கன்னி வெடி

தமிழகத்தின் கொதிக்கும் வெய்யிலைத் தலையில் வழிய வழிய ஏந்தியபடி அலைந்து திரிந்து விட்டு, குளிர்சாதன ரயில் பெட்டியில் அமர்ந்தபோது ஆசுவாசமாக இருந்தது. ரயில் பெட்டியினுள் நுழையும்போதே “ராஜீவ் காந்தி மட்டும் ஒரு இத்தாலிக்காரிய கல்யாணம் கட்டிக்கலாம், சானியா பாகிஸ்தான்காரன கட்டிக்க கூடாதா?” என்று ஒருவர் தீவிரமாக அரசியல் பேசிக்கொண்டிருந்தார். லேசாக தலைவலிப்பதைப் போல ஒரு உணர்வு. அமர்ந்த சில நிமிடங்களில் ரயில் சீறிப் பாய்ந்தது. எதிரே அமர்ந்திருந்த வயதான தம்பதிகளின் கேள்விகளில் எங்களைக் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் தெரிந்தது. கேள்விகள் சேலத்துடன் ஓய்ந்தன. எங்களைப் பிரியும்போது அவர்கள் முகத்தில் சோகம் தெரிந்தது. ‘ரயில் கொஞ்சம் பொறுத்திருந்தா நம்ம ஜாதகத்த கேட்டிருப்பாங்க. அது முடியாம போச்சுல. அந்த சோகம்தான்’ என்று என் மனைவி சொன்னதில் உண்மை இருந்ததாகத் தோன்றியது. சக பயணிகள் அனைவரும் உண்டு உறங்கிப் போனதால் பெட்டியில் அமைதி நிறைந்தது. அ.முத்துலிங்கத்தின் சிறுகதை தொகுப்பை படிக்கத் துவங்கினேன். ‘சீக்கிரம் படு. ரொம்ப நேரம் முழிச்சிருக்காத. நான் தூங்கப் போறேன்’. voice-over-ல் கேட்ட குரல் என் மனைவியுடையது. என் பெர்த்தின் படிப்பதற்குப் போதுமான சிறிய விளக்கை மட்டும் ஒளிரவிட்டேன். அமைதியான அந்தப் பெட்டியில், நான் இருந்த கூப்பேயின் சைடு பெர்த்தில் இருந்த இளம் ஜோடி மட்டும் மெல்லிய குரலில் பேசிச் சிரித்த வண்ணம் இருந்தது. நாகரிகத்தின் உறுத்தலால் என் கவனம் அனைத்தையும் புத்தகத்தில் குவிக்க முயன்றேன். பெரும்பாலும் வெற்றிதான்.

ஒரு சமயத்தில் அனிச்சையாக கவனம் சைடு பெர்த்திற்குத் தாவியது. விசும்பல் சப்தம். அது பெண்ணின் குரல்தான். அவள் அழுகிறாள். இருவரும் மிக வேகமாக வார்த்தைகளை உதிர்க்கிறார்கள். பாஷை புரியவில்லை. அவள் கைகளை நீட்டி நீட்டி பேசியபடி இருந்தாள். அவன் அவள் கைகளை தள்ளியபடி. அவள் விசும்பல் அதிகரித்தது. அவன் கடைசிமுறையாக அவள் கைகளை வேகமாக தள்ளிவிட்டு மேல் பெர்த்தில் ஏறிப் படுத்தான். அவள் சிறிது நேரம் அழுதபடி இருந்தாள். பிறகு விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள்.

—o0OOO0o—

சேலத்தில் இறங்கும் முன் அந்த முதிய தம்பதி என்னை சில நிமிட திகிலில் நிமிடத்தில் ஆழ்த்தி விட்ட பிறகே இறங்கி சென்றனர். ரயில் சேலத்தை விட்டு கிளம்பிய சில நிமிடங்களில் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் கீழே ஒரு சிறிய பெட்டி இருப்பதை கண்டேன். நிச்சயமாக அது எங்களுடையதல்ல. சைட் பெர்த்தில் இருக்கும் ஜோடிகளிடம் விசாரித்து அவர்களுடையுதும் அல்ல என்று அறிந்துகொண்டேன். பின்பு வேறு யாருடையதாக இருக்க முடியும்? பதற்ற சூழலுக்கு உரித்தான ஜூர வேகத்தில் இயங்கிய என் மனம் தன்னுடைய அனைத்து திறனையும் உபயோகித்து பல சாத்தியங்களை அடுக்கியபடி இருந்தது. மனதில் பல கேள்விகள். ’வெடிகுண்டாக இருக்குமோ?’ இதற்கு மேல் மனம் துளியும் நகரவில்லை. அங்கேயே நின்று கொண்டது. எங்கிருந்தோ கிளம்பிய கட்டளை ஒன்று, ‘எதற்கும் மற்ற சக பயணிகளிடம் கேட்டுப்பார்’. அடுத்த கூப்பேவிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது ஒருவர் மட்டும் அசட்டுச் சிரிப்புடன் பாய்ந்துவந்து அது தன்னுடையது தான் என்று சொல்லிவிட்டு அந்த பெட்டியை ஒருமுறை தடவிப் பார்த்துவிட்டுச் சென்றார். மனம் ஆசுவாசமடைந்தது.

என் மனம் பதறியதற்கு ஒரு காரணம் இருந்தது. ரயில்நிலையங்களும், ரயில்களும் கடந்த பத்து வருடங்களில்  தொடர்ந்து தீவிரவாதிகளின் இலக்காகி வருகின்றன. ஸ்பெயின் ரியல் மாட்ரிட் சம்பவம், மும்பையில் சமீபத்திய தாக்குதல்கள், இங்கிலாந்தில் சப்வே தாக்குதல்கள்  என உலகெங்கிலும் தீவிரவாதிகளின் முக்கிய அறுவடை நிலையங்களாக ரயிலும், ரயில் சார்ந்த இடங்களும் மாறி வருகின்றன. வெகு சமீபத்தில், கடந்த மார்ச் 29-ஆம் தேதி மாஸ்கோவின் சுரங்க ரயில் நிலையத்தில் இரண்டு மனித வெடிகுண்டுகள் தங்களை தாங்களே இயக்கி வெடித்து சிதறின. சடலங்களின் கணக்கு 38. வெடித்து சிதறியவர்கள் இருவரும் பெண்கள். இருவரும் “கறுப்பு விதவைகளாம்”. யாரிந்த “கறுப்பு விதவைகள்”?

ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில் தொடங்கிய இன்று வரை தொடரும் செசனியா மீதான ரஷ்யாவின் அடக்குமுறை பல வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஸ்டாலினால் செபீரியாவிற்கு அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான செசனியர்கள், பல வருடங்கள் கழித்தே தங்கள் மண்ணிடம் திரும்ப முடிந்தது. தங்கள் மண்ணை ரஷ்யாவின் பிடியிலிருந்து விடுவிக்க நினைத்த இந்த செசனியர்கள் அதற்கான போராட்டத்தை துவங்கினர். போராட்டம் ஒரு கட்டத்தில் தீவிரவாதமாக மாறியது. இந்த குழுவின் ஒரு பிரிவு தான் “கறுப்பு விதவை”கள் என்றழைக்கப்படும், ரஷ்யாவின் அடக்குமுறையால் பலியான பல்வேறு ஆண்களின் மனைவிகளின் குழு.

பத்து வருடங்களுக்கு முன், ஜூன் 7, 2000-த்தன்று Khava Barayeva மற்றும் Luiza Magomadova எனும் இரண்டு செசனிய பெண்கள் ஆயுதங்கள் நிரம்பிய ஒரு லாரியை ரஷ்ய ராணுவத்தினர் தங்கியிருந்த ஒரு கட்டிடத்தில் மோதி வெடிக்க செய்தனர். இந்த தாக்குதல் ரஷ்ய ராணுவம் பெரும் உயிர் இழப்பை சந்தித்தது. ரஷ்ய ராணுவத்தின் மிதான செசெனிய தீவிரவாதிகளின் முதல் மனித வெடிகுண்டு தாக்குதல் இது தான். மனித வெடிகுண்டுகளாக பெண்களை ஈடுபடுத்துவதில் உள்ள பல செளகரியங்களை உணர்த்திய இந்த நிகழ்வு, செசெனிய தீவிரவாத குழுவில் “கறுப்பு விதவைகள்” குழுவிற்கான விதையை விதைத்தது.

இதைத் தொடர்ந்து, ”கறுப்பு விதவைகள்” அவ்வப்போது பெரும் அழிவை நிகழ்த்தி வந்திருக்கின்றனர். 2002-ல் ஒரு நாடக அரங்கத்தை பல மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சம்பவம் இவர்கள் மீது உலகத்தின் கவனத்தை திருப்பியது. இதைத் தொடர்ந்து 2003-ஆம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சியின் போது இவர்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

இத்தகைய மனித வெடிகுண்டு தாக்குதலில் பெண்களை உபயோகிப்பது நல்ல பலன்களை(?!) அளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஆண் மனித வெடிகுண்டு சராசரியாக 13 மனித உயிர்களை மட்டுமே கொல்கிறான். ஆனால் ஒரு பெண் மனித வெடிகுண்டு சராசரியாக 21 மனித உயிர்களை கொல்கிறாள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. மேலும், ஒரு பெண் உடனடியாக எந்தவித சந்தேக வட்டத்துக்குள்ளும் விழுந்துவிடுவதில்லை. அவள் தனது நோக்கத்தை யாருக்கும் எந்தவித சந்தேகத்தை அளிக்காதபடி தனக்கு கொடுக்கப்பட்ட பணியை முடித்துவிடுகிறாள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விஷயம், இந்தப் பெண் வெடிகுண்டுகள் தங்கள் இறப்பின் மூலம் மற்ற ஆண் மற்றும் பெண்களையும் மனிதவெடிகுண்டுகளாக மாற உந்துகின்றனர்.

தனது மரணத்திற்கு முன் Barayeva மற்ற எல்லா மனித வெடிகுண்டுகளை போலவே, தன்னுடைய செய்தி ஒன்றை விட்டுச் சென்றார். அதில், “வீட்டில் முடங்கி கிடப்பது என்பது பெண்களின் பணி. அதை ஆண்கள் கைக்கொள்ளக்கூடாது. துணிந்து களத்தில் இறங்கி” போராட அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பிற்கு இதுவரை 32 ஆண்கள் செவிசாய்த்துள்ளனர். Barayeva-வின் இந்த அழைப்பு பெண்களையும் ஈர்த்திருக்கிறது. “கறுப்பு விதவை” குழு உருவானதில் அவரது இந்த ஒளிப்பேழை முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை 15 முதல் 37 வயது வரையிலான 23 பெண்கள் மனித வெடிகுண்டுகளாக வெடித்துச் சிதறியுள்ளனர்.

இதுவரை பல்வேறு தீவிரவாத குழுக்களும் பெண்களை தங்கள் பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். அல்-கொய்தா, அல்-அக்ஸா, ஹமாஸ், ஐயர்லாந்து நாட்டின் ஐ.ஆர்.ஏ(IRA), விடுதலைப்புலிகள் போன்ற பல குழுக்கள். ஆண் மனித வெடிகுண்டுகளின் உளவியல் அமைப்பை மிக எளிதாக நம்மால் புரிந்து கொள்ளமுடியும். டெஸ்டஸ்டோரோனின் ஊட்டச் செயல்பாடு, கொள்கை, தன் ஆண்மை குறித்த அதீத பெருமை, 72 சுவன கன்னியர் இப்படிப் பல காரணங்கள். ஆனால் பெண்கள் விஷயத்தில்? இஸ்ரேலை சேர்ந்த பெண் ஆய்வாளரான முனைவர்.அனட் பெர்கோ (Anat Berko), “உடல், மனம் மற்றும் பாலியல் சார்ந்த வன்கொடுமைகளே பெண்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட வைக்கின்றன” என்கிறார். இந்த வகை சுரண்டல்கள், வன்கொடுமைகள் அவர்கள் சார்ந்த குடும்பம் அல்லது தீவிரவாத குழுவில் நடைபெறுவதாக சுட்டுகிறார். இவர்களின் இந்த முடிவிற்கு பின்புலமாக எந்தவித கோட்பாட்டுப் பற்றுதலோ அல்லது சுயதேர்வோ காரணமல்ல என்கிறார். இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் வெடிக்காத பெண் மனித வெடிகுண்டுகளுடன் தான் நடத்திய பலமணி நேர உரையாடல்களே தன்னை இந்த முடிவிற்கு இட்டு சென்றதாக கூறுகிறார்.

பாலஸ்தீனின் முதல் பெண் மனிதவெடிகுண்டான வாஃபா இத்ரிஸ் (Wafa Idris), ஜனவரி 2002 அன்று ஒரு 81 வயது முதியவரைக் கொன்று, மேலும் 100 பேரை பாதிக்கக் காரணமானார். தன் கணவனுக்கு ஒரு வாரிசைத் தரமுடியாத காரணத்தால் வாஃபா தனது கணவனால் கைவிடபட்டவர். தன்னை துறந்து வேறொரு பெண்ணுடன் தனது வாழ்க்கையை தொடர்ந்த தன் கணவன் அவள் மூலம் இரண்டு வாரிசுகளுக்கு தந்தையானார். இது வாஃபாவை சகிக்க முடியாத கசப்பான அனுபவமாக அமைந்தது. தான் அடைந்த இந்த துயரத்திலிருந்து மீளவும், தன்னுள் ஒரு புதிய ஆளுமையை கட்டமைத்து, அதன் மூலம் பிறரிடம் தன்னுடைய பாதிப்பை செலுத்தும் வேட்கையே அவரை வெடிகுண்டாக மாற்றியதாக அனட் பெர்கோ கூறுகிறார்.

ஆனால் தன்னுடைய முயற்சியில் தோற்று, எதிராளிகளிடம் சிக்கிக் கொள்ளும் போது, தங்கள் செயலை நியாயப்படுத்தக் கொள்ள சித்தாந்த சார்புகள் தேவைப்படுகின்றன. நியாயப்படுத்த மட்டுமே சித்தாந்த சார்புகள் தேவையாகின்றன. மேலும், அவர்கள் இப்போது ஒரு கூட்டத்துடன் அடைக்கப்படுகின்றனர். இந்த கூட்டத்தில் தன்னை குறித்த ஒரு புது ஆளுமையை கட்டமைக்க முயல்கின்றனர். தனக்கென ஒரு வீரனுக்கான பிம்பத்தை இவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் உண்மை காரணங்கள் வேறு. உதாரணமாக, கணவனால் நிராகரிக்கப்படும் பாலஸ்தீன பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அந்தவித பாதுகாப்புமில்லாமல் இருக்கும் இவர்களை தீவிரவாத குழுக்கள் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பிற்கு பதிலுதவியாக அந்த குழுக்களின் தீவிரவாத நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாக அனட் பெர்கோ குறிப்பிடுகிறார்.

பாலஸ்தீனிய பெண்கள் மட்டுமல்லாமல் “கறுப்பு விதவைகள்” குழுவையும் இந்த கோணத்தில் நம்மால் பார்க்க முடியும். ரஷ்ய ராணுவத்தால் தங்கள் குடும்ப ஆண்களை இழந்து தவிக்கும் பெண்கள் சமூகத்தின் தொடர் துன்புறத்தல்களுக்கு ஆளாகின்றனர். தங்கள் வாழ்வில் எந்த வித பாதுகாப்பும் இல்லாத இவர்கள், தங்கள் வாழ்விற்கு புது அர்த்தம் அளித்துக்கொள்ள இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருத இடமுண்டு. வெவ்வேறு நிலவெளிகளில் வாழும் இந்தப் பெண்களிடையே சில ஒற்றுமைகள் உண்டு. இவர்கள் வயிற்றில் கட்டப்படும் வெடிகுண்டுகள் இவர்களின் சுயதேர்வல்ல. வெடிகுண்டுகளைச் செயல்படுத்தும் விரல்களும் நிஜத்தில் இவர்களுடையதல்ல. அனைத்தும் எங்கோ நிழலில் வாழும் மனிதர்களால் நடத்தப்படுகிறது.

தீவிரவாத நடவடிக்கைகளில் முக்கிய அங்கம் வகிக்கும் பெண்கள், தங்கள் குழுக்களில் அவர்களுக்கு கிடைக்கும் இடம் என்ன? ஒன்றுமில்லை என்பது தான் கசப்பான உண்மை. சில விதிவிலக்குகளைத் தவிர்த்து[1], உலகின் எந்த தீவிரவாத அமைப்பிலும் பெண்கள் தலைமைப் பொறுப்பை வகிப்பதில்லை. தங்கள் ஐம்பது வருட வரலாற்றில் பெண் மனித வெடிகுண்டுகளின் நிலை இது தான். தங்கள் குழுவின் இரண்டாம் தர குடிமக்களாகவே இவர்கள் நடத்தப்படுகிறார்கள். பல நேரங்களில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை செய்துமுடிக்க போதிய பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாமல்தான் இவர்கள் களத்திற்கு அனுப்பப் படுகிறார்கள். 1950-களில் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்த அல்ஜீரிய தீவிரவாத குழுக்களில் பயன்படுத்தப்பட்ட புர்கா அணிந்த பெண்கள் முதல் தற்கால விடுதலைப்புலிகள் வரை இதுதான் நிதர்சனம்.

—o0OOO0o—

கலாசார, இடவெளிகளைத் தாண்டி வாழும் பல்வேறு மனிதக் குழுக்கள் இடையே காணப்படும் ஊசலாட்டங்கள், புன்னகை மற்றும் கண்ணீருக்கான காரணங்கள் யாவும் பெரும்பாலும் ஒரே புள்ளியில் வந்து நின்று விடுவது ஆச்சரியமான விஷயம். அந்தத் துன்பப் புள்ளிகளுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க முயலும் மனித குலத்தின் முயற்சிகளும், தோல்விகளுமே வரலாற்றின் அடியோட்டங்கள்.

உலக இலக்கியங்கள் இந்த அடியோட்டங்களை திரும்பத் திரும்ப பதிவு செய்தும் இன்னும் ஓயாமல் நிகழ்ந்தபடி உள்ளது. இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை தருவதில் சிறுகதைகளை மிஞ்ச வேறு எந்த வடிவமுமில்லை. வாழ்வை ஒட்டுமொத்தமாக அள்ள முயலும் நாவல்கள் மற்றும் இதிகாசங்களை விட குறைந்த வார்த்தைகளில் வாழ்க்கை குறித்து சித்திரத்தை பதிவு செய்யும் சிறுகதைகள் தன்னுடைய வாசகனுக்கு அவன் சூழல் சார்ந்த மன எழுச்சி மற்றும் சஞ்சலங்களை ஏற்படுத்துகின்றன. சிறுகதைகளின் இந்தப் பணி, இதில் உள்ளடங்கியிருக்கும் சவால், என்னை சிறுகதை வடிவத்திற்கு மிக நெருக்கமானவனாக ஆக்கியிருக்கிறது.

அந்த ஜோடியின் சண்டையால் தடைபட்டுப்போன அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளுடனான என் அனுபவம் அந்த சண்டை ஓய்ந்த பின் மீண்டும் தொடர்ந்தது. காலத்தோடு நடந்த மாற்றங்களோடு, தனது சமூகத்தின் அனைத்து உள்ளோட்டங்கள், போலித்தனங்கள், உன்னதங்கள் குறித்தத் தமிழ் இலக்கிய சிறுகதைகளின் பதிவுகள் மிகச் சிறப்பானவை. உலகமயமாக்கம் உடைத்தெறிந்த நாடுகளின் எல்லைகளால் பிற தேச மக்கள், பிற தேச சமூகங்கள் குறித்த அறிதல்கள் சாத்தியமாயின. தம் மொழி, இனம் சார்ந்த சமூக நடவடிக்கைகளை மட்டுமல்லாது பல்வேறு உலக சமூகங்களின் வெவ்வேறு தன்மைகளை உள்வாங்கி, வெளிப்படையாக காணக்கிடைக்கும் கலாசார மோதல்கள் குறித்து தம்முடைய மொழியில் பதிவு செய்யும் கட்டாயம் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது. இந்த காலகட்டத்திலும் தமிழ் சிறுகதைகள் தம்மைப் புதுமைப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அ.முத்துலிங்கத்தின் கதைகள் இக்காலகட்டத்தின் முக்கிய நிகழ்வு. தான் பயணித்த தேசங்களின் இயல்புகளை, கலாசார மாறுதல்களை தனது தனித்துவமான மொழியில் வாசகன் முன்விரிக்கும் அவரது கதைகள் தமிழ்ச் சூழலுக்குப் புதிது. இடவெளியைத் தாண்டிப் பயணிக்கும் போதும் இவரது கதைகள் தரமான இலக்கிய படைப்புகளின் அடிப்படைத் தன்மையான மனித உறவுகள் குறித்து பேசுகிறது. கதைச்சூழல் வாசகனுக்கு முற்றிலும் அந்நியப்பட்டு இருந்தாலும், மனித குலம் முழுமைக்குமான பொதுவான உணர்வுகளை, ஊசலாட்டங்களைக் குறித்துப் பேசும் படைப்புகள்.

அடுத்த நாள் காலை தூங்கி எழுந்தபோது அந்த ஜோடி சிரித்துப் பேசியபடி இருந்தனர். ரயிலை விட்டு இறங்கி நடந்து செல்கையில் கைகோர்த்தபடி நடந்து சென்றனர். என் மனைவியிடம் நடந்ததைச் சொன்னேன்.

‘கதை ரொம்ப சுவாரசியமா இருந்திருக்கும் போல!’

’நீ படிச்ச சேத்தன் பகத் நாவலை விட சுவாரசியம்’

குறிப்பு

1. Popular Front for the Liberation of Palastine எனும் தீவிரவாத குழுவின் லைலா காலீத் எனும் பாலஸ்தீன பெண் தீவிரவாதி 1969-ல் ஒரு விமானத்தை கடத்தி பலத்த கவனிப்பிற்கு உள்ளானார். தனது குழுவின் பல ஆண்களையும் மீறி தனக்கான ஒரு இடத்தை இவர் உருவாக்கிக்கொண்டார். 1970-களில் சிவப்பு படையின் இரு பெண்கள், Ulrike Meinhof மற்றும் Gudrun Esslin, தங்கள் கொள்ளை, வெடிகுண்டு தாக்குதல்கள், ஆள் கடத்தல்கள் மற்றும் கொலைகள் மூலம் ஜெர்மனியில் மிக பிரபலமாக விளங்கினர். இதே காலகட்டத்தில், பெண்களால் நடத்தப்பட்ட Red Zora அமைப்பு(ஜெர்மனி) பல்வேறு பாலியல் தொழில்கூடங்கள் மற்றும் மருத்துவர்களின் அலுவலகங்களை அழித்து நாட்டின் செய்திதாள்களில் தலைப்பு செய்தி ஆயினர்.