வெளிப்பாடுகளின் திரைப்படங்கள்: சைத்தானின் அரசியல்

திரு.அரவிந்தன் நீலகண்டன் ஹாலிவுட் திரைப்படங்களில் அறிவியல் குறித்து எழுதும் புதிய தொடர் இது. இத்தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க : முதல் பகுதி | இரண்டாம் பகுதி

அந்தச் சிறுவன்….அவன் தான்…சைத்தான் அல்லது அந்திக்கிறிஸ்து அல்லது சைத்தானின் கையாள்
அவனால் அவன் குடும்பத்தில்தான் எத்தனை சாவுகள், பாட்டி …அத்தை…விபத்துக்கள்
அவனைத் தண்டிக்க வேண்டும். அவனைத் தடுக்க வேண்டும். இதோ ஆண்டவனின் ஊழியர் வருகிறார்…

பிபிஸியின் டெஸ்பாச் எனும் செய்தி சேகரிப்பு நிகழ்ச்ச்சியில் இது காட்டப்படுகிறது.[1] அதேசமயம் இது ஏதோ ஆப்பிரிக்காவின் தனித்துவம் என்பதாக -ஆப்பிரிக்க சமுதாயத்தில் இருக்கும் ஏதோ ஒரு விரும்பத்தகாத விஷயம் கிறிஸ்தவத்தில் கலந்துவிட்டது. இது தூய கிறிஸ்தவம் அல்ல- என்பதாக அந்த ஐரோப்பிய செய்தி சேகரிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார். சூடு வைக்கப்பட்டு, கண்களில் சாராயம் விடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட இத்தகைய சைத்தான்களின் குழந்தைகள், சைத்தான்களே குழந்தைகளாக எத்தனையோ இருக்கிறார்கள் அந்த குழந்தைகள் காப்பகத்தில் -அவர்கள் குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு- வந்து ஒதுங்குகிறார்கள். ஆப்பிரிக்க பாரம்பரிய நம்பிக்கைகளே கிறிஸ்தவம் இவ்வாறு மானுடத்தன்மையற்று மாசுபட்டமைக்கு காரணம் என சொல்கிறார்கள்.

அந்தச் சிறுவன்….அவன் தான்…சைத்தான் அல்லது அந்திக்கிறிஸ்து அல்லது சைத்தானின் கையாள்
அவனால் அவன் குடும்பத்தில்தான் எத்தனை சாவுகள், பாட்டி …அத்தை…விபத்துக்கள்
அவனைத் தண்டிக்க வேண்டும். அவனைத் தடுக்க வேண்டும். இதோ ஆண்டவனின் ஊழியர் வருகிறார்…

இது பிபிஸியின் டெஸ்பாச் செய்தி சேகரிப்பு அல்ல. 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் திரைப்படம். ஓமென்(Omen). சகுனம். 1976 இன் மிக அதிக வசூலைத் தேடிக்கொடுத்த திரைப்படமாக அது அமைந்தது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை தயாரித்த டேவிட் செல்ட்ஸரின் நாவல் அதே பெயரில் அதே வருடம் வெளிவந்தது. நாவலிலும் திரைக்கதை அமைப்பின் மூலவடிவிலும் சைத்தானின் வருகையை “ஓம்” என ஓதி முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. நாவலில் ஹிட்லரின் பிறப்பை இதே இருட்சக்திகள் இவ்வாறே ஓதி கொண்டாடியதாக சொல்கிறது. சைத்தானின் குழந்தை. ஓநாயின் மூலமாக பிறக்கும் குழந்தை. ஒரு முக்கிய அதிகாரியின் மானுடக்குழந்தையைக் கொன்று அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. இதில் கிறிஸ்தவ பாதிரிகளுக்குள்ளும் ஒரு கும்பல் சைத்தானின் கையாட்களாக இயங்குகிறது. பெண்கள், இயற்கை மதச்சார்பற்ற மனநிலை இவை அனைத்துமே சைத்தானுக்கு ஆதரவாக இயங்குவதாக திரைப்படம் காட்டுகிறது. இறுதியில் ஏசுவின் முன்னால் ஒரு சிறுகுழந்தை வழிபாட்டுத்தலத்தில் சடங்கு ரீதியில் பன்னிரெண்டு கத்திகளால் கொலைச்செய்யப்படும் போது அந்த சடங்கு காவல்துறையால் நிறுத்தப்பட்டு சைத்தானின் குழந்தை தப்பிவிடுகிறது. மீண்டும் அதே சுழல். இத்திரைப்பட வரிசையின் மூன்றாவது படத்தில், சைத்தான் வளர்ந்து தன் ஆட்சியை நிலைநிறுத்தப் போகும் போது ஏசுவிடம் நேருக்கு நேர் சவால் விடும் போது அந்தி கிறிஸ்து ஒரு பெண்ணால் கொல்லப்படுகிறான்.. (இப்பெண் தன் மகனை அந்திகிறிஸ்துவால் இழந்துவிடுகிறாள். பின் அவனைக் கொல்கிறாள். கத்தோலிக்க இறையியலில் சைத்தானை காலில் போட்டு மிதிப்பவளாக மேரி காட்டப்படுகிறாள். ஆனால் இத்திரைப்படத்தில் இப்பெண் சைத்தானுக்கு தொடக்கத்தில் தன்னை அறியாமல் உடந்தையாக இருக்கிறாள். இவள் ஒரு சாதாரண மானுடப் பெண். தூய புரோட்டஸ்டண்ட் இறையியலில் மேரி வணக்கம் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட திரிபு. அடிப்படைவாத புரோட்டஸ்டண்டுகளுக்கோ அது ஒரு சைத்தானிய சூழ்ச்சி. இப்பெண்ணை மேரியின் மானுட எதிரொலியாக எடுத்துக் கொண்டால் இந்த புரோட்டஸ்டண்ட் அடிப்படைவாதத்தின் ஒரு மென்மைப்படுத்தப்பட்ட மேரி வழிபாட்டு விமர்சனமாக இதை காண இடமிருக்கிறது.)

இத்திரைப்படத் தொகுப்பே மதச்சார்பற்ற சமுதாயத்தின் மீதான அடிப்படைவாத கிறிஸ்தவத்தின் விமர்சனம் எனலாம். முதலாவது படத்தில் கிறிஸ்தவ பாதிரிகளிலேயே ஒரு சைத்தானிய குழு இருப்பதாக சொல்வது சோவியத் ஆதரவு பாதிரிகள் குறித்த சித்தரிப்பு என்பது தெளிவானது. அதே நேரத்தில் இத்திரைப்படத்தொகுதியின் இரண்டாவது படத்தில் மதச்சார்பற்ற உலகளாவிய முதலியத்தின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. விடுதலை இறையியலை எவாஞ்சலிக்க கிறிஸ்தவம் உள்வாங்க செய்த ஒரு பிரயத்தனத்தின் திரைப்பட பிரதிபலிப்பு. வளரும் நாடுகளின் உணவு உற்பத்தியை பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் கைகளுக்குள் வைத்துக் கொள்வது “உணவை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள் மக்களையும் கட்டுப்படுத்துகிறார்கள்” என்று கம்பெனிக்குள் ஊடுருவும் சைத்தானின் துணைவர்கள் சொல்வதாக வருவது சூழலியல் ஆர்வலர்களுக்கு பரவசத்தைக் கூட ஏற்படுத்தலாம்.

யார் இந்த சைத்தான்? ஏன் அவன் மீது மேற்கத்திய ஊடகத்தில் இத்தனை கவர்ச்சி?

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய இறையியலில் சைத்தான் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறான். அவன் ஒரு கீழ்விழுந்த தேவதை (fallen angel). எலைன் பாகல்ஸ் எனும் விவிலிய அறிஞர் சைத்தான் குறித்த உருவகங்கள் எவ்விதமாக ரோம பேரரசின் கீழ் இருந்த யூத குறுங்குழுக்களில் வளர்ந்தன என விவரிக்கிறார். நம்மில் ஒருவராக இருந்து அன்னியமானவன் என்பது இச்சித்தரிப்பில் முக்கியமான ஒன்றாக அமைந்தது. அதாவது ரோம சாம்ராஜ்ஜியத்தின் மேலாதிக்கத்தின் கீழ் வாழ்ந்த யூதர்களை இந்த தீவிரவாத தூய்மைவாத குறுங்குழுக்கள் சைத்தானாக உருவகப்படுத்தப்பட்டன. பின்னர் எதிரிகள் சைத்தான்களாக சித்தரிக்கப்பட்டனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தூயவாதத்தின் அடிப்படையில் உருவாகிய கிறிஸ்தவத்தின் சைத்தானின் வேர்கள் பாரசீக ஸொராஸ்டிரீய மதத்தில் இருந்து பெறப்பட்டவை என்பதுதான். கிறிஸ்தவம் இன்னும் முழுமையாக இந்த நசத்தானின் தொன்மத்தை ரோமில் அப்போது நிலவிய இரானிய வழிபாட்டு முறையான மித்திரானிய இறையியலிலிருந்து உட்கிரகித்துக் கொண்டது.

இருபதாம் நூற்றாண்டின் மேற்கத்திய சைத்தானிய கதையாடல்களை அறிந்து கொள்ள Dispensationalism என்கிற புரோட்டஸ்டண்ட் இறையியல் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் மற்றும் நவீனத்துவத்துக்கான ஒரு முக்கியமான எதிர்வினையாக புரோட்டஸ்டண்ட் மதமும் அதன் இறையியலும் இருந்தன. அடிப்படைவாதமும் தூய கிறிஸ்தவ வாதமும் அதன் முதுகெலும்பாக அமைந்தன. அமெரிக்க பூர்விகக் குடிகளின் அழிவை “வாக்களிக்கப்பட்ட பூமியாக” அமெரிக்காவையும் காலனிய குடிகளாக பூர்விகர்களையும் சித்தரித்து அவை நியாயப்படுத்தின அம்மட்டில் இம்மதம் அமெரிக்க பண்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்தது. ஆனால் நவீனத்துவத்தையும் அமெரிக்கா சுவீகாரம் செய்து கொள்வது தவிர்க்க இயலாததாகும் போது இது ஒரு மோதலை இன்றியமையாததாக்கியது. அதன் விளைவாக அமெரிக்க மத-மன மண்டலத்தில் நன்றாக நங்கூரமிட்டுக் கொண்டதுதான் Dispensationalism. சீர்குலையும் மானுட சமுதாயத்தை எவ்வாறு ஆண்டவர் கணக்கு தீர்த்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் இக்கோட்பாட்டின் மையம். அதனை நோக்கி எப்படி சமூகம், பொருளாதாரம், அரசியல் அனைத்தும் செல்கின்றன என்பதை இந்த அடிப்படைவாத
எதிர்கால கணிப்பர்கள் விவிலிய அடிப்படையில் நோக்குகிறார்கள்.

ஓமென் படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் முகத்திலடிக்கும். உலகத்தின் எதிர்காலத்தை சொல்லுவதாக சொல்லும் விவிலிய வெளிப்பாடுகள் முழுக்க முழுக்க மேற்கத்திய உலகின் அரசியலையே சார்ந்திருக்கிறது என்பதுதான் அது. இந்த ‘வெளிப்பாடு’ ‘மானுடத்துடன் கணக்கு தீர்க்கும் அரசியல்’ அனைத்துமே மிக வெளிப்படையாக வெள்ளை-இனவாதத்துடன் அல்லது நுண்ணிய மென்மையுடன் மேற்கத்திய மையப் போக்குடன் இணைக்கப்பட்ட பார்வைதான். உதாரணமாக டான் கேமான் (Don Gayman) சர்ச் ஆஃப் இஸ்ரேல் எனும் வெள்ளை இனமேன்மைவாத கிறிஸ்தவ சபை நிறுவன போதகர் இந்த பார்வையை விளக்குகிறார்: “அமெரிக்க அரசின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது. நாம் ஏற்கனவே ஒரு உலகளாவிய புரட்சியின் தொடக்கப்பிடியில் இருக்கிறோம்….சைத்தானின் கையாட்கள் அந்தி கிறிஸ்துவின் சதி வேலையில் ஏற்கனவே தீவிரமாக இயங்கி கிறிஸ்துவ பண்பாட்டையும் வெள்ளை இனத்தையும் அழிக்க சதியில் இறங்கியுள்ளனர்.. …இரத்தம் பெருக்கெடுத்து இந்த மாபெரும் நாட்டின் மண்ணில் ஓட இறுதி வெற்றி ஏசு கிறிஸ்துவுக்கா சைத்தானுக்கா என்பது தீர்மானிக்கப்படும். நார்டிக் இனத்தைச் சேர்ந்த நாம் ஏசு கிறிஸ்துவை நம்பும் நாம் இந்த தேசம் இந்த போரில் நமதாக இருக்கும் என நம்புகிறோம்.”

ஓமென் படங்கள் இத்தனை வெளிப்படையான இனவாதத்துடன் பேசவில்லையே தவிர இதே கருத்தியலை முன்வைக்கின்றன. ஓமென் படங்கள் சோவியத்-அமெரிக்க பனிப்போர் காலத்தில் வந்தன. ஆனால் அண்மையில் வெளியான “Left Behind” எனும் படங்கள் ஓமென் மெல்ல பேசிய, பயமுறுத்தும் அற்புத செயல்களால் மூடி மறைத்து காட்டிய சைத்தானிய அரசியலை இன்னும் அரசியல் படுத்தியே முன்வைக்கின்றன. Rapture எனப்படும் பரவச-உடல் நீங்குதல் மூலம் நல்ல கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவ ஆண்டவனால் பூவுலகிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் நடக்கும் கடுமையான அரசியல் சூழலில் அமைதியையும் ஓருலக அரசையும் வழங்குபவனாக அந்தி கிறிஸ்து வருகிறான். அவனை கையளவு கிறிஸ்தவ விசுவாசிகளே அறிவர். இந்த கிறிஸ்தவ விசுவாசிகள் தொடக்கத்தில் முழுமையான விசுவாசிகளாக இல்லாமல் மதில் மேல் பூனைகளாக இருந்தவர்கள் (திரைப்பட பார்வையாளர்கள்) இவர்களே இறுதியில் அந்தி கிறிஸ்துவை அவனது படையை எதிர்ப்பவர்கள். இத்திரைப்படம் வீடியோ விளையாட்டாகவும் வெளிவந்து சக்கை போடு போட்டது. அந்தி கிறிஸ்துவின் பிடியில் இருக்கும் அஞ்ஞானிகளை கிறிஸ்தவ விசுவாசி விளையாட்டுக்காரர்கள் மனம் மாற்றி கிறிஸ்துவின் பக்கம் திருப்ப வேண்டும்….இல்லையேல் மாற மாட்டார்கள் என நிச்சயமாக தெரிந்தால் தீர்த்துகட்ட வேண்டும். வீடியோக்களிலிருந்து முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் விதத்தில் நிஜவாழ்க்கைக்குள் இந்த மனநிலை நுழைகிறது. ஒபாமாவை அந்தி-கிறிஸ்து என சொல்லும் பல வீடியோக்கள் அமெரிக்க மின்னணு மனவெளியெங்கும் ஒழுகி ஓடுகின்றன.. இல்லையெனில் அராபியர்கள். நிச்சயமாக தியானத்தையும் நீயே கடவுள் எனும் அத்வைதத்தையும் சொல்லும் ஹிந்துக்கள், இறைவனை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் மலிந்து கிடக்கும் ரஷியா…ஈரான்…யூத கையாட்கள்…சைத்தானாக பாவிக்க முடிந்த பட்டியல் நீள்கிறது. அமெரிக்க காவல்துறை அண்மையில் கிறிஸ்துவின் வருகையை துரிதப்படுத்த நாடு தழுவிய ஆயுத தாக்குதலை நடத்த திட்டமிட்ட கிறிஸ்துவ ராணுவ அமைப்பொன்றை கைது செய்துள்ளது.

கோக்கோ கோலா பாட்டில்களுடனும் ஊதிப்பெருத்த உடலுடனும் பரலோக ராச்சியத்தின் பதின்ம வீரர்கள் வீடியோக்களில் ஒபாமாவின்/ஆசியாவின்/ரஷியாவின் அந்திக்கிறிஸ்து வீரர்களை குறிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ உள்ளூர் தீர்க்கதரிசி எப்படி இணையதளம் அந்திகிறிஸ்துவின் தந்திரம் என்பதைக் குறித்து ஆவேசப்பரவசத்துடன் உரை நிகழ்த்துகிறார்.
பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது.

அடுத்து : – ஹாலிவுட் பேயோட்டிகள்: மனவியலும் இறையியலும் மோதும் தருணம்

குறிப்பு :

1. பிபிஸி செய்தி நிறுவனத்தின் ஆவணப்படமான ”Return to Africa’s witch children” எனும் ஆவணப்படத்தை இந்த தொடர்பில் பார்க்கலாம் : http://www.youtube.com/watch?v=SbGzFN_NalI. இந்த ஆவணப்படத்தின் பிற பகுதிகளையும் பார்க்க முடியும்.

One Reply to “வெளிப்பாடுகளின் திரைப்படங்கள்: சைத்தானின் அரசியல்”

Comments are closed.