சாம்வெல் க்ளெமென்ஸ்-ஐ (மார்க் ட்வைன்) அறிமுகம் செய்வது மல்லிகைப் பூவிற்கு விளம்பரம் செய்வதற்கு ஒப்பானது. இறக்கும் மனிதருள் இறவாப் படைப்புகள் படைத்தவர் மார்க் ட்வைன். நூற்றாண்டுகள் கழிந்தும் அவரது படைப்புகள் இன்றும் உலகெங்கிலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவரது கதைகளைப்போலவே, அவரது பயணக்கட்டுரைகளும் புகழ் பெற்றவை. இன்று இருப்பது போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் அவர் உலகமெங்கும் பயணித்திருக்கிறார். அப்பயணங்கள் குறித்து அவர் எழுதிய ஐந்து நூல்களில் Following The Equator மிகவும் புகழ் பெற்ற ஒன்று. அதில் இந்தியா குறித்து அவர் எழுதியுள்ளவை மிக முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள். ஏறக்குறைய ஒரு ஆண்டு வரை இந்தியாவின் பல பாகங்களில் தங்கி இருந்து, தான் கண்டவற்றை குறித்து, அவருக்கே உரிய நகைச்சுவையுடன், மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறார்.
வெள்ளை இன மக்கள், கிறிஸ்தவ மிஷினரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, தாங்கள் குடியேறும் நாடுகளில் உள்ள பழங்குடியினரை எவ்வாறு திட்டமிட்டு அழித்தனர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் எழுதும் மார்க் ட்வைன், மிஷினரி பாதிரிகளின் செயல்பாடுகள் குறித்து மிகுந்த கசப்புடனே இறுதிவரை இருந்தார்.
இந்தியாவில் வாழ்ந்த ஒரு மிஷினரி பாதிரியின் பார்வை குறித்து அவர் எழுதியிருப்பதிலிருந்து ஒரு சிறு பகுதி இங்கே….
ஆஸ்திரேலிய சிட்னி நகரில் தங்கியிருக்கையில் கண்ட ஒரு கனவு குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நாம் வாழும் இந்த உலகம் இறைவனின் ஒரு மாபெரும் உடலாகவும், பல்லாயிரக்கணக்கான மைல்கள் இடைவெளியில், அண்டவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பிற கோள்கள் அனைத்தும் இறைவனின் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும் குருதித் துளிகளாகவும், நம்மைப்போன்ற மற்ற ஜீவராசிகளும், நுண்ணுயிரிகளும் அந்தத் துகள்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் செல்களாகவும் அக் கனவில் தோன்றியது. அதன் அர்த்தம் என்னவென்று என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.
அந்நேரம்,இந்தியாவில் தங்கி மிஷனரி வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒரு நியுசிலாந்து பாதிரியும் நானிருந்த அதே ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரிடம் எனது கனவு குறித்து விளக்கினேன். பாதிரி திருவாளர் எக்ஸ் அதனைக் குறித்து சிறிதுநேர ஆலோசனைக்குப்பிறகு, “ஹிந்துக்களின் நம்பிக்கையைப்போல இது ஒரு இறைவனின் லீலையாகக்கூட இருக்கலாம். ஒருவேளை அவர்களும் இது போன்ற கனவுகளைக்கண்டு அதனை உண்மையென நம்புபவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் கடவுள்கள் பிரமாண்டமானவர்கள்” என்றார்.
ஹிந்துக்களின் இதிஹாச புராணங்களை அனைத்து தள மக்களும் எந்த மனத்தடையும் இல்லாமல் நம்புவதாகவும், சமுதாயத்தில் உயர்ந்த, தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடில்லாமல், கல்விமான்களும் அதனைப் பின்பற்றுவதாகவும், அதுவே தங்களது மிஷினரி வேலைகளுக்குத் தடங்கலாக இருப்பதாகவும் திருவாளர் எக்ஸ் விளக்கினார்.
அது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கிறிஸ்தவம் இந்தியாவில் ஏன் வேகமாகப் பரவ இயலவில்லை என்பது மேற்குலகிற்க்குப் புரிபடாத விந்தையாகவே இருந்து வருகிறது. இந்தியர்கள், குறிப்பாக ஹிந்துக்கள் எதனையும் எளிதாக நம்புபவர்கள் என்றும், அற்புதங்கள் குறித்த நம்பிக்கைகளை வரவேற்ப்பவர்கள் என்றும் மேற்குலகினர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். எனவே கிறிஸ்துவத்தை அவர்கள் முன் வைத்தால் அதனை நம்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதுவும், பைபிள் புஸ்தகத்தில் உள்ள அற்புதங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறினால் அவர்களுக்கு எந்த சந்தேகமும் வரவே வராது என்பதுவும் அவர்களின் வாதம்.
ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. ஹிந்துக்களைப்போல சிந்திக்கும் திறனோ, கற்பனையோ நமக்கு இல்லவே இல்லை. ராணுவ ரீதியில் கூறினால், எதிரியுடன் போராட அற்புதமான துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு போகும் அதே வேளையில், சரியான துப்பாக்கி குண்டுகள் இல்லாத நிலைபோன்றது இந்திய மிஷினரிகளின் பணி. அதாவது, நமது அற்புதங்கள் எந்தவிதமான பாதிப்புகளையும் அவர்களிடம் ஏற்படுத்துவதில்லை. சாதாரண ஹிந்து அதனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நம்மை விடவும் அற்புதங்கள் நிகழ்த்தும் கடவுள்கள் அவர்களிடம் உண்டு.
அடிப்படையில் அவர்களின் மதம் அற்புதங்களாலும், சாகசங்களாலும் அமைக்கப்பெற்ற ஒன்று. நமது பிரச்சாரமும் அவர்களைப்போலவே அமைக்கப்பட வேண்டும். நான் முதன் முதலில் இந்தியாவில் பணியாற்றத் துவங்கியபோது அது குறித்து மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் என்பதுவே உண்மை. சிறிது சிரமத்திற்குப் பிறகு, பைபிளின் அற்புதங்களையும், கதைகளையும் அவர்களுக்குக் கூற முனைந்தேன். மிகுந்த உற்சாகத்துடன் உலகின் மிக பலசாலியாக அறியப்பட்ட சாம்சனைக் குறித்தும், அவன் செய்த சாகசங்கள் குறித்தும் எடுத்துக்கூற முற்பட்டேன்.
ஜனங்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் கதைகளைக்கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் விடாமல் சாம்சன் நிகழ்த்திய சாகசங்களை ஒவ்வொன்றாக கூறிக்கொண்டே வந்தேன். கதை துவங்கிய சிறிது நேரத்திற்குள்ளே என் முன் அமர்ந்திருந்த ஜனங்களின் முகத்தில் உற்சாகம் வடிந்து வருவதை அதிர்ச்சியுடன் நோக்கிகொண்டிருந்தேன். எனக்கு ஒன்றுமே புரிபடவில்லை. மிகுந்த ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்தேன். கதை கேட்கும் சுவராஸ்யம் மொத்தமாக மறைந்து போக, என்னால் எந்தவிதமான தாக்கத்தையும் அவர்களிடம் ஏற்படுத்த முடியவில்லை.
சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு ஹிந்து முதியவர் இதற்க்கான காரணத்தை விளக்கினார். ஒரு நல்ல ஹிந்து கடவுளர்களால் நேரடியாக நிகழ்த்தப்படும் அற்புதங்களை மட்டுமே ஏற்பார் எனவும், மற்றவர்கள் செய்யும் சாகசங்கள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் கூறினார். தொடர்ந்து, இதுவே கிறிஸ்துவத்தின் அடிப்படை என்பது எங்களுக்குத் தெரியும். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதன், மற்ற மனிதர்களை விடவும் வலிமையானவன் எனவும், தன் கரங்களால் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவன் என்றும் கிறிஸ்தவம் கூறுகிறது. உதாரணமாக சாம்சனின் தலை முடிக்கு இருந்த அமானுஷ்யமான வலிமையைக் கூறலாம். அது கடவுளால் அளிக்கப்பட ஒரு வலிமை. அவன் தலைமுடியை இழந்ததும் அவனுக்கிருந்த வலிமையும் போய்விட்டது என்பது பைபிள் கதையல்லவா?
இவ்வுலகில் பல நாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்க்கும் உடமையாக பல கடவுளர்கள் இருக்கிறார்கள். ஒரு கடவுளை வணங்கும் ஒரு நாடோ அல்லது நாடுகளோ பிற கடவுள்களை வணங்குவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கடவுளே வலிமையானவர் என்றும், மற்றவர்கள் அவர்களின் கடவுள்களை வணங்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள். அடிப்படையில் மனிதர்கள் வலிமைற்றவர்கள்; அவர்களுக்குக் கடவுளின் துணை தேவைப்படுகிறது. கடவுளில்லாமல் அவர்களால் எந்தச் செயலும் செய்ய இயலாது என்பது உண்மை. எனவே, எதற்க்காக ஒரு வலிமை குறைந்த கடவுளை அவன் நம்ப வேண்டும்? அது மூடத்தனம் அல்லவா?
மேலும், ஒரு கடவுள் தான் வணங்கும் ஒரு கடவுளை விடவும் வலிமையானவர் என்றால் அதனைக் கேளாதது போல நடந்து கொள்ளவே கூடாது. அது மிக மிக ஆபத்தான ஒரு செயல். தன்னுடைய நாட்டுக் கடவுளையும், பிற நாட்டுக் கடவுளையும் அவன் ஒப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. அவ்வாறு ஒப்பிடுகையில் நாங்கள் கண்டது என்னவென்றால், எங்களது கடவுளர்களுக்கு இணையான ஒரு கடவுளர்கள் எங்கும் இல்லை என்பதே. எங்களது புராணங்களும், இதிகாசங்களும் நாங்கள் வணங்கும் கடவுளர்களைப்பற்றியும், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் உயர்வாகவே எடுத்துரைக்கின்றன.
கிறிஸ்துவத்திலும் சில கடவுளர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் புத்தம் புதிய கடவுளர்கள். எனவே அவர்களுக்கு வலிமை இல்லாதது போன்ற தோற்றம் எங்களிடையே இருக்கிறது. இனி வரும் காலங்களில் ஹிந்து மதத்தில் உள்ளதைப்போலவே அவர்களும் பல்கிப் பெருகுவார்கள். ஆனால் மிக மெதுவாக. எமது கடவுளர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் பிறந்திருப்பதால், அவர்களின் வலிமையும் மெல்ல மெல்லவே கூடியது. எமது கடவுளர்களின் அற்புத வலிமை குறித்தும், அவர்களின் க்ருபை குறித்தும் ஏராளமான ஆதாரங்கள் எங்கள் புராண , இதிகாசங்களில் உள்ளன எனத் தெளிவுபடுத்துகிறேன்.
ஒரு சாதாரண மனிதன் இறைவனின் அற்புத வரத்தால் செய்ய முடிந்த சாகசங்களைக் குறித்து எடுத்துக்கூற எங்களிடம் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. உங்களின் சாம்சனையே எடுத்துக்கொள்வோம். கடவுளால் அருளப்பெற்ற சாம்சன் ஒரு கழுதையின் தாடை எலும்பைக்கொண்டு தன் எதிரிகளைத் துவம்சம் செய்ததாகவும், கோட்டைக் கதவுகளைத் தன் தோளில் சுமந்து சென்றதாகவும் கதைகள் உண்டு. அது இறைவனால் அருளப்பட்ட ஒரு சக்தி என்று போற்றி மகிழ்கிறீர்கள். ஆனால் சாம்சனை, ஹிந்துக்கள் வணங்கும் ஹனுமனுக்கு இணையாக கூற இயலாது.
புராண காலத்தில் ராமபிரானின் மனைவியான சீதாபிராட்டியை, ராவணன் கவர்ந்து சென்று இலங்கைத் தீவினில் சிறை வைத்தத்தும், ஹனுமான் துணையுடன் அவரை மீட்கச் சென்ற ராமபிரான், இலங்கைக்குப் பாலம் கட்ட வேண்டி அதற்க்கான உபகரணங்கள் இல்லாமல் தயங்கி நிற்கையில், ஹனுமான் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து இமயமலைக்குச் சென்று மலைகளைப்பெயர்த்து எடுத்து வந்து பாலம் கட்ட உறுதுணை செய்ததுவும் எங்கள் புராணங்களில் விளக்கமாகவே கூறப்பட்டுள்ளது. அதில் சில மலைகள் இரு நூறு மைல்கள் நீளமானவை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் சாம்சனை இதற்கு இணையாகவே இயலாது. ஹனுமான் தூக்கிச் சென்ற மலையின் ஒரு பகுதி விண்டு விழுந்து, இன்றைக்கும் கோவர்த்தன கிரியாக நின்று கொண்டிருக்கிறது.
கடவுளின் கிருபையில்லாமல் ஹனுமனால் அத்தனை பெரிய மலையை தூக்கிச் சென்றிருக்கவே இயலாது என்பதை நீங்கள் உணர வேண்டும். இங்கே இரண்டு விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில், கோட்டைக் கதவுகளை தன் தூளில் தூக்கிச் சென்ற சாம்சன், எங்கள் கடவுளர்களை விடவும் உயர்வானவர் என்று எங்கும் நிருபிக்கவில்லை. இரண்டு, அவர் அவ்வாறு கதவுகளைத் தூக்கிச் சென்றார் என்பதற்கான ஆதாரம் என்ன? ஆனால், ஹனுமான் எங்கள் கடவுளர்களின் வலிமைக்கு ஆதாரமாக கட்டிய பாலம் இன்றைக்கும் இருக்கிறது. சாம்சன் சுமந்த கோட்டைக் கதவுகள் எங்கே?
குறிப்பு
சென்ற ஏப்ரல் 21-ஆம் தேதி மார்க் ட்வைனின் 100-ஆவது பிறந்தநாள். இந்த தருணத்தில் இக்கட்டுரையை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. மார்க் ட்வைன் குறித்து தாமஸ் ஆல்வா எடிசனின் ஒரு குறும்படம் ஒன்றை வாசகர்கள் கீழே காணலாம்.