கோமாளி

பங்களூரின் சிட்டி மார்கெட் பகுதியில் ஏகப்பட்ட நெரிசல்களுக்கிடையில் புகுந்து ஒரு இடுக்கில் திரும்பி அவென்யூ சாலையில் நுழைந்தவுடன் எதிரில் இருந்த பெரிய கட்டடத்தின் மாடியில் இருந்த எங்கள் வங்கிக்குள் நான் போய் சேர்ந்தபோது முதல் ஆளாக அலுவலகத்திற்கு வந்து எப்பவுமே என்னை வரவேற்கும் அடெண்டர் தேவராஜ் கௌடாவுடன் இன்று எதிர்பாராமால் மேலாளர் ரங்கநாதனும் நின்றுகொண்டிருந்தார்.

காலை ஒன்பதுக்குத் தான் வங்கி இயங்கத்துவங்கும். எட்டரை மணிக்கே அலுவலகத்திற்குப் போய்விடும் நான் ஒரு பக்கம் கனத்த கோப்புகளில் ஆழ்ந்து போக (அப்போதெல்லாம் எங்கள் அலுவலகத்தில் கணினி கிடையாது) கௌடா பதற்றத்துடன் மேலாளர் அறையில் தபால்களை எல்லாம் அடுக்கி சரியாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு நான்கு முறை சரிபார்த்து காப்பித் தம்ளர்களை கழுவிவைத்துவிட்டு வேலைகளைத் தொடர்வார். மேலாளர் தன் அறைக்கு என்னை அவசரமாக அழைத்தார். செய்தி இதுதான். பசவங்குடியில் உள்ள எங்கள் கிளை அலுவலகத்திற்கு நான் உடனே போகவேண்டுமாம். அங்கு ஒரு மேலாளரும் இரு அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஒரு அதிகாரி பயிற்சிக்காக பத்துநாட்களாக வெளிமாநிலத்தில் இருக்கும் எங்கள் தலைமையலுவலகத்திற்குப் பக்கத்தில் இருந்த எங்கள் வங்கியின் பயிற்சிக்கல்லூரிக்குப் போயிருக்கிறாராம். மற்றொருவர் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பிரிவிலேஜ் விடுப்பில் போயிருந்தார். மேலாளர் பிரபாகர ஷெனாயின் தந்தை நேற்றிரவு திடீரென்று மாரடைப்பில் காலமாகிவிட்டாராம். அதனால் பெங்களூரின் தலைமைக் கிளையான எங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரியை தற்காலிகமாக பொறுப்பேற்க உடனடியாக அனுப்ப எங்கள் தலைமையலுவலகத்தின் அனுமதி பெற்று எங்கள் மேலாளர் திரு ரங்கநாதன் வீட்டிலேயே போய் தன்னிடமிருந்த பெட்டகச் சாவிகளை முறைப்படி ஒப்படைத்துவிட்டு பிரபாகர் ஷெனாய் மடிக்கேரிக்குப் போய்விட்டாராம்.

வேலைக்குச் சேர்ந்து பயிற்றுநிலை அதிகாரியாக ஓரு ஆண்டு மட்டுமே பூர்த்தியான நிலையில் நான் ஒரு கிளை அலுவலகத்திற்கு முழுப்பொறுப்பு எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்க நினைத்தேன்; கேட்கவில்லை. என் மேலாளரே என் மீது நம்பிக்கை கொண்டு சொல்கையில் எதற்குத் தயங்க வேண்டும் என்று நினைத்து சும்மா இருந்து விட்டேன். உண்மையில் எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது என்றே சொல்லவேண்டும்.

“நீங்க ஒண்ணும் யோசிக்காதீங்க; அது லேடீஸ் ப்ராஞ்ச்தான்,” என்று ஆறுதல் சொன்னார் எங்கள் மேலாளர். அங்குள்ள அதிகாரிகளையும் அட்டெண்டரையும் தவிர மீதி எல்லோரும் பெண்கள். அப்படியில்லாவிட்டாலும் அதுஒரு பிரச்சனை இல்லை என்று நினைத்துக்கொண்டேன். சொல்லவில்லை;

“உங்கள் செக்‌ஷனை நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்று என் மேசை இழுப்பறைச் சாவிகளைப் பெற்றுக்கொண்டார் திரு ரங்கநாதன். பசவங்குடி கிளையின் வங்கிப் பெட்டகச் சாவிகளை என்னிடம் ஒப்படைத்துவிட்டு கையெழுத்து வாங்கிக்கொண்டு பிரபாகர ஷெனாய் கூறச் சொன்ன விவரங்களை சொல்லிவிட்டு வழியனுப்பி வைத்தார்.

உடனே ஆட்டோ பிடித்து சில்வர் ஜூப்ளி பார்க் வழியாக வளைந்தும் நெளிந்தும் குதித்தும் பின் ஜெ.ஸி ரோட்டில் சீராகவும் போய்ச் சேர்ந்தால் வாயிலில் நின்றுகொண்டு என் வரவைத் தெரிந்துகொண்டு விட்டதால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட வாடிக்கையாளர்களின் புன்னகையையும் (இரண்டுபேர்தான்), கிளை ஊழியர்களின் வாய் நிறைந்த சிரிப்பையும் வாங்கிக்கொண்டு நுழைந்தேன்; எனக்கு காட்டப்பட்ட இருக்கையில் அமர்வதற்குமுன் பெட்டக அறையிலிருந்து எடுக்கவேண்டியவற்றை எடுத்துகொடுத்துவிட்டு வந்தேன். பசவங்குடி கிளை காலை ஒன்பதுமணிக்குத்தான் திறக்கும். நல்லவேளையாக வாடிக்கையாளர் நேரம் அப்போதுதான் துவங்கியிருந்தது. அப்போது கைத்தொலைபேசியோ மின்மடலோ இல்லாத காலம். தொலைபேசி அல்லது டெலக்ஸ் அவ்வளவுதான்.

படு உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் எல்லோரும் இயங்கத் துவங்க, வாடிக்கையாளர் நேரம் முடியும் வரை ஒவ்வொரு கையெழுத்தையும் சரிபார்த்து காசோலைகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் , ஓரிரு லாரி பற்றுச்சீட்டுகளுக்கு அனுமதி வழங்கவும், வரைவோலைகளையும் பணவிடைகளையும் சரிபார்த்துக் கையெழுத்திடவும் நேரம் சரியாக போய்விட்டது. ஓவர்டிராப்ட், ஓசிசி விவரங்கள் மூத்த ஊழியரான திருவாட்டி ஹீரா பைக்குத் தெரியும் என்றும் அவர் அதுதொடர்பான விவரங்களைக் கூறுவார் என்றும் திரு ரங்கநாதன் குறிப்பிட்டிருந்தார். ரொடீன் வேலைகளைத் தவிர வேறு எதாவது என்றால் தன்னைக் கேட்டுவிட்டுச் செய்யவேண்டும் என்று வேறு எனக்கு ஆணையிட்டிருந்தார்.

ஒரு அவசரக்கால நிலைமையிலும் முக்கியத் தகவல்களை பிரபாகர் ஷெட்டி குறிப்பிட்டு கொடுத்திருந்தார்.

ஓவர் டிராஃப்ட், நகை லோன் எடுக்க என்று இன்று யாருமே வரவில்லை. நடப்புக்கணக்குகள், ஓடி, ஒசிசி மற்றும் லாரி ரசீதுகள் எங்கள் அலுவலகத்தில் பிழிந்து எடுத்துவிடும். இங்கு சேமிப்பு கணக்குகளும் வைப்புக்கணக்குகளுமே நிறைய இருந்தன. கேட்பதற்கு முன்பே வாடிக்கையாளர்களின் மாதிரி கையெழுத்து அட்டைகள் உள்ள கோப்பும், பேரேடுகளும், பெருங்கோப்புகளும் என் இருக்கைக்கு வந்துவிட்டதால் வேலை எளிதாகிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் நாங்களே தேடி எடுத்துக்கொள்வது வழக்கம்.

பதினொரு மணிக்கு பாஸ்கரிடமிருந்து தொலைபேசி வந்தது. பாஸ்கர் என் பிரிவின் குமாஸ்தா; என்னைவிட ஏழெட்டு வயது கூட இருக்கும். துறுதுறுப்பான வணிகவியல் பட்டதாரி. ஒரு பெரிய வங்கியின் பெயரைக் குறிப்பிட்டு, க்ளியரிங் அட்ஜெஸ்ட்மெண்ட் ரிசீவபிள் பற்றி முந்தைய நாள் எனக்கும் அவ்வங்கியதிகாரிக்கும் நடந்த பேச்சை ஒரு முறை உறுதிப்படுத்திக்கொண்டார்.

சுகுணா ஷெட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை; இங்கயே வந்துருங்களேன் என்றாள். இரண்டு முறை எனக்கு எங்கள் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. புதிய அலுவலகம். தெரியாத வாடிக்கையாளர்கள் என்று எனக்கு தட்டுகிட்டுதான் போனது. கணக்குகளை மட்டும் ஒழுங்காகப் பார்த்தேன். ஒருபெரிய தொகைக்கு பணவிடை கையெழுத்திட நேர்ந்தபோது, என் கையெழுத்து மட்டும் போதுமா என்று உடனே எங்கள் மேலாளருக்கு தொலைபேசியில் கேட்டுக்கொண்டேன். வேறு எதும் நான் புதிதாக செய்துவிடவில்லை என்பதை ஒருமுறை உறுதிபடுத்திக்கொண்டார்.

ஒரு மணிக்கு உணவு இடைவேளை அத்தோடு வாடிக்கையாளர் நேரமும் முடிந்துவிட்டதால், எல்லோரும் நாற்காலிகளை அரைவட்ட வடிவில் போட்டுக்க்கொண்டு சாப்பிடத்தயாரானார்கள். திருமதி சுகுணா ஷெட்டி எதிர்கட்டடத்தில் இருந்த சாந்தி சாகரில் எனக்கு சாப்பாடு சொல்ல முன்வந்த போது அதை பணிவாக மறுத்துவிட்டு என் வேலைபார்க்கும் பெண்கள் விடுதியிலிருந்து நான் கட்டிக்கொண்டு வந்திருந்த சாப்பாட்டு டப்பியைத் திறந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து சிலர் கொண்டுவந்திருந்தார்கள் கொஞ்சம் போதும் என்றவாறு அவர்கள் அளித்ததையும் சாப்பிட்டுவிட்டேன். ஹீரா பைக்கு 27 ஆண்டுகள் அனுபவம் அதாவது என் வயதைவிட கூடுதல் அனுபவம். மேலாளரே அவரை மேடம் என்றுதான் அழைப்பாராம். மற்ற பெண்கள் எல்லாம் எட்டு ஆண்டுகள் பத்து ஆண்டுகள் அதே கிளையில் இருப்பவர்கள்; ஐம்பது வயதான அட்டெண்டர் திரு ஜெயபாலை நான் மரியாதையுடனேயே விளித்துப் பேசினேன். காசாளர் வந்தனா ராவ், தான் கணினித்துறையில் பட்டயப்படிப்பு அண்மையில் படித்திருப்பதையும் விரைவில் கணினி இருக்கும் தலைமையலுவகத்திற்கு தான் மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டார். இரண்டு வடையாவது சாப்பிடவேண்டும் என்று கனிவுடன் வற்புறுத்திய அட்டெண்டர் திரு ஜெயபால் ஓடிப் போய் வாங்கிவந்துவிட்டார். சரி என்று அதையும் சந்தோஷமாக தின்றுதீர்த்தேன்.

பதினொரு மணிக்கு அவர்கள் வாங்கிக்கொடுத்த காப்பியை நான் குடிக்கவில்லை என்று வேறு குறைபட்டுக்கொண்டார்கள். நான் இதுவரை காப்பியே குடித்ததில்லை என்ற விளக்கம் அவர்களுக்கு புதுமையாக இருந்தது. தமிழர்கள் ஒருவர் விடாமல் எல்லோரும் காப்பிப் பிரியர்கள் என்ற அவர்கள் தீவிரமானநம்பிக்கையை தகர்த்து அவர்களுக்கு கிடைத்த ஏமாற்றத்திற்கு பதில் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தரலாம் என்று நினைத்தவாறே. வடைகளைத் தின்றேன். அனேகமாக ஒரு வாரம் இங்கு நான் வரவேண்டியிருக்கும், எட்டு நாள்களுக்கு மேல் கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட தொகை கூடுதலாக எனக்கு அந்த மாத சம்பளத்துடன் தரவேண்டி வரும் என்றும் அதனால் அதற்குள் பயிற்சியில் இருப்பவரை வரவழைத்துவிடுவார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள். நான் அதைப் பொருட்படுத்தவேயில்லை. உண்மையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி ரகசியமாக மகிழ்ந்துகொண்டிருந்தேன்.

மதிய உணவு முடிந்து விரைவாகவே எல்லாம் சரிபார்த்து பெட்டகத்தில் வைத்துவிட்டோம். திடீரென்று எக்ஸ்கியூஸ் மீ என்றவாறு கதவு வேகமாக திறக்கப்படும் ஒலி கேட்டது. எங்கள் அலுவலகங்களில் வாயிற்காவலர் அல்லது பாதுகாவலர் யாரும் கிடையாது. எல்லோரும் சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் அங்கு பார்வையைத் திருப்பினோம்.

பாதி சார்த்தப்பட்டிருந்த வங்கியின் கதவுகளை வேகமாகத் தள்ளியவாறு ஒரு இளம்பெண் நெஞ்சோடு அணைக்கப்பட்டிருந்த ஒரு பையுடன் ஓடி வந்தார். அவர் தலைமுடி சற்று கலைந்திருந்தது. முகத்தில் வருத்தமும் பதற்றமும் ஒருங்கே கூடியிருந்தது.

“சாரி மேடம் இவத்து கெல்சா ஆயித்தல்வே; நாளெ பர்த்தீரா,” ஜெயபால் ஓடிப்போய் கூறவும்,
நாங்கள் யாரும் எதிர்பாராத விதமாக அவள் ஓவென்று அழ ஆரம்பித்தாள். வியர்வை ஆறாகாக பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது. அடிக்கடி வரும் வாடிக்கையாளர்தான் என்று திருவாட்டி ஹீரா பை மெல்ல சொல்லிக்கொண்டிருந்தார். வந்த பெண்ணின் முகம் என் நினைவடுக்கில் எங்கோ ஒளிந்திருந்தது போலிருந்தது. என்னோடு ஆறாம் வகுப்பில் படித்த ஜே. ஊர்மிளாவின் முகச்சாயலில் இருந்தாள். சாயலில் இருந்தாள் என்ன, ஜே. ஊர்மிளாதான் என் மூளை செல்கள் உறுதியாகக் கூறின.

அவள் முழுக்க முழுக்க கன்னடத்தில் பேசினாள். பெங்களூர் வந்து ஆறு மாதங்களுக்குப்பின்தான் வேலைபார்க்கும் பெண்கள் விடுதியில் சேர்ந்தேன். சேர்ந்த மூன்று மாதங்களிலேயே கன்னடம் சரளமாகப் பேச கற்றுக்கொண்டுவிட்டதால், அவள் சொல்வது தெளிவாகப் புரிந்தது. ஒரு தங்க அட்டிகையை திருவாட்டி ஹீரா பையின் முன் வைத்தாள். நகைக்கடன்.

“குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை இதுபோல் பலமுறை இங்கு வந்து வாங்கியிருக்கிறேன்; நேரமாகிவிட்டாலும் தயவு செய்து பணம் கொடுங்கள் என்று கண்கலங்கி கெஞ்சினாள். காஷ் க்ளோஸ் செய்தாயிற்று இனி என்ன செய்ய முடியும் மேடம் என்று திருவாட்டி ஹீராவிடம் சொன்னாள் திருமதி வந்தனா ராவ். கணக்குகளை முடித்தபின் இது போல் இதுவரை கொடுத்ததேயில்லை என்று பானுமதி ரெட்டி மெலிதான குரலில் சொன்னாள். இன்று வாடிக்கையாளர் நேரம் முடிந்து பணத்தை சரிபார்த்து நானும் காசாளரும் கணக்கை மூடி கையெழுத்து போட்டு பெட்டகத்தில் வேறு வைத்துவிட்டோம். ’நிம்ஹான்ஸில் குழந்தை இரண்டு வாரங்களாக இருக்கிறது. வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. இவர்களுக்கு என்னைத் தெரியும்,’ என்றாள் என்னைப்பார்த்து. வந்தனா ராவ், ஹீரா பை, பானுமதி ரெட்டி எல்லோரும் மிகுந்த வருத்ததுடனும் சங்கடத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். முதலில் எல்லோரும் மேடம், மிஸ்டர் என்று சொல்லி விரைவிலேயே அவரவர் பெயரை சொல்லி அழைக்கத்துவங்கிவிட்டோம். என்றாலும் திரு ஜெயபாலையும் திருவாட்டி ஹீரா பையையும் என்று அவர்கள் வயது காரணமாக பெயரை மட்டும் கூப்பிட்டு விளிக்க வரவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். இப்போது நகைக்கடனுக்கு பணம் கொடுப்பதா என்ன செய்வது.

கொடுப்பதில் பிரச்சனை இல்லை; நாளை காலை ஒன்பதுக்கு வங்கி திறந்துவிடும். இன்று கதை முடிந்தது. காசாளர் கணக்கை க்ளோஸ் செய்துவிட்டார். பிறகு அதில் மாற்றம் செய்வது வழக்கம் இல்லை; தணிக்கையின் போது மேலாளரைக் கேள்வி கேட்பார்கள். என் கிளை என்றாலும் பரவாயில்லை. வந்த இடத்தில் ஆவணங்களில் சிக்கலை உண்டுபண்ணுவானேன் என்று ஒரு வினாடி நினைத்தேனென்னும் போதே நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. ரங்கநாதன் சாரிடம் போன் போட்டால் அவர் வேண்டாம் என்று சொல்வதற்கு வாய்ப்பு அதிகம்; என்ன ஆனாலும் சரி, ஜெ. ஊர்மிளாவோ, வேறுயாரோ அது முக்கியமில்லை. காரணத்தைப் பொறுத்துதான் தீர்மானிக்க முடியும், அதனால் கணக்கை மீண்டும் திறந்து கொடுத்துவிடுவது, என்று முடிவு செய்து ஹீரா பையிடம் சொன்னேன்.

அவர் பிரிவைச்சேர்ந்த வேலையது. அதற்குண்டான கோப்பை வேகமாக ஜெயபால் எடுத்துக்கொடுத்தார். பெயர் என்ற இடத்தில் ஜெ. ஊர்மிளா என்றிருந்தது. கையெழுத்தைச் சரிபார்க்கும் கையெழுத்து கோப்பில் பிறந்த தேதி. நிரந்தர முகவரி மதுரை. அதன் பின் எல்லாம் மின்னல் வேகம்தான். ஹீராய் பை நகையைச் சோதித்தார். பானுமதிரெட்டியும், சுகுணா ஷெட்டியும் தங்கள் மேலாளர் வந்தபின் தங்களை எதாவது கேட்டாலோ, கோபித்தாலோ என்ன செய்வது என்ற யோசனையில் பதற்றத்துடன் இருந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. எதற்கு உங்கள் மேலாளரைக் கேட்டுவிடலாமே என்று, பாவம், சொல்லத்தான் செய்தார்கள். ஜெயபாலும் ஹீரா பையும் நான் இமயமலையிலிருந்து ஏதேனும் கொண்டு வரச்சொன்னால் கூட கொண்டுவரும் மனநிலையில் இருந்தார்கள். நான் பூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்பத்தில் கையெழுத்தை மட்டும் போடச் சொன்னேன். அதில் நிரந்திர முகவரி என்ற இடத்தில் மதுரை விலாசம் குறிப்பிட்டிருந்தது; மேடம் கூட மதுரைதான். ஜெயபால் ஜெ. ஊர்மிளாவிடம் சொன்னார்.

ஆமாவா என்று வியந்தாள் சுகுணா ஷெட்டி இங்கு நல்ல தமிழ் பேசுபவள் என்ற பெயர் பெற்றவள்.

இதற்குப் பிறகு ஜெ. ஊர்மிளா கேட்டதை நான் பிறகு சொல்கிறேன். அது இப்போது முக்கியமில்லை.

மீண்டும் பணப்பெட்டியைத் திறந்தோம். பணம் பட்டுவாடா செய்தபின், ஜயபால் கொடுத்த தண்ணீரைக் குடித்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டு கிளம்பினாள்.

ஊர்மிளாவை அனுப்பிவிட்டு நாங்கள் டெஸ்பாச்சு சோதனையைத் துவங்கியபோது பேச்சு திசைமாறிவிட்டது. ஜெயபால் ஊர்மிளாவின் குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று விவரமாகச் சொன்னார். ஹீரா பையும் வந்தனா ராவும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மத்தியில் நடந்த குழந்தைகளைப் பற்றிய செய்திகளைப் பேசினார்கள். மீண்டும் இருக்கைக்கு வந்தவுடன். ஏன் பெட்டகத்தை மீண்டும் திறந்தேன் என்பதையும், அதற்குண்டான அன்றைய ரொக்கநிலையிறுப்பு தெரிவிக்கும் புத்தகத்தில் ஏற்பட்ட திருத்தல்களுக்குக் காரணமும் மனிதாபிமான அடிப்படையில் சொந்தமாக நான் எடுத்த முடிவு என்றும் இதன் விளைவுகள் எதுவானாலும் நான் பொறுப்பு என்றும் நான் சொல்லச் சொல்ல பானுமதி ரெட்டி தட்டச்சுசெய்து கொடுத்தாள். தாள்களை சரிபார்த்து கையொப்பம் இட்டேன். திடீர் உள்தணிக்கைக்குழுவோ, கண்காணிப்புத்தணிக்கைக்குழுவோ ஒருநாள் வந்தால் நிச்சயம் கேள்வி கேட்பார்கள். இங்கிருப்பவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாதே.

ஒன்றை நான் எடுத்துக்கொண்டு ஒன்றை மேலாளர் மேசைமேலிருந்த கோப்பில் சில முக்கிய கடிதங்களுடன் வைத்துவிட்டு ஒன்றை பெட்டகத்தினுள் இருந்த அதிமுக்கிய கோப்புடன் வைத்துவிட்டேன். சுகுணா ஷெட்டியின் முகத்தில் ஒரு நிம்மதியைப் பார்க்க முடிந்தது.
மாலை வங்கி வேலை முடிந்த விடுதிக்குப் போய்ச்சேர்ந்தேன். மறுநாள் மதியம் எனக்கு உணவு வேண்டாம் என்று குறிப்புபுத்தகத்தில் எழுதிவைத்துவிட்டு என் அறைக்குச் சென்றேன். என் அறைத்தோழிகள் யாரும் இன்னும் வரவில்லை.

காலாற நடக்கவோ புத்தகம் படிக்கவோ எனக்கு ஓடவில்லை. மனம் ஜெ. ஊர்மிளாவைச் சுற்றியே வந்தது. மதுரையில் திருநகரில் சீதாலட்சுமி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் அப்போதுதான் புது மாணவியாகச் சேர்ந்திருந்தேன். என்னை கலாட்டா செய்வது என்றால் ஜெ. ஊர்மிளாவுக்கு அல்வா தின்கிற மாதிரி. எங்கள் வகுப்பு ஆசிரியர் வராதபோது நாங்கள் பக்கத்து வகுப்பு ஆசிரியர் வந்து கத்தும்வரை இஷ்டப்படி பேசிக்கொண்டிருப்போம். இவள் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வாள், நான் வரலாறு புத்தகத்தைத் திறந்து பார்த்தால் அவளும் அதைப்போலவே செய்வாள். நான் பேசாமல் இருப்பேன். மதியம் சாப்பிடும்போது மெனக்கிட்டு என் பக்கத்தில் அமர்வாள் . நான் பாட்டுக்குப் பார்வதியே என்று சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். என்னை சாப்பிடவிடாமல் படுத்துவாள்.
இவளும் பயந்தாங்கொள்ளி, ஒருமுறை என்னை அடித்துவிட்டு கலாட்டா செய்தபோது மஞ்சுளாவின் எட்டாம் கிளாஸ் அக்காவிடம் இவளை மிரட்டசொன்னேன். அப்புறம் பயந்து அழுதாள் என்று டி. ஜெயந்தி தன் அனுபவத்தை என்னிடம் ரகசியமாக ஒருநாள் சொன்னாள். ஜெ. ஊர்மிளா நான் சும்மா இருப்பதால் என்னைக் கிண்டல் பண்ணுகிறாள் என்றாள் ஜெயந்தி. ஜெயந்தி ஏன் இல்லாததையெல்லாம் கற்பனை பண்ணிக்கொள்கிறாள் என்று நினைத்தேன். அப்போதெல்லாம் இண்டல்வெல் விடுவார்கள் எல்லோரும் தண்ணீர் குடிக்க ஓடுவோம். நான் அவளுக்கு முன் போய்விட்டால் நான்கைந்து முறை ஊர்மிளா என் கையை முறுக்கியிருக்கிறாள். எனக்கோ ஏன் இவள் இப்படி கஷ்டப்படுகிறாள் என்றே தோன்றியது. ஆங், மறந்துவிட்டேனே என் பெயரை அவள் கூப்பிட்டதாவே ஞாபகம் இல்லை. கோமாளி என்று என்னை ஓரிரு கூப்பிட்டுப் பார்த்தாள். நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர் இல்லாதபோதுதான் இதெல்லாம் நடக்கும். இன்று இதை நினைத்துப்பார்க்கும் போது பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ ஏன் நான் எதுவும் சொல்லவில்லை என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. பள்ளிவிட்டவுடன் பிரதான சாலையைக் கடந்து எட்டு தெருக்கள் தாண்டி வீடு போய் சேர வேண்டும். பக்கத்து வகுப்பு காரலைன் சந்திரமதி ரத்தக் காட்டேரி அவள் வீட்டுக்கு இரவில் வந்த கதையை ஐம்பதாவது தடவையாகச் சொல்லுவாள். வேறு யாரும் அவளை நம்பவில்லை. நான் பொறுமையாக காதுகொடுப்பது மட்டுமன்றி இடையில் சந்தேகங்களையெல்லாம் கேட்பேன். எனக்கென்னவோ அவளிடம் கதைகேட்பது பிடித்திருந்தது. அவளுக்கும் எனக்குஅதையே தினம் ஒரு விதமாகச் சொல்லவும் பிடித்திருந்தது. பெரியவர்கள் கண்களுக்கு அது தெரியாதாம். இவளிடம் மட்டும் மிட்டாய் வாங்கிக்கொள்ள தினமும் வருமாம்.

குஷியாக அவளுடன் நடந்து வீட்டுக்குப் போய்விடுவேன். வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் சொர்க்கம்தான். அம்மாவோ அப்பாவோ படி படி என்று பிடுங்கமாட்டார்கள். எதை அம்மா தருகிறார்களோ அதைச் சாப்பிட்டுவிட்டு வாயிலுக்கு விளையாடப்போய்விடுவேன். எங்கள் தெருவில் மிதிவண்டிகளைத் தவிர எதுவும் வராது என்பதால் யாரும் கவலைப்பட மாட்டார்கள். யாராவது ஒருவரின் அம்மா வந்து நேரமாயிற்று என்று சொல்லுவரை அல்லது இருட்டும்வரை விளையாடுவோம்.

கோமாளி என்று என்னைக் கூப்பிடுவது சிரமமாக இருக்கிறது கோமு என்று கூப்பிடுகிறேன் என்று ஜெ. ஊர்மிளா என்னிடம் வேண்டிக்கொண்டாள். முதல் ராங் வாங்கும் உஷா என்னை ஒரு நாள் அழைத்து ஊர்மிளா எதாவது சொன்னால் அல்லது அடித்தால் நன்றாகத் திருப்பிக்கொடுத்துவிடு என்று கோபமாகச் சொன்னாள். நான் அவளிடம் இருந்து நோட்டு பென்சில் எதுவும் வாங்கினதேயில்லையே எதை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்றேன். தலையில் அடித்துக்கொண்டு உனக்கு கோமாளி பெயர் பொருத்தம்தான் என்றாள். பின் ஒன்பதாங்கிளாஸ் சாந்தியக்காவை எனக்கு நன்றாகத் தெரியும் எங்க பக்கத்து வீடு தான் அவங்ககிட்ட சொல்லி ஜெ. ஊர்மிளாவை மிரட்டச் சொல்கிறேன் என்றாள். எனக்கு அது பிடிக்கவில்லை. அவள் என் புத்தகத்தைக் கிழிப்பது, ஒளித்துவைப்பது முதலிய பாப காரியங்கள் பண்ணவில்லை. நான் இதற்குமுன் படித்த பள்ளியில் இதைவிட மோசமாக இருக்கும். இதற்குப்போய் எதற்கு வீணாக மிரட்டவேண்டும். தவிர ஆறாம் வகுப்பு படிக்கும் ஊர்மிளாவை ஒன்பதாங்கிளாஸ் அக்காவைவிட்டு மிரட்டச் சொல்லுவது எனக்கு பெரிய குற்றமாகப் பட்டது. வேண்டாம் உஷா, கோமாளி என்றுதானே கூப்பிடுகிறாள் பரவாயில்லை என்றேன். பாவம் என்றேன். அரையாண்டுத்தேர்வு முடிவுகள் வந்த பிறகு எங்கள் அறிவியல் ஆசிரியர் மிகவும் கண்டிப்பாகிவிட்டார். ஏற்கனவே எங்கள் வகுப்புக்கு வந்த முதல் நாள், நான் இங்கு உங்களுக்கு பாடம் எடுக்க வரவேண்டியதே இல்லை, கல்லூரிக்குப் பாடம் எடுக்கப்போயிருக்கவேண்டும், எனக்கு இங்கு வரவே பிடிக்கவில்லை என்று கொஞ்சம் கசப்பாவும் கோபமாகவும் சொல்லியிருந்ததுவேறு நினைவுக்கு வந்தது. ஐந்து பேர்தான் விஞ்ஞானத்தில் வெற்றிபெற்றிருந்தோம்; நானும் அதில் ஒன்று. ஒரு மதிப்பெண் குறைந்திருந்தால் நானும் தோல்விப்பட்டியலில் இடம்பெற்றிருப்பேன். ஜெ. ஊர்மிளா வெற்றி பெறவில்லை. கொஞ்ச நாளைக்கு அவள் என் பக்கத்தில் வரவில்லை. எங்கள் வகுப்பு கணக்காசிரியர் திடீரென்று விடுப்பில் போனார். அடுத்த மாதம் புதிய ஆசிரியர் வந்தார். அவர் வடநாட்டிலிருந்து வந்ததாக பேசிக்கொண்டார்கள். யாருக்காவது ஹிந்தி தெரியுமா; நான் கையைத் தூக்கினேன். நான் போனவருடம் படித்த பள்ளியில் ஹிந்தி இருந்தது. வெரி குட் என்றார் ஆசிரியர் பாராட்டும்போது சந்தோஷமாகத்தான் இருந்தது.

அன்று மதியம் சாப்பிடும் போது ஜெ. ஊர்மிளா வேகமாக ஒரு பென்சில் பேப்பரை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தாள். அதில் ஹிந்தியில் பாரத் என்று எழுதியிருந்தது. இதைப் படித்துக்காட்டு என்றாள். பாரத் என்றேன். தப்பு தப்பு இது இந்தியா, பாரத் என்று பையன் பெயர் இல்லை, கோமு கோமு இதுகூட உனக்குத் தெரியவில்லை என்றாள். அடுத்த ஆண்டு என் அப்பாவை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள். அதற்குப் பிறகு பல பள்ளிகள் மாறியிருந்தாலும் ஜெ. ஊர்மிளா போல் யாரும் இல்லை என்ற உண்மையைச் நான் சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த குண்டு முகம், சிரிக்கும் கண்கள் என் மனதில் ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது. வெகு எளிதாக என்னால் அவளை அடையாளம் காண முடிந்தது.

ஆங், ஜெ. ஊர்மிளா கேட்டதை பிறகு சொல்கிறேன் என்றேனே, ஜெ. ஊர்மிளா நிரந்தர விலாசத்தில் மதுரை முகவரி இருந்தபோது திரு ஜெயபால், மேடம் கூட மதுரை தான் என்றாரில்லையா, உடனே ஜெ. ஊர்மிளா என் பெயரைக் கேட்டாள். சொன்னேன். உடனே நீங்க திருநகர் சீதாலட்சுமி ஸ்கூலா என்றாள். இல்லையே நான் அந்தப்பக்கம் வந்ததேயில்லை டி.வி எஸ் நகர் டி.வி. எஸ்ஸில்தான் படித்தேன் என்றவாறு என் பார்வையை நகர்த்திக்கொண்டேன். அடுத்த முறை சந்தித்தால் கட்டாயம் சொல்லிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு அன்றைய தபால்களைப் பார்க்க முன்னறைக்குச் சென்றேன்.