ரஷ்யாவின் குடுமி சற்று மாட்டிக் கொண்டதால் உக்ரெயினுக்கு எரிவாயு கிட்டத்தட்ட அடக்க விலையில் கிடைக்கிறது. ரஷ்யா தன்னுடைய கடற்படை தங்க உக்ரெயினின் அந்தத் துறைமுகம் தேவை இல்லை என்று தீர்மானித்தால், உக்ரெய்ன் பாடு அதோகதிதான். எல்லாரும் கட்டைகளை எரிக்கத் துவங்க வேண்டியதுதான். ரஷ்யாவாகட்டும், அமெரிக்காவாகட்டும், சீனாவாகட்டும், சவுதிகளாகட்டும்,அவர்கள் கையை முறுக்க நம்மிடம் ஏதாவது ஒரு வழி இருந்தால்தான் நாம் பிழைத்து வளர முடியும். இது வெறும் எதார்த்த அதிகாரம் பற்றிய அரசியல்.  உக்ரெயின், ரஷ்ய உறவுகளை எரிய வைக்கும் வாயு குறித்து மேலும் அறிய இதைப் படியுங்கள்.

மரணத்துடனான சிம்பான்ஸிகளின் இரவு

அந்த வயதான அம்மணியின் கடைசிக் காலங்களில் அவள் கவனத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டாள். அவள் மரணத்தை குறித்த ஒருவித எதிர்பார்ப்பு கலந்த சோகத்துடனான கண்ணியத்துடன் அவள் நடத்தப்பட்டாள். அவள் இறந்ததும் அவளது ஆண் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அந்த ஆர்ப்பாட்டம் மூலம் அவள் எழுவாளா என பார்த்தார்கள். இறந்த உடலில் உயிருக்கான ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என பார்த்தார்கள். அவளது மூச்சை மீண்டும் கொண்டு வர முடியுமா என முயற்சி கூட செய்து பார்த்தார்கள். அன்றைய இரவு முழுவதும் அவளது மகள் அவள் உடலுடனேயே இருந்தாள். மறுநாள் அவள் உடலை சுத்தம் செய்தாள்….அட ஒரு சாவில் இதெல்லாம் சகஜம் தானே என்கிறீர்களா? ஆப்பிரிக்க சிம்பன்ஸிகளின் சாவு ஒன்றினைத் தொடர்ந்து அவர்களின் நடத்தைகளை ஆவணப்படுத்தியுள்ள ஒரு ஆய்வு சொல்லும் விஷயங்கள் இவை. அதோடு மற்றொரு ஆய்வு இறந்த குழந்தை சிம்பன்ஸிகளின் பதப்படுத்திய உடல்பாகங்களை சிம்பன்ஸி அன்னையர் பத்திரப்படுத்தி எடுத்து செல்வது குறித்து….

சீனாவில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு

சீனா 10,000 பேர்களைக் கட்டாய அறுவை சிகிச்சை செய்யும் முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறதாம். குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்கிற விதியை மீறியதால் இப்படி வலுக்கட்டாய அறுவை சிகிச்சையாம். இதுவல்லவோ மக்களாட்சி! கிழக்கில் உதிக்கும் செஞ்சூரியன் இப்படி எல்லாம் இருளைப் பரப்பும், கீழைக்காற்று இப்படி கார்பன் மோனாக்ஸைடாக மாறும் என்று யார் எதிர்பார்த்தார்கள்?

தண்ணீரிலிருந்து பெட்ரோல்?!

ஒரு எளிய முறையில் தண்ணிரில் இருந்து சூரிய ஒளியின் உதவியால் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் பிரிக்கும் முறையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். ராமர் பெட்ரோல் மாதிரி இருக்கிறது கேட்க! இது பெரிய அளவில் வந்து உற்பத்தி முறையானால் மேற்கில் கார்கள், ட்ரக்குகளுக்குப் பெட்ரோல் தேவை பெரிதும் குறையும். அதற்கு இன்னும் பத்தாண்டுகளாகும். அது வரை இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு உலக நாடுகளில் இருந்து தொடர்ந்து பணம் கிட்டும். ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் என்று பன்னாட்டுக் கடத்தல் திலகங்களாகி விட்டார்கள். எண்ணெய் போனாலென்ன, புண்ணை விற்றுப் பணம் பண்ணுவோம் என்பதே இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கோஷம் இப்போது.

நல்ல அறிவியலா? நல்ல பரபரப்பை உண்டாக்கும் அறிவியலா? நல்ல அறிவியல் என்பதற்கும் அறிவியலை பொதுமக்களுக்கு சுவாரசியமாக கொண்டு செல்ல தேவைப்படும் ஊடகப் பரபரப்புக்கும் ஏற்படும் மோதல்கள் தவிர்க்க முடியாதவை. அவ்வப்போது நமக்கு கிடைக்கும் “காணாமல் போன கண்ணிகள்” (Missing links) இத்தன்மைத்தவையே. இந்தோனேசியா அருகே ஒரு குள்ள மானுட முன்னோடி இனம் (Homo floresiensis) ஒன்றை பரிணாம அறிவியலாளர்கள் கண்டடைந்ததில் இருந்து இக்கண்டுபிடிப்பு கடுமையான சர்ச்சைகளை அறிவியலாளர்களிடையே உருவாக்கி அச்சர்ச்சைகள் ஊடகங்களிலும் அவற்றுக்கே உரிய பரபரப்புடன் சிந்தி சிதறி அலையடிக்கிறது. இந்நிலையில் ஒரு புகழ்பெற்ற ஊடக அறிவியல் ஆளுமை ஒருவர் தென்கிழக்காசிய சுற்றுலாத்தீவில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூட குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் இயற்கை வள பற்றாக்குறையினால் குள்ளர்களாக இருந்திருக்கலாம் என்றும் எனவே Homo floresiensis தனி மானுட முன்னோடி இனமாக இருந்திருப்பதைக் காட்டிலும் உணவுப்பற்றாக்குறையால் குள்ளத்தன்மை அடைந்தவர்கள் எனவும் சொல்லியிருப்பது பரபரப்பை ஒரு பக்கம் ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் இந்த பரபரப்பு ஊடக அறிவியல் உண்மையான அறிவியல் தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என அறிவியலாளர்களின் கடுமையான ஆட்சேபத்தையும் பெற்றுள்ளது. முழுமையாக இங்கே வாசிக்கவும். கொஞ்சம் பழைய செய்தி என்றாலும் அறிவியலை சுவாரசியமாக பொது ஊடகங்களில் சித்தரிப்பவர்கள் சிந்திக்க நிறையவே விஷயம் இருக்கிறது இதில்: http://www.nature.com/news/2008/080416/full/452806a.html

பனிமூட்டத்தில் ஊடுருவும் தொழில்நுட்பம்:

புகைப்படங்களில் உள்ள தெளிவான உருவங்களைத் தவிர தெளிவில்லாத மசமசப்பான இடங்களை நாம் ஒரு படத்தைப் பார்க்கும்போது கவனிக்காமல் இருக்கிறோம். புகைப்படங்களைப் பார்ப்பது என்பது ஏதோ சாதாரண வேலை அல்ல. ஒரு திறம்பட்ட புகைப்படக்கலைஞர் ஒரு படத்தைப் பார்ப்பதற்கும் அந்தக் கலையோடு பரிச்சயம் இல்லாதவர்கள் ஒரு படத்தைப் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு என்பதை புகைப்படக்கலைஞர்கள் புகைப்படங்களைக் குறித்து விவாதிப்பதைக் கேட்டால் உடனே புலப்படும். அவர்கள் ஒரு படத்தில் இருந்து உருவக் கூடிய தகவல்களில் பாதிக்கும் கீழ்தான் அந்தக் கலை தெரியாதவர்களுக்குத் தெரியும். இப்போது புகைப்படக்கலைஞர்களுக்குமே சட்டெனப் புலப்படாத விஷயங்களையும் படங்களில் இருந்து பெற முடியும் என்கிறார் ப்ரின்ஸ்டன் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் ஜேசன் ஃப்ளைஷர். படங்களில் உள்ள தெளிவற்ற அம்சங்களை அவர் சப்தம் (Noise) என்கிறார். சப்தத்தை எப்படி தெளிவான உருக்களாக மாற்றுவது என்பதை அவருடைய ஆய்வாளர் குழு கண்டறிந்து இருக்கிறது. இது பனிமூட்டத்திடையே கூட கப்பல்களையும், விமானங்களையும் ஏன் கார்களையும் செலுத்த உதவலாம் எனத் தெரிவிக்கிறார். வர வர மனிதருக்கு ஒளியவே இடமிராது போலிருக்கிறது. இந்தத் தொழில் நுட்பம் மேலும் வளர்ந்தால் மனித உடலுக்குள் உள்ளவற்றை மருத்துவர்கள் உடலைத் திறக்காமல் பார்த்து விட முடியும் என்கிறார்.

http://www.gizmag.com/image-noise-clarity-research/14758/