2012 – இல்லாத அறிவியலும், இருக்கும் இறையியலும்

திரு.அரவிந்தன் நீலகண்டன் ஹாலிவுட் திரைப்படங்களில் அறிவியல் குறித்து எழுதும் புதிய தொடர் இது. இத்தொடரின் முதல் கட்டுரையை இங்கே படிக்கலாம்.

பிக்ஸல் பிக்ஸலாக வடிவமைக்கப்பட்ட அலுப்பூட்டும் பிரம்மாண்டமான பேரழிவு. கனகச்சிதமாக கணக்கிடப்பட்டு அமெரிக்க கதாநாயக தகப்பனின் காரை மட்டும் மைக்ரான்களில் தவிர்த்து ஊரையே தப்ப விடாமல் அழிக்கும் எரிமலைக் குழம்புகள்… உலகமே அழிந்தொழிய நெருப்பும், நீரும், பிளக்கும் பூமியுமாக, ஒரு குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருந்து சதி செய்யும் மகா பிரளயம். ஆனால் இந்த அழிவு முன்னறிவிக்கப்பட்டது. பழைய அழிந்து போன மாயா பண்பாட்டு மரபிலும், பின்னர் அண்மைக்காலங்களில் அறிவியல் மூலமும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் நோவாவின் பேழையை ஒத்த உயர் தொழில்நுட்ப பேழைகளில் காப்பாற்றப்பட்டு புதிய உலகை சிருஷ்டிப்பார்கள்.

படம் 2012

2012-movie-poster1-682x1024அக்டோபர் 22 1844: அமெரிக்கா பெரும் பரபரப்புடன் காத்திருந்த நாள் அது. அமெரிக்க நகர் ஒன்றின் சிறு மலைக்குன்றொன்றில் ஏறி நின்றிருந்தனர் ஒரு கூட்டத்தினர். இதோ உலகம் அழியப்போகிறது. இதோ தேவதூதர்களின் எக்காளம் ஒலிக்கப்போகிறது. இதோ மீட்பின் வாசல் திறக்கப் போகிறது. சில வருடங்களாகவே அமெரிக்கா எங்கிலும் பரவியிருந்த பேச்சு அது. வில்லியம் மில்லர் என்கிற ஒரு விவசாயி போதகராக மாறி பெரும் புகழ் அடைந்திருந்தார். அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஒரு இறைவார்த்தையாளர் (prophet). பைபிளின் உலக அழிவு குறித்த முன்னறிவுப்பகளை “தானியேலின் நூல்” என்கிற யூத விவிலியத்திலிருந்து எடுத்து வியாக்கியானம் கொடுத்து கணக்குகள் செய்து இந்த நாளை கண்டடைந்திருந்தார் மில்லர். அன்று முழுவதும் ஏசுவின் இரண்டாம் வருகைக்காக காத்திருந்த அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். இந்த நாள் மில்லரைப் பின்பற்றுவோரால் “பெரும் ஏமாற்ற நாள்” என அழைக்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கையாளர்கள் இதற்கு உடனே ஒரு தீர்வு கண்டனர். பூமி ஒரு புகலிடம்தான் (sanctuary). தேவன் அந்த நாளில்தான் வானக புகலிடத்தை தயார் செய்தார் என்று அவர்கள் நம்ப ஆரம்பித்தனர். பொதுவாக அட்வெண்டிஸ்டுகளும், குறிப்பாக செவன்த் டே அட்வெண்டிஸ்ட்களும் இந்த மில்லரின் இறையியல் வாரிசுகள்.

பேரழிவுகளின் மீது மேற்கத்திய உலகுக்கு ஒரு மீளாக்காதல் இருக்கிறது. முன்னறிவிக்கப்பட்ட பேரழிவு. உலக சிருஷ்டியின் அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றி பேழையில் வைத்து அதனைக் காப்பாற்றும் மனிதன் – அவன் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் – இந்த தொன்மங்கள் மேற்கத்திய மனதின் மீது கொண்டிருக்கும் பிடிப்பு அபாரமானது. இறைவனது சிருஷ்டியில் ஆரம்பித்து இறைவனது சீற்றத்தில் அழியும் ஒற்றைக்கோட்டு எளிய மானுட-மையவாத நம்பிக்கை இது. மேற்கின் பார்வையில் மானுடம் என்பது ஐரோப்பமெரிக்கா மட்டுமே எனும் சூத்திரம் சொல்லாமல் பெறப்படும். எனவே இந்த நம்பிக்கையை உண்மையாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு தலைமுறையிலும் பேரழிவு தனது தலைமுறையில் நடக்கப்போவதாக நம்பும் கூட்டங்கள் இருந்தவாறே உள்ளன.

இதனை நோவா பேழை ஸிண்ட்ரோம் (Noah’s Ark Syndrome) எனச் சொல்லலாமா? இந்த நோவா-பேழை மனபாதிப்பின் அடையாளம் 2012 திரைப்படத்தில் நவீனத்துவ முலாம் பூசி வருகிறது.

ஆனால் படு திராபையான அறிவியல். திரைக்கதையின் உலகின் இந்த மகா மெகா டிஜிட்டல் அழிவுக்கான வில்லன்கள் நியூட்ரினோக்கள் எனும் அணு உட்துகள்கள். 1930 இல் வூல்ஃப்காங்க் பாலி (பாலி எக்ஸ்க்ளூஷன் ப்ரின்ஸிபிள் மூலம் உங்களை பெஞ்ச் மேல் ஏறவோ அல்லது இயற்பியல் தேர்வில் பி-செக்ஷனின் ஐந்து மார்க் உங்களுக்கு வாங்கிக் கொடுக்கவோ செய்த அதே பாவி), இயற்பியலின் சில ஆதார விதிகளின் அடிப்படையில் இத்துகள்களின் இருப்பை ஊகம் செய்தார். என்ரிக்கோ பெர்மி அவற்றுக்கு நியூட்ரினோ என நாமகரணம் செய்தார். அவற்றின் இருப்பை 1950களில் ஊர்ஜிதப்படுத்திய அறிவியலாளருக்கு 1995 இல் நோபெல் பரிசு கிடைத்தது. செய்யப் போகும் அமைதி முயற்சிக்காகக் கிடைக்கும் ஒபாமா-எஃபெக்ட், அறிவியலுக்கான நோபெல் பரிசுகளில் இன்னமும் நிகழ்வதில்லை என்பது ஒரு விதத்தில் ஆறுதல். நியூட்ரினோக்களுக்கு நிறையும் இல்லை, மின்சார்பும் இல்லை. எனவேதான் அவற்றை கண்டுபிடிப்பதென்பது அத்தனை அரிதான பல பில்லியன் டாலர்களைக் கொட்டி செய்யப்படுகிற விஷயமாக இருக்கிறது. நிறையற்ற நுண் துகள்கள் விண்வெளியிலிருந்து வந்து புவியின் மையத்தை – அதாவது 350 ஜிகாபாஸ்கல் அழுத்ததில் திடமாக இருக்கும் மையத்தை – 2012 க்கு கணக்கிட்டு உருக்கி உலக அழிவை ஏற்படுத்துவதென்றால்… டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்களில் வரும் சில காட்சிகளைக் காட்டிலும் நம்ப முடியாத ஒரு அளப்பு அது. சூரியனும் நியூட்ரினோக்களை உமிழும். சூரிய கதிர்வீச்சு ஒரு பதினோரு வருட சுழற்சியை தன் இயக்க ஒழுங்காகக் கொண்டது. 2012-14 வருடங்களில் அத்தகைய ஒரு சாதாரண சராசரி சூரிய கதிர்வீச்சு சுழற்சி அதன் சுழலுச்சம் காணும். அது அதற்கு முன்னும் பின்னுமான ஏனைய பதினோரு ஆண்டு சுழற்சிகளிலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதோ அதீதமான உச்சம் கொண்டு புவியை அழிப்பதோ அல்ல.

கிராபிக்ஸ் பேரழிவுக்கு செலவழித்த நேரத்தை கதாசிரியர் வேறெதாவது நல்ல அறிவியல் கருதுகொள் கற்பனைக்கு செலவிட்டிருக்கலாம்.

அடுத்து மாயன் முன்னறிவிப்பு.

celestineprophecycoverமாயன் பண்பாடு அழிந்து விட்ட பண்பாடு. மேற்கத்திய நியூ ஏஜ்காரர்களிடம் இப்பண்பாட்டின் மாயம் ஒரு பெருங்கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக ஜேம்ஸ் ரெட்ஃபீல்ட் எழுதிய “செலஸ்டைன் ப்ராபெஸி” (Celestine Prophecy) எனும் கற்பனை பாதி, கருத்துகள் மீதி என்கிற ரீதியில் எழுதப்பட்ட நூலில் மாயன்களின் மறைவுக்கு அவர்கள் ஆன்மிக பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது அதிபரிமாணவெளிகளுக்குள் சஞ்சரித்து மறைந்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது. செலஸ்டைன் ப்ராபெஸி மிகப்பெரிய வியாபார வெற்றி. அதற்கு முன்னால் அது நியூ ஏஜ் குழுக்களிடம் கையெழுத்து பிரதியாக வலம் வந்து முதிராமனங்களில் பிரமிப்புகளை ஏற்படுத்தியது. என்ன விஷயமென்றால் மாயன் பண்பாடு ஒரு மர்மமாக மேற்கத்திய – குறிப்பாக அமெரிக்க மனதுக்கு – பெரும் ஈர்ப்பாக இருந்து வருகிறது. 2012 இன் முன்னறிவுப்பு மாயன்களிடமிருந்து வருவதில் ஒரு கூடுதல் கவர்ச்சி இயல்பாகவே எழுகிறது. ஆனால் இந்த 2012 உலக அழிவு குறித்த வதந்திகள், கதைப்பின்னல்கள் இத்திரைப்படத்தைக் காட்டிலும் பழமையானவை. அவற்றின் சரடுகள் (pun intended) படு-சுவாரசியமானவை. சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துப் பலகைகளிலும் அப்பண்பாட்டின் சித்தரிப்புகளிலும் ஒரு மர்மமான கிரகம் குறித்து சொல்லப்பட்டிருப்பதாகவும் அது 2003 இல் தோன்றி உலகத்தில் பேரழிவை உருவாக்குமெனவும் பரவலாக நம்பப்பட்டது. 2003 புவியில் எவ்வித குறிப்பிடத்தக்க அழிவுமின்றி வானில் எவ்வித புதிய வரவுமின்றி கழியவே இந்த அழிவு முன்னறிவிப்பு மாயன் பண்பாட்டில் மையம் கொள்ள ஆரம்பித்தது. மெஸபடோமிய பண்பாட்டு நீட்சியாக மாயனைக் காண்பதிலும் முன்னறிவிக்கப்பட்ட ஒன்று வானில் மேகங்களூடாக தோன்ற உலகம் அழிவதும் முக்கியமான மனப்படிமம். அதனை ஆபிரகாமியத் தொடர்பற்ற மாயன் பண்பாட்டில் ஒட்டுவது ஒரு ஆபிரகாமிய நம்பிக்கையையே அனைத்து பண்பாடுகளும் முன்னறிவிப்பதான சித்தரிப்பை பரவலாக்குவது.

மாயன்கள் இந்துக்களைப் போலவே காலச்சுழற்சிகளில் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின் மகா-கால சுழல் 1872000 நாட்களைக் கொண்டது (அதாவது 5128 ஆண்டுகள்) இச்சுழல் கிமு 3114 இல் ஆரம்பித்ததாகக் கணக்கிடப்படுகிறது. இது 2012 இல் முடிகிறது. மறு சுழல் ஆரம்பிக்கிறது. எந்த ஆண்டுச்சுழலையும் போல இது ஒரு பெரும் யுகச்சுழல் அவ்வளவுதான். ஆனால் இதனை உலக அழிவுடன் இணைப்பது அல்லது பேரிடர்களின் முன்னறிவிப்புடன் இணைப்பது மட்டமான இறையியல் முயற்சியில் தொடங்கி மலிவான வணிக தந்திரம் வரை அனைத்தும்.

ஹிந்து புராணங்களிலும் இந்த நோவா-தொன்மத்தின் இணை-புராணங்கள் உண்டு. ஆனால் இந்த உலக அழிவுக்கு குறித்த அச்சம் சமூக வியாதியாக இங்கு உருவெடுக்கவில்லை. இங்கு காலம் ஒற்றை சிருஷ்டியில் தொடங்கி ஒற்றை அழிவில் முடியும் ஒரு கதையாடலாக கற்பிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். பொதுவாக மேற்கத்திய நாட்டு பண்பாட்டை வாழ்விச்சை கொண்டதென்றும் பாரத மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளின் பண்பாடுகளை வாழ்வு நீக்கத்தன்மை (life-negating) என்று சொல்வோரும் இதை கவனிக்க வேண்டும். ஆயிரமாண்டுகள் தொடுக்கப்பட்ட அன்னிய ஆக்கிரமிப்புகள், அழிவுகள் சூறையாடல்கள், பருவநிலை தடுமாற்றத்தால் ஏற்பட்ட உள்ளுர் பஞ்சங்கள், காலனிய ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட கடுமையான பஞ்சங்கள்- அனைத்தையும் இந்த தேசமானது தனது ஆதாரவாழ்க்கையில் நம்பிக்கை இழக்காமலே எதிர்கொண்டிருக்கிறது. ஒப்பிட்டு நோக்க ஐரோப்பாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பிராந்திய இயற்கை சீற்றமும் கொள்ளை நோயும் உடனடியாக ஒரு “இதோ உலகம் அழிகிறது… இதோ மீட்பர் வருகிறார்” என்கிற நம்பிக்கைவெறி குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. பக்தி இயக்கத்தின் எண்ணற்ற குருக்களில் doomsday cult என்பது இல்லவே இல்லை. இத்தனைக்கும் இந்திய சமுதாயம் மிக மோசமான அரசியல் சமுதாய கொந்தளிப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்த காலகட்டம்தான் அது. எனவேதான் உலகம் நாளைக்கு அழிந்துவிடும் நாளை மறுநாள் அழிந்துவிடும் 2012 இல் அழிந்துவிடும் என்று சொல்லுகிற அழிவுநாள் -தீர்க்கதரிசிகள் இந்த மண்ணில் பல்கிப் பெருகி மன உலகை நிரப்பவில்லை.

உலக அழிவுடன் கூடவே மற்றொரு நீட்சியும் ஹாலிவுட்டினால் பிரபலப்படுத்தப்பட்டது.

அது அந்தி கிறிஸ்து (Anti-Christ) எனப்படும் இருளாட்சி கொணரும் தேவன்.

அது குறித்து அடுத்து பார்க்கலாம்.

One Reply to “2012 – இல்லாத அறிவியலும், இருக்கும் இறையியலும்”

Comments are closed.