மகரந்தம்

விவசாய நிலங்களில் அறுவடையாகும் கண்ணிவெடிகள்: clearing-landmines-011இலங்கையில் போர் முடிந்தது என்று சொல்லப்படுகிறது. நேரடி மோதல்கள் முடிந்தன என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்னும் கருத்துப் போர் நடக்கிறது, பிரச்சாரப் போர் உலகெங்கும் நடக்கிறது, தமிழகத்திலும் ஏதேதோ மூலை முடுக்கிலெல்லாம் கூட நடக்கிறது. சிங்களர்களின் அரசியல் கட்சிகளிடையே கூட ஒரு முக்கிய அம்சமாக தமிழர் விடுதலை கோரிக்கைப் பிரச்சினை இன்னும் மேடையேறிக் கொண்டுதான் உள்ளது. இவை எல்லாம் ஒரு மேல்தள அரசியலில் நடக்கும் மோதல்கள். இதை எல்லாம் விட அவசர அவசியமாக ஒரு போர் மிகக் கீழே சாதாரண மக்கள் நடுவே நடக்கிறது. அது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை எப்படி தொடர்வது, எப்படி குடும்பங்கள் பிழைக்க, எப்படி குழந்தைகளை வளர்க்க, எப்படி 30 ஆண்டுப் போருக்குப் பின் தமிழர்கள் தம் வாழ்வை நடத்த என்பதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்.

இந்தப் பிரச்சினைகளின் பல முகங்களில் ஒன்று நேரடியாக மக்களிடையே வன்முறை, தாக்குதல்கள் மூலம் உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருக்கப் பாதுகாப்பு தேடுவது குறித்தது. போர்க்காலத்தில் இரு தரப்பினரும் தமிழர் வாழ் பகுதிகள் முழுதும் எங்கெல்லாமோ கண்ணி வெடிகளைப் புதைத்து இருந்தனர் என்பது நமக்கு ஒரு தகவலாகத் தெரியும், ஆனால் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவை அன்றாடத் தாக்குதல்கள், பெரும் பயம் தரும் ஆபத்துகள், அவர்களைத் தம் வீடுகளருகேயோ, வயல்களிலோ சுதந்திரமாக நடமாடவோ, அவற்றில் உழைத்து வாழ்வாதாரம் தேடுவதோ சாத்தியமில்லாமல் ஆக்கும் பயங்கரங்கள். இந்தக் கண்ணி வெடிகளை அகற்றி நிலவெளியை மக்களுக்கு மீட்டுத் தர ஒரு சிறு குழு பல மாதங்களாக இயங்கி வருகிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது, இக்குழுக்களில் உழைத்து மக்களுக்கு வாழ்வை மீட்டுத் தரும் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளுபவர்களில் பலர் தமிழ்ப் பெண்கள். அவர்களில் சிலருடைய படங்களும், அவர்கள் எப்படி இந்தக் கண்ணி வெடிகளைச் செயலிழக்கச் செய்கிறார்கள் என்பதும் சில ஒளிப்படங்களில் இந்த வலைப் பக்கத்தில் பார்க்கலாம். 12 படங்கள், ஒவ்வொன்றாக நகர்த்திப் பார்க்கவும். இந்த வீராங்கனைகளுக்குத் தமிழகமும் தமிழர் உலகமும் தம் நன்றியை ஏதாவது ஒரு விதத்தில் தெரிவித்தால் நன்றாக இருக்கும். (நன்றி: கார்டியன் செய்திப் பத்திரிகை)

http://www.guardian.co.uk/society/gallery/2010/apr/02/clearing-landmines-demining-srilanka

சீனாவுக்கு மூளை கலங்கிவிட்டதா? 100 மிலியன் தடவை இவரது வலைப்பதிவுப் பக்கங்கள் பார்வையிடப் பட்டுள்ளன என்று இந்த வலைப் பத்திரிகை சீனப் பதிவாளரும், பத்திரிகையாளருமான ஹுவாங் ஹுங்கைப் பற்றிச் சொல்கிறது. அதில் 10இல் ஒன்றுதான் உண்மை என்றால்கூடப் பிரபலப் பதிவாளராகத்தான் இவர் இருப்பார். இவருடைய சமீபத்திய கேள்விimg-bs-top-huang-microblog_143447920396: ‘சீனாவுக்கு மூளை கலங்கி விட்டதா?’ பணமே பிரதானம் என்று ஆகும் எந்த நாட்டுக்கும் அப்படித்தானாகும். சீனர்களிடம் இன்னும் மனிதாபிமானம் உண்டு, அவர்கள் கரை சேர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கிறார். நாமும் அப்படியே விரும்புவோம், எந்த நாட்டு மக்களும் மனிதராகிக் கரை சேர்வதைத்தான் நாம் விரும்பவேண்டும். ஆனால் இவர் இத்தனை நாட்களாகக் கண்ணை மூடிக் கொண்டிருந்தாரா என்று கேட்கத் தோன்றுகிறது. சீனாவில் இந்தக் கொலைகள்தானா ஒரே குழப்பங்கள்?

சீனாவுக்கு இருப்பது நம் பண்டை இலக்கியத்தில் உள்ள ஒரு கதையை நினைவுபடுத்துகிறது. பைத்தியம் பிடித்த குரங்கு, கள்ளைக் குடித்து விட்டு, தேனீக்கள் கொட்டுவதால் ஓட்டம் பிடித்து… என்று போகுமே அந்தக் கதை.

மாவோயிசப் பைத்தியம் பிடித்த சீனாவுக்கு, உலகை ஆள வேண்டும் என்ற பிரமையும், பேராசையும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம். அத்தோடு உலகமே நமக்கு எதிராகச் சதி செய்கிறது என்றும் மனப்பிராந்தி பிடித்தால் பாயைச் சுரண்டுமளவு பித்துப் பிடிக்கும். நாம்தான் உலக நாகரீகத்தின் கலங்கரை விளக்கம் என்று தாமாகவே நினைத்துக் கொண்டு எல்லாரும் நம்மைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்தால் தலைமுறை தலைமுறையாக இளைஞர்களுக்கு தேசியம் என்ற போதை மருந்தை ஊட்டி அவர்களைப் போர்க்களத்துக்குப் பலிகடாவாக்கலாம்.

தற்காப்பு தேசியம் என்று சொல்லிக் கொண்டே அண்டை நாடுகளை உடைக்கச் சதியும் செய்யலாம், அங்கு நம் பாதுகையைத் தாங்க ஒரு படையைக் கூடத் தயார் செய்யலாம். சீனா இத்தனையையும் செய்கிறது. பிறகு இவர் கேட்பது ஒரு அபத்தக் கேள்வியாகத்தான் தெரிகிறது. என்றாலும் சீனப் பத்திரிகையாளரே சீனாவின் குழப்படிகளைக் கேள்வி கேட்கும்போது நாம் கவனித்தாக வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் சீனாவுக்கு வால்பிடிகள் பெரும் பத்திரிகைகள் மூலம் இந்தியரை மூளை சலவை செய்வதை ஒரு கடமையாக அல்லவா மேற்கொண்டிருக்கிறார்கள்? அதை எப்படித்தான் எதிர் கொள்வது?

சீனாவின் குரூரங்களில் மிகச் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறார் இவர்.

http://www.thedailybeast.com/blogs-and-stories/2010-04-02/has-china-gone-mad/p/

பெனின் நாட்டின் சூரிய வெளிச்சம்: ஆப்பிரிக்காவில் பெனின் என்ற நாடு உண்டு. நம்மில் எத்தனை பேருக்கு அது தெரியும்? அந்த நாடு ஆஃப்ரிகாவில் மிக வறண்ட நாடுகளில் ஒன்று. மழை மிகக் குறைவு. எனவே வளங்களும் குறைவு. இங்கு அபரிமிதமாகக் கிட்டும் வளங்களில் ஒன்று, வேறென்ன, இந்தியராகிய நமக்குக் கிட்டும் அதேதான், ஏராளமான சூரிய ஒளி. உலகம் எவ்வளவு மாறி விட்டதென்றால், இனிமேல் சூரிய ஒளி நிறைய வீழும் நிலப்பரப்புகளுக்கும் ஒரு தனி மவுசு வரும் போலிருக்கிறது. சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் தொழில் நுட்பம் ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று மிகவுமே முன்னேறி இருக்கிறதென்றாலும் உலகெங்கும் சூரிய சக்தியை மட்டுமே நம்பி இருக்கக் கூடிய அளவு அந்தத் தொழில் நுட்பமோ, அறிவியலோ முன்னேறி விடவில்லை. இருந்தாலும் இருப்பதை வைத்தே அந்த மக்கள் வாழ்வில் எத்தனையோ முன்னேற்றம் கொணர முடியும் என்று சில அமைப்புகள் நம்புகின்றன, அதற்கு முயல்கின்றன. அப்படி ஒரு முயற்சி இதோ. சில சோலார் பானல்கள், அவை கொணரும் மின்சக்தியால் இயக்கப்படும் ஒரு தண்ணீர் பம்ப், சில குழாய்கள், சொட்டு நீர்ப்பாசனம், குடிநீர் – மக்கள் ஆடிப் பாடக் கூடத் தயாராகி விடுகிறார்கள். அந்த இசையைச் சிறிது கேட்கலாம் இங்கே.

ஆமைகளின் கற்றலும் கற்பித்தலும்
மனிதனைத் தவிர பிற உயிரினங்களும், தங்களுக்கிடையே தகவல் பரிமாறிக்கொள்வதைக் குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். ஏன், சொல்வனத்திலேயே கூட இந்த விஷயத்தைக் குறித்துக் கட்டுரைகள் வெளியாயின. ‘சிதலும் எறும்பும் மூவறிவினவே’ கட்டுரையில் சாம்.ஜி.நேதன் எறும்புகளுக்கிடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்தைக் குறித்து எழுதினார். ‘எறும்பு மூளையின் சிறந்த முடிவு’ கட்டுரையில் ராமன்ராஜா எறும்புகள், தேனிக்கள் கூட்டாகச் சிந்திப்பதைக் குறித்து எழுதினார். ‘ராக்கெட் வண்டுகள்’ கட்டுரையில் தேசிகனும் தேனிக்களின் தகவல் தொடர்பைக் குறித்து எழுதினார். தாவரங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதைக் குறித்து சென்ற இதழில் ‘ஹாலிவுட் திரைப்படங்களின் அறிவியல்’ கட்டுரையில் குறிப்பிட்டார் அரவிந்தன் நீலகண்டன்.

african-spurred-tortoise1சென்ற வாரம் நடந்த ஆய்வில், ஆமைகளும் தகவல் பரிமாற்றத்தை உபயோகிக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. இதில் என்ன சிறப்பென்றால், இத்தனை காலமாக, எறும்புகள், தேனீக்கள் போன்ற சமூக உயிரினங்கள் (social animals) மட்டுமே தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் எனவும், ஆமைகள் போன்ற ’தனிமை விரும்பி’ விலங்குகள் ஒன்றிலிருந்து ஒன்று எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்வதில்லை எனவும் நம்பப்பட்டு வந்தது. அதாவது ‘தகவல் பரிமாற்றம்’ அல்லது ‘பார்த்துக் கற்றுக்கொள்ளல்’ என்பது கூட்டாக வாழும் உயிரினங்களிடம் மட்டுமே இருக்கும் பரிணாமத் தேவை எனக் கருத்தப்பட்டு வந்தது. அதைத் தகர்த்தெறிந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி. இந்த வலைப்பக்கத்தில் அந்த ஆராய்ச்சியைக் குறித்த செய்தியையும், வீடியோவையும் பார்க்கலாம்.

http://www.wired.com/wiredscience/2010/04/video-tortoises-learn-from-each-other/

அண்டப்பெருவெளிகளில் முதல் முறையாக – Hubble 3D!

imax_hubbleசென்ற வருடம் மே மாதம் ஹப்பிள் செயற்கைக்கோளில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, சில விண்வெளிப் பொறியாளர்கள் அதை நேரடியாகச் சென்று சரிசெய்ததை நாம் அறிவோம். அந்தத் தொழில்நுட்பக் கோளாறு எவ்வாறு சரிசெய்யப்பட்டது என்பதை ஒரு விவரணப் படமாகத் திரையரங்குகளிலும், அறிவியல் கூடங்களிலும் வெளியிட்டப்பட்டிருக்கிறது. வழக்கமாக நாஸாவின் விவரணப்படங்கள், விண்வெளி வேலை வெற்றிகரமாக முடிந்தபின், பொறியிலாளர்களின் வீட்டிலோ, அலுவலகத்திலோ எடுக்கப்படும் பேட்டிகளின் தொகுப்பாக இருக்கும். இவை மிகவும் சலிப்பேற்படுத்துபவையாக இருக்கவே, இந்தமுறை நேரடியாக விண்கலத்திலேயே பேட்டிகளும், உரையாடல்களும், செயற்கைக்கோள் சூழல்களும் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதில் சில அண்டப்பெருவெளிக் காட்சிகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு முப்பரிமாணத்தில் (3D) காட்டியிருக்கிறார்கள். நேரடியாக அண்டப்பெருவெளியில் எடுக்கப்பட்ட காட்சிகளைத் தவிர, சில காட்சிகளை உள்ளரங்கில் நடித்துக்காட்டிப் படம்பிடித்திருக்கிறார்கள். இப்படத்தின் காட்சிகளைப் பின்னணியிலிருந்து விவரிக்கும் குரல் பிரபல ஹாலிவுட் நடிகர் லியாணார்டோ-டி-காப்ரியோவுடையது.

Michael J. Massimino என்ற விண்வெளிப்பொறியாளர்தான் (astronaut) ஹப்பிள் செயற்கைக்கோள் கோளாறை சரி செய்தவர். அதைச் சரிசெய்துகொண்டிருந்தபோது அவருடைய மனநிலை எப்படியிருந்தது, எவ்வாறு இந்தக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன, விண்வெளியில் படம்பிடிக்க என்னவிதமான பயிற்சிகள் பொறியாளர்களுக்குத் தரப்பட்டன போன்ற பல சுவாரசியமான விஷயங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் இக்கட்டுரையில் படிக்கலாம்:

http://www.nytimes.com/2010/04/06/science/space/06hubble.html?hpw

இப்படத்தின் முன்னோட்டத்தை இங்கே பார்க்கலாம்:

http://www.youtube.com/watch?v=NvlbAItBdK4