துயரில் விளைந்த ஜனநாயகம் – போலந்து

griefசென்ற வார இறுதியில் –  சனிக்கிழமையன்று, போலந்து நாட்டின் அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், அவருடன் சுமார் 95 போலிஷ் தலைவர்களும், பல முக்கியஸ்தர்களும் பயணித்த ஒரு விமானம் ரஷ்யாவில் ஒரு விமானதளத்தில் இறங்க முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தார்கள். போலந்தின் தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்கள் இதில் இறந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்த சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த போலிஷ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா ஏதோ சதி செய்து தம் அதிபரைக் கொன்றதாகப் போலிஷ் மக்கள் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து மாஸ்கோ டைம்ஸ் என்கிற ரஷ்யப் பத்திரிகையே கூட ரஷ்ய அரசு ஏதோ சதி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டு, அந்த சம்பவம் திறந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறது.

உண்மை எப்படி இருந்தாலும், ரஷ்யா போலிஷ் அதிபரைக் கொல்வதில் என்ன லாபம் காணப் போகிறது?  மேலும் ஏன் இப்படி ஒரு சந்தேகம் போலந்து மக்களுக்கு ரஷ்யா மீது எழுகிறது?

ரஷ்யா மீது போலந்து நாட்டு மக்களுக்கு இன்னும் ஒரு நூறாண்டாவது சந்தேகம் இருக்கும்.  1939 இல் ஸ்டாலினும், ஹிட்லரும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் போலந்தைத் தம் நாடுகளுக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள். அதன்படி ஹிட்லர் போலந்தைத் தாக்கியபோது சோவியத் ரஷ்யா கண்டு கொள்ளாமல் இருந்தது. பின் ரஷ்யா கிழக்குப் போலந்தைத் தாக்கி பெருவாரியான போலந்துப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது. போலிஷ் ராணுவம் சரணடைந்திருந்த போது, அதன் அதிகாரிகளில் பாதிப்பேர் ரஷ்யர்களிடம் கைதிகளாக இருந்தார்கள்.  இவர்களில் சுமார் 22,000 கைதிகளை (ஏற்கனவே சரணடைந்து ஆயுதம் ஏதுமற்ற அதிகாரிகள், சாதாரணப் படைவீரர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், இன்னும் பல ராணுவ உதிரிப் படைகள்), 1940ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி அன்று துவங்கி, காடீன் என்னுமிடத்தில் NKVD எனப்படும் சோவியத் போலிஸ் அமைப்பு (Народный Комиссариат Внутренних Дел  Narodnyy Komissariat Vnutrennikh Del) எந்தக் காரணமும் இன்றி சுட்டுத் தள்ளி, புதைத்தது.

அது மட்டுமில்லாமல்  இரண்டு மிலியன் (இருபது லட்சம் – 20,00,000) போலிஷ் மக்களைப் போலந்திலிருந்தும், இதர பால்டிக் கடல் நாடுகளில் இருந்தும் கட்டாயப்படுத்தித் துரத்தி, சைபீரியாவிலோ, மத்திய ஆசியாவில் ஆளில்லா அத்துவானங்களிலோ நிறுத்தியது. குடும்பங்கள் உடைக்கப்பட்டு, ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும், சிறுகுழந்தைகள் தனியாகவும் பாசறைகளில் வைக்கப்பட்டார்கள்.  நீண்ட ரயில் பயணங்களில் ஆடுமாடுகள் போல சரக்குப் பெட்டிகளில் அடைக்கப்பட்டுக் கொண்டு போனதில் பட்டினியிலும், குளிரிலும், நெருக்கடியிலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். இப்படி இறந்தவர்கள் தவிர எஞ்சியோர் கட்டாய உழைப்புக்குப் பயன்படுத்தப்பட்டார்கள்.

இப்படி போலிஷ் மக்களில் பல்லாயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்பது ரஷ்யாவின் ரகசியப் போலிஸ் நிறுவனத்தின் நெடுநாள் தலைவராக இயங்கிய பேரியாவின் கோரிக்கை.  இதில் மொத்த ரஷ்யக் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோவும், ஸ்டாலினும் சேர்த்துக் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.[1] காடீன் என்னுமிடத்தில் நடந்த படுகொலைகளை, இந்த விமான விபத்து நடந்த தினம் வரை கூட, தன் ரகசியப் போலிஸ் அமைப்பு நடத்தியதாக ரஷ்யா ஒத்துக் கொள்ளவோ, அதற்கென ஒரு சம்பிரதாயமான மன்னிப்பு கேட்டதோ கிடையாது.  போலந்து அரசும், தலைவர்களும், மக்களும் இந்த தினத்தை ஒரு துக்க தினமாக அனுசரித்து வருகிறார்கள்.  விபத்தில் இறந்த போலிஷ் அதிபர் இந்த தினத்தை காடீனுக்குச் சென்று அனுசரிக்கவே போலிஷ் அதிகாரிகள், தலைவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்தார்.

ரஷ்யா ஜெர்மன் நாஜிகள் மீது இந்தக் கொலைப்பழியை இத்தனை நாட்கள் போட்டிருந்தது. அது பொய் என்பது இப்போது நிறுவப்பட்டிருக்கிறது.  ரஷ்ய நீதிவிசாரணைக் குழுவே இதை ஒரு பத்தாண்டுகள் முன்பு ஒத்துக் கொண்டிருந்தாலும், அரசு அதை சமீபத்து நாள் வரை ஏற்கவில்லை.  2006 இல் புடின் ஒரு தொலைக்காட்சி நேர்முகப் பேட்டியில் இதை ஓரளவு ஒத்துக் கொண்டாலும், அது “1920இல் போலந்தில் சிறைப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் இறந்ததற்குப் பழி வாங்கல். எனவே, இதைப் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ளக் கூடாது” என்று சொல்லி நழுவ முயன்றார்.

விமான விபத்து நடந்த நாள் வரை கூட  ரஷ்யா தன் பொறுப்பை ஏற்க மறுத்து வந்தது.  விபத்து நடந்து தம் மீது சந்தேகம் வலுக்கிறது என்று தெரிய வந்ததும் வ்ளாதிமிர் புடின் தம் முந்தைய  நிலையை மாற்றிக் கொண்டு, ரஷ்யா பொறுப்பை ஏற்க முன்வந்திருப்பது போலக் காட்டுகிறார்.  போலந்தில் ரஷ்யா நடத்திய அடக்குமுறை ஆட்சியின் கொடூரங்களைத் தவிர போலந்தின் சில பகுதிகளை ரஷ்யா இரண்டாம் உலக யுத்தத்தில் கைப்பற்றி விட்டுத் திருப்பிக் கொடுக்கவில்லை.  இதையேல்லாம் தவிர வேறென்னவோ அரசியல் பிரச்சினைகளும் உண்டு. பின் ஏன் போலிஷ் மக்கள் ரஷ்யா மீது சந்தேகப்பட மாட்டார்கள்?

070605_for_kaczynskiex
விபத்தில் இறந்த லெஹ் கசின்ஸ்கி

இன்னொரு முக்கிய காரணமாக, போலந்தில் சமீபத்தில் ஷேல் எனப்படும் மண்ணடுக்குகளில் எரிவாயு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.  இறந்த ஆளும் அதிபர் கசின்ஸ்கி மேற்கு நாடுகளுக்கும், திறந்த சந்தைச் சமூகத்துக்கும் ஆதரவாளர்.  எனவே  நிச்சயம் அவர் மேற்கின் எண்ணெய் நிறுவனங்களுக்கே முதல் உரிமை கொடுத்திருப்பார். அவை ஒருவேளை தொழிற்சாலைகளை நிறுவி உறபத்தியும் துவங்கினால், யூரோப்பின் எரிவாயுச் சப்ளை மீது ரஷ்யாவுக்கு இன்று இருக்கும் இரும்புப்பிடி பயனற்றுப் போய்விடும்.  போலந்துடன் போட்டி போடும் ரஷ்யா முன்போல எதற்கெடுத்தாலும் யூரோப்பியநாடுகளுக்கு எரிவாயு சப்ளை செய்வதை நிறுத்தி விடுவோம் என்று அச்சுறுத்தித் தன் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது.  அதனால் புடினும் அவருடனும் ரஷ்ய எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பெரும் முதலீட்டைக் கைப்பற்றிய இதர ரஷ்யக் கொழுத்த முதலாளிகளும் இந்த அதிபரின் சாவை விரும்பி இருக்கக் கூடும் என்றும் சந்தேகம் இருக்கிறது. [3]

பன்னாட்டு அரசியலில் என்னவெல்லாம் அடங்கி இருக்கின்றன பாருங்கள்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் இரும்புப் பிடியிலும், அதன்பின் ரஷ்யாவின் கைப்பொம்மையான போலிஷ் கம்யூனிஸ்டு ஆட்சியின் ஒடுக்குமுறைகளின் கீழும் வாடிய போலிஷ் மக்களுக்கு 1989இல் முதல் முறையாக ஜனநாயக முறைத் தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு கிட்டியது. அதுவும் பகுதி ஜனநாயகத் தேர்தலே. ஏனெனில் பாதிக்கு மேற்பட்ட தொகுதிகள் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தன.  45 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, ரஷ்யாவின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தம் மக்களையே ஒடுக்கிய போலிஷ் கம்யூனிஸ்டுகளுக்கு, அதற்குப் பிறகும் பாராளுமன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு தேவைப்பட்டது என்றால் அவர்கள் எந்த அளவுக்கு மக்களெதிரிகளாகச் செயல்பட்டிருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம். இந்த நிலை மாறுதல் கூட தானாக எழவில்லை.  சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலிஷ் தொழிலாளர் இயக்கம் ஒன்று கம்யூனிஸ்டு கட்சியின் எதேச்சாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது.  அந்த இயக்கத்தின் பெயர் ‘ஒற்றுமை இயக்கம்’ (Solidarity movement). தொழிலாளர்களே தலைமை ஏற்று நடத்திய இந்த இயக்கம் அத்தனை அரசியல் தடைகளையும் தாண்டி வளர்ந்து போலிஷ் கம்யூனிஸ்டுகளால் ஒடுக்க முடியாத அளவு பெரிதாகி விட்டதால் 1989இல் போலிஷ் அரசு மேற்சொன்ன சமரசத்துக்கு வந்தது.

1970களில் கெடான்ஸ்க் பகுதி மக்களின் எழுச்சி, குறிப்பாகக் கப்பல் கட்டும்  துறைமுகத்தில் தொழிலாளர்கள் துவக்கிய கம்யூனிச எதிர்ப்பு இயக்கம், ஆளும் கம்யூனிஸ்டுகளினால் பலமுறை தடை செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டும், நலிவடையாமல் பின்னாளில் ‘ஒற்றுமை இயக்கம்’ (Solidarity movement) என்று பெயர் பெற்று வளர்ந்தது.  லெஹ் வலேசா என்னும் ஒரு முன்னாள் துறைமுகத் தொழிலாளியின் தலைமையில் 20 வருடங்களாக வளர்ந்த இது, 1990இல் அரசியல் இயக்கமாக மாறி, ஜனநாயக முறையில் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துக் கம்யூனிசத்துக்கு மரண அடியைக் கொடுத்தது.  இந்த வரலாறு ஏன் இப்போது முக்கியம்?

walentynowicz1
ஆனா வாலெண்டீனோவிச்

மேற்படி விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் ஆனா வாலெண்டீனோவிச் (Anna Walentynowicz) என்னும் ஒரு தீரப் பெண்மணி.  அதிபரோ இதர அரசியல்வாதிகளோ இறந்ததைவிடத் தொழிலாளர்களின் இயக்கத்தின் நங்கூரமாகவும், கம்யூனிசச் சுரண்டலில் இருந்து தொழிலாளரை விடுவிக்க நடந்த பல பத்தாண்டுப் போராட்டத்துக்கு முன்னணி வீரராகவும் இருந்த இவர் இந்த விபத்தில் இறந்தது போலந்து மக்களுக்குப் பேரிழப்பு என்று சொல்லப்படுகிறது.  போலந்து மக்களின் மனசாட்சி என்று இவர் அறியப்பட்டிருக்கிறார்.

மேற்சொன்ன ஒற்றுமை இயக்கமும், அந்தத் தொழிலாளர் எழுச்சியும் நடக்க ஒரு கிரியா ஊக்கியாகவும், அந்த இயக்கத்தை முன்னின்று நடத்திய தொழிலாளர்களில் ஒருவராகவுமிருந்தவர் ஆனா.  ஆனால் பின்னாளில் அந்த இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி ஆட்சியைப் பிடித்த போது அதிகாரத்தில் பங்கெடுக்க மறுத்தவர்.  துவக்கத்தில் ஒரு வெல்டிங் வேலைக்காரராகவும், பின் ஒரு க்ரேன் ஆபரேடராகவும் பணியாற்றிய ஆனா வாலெண்டீனோவிச் பத்து வயதில் அனாதையாக ஆனதிலிருந்து, ஒரு உழைப்பாளியாகவே பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்.

1970 இல் கம்யூனிஸ்டு அரசின் காவல் படையினர், உணவுப் பொருள்களின் பெரும் பற்றாக் குறை நாட்டில் நிலவியதைக் கண்டித்து வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களில் 50 பேரைச் சுட்டுக் கொன்றபின், அந்தப் படுகொலையின் முதலாண்டு நிறைவுக்கு மலர் வளையம் வைக்க நிதி திரட்டித் தம் எதிர்ப்பு இயக்கத்தைத் துவங்கினார்.  கைதானார். தான் தொழில் துவங்கிய வருடங்களில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்வமுள்ள உறுப்பினராகவும் இருந்து பின் விலகியிருக்கிறார்.  கொமுல்காவின் கம்யுனிஸ்டு ஆட்சியில், போலந்து ஒரு இழிவிலிருந்து இன்னொரு பேரிழிவுக்குத் தள்ளாடிப் பயணித்தபோது கம்யூனிஸ எதிர்ப்பாளராக மாறிய ஆனா வாலெண்டினோவிச், 1978 இல் தனிப்பட்ட தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அது சட்டத்தில் அனுமதிக்கப்படாது ரகசியச் சங்கமாகப் பல வருடம் இயங்கியது. ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்டுகளின் கைக்கூலித் தொழிலாளர் சங்கத்தை எதிர்ப்பதற்காகவும், தொழிலாளர் நலன்களைக் காக்கப் போராடவும் இந்த இயக்கம் துவக்கப்பட்டதாக பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்கிறார்.

இந்தக் கட்டத்தில் அவர் ஒரு ரகசியச் செய்தித்தாளையும் துவங்கி இருந்தார்.  துறைமுகத் தொழிற்சாலைத் தலைவர்களிடையே இருந்த பெரும் ஊழல்களை இச்செய்தித்தாள் வெளிப்படுத்தியது.  இந்தப் பிரசுரகர்த்தர் வேலை இவருக்கு நீண்ட சிறைத் தண்டனையைப் பெற்றுக் கொடுத்தது.  பல பெண்கள் இந்தச் செய்தித்தாளை நிறுவக் காரணமாயிருந்தனர்.  1981இல் இவர் வேலையில் இருந்து ஓய்வு பெறச் சில மாதங்களே இருந்த போது இவரை வேலை நீக்கம் செய்தது நிர்வாகம். தொழிற்சாலைக்கு அருகில் இருந்த ஒரு இடுகாட்டில் இருந்து மெழுகுவர்த்தித் துண்டுகளைத் திருடினார் என்று குற்றச்சாட்டு. அவர் அவற்றைச் சேகரித்து 1970 இல் இறந்த தொழிலாளர்கள் நினைவாக ஏற்ற புது மெழுகுவர்த்திகளைத் தயாரித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. நாட்டில் அத்தனை பொருள் பற்றாக்குறை.  இந்த வேலை நீக்கத்திற்கு எதிராக எழுந்த தொழிலாளர்கள் நீண்ட வேலை நிறுத்தத்தைத் துவங்கினர்.

அந்த வேலைநீக்கத்தில் துவங்கிய ‘ஒற்றுமை இயக்கத்தின்’ வேலை நிறுத்தம் போலந்து நாட்டின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது. இரண்டு வருடம் கழித்து நாட்டில் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்தது. ஜெனரல் வாய்ட்செஹ் யருஸெலஸ்கியின் ராணுவக் கம்யூனிஸ்டு ஆட்சி சில வருடங்கள் திணறிச் செயல்பட்டுப் பின் தொழிலாளரைச் சமாளிக்க இயலாமல் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு படிப்படியாகத் தன் கட்டுப்பாட்டை இழந்து 1989இல் ஆட்சியில் இருந்து சரிந்தது.

5-120msz
‘ஒற்றுமை இயக்கத்தின்’ வேலை நிறுத்தம்

போலந்து மக்களை எப்படி ரஷ்யா உடைத்தது, எப்படி ஒரு பகுதியினரைத் தம் உளவாளிகளாகவும், தன் ஏகாதிபத்தியத்துக்கு அடியாட்களாகவும் பயன்படுத்தியது என்பது யருஸெலஸ்கியின் கதையைப் படித்தால் தெரியும்.  இன்று சீனாவின் உளவாளிகளாகவும், அடிவருடிகளாகவும் இந்தியாவில் செயல்படும் பல அறிவு ஜீவிகளும், பயங்கரவாத அமைப்புகளும் நாளைக்கு ஒரு வேளை ஆட்சியைப் பிடித்தால் நம் மக்களுக்கு என்னவொரு இழிநிலை காத்திருக்கிறது என்பதை போலிஷ் மக்கள் தம் வாழ்வில் சந்தித்த பயங்கரங்கள் நமக்குச் சுட்டும்.  எந்த அன்னிய நாடும் ஒரு நாட்டு மக்களுக்கும் விடுதலையைக் கொணராது.  மக்கள் தாமே தம் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும். இந்தப் படிப்பினை போலிஷ் மக்களின் வரலாற்றில் மறுபடி மறுபடி நமக்குக் கிட்டும்.

ஏன், 20ஆம் நூற்றாண்டில் சோவியத் ரஷ்யாவின் பிடியலகப்பட்டுத் தத்தளித்த மொத்தக் கிழக்கைரோப்பிய மக்களின் அவல வாழ்க்கையே இதைத்தான் சொல்கிறது.  தம் நாட்டின் பண்பாடு, வரலாறு ஆகியவற்றை இழிவாகக் கருதி அன்னிய அரசுகளின் ஏவலராகச் செயல்பட்ட மனிதர்கள் பின்னால் தம் மக்களாலேயே அருவருக்கப்படுவதையும் நாம் பார்க்கலாம்.

ரஷ்யாவில் தன் இளமைக் காலத்தில் ஒரு போர்க்கைதியாக இருந்த யருஸெலஸ்கி, பின்னாளில் ரஷ்யக் கைக்கூலியாக மாறியது போலந்தின் துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 1968இல் போலந்தின் பாதுகாப்பு மந்திரியாக உயர்ந்திருந்த யருஸெலஸ்கி, ஒரு யூத எதிர்ப்பு வெறியர்.  யூதர்களை ராணுவத்தில் இருந்து விரட்டிய ஒரு இயக்கத்தையே முன்னின்று நடத்தியிருக்கிறார்.  செக்கொஸ்லாவேகிய மக்கள் ரஷ்ய ஏகாதிபத்தியம் தம் நாட்டைப் பிடித்து வைத்து நடத்திய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த முனைந்தபோது ரஷ்யரின் ஆணையைச் சிரமேற்று, போலிஷ் ராணுவத்தை செக் மக்களை ஒடுக்க அனுப்பி வைத்த புண்ணியவான் யருஸெலஸ்கி.

கெடான்ஸ்க் துறைமுகத் தொழிலாளர்களைக் கொலை செய்த அடக்குமுறைகளை நிகழ்த்த ஆணையிட்டவரும் இவரே. 1981 இல் பிரதம மந்திரி ஆனார். உடனே கெடான்ஸ்கில் ஆனா போன்றார் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதே வருடம் ஒற்றுமை இயக்கத்தின் வேலை நிறுத்தத்தை ஒடுக்க யருஸெல்ஸ்கி நாட்டில் ராணுவ ஆட்சியைக் கொணர்ந்தார். சர்வாதிகாரியானார்.  இவரும், இன்னும் சில உயரதிகாரிகளும், கம்யூனிஸ்டு கட்சியின் மேலிடங்களுமாக அதிகாரத்தை மேன்மேலும் சிறு குழு ஆட்சியாக ஆக்கும் ஒரு முயற்சியே அது என்று இன்றைய வரலாற்றாளர்கள் முடிவு சொல்கிறார்.

01543032
லெஹ் வாலேசா. முன்னணியில் ஆனா.

போலிஷ் தொழிலாளர்கள் நாடெங்கும் வேலை நிறுத்தம் துவங்கவும், யருஸெல்ஸ்கி பின்வாங்கும்படி ஆயிற்று. ஆகஸ்டு, 1981 இல் சாலிடாரிடி இயக்கம் (ஒற்றுமை இயக்கம்) தனித் தொழிலாளர் சங்கம் நடத்த அனுமதிக்கப்பட்டது.  லெஹ் வாலேசா அதன் தலைவரானார். சீக்கிரமே பெரும் தொழிற்சங்கமாக வளர்ந்த ஒற்றுமை இயக்கம், போலந்தின் மக்கள் தொகையில் கால்பங்குக்கு மேல் உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது என்று 1998 ஆம் வருட டைம் பத்திரிகைக் கட்டுரை சொல்கிறது. பாட்டாளிகளின் வாழ்வை உயர்த்துகிறோம் என்று உலகெங்கும் பறை சாற்றிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சியில் பாட்டாளிகளை ஒடுக்குவதைத்தான் பல நாடுகளிலும் செய்திருக்கின்றன.  அதனால்தான் போலிஷ் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகப் புறப்பட்டார்கள்.

1989 இல் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு ஆட்சி வீழ்ந்து, சோவியத் யூனியன் உடைந்த போது, போலந்தில் ஏற்கனவே கம்யூனிஸ்டு கட்சி உளுத்துப் போயிருந்தது.  பெருவாரியான மக்களின் வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் உள்ளாகிய அக்கட்சி அதற்குப் பிறகு ஒரு சிறு காலம் இன்னும் ஆட்சிக்கு அருகில் இருந்தது. அடுத்த காலகட்டத்தில் ஆட்சியைப் பிடித்த முன்னாள் துறைமுகத் தொழிலாளியும், நெடுநாள் கம்யூனிஸ்டு எதிர்ப்பாளருமான லெஹ் வலேசா, 1990இலிருந்து 1995 வரை அதிபராக ஆட்சி நடத்தி,  அரசுமையப் பொருளாதாரமாக இருந்த போலந்தின் பொருளாதாரம் அடிப்படையில் மாறி திறந்த சந்தைப் பொருளாதாரமாக மாறத் தயார் நிலைக்குக் கொணர்ந்தார். ஆயினும் 1995 இல் சிறு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தன் பதவியை இழந்தார். இம்முறை பதவியைப் பிடித்தவர் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டு ஆன அலெக்ஸாந்தர் காஃப்ஷினியெவ்ஸ்கி.  ஏகப்பட்ட பொய்கள் சொல்லி இந்தத் தேர்தலை இவர் வென்றார் என்று பின்னாளில் தெரியவந்தது.  இவருடைய வரலாறும் நெடுகக் கறைகள் நிறைந்த வரலாறு.

இவர் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, வலெசாவின் அரசியல் நிலைபாடுகளையே பெரிதும் தொடர்ந்தாரென்றாலும், திறந்த சந்தை சமூகத்தை நிறுவ இவருக்கு அத்தனை ஊக்கமில்லை என்று சொல்லப்படுகிறது.  ஆனாலும் பத்து வருடங்களில் இவர் தன் முன்னாள் கம்யூனிஸ்டு சார்பு அரசியலில் இருந்து நழுவி மெல்ல மெல்ல நடுநிலைக்கு வந்திருந்தார் என்று நாம் கருத முடியும்.  இவர் செய்த ஒரு முக்கிய மாற்றம் – ஸ்டாலினிய அரசியல் சாசனமே இன்னும் நாட்டின் அமைப்பை நடத்தியதை மாற்றி ஒரு புது சாசனத்தை அமல்படுத்திய சாதனை அது.  ஓரளவு வலதுசாரி அரசியலுக்கு இவர் நகர்ந்ததும், இவருக்குப் பெரும் ஆதரவு எழுந்தது. இருந்தும் இவர் மீது எழுந்த பல ஊழல் குற்றச்சாட்டுகளால் அந்த ஆதரவை இழந்தார்.

இரண்டு முறையே ஒருவர் பதவி வகிக்கலாம் என்ற சட்டத்துக்கிணங்கி இவரது பதவிக்காலம் 2005 இல் முடிந்தது. நிச்சயமான வலது சாரியும், ஓரளவு பழமைவாதியுமான விபத்தில் இறந்த லெஹ் கசின்ஸ்கியிடம் இவர் ஆட்சியைக் கைமாற்றிக் கொடுத்தார்.  கசின்ஸ்கியின் அரசு, துவக்கத்தில் மிகவும் சிரமங்களுக்கு உள்ளானாலும், சமீபத்தில் ஓரளவு நிலைபெற்று இன்னொரு ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியைப் பிடித்திருந்தது. போலந்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்து செய்த குற்றங்களைச் சட்டபூர்வமாக அணுகி நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லி இருந்தவர் இவர். இவர் போலந்தின் எரிசக்திப் பிரச்சினையைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகளே மணலடுக்குகளில் இருந்து எரிவாயுவைப் பிடித்து அதை உற்பத்தி செய்யும் முயற்சிக்கு இட்டுச் சென்றன.

லெஹ் கசின்ஸ்கி தன் வாலிபத்தில் இருந்தே கம்யூனிஸ்டு ஆட்சியை எதிர்த்தவர்.  இவரும் ஒற்றுமை இயக்கத்தில் ஒரு முக்கியத் தலைவராகச் சில வருடம் இருந்தவர். லெஹ் வலேசாவின் முக்கிய ஆலோசகராகச் சில வருடம் இருந்தவர்.  2001 இல் இவர் போலிஷ் கன்சர்வேடிவ் கட்சியைத் துவங்கி விரைவில் மிகப் பிரபலமானார். அரசியலிலும், ஆட்சியிலும் ஊழலை எதிர்த்து இவர் எடுத்த நடவடிக்கைகளால் இவருக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தது. இவர் இப்போது இறந்ததில் போலந்தின் வலது சாரி அரசியல் பெரிதும் நலிவுறும் என்று எதிர்பார்க்கலாம்.  அதே நேரம் போலிஷ் தேசியமும் நலியுமா?  அதுதான் இன்று போலிஷ் மக்கள் முன் நிற்கும் ஒரு கேள்வி, அச்சம்.  கசின்ஸ்கி போன்றார் ரஷ்யாவின் பிடி தம் நாட்டின் மீது மேலும் இறுகாமல் இருக்க, போலந்தின் எரிபொருள் தேவைகளுக்கு ரஷ்யக் கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்து விடுபடப் பெரிதும் முயன்று வந்தனர்.  அந்த முயற்சி சமீபத்தில் ஓரளவு முன்னேறி இருக்கிறது. போலந்தின் கணிசமான கரிவளம் மிக்க சுரங்கங்களில் இருந்து கரியை எரிவாயுவாக மாற்றும் தொழில் நுட்பத்திற்கு முதலீடு செய்திருக்கிறது.  மாற்று எரிபொருள் ஆராய்ச்சிகளிலும் இறங்கி உள்ளது.

வலேசாவையும் இவரையுமே கூட ஆனா வாலெண்டீனோவிச் எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்தார். 1999 இல் ஒரு பேட்டியில், வேலை செய்யுமிடங்களில் தொழிலாளருக்கு மேலான பாதுகாப்பு, சுதந்திர தொழிற்சங்கங்கள், நல்ல ஊதியம் இவற்றைத்தான் நாங்கள் துவக்கத்திலிருந்தே கேட்டிருக்கிறோம். எந்தப் புரட்சியையும் இல்லை என்கிறார். ‘புரட்சி நடந்த பின் நான் பார்த்தது – பெரும்பாலான மக்களிடையே மோசமான ஏழ்மை, மக்களுடைய தொழிற்சாலைகள் விற்கப்பட்டு யார் யார் பைகளுக்கோ பணம் போனது, இதையெல்லாம் பார்த்தபோது நாங்கள் நினைத்தது சரி என்று தெரிந்தது’ என்று சொன்னாராம். [2]  இங்கு புரட்சி என்று ஆனா சொல்வது கம்யூனிஸ்டுகளை ஒழித்த ‘ஜனநாயகப் புரட்சி’யை!

p17_22982509
துக்கம் அனுசரிக்கும் துறைமுகத் தொழிலாளர்கள்

கிழக்கைரோப்பிய நாடுகளில் சோவியத் சரிவுக்குப் பின் அம்மக்களுக்குக் கிட்டிய பெரும் சுதந்திரம், நிகழ்ந்த அந்தப் பெரும் அரசியல் மாற்றம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு விதப் புரட்சியாகப் பெயர் சொல்லப்படுகிறது. ஒரு சில வருடங்களில் எத்தனை லட்சம் மக்கள் அடக்குமுறைக் கொடுமைகளில் இருந்து கம்யூனிஸ்டுகளின் புல்லுருவி ஆட்சிகளிலிருந்து விடுபட்டு எழுந்தனர் என்று பார்த்தால் வரலாறு திடீரென்று மாறியது புலப்படும்.  அந்த மாற்றம் பல பத்தாண்டுகளாக நடந்து 1989இல் ஒரு வெடிப்பாகி இருப்பது உண்மையே.

உதாரணமாக, செக் நாட்டில் இது ‘வெல்வெட் புரட்சி’ எனப்பட்டது.  யுக்ரெய்னில் இது ‘ஆரஞ்சுப் புரட்சி’. போலந்தில் இது ‘ஜனநாயகப் புரட்சி’.  ஆனால் வாலண்டீனோவிச் சொல்வதில் இரண்டு அர்த்தம் உண்டு.  ‘சோசலிசப் புரட்சி’, ‘பாட்டாளிப் புரட்சி’, ‘கம்யூனிசப் புரட்சி’  எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்ட புரட்சியும் மக்களுக்கு ஒரு முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை.  கட்சிப் பெருந்தலைகள் மட்டும் அதிகாரத்தையும், வசதிகளையும் அனுபவித்தனர்.  பெருவாரி மக்கள் ஏழ்மையில் வாடினர்.  இப்போது ஜனநாயகப் ‘புரட்சியும்’ ஏதும் செய்யவில்லை என்கிறார்.  ஆனால் ஒரு நூறாண்டு காலம் மக்களைச் சுரண்டிய ஒரு அரசியல் கருத்தியலை, ஒரு பத்தாண்டு கால இயக்கத்தோடு ஒப்பிட்டுப் பேசுவது சரியா என்று தெரியவில்லை. புதிய இயக்கம் இன்னமும் பெரும் மாற்றங்களைக் கொணரத் திணறிக் கொண்டிருந்தது.

எப்படியிருந்தாலும் ஆனா வாலண்டினோவிச் சொல்வதிலும் ஒரு நியாயம் உண்டு.  அரசியல் அமைப்பில் மேல் தட்டுக்காரர்கள் எல்லா புரட்சிகளிலும் உண்டு கொழுக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் கூடக் கிட்டுவதில்லை. இதற்குப் படிப்படியாக, தொடர்ந்த மாற்றங்கள் மூலம் முன்னேறுவதே போதும் என்று அவர் சுட்டுகிறார்.

ஆனால் புரட்சி என்று முழங்கினால்தானே எல்லாரையும் ஏமாற்ற முடிகிறது? சர்க்கரைத் தண்ணீரைப் புட்டியில் அடைத்து பெரும் லாபம் ஈட்டும் உருப்படா நிறுவனங்கள் கூடத் தாம் புரட்சி செய்ததாகத்தானெ விளம்பரம் செய்ய வேண்டி இருக்கிறது.  மக்களுக்குத்தான் இன்னும் புரட்சி என்ற சொல்லில் மோகம் போகவில்லை. அந்த மோகம் போகும்வரை எத்தர்கள் அந்தச் சொல்லைச் சொல்லியே மக்களை ஏமாற்றுவார்கள்.  மக்கள் தொடர்ந்து ஏழ்மையிலேயே உழல்வார்கள்.  இந்த விஷச்சுழலை உடைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை.

________________________________________________________________

[1] இந்தப் படுகொலை குறித்து ஏராளமான ஆவணங்களும் புத்தகங்களும் செய்தி அறிக்கைகளும் கிட்டுகின்றன.  ஒரு வலைப்பக்கம் மாதிரிக்கு இதோ: http://www.hoover.org/publications/digest/3486292.html

ரிச்சர்ட் ஓவெரி என்பவரின் ‘ரஷ்யாவின் போர்’ என்கிற நூலில் (ப்.52-53) நான்  முதலில் இதைப்பற்றி படித்தேன். இதே பக்கங்களில் ஸ்டாலினின் அரசு ஹிட்லரின் நாஜிப் போர் முயற்சிக்கு எத்தனை தளவாடங்கள், எரிபொருள், இன்னும் என்னென்னவோ வளங்களை வாரி வழங்கி ஹிட்லரின் போரை ஊக்குவித்தது என்பது பதிவாகி இருக்கிறது.  17 மாதங்களில் ஜெர்மனிக்கு 865,000 டன் எண்ணெய், 648,000 டன்கள் மரக்கட்டைகள், 14,000 டன்கள் மாங்கனீஸ் தாது, 14,000 டன்களுக்கும் மேலாக செப்பு, 1.5 மிலியன் டன்களுக்கும் மேலாக தானியங்கள் ஆகியவற்றை ரஷ்யா விற்றது.  ரஷ்யத் துறைமுகமான முர்மான்ஸ்க் என்னுமிடத்தில் நாஜி ஜெர்மனியின் கப்பல்களுக்கு வந்து போக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  ரஷ்ய பனிக்கட்டி உடைக்கும் கப்பல்கள் ஆர்க்டிக் கடலில் பனிக்கட்டிகளை உடைத்துப் பாதை ஏற்படுத்தி ஜெர்மனியின் கப்பல்களுக்கு உதவின.  பிரிட்டனில் ஜெர்மனி பெரும் போரை நடத்தியபோது ரஷ்ய வானிலை நிறுவனங்கள் வானிலை குறித்த தகவல்களை ஜெர்மனிக்கு வழங்கின. முற்பகலில் விதைத்த வினை பிற்பகலில் ஹிட்லரின் படையெடுப்பாய் மாறித் தம் நாடே ஒழிந்து போகும் நிலை வந்தபின் வேறு வழியின்றி நாஜிகளை எதிர்த்தார் ஸ்டாலின்.   ஏமாளி நாடான போலந்தைத் தின்ன ஹிடல்ரோடு கோஷ்டி சேர்ந்தபோது அது ராஜதந்திரம் என்று கொண்டாடியவர்கள், பின்னால் தம் வாழ்வுக்கே உலை வைத்த நாஜியிசத்தை ஒழிக்கக் கொடுத்த பலி எத்தனையோ மிலியன் அப்பாவி ரஷ்யர்கள்.  பகடை ஆடிய ‘தலைவர்களில்’ பெரும்பாலோர் சௌகரியமாக மாஸ்கோவிலும் இதர நகரங்களிலும் வாழ்ந்து கொண்டிருந்தனர், அடுத்து யாரைத் தூக்கிலிடலாம் என்று கருவிக் கொண்டிருந்தனர். இத்தகைய கோழைச் செயல்களையும், கொடூரங்களையும் செய்த ஸ்டாலினிய அரசு ஃபாசிஸத்தையும் நாஜியிசத்தையும் எதிர்த்தது என்று இந்தியக் கம்யூனிஸ்டுகள் இன்னமும் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அதுமட்டுமல்ல, இந்தியாவில் இவர்களே பாசிஸத்தை எதிர்க்கும் ஒரே காவலர்களாம்.  இவர்களின் தொடர்ந்த பொய்களை நம்பி வாக்களிக்க ஒரு பெரும் கூட்டமே இந்தியாவில் உள்ளது. வரலாற்றை ஒதுக்கும் போக்கு இந்தியர்களை அழிவுக்கே இட்டுப் போகிறது.

[2] வாஷிங்டன் போஸ்ட், கட்டுரை, 14 ஏப்ரல் 2010

[3] ‘Scent of Shale Gas Hangs Over Katyn’ by Yulia Latynina in Moscow Times, 14th April 2010

இது தவிர இந்தக் கட்டுரையை எழுதப் பயன்பட்ட புத்தகங்கள்.
‘The Road to Terror: Stalin and the Self Destructiveness of the Bolsheviks, 1932-1939’, by J. Arch Getty and Oleg V. Naumov
Russia’s War- by Richard Overy
The Whisperers- by Orlando Figes
சில வலைத் தளங்கள் இந்த விபத்தைப் பற்றி அறிய உதவின.
http://www.cbc.ca/world/story/2010/04/07/f-katyn-massacre-interview.html
http://www.euractiv.com/en/foreign-affairs/analyst-no-more-room-polish-russian-confrontation-interview-441722
http://www.nytimes.com/2010/04/13/world/europe/13anna.html?hpw