எல்லாக் கோடையும் ஒரே நாளில்

ரே பிராட்பரி

top_mast

[இது சொல்வனம் வெளியிடும் ‘ரே ப்ராட்பரி’யின் இரண்டாவது மொழிபெயர்ப்புக்கதை. முதல் கதையான ‘ஆப்பிரிக்கப் புல்வெளி’யில் ரே ப்ராட்பரியைப் பற்றிய குறிப்பைப் படிக்கலாம். இக்கதையின் இங்கிலிஷ் மூலம்: ஆல் சம்மர் இன் அ டே (All Summer in a Day) 1954 -இல் வெளியானது. பல முறை மறுபதிவான கதை. இதன் ஒரு பதிப்பு, A Medicine for Melancholy and Other Stories என்ற தொகுப்பில் 1998 ஆம் ஆண்டு பிரசுரமாகியது.

இக் கதையின் தமிழாக்கம்: மைத்ரேயன்]

“ரெடி.”

“ரெடி.”

”இப்பவா?”

“சீக்கிரம்.”

“சைன்டிஸ்ட்டுகளுக்கு நிஜம்மா தெரியுமா? இன்னிக்கு நடக்கப் போறதா, நடக்குமா?”

”பாரு, பாரு; நீயே பாரேன், தெரியும்!”

குழந்தைகள் ஒருவரோடொருவர் நெருக்கினார்கள், ஏகப்பட்ட ரோஜாக்களும், புல்பூண்டுகளும் கலந்தடித்தாற்போல, மறைந்திருக்கும் சூரியனைப் பார்க்க எட்டி எட்டி நோக்கியபடி.

கன மழையாய்க் கொட்டியது.

ஏழு வருடமாக மழை பெய்கிறது; ஆயிரமாயிரம் நாட்களையும் கூட்டிக் குவித்தால் எல்லாம் மழை, ஒரே நீர்த்தாளம், பீறிக் கொண்டு ஓடும் நீரொலி, அவ்வப்போது இனிமையாக மணிமணியாகச் சிதறும், சில நாள் புயலாக மழை பெய்து பெரும் சுவர்களைப் போல எழுந்து அலைகள் அந்தத் தீவுகளை அறையும். ஆயிரம் காடுகள் மழையில் அழிக்கப்பட்டு, ஆயிரம் காடுகள் மறுபடி எழுந்து மறுபடி அழிந்திருக்கின்றன. இப்படித்தான் வாழ்க்கையே காலம் காலமாக ஓடியிருக்கிறது இந்த வெள்ளிக் கிரகத்தில்; இந்த மழை உலகில் நாகரீகத்தைத் துவக்க ராக்கெட்களில் வந்திறங்கிய் மனிதர்களின் – ஆண்கள், பெண்களின் குழந்தைகளுடைய பள்ளிக்கூட அறை இது. அவர்களெல்லாம் இங்குதான் வாழப் போகிறார்கள்.

“நிக்கிறது. நிக்கப் போகிறது!”

“ஆமா,ஆமா!”

மார்காட் அவர்களிடம் ஒட்டாமல் நின்றாள், மழை, மழை மேலும் மழை என்றிருக்கிறதைத் தவிர வேறு ஒரு காலம் இருந்ததே நினைவில் இல்லாத அந்தக் குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கி நின்றாள். அவர்கள் எல்லாரும் ஒன்பது வயதுக் குழந்தைகள். ஏழு வருடத்துக்கு முன் சூரியன் வெளி வந்து ஒரு மணி நேரம் தன் முகத்தை அதிர்ந்து போய் நின்ற உலகத்துக்குக் காட்டி மறைந்திருந்தால், அப்படி ஒரு சம்பவம் அவர்களுக்கு நினைவிருக்காதுதான். சில நேரம், இரவில், அவர்கள் விதிர்த்துப் புரள்வதை அவள் கேட்பாள், அவர்களுக்கு அந்த நினைவு வருகிறது போலிருக்கும். தங்கத்தையோ, மஞ்சள் நிறக் க்ரேயானையோ, உலகத்தையே விலைக்கு வாங்கி விடக் கூடிய அளவு பெரிய நாணயம் ஒன்றையோ பற்றி அவர்கள் கனவு காண்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியும். ஒரு கதகதப்பை, முகத்திலோ, உடலிலோ, கைகளிலோ, கால்களிலோ, நடுங்குகிற உள்ளங்கையிலோ குப்பென்று ரத்தம் பாய்வது போன்ற ஒரு உணர்வைத் தாம் நினைவு கூர்வதாக அவர்கள் கருதினார்கள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் விழித்ததும் கேட்பதோ இடைவிடாத அந்த டமாரச் சத்தம், கூரையிலிருந்து இடைவிடாமல் மணிமாலைகள் போலக் கொட்டும் தண்ணீரின் சத்தம், நடைகளில், தோட்டங்களில், காட்டில் எங்கும் கேட்கும் சத்தம், அவர்களுடைய கனவுகள் அழிந்து போகும்.

நேற்று முழுதும் வகுப்பில் அவர்கள் படித்தார்கள், எல்லாம் சூரியனைப் பற்றியே. எப்படி ஒரு எலுமிச்சையைப் போல அது இருக்கும், எவ்வளவு சூடாக இருக்கும். சிறு சிறு கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் அதைப் பற்றி அவர்கள் எழுதினார்கள்:

என் நினைப்பில் சூரியன் என்னவாம்,
ஒரு மணியே பூக்கும் பூ.

இது மார்காட் எழுதிய சிறு கவிதை. சன்னமான ஒரு குரலில் அவள் வகுப்புக்கு முன் படித்தாள், வெளியே மழையோ கொட்டிக் கொண்டிருந்தது.

”ஏ.., இதை நீ ஒண்ணும் எழுதல்லை,” ஒரு பையன் எதிர்த்தான்.

”நாந்தான் எழுதினேன்,” மார்காட் சாதித்தாள். “நாந்தான்.”

”வில்லியம்!” ஆசிரியை அடக்கினாள்.

ஆனால் அது நேற்று. இன்றோ மழை ஓயத் துவங்கியது, அந்த்த் தடிமனான பெரும் கண்ணாடி ஜன்னல்களருகே குழந்தைகள் நசுக்கி அடித்து மொய்த்தார்கள்.

”டீச்சர் எங்கே?”

“வந்துடுவாங்க.”

“சீக்கிரம் வரணுமே. நாம இதைப் பாக்காமப் போயிடப் போறோம்.”

அவர்கள் தங்களுக்குள்ளேயே சுற்றினார்கள், ஜுரவேகத்தில் சுழலும் கம்பிகள் கொண்ட சக்கரம் போல.

மார்காட் தனியே நின்றாள். மெலிந்த பெண்ணாக இருந்தாள். பல வருடமாக மழையில் தொலைந்து போனவள் போல, அந்த மழை அவளுடைய கண்ணின் நீலநிறத்தை, உதடுகளிலிருந்து சிவப்பு நிறத்தை, தலை முடியிலிருந்து மஞ்சள் நிறத்தை எல்லாம் கரைத்துப் போய்விட்ட மாதிரி நீர்த்த நிறங்களோடு நின்றாள். பழைய ஃபோட்டோ ஆல்பத்தில் வண்ணங்களெல்லாம் போய் வெளுத்துப் போன படம் போல இருந்தாள். பேசினால் குரல் ஒரு ஆவியின் குரல் போல ஒலித்தது. இப்போது அவள், ஒதுங்கி, அந்தப் பெரிய கண்ணாடிச் சுவருக்கு அப்பால் இருந்த இரைச்சலான, ஈரமான உலகைப் பார்த்தபடி நின்றாள்.

“ஏய், நீ என்னத்தைப் பாக்குற?” வில்லியம் கேட்டான்.

மார்காட் ஏதும் சொல்லவில்லை.

“கேட்டேனில்ல? கேட்டாப் பதில் சொல்றியா இல்ல.” அவளை ஒரு தள்ளு தள்ளினான். அவளோ சிறிதும் நகரவில்லை; இன்னும் சொன்னால், அவன் தன்னை நகர்த்த அவள் அனுமதித்தாள், வேறேதும் செய்யவில்லை.

மற்றவர்கள் அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார்கள், அவளைப் பார்க்க மறுத்தார்கள். அவர்கள் போனதை அவள் அறிந்திருந்தாள். அந்தத் தரையடி பாதாள நகரில், ஒலி எதிரொலிக்கும் சுரங்கப் பாதைகளில் அவள் அவர்களுடன் எந்த விளையாட்டுகளையும் விளையாட மறுத்து வந்தாள், அதனால் இப்படி விலகினார்கள். அவளைத் தொட்டு விட்டு ஓடிப் போய் தங்களைப் பிடிக்கச் சொன்னால், அவள் அவர்களைத் துரத்த மறுத்தாள். வகுப்பில் எல்லாரும் சந்தோஷத்தைப் பறறி, வாழ்க்கையில் விளையாட்டுகள் பற்றிப் பாட்டுகள் பாடினால் அவளுடைய உதடுகள் துளிதான் அசைந்தன. சூரியனைப் பற்றியும், கோடையைப் பற்றியும் பாடும்போதுதான் அவள் உதடுகள் திறந்தன, அப்போதும் அவள் நனைந்து ஈரமான ஜன்னல் வழியே வெளியை வெறித்தாள்.

அவள் செய்ததில், எல்லாவற்றையும் விட மோசமான குற்றம், ஐந்து வருடங்கள் முன்னால்தான் அவள் பூமியை விட்டு இங்கு வந்திருக்கிறாள்- அவள் சூரியனை நன்கு நினைவு வைத்திருந்தாளா, அவளுக்கு அப்போது நான்கு வயதாகி இருந்தது, அவள் இருந்த ஒஹையோவில் சூரியன் எப்படி இருந்தது, வானம் எப்படி இருந்தது, எல்லாமே. அவர்களோ, அவர்களோ வெள்ளி கிரஹத்திலேயே வாழ்நாள் பூரா இருந்திருக்கிறார்கள், சூரியன் கடைசியாக வெளியே வந்தபோது அவர்களுக்கு இரண்டு வயதுதான் ஆகியிருந்திருக்கும், அந்த நிறம், சூடு, அப்புறம் அதெல்லாம் வெளியில் எப்படி இருந்தது என்பதெல்லாம் அவர்களுக்கு மறந்தே போயிருந்தது. ஆனால் மார்காட்டுக்கு நினைவிருந்தது.

“அது ஒரு பென்னி காசு போல இருக்கும்,” அவள் ஒரு முறை சொன்னாள், கண்களை மூடிக் கொண்டபடி.

“இல்லவே இல்லை!” மற்ற குழந்தைகள் கத்தினார்கள்.

“நெருப்பு மாதிரி எரியும்,” அவள் சொன்னாள், “அடுப்பில் இருக்கே அதுபோல.”

”ஒரே பொய். புளுகுணிப் பொண்ணு. உனக்கு ஒண்ணும் ஞாபகமில்லே.” அவர்கள் கத்தினார்கள்.

ஆனால் அவளுக்கு ஞாபகமிருந்தது, அவள் அவர்களிடமிருந்து ஒதுங்கி அமைதியாக நின்றாள், ஜன்னலில் கோடோடும் நீரைப் பார்த்தபடி. ஒரு தடவை, ஒரு மாதம் முன்னால், பள்ளியில் ஷவரில் குளிக்க அவள் மறுத்தாள், காதுகளைக் கைகளால் அடைத்துக் கொண்டு, தலையைக் கைகளால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு. அதற்கப்புறம், கொஞ்சம், கொஞ்சமாக, அவளுக்குப் புரியத் துவங்கியது, தான் வித்தியாசமானவள் என்று, அவர்களுக்கு அவளுடைய வித்தியாசம் தெரிந்திருந்தது, விலகினார்கள்.

வருகிற வருடம் அவள் அப்பாவும், அம்மாவும் அவளை மறுபடி பூமிக்கு அழைத்துப் போகப் போகிறார்கள் என்று ஒரு பேச்சு இருந்தது; அவளை பூமிக்கு அனுப்ப  பல ஆயிரம் டாலர்கள் அவள் குடும்பம் செலவழிக்க வேண்டும் ஆனாலும், அது எப்படியாவது நடக்க வேண்டும் என்றிருந்தது. மற்ற குழந்தைகள் அவளை வெறுத்தது இதனால்தான், சில பெரிய, சில சிறிய காரணங்கள், எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துத்தான். அவளுடைய பனி போல வெளுத்த முகத்தை, எதற்கோ காத்துக் கொண்டிருக்கும் மௌனத்தை, அவளுடைய ஒல்லி உருவத்தை, அவள் எதிர்காலத்தை. எல்லாவற்றையும்தான் வெறுத்தனர்.

“போய்த் தொலையேன்!” அந்தப் பையன் இன்னொரு தள்ளு தள்ளினான். “எதுக்கு இங்க காத்துகிட்டு இருக்கெ?”

அப்போது, முதல் தடவையாக, அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். எதற்கு அவள் காத்துக் கொண்டிருந்தாள் என்பது அவள் கண்களிலேயே தெரிந்தது.

“அப்படின்னா, இங்கே காத்துக்கிட்டு நிக்காதே!” அந்தப் பையன் கத்தினான், வெறியோடு. “நீ இங்க ஒண்ணையும் பாக்க முடியாது.”

அவள் உதடுகள் அசைந்தன.

”ஒண்ணுமே இல்லெ!” அவன் கத்தினான். “எல்லாம் வெறும் ஜோக், அப்பிடித்தானே?” மற்ற குழந்தைகளைப் பார்க்கத் திரும்பினான். “இன்னிக்கு ஒண்ணும் நடக்கப் போறதில்ல. அப்பிடித்தானே?”

அவனைப் பார்த்த குழந்தைகள் கண்களைக் கொட்டினார்கள். ஏதோ புரிந்து கொண்டு, தலையை ஆட்டிச் சிரித்தார்கள். “ஆமா! ஒண்ணும் இல்லெ, ஒண்ணுமே இல்லெ.”

“ஓ, ஆனா,” மார்காட் ரகசியம் போலப் பேசினாள், கண்களில் அகதித்தனம். “ஆனா, இன்னிக்கிதான் அந்த நாள், விஞ்ஞானிகளெல்லாம் கணக்குப் போட்டுச் சொல்லியிருக்காங்க; அவங்க நிச்சயமாச்சொன்னாங்க, அவங்களுக்குத் தெரியும், சூரியன்….”

“எல்லாம் வெறும் ஜோக்!” அந்தப் பையன் சொன்னான், அவளை முரட்டுத்தனமாகப் பிடித்தான். “ஏய், எல்லாரும் வாங்க, இவளை அந்த பெரிய அலமாரில தள்ளிப் பூட்டிடலாம், சீக்கிரமா, டீச்சர் வரதுக்குள்ள!”

“விடுங்க!” மார்காட் கத்தினாள், பின்னால் ஒதுங்கினாள்.

அவர்கள் கூட்டமாக அவளைச் சுற்றினார்கள், பிடித்து இழுத்தார்கள், கட்டித் தூக்கிக் கொண்டு போனார்கள், அவள் முரண்டினாள், கெஞ்சினாள், கேவி அழுதாள், சுரங்கப்பாதைக்குள் இழுத்துப் போனார்கள், ஒரு அறை, ஒரு பெரிய அலமாரி, அவளை உள்ளே தள்ளி, பெரிய கதவுகளை அறைந்து மூடிப் பூட்டினார்கள். அவள் உள்ளே கதவை மோதி இடித்துத் தள்ளியதால் அக்கதவுகள் அதிர்ந்தன, அதைப் பார்த்து நின்றார்கள். அவளுடைய அழுகை ஒலி மங்கலாகக் கேட்டது. பின், சிரிப்போடு, திரும்பி, சுரங்கப் பாதையை விட்டு வெளியே போய், டீச்சர் வருமுன் அறைக்குத் திரும்பினார்கள்.

“தயாரா, எல்லாரும்?” ஆசிரியை கேட்டார்.

“ஆமா!” எல்லாரும் சொன்னார்கள்.

”எல்லாரும் இருக்கீங்களா?” அவர் கேட்டார்.

“ஆமாம்!”

மழை இன்னும் கொஞ்சம் குறைந்தது. அவர்களெல்லாம் கதவுப்பக்கம் நெருக்கித் தள்ளி நின்றார்கள். மழை நின்றது.

பெரும் பனிச்சரிவு அல்லது, ஒரு சுழற்புயல், ஒரு சூறாவளி, ஒரு எரிமலை வெடிப்பு, இவற்றைப் பற்றிய ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கையில் திடீரென்று ஏதோ கோளாறில் ஒலி எந்திரங்கள் சிக்கி, எல்லா ஓசையும் தேய்ந்து கடைசியில் சுத்தமாக நின்று போனது போல இருந்தது. எல்லா இடிஒலியும், எதிரொலியும், மறுபடி பேரொலிகளும், அப்புறம் அந்த ப்ரொஜெக்டரில் இருந்து படத்தைப் பிய்த்து எடுத்து, பதிலாக ஒரு அமைதியான வெப்பப் பிரதேச நதியின் சலனமற்ற ஓட்டத்தைக் காட்டியது போல இருந்தது. உலகமே திடீரென்று நின்று போனது போல. அந்த அமைதி பிரும்மாண்டமாக, நம்ப முடியாததாக, காதுகளில் ஏதோ போட்டு அடைத்தது போல, கேட்கும் சக்தியே அற்றுப் போனது போல இருந்தது. குழந்தைகள் தம் காதுகளைக் கைகளால் மூடிக் கொண்டார்கள். தனித்தனியே நின்றார்கள். கதவுகள் வழுக்கி விலகின. பேரமைதியுடன், உலகம், மௌனத்தின் வாசனையோடு அவர்களை நோக்கி வந்தது.

சூரியன் வெளியே வந்தான்.

பற்றி எரிகிற தாமிர நிறம். பெரீய்ய்தாக இருந்தது. அதைச் சுற்றி இருந்த வானமோ தஹிக்கும் நீல நிறம். காடு சூரிய ஒளியில் மூழ்கிச் சுட்டது. மந்திரம் போட்டதால் மயங்கியது போல இருந்த சிறுவர்கள் திடீரென விடுபட்டு, பெரும் கூச்சலோடு, அந்தக் கோடைவெளியினுள் பாய்ந்தோடினர்.

“இங்க பாருங்க, ரொம்ப தூரம் ஓடாதீங்க!” ஆசிரியை அவர்களைக் கூப்பிட்டாள். “மொத்தம் ஒரு மணி நேரம்தான் இதெல்லாம். தெரியுதில்ல? தூரமாப் போனீங்க…நல்லா மாட்டிப்பீங்க!”

அவர்களோ ஓடினார்கள், ஓடினார்கள், முகத்தை வானோக்கி வைத்துக் கொண்டு, தங்கள் கன்னங்களில் சூடான சூரியன் ஒரு கதகதப்பான இரும்பைப் போலச் சுட ஓடினார்கள். போட்டிருந்த மேல் கோட்டுகளைக் கழற்றினார்கள், சூரியன் தங்கள் கைகளை எரிக்கக் காட்டி ஓடினார்கள்.

“இது வீட்டுல இருக்கற சூரிய விளக்கை விடப் பிரமாதமா இருக்கில்ல?”

”எவ்வளவோ உசத்தி!”

வெள்ளிக் கிரஹத்தைச் சூழ்ந்து மூடிய காட்டினுள் நுழைந்து ஓடுவதை நிறுத்தினார்கள். வளர்ந்து கொண்டே இருந்த காடு, வளர்வதைச் சற்றும் நிறுத்தாத காடு, பார்த்துக் கொண்டே இருக்கையிலேயே மளமளவென்று பெரும் களேபரமாக வளர்ந்த காடு. பெரிய ஆக்டபஸ்களைப் போல சதைப் பற்றோடு கைகளை நீட்டி வளர்ந்த பூண்டுகளாலான காடு. கரங்களை ஆட்டி, இந்த சிறு நேர வசந்தத்தில் சரேலெனப் பூத்து மண்டிய காடு. ரப்பர் போல, சாம்பல் போல அதன் நிறம். எத்தனையோ வருடங்களாகச் சூரிய ஒளியையே பார்த்திராத காடாயிற்றே. கற்களின் நிறத்தில் இருந்த காடு, வெள்ளைப் பாலாடைக் கட்டி போலும், மசியைப் போலுமெல்லாம் இருந்த காடு.

குழந்தைகள் அந்தக் காட்டு மெத்தையில் அங்குமிங்கும் புரண்டு அலைந்தார்கள். அது தம் கீழ் கீச்சிட்டும், பெருமூச்சு விட்டும் அசைந்து உயிர்ப்புடன், அசாதாரணத் தெம்புடன் அளைந்ததைக் கேட்டார்கள். மரங்களின் நடுவே ஓடி, வழுக்கி எல்லாம் விழுந்தார்கள். ஒருவரை ஒருவர் தள்ளினார்கள், கண்ணாமூச்சி விளையாடினார்கள், ஓடிப் பிடித்து விளையாடினார்கள். ஆனால் சூரியனை உற்று உற்றுப் பார்த்து நின்றதுதான் அனேக நேரம், கண்களில் நீர் பெருகும் வரை விடாமல் சூரியனை உற்றுப் பார்த்தார்கள். அந்த மஞ்சள் நிறத்தை நோக்கிக் கரங்களை நீட்டினார்கள். சூழ்ந்த அதிஅற்புத நீலத்தைத் தொட்டு விட விழைந்தார்கள். புத்தம் புதுக் காற்றை வேகவேகமாகப் பசியோடு உள்ளே இழுத்து மூச்சு விட்டார்கள். அசைவேதுமில்லாதும், ஒலியேதுமில்லாதுமிருக்கும் ஒரு கடலில் அவர்களை மிதக்க விட்ட பெரும் மௌனத்தை அவர்கள் கேட்டார்கள், கேட்டார்கள், உன்னித்துக் கேட்டார்கள். திடீரென்று, குகைகளில் இருந்து தப்பித்து ஓடும் விலங்குகளைப் போல, கட்டற்று, கூச்சலிட்டு வட்டமாக ஓடினார்கள், மறுபடி மறுபடி ஓடினார்கள். ஒரு மணி நேரமும் ஓடியபடியே இருந்தார்கள், நிறுத்தாமல் ஓடினார்கள்.

அப்போது-

ஓட்டத்தின் நடுவில், ஒரு பெண் கேவினாள்.

எல்லாரும் ஸ்தம்பித்தனர்.

அந்தப் பெண், திறந்த வெளியில் நின்றவள், தன் கையை நீட்டிக் காட்டினாள்.

“ஐயோ, பாருங்க, பாருங்க!” என்றவள், நடுங்கினாள்.

அவர்கள் மெல்ல வந்து, அவளுடைய திறந்திருந்த உள்ளங்கையை நோக்கினார்கள்.

சிறிது குவித்த அவள் கையின் நடுவில், பெரியதாக ஒரு மழைத் துளி.

அதைப் பார்த்தபடியே, அவள் அழத் துவங்கினாள்.

அவர்கள் அவசரமாக வானை நோக்கினார்கள்.

“ஓ, ஐயோ!”

சில குளிர்ந்த துளிகள் அவர்களுடைய மூக்குகளின் மேலும், கன்னங்களிலும், வாய்களிலும் வீழ்ந்துதிர்ந்தன. சாரல் புகையாகச் சிலிர்க்க, சூரியன் அதன் பின்னே மறைந்தான். காற்று சிலீரென்று அவர்களைச் சுற்றி விசிறியது. அவர்கள் திரும்பி, சிரிப்பை எல்லாம் தொலைத்தவர்களாய், கைகள் உடலருகே தொங்கியிருக்க, தரையடி வீட்டை நோக்கி நடந்து வர ஆரம்பித்தனர்.

ஒரு பேரொலியோடு இடி வீழ்ந்து அவர்களை அதிர்ச்சியூட்டியது. புயற்காற்றில் சிக்கிய இலைகள் போல அவர்கள் சிதறி ஓடினர். ஒருவர் மேல் ஒருவர் வீழ்ந்து தவித்து ஓடினர். மின்னல் பத்து மைலுக்கப்பால் எங்கோ பளீரென அடித்தது, ஐந்து மைல்களுக்கு அப்பால், ஒரு மைலுக்கு, அரை மைலுக்கு அப்பால். வானம் நள்ளிரவாய் இருண்டது, ஒரே கணத்தில்.

தரைகீழ் வீட்டு வாயிலில் ஒரு கணம் நின்றனர். கடும்மழை துவங்கும் வரை. பின் அந்தக் கனமான கதவுகளைச் சாத்தினர், டன் கணக்கில் வெளியிலெங்கும் வீழ்ந்த கனமழையின் ஆர்ப்பரிப்பை, எங்கும் பேரருவியாக ஊற்றிய நீரின் பளுவான ஒலியை, எந்த நேரமும் கேட்கப் போகிற அழுத்தத்தைக் கேட்டனர்.

”இன்னும் ஏழு வருடங்களாகுமா?”

“ஆமாம், ஏழுதான்.”

அப்போது ஒரு சிறுவன் சின்னக் குரலில் தேம்பினான்.

“மார்காட்!”

“என்னது?”

“அவள்… இன்னும்… நாம தள்ளிப் பூட்டின அலமாரியிலேயே… இருக்கிறாள்.”

“மார்காட்.”

யாரோ அவர்கள் எல்லாரையும் முளைகளைத் தரையில் அடித்துப் பிணைத்து விட்ட மாதிரி அறைந்த நிலையில் நின்றார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து விட்டுப் பின் பார்வையை அகற்றிக் கொண்டு பார்க்காமல் நின்றனர். வெளியில் விடாமல் பெய்த மழையைப் பார்த்தபடி நின்றனர். மழை பெயதது, பெய்தது, விடாமல் பெய்தபடி. யாரும் யாருடைய பார்வையையும் சந்திக்க இயலாமல் நின்றனர். அவர்கள் முகங்கள் குமுறிக் கொண்டிருந்தன, வெளுத்திருந்தன. தங்கள் கைகளை, கால்களைப் பார்த்து, முகம் தாழ்த்தி நின்றனர்.

“மார்காட்.”

ஒரு பெண் சொன்னாள், “இப்போ….?”

யாரும் நகரவில்லை.

“போலாம்,” மென்குரலில் உந்தினாள் அந்தப் பெண்.

குளிர்ந்த மழையின் ஒலி நிரம்பிய அந்த பெரிய அறை வழியே நடந்தார்கள். வாயில் வழியே திரும்பி, அறைக்குள் வந்தார்கள், புயலின் ஒலியும், இடியும் சூழ்ந்து, அவர்கள் முகங்களை நீலமாக, பயமூட்டும் விதமாக ஒளியூட்டின. அந்த மூடிய கதவருகே மெல்ல வந்து, அதனருகே நின்றனர்.

கதவுக்குப் பின்னே, கனத்த மௌனம்தான் இருந்தது.

இன்னுமே மெதுவாகப் பூட்டைத் திறந்தனர், மார்காட்டை வெளியில் விட்டனர்.

bottom-mast