கந்த கானாமுதம்

kanda_ganamuthamசில வருடங்களுக்கு முன் வீட்டுக்கு வந்திருந்த என் நடுவயது நண்பர் ஒருவருக்கு என்னிடமிருந்த வீணை காயத்ரியின் இசைத்தொகுப்பொன்றை போட்டுக் காண்பித்தேன். அப்போது எனக்கு ராகங்களைக் குறித்து எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தீராத ஆசை. காயத்ரியின் இசையை ரசித்து சிலாகித்துக் கொண்டிருந்தவர் கண்களிலிருந்து ஒரு கட்டத்தில் தாரை தாரையாக நீர் வழியத் தொடங்கியது. கேட்டு முடித்துவிட்டு சில நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்த அவர், “என்னவோ தெரியவில்லை. எனக்கு சுத்த தன்யாஸியைக் கேட்டாலே மனதை என்னவோ செய்யும். சின்ன வயது ஞாபகங்கள் வரும். அதிலும் வீணை காயத்ரி ராட்சஷி! எப்படி வாசிக்கிறாள்!” என்றார். எனக்கோ படு வெறுப்பாக இருந்தது. எனக்கு அப்போது கல்யாணிக்கும், கரஹரப்ரியாவுக்கும் வித்தியாசம் தெரியாது. சொல்லித் தருவாரும் இல்லை. நானாகப் பல இசைத் தொகுப்புகளை வாங்கி வாங்கிக் கேட்டு ஏதாவது புரிகிறதா என்று பரிசோதித்து படுதோல்வியடைந்து கொண்டிருந்தேன். இவர் என்னடாவென்றால், தான் கேட்டது சுத்த தன்யாஸி என்று சரியாகக் கண்டுபிடிக்கிறார்; ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அது மனதை என்னவோ செய்கிறது என்கிறார். இவர்களுக்கு மட்டும் இதெல்லாம் எப்படித் தெரிகிறது என்று ஆயாசமாக இருந்தது.

“சார், உங்களுக்கு இன்ன ராகத்துல இன்ன ஸ்வரம் வரும்னெல்லாம் தெரியுமா? ஏதாவது ஒரு ஸ்வரத்தைக் கேட்டா அது என்ன ஸ்வரம்னு சரியா சொல்லமுடியுமா?” என்றேன்.

சிரித்துக்கொண்டே, “சத்தியமா தெரியாது” என்றார்.

“அப்புறம் எப்படி சார் இப்போ கேட்டது சுத்த தன்யாஸின்னு சொன்னீங்க?” என்றேன்.

இன்னும் பலமாகச் சிரித்து, “ராகத்தை ரசிக்க ஸ்வரங்களும், இலக்கணமும் தெரியவேண்டும் என்று அவசியமில்லை” என்றார்.

எனக்கு அவர் சத்தியமாகப் பொய் சொல்கிறார் என்றே தோன்றியது.

என் சிறுவயதிலிருந்தே, கர்நாடக சங்கீதம் என்றாலே அது ஏழு ஸ்வரம்தான் என்று ஆழமாகப் பதிந்திருந்தது. இந்த ஸ்வரங்களைத் தெரிந்து கொள்ளாமல், அடையாளம் கண்டு கொள்ளாமல் ராகங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்று உறுதியாக நம்பினேன். இருந்தாலும் ஒரு குருட்டு நம்பிக்கையில் தொடர்ந்து பல கீர்த்தனைகளையும், ராக ஆலாபனைகளையும் கேட்டபடி இருந்தேன். இறுதியில் ஒரு மந்திரக்கதவு திறந்தது. வரிசையாக மோகனம், கல்யாணி, நளினகாந்தி, நாட்டை, கேதாரகெளளை என ஒவ்வொன்றாக உள் நுழைந்தது. ஸ்வரங்களைப் பற்றியோ, இலக்கணம் பற்றியோ அறியாமல் ராகங்களைப் புரிந்துகொள்ள முடியும் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஒவ்வொரு ராகத்துக்கென்றும் ஒரு உணர்வு, ஒரு அழகு, ஒரு பாவம், ஒரு லட்சணம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு நிறத்தைப் பார்த்தவுடன் சட்டென்று விளங்கிக் கொள்வதைப் போல இசையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று தெரிந்தது. ஆனால் அதற்கென்று நம் காதுகள் கொஞ்சம் பழக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிந்தது.

இதைப்போல, ஒவ்வொரு ராகமாகக் கையைப் பிடித்து இழுத்து வந்து “இதோ பார்த்துக்கொள்” என்று காட்டும் அனுபவம் எஸ்.ராஜம் அவர்கள் பாடி ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘கந்த கானாமுதம்’ என்ற இசைத்தொகுப்பைக் கேட்டால் கிடைக்கிறது. மொத்தம் 72 ராகங்களை இத்தொகுப்பில் ஒரு சிறு ஆலாபனையாகவும், ஒரு எளிய கீர்த்தனையாகவும் பாடியிருக்கிறார் எஸ்.ராஜம். தேர்ந்த ஓவியரும், மிகச்சிறந்த பாடகருமான எஸ்.ராஜம், ஒவ்வொரு ராகத்தைக் குறித்தும் ஒரு தெளிவான, அழுத்தமான சித்திரத்தைத் தன்னுடைய ராக வெளிப்பாட்டில் தருகிறார். தன்னுடைய சங்கீத மேதைமையை முன்வைக்காமல், ராகத்தைப் பற்றிய தெளிவான புரிதலையும், வடிவத்தையும் கேட்பவர்களுக்குத் தருகிறார்.

இந்த இசைத்தொகுப்பிலுள்ள பாடல்கள் 1930-ஆம் ஆண்டு திரு.கோடீஸ்வர ஐயர் அவர்களால் எழுதப்பட்டவை.

கர்நாடக சங்கீதத்தின் 72 மேளகர்த்தா ராகங்களை கோடீஸ்வர ஐயர் 1930-களில் தொகுத்துப் புத்தமாக வெளியிட்டார். ஒரு ராகத்தின் ஆரோஹனம், அவரோஹனம், தானே எழுதிய ஒரு சிறு பாடல் என்று 72 ராகங்களுக்கும் இவர் உயிர் கொடுத்து ஒரு புத்தகத்தை எழுதினார். இந்த சிறுபாடல்களில் பெரும்பாலானவை தமிழில் அமைந்தவை. தன் குலதெய்வமான முருகன் மீது இப்பாடல்களை இவர் எழுதியதால் இப்புத்தகத்துக்கு ‘கந்த கானாமுதம்’ என்று பெயர் வைத்தார்.

கோடீஸ்வர ஐயர் எழுதிய இப்புத்தகத்துக்கு மூலமான 72 மேளகர்த்தா ராகங்களின் அட்டவணை, 16-ஆம் நூற்றாண்டில் வெங்கடமகி என்ற இசைமேதையால் தொகுக்கப்பட்டவை. அறிவியலாளர் மெண்டலீஃப் முன்வைத்த “தனிம வரிசை அட்டவணை” (Periodic Table) வேதியியலில் எந்த அளவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ, அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது வேங்கடமகியின் மேளகர்த்தா ராகங்களின் தொகுப்பு. நம் கர்நாடக இசை வரலாற்றின் ஒரு முக்கியமான நிகழ்வு வேங்கடமகியின் மேளகர்த்தா ராக அட்டவணை. வேங்கடமகி இப்படி ஒரு அட்டவணையை முன்வைக்கும்வரை, வெறும் 19 ராகங்களே கர்நாடக இசையில் பிரபலமாக இருந்திருக்கின்றன. அரிதாக உபயோகப்படுத்தப்பட்ட சில ராகங்களோடு சேர்த்து அதிகபட்சம் நாற்பது ராகங்கள் புழங்கி வந்திருக்கின்றன. வெங்கடமகி அடிப்படை ஸ்வரங்களைக் கணித வரிசைப்படுத்தி ஆரோஹணம், அவரோஹணத்தில் முழுமையாக ஏழு ஸ்வரங்கள் இருக்கும் 72 ராகங்களை அட்டவணைப்படுத்தினார்.

மனிதக் காதுகளால் 22 ஸ்வரங்களைப் பிரித்தறிய முடியும் என்று அறிவியல் சொல்கிறது. சீன மரபிசையில் இன்னும் 22 ஸ்வரங்களை உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த 22 ஸ்வரங்களிலும் வெகு துல்லியமாகப் பிசிறில்லாமல் நாம் அறிய முடிவது 12 ஸ்வரங்களேயாகும். மேற்கிசையிலும் இந்திய இசையிலும் மேலும் இந்த 12 ஸ்வரங்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. (ச-ரி-க-ம-ப-த-நி-ஸ என்று ஏழு ஸ்வரங்கள் என்று சொன்னாலும் சின்ன ரி, பெரிய ரி என ரி, க, ம, த, நி இவை இரண்டிரண்டாக இருக்கும்). வேங்கடமகி இந்த 12 ஸ்வரங்களோடு சேர்த்து மேலும் நான்கு ஸ்வரங்களை இணைத்து 16 ஸ்வரங்களாக்குகிறார். (ரி, க, ப, த ஆகியவை மூன்று மூன்றாக இருக்கும்). 16 ஸ்வரங்களிலிருந்து ஏழு ஆரோஹணம், ஏழு அவரோஹணங்கள் இருக்கும் முழுமையான ராகங்களை இவர் அட்டவணைப்படுத்தியதே ‘வேங்கடமகி மேளகர்த்தா அட்டவணை’. இதில் அவர் இசையினிமையை அளிக்காத ஸ்வரக்கூட்டுகளைத் தவிர்த்தே 72 ராகங்களைத் தந்திருக்கிறார். ஆக, கணிதமுறையையும், இசை இனிமையையும் முன்வைத்துக் கிடைக்கும் அதிகபட்ச சம்பூர்ண ராகங்கள் இந்த 72 ராகங்கள். “12 அடிப்படை ஸ்வரங்களைக் கொண்டு 72 ராகங்களைத் தர முடியும் என ஒரு தென்னிந்திய மேதை நிரூபித்திருக்கிறார். இந்த மேளகர்த்தா திட்டம் தர்க்க ஒழுங்குடனும், கணித நேர்த்தியுடனும், இசையினிமையுடனும் இருக்கிறது” என்று சொல்கிறார் பிரபல இசை வல்லுநர் பேரா.சாம்பமூர்த்தி. (வேங்கடமகி 16 ராகங்களைக் கொண்டு அட்டவணையைத் தந்திருந்தாலும், அவற்றில் நான்கு துணை ஸ்வரங்கள் என்றறியப்படுகின்றன.)

ஆனால் இந்த 72 ராகங்களில் நாற்பது ராகங்கள் “விவாதி” தோஷமுடையவை என்ற ஒரு கருத்து சென்ற நூற்றாண்டில் பிரபலமாக இருந்தது. விவாதி தோஷமுடைய பாடல்களைப் பாடுவது இசையை அவமதிப்பது போன்றது, அதனால் பெரும்பாவம் வந்து சேரும் என்று பலர் நம்பினார்கள். அதனால் அந்த நாற்பது ராகங்களைப் பாடுவதை பெரும்பாலான இசைக்கலைஞர்கள் தவிர்த்து வந்தனர். இப்படிப்பட்ட ராகம் சார்ந்த பல மூட நம்பிக்கைகள் நம்மிடையே நிலவியிருக்கின்றன. ரஞ்சனி ராகத்தில் பாடினால் குஷ்டம் வரும், வராளி பாடினால் குருவுடனான உறவு முறிந்துவிடும் என்ற அபத்த நம்பிக்கைகள் கூட நிலவியிருக்கின்றன. அவற்றைப் போன்ற ஒன்றுதான் விவாதி ராகங்களைப் பாடினால் பாவம் வரும் என்பது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கூட சில சங்கீத குருக்கள், தங்கள் சீடர்களிடம் விவாதி ராகங்களை வெளியில் பாடக்கூடாது, வீட்டில் மட்டும் பாடிப்பழகிக்கொள்ளலாம் என்ற நிபந்தனையோடும், சத்தியம் வாங்கிக்கொண்டும் விவாதி ராகங்களைச் சொல்லித்தந்திருக்கிறார்கள். ஆனால் விவாதி ராகங்களைப் பாட நல்ல பிசிறில்லாத குரல்வளமும், பல ஸ்வரஸ்தானங்களில் நின்று பாடும் ஆற்றலும் இருக்க வேண்டும் என்பதுதான், விவாதி ராகங்களைப் பலரும் புறக்கணித்ததன் உண்மையான காரணம்.

செம்மங்குடி ஸ்ரீனிவாஸ ஐயருக்குக் கூட விவாதி ராகங்களைக் குறித்து ஒரு பெரிய கசப்புணர்வு இருந்திருக்கிறது. அவை அசைவ ராகங்கள் எனக் கிண்டலாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் தோஷம், பாவம் என்றெல்லாம் சொல்லாமல் அவை இனிமையான இசையுணர்வைத் தருவதில்லை என்பதையே குறையாகச் சொல்லியிருக்கிறார். அவரைக் கடுமையாக மறுத்து விவாதி ராகங்களிலும் இசையினிமை உண்டு என வாதிட்டிருக்கிறார் பாலமுரளிகிருஷ்ணா. சமீப காலம் வரையிலேயே கூட விவாதி ராகங்களைக் குறித்து இத்தனை விவாதங்கள் நடந்திருக்கின்றன என்றால் சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் எத்தனை வெறுப்புணர்வு இருந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இத்தனைக்கும் தியாகராஜர் ‘கானமூர்த்தி’ (கானமூர்த்தி ராகம்) கீர்த்தனை, முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் ‘ஸ்ரீ ராம சரஸ்வதி’ (நாஸிகாபூஷனி ராகம்) கீர்த்தனை என விவாதி ராகங்களில் கீர்த்தனை இயற்றியிருக்கிறார்கள். ஆனாலும் ரக்தி ராகங்களில் பாவ பூர்வமாகப் பாடுவதே சிறந்த சங்கீதம் என விவாதி ராகங்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். சஞ்சய் சுப்ரமணியன் கூட இதைக் குறித்துக் கிண்டலாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

கோடீஸ்வர ஐயர்
கோடீஸ்வர ஐயர்

இந்தப் பின்னணியில்தான் 72 மேளகர்த்தா ராகங்களையும் அங்கீகரித்துப் பாடிப் பரப்பிய வித்வான்களும், வாக்கேயக்காரர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இசைக்கலைஞர்களாகிறார்கள். மகா வைத்தியநாத சிவன் 72 ராகங்களையும் கொண்ட ராகமாலிகை ஒன்றை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயற்றினார். ஆனால் தனித்தனியாக ஒவ்வொரு ராகத்திலும் பாடல் ஒன்றை இயற்றி அவற்றைப் பதிப்பித்தது வித்வான் கோடீஸ்வர ஐயர். 1930களில் இவர் ‘கந்த கானாமுதம்’ என்ற பெயர் இப்பாடல் தொகுப்பைப் பதிப்பித்தபோது தமிழில் கீர்த்தனைகள் செய்வது அவ்வளவு உவப்பான விஷயமாகக் கருதப்படவில்லை. ஆனாலும் இந்த 72 பாடல்களில் பலவற்றைத் தமிழ்க் கீர்த்தனையாக இயற்றித் தாமே அவற்றைப்பாடி ராகங்களையும், கீர்த்தனைகளையும் பிரபலப்படுத்தவும் செய்தார் கோடீஸ்வர ஐயர்.

சங்கீத மேதை எஸ்.ராஜம் இப்பாடல்களை ஆல் இந்தியா ரேடியோவில் வாரம் ஒரு கீர்த்தனையாகப் பாடி, அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. தன்னுடைய மகளின் தூண்டுதலில், தன்னுடைய 72-ஆம் வயதில் 1991-ஆம் வருடம், இப்பாடல்களைப் பாடி கேசட்டுகளாக வெளியிட்டார் எஸ்.ராஜம். அந்த கேசட்டுகளைத்தான் இந்த வருடம் ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம் குறுந்தகடு வடிவில் வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 72 இசைக்கோர்வைகளைக் கொண்ட மூன்று குறுந்தகடுகளாக இத்தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 72 மேளகர்த்தா ராகங்களையும் ஒரு சிறு ஆலாபனை, கோடீஸ்வர ஐயரின் கீர்த்தனை என்று பாடியிருக்கிறார் எஸ்.ராஜம்.

விவாதி ஸ்வரங்களை, இதர ஸ்வரங்களோடு சேர்த்து ஒரு ஆலாபனையாகச் செய்வது கொஞ்சம் கஷ்டமான வேலை. பிசிறில்லாத குரல் இருக்க வேண்டும். நல்ல பயிற்சியும் தேவை. எஸ்.ராஜத்தின் இளவயதுக் கச்சேரிகள் சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். இயல்பிலேயே வெகு இனிமையான குரல்வளமுடையவர் அவர். இருந்தாலும் 72 வயதிலும் அவ்வளவு அழுத்தமாகவும், இனிமையாகவும், உச்சரிப்புகளைத் தெளிவாகவும், திருத்தமாகவும் பாடி பிரமிக்க வைத்திருக்கிறார் ராஜம்.

இத்தொகுப்பை வாங்கியவுடன் நான் ஏற்கனவே ஒரே ஒரு முறையோ, இல்லை திரைப்பாடல்களிலோ மட்டுமே கேட்டிருந்த ராகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். முதலில் கேட்டது ‘பாவனி’ ராகம். ‘குணா’ திரைப்படத்தில் வரும் ‘பார்த்தவிழி பார்த்தபடி’ என்ற பாடல் மட்டும்தான் இந்த ராகத்தில் நான் கேட்ட ஒரே ஒரு படைப்பு. ராஜம் இந்த ராகத்தை ஆரம்பித்தவுடனேயே மனதில் ஒரு திகைப்பும், ஆச்சரியமும் உண்டானது. மெல்ல மெல்ல காரிருள் மறைந்திருக்கும் உருவத்தின் கோட்டுருவம் சிறு மெழுகுவர்த்தியால் கொஞ்ச கொஞ்சமாகக் கண்ணுக்குத் தெரிவது போன்ற உணர்வு. கொஞ்ச கொஞ்சமாக என் பிரமிப்பு அதிகமாகிக் கொண்டே போனது. ‘கவி குஞ்சரதாசன் உன்னுள் இருக்க….’ என்னும் வரிகளில் நிஜமாகவே கண்ணில் நீர் கோர்த்து விட்டது. பெரிய அருவியை வெகு அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வு என்னை விட்டு அகல வெகு நேரமானது. அந்த ராகத்திலிருந்தும், வசீகரமான ராஜத்தின் குரலிலிருந்தும் மீண்டு அடுத்த பாடலைக் கேட்க வெகு பிரயத்த்தனப்பட்டு மனதைத் தயார் செய்ய வேண்டியிருந்தது.

ஒரேயொரு கீர்த்தனையில் மட்டுமே நான் அதுவரை கேட்டிருந்த கனகாங்கி (ஸ்ரீ கனநாதம் – கீர்த்தனை), ஒரேயொரு திரைப்பாடலில் மட்டுமே கேட்டிருந்த நாடகப்ரியா (‘நெஞ்சே குருநாதரின்’ – மோகமுள்), அதுவரை எங்குமே கேட்டிராத யாகப்ரியா, ஜலார்ணவம், தானரூபி போன்ற ராகங்களையும் உருட்டி, உருட்டிக் கையில் தந்தபடியே இருந்தார் ராஜம். ஒரு கீர்த்தனையில் கூட வெறும் கணக்கு, வழக்கான சடங்காக இல்லாமல், பாவம் நிறைந்த, உணர்வுகளை நிறைக்கக் கூடிய அக எழுச்சியைத் தருகிறார் ராஜம். வெறும் ஸ்வரங்கள் மட்டுமே ராகமில்லை, அதன் பாவம், உணர்வும்தான் மிக முக்கியம் என ஒரே ஒரு ஸ்வர வேறுபாடு கொண்ட ராகங்கள் மூலம் அழுத்தமாகக் காட்டுகிறார்.

தேர்ந்த ஓவியக்கலைஞருமான ராஜம் (உண்மையில் இவர் ஓவியர் என்று மட்டுமே பிரபல ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறார்), இந்த 72 ராகங்களையும் அடிப்படையாகக் கொண்டு 2008-ஆம் வருடத்தின் காலண்டரைச் சிறந்த ஓவியங்களோடு அளித்திருந்தார். அதைப்போலவே வேங்கடமகியின் மேளகர்த்தா அட்டவணையையும் சிறப்பான ஓவியங்களோடு வெளியிட்டிருக்கிறார். இத்தனை மேதைமைகளை ஒருங்கே கொண்டிருந்த நம் தேசத்தின் மகத்தான கலைஞரான ராஜம், சென்ற ஜனவரி மாதம் தன்னுடைய 90-ஆவது வயதில் நம்மை விட்டு மறைந்தார். சரியான சமயத்தில் வெளியாகியிருக்கும் இந்த இசைத்தொகுப்பு ராஜத்துக்குச் செய்யப்படும் மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கிறது.

திரு.லலிதா ராம் அவர்களின் ‘கந்த கானாமுதம்’ அறிமுகக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.

‘கந்த கானாமுதம் இசைத்தொகுப்பை இணையத்தில் இங்கே வாங்கலாம்.