முதலியத்தை விமர்சிக்கும் மர்ம நாவல்கள்

stieg_larsson

ஸ்டீக் லார்ஷொன் (Stieg Larsson) என்ற ஸ்வீடன் நாட்டு எழுத்தாளரின் மர்ம நாவல்கள் கடந்த சில வருடங்களில் 12 மிலியன் பிரதிகள் விற்ற புத்தகங்கள். அவர் மொத்தம் மூன்றுதான் எழுதி இருக்கிறார். நான்காவதற்காக நிறைய பக்கங்களை எழுதிய பிறகும், அதை முழுதாக முடிக்காமல் மாரடைப்பில் இறந்து விட்டிருக்கிறார். மூன்றுமே அவர் இறந்த பின் வெளியாயின. 1997 இல் இந்தத் தொடர் நாவல்களை எழுதத் துவங்கி, 2003-ல் முதல் புத்தகத்தைப் பிரசுரகர்த்தர்களுக்கு அனுப்பி இருக்கிறார். அது 2004 இல் முடிந்து, 2005 இல் வெளியாகி மேலை நாடுகளெங்கும் பரபரப்பாக விற்றிருக்கிறது. ஆனால் அது தயாராகும்போதே மற்ற இரண்டையும் முடித்திருக்கிறார். இவை பிரசுரமாகிப் பிரபலமானதை அறியாமலே, இறந்து போனார்.  மர்ம நாவல்கள் வழியே சமூக, பொருளாதார, அரசியல் விமர்சனத்தைக் கூர் தீட்டிக் காட்டியது இவருடைய ஒரு முக்கிய பங்களிப்பு. இந்த மூன்று நாவல்களும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.  தற்போது முதல் இரண்டும் மேலை நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.  மூன்றாவது சமீபத்தில்தான் ஸ்வீடனில் வெளியாகி இருக்கிறது.

இந்த விமர்சனம் முதல் புத்தகத்தையும், அதை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி மேற்கில் பல நாடுகளிலும் விமரிசையாக ஓடி இருக்கிற ஒரு திரைப்படத்தையும் பற்றியது. புத்தகத்தின் பெயர் ‘ட்ராகன் உருப் பச்சை குத்திய பெண்’ (The Girl With the Dragon Tattoo, 2005 in Swedish, 2008 in English) படத்திற்கும் அதே பெயர், வெளியானது 2009இல்.

ஸ்டீக் லார்ஷொன் ஒரு முன்னாள் பத்திரிகையாளர், இடதுசாரி ஆர்வலர், இளமையில் சில வருட ட்ராட்ஸ்கியச் சிந்தனையாளர், ஸ்வீடனின் இடது சாரி அரசியல் இயக்கத்தில் பங்கெடுத்தவர்.  கடைசி சிலவருடங்களில் ஒரு நாளில் கணக்கற்ற கோப்பைகள் காஃபியும், எண்ணற்ற சிகரெட்டுகளையும் (தானே காகிதத்தில் புகையிலையைச் சுருட்டித் தயாரிப்பாராம்) பயன்படுத்தி, சரியாக உணவு உண்ணாமல், 18 மணி நேரமெல்லாம் வேலை செய்து, இரவெல்லாம் உறங்காமல் கதை எழுதிச் சாவை விரைவாகத் தேடிப் போயிருக்கிறார்.  ஆனால் இவ்வளவு தீவிரமாக சமூக விமர்சனத்தில் இறங்கிய அவர் ஏன் மர்ம நாவல்களை எழுதினார்?  பணத்துக்காக என்று கூட நாம் சொல்ல முடியாது.  ஏனெனில் அவை அவ்வளவு பிரபலமாகும் என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தவிர முதல் நாவல் வெளிவரும் முன்னரே அவர் இறந்துவிட்டார்.  முதலியத்தின் தீவிர விமர்சகரின் புத்தகங்களை வைத்து உலக முதலியம், அதுவும் ஊக முதலீட்டில் பெரும் செல்வத்தைக் குவித்து மக்களை வீணடிக்கும் ஒரு வகை முதலியம், பெரும் செல்வம் திரட்டுவதை வாழ்வின் அபத்தங்களில், அங்கத நாடகங்களில் ஒன்று எனத்தான் நான் பார்க்கிறேன்.

புத்தகங்கள் எழுதுவதற்கு சுமார் 15 வருடங்கள் நாஜியிசம் ஸ்வீடனில் மீண்டும் தலையெடுக்காமல் இருக்க எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்கி வழிநடத்தி இருக்கிறார் ஸ்டீக் லார்ஷொன். இனவெறிக்கெதிராக ஸ்வீடனில் ஒரு எதிர்ப்பை உருவாக்கியவர்களில் இவர் ஒரு முன்னோடி. அவர் எழுதிய சில புத்தகங்களின் பட்டியல் கீழே குறிப்பில் தரப்பட்டிருக்கிறது.[1]

யூரோப்பிய இலக்கியத்தில், உலகுக்கு அதிகம் தெரிய வந்த நாடுகள் ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்றவை. கிழக்கு, மத்திய யூரோப்பிய நாடுகளின் இலக்கியம் சமீப காலத்தில் நிறையத் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அல்பேனிய, ரொமனிய நாவல்கள் கூடப் பெயர் பெறத் துவங்கி உள்ளன. ஆனால் மேற்படி முக்கிய நாடுகளின் இலக்கியத்திலும், அதிகம் தெரிய வந்தவை ’சீரியஸான’ இலக்கியமே. நம்மில் எத்தனை பேருக்கு ஜெர்மனியின் நகைச்சுவை இலக்கியம் பற்றித் தெரியும்?  ஜெர்மனியில் நகைச்சுவை இலக்கியமா, நல்ல ஜோக் என்பீர்களோ என்னவோ. சரி, ஜெர்மனியை விடுவோம், ஃப்ரெஞ்சு நகைச்சுவை இலக்கியம் பற்றி? இத்தாலியின் நகைச்சுவை இலக்கியம்? நகைச்சுவை உணர்வு இல்லாத மனிதர்களோ, சமூகங்களோ இருக்க முடியுமா? இந்த நாடுகளில் அப்படிப்பட்ட நாவல்கள், புத்தகங்கள் நிச்சயம் இருக்க வேண்டும். நமக்குத்தான் தெரியவில்லை. மொழிபெயர்ப்பு ஏகமாகப் பரவி உள்ள இந்த நூற்றாண்டில் கூட நகைச்சுவை இலக்கியம் அல்லது இலேசான இலக்கியம் அதிகம் மொழி விட்டு மொழி தாவுவதில்லை.

மேற்படி நாடுகளின் பரபரப்பான நாவல்களைக் குறித்துக்கூட (அதாவது ரொமான்ஸ் நாவல்கள், விடலைகளுக்கான நாவல்கள், வரலாற்று நாவல்கள்)  நமக்கு அதிகம் தெரிய வருவதில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை கூட ஓரளவு ஃப்ரெஞ்சு வரலாற்று நாவல்கள் உலக அரங்கில் உலவி இருக்கின்றன. பல நாடுகளிலும், சிறுவருக்கெல்லாம் பள்ளிகளில் கொஞ்சம் பரீட்சைக் காலத்தில் துர்சொப்பனமாக விளங்கியிருக்கக் கூடிய நாவல்களை எழுதியவர் விக்டர் யூகோ (Victor Hugo- 1802-1850). விடலை வயதுகளில் நம்மில் ஆங்கிலப் புத்தகம் வாசித்தவர்களுக்குப் பிடித்தமானவராக இருந்திருப்பார் அலெக்ஸாந்த்ரெ ட்யூமா (Alexandre Dumas- 1802-1870).[2] இவர்களின் எழுத்துகள் யாவும் 19ஆம் நூற்றாண்டின் நாவல்கள். ஆனாலும் அவர்களின் கதைகளின் நெடிய பரப்பும், நாடகத் தன்மையும், பாத்திரங்களின் அமைப்பில் அடர்த்தியும் அவற்றை இன்றும் பரவலாகத் தெரிந்த, படிக்கப்படுகிற நாவல்களாக வைத்திருக்கின்றன. அதே போல சார்லஸ் டிக்கன்ஸ், வால்டர் ஸ்காட் போன்றவர்கள் ஆங்கிலத்தில் பிரபலம். 20 ஆம் நூற்றாண்டில் நடு வரையிலும் கூட நமக்குத் தெரிய வந்த நாவல்களில் பலவும் மேற்படி நாடுகளின் நாவல்களே. எப்போதோ ஒரு முறைதான் நார்வீஜிய மொழி நாவல் ஒன்று நம் கண்ணுக்குத் தெரியவருகிறது. அதைப் போலவே ஸ்வீடனின் புத்தகங்களும்.[3] ஸ்வீடன், நார்வே, ஃபின்லாண்ட், டென்மார்க் நாட்டு நாவல்கள் குறைவான அளவில்தான் ஆங்கிலத்திலேயே கூட மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன, என்றால் தமிழுக்கு அவை மொழி பெயர்க்கப்படுவது எத்தனை துர்லபம்? க்னூட் ஹாம்சன் (Knut Hamsun) என்ற உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியரின் ’ஹங்கர்’ (Hunger) என்ற நாவல் தமிழில் வெகு நாட்கள் முன்பு ‘பசி’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. இன்று அதன் பிரதிகள் காணக்கிட்டுமா என்பது சந்தேகம். இலக்கிய, புத்தக ஆர்வலர்களின் கிடங்கில் தூசிப்படலத்தோடு கிடக்க வாய்ப்புண்டு. ஆனால் சமீப வருடங்களாகக் குற்ற நாவல்கள் (அல்லது துப்பறியும் நாவல்கள் அல்லது மர்ம நாவல்கள்) நிறைய மொழிபெயர்ப்பாகத் துவங்கியிருக்கின்றன. அந்த மொழிபெயர்ப்பு அலையில் நமக்குக் கிடைத்தவையே ஸ்டீக் லார்ஷொன் எழுதிய ஸ்வீடன் நாட்டுப் புத்தகங்கள்.

ஸ்வென்ஸ்கா என்ற மொழி ஸ்வீடன் நாட்டு மக்கள் பேசும் மொழி. (ஆங்கிலத்தில் இது ஸ்வீடிஷ் என்று எழுதப்படுவதால் அதுவே அம்மொழியின் பெயர் என்று நாம் நினைக்க வாய்ப்புண்டு.) ஸ்வென்ஸ்காவில் எழுதப்பட்ட நாவல்கள் ஏதும் தமிழில் கிட்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஸ்வென்ஸ்கா மொழியின் திரைப்படங்கள் தமிழ் சினிமாத் துறையில் இருக்கும் இளைஞர்களுக்கும், தமிழில் மாற்று இலக்கிய வெளியோடு சிறிதாவது பரிச்சயம் உள்ள பல எழுத்தாளர்களுக்கும் நன்கு பரிச்சயமானவை.

குறைந்தது இங்மர் பெரிமான் (Ingmar Bergman) பற்றித் தெரிந்திருக்கும். இவருடைய பல படங்களை ஒளிப்பதிவாக்கித் தந்து புகழடைந்தவரான, ஸ்வென் நீக்விஸ்ட் (Sven Nykvist) –டின் அற்புதமான ஒளிப்பதிவும் பரிச்சயமாக இருக்கும்.  இவர் ஒளிப்பதிவு செய்த பல படங்களில் அலெக்ஸாந்தர் டார்கோவ்ஸ்கியின் கடைசிப் படம், ’தியாகம்’ (த சாக்ரிஃபைஸ்: ‘The Sacrifice’) ஒரு முக்கியமான படம். இன்னொரு பிரபலமான இயக்குநரான லாஸ்ஸெ ஹால்ஸ்ட்ரம் (Lasse Hallström) இயக்கிய, ’ஆப்பா: த மூவி( Abba, the movie)’ என்ற,  துவக்க கால யூரோப்பியப் பாபுலர் இசை பற்றிய ஆவணப்படமும் பிரபலமான ஒன்று. ’ஆபா’ எனும் பாப் இசைக்குழு பற்றிய இப்படம், சென்னையில் கூட 70களில் நன்கு ஓடியது. ஹால்ஸ்ட்ரம் சமீபகாலம் வரை ஹாலிவுட் படங்களில் பலவற்றை எடுத்திருக்கிறார். ஸ்வீடிஷ் நடிகர்களில் மாக்ஸ் வான் ஸீடோ-வும் (Max von Sydow), க்ரெடா கார்போ-வும் (Greta Garbo) நமக்கு நன்கு தெரிந்தவர்கள், இவர்களின் ஆங்கிலப் படங்களே நமக்கு நிறையத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்பது வேறு விஷயம். மாக்ஸ் வான் ஸீடோவும் பெரிமானும் இணைந்து கொணர்ந்த திரைப்படங்களில் பலவும் உலகத் திரைப்படங்களில் முக்கியமானவை.  போ வீடர்பெரி (Bo Widerberg) என்னும் இன்னொரு குறிப்பிடத்தக்க இயக்குநர் 1976 ஆம் வருடமே, ஒரு முக்கியமான ஸ்வீடிஷ் மர்ம நாவலைப் படமாக்கிப் பிரபலமானார், பிரபலமாக்கினார். ’மான் ஆன் த ரூஃப்’ (Man On the Roof ஆங்கிலப் பெயர்- Mannen på taket, ஸ்வீடிஷ் பெயர்) என்ற படம் அது.

sjoewahl_2_dw_kultu_725592gஸ்வீடனில் நவீனகாலக் குற்ற நாவல்களின் பெற்றோர்கள் என்று அறியப்படும் பெர் வாஹ்லூ, மாயி கோவால் (Per Wahlöö and Maj Sjöwall) எனும் கணவன் மனைவி கூட்டணி 10 நாவல்களை வரிசையாக எழுதினர். அவற்றின் மைய நாயகரான மார்டின் பெக் (Martin Beck) என்னும் காவல்துறைத் துப்பறிவாளர் இன்று உலகத் துப்பறியும் கதையுலகில் நன்கு தெரிய வந்துள்ள ஒரு பாத்திரம். இந்தப் படம் நாவலின் பெயரை மாற்றி இருந்தது. ’த அபாமினபிள் மான்’ [The Abominable Man: ஆங்கிலப் பெயர்; Den vedervärdige mannen från Säffle: ஸ்வீடிஷ் பெயர், 1971) என்ற நாவலே அநதப் படத்துக் கதைக்கரு.

பரபரப்புக்கும், பொழுதுபோக்குக்காகவும்தானே வாசகர்கள் துப்பறியும் நாவல்களைப் படிக்கிறார்கள்? கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, அரசு, போலிஸ், துப்பறிவாளர் அல்லது ஒரு நாயக/ நாயகி பாத்திரம் துப்புத் துலக்குவதில் என்ன சமூக நோக்கு இருக்க முடியும்? அப்படி ஏதும் இருந்தால் அது நாவலின் சுறுசுறுப்பை, விறுவிறுப்பைக் கீழிறக்காதா? அரசியல், சமூக விமர்சனம் ஆகியன நீண்ட விளக்கங்கள், சர்ச்சைகள் இல்லாவிடில் எப்படி உருப்படியாகச் செய்யப்பட முடியும்? இவை நமக்கு உடனே தோன்றும் கேள்விகள்.  பெரி மேசன் என்ற வழக்கறிஞர் + துப்பறிவாளர் பாத்திரத்தால் உலகப் பிரபலமான எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் (Erle Stanley Gardner), நம்மூரில் நடைபாதைக் கடைகளில் கிடைக்கும் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் (James Hadley Chase) போன்றார் எழுதிய புத்தகங்களில் என்ன பெரிய சமுதாய நோக்கு அல்லது கருத்தியல் இருந்ததன? அவை வியாபாரத்தில் முன்னணியில் இருக்கவில்லையா, பல பத்தாண்டுகள் வாசகர்களிடையே பல நாடுகளிலும் பிரபலமாக இல்லையா? அவர்கள் எழுதாத விதத்தில் என்ன எழுதி விட்டார்கள் இந்த இருவரும்?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக  ‘சஸ்திர சிகிச்சைக்கான கத்தி போல குற்ற நாவல்களைப் பயன்படுத்தி, சமூகநல அரசு (Welfare State) என்ற பெயரில் கேலிக் கூத்தாகி நிற்கிற ‘முதலியத்தின்’ அடிவயிற்றைக் கிழித்துக் காட்டும் முயற்சிகளே இவை’என்று வாஹ்லா – கோவால் தம்பதியினர் சொல்கிறார்கள். [4] அமெரிக்க மர்ம நாவல் எழுத்தாளர்களான டாஷியல் ஹாமெட்(Dashiel Hammet), ரேமண் சாண்ட்லர் (Raymond Chandler) ஆகியோரும் சமூக விமர்சனப்பார்வையோடே துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஏன் இப்படி சமூகவிமர்சனைப் பார்வையிலான புத்தகங்களை எழுதுகிறார்களை என்பதற்கான அவர்களுடைய கருத்தும், ஸ்வீடன் தம்பதியினரின் கருத்துகளையே இன்னொரு விதத்தில் பிரதிபலித்தன.[5] அவர்களும் முதலியத்தின் இழிவுகளை வெளுத்துக் கட்டவே இந்த மர்ம நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எவருமே தம் புத்தகங்கள் மூலம் பெரும் சமூக மாறுதல்கள் நேரும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களிடம் ரொமாண்டிசிஸம், நேசுரலிசம், ரியலிசம் என்ற மூன்று வகைப் போக்குகளை ஒட்டிய விவரணைகளும், கதை சொல்லும் முறையும் வெளிப்பட்டன. பல விதக் கலவைகளாக என்ற போதும், அவர்கள் சமூக மாறுதலை நோக்கிய பிரச்சாரமாக அவற்றை எழுதவில்லை. இருப்பைச் சொல்லும் நிதர்சன நோக்கம் இருந்தது, ஓரளவு அறப் பார்வை உள்ளொடுங்கி அவற்றில் வெளிப்பட்டது. அவ்வளவே.

பல நாடுகளிலும் துப்பறியும் நாவல்கள், மர்மக் கதைகள் சமூக விமர்சனத்துக்குக் கருவியாகப் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து போன்ற ஸ்காண்டிநேவிய நாடுகளில் சமீபகாலமாக மர்ம நாவல்கள் நிறைய வெளிவருவதோடு, அவை மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில மொழி உலகில் பரவலாக விற்பதும், அவை எல்லாமே ஒரு விதமான சமூக விமர்சன நோக்கோடு வெளிவருவதும் கவனிக்கத்தக்கன. அதற்கு முன், என்ன வகை சமூகங்கள், அரசுகள், பொருளாதாரம் ஸ்காண்டிநேவிய நாடுகளில் இருக்கின்றன, குறிப்பாக ஸ்வீடனில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

girl-with-the-dragon-tattooஸ்காண்டிநேவிய நாடுகளில் நிலவும் ஆட்சி முறை இடதுக்கும் வலதுக்குமிடையே ஏற்பட்ட ஒரு சமரச ஆட்சி. இது பெரும்பாலும் சமூக ஜனநாயக ஆட்சி, அரசமைப்பு என்று சொல்லப்படுகிறது. கூட்டு சமுதாயம், சமத்துவ சமுதாயம் என்ற பெயரில் மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையே இல்லாத அதிகாரிகள் இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்யும் அரசுகளே இதுவரை ’சோசலிச’, கம்யூனிச சமுதாயங்களாக உலகில் நிலவி இருக்கின்றன. இது ஆசியா, யூரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்ற நான்கு பெரும் கண்டங்களிலும் சென்ற நூற்றாண்டு பூராவும் நிலவிய அவல நிலை. இவற்றில் சோசலிசமும் இல்லை, ஜனநாயகமும் இல்லை, ஆனால் பெயர் மட்டும் ‘மக்கள் ஜனநாயகம்’ என்று பெரிய ஆரவாரத்தோடு விளம்பரப்படுத்தப்பட்டன.

உலக இடதுசாரிகள் இந்த அவலத்தைப் பற்றி கண்டு கொள்வதில்லை, அவர்கள் கவனம் பூரா முதலியத்தின் இழிவுகள், குரூரம், வன்முறை, அசமத்துவம் பற்றித்தான். எங்கள் கட்சி தவறே செய்யாது என்ற கருத்துக் குருட்டுத்தனம் அவர்கள் அறிவை முழுதுமாக மூடி இருக்கிறது, இருந்தது. கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர்களால், தம் நம்பிக்கை வெறும் குளறலான ஒன்று, அது செயல்முறைக்கு ஒத்து வராதது என்பதைப் பார்க்க முடியாது என்பதை இந்த உலகளாவிய இடது சாரிகளின் விமர்சனமற்ற செயல்பாடு தெரிவிக்கிறது. மதங்கள் எப்படி மக்களை முன்னேற்ற முடியாமல், தம் பொய்மைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு தத்தளிக்கின்றனவோ, அதே நிலைதான் நம்பிக்கையை மட்டும் நம்புகிற கருத்தியல்களுக்கும் நேர்கிறது. சுயவிமர்சனம் என்ற ஒரு எளிய, உண்மையை நாட மனிதரை உந்தும் ஒரு கருத்தைக் கூட, வெறும் கேலிக் கூத்தாகவும், அதிகாரப் பறிமுதலுக்கு ஆயுதமாகவும், சிறுகுழுக்கள் பெரும் திரளை அடிமைகளாக வைத்திருக்கும் அவல நாடகத்துக்குப் பின்னணியாகவும் ஆக்கி விட்ட பெருமை உலக இடதுசாரிகளைச் சேரும்.

இங்கு இந்த வலம், இடம் ஆகிய இரு சாரிகளின் பொய்மைகளைத் தாண்ட ஒரு மாற்று முறையாக வெளிப்பட்ட சமரசமான சமூக ஜனநாயகம் என்ற ஆட்சி முறை கவனிக்கப் பட வேண்டி வருகிறது. உலக இடதுசாரிகளின் ஏளனத்தையும், உலக வலது சாரிகளின் கடும் விமர்சனத்தையும் தொடர்ந்து எதிரிடும் ஒரு கருத்தியல் இந்த ‘சமூக ஜனநாயகம்’. இது பெருமளவும் யூரோப்பிய நாடுகளிலேயே காணப்படும் ‘மூன்றாம் வழி’. இந்தியாவில் இது சம்யுக்த சோசியலிசக் கட்சி, ப்ரஜா சோசலிஸ்டு கட்சி என்றும், வேறு பலவித உதிரி சோசலிசக் கட்சிகள் வடிவேயும் வெளிப்பட்டு பொதுஜன ஆதரவின்றி நசித்துப் போயிற்று. இந்திய வடிவுகளில் கருத்தியல் ஆரவாரம் இருந்ததே தவிர செயல்முறைத் திட்டங்களோ, இலக்குகளின் கறாரான வரையறுப்போ, அவற்றை அடையும் வழிமுறைகள் குறித்த சீரிய சிந்தனையோ இருந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் பூர்சுவா கட்சிகள் என்று அறியப்படும், முதலியத்தின் கைப்பாவைகளான கட்சிகளே சோசலிசம் என்ற போர்வையில் உலவியதால், மக்களுக்கு இவற்றுக்கும் ’சமூக ஜனநாயகக்’ கட்சிகளுக்கும் அதிக வேறுபாடு தெரியவில்லை. நேருவிய சோசலிசமும் சமூக ஜனநாயக முறை போல ஒரு பிரமையை உருவாக்கி, அரசு மையப் பொருளாதாரத்தை காலனிய அதிகாரி வர்க்கத்தை வைத்துக் கொண்டு அமல்படுத்த முயன்று தோற்றுப் பெரும் தேக்கத்தையும் ஊழலையும் கடனையும் மக்கள் தலையில் சுமத்தியது.  பஞ்சம் நிலவியது நாட்டில்.

சமூக ஜனநாயகக் கட்சிகளும் வெகுகாலம் அரசுமைய அதிகாரப் பகிர்வும், மக்களுக்கு முடிவெடுக்கும் உரிமையில்லாது அதிகாரிகள் கூட்டம் முடிவெடுக்கும் வகைப் பொருளாதார முயற்சிகளையுமே முன்வைத்தன, என்பதால் மக்களுக்கு இக்கட்சிகளின் தனித்தன்மை புலப்படவில்லை. அரசுமையப் பொருளாதாரம் இருந்தாலே சோசலிசம் என்ற ஒரு அற்பத்தனமான கருத்தியலாக சமூக ஜனநாயகம் இந்தியாவில் அன்றே சிதைந்து போயிருந்தது. இன்னமுமே எந்தச் சிக்கலுக்கும் ’நிறுவனங்களை அரசுடமையாக்கு,’ என்ற ஒரு மூடத்தனமான கோரிக்கையை இந்திய இடது சாரி இயக்கங்கள் தொடர்ந்து முன்வைப்பதை நாம் பார்க்கலாம். இவை எல்லாவற்றின் அடிப்படை விமர்சனமே இந்திய அரசு மிக்க ஊழல் ஊடுருவிய ஒரு அரசு, செயல்திறமை அற்ற அரசு, கொள்ளையர் கையில் சிக்கிய அரசு என்பது. அப்படி இருக்கையில் எல்லா நிறுவனங்களையும் அரசின் கையில் கொடுத்தால் அவை எப்படி நன்மையைக் கொண்டு வரும்? அரசு என்பது அரசியல் மையமான அமைப்பு. பொருளாதாரத்தை அரசியலே முன் நின்று நடத்த வேண்டும் என்ற மூட நம்பிக்கையின்பால் பட்ட கூச்சல்கள் இவை. எதார்த்தத்தைத் துல்லியமாகப் பார்க்க முடியாத கருத்தியல் குருட்டுத்தனம்.

’சமூக ஜனநாயகம்’ என்ற கருத்தியலோ வேறுவகையானது. அதன்வழி பார்த்தால், முதலீட்டை ஆளும் சமூகக் குழுக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் இடையே தொடர்ந்து சமூகப் பொருளாதார அமைப்பில்அவரவர் பங்கெடுப்பு குறித்து நடக்கும் ஒரு கருத்துப் பரிமாற்றம், இரு வகையினருக்கும் சம அதிகாரம், சமப் பங்கீடு, மேலும் காலப்போக்கில் உழைப்பாளிகளின் கையில் முதலீட்டை ஆளும், நிர்வகிக்கும் அதிகாரம் கைமாறி வருவதற்கான செயல்திட்டங்கள் என்ற வகை அணுகல் அதன் மையத்தில் இயங்குகிறது. இது ஒரு மிகச் சுருக்கிய விளக்கம் என்பதை நினைவில் வையுங்கள். இதில் ஒரே ஒரு வகை அமைப்புதான் உண்டு என்றும் இல்லை.  ஸ்காண்டிநேவிய நாடுகளிலேயே கூட ஒவ்வொரு நாட்டின் வரலாற்று எச்ச சொச்சங்கள், பண்பாட்டு  அமைப்புகள் வழி உருவான விருப்பு வெறுப்புகளுக்கேற்ப இந்த உரு பலவிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில் அரசியல், பொருளாதாரத் தீர்வுகளைத் தீர்மானமாக வழிநடத்துவதில்லை, ஆனால் அவற்றைக் கண்காணித்து அவை உழைப்பாளர்களுக்கெதிராகத் தடம்புரண்டு முதலீட்டின் ஏகாதிபத்தியமாக ஆகாமல் தடுக்கிறது. அல்லது கருத்தளவில் தடுக்க உத்தேசிக்கிறது.  இப்படி ஒரு பரிமாற்றம் நடப்பதற்குக் காரணமே வரலாற்றில் உழைப்பாளிகளிடம் முதலின் சேமிப்பு என்பது நடக்கவில்லை என்பதுதான். கொஞ்சநஞ்ச முதலின் சேமிப்பும் பலவகை வன்முறைகள், போர்கள், தற்செயல் நிகழ்வுகள், முனைப்பற்ற செயல்பாடுகள், ஏகாதிபத்தியம், காலனியம், இனவெறித் தாக்குதல்கள், மதவெறிப் போர்கள், அடையாள அரசியலின் பெருவக்கிரங்களான பாசிஸம், நாஜியிசம், மொழியின அரசியல் போன்றனவற்றில் பறிபோயின. தொடர்ந்த முதலீட்டுச் செறிவு இல்லாமல் பொருளாதார நடவடிக்கை முன்னேறாது. அந்த முதலீடு தம் கட்டுப்பாடிலும் இல்லாது, தம் உரிமையாகவும் இல்லாத நிலையில் உள்ள உழைப்பாளர்கள், முதலீட்டாளரிடம் இருந்து அந்த பெருந்தனத்தைப் பறிமுதல் செய்ய ஒரு புரட்சி நடத்தி நிலையைச் சமன் செய்து விட முடியாது. உலக இடது சாரிப் புரட்சிகள் இன்றளவில் மிக உறுதியாக இந்த விஷயத்தை நமக்குத் தெரிவிக்கின்றன. ஏனெனில் முதலீடு என்பது வெறும் நிதி மட்டுமல்ல. அதன் பின்னே பலவேறு விஷயங்கள் உள்ளன. இன்று முதல் வெறும் இடுகையாக உறைந்து கிடப்பதில்லை.  பல நேரம் அது தன் போலவே பொய்மைகளை, பதிலிகளை (representations),  உள்ளீடு அற்ற ஊகங்களை (derivatives) முன்வைத்து இயங்குகிறது.  அது இப்போது தனி நபர்களால் ஆளப்படும் ஒரு வளம் இல்லை, அதுவே பல கோடி மக்களை ஆளும் ஒரு சக்தி.

சமூகஜனநாயக அரசியல் என்பது முதலீட்டுப் பறிமுதல் என்ற சாக்கில் பெருந்திரள் படுகொலைகளை நிகழ்த்தாமல், உழைப்புப் பகிர்வு, அரசியல் அதிகாரப்பகிர்வு, பண்பாட்டு அறிவுறுத்தல் வழியே மதிப்பீட்டு உயர்த்தல், தொடர்ந்து விரிந்து மேம்படும் பொதுக் கல்வி, சுகாதாரம், நலிவுற்றோர் நலம் காத்தல், அரசுடைய விழிப்பான கண்காணிப்பு என்ற பலவகை தொடர் முயற்சிகள் வழியே சமுதாயத்தில் சமத்துவத்தையும், ஒத்துழைப்பையும் அதிகரித்து, அதே நேரம் தனிநபர் உந்துதல்களைக் கருக்காத ஒரு வழிமுறையையும் தொடர்ந்து முன்னேற்றி வருவதற்கான முயற்சி. அதாவது ஒரு நெடுங்காலச் சமரசத்து வழியே பொது முன்னேற்றம் நாடும் முயற்சி.

பொதுவாக வரலாற்றில் சமரசம் பேசுவோருக்கு அதிக மதிப்பு எந்தச் சமூகக் குழுவிடமும் இருந்ததில்லை. இரு தரப்பினரும் சமரசம் பேசுவோரை சந்தேகத்துடனேயே பார்த்து ஓரம் கட்டவே தொடர்ந்து முயல்வர். இது மனிதரின் விலங்கு மனோபாவத்தின் ஒரு தவிர்க்கவொண்ணாத அம்சம். மேலும் வன்முறைக்கான வரலாறு நெடுகப் பாய்ந்துள்ள எந்த நாடுகளிலும் இப்படி ஒரு சமரசம் மிகவும் ஐயத்துடனேயே பார்க்கப்படும் என்பதும் தெளிவு. இந்தக் காரணங்களால்தான் சமூக ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்ததும், பல யூரோப்பிய நாடுகளில் அதிகாரத்தைப் பிடித்ததும் ஓரளவு அதிசய நிகழ்வுகளாகவே நம்மால் காணப்பட முடியும்.

இது ஜெர்மனியில் வெகு நாட்கள் ஆட்சி செய்த ஒரு கருத்தியல். ஸ்காண்டிநேவிய ஜனநாயகங்கள் என அறியப்படும் நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய் நாடுகளில் வெகுகாலமாக இந்தக் கருத்தியலே ஆண்டு வருகிறது. இவற்றின் இன்னொரு பெயர் நார்டிக் குழுமம். நார்டிக் குழுமம் என்பது இன்னும் சிறிது விரிந்த அளவு கொண்டது. அதில் க்ரீன்லாந்தும், சில தீவு நாடுகளும் சேர்ந்தவை.[6]

இதற்கும் ஒரு மர்மப்படத்துக்கும் என்ன தொடர்பு, இந்த நீண்ட விளக்கம் ஏன்? என்ன படம் அது, அது பற்றிய விவரங்கள் எங்கே, விமர்சனம் எங்கே?

எல்லாம் அடுத்த இதழில் கிட்டும். அதற்கு முன் ’The Girl With the Dragon Tattoo’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

(தொடரும்)

-o00o-

குறிப்புகள்:

[1] ஸ்டீக் லார்ஷொனின் பிரசுரங்களின் பட்டியல்- இது அவருடைய பெயரில் நடக்கும் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட பட்டியல்.

Articles and books:

“Extremhögern”, Stieg Larsson, Anna-Lena Lodenius, Stockholm, 1991

“Sverigedemokraterna: den nationella rörelsen”, Stieg Larsson, Mikael Ekman, Stockholm, 2001

Stieg Larsson, Cecilia Englund: “Debatten om hedersmord: feminism eller rasism”, Stockholm, 2004Richard Slätt, Maria Blomquist, Stieg

Larsson, David Lagerlöf m.fl.: “Sverigedemokraterna från insidan”, 2004

The Millennium trilogy

1. The Girl with the Dragon Tattoo, Män som hatar kvinnor (”Men who hate women”), 2005. US release September 16, 2008.

2. The Girl Who Played with Fire, Flickan som lekte med elden (”The girl who played with fire”), 2006. US release July 28, 2009.

3. The Girl Who Kicked the Hornets’ Nest, Luftslottet som sprängdes (”The Air Castle that Blew Up”), 2007. US release date Oct. 2009.

English translation by Reg Keeland

Periodicals edited

Svartvitt med Expo, 1999-2002

Expo, 2002-2004

[2] ட்யூமா முழு வெள்ளையர் இல்லை, அவருடைய அம்மா ஆப்பிரிக்கப் பெண் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதே போல, இடது சாரிகளின் அபிமானத்தைப் பெற்ற அலெக்சாண்டர் புஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin) என்ற புகழ்பெற்ற ரஷ்யக் கவிஞரும் கூட ஆப்பிரிக்கக் கலப்புள்ளவரே. அவருடைய தாத்தாவின் அப்பா, ஆப்ரம் பெட்ரோவிச் கனிபால் ஒரு ஆப்பிரிக்கர் (Abram Petrovich Ganibal).

[3] ஸ்வீடனில் 20ஆம் நூற்றாண்டில் எனக்குத் தெரிந்த சில எழுத்தாளர்கள், ஸ்ட்ரிண்ட்பெரி, ஜான் மிர்டல், ஸ்வென் லிண்ட்க்விஸ்ட் – அவ்வளவுதான். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் குறைந்தது ஐந்தாறு எழுத்தாளர்கள் ஸ்வீடனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசைக் கொணர்ந்திருக்கிறார்கள். Selma Lagerlöf 1909; Verner von Heidenstam 1916; Erik Axel Karlfeldt

1931; Pär Lagerkvist 1951;Eyvind Johnson/ Harry Martinson 1974.

[4] விகிபீடியாவில் கிட்டும் தகவல். சமூக நல அரசு என்ற அளவில் உலகிலேயே மிகக் குறைவான அசமத்துவம் நிலவும் நாடுகள் என்று பெயர் பெற்ற ஸ்காண்டிநேவியன் நாடுகளில் இத்தனை கோபமும், தாக்கும் நோக்கும் இருக்கிறதென்றால், சோசலிசம் என்றும், கம்யூனிசம் என்றும் பெயரை வைத்துக் கொண்டிருந்த பல நாடுகளில் நிலவிய பெரும் ஏற்றத் தாழ்வுகள் மீது அந்நாட்டு எழுத்தாளர்களும், மக்களும் எத்தனை மடங்கு கூடுதலான கோபம் கொண்டிருக்க வேண்டும்? அந்த நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் சுதந்திரமாக வெளிவந்தால் அந்நாடுகளின் பொய்முகங்கள் கிழியும்.

[5] ஹாமெட் மட்டும் தன் கூட வாழ்ந்த லிலியன் ஹெல்மான் என்ற இடது சாரி, ஸ்டாலினிய ஆதரவாளரான நாடகாசிரியருக்குப் பதிப்பாசிரியர் போல இருந்து, அனுபவமில்லாத லிலியனைப் பதப்படுத்தி முன் வரிசை எழுத்தாளராக்கப் பெரிதும் உதவி இருக்கிறாரென்பது குறிப்பிடத்தக்கது. ஹாமெட் பல வருடங்கள் கம்யூனிச ஆதரவாளராக இருந்திருக்கிறார் என்றாலும் அவரது நாவல்கள் பெருமளவும் சமுக அமைப்புகள் நொறுங்கி அல்லது க்ஷீணித்த நிலையில் இருக்கையில் மனித உறவுகள் என்னென்ன விசித்திர வடிவுகளை அடைகின்றன என்பதை விவரிப்பதாகவே இருந்தன. அவற்றின் அரசியல் நம்பிக்கைகள் அத்தனை தெளிவில்லை என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். தனி நபர் கடிதப் போக்குவரத்தில் ஹாமெட் கம்யூனிச ஆதரவைத் தெரிவித்திருந்தாரென்பதை வைத்து அந்த நாவல்கள் கம்யூனிசக் கருத்தை மையமாகக் கொண்டவை என்று சொல்ல இடமில்லை என்று தெரிகிறது. ஹாமெட் நாவல்களின் சமூகப் பார்வை குறித்துத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உதவும்:

http://mikegrost.com/hammett.htm

இந்த நாவல்கள் பெரிதும், 20-35கள் வரையிலான அமெரிக்க சமுதாயப் பின்னணியில் எழுதப்பட்டவை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொண்டு படித்தால் அவை என்ன அளவு முன்னோடிகளாக இருந்தன என்பது தெரியும். James Cain, Horace McCoy, Kenneth Fearing, William Lindsay Gresham, Cornell Woolrich போன்ற எழுத்தாளர்களின் நாவல்கள் இதே காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் அமெரிக்க வரலாற்றின் சமூக நிலைகளை விவரிக்கும் ஆவணங்கள் போலவே செயல்படுகின்றன. அத்தகைய விவரண, ஆவண நோக்கு அவற்றில் முதன்மையானது என்று சொல்லி விட முடியாது. கென்னத் ஃபியரிங்குடைய ’பெரிய கடிகாரம்’ (’The Big Clock’ ) பெரும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் வாழ்வை அந்நிறுவனங்கள் என்ன அளவுக்குக் கட்டுப்ப்டுத்துகின்றன என்பதை விரித்து இடையே ஒரு கொலையைச் சுற்றிய கதையையும் நடத்துகிறது. விலியம் க்ரஹாமின் ’கெட்ட கனா போன்ற சந்து’(Nightmare alley) இன்னொரு விரிவான திரையில் அமெரிக்கச் சிறு நகரங்கள், விவசாயப் பண்ணைகள் ஆகியன சூழ்ந்த வாழ்வின் பல இருண்ட தன்மைகளை விவரித்தது, இடையில் ஒரு மர்மக் கதையையும் சொல்கிறது.

[6] சமீபத்தில் எஸ்டோனியா என்னும் நாடு இதில் சேர விண்ணப்பித்திருக்கிறது. எஸ்டோனியா இந்நாள் வரை பால்டிக் கடல் நாடுகளோடே சேர்த்துப் பார்க்கப்படுகிறது.

[7] மேலும் சில முன்னோட்டப்படங்கள்:

‘The Girl who played with fire’ படத்தின் முன்னோட்டம்

http://www.youtube.com/watch?v=o9G4GiUxJek&feature=player_embedded

‘ The girl who killed the Hornets’ nest’

http://www.youtube.com/watch?v=8fccRlpFuLo&feature=related

ஏப்ரல் 16-மே 4 வரை நடக்கும் ஸ்வீடிஷ் திரைப்பட விழா (நியுயார்க்)

http://www.youtube.com/watch?v=CZhYYXgvnGk&feature=player_embedded