நான் நியூசிலாந்தில் இருந்தபோது அக்டோபர் 2002ல் ‘ஆசியா 2000’ என்னும் அமைப்பு நடத்திய தீபாவளிக் கொண்டாட்டத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குக் ‘கருணை இல்லம்’ என்ற பெயர்ப்பலகையுடன் ஒரு ஸ்டால் கண்டேன். வெள்ளை மாது ஒருவர் சில துண்டு அறிக்கைகளைக் கொடுத்தார். ஏதோ கிறித்துவ அமைப்பு நன்கொடை வசூலிக்கின்றது என எண்ணிப் பேசாது இருந்துவிட்டேன்.
சிலநாள்கள் கழித்து அந்தத் துண்டுச் சீட்டுக்களைப் படித்தபோது, ‘மகாத்மா கருணை இல்லம்’ என்பது தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை எனும் ஊரில் நிறுவப்பட்டுள்ள ‘அநாதைகள் விடுதி’ என்பதும், அதனை நிறுவியவர் ஜீன் வாட்சன் (Jean Watson) எனும் பெண்மணி என்றும், அவர் நியூசிலாந்தின் இன்றைய பெண் எழுத்தாளர் என்றும் அறிந்தேன். அவர் ‘கருணை இல்லம்’ என்னும் பெயரில் தாம் நிறுவியுள்ள அநாதை இல்லம் பற்றிய நூல் ஒன்று எழுதியுள்ளதாகவும் அறிந்தேன். வெலிங்டனில் உள்ள பெரிய நூல் நிலையத்தில் அந்தப் புத்தகத்தைத் தேடியபோது, அவர் எழுதிய வேறுசில புத்தகங்களும் கிடைத்தன. அவற்றுள் மூன்று புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன.
அந்த மூன்று புத்தகங்கள்:
1. Karunai Illam – The Story of An Orphanage in India
2. Three Sea Stories.
3. Address to a King.
முதல் புத்தகத்தில் ஜீன் வாட்சன் தாம் இந்தியாவுக்கு வர நேர்ந்த சூழ்நிலையை விரிவாக எழுதுகிறார். “ என் இளையமகன் தன் இளம் வயதில் 1970ல் இறந்துபோகாமல் இருந்திருந்தால் மனித வாழ்க்கையின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ளவோ, அத்வைத வேதாந்தத்தைப் பயிலவோ முற்பட்டிருக்கமாட்டேன். பகவத் கீதை 7:15ல் பகவான் கிருஷ்ணர் ,’நால்வகைப் புண்ணியம் உடையோர் என்னைத் தொழுகின்றனர். ஓ அருச்சுனா!, துன்பத்தில் அழுந்தியுள்ளவன்; ஞானத்தைத் தேடுபவன்; ஞானியாக இருப்பவன், பாரதபுத்திரனே” எனக் கூறுகின்றார்.1970ல் நான் கிருஷ்ணர் குறிப்பிடும் முதல்வகையைச் சார்ந்தவளாக இருந்தேன்.”
கத்தோலிக்க மதத்தில் பற்றுக்கொண்ட இவருடைய தோழி ஜாய்க்கும் (Joy) இவருக்கும் பிஜித் தீவில் உள்ள சுவாமி இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த துறவி ஒருவருடன் நட்பு ஏற்படுகின்றது. மூவரும் வேறுவேறு மதத்தைச் சார்ந்தவர்கள் எனினும், மெய்ப்பொருளாகிய ஒரு பரம்பொருளை நாடும் சனாதன தருமத்தைச் சேர்ந்தவர்களே என்று வாட்சன் கூறுகிறார். இத்தொடர்பினால் இந்தியாவைத் தரிசிக்க வேண்டும் எனும் ஆவலில் இவரும் தோழி ஜாயும் 1984ல் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்தியாவில் காஷ்மீர், டெல்லி முதலிய இடங்களைக் கண்டனர். இரண்டு வாரங்களில், ஜாய், அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு துக்க நிகழ்ச்சியின் காரணமாக நியூசிலாந்து திரும்பிட, ஜீன்வாட்சன் மட்டும் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
காசியைத் தரிசித்தபின் அலகாபாத் புகை வண்டி நிலையத்தில் இவர் அமர்ந்திருந்தார். 50 வயதான வெள்ளைக்காரப் பெண்மணி தனியாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட பெரியவர் ஒருவர், இவரிடம் ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்டார். இவர் தம்முடைய பயணத்தைப் பற்றிக் கூறவே, அவர், அடுத்து எங்கு செல்ல உத்தேசம் என வினவினார். அதைப் பற்றித்தான் யோசிப்பதாக இவர் கூற, ‘காஷ்மீரைக் கண்ட நீங்கள் கன்னியாகுமரியையும் காணவேண்டும். அப்பொழுதுதான் பாரத தரிசனம் முழுமையாகும் ‘ எனக் கூறியதோடு, இந்தியாவை வரைந்து குமரி இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டி, அலகாபாத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் புகைவண்டிகள் பற்றிய விவரங்களையும் உதவினார். இவ்வாறு ஜீன்வாட்சனுடைய கன்னியாகுமரிப் பயணம் தொடங்கியது.
ஜீன் வாட்சனின் வேதாந்தப் பயிற்சி அவரைப் பாரத நாட்டிற்குப் பயணஞ்செய்ய ஊக்கியது. பாரதத்தின் தென்கோடியில் நித்தம் தவம் செய்யும் குமரியைக் கண்டார். குமரியில் சிலநாள்கள் தங்கினார். அப்பொழுது சுப்பையா என்பவர் அவரைச்சந்தித்து ‘ஒத்தைப்புளி’ என்னும் இடத்தில் இருக்கும் அநாதை விடுதிக்கு நன்கொடை கேட்டார். வாட்சன் சுப்பையாவுடன்சென்று அந்த விடுதியைப் பார்வையிட்டார். விடுதிக் குழந்தைகள் பயிலும் பள்ளிக்குச் சென்று பள்ளியின் நிலைமையைக் காண்டார். தம் நாட்டுக்குத் திரும்பிவந்து அவ்வப்பொழுது விடுதிக்குப் பொருளுதவிசெய்து வந்தார்.
இரண்டாண்டுகள் கழித்து 1986ல் மீண்டும் வாட்சன் கன்னியாகுமரிக்கு வந்து மூன்று மாதங்கள் தங்க்கின்றார். சுப்பையாவுடன் நெருங்கிய நட்பு ஏற்படுகின்றது. ஏழையாக இருந்தும் தம்முடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் சுப்பையாவின் சேவை மனப்பான்மையும் நாணயமும் ஜீன் வாட்சனுக்கு அவர்மீது இருந்த மதிப்பைக் கூட்டின. சுப்பையாவின் இறந்துபோன தங்கையின் நினைவு நாள் திவச நிகழ்ச்சியில் வாட்சன் கலந்து கொள்கிறார். சுப்பையாவின் உற்றார் உறவினர் ஊரார் ஆகியோரிடம் வாட்சனுக்குப் பழக்கம் ஏற்படுகின்றது. அங்கு, ஏழைகளின் துயரம் துடைக்க ஆசிரமம் அமைக்க எண்ணம் ஏற்படுகிறது. இவ்வாறு உருவானதுதான் நிலக்கோட்டை ‘மகாத்மா கருணை’ இல்லம்’.
இந்த வரலாற்றுக்கு நடுவே சில சுவையான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அதில் முதன் முதலாகத் தமிழகத்துக்கு வந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் கலாச்சார அதிர்ச்சி (Cultural shock) குறிப்பிடத் தக்கது.
மேலை நாடுகளில் வயது, பதவி முதலிய நிலைகளைக் கருதாது அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தல் அவர்கள் பண்பாடாக உள்ளது. பள்ளியில் மாணாக்கர் ஆசிரியரைப் பெயர் சொல்லி அழைப்பர். அதிகாரிகளைப் பணியாளர் பெயர் சொல்லிப் பேசுவர். மனைவியர் கணவனின் பெயரைச் சரளமாகக் கூறுவர். இவ்வாறு பெயரைச் சொல்லுவதை மரியாதைக் குறைவாகக் கருதுவதில்லை. எனவே, இங்கு தன்னை, ‘அக்கா’ என்றும் ‘சிஸ்டர்’ என்றும் ஊரார் அழைத்தது ஜீன் வாட்சனுக்குப் புதுமையாக இருந்தது. விடுதிக் குழந்தைகள் அவரை, ‘ஆண்டி’(Auntie)’ என்று அழைத்தபோது அது அவருக்கு வித்தியாசமாக இருந்தது. அண்ணன் , தம்பி, அக்கா, தங்கை என்னும் முறைப் பெயர்களால் இரத்த உறவு இல்லாதவர்களையும் அழைக்கும் மரியாதை இவருக்குப் புதுமையானதொன்றாக இருந்தது.
தமிழகத்தில் விருந்து உபசரிக்கும் முறையில் உள்ள வேறுபாடு இவருக்கு மற்றொரு அதிர்ச்சி. பொதுவாக, மேலைநாடுகளில் விருந்துக்கு அழைத்தவர்களும் விருந்தாளிகளும் ஒருசேர அமர்ந்து உண்ணும் முறை நாகரிகமாகக் கொள்ளப்படுகின்றது. சுப்பையாவின் வீட்டுக்கு விருந்துண்ன இவர் சென்றபோது, விருந்தினரான இவர் தனியே உண்ண நேரிடுகின்றது. உடன் அமர்ந்து உண்ண இவர் சுப்பையாவை அழைக்கிறார். விருந்தினர் உண்ட பின்னரே தாமுண்ண வேண்டும் இதுதான் தமிழகத்தில் விருந்துபசரிக்கும் பண்பாடு என்று சுப்பையா மறுத்து விடுகிறார். வீட்டில் ஆண்கள் உண்ட பின்னரே பெண்கள் உண்ணுகின்றனர். வாட்சனுக்கு இதுவும் ஒரு அதிர்ச்சி.
நம்மவர்கள் ஆங்கிலச் சொற்களைக் கையாளும் முறையிலும் இவருக்கு ஒரு அதிர்ச்சி. உணவு உண்ணுவதை நம்மவர்கள் ஆங்கிலத்தில் கூறும்போது பொதுவாக, ‘உணவு எடுத்துக்கொள்ளுவது’ ‘taking meals’ என்று கூறுவது உண்டல்லவா? அந்த முறையில் நண்பகல் உணவு உண்ணத் தம் வீட்டுக்கு ஜீன் வாட்சனை அழைத்த சுப்பையா, ‘உணவு உண்டபின் நீங்கள் அங்கு செல்லலாம்’ எனும் கருத்தில், ‘Take your meals before going there’ என்று கூறினார். உணவு உண்ண அழைத்துவிட்டு ‘Take your meals’ என்கிறாரே, என்ற குழப்பம் வாட்சனுக்கு ஏற்படுகிரது. ஏனெனில், ‘Have your lunch before going there’ என்று கூறுதல்தான் அவருடைய ஆங்கில மரபு. மேலும், உணவுக்கடைகளிலிருந்து வீட்டுக்கு வாங்கி எடுத்துச் செல்லுதலைத்தான் ‘Take away meals’ என்று குறிப்பிடுவது நியூசிலாந்து மரபு. சாப்பிட அழைத்துவிட்டு உணவை எடுத்துச் செல்லும்படி கூறுகிறாரே என்ற திகைப்பு இவருக்கு ஒரு அதிர்ச்சி.
கடைகளில் பேரம் பேசுதல் இவருக்கு ஒரு அதிர்ச்சி. ஏனெனில் நியுசிலாந்துக் கடைகளில் எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விலைகள்தாம்.
கன்னியாகுமரியில் இவருடைய அனுபவங்களைக் கற்பனையுடன் கலந்து மூன்று கதைகளாக எழுதியுள்ளார். அவை Three Sea Stories. என்னும் பெயரில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளன. இக்கதைகளுக்கு நட்சத்திர மனிதர்கள் (Star people) என்ற தலைப்பில் முன்னுரையொன்று எழுதியுள்ளார்.
முழுவதும் மாறுபட்ட பண்பாட்டுச் சூழலில் திடீரென வந்திறங்கியதும் தோன்றிய அதிர்ச்சியையும் பின்னர் பண்பாட்டை அடையாளம் கண்டுகொண்டு அதிர்ச்சி நீங்கித் தெளிவு பெற்றதையும் இம்முன்னுரையில் உருவகப்படுத்தியுள்ளார். நான் படித்துச் சுவைத்த இப்பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் .
‘நட்சத்திர மனிதர்கள்’
புதியதொரு நகருக்கு அவள் வந்து சேர்ந்தாள். ஊரைச் சுற்றிப் பார்த்தாள். மக்களை நெருக்கமாகக் அவதானித்தாள். அவர்கள்மேல் இன்னதென்று சொல்லமுடியாத ஆனால் அழுத்தமான ஈர்ப்பு உண்டாவதை அவள் உணர்ந்தாள். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் காதலரைப் பற்றிய விவரங்களை அக்கறையுடன் சேகரிப்பதைப் போல , அவள், அந்த மக்களின் தோற்றம், நடை உடை, பழக்க வழக்கங்களைக் கண்டு மனதில் பதிந்து கொண்டாள். அவள் அவர்களை வேற்றுலகிலிருந்து வந்த ‘நட்சத்திர மனிதர்’களாகக் கருதினாள்.
அவர்கள் தங்களுடைய நெற்றியிலும், சில சமயங்களில் கழுத்து, மார்பு முதலிய உறுப்புக்களிலும் பிரகாசமான குறிகளைத் தீட்டியிருந்தனர். இதனால் அவர்கள் இவளுக்கு நட்சத்திர மனிதர்களாகத் தோன்றினார்கள். அந்தக் குறிகள் மிகுந்த பிரகாசத்துடன் ஒளிர்ந்தன. அவை அவளுக்கு நட்சத்திரங்களை நினைவூட்டின. அவளுக்கு அவர்கள் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போலத் தன்னிலிருந்து முழுதும் வேறுபட்டவர்களாகத் தோன்றினார்கள்.
ஆகாயத்தில் உள்ள விண்மீன்களைப் போல அவர்கள் அவளுக்கு அருகில் இருந்தும் எட்ட முடியாத தூரத்தில் இருந்தனர். அவர்கள் மொழியைப் பேச அவள் அறியாள். அவர்களில் சிலர் அவளுடைய மொழியைப் பேசினர். மெதுவாக, வார்த்தைகலை அளந்து, இடைவெளிவிட்டு, முறையான சொற்களைக் கையாண்டு அவளுடைய மொழியைப் பேசினர்.
மூலைக்கடையில் சோப்பு வாங்கியபோது, கடைக்காரர், “ Do you require any other item”? என நீட்டி முழு வாக்கியமாகக் கேட்டார். இதையே அவளுடைய நாட்டில், “Anything else?” என்றுதான் தெறித்தாற்போலக் கேட்பார்கள்.
நட்சத்திரங்கள் பலவகையாக இருந்தன. சிறிய பெரிய வட்டங்கள்; சிறிய சிவப்பு வட்டம்; அதைச்சுற்றிப் பெரிய வெண்மையான வட்டம்; அல்லது வெண்மைத் தூசு படிந்தது போன்ற நட்சத்திரம். சிலர் வெள்ளைக்கீற்றுகளை எடுப்பாக நெற்றியில் தீட்டியிருந்தனர். சிலர் இரண்டு வெள்ளைக் கோடுகளின் ந்டுவில் ஒரு சிவப்புக் கோட்டினைத் தீட்டியிருந்தனர். சிலர் ஒற்றை மஞ்சள் கீற்று அல்லது சிவப்புக் கீற்று மட்டுமே உடையவர்களாக இருந்தனர்.
பெண்கள்கூட்டம் நிறைந்த பேருந்தில் அவள் சென்றபோது, அவர்கள் பட்டுப்போல மினுமினுப்பாக இருப்பதைக் கவனித்தாள். தலையில் மல்லிகைப்பூவைச் சூடியிருந்ததனால் அவர்கள் மல்லிகை மணம் கமழ்ந்தார்கள். எண்ணெய் பூசப்பட்டிருந்த அவர்களின் தலைமுடி மிகக் கருமையாக இருந்தது. அதனைச் சிலர் பின்னலிட்டுத் தொங்க விட்டிருந்தார்கள். அதன் இறுதி சுழன்று நீண்டிருந்தது. சிலர் குழந்தைகளை மடியில் வைத்திருந்தனர். குழந்தைகளின் நெற்றியிலும் நட்சத்திரம் இருந்தது.
ஆண்கள் சுருண்ட முடி உடையவர்களாக இருந்தனர். 1940களில் இருந்த திரைப்பட நடிகர்களைப் போலச் சிலர் அலையலையான தலைமுடி வைத்திருந்தனர். அவர்கள் இடையிலுடுத்தியிருந்த ஆடை மேசை விரிப்பைப் போல இருந்தது என அவள் நினைத்தாள்.வெள்ளைப் பருத்தியாடை, வண்ணக் கரை அல்லது கட்டம் போட்டது அல்லது வண்ணத்துப்பூச்சியின் சிறகு போன்ற பலநிறங்களை உடையது எனப் பலநிற ஆடைகளை அவர்கள் உடுத்தியிருந்தனர். அவற்றை இடுப்பில் சுற்றி ஒருபக்கம் செருகிப் பாதம் வரை தொங்க விட்டிருந்தனர்.சிலர் முழங்கால் வரை மடித்துக் கட்டியிருந்தனர். ஆடை செருகியிருந்த இடையில் சாவிக்கொத்து அல்லது பணப்பையை வைத்திருந்தனர். அது, சாதாரணமாக உடுத்திருந்த ஆடைக்கு ஒரு கவுரவத்தை (formality) அளித்தது. அவர்கள் ஆடையை இடுப்பில் செருகிக் கொண்டோ அல்லது இறுக்கிக் கொண்டோ நடந்தனர்.
அவர் கால் பாதம்! ஓ! அடிக்கடி அவள் அவர்களுடைய பாதங்களை வெறித்துப் பார்த்தாள். அவர்கள் எப்போது சிலசமயங்களில்தான் பாதங்களுக்குச் செருப்பு அணிகிறார்கள். அவர்களுடைய பாதங்கள் அக்லமாகவும் விரல்களுக்கு இடையே சந்து உடையனவாகவும் மேல் பகுதி கறுத்தும் அடிப்பகுதி வெளிறியும், குதிகால் வெடிப்பு நிறைந்தும் காணப்பட்டன. பெண்கள் வெறுங்காலினராய்க் கணுக்காலில் நகை அணிந்திருந்தனர்.
அவர்களுடைய நடவடிக்கைகளைக் காண்பதில் அவள் மிகமகிழ்ந்தாள். சிலர் கைவண்டிகளைத் தள்ளிக்கொண்டிருந்தனர். சிலர் சைகிளில் ஏறிச் சென்றனர்; சிலர் உருட்டிச் சென்றனர். வண்டிகளில் விற்பனைக்குப் பாய்களோ, பிளாஸ்டிக் பொருள்களோ தேநீர் தயாரிக்கும் சாதனங்களோ ஏற்றப்பட்டிருந்தன.
தொடக்கத்தில் அவள் அவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கண்டாள். எங்கும் அவர்கள் கூட்டம். நட்சத்திர மனிதர்கள். கறுநிறத்தவர்; மாநிறத்தவர்; வெள்ளை ஆடையர்; கட்டம்போட்ட சட்டையர்; பழுப்பு நிறக்கையினர்; வெளிறிய உள்ளங்கையினர். ஆயிரமாயிரம் கால்கள் நடந்துகொண்டே இருந்தன; பொறுமையுடன் நடந்து கொண்டே இருந்தன.
சிலர் தலைச்சுமை தாங்கியிருந்தனர். மீன்கூடைகள், திராட்சைத் தட்டுக்கள், மாம்பழக்கூடைகள், வாழைப்பழத் தட்டுக்கள், வெள்ளரிக்கீற்றுக்கள் எனப் பலவகைச் சுமைகள்.
சில நாள்கள் கழிந்த பின்னர், அவள் நட்சத்திரமனிதர்களை நெருக்கமாகத் தெளிவாகப் பார்க்கத் தொடங்கினாள். தீவை நோக்கிப் படகில் வரும்போது மரங்கள் , பிற தாவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாதலைப் போல அவள் நட்சத்திரத் தனிமனிதர்களின் வாழ்க்கையைக் காணத் தொடங்கினாள்.
திகைப்போடு தனித்து நின்ற அவள் தன் நினைவினூடே கலக்கத்திற்குக் காரனம் பண்பாட்டு வேறுபாடே என்று அறிந்தாள். பின்னர் நட்சத்திர மக்களின் நடுவே பழகித் திரிந்தாள். அவர்கள்மீது ஒருவித பிடிப்பினை வளர்த்துக் கொண்டாள். அவர்கள் மீது மரியாதை கொண்டாள்.
நாட்கள் பல கழிந்தன. மக்கள் தன்னுடன் பேச விரும்புவதை அறியத் தொடங்கினாள். “ஹல்லோ ! சிஸ்டர்! வாங்க! கிளிஞ்சல்களைப் பாருங்க!”. அழைத்தவர்கள் கடற்கரை நடைபாதையில் கிளிஞ்சல் விற்பவர்கள். தெருவின் இருபுறமும் வெப்பமான சூரியவொளியில் வெள்ளி என ஒளிவீசும் கிளிஞ்சல் , சங்கு முதலியன விற்கப்படும் கடைகள் இருந்தன.
அவர்களுடைய மொழியில் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அதை அவள் கேட்டாள். “ “இவர்கள் பேச்சைப் படமாக்கினால் … … தெறித்து விழும். சுருள் (spring) போலச் சுருண்டு சுருண்டு விழும், மிக வேகம்”. இவ்வாறு அவள் தன்னுள் நினைத்துக் கொண்டாள்.
அவர்கள் மொழியைப் புரிந்து கொள்ளாததில் ஒருவசதியும் இருந்தது; சங்கடமும் இருந்தது. பொருளைப் பற்றிக் கவலைப் படாமல் ஒலியை மட்டும் கேட்கும்போது ஒருவகை மனநிறைவு கிடைத்தது. ‘டீ’ கொண்டு வர ‘ஆர்டர்’ செய்வது போன்ற சாதாரண உரையாடலும் கூட ஏதோ மந்திரமொழியைப்போல அவளுக்கு முக்கியமாகப்பட்டது. மொழி புரியாமையின் சங்கடம்- வெளிப்படையானது. முக்கியமான செய்திகளை அறிய முடியாமல் போய்விடுகின்றது. அன்று அப்படித்தான். பேருந்தில் பயணிகளுக்குள் ஏதோ வாய்ச்சண்டை. சண்டையின் காரணத்தை அறிந்து கொள்ள அவள் எத்துணை ஆர்வமாக இருந்தாள்? சொற்பரிமாற்றங்களின் பொருளை அறிந்துகொள்ள எத்துணை ஆசையாக இருந்தது? அடுத்தவர்களுக்கு அதனை விளக்குவது ஒருபக்கம் இருக்கட்டும். தனக்கே அதனைப் புரிந்துகொள்ள இயலவில்லையே!
நட்சத்திர மனிதர்களை அவள் எவ்வளவு நேசித்தாள்? ஆனால், அவர்களை ஏன் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது, ஏன் அப்படி இருந்தது? அது, தன் இன மக்களுடன் வேற்று இன மக்களுடன் இருப்பதன் அனுபவ வெளிப்பாடா?
எப்படி இருந்தாலும், அவர்களும் மனிதர்கள் தானே? நெற்றியில் நட்சத்திரம் உள்ள அந்த மக்கள் அஞ்சல் அலுவலகத்தில், வங்கிகளில், அரசு அலுவலகங்களில் பணிசெய்தார்கள். தேநீர் விற்பனை செய்தார்கள். பேருந்து, வாடகைக் கார் ஓட்டினார்கள். அவளுடைய நாட்டில் மக்கள் என்னென்ன தொழில்களைச் செய்வார்களோ அந்தப் பணிகளை நட்சத்திர மனிதர்களும் செய்தனர்.
கனவு காண்பதுபோல அவள் அங்கே அம்மக்களைக் கண்டும் கேட்டும் திரிந்தாள்.
விடியற்காலையில் தெருவில் நடந்தபோது, பெண்கள் வீட்டு வாசலில் செம்மண் தரையில் புழுதிக் குப்பையைப் பெருக்கிக் குளிர்ச்சிக்காக நீர் தெளிப்பதைக் கண்டாள். குறுக்குக் கால்போட்டு மக்கள் அமர்ந்து கொண்டு சுண்ணாம்புக் கப்பியில் கட்டங்கள் வரைந்து கல் வைத்து விளையாடுவதைக் கண்டாள். பாண்டியாடும் கட்டங்களைப் போல. ( Hopscotch dens). அது அவளுக்கு இளமைப் பருவத்தை நினைவூட்டியது. வயதேற ஏற, நாளுக்கு நாள், அந்த இளமை அனுபவம் சேய்மைப்பட்டுப் போனாலும் அண்மையில் இருப்பதைப் போன்ற நினைவின்பத்தை அளித்தது. இதுவும் ஒரு புதுமையான அனுபவ்ந்தான்.
பாண்டியாட்டம் — — பாண்டியாட்டம் அவள் ஆடியிருக்கிறாள். கிராமத்தில், மரப்பலகைகளால் கட்ட்ப்பட்ட பள்ளிக் கூடத்தில் பாண்டியாட்டம் ஆடியிருக்கிறாள். இறுகிய கரிய தார் வேயப்பட்ட தரையில் கட்டம் வரைந்து அவள் பாண்டியாட்டம் ஆடியிருக்கிறாள். அது இங்கு உள்ளது போலச் செம்மண் தரை அல்ல. இங்கு நீர் தெளித்துத் தரையை வழித்துக் கான்கிரீட் போல இறுகச் செய்தால்தான் சுண்னாம்புக் கட்டியால் கட்டம் வரைய முடியும்.
நட்சத்திரமனிதர்கள் … …, அவள் நினைத்தாள், — தெருவைப் பெருக்குகிறார்கள். நித்தம் நித்தம் நிலத்தை வாரியினால் பெருக்குகிறார்கள். பெருக்கிச் சுத்தம் செய்வதில் மகிழ்கிறார்கள்.
பின்னர், நாள் செல்லச் செல்ல அவளுக்கு நட்சத்திரமக்களின் நெருக்கம் கிடைக்கின்றது. நீண்ட தொடர்பில் தனித்தனி உறவுகள். தொலைவிலிருந்து, அறிமுகமான ஒருவர் கையை அசைத்து, “ வாங்க சிஸ்டர்! டீ சாப்பிடுகிறீர்களா?” என அழைக்கும்போது அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தபோது, கரையில் பத்திரமாக ஒதுங்கியது போன்ற நிம்மதியை அது அவளுக்கு அளித்தது.
இனம் புரியாத அவளுடைய மனக்கலக்கம் விலகத் தொடங்கியது. புதுமையாக இருந்த எல்லாம் அவளுக்குச் சாதாரணம் ஆகிவிட்டன. அவர்கள் எல்லாம் , உண்மையில், ‘நட்சத்திர மனிதர்கள்’ அல்லர். அவர்கள் அனைவரும் இந்தியத் தமிழர்கள். அவர்கள் நெற்றியில் இருந்தது, நட்சத்திரம் அல்ல; அது, கோவிலில், சாமி கும்பிடச் சென்றபோது அர்ச்சகர் ஆசியுடன் பூசிவிட்ட சந்தனமும் குங்குமமும்.
வாழை இலையில் சாப்பிடுவது இப்பொழுது அவளுக்குப் பழக்கமாகி விட்டது. சீனாத் தட்டும் பீங்கான் கோப்பையும் முள்ளும் கத்தியும் இப்பொழுது அவளுக்கு விகாரப்பட்டு அந்நியமாகிப் போய்விட்டன.
அவளுக்குப் புதுமை எல்லாம் இப்பொழுது பழகிப் போய்விட்டதால், அவளும் பழகிப்போன புதியவள் ஆகிவிட்டாள்.