பூச்சுகளற்ற எதார்த்தம், இடரில் நகைப்பு- போலிஷ் கவிதைகள்

ந்த இதழில் போலந்து குறித்து சற்று விரிவாகக் கவனித்திருக்கிறோம்.  தற்செயலாக நடந்தது இது.  சென்ற வாரம் போலந்துக் கவிஞர் ஒருவரின் கவிதைகளை மொழிபெயர்த்து அவருடைய படைப்புகளுக்கு ஒரு அறிமுகம் எழுதி வைத்திருந்தேன்.  அந்த வார இறுதியில் போலந்து நாட்டு அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், 95 இதர முக்கியஸ்தர்களும் விமான விபத்தில் இறந்தது கண்டு அதைப் பற்றி எழுத யோசித்தேன்.  அப்போது இறந்தவர்களில் ஒருவரான ஆனா வாலண்டீனோவிச் (Anna Walentynowicz ) என்ற 80வயது மூதாட்டி பற்றிப் படித்து வியப்படைந்தேன். போலந்தின் வரலாற்றை மாற்றி அமைத்து அங்கு எதேச்சாதிகாரத்தின் சங்கிலியை அறுத்தெறிந்தது தொழிலாளர் இயக்கமான ‘ஒற்றுமை இயக்கம்’ என்னும் ஜனநாயக இயக்கம்.  அந்த இயக்கத்தின் தோற்றுவாயில் இருந்து, அது இறுதியில் நாட்டின் ஆட்சியைப் பிடித்த காலம் வரையிலும் அந்த இயக்கத்தில் ஊறி இயங்கி மக்களுடைய விடுதலை அவாவுக்கு ஒருகிரியா ஊக்கியாகச் செயல்பட்டவர் ஆனா வாலண்டினோவிச் என்னும் தீரப் பெண்மணி.  தனியொரு பெண்ணாக வாழ்ந்து மனம் தளராமல் சோவியத் அமைப்புகளின் கடும் தாக்குதல்களை எதிர்த்து நின்றவர்.  இவரையும், இவரோடு இயங்கி ஒற்றுமை இயக்கத்தை நடத்திய பலரையும், அந்த இயக்கத்தை முறியடிக்க முயன்ற கம்யூனிஸ்டு கட்சியின் இறுதிக்காலத் தலைவர் யருஸெலஸ்கியையும் பற்றிய அக்கட்டுரையை இந்த இதழிலேயே இங்கே படிக்கலாம்.

orr450போலந்தில் சோவியத் ஆட்சியின் கொடுமைகளைத் தோற்கடித்த ஜனநாயக இயக்கம் தொழிலாளர்களே துவங்கி இறுதி வரை தலைமை ஏற்று வழிநடத்திய ஒரு இயக்கம்.  போராடுவோர் வன்முறையைப் ப்யன்படுத்தாது நடத்திய அது   யூரோப்பிய வரலாற்றில் ஒரு அசாதாரண நிகழ்வு.  அந்த இயக்கத்தில் போலிஷ் மக்களின் பல தள மக்களும் பங்கெடுத்தனர்.  அந்தப் பலரில் ஒரு முக்கிய நபர், ஜ்பிக்னியெஃப் ஹெர்பர்ட் (Zbigniew Herbert) என்னும் கவிஞர்.  இவரோ அரசியலில் கவிதைக்கு அதிக வேலை இல்லை என்று கருதியவர். கவிதை என்பது தற்கால அரசியல்களத்தில் இறங்கி நிற்கக் கூடாது, மனிதரைச் சூழ்ந்த தூல எதார்த்தத்தைப் பற்றியும் அத்துடன் மனிதருக்கு ஏற்படும் உறவுகள், போராட்டங்கள் பற்றியும் பேசுவதுதான் கவிதையின் செயல், அதுவே கவிஞருக்கான இயங்குதளம் என்று கருதிய வர். ஆனாலும் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை ஒரு ஜனநாயகத் தொழிலாளர் இயக்கத்துடன் இணைந்து இவர் கழித்தது ஒரு வியப்பு தரும் முரண்.

மேலே முன்குறிப்பில் சொன்ன தீரமான பெண்மணி ஆனா வாலண்டீனோவிச் (Anna Walentynowicz) தன் இறுதி நாட்களில் ஒரு பேட்டியில் சொன்னதும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கருத்துதான்.  புரட்சி என்றெல்லாம் பம்மாத்து செய்து அதிகாரத்தைப் பிடிப்பவர்கள் எல்லா வசதிகளையும் பதுக்குகிறார்கள், சொந்த உபயோகத்துக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.  ஆனால் யாரைப் பலியிட்டு, யார் முதுகில் ஏறி அந்த அதிகாரத்தைப் பிடித்தார்களோ அந்த உழைப்பாளி மக்கள் தொடர்ந்து வறுமையிலேயே எங்கும் உழல்கிறார்கள்.  பின் புரட்சி எதற்கு? எங்கள் வாழ்வாதாரங்கள் நலம் பெற்றால் அது போதும் என்றுதான் இந்த இயக்கத்தைத் துவங்கினோம் என்றார் ஆனா. அவர் தெளிவு கருதிக் கவிதை நயமில்லாது சொன்ன கருத்தை, நகையுணர்வும், கவித்துவமும் சேர்த்துச் சொன்னார் ஜ்பிக்னியெஃப்.  முதலில் நாம் பார்த்தது தத்துவச் செழுமை சேர்த்த அவருடைய கருத்து.  ஜ்பிக்னியெஃப் மட்டுமல்ல, அவருடைய போலிஷ் மொழிக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இன்னொரு போலிஷ் எழுத்தாளரான செஸ்வாஃப் மீவோஷ் (Czeslaw Milosz) கூட எதார்த்தத்தைப் பூச்சுகள் இன்றி, கருத்தியல் மாயைகள் இன்றி அணுகவேண்டும் என்று வலியுறுத்தியவரே.

ஜ்பிக்னியெஃப் ஹெர்பர்ட் வாழ்ந்த காலம் 74 வருடங்கள் (1924-1998).[1]  பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம், பின் தத்துவம், சட்டம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் வாங்கியவர்.  நாஜிகளுக்கெதிராகப் போரிட்ட போலிஷ் போராளிகள் அணியில் இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்தார்.  ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிய போலந்தில் துன்புற்ற இவர், கம்யூனிசத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடியவர்.  போலந்தின் மூன்று முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

பொழுது விடிந்ததும் சுடப்பட்டு இறக்கத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி இரவைப் பற்றி இவர் எழுதிய கவிதை ஒன்று இவருடைய கவிதைகளின் தன்மைக்கே ஒரு பொது மாதிரி என்கிறார் விமர்சகர் சிமிக்  அதே நேரம், ஏனோ இவரை ஒரு நகைச்சுவை மிக்க எழுத்தாளர் என்று சிமிக் குறிப்பிடுகிறார். போர்க்காலப் பயங்கரங்கள், சர்வாதிகார அடக்குமுறை (Totalitarianism), அகதி வாழ்க்கை ஆகியவை பற்றி எழுதியவருக்கு நகைப்பு எளிதில் கைவரும் போலிருக்கிறது.  ஒடுக்கப்படும் மனிதருக்கு மிஞ்சிய ஒரு உணர்வு நகைப்புதானோ?

மரணத்தை எதிர்பார்த்து இருக்கும் கைதிகள் பற்றி நிறைய யூரோப்பியப் படைப்புகள் இருக்கின்றன என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போர் மட்டுமல்ல, ஸ்டாலினியம், ஃப்ராங்கோவின் ஸ்பெயின், இதாலிய ஃபாசிஸம், நாஜியிசம், தவிர பல கிழக்கைரோப்பிய நாடுகளின் பல இனக்குழுப் போராட்டங்கள், துருக்கியரின் ஆர்மீனியப் படுகொலைகள், ருமானியா, பல்கேரியா போன்ற நாடுகளில் யூதர்களின் படுகொலைகள் என்று மரணத்தை ஒவ்வொரு நாடும் சகஜமாக மக்களுக்கு வாரி வழங்கி இருந்த ஒரு அரை நூற்றாண்டு 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதி. அப்படி ஒரு ’கொலையுதிர் கால’த்தின் சாரத்தைக் கொடுத்ததால் ஜ்பிக்னியெஃப் அப்படி ஒரு கவனம் பெற்றாரா என்று நாம் யோசிக்கலாம்.

இவருடைய பல கவிதைத் தொகுப்புகளும், படித்தவர் மனதில் ஸ்டாலினிய காலத்து அடக்கு முறை ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துன்பங்களையும், யூரோப்பின் இருண்டகாலம் எனப்படும் அந்த வருடங்களையும் ஒருக்காலும் மறக்க் முடியாமல் பதிப்பன எனச் சொல்லப்படுகிறது.  இத்தனைக்கும் அவை பரபரப்பான முழக்கங்கள் நிறைந்த, ஆரவாரிப்புகளாலான கவிதைகள் அல்ல. அவை அரசியல் கவிதைகளே அல்ல, கவனமான உளவியல் பார்வை கொண்டவை, சாமானிய மனிதரின் வாழ்வொட்டிய சிந்தனையையும், நடத்தையையும் கருவாகக் கொண்டவை என்றும் தெரிகிறது.  அப்படிப் பலதளங்களில் அவை இயங்கியதால்தான் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்த நினைவுகளும், அவற்றை அனுபவித்து நொந்த மக்களின் தலைமுறைகளும் தேய்ந்து அழிந்து போனபின்பும் இக்கவிதைகள் வரலாற்றுப் புத்தகங்களை விட வலிமையான தாக்கம் உள்ளனவாக உலவுகின்றன போலும்.

போலந்தை ஒடுக்கிய கம்யூனிசத்தைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடிய தொழிலாளர் இயக்கமான ‘ஒற்றுமை இயக்கத்தில்’ (Solidarity movement) முழுமனதோடு இறங்கிப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் இவர். உழைப்பாளரின் அணியில் நெடுநாட்கள் இருந்திருக்கிறார், அதே நேரம் அமெரிக்க வாசத்திலும் முதலியத்தின் பெரும்பொருள் திரட்டுடைய தர்க்கம் இவரைக் கவரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்கிறார் அலிஸ்ஸா வல்யெஸ். இந்த கவனிப்பை முன்வைத்து விட்டு, நகரங்கள் மனித ஆத்மாவைக் க்றைப்படுத்தி நசுக்குகின்றன என்று ஜ்பிக்னியெஃப் கருதினார் என்றும், நகரங்களை இவர் அதிகம் விரும்பவில்லை என்றும் இவரது முக்கிய மொழிபெயர்ப்பாளரான அலிஸ்ஸா வல்யெஸ் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.[2] அந்தக் கட்டுரை அனேகமாக ஜ்பிக்னியெஃப்பின் வாழ்வின் கதியைக் கச்சிதமாகச் சித்திரிக்கிறதென்று சொல்லலாம்.

ஜ்பிக்னியெஃப் போலிஷ் ரகசியப் போலிசுக்கு உளவாளியாக இருந்து சக எழுத்தாளர்களைக் காட்டிக் கொடுத்து வந்தார் என்ற அவர் இறந்த பின்பு எழுந்த ஒரு குற்றச்சாட்டு எத்தனை பொய்யானது என்பதையும் இக்கட்டுரையில் அலிஸ்ஸா வல்யெஸ் சுட்டுகிறார்.  அடக்குமுறை, ரகசியம், உளவாளிகளின் கூட்டம், சட்டம் நீதி ஏதுமற்ற ஒரு அரசு, அன்னிய ஏகாதிபத்தியம், அதற்குக் கைக்கூலிகளாகச் செயல்பட்ட உள்நாட்டுக் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் என்று பல விதமான தீவிர நோய்களால் பீடிக்கப்பட்ட போலந்து எப்படி அன்று வாழ்ந்த பல எழுத்தாளர்களுக்கும் நரகமாக இருந்தது, அதன் நடுவில் தன் சுயத்தை இழக்காது வாழ்ந்த ஒரு சாதனையாளர் ஜ்பிக்னியெஃப் என்று இதில் அலிஸ்ஸா குறிப்பிடுகிறார்.

————–oooOOOOooo————–

இங்கு கொடுக்கப்பட்ட ’கூழாங்கல்’ எனும் கவிதை ஆங்கிலத்தில் வெளியான அவருடைய முதல் கவிதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.  இதில் பெருவாரியை அலிஸ்ஸா வல்யெஸ் (Alissa Valles) மொழிபெயர்த்தார்.  சுமார் 80 கவிதைகளை பீடர் டேல் ஸ்காட் என்பவரும், செஸ்வாஃப் மீவோஷ் (Czeslaw Milosz)  என்னும் சக போலந்து நாட்டு எழுத்தாள்ரும் சேர்ந்து மொழிபெயர்த்தனர். இவருடைய பல கவிதைகளைச் சொல்வனத்தின் வருங்கால இதழ்களில் கொண்டு வர முயல்வோம்.

இன்னொரு கவிதையான ‘திரு.காஜிடோவின் இடது கால்’ என்கிற கவிதை இவரது ஒரு படைப்பான திருவாளர் பொதுஜனம் (Mr.Cogito) பற்றிய பல கவிதைகளின் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
தன் புகழ் உச்சிக்குப் போனபோதும் அதைப் பற்றி ஒரு அங்கதப் பார்வையோடே இருந்தார் ஜ்பிக்னியெவ், எதுவும் அவர் தலைக்கேறவில்லை.  இறுதி வரை அதிகாரம் என்பதை விலகி இருந்து கேலியாகவே பார்த்தார் என்றும் பல விமர்சகர்கள் கூறுகிறார்கள். அலிஸ்ஸாவும் அதைச் சுட்டுகிறார்.  இறுதியாக, கவிஞரின் உலகு எத்தகையது என்று ஜ்பிக்னியெஃப் ஒரு உரையில் குறிப்பிட்டதை இங்கு சுட்டலாம்.  அது தன்னளவில் ஒரு சுருக்க விளக்கமாய் இருக்கும்.

” ஒரு கவிஞர் தன் படைப்புகள் பற்றி ஆழ்ந்த கவனம் கொண்டவராக இருந்தால், அவருடைய செயல் களம், ”சமகாலமாகாது”- [சமகாலம் எனும்] அச்சொல் நான் கொள்ளும் அர்த்தப்படி, சமூகம், அரசியல், அறிவியல் ஆகியவை பற்றிய இன்றைக்கான புரிதலைச் சுட்டுகிறது-  மாறாக, மனிதனைச் சூழ்ந்த தூலமான எதார்த்தத்துடன், இந்த மேஜை,  அந்த அண்டை வீட்டுக்காரர், இன்றைக்கு இந்த நேரம்:  ஆகியவற்றுடன், அவன் நடத்தும் ஒரு அசலான, பிடிவாதம் தளராத உரையாடலில்தான் உள்ளது.  தியானம் செய்யும் திறமையை நாம் இழந்து வருகிறோமே அதை மறுபடியும் பயின்று கற்பதில் உள்ளது.” [3]

இவரது முதல் தொகுப்பை மொழிபெயர்த்த இருவரில் ஒருவரான, செஸ்வாஃப் மீவோஷ் லிதுவேனியாவில் பிறந்த போலிஷ் கவிஞர்,பிற்பாடு அமெரிக்காவில் குடியேறியவர், 1980ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மீவோஷ், லிதுவேனியன், போலிஷ், ரஷ்யன், ஆங்கிலம், மேலும் ஃப்ரெஞ்ச் ஆகிய ஐந்து மொழிகளில் தேர்ந்தவர். இவரும் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர், நகைமுரணாக அமெரிக்காவின் பல்கலைகளில் இடதுசாரிக் கோட்டையாகக் கருதப்பட்ட கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலையில் பேராசிரியராக சுமார் 20 வருடம் பணியாற்றினார்.  ’சிறையுண்ட புத்திகள்’ (’The Captive Minds’) என்கிற ஒரு நூல் இவருடைய படைப்புகளில் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

walking-in-the-city-street

திருவாளர் காஜிடோவின் கால்கள் [4]
ஜ்பிக்னியவ் ஹெர்பர்ட்

இடது கால் சாதாரணம்தான்.
நம்பிக்கையூட்டுவதாக உள்ளதென்று கூடச் சொல்ல்லாம்
கொஞ்சம் குட்டையோ ஒருவேளை
சின்னப் பயல்தனமாயும் இருக்கிறது
குதூகலச் சதையுண்டு
ஆடுசதையோ வெகுநாகரீகமே

வலதுகாலோ
பரிதாபம்
குச்சிதான்
வடுவான இரண்டு கீறல்கள்
ஒன்று குதிகாலருகே
மற்றது முட்டைபோலிருக்கு
வெளுத்து ரோஸ்நிறத்தில்
தப்பிக்கையில் கிட்டிய கேவலப் பரிசு

இந்த இடதுக்கு
தவ்விக் குதிக்கவே துடிப்பு
நடனமாடவும்
வாழ்வின் மீது ரொம்பவே ஆசையா
அதைப் பலி இடத் தயக்கம்

வலதுக்கோ
மேட்டிமையின் இறுக்கம்
ஆபத்தை ஏளனம் செய்தபடி

அவன் இதோ வருகிறான்
இருகால் நடையில்
இடது பாவம் சாஞ்சோ பான்ஸா போல [5]
வலதோ
சாகசம் செய்ய விரும்பும் வீரக் கனவான் போல
திருவாளர் காஜிடோ
நடக்கிறார்
உலகின் ஊடே
கொஞ்சம் நொண்டியபடி.

இங்கிலீஷுக்கு மாற்றியவர்:ஜான் எம். கொகோல் (John M. Gogol)

pebbles2

கூழாங்கல்

ஜ்பிக்னியவ் ஹெர்பர்ட்

கூழாங்கல்
ஒரு முழுமையான ஜந்து

தனக்கு நிகர் தானேயானது.
தன் எல்லைகளை நன்கறிந்தது.

கச்சிதமாக நிறைந்தது
கூழாங்கல்லுக்கான பொருளால்

எதையும் நினைவுபடுத்தாத ஒரு வாசனை அதனிடம்
எதையும் பயப்படுத்தி விரட்டாதது எந்த ஆசையையும் தூண்டாதது

அதன் ஊக்கமும் குளிர்ச்சியும்
தக்கவை கண்ணியமானவை

என் கையில் அதை எடுக்கையில் கனமான
வருத்தத்தை உணர்கிறேன்.
அதன் மேன்மையான உடலில்
பொய்யான உஷ்ணம் ஊடுருவுகிறது

– கூழாங்கற்களை யாரும் அடக்கிவிட முடியாது
இறுதி வரையிலும் நம்மை அவை
அமைதியாய், தெளிவாய் பார்க்கும்.

(இங்கிலீஷுக்கு மொழிமாற்றியவர்கள்: பீடர் டேல் ஸ்காட், செஸ்வாஃப் மீவோஷ்)

 

குறிப்புகள்:

[1] யூரோப்பிய மொழிகளில் காணக் கிட்டும் Z என்கிற எழுத்து இங்கிலீஷில் கொள்கிற உச்சரிப்பைத் தமிழில் கொடுக்க முடியவில்லை. ’ஜ்’ என்ப்தையும் ‘ஸ்’ என்ற ஒலியையும் சேர்த்தால் கிட்டும் ஒலி ஜ்பிக்னியெஃப் ஹெர்பர்ட் (Zbigniew Herbert) என்கிற இந்த போலந்து நாட்டுக் கவிஞரின் பெயரின் துவக்க ஒலி.

[2] அலிஸ்ஸா வல்யெஸ் (Alissa Valles) டச்சு, அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்து ஆம்ஸ்டர்டாம், மற்றும் அமெரிக்காவில் வளர்ந்து இரு நாடுகளிலும் வாழ்கிறவர். தன்

கவிதைகளுக்காகவும் கவனிக்கப்பட்டு வரும் ஒரு கவிஞர். இவர் ஜ்பிக்னியெஃப் ஹெர்பர்ட்டின் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்தவர். இவர் ஜ்பிக்னியெஃப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை இடது சாரிப் பத்திரிகையான பாஸ்டன் ரிவ்யுவில் வெளியானது. அது இங்கே கிட்டும்: http://bostonreview.net/BR32.6/valles.php

[3] ”The poet’s sphere of action, if his attitude toward his work is serious, is not the “contemporary”—which I take to mean the state of our current knowledge about society, politics, and science—but the real, the stubborn dialogue of man with the concrete reality surrounding him, with this table, with that neighbor, with this time of day: the cultivation of a dwindling capacity for contemplation.” (‘The Poet Facing the Contemporary World’ -Talk at Silesia,.Spring, 1972)

[4] காஜிடோ என்பது ஹ்வொனே டேக்கார்ட் (René Descartes) எனும் புகழ்பெற்ற ஃப்ரெஞ்சு அறிவியலாளரின், இருப்புக்கான நிரூபணத்தைத் தேடும் அறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட ஒரு சொல். இது குறித்து மேலைத் தத்துவத்தில் நிறைய நீண்ட சர்ச்சைகள் உண்டு.  தன் இருப்பை எப்படி நிரூபிப்பது என்ற பிரச்சினையை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்த தத்துவவியலாளரைப் பற்றி ப்ளேடோ, அரிஸ்டாடில் காலத்திலிருந்து பெர்னார்ட் விலியம்ஸ், கிய்ர்கெகோர்(ட்), ஃப்ரீடெரிஹ் நீட்ஷா என்று ஒரு பெரும் பட்டியலே போடலாம். இங்கு அந்தப் பெயர் சிறிது அங்கத உணர்வுடன் பயன்படுத்தப்படுகிற்து என்ப்து தெளிவு.  அறிவார்ந்த பிரச்சினைகளைப் போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளாது அன்றாட வாழ்வுப் பிரச்சினைகளைச் சமாளித்து மீளும் மனிதரை இப்படிக் குறிப்பிட்டு கருத்தியலுக்கும் வாழ்வுக்கும் உள்ள இடைவெளியைச் சுட்டுகிறார் ஜ்பிக்னியெஃப் எனலாம். இருப்பை எந்த சிந்தனையாளரையும் விட நெருக்கமாகவும், அசலாகவும் யாரே உணரக் கூடியவர்? அது திருவாளர் பொதுஜனம்தான் என்பதில் நமக்கென்ன ஐயம் இருக்க முடியும்?

[5] சாஞ்சோ பான்சா என்னும் பெயரும், சாகச வீரனும் உலகின் முதல் நவீன நாவல் என்றறியப்படும் டான் கிஹொடே (Don Quixote) என்ற, 16ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் எழுதப்பட்ட, புத்தகத்தில் வரும் இரண்டு மையப் பாத்திரங்கள். டான் கிஹோடே கருத்துகள், கொள்கைகளால் தொடர்ந்து உந்தப்பட்டு எதார்த்தத்தைச் சரியாக ஒருபோதும் புரிந்து கொள்ளாத ஒரு நபர். சாஞ்சோ பான்ஸா அவருடைய எடுபிடி, உலக எதார்த்தத்தைத் தாண்டி யோசிக்காத நபர்.  இங்கு இடது அப்படி ஒரு நபராகவும், வலது எதார்த்தத்தை அணுகத் தெரியாத நபர் போலவும் உருவகிக்கப்படுவது தெளிவு.