அகிரா குரோசவா – நூற்றாண்டுக் கலைஞன்

சென்ற மாதம் 23-ஆம் தேதி (மார்ச் 23) அகிரா குரோசவாவின் நூறாவது பிறந்தநாள்.  அதை முன்னிட்டு அகிரா குரோசாவைப் பற்றி எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை இது.

akira-kurosawa

தமிழ் சூழலில் 70களின் பிற்பகுதியிலிருந்து வெகுஜனப்படுத்தப்பட்ட ஒரு பெயர், இப்போது சினிமா பார்க்கும் அனேக மக்களுக்கும் தெரியும் பெயர் – அகிரா குரோசவா! ஒரு ஜப்பானியருடையது. இன்றைய தேதியில் யாரும் அகிராவை நிராகரித்து விட்டு உலக திரைப்படத்தைப் பற்றி பேசிவிட முடியாது. திரைப்பட உலகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் பலருக்கும் ஆதர்சமான இயக்குனர். இவரது படைப்புகளால் நான் உந்தப்பட்டேன் என்று இயக்குனர்கள் பலராலும் வெளிப்படையாக பாராட்டப்பட்டவர் – அப்படி பாராட்டியவர்கள் சாதாரண இயக்குனர்கள் அல்லர். திரைப்பட இயக்கத்தின் பீடத்தில் வைத்து உலகம் போற்றும் இயக்குனர்கள். இப்படி எல்லைகள் தாண்டி பிரபலப்படுத்தப்பட்ட இந்த ஆளுமையின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் இந்த வருடம். அவர் தன் சமகால இயக்குனர்களால் மட்டுமல்ல, அவருக்குப் பிந்தைய, மிகப்பிந்தைய தலைமுறைகளாலும் கொண்டாடப்படும் இயக்குனராக இன்றும் விளங்குகிறார்.

இத்தனைக்கும் அவர் இயக்கியது மொத்தமே 30 படங்கள் தான்.

அவரது ஆரம்ப கால படங்கள் எவையும் மிகப்பெரிய வெற்றி இல்லை. அவர் உலகத்தின் பார்வைக்கு வந்தது ராஷொமோன்-க்கு பிறகே. ராஷொமோன் ஒரு தனித்துவமான திரைப்படம். இதை ஒரு திரைப்பட வடிவத்தின் உச்சம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் திரைப்படத்தில் தர்க்க ரீதியான ஒரு தத்துவ ஆராய்ச்சியை முன் வைத்த படங்களின் முன்னோடி. இப்படிப் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கில் முன்னெடுத்துச் சென்றவர் அகிராவின் காலத்துக்கு சற்றே பின்னர் வந்த இங்மர் பெரிமான் (இவரின் The seventh seal காண வாய்ப்பு கிடைத்தால் தவற விட வேண்டாம்). பெரிமானுக்கு அகிராவின் ராஷொமோன் ஆதர்சமான திரைப்படம். தத்துவார்த்த சிந்தனையின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கும் உந்துதலை பெரிமான் அகிராவிடமிருந்து பெற்றார் என்று சொன்னால் அது முற்றிலும் தவறாகயிருக்காது. ராஷொமோனில், அகிரா உண்மையின் தன்மையையும், மனித மனதின் தன்வயப்பட்ட போக்கையும் பற்றி அலசுகிறார். மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள் தான் – ஒரே ஒரு சம்பவம். ஆனால் அந்த சம்பவத்தை அதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறார்கள் அதை சுற்றிய உண்மையை எப்படி தனக்கு சாதகமான கோணத்தில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை பற்றிய அற்புதமான விவரணை தான் ராஷொமோன்.

பெரும்பாலும் ராஷொமோனும், செவன் சாமுராயும், யோஜிம்போ-உம், ரான்-உம் அவரது படைப்புகளில் பலராலும் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டாலும், என்னளவில் இவரது படைப்புகளில் முக்கியமானவை என நான் கருதுவது இகுரு-வும் இவரது கடைசி படமான ”மாடாடாயோ”-வும். இகுரு (The death of Ivan Ilych என்ற டால்ஸ்டாயின் நாவலை அடிப்படையாக வைத்து எடுத்த படம்) மற்றும் மாடாடாயோ-வில் (Hyakken Uchida என்ற ஜப்பானிய இலக்கியவாதி மற்றும் பேராசிரியரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம்) அவர் அணுகியிருப்பது இறப்பை அடுத்த நிலையாக கொண்ட முதுமையை. மரணம் நிச்சயம் என்ற உண்மை புலப்பட்ட பின்னும் மீதமிருக்கும் வாழ்க்கையை கொண்டாடும் அந்த ஆளுமைகளின் மனம் என்னுள் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தின.

இகுரு, இறப்பை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு முதியவரின் அக எழுச்சி குறித்த திரைப்படம். பல ஆண்டுகளாக இலக்கின்றி தான் பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் வாழும் வாட்டனபே என்னும் ஒரு மனிதன் தன் கடைசி நாட்கள் தீர்மாணிக்கப்பட்ட சமயத்தில் தன் சுயத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். வாட்டனபே, ஒரு சராசரி மனிதனின் அத்தனை பலவீனங்களுடன் படைக்கப்பட்ட கதாபாத்திரம் – எந்த விதமான நாயக தன்மைகளும் அற்றது. மிகவும் ஏழையாக இருக்கும் ஒருவனிடம் எஞ்சியிருக்கும் ஒரே சொத்தான அவன் தன்மானத்தைக் காணும் போது நமக்கு ஏற்படும் பெருமிதம் இந்த படத்தின் நாயகனைக் காணும் போது ஏற்படும். அந்த ஏழையை காணும் போது கிடைக்கும் பெருமிதம் நம்மை, நம்மில் இருக்கும் ஒரு உணர்வை பிற மனிதனிடம் கண்டடைவதால் கிடைப்பது. அதே பெருமிதம் வாட்டன்பேயிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு பார்வையாளன் முயலும் போது கிடைக்கும். இகுருவைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வை தவறாமல் அகிரா ஏற்படுத்தி இருப்பார்.

akirakurosawaமாடாடாயோ-இல் வரும் அந்த பேராசிரியர் கதாபாத்திரம் உலக திரைப்படங்கள் கண்ட ஆளுமைகளில் மிகவும் சிறப்பானது – அந்த ஆளுமையாகவே கொஞ்ச காலம் வாழ்ந்து பார்க்கத்தூண்டும் ஆளுமை. ரொபெர்ட்டோ பெனீனியின் Life is Beautiful-இல் வரும் கிடோ கதாபாத்திரத்தின் சாயல் மிகவும் கொஞ்சமே எட்டிப்பார்க்கும் ஒரு Out of the Box ஆளுமை அது. ஆனால் கிடோவிற்கும் பேராசிரியருக்கும் தன்மைகளில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அடிப்படையில் அவை இரண்டுமே வாழ்க்கையின் வீரியத்திற்கு இடம் கொடுத்தபடியே அதில் தனக்கான ஒரு இடத்தை நிறுவிக்கொள்ளும் ஆளுமைகள். இந்த அடிப்படை குணாதிசியத்தைத் தவிர இந்த இரண்டு கதாபாத்திரங்களும் பல விதங்களில் வேறு படுபவை. வாழ்க்கையை கொண்டாட அனேக தருணங்களை தாமே தோற்றுவிக்கும் வலிமை இவ்விரண்டு ஆளுமைகளுக்குமே உண்டு.

மேலே சொன்ன இரண்டு கதாபாத்திரங்களுமே அகிரா முழுமையாக உருவாக்கிய பாத்திரங்கள் இல்லை – ஆனால் அந்த கதாபாத்திரங்களுடன் வாழ்ந்த ஒரு உணர்வை திரைப்படம் முழுவதுமே தோற்றுவித்து விடுவார். 17வது மாடாடாயோ விருந்தில் பேராசிரியர் கதாபாத்திரம் அந்த பெரிய பியர் கிளாஸை தூக்கி ஒரே மூச்சில் குடிக்க முற்படும் போது எதுவும் நடந்து விடக்கூடாதே என்ற பதட்டம் அவரை சுற்றியிருக்கும் மருத்துவரைப் போலவே உங்களுக்கும் தொற்றிக் கொள்ளும். அது தான் இந்த திரைப்படத்திற்கு அகிரா செய்திருக்கும் நியாயம்.

அவரது முதன்மை கதாபாத்திரங்கள் (protagonists) அவ்வளவு சீக்கிரம் சிதைவு நிலையை அடைவதில்லை. தொடர்ந்து உயிர்ப்போடு இருக்கிறார்கள். அவர்களின் தோல்விகளில் கூட ஒரு மிடுக்கு இருக்கிறது. அகிரா அப்படி தான் மனிதர்களை அணுகுகிறார். அப்படி தான் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் – தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் பாத்திரங்கள் அவரது திரைப்படங்களில் காணக் கிடைப்பதில்லை. அவருடைய முதண்மை கதாபாத்திரங்கள் அனைவருமே பார்வையாளார்களை ஈர்க்கும் ஆளுமைகளாக இருக்கிறார்கள். ஒரு படைப்பாளியாக மனிதனின் இருப்பு குறித்த இந்த சிந்தனை தெளிவு, அவரது படைப்புகளுக்கு காவிய அந்தஸ்தை வழங்குகிறது.

சத்யஜித்ராயுடன் அகிரா குரோசாவா
சத்யஜித்ராயுடன் தாஜ்மஹலில் அகிரா குரோசவா

அகிராவின் திரைப்படங்களின் தீவிரத்தன்மை எப்போதுமே இருக்கிறது. எதுவுமே மேம்போக்காக இல்லை. அதனால் அவரது படங்களில் வன்முறைக்கு குறைவே இல்லை. அவரது சாமுராய் திரைப்படங்களில் ஏராளமான குதிரைவீரர்கள், ஆக்ரோஷமான போர்கள், இரக்கமும் கருணையுமற்ற போராளிகளின் குளிர்ந்த கண்கள், அதிவிரைவான வாள் வீச்சு என்று அணைத்து காட்சிகளுமே தீவிரமாகத்தான் இருக்கின்றன. Throne of the Blood திரைப்படத்தில் தொஷிரோ மிஃப்யூனே மீது சரமாரியாக அம்புகள் பாயும் காட்சி, Red beard-இல் அதே தொஷிரோ மிஃப்யூனே அடிக்கும் காட்சி (எனக்குத் தெரிந்து முறையான சண்டை பயிற்சி பெறாத ஒருவர் தன் கோபத்தை வன்முறையின் மூலம் வெளிக்காட்டினால் இப்படித் தான் இருக்கும் – இது போன்ற சண்டைக் காட்சிகளை தமிழில் நான் பாலாவின் திரைப்படத்தில் காண்கிறேன்) எல்லாமே ஆக்ரோஷத்துடன் அமைக்கப்பட்டவை. Ran மற்றும் Seven Samurai-இல இடம் பெறும் போர் காட்சிகள் ரத்த வெறி கொண்டவை. அதே போல சிதைந்த உடல்கள், சடலங்கள் இறைந்து கிடக்கும் மயான சூழ்நிலையை தோற்றுவிக்கும் காட்சிகளும் இவரது படங்களில் அடிக்கடி இடம் பெறுகின்றன. சடலங்களைப் போலவே அகிராவின் திரைப்படங்களில் அடிக்கடி காணக்கிடைப்பவை பல இயற்கை காட்சிகள் – உயரிய மலைகள், வெட்ட வெளி, நிலா, தெளிந்த நீரோடை – இப்படி பல காட்சிகள் ரம்யமானதாக காணக்கிடைக்கும். நிலா பார்க்கும் காட்சிகள் அவர் திரைப்படங்களில் அடிக்கடி வரும் ஒன்று – Rhapsody in August என்ற திரைப்படத்தில் ஒரு அழகான நிலா பார்க்கும் காட்சி உண்டு, Dreams, Madadayo போன்ற திரைப்படங்களிலும் நிலா காட்சிகள் ஒரு தொடர்ச்சியான கனவைப் போல வருகின்றன. இயற்கை அழகையும் குரூரமான போர் காட்சிகளையும் மரணத்தின் கோரத்தையும் ஒரே அளவான கலையம்சத்துடன் படமாக்கக்கூடியவர் அகிரா. ஒன்று மட்டும் நிச்சயம், அகிராவின் சாமுராய் படங்கள் எல்லாம் பார்த்த ஒருவருக்கு வேறு எந்த போர் காட்சியை பார்த்தாலும் அதிக பிரமிப்பு ஏற்படாது.

இதையும் தாண்டிய ஒரு முக்கிய அம்சம், இவரது திரைப்படங்கள் அனைத்திலும் காட்சி தொடர்பான நுண்ணறிவை பார்வையாளனுக்கு அகிரா தருகிறார் – ஒரு போர் தாக்குதல் குறித்த காட்சியை அமைக்கும் போது கூட அத்தாக்குதல் (பல சாமுராய் திரைப்படங்கள்) குறித்த தகவல்கள் பார்வையாளனுக்கு அகிரா தெரியப்படுத்துகிறார் (கதாபாத்திரங்களின் உரையாடல் வாயிலாக அல்லது சில சமயம் பிரத்தியேகமான் காட்சிகளின் வாயிலாகவும்). இந்த தகவல்கள் அனைத்தும் உங்களை திரைப்படத்திற்குள் முழுவதுமாக ஈர்க்கும் உத்தி – இந்த உத்தி அவரது கதை சொல்லும் பாணியை அடிப்படையாகக் கொண்டது. அவர் மிகவும் நேரிடையாக கதை சொல்பவர். அவர் திரைப்பட காட்சிகள் உங்களுக்குப் பெரும்பாலும் தெளிவாகவே புரியும். அவர் Nonlinear narrative வடிவத்தைப் பயன்படுத்தியது ராஷொமோன்-இல் மட்டுமே. மற்ற எல்லா திரைப்படங்களும் linear narrative தான். அவர் சில படங்களில் voice over-ஐக்கூட தகவல்கள் பரிமாற பயன்படுத்துகிறார். அந்த அளவிற்கு தன் பார்வையாளனை திரைப்படத்திற்குள் வைத்திருக்க அகிரா முயல்கிறார்.

அகிரா குரோசவாவின் திரைப்படங்களின் மிகவும் முக்கியமான சிறப்பம்சம் காட்சிகளின் அமைப்புகள். அவரது காட்சியமைப்புகளில் இரண்டு பிராதன அம்சங்கள் – ஒன்று நிலப்பரப்பு குறித்த காட்சியமைப்பு; இரண்டாவது ஒரு கதாபாத்திரம் போலவே வந்து போகும் காலம்.

அவரது காட்சிகளில் பெரும்பாலும் நிலம் திறந்து கிடக்கின்றது. பரந்து விரிந்த நிலம் அங்கு நிகழும் சம்பவங்களுக்கு ஒரு கித்தான் போல பயன்படுகிறது. அந்த கித்தான் மீது அகிரா தனது கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் அரங்கேற்றுகிறார். கட்டிடத்திற்குள் எடுக்கப்பட்ட காட்சிகளில் திரை அதிகமாக பொருட்களால் (properties) அடைக்கப்படுவதில்லை. இந்த அமைப்பே காட்சியில் முக்கியமான விஷயத்தின் மீது கவனத்தை பார்வையாளனக்கு குவித்து விடும். பல சமயங்களில் இவரது காட்சிகள் ஒரு ஓவியத்தின் தன்மையை அல்லது புகைப்படத்தின் தன்மையை நமக்குக் கொடுக்கின்றது. அகிரா அடிப்படையில் ஒரு ஓவியர். முறையாக ஓவியம் பயின்றவர். அவர் தன் திரைப்படங்களுக்கு காட்சிகளை எழுதும் போதே அந்த காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என்று ஓவியமாக தீட்டி வைத்துக் கொள்வார். அவரது storyboard முழுக்க முழுக்க ஓவியங்களால் ஆனவை. அந்த தெளிவு தான் அவ்வளவு ரம்மியமான காட்சிகளையும் காமிரா கோணங்களையும் தீர்மாணிக்க உதவியிருக்கின்றன. இவர் Ran திரைப்படத்திற்காக மட்டும் 10 ஆண்டுகள் உழைத்திருக்கிறாராம்.

அதே போல தான் காலத்தையும் பயன்படுத்துகிறார் அகிரா. சிதிலமடைந்த ஒரு விசாலமான கட்டிடத்தில் இரைச்சலாக பெய்து கொண்டிருக்கும் மழைக்கு செவியைக் கொடுத்தபடி தலையைக் கவிழ்த்து உட்கார்ந்திருக்கும் தகோஷி ஷிமோராவிலிருந்து துவங்கும் காட்சியே ராஷொமோன் படத்திற்கான மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. மழைக்காலங்கள் மிகவும் அற்புதமானவை – பாத்திரத்தின் வடிவத்தை ஏற்கும் தண்ணீரைப் போலவே மழைகாலங்கள் மனிதரின் மனநிலைக்கு ஏற்ப தம்மை வடிவமைத்துக் கொள்ளும். அதிகமாக சஞ்சலமாக மனம் ஆர்பரிக்கும் போது மழை மிகவும் வலுவாக பெய்வது போன்ற தோற்றங்கள் எனக்கு ஏற்படுவதுண்டு. யாருமற்ற ஒரு வீட்டில் தனிமையில் நீங்கள் அமர்ந்து ”ச்சோ” வென இறையும் மழையை நீங்கள் பார்க்கத்துவங்கிய சில கனங்களிலேயே தீவிரமாக சிந்தனை வயப்படத்துவங்கி விடுவீர்கள். இது போன்ற ஒரு சிந்தனை ஓட்டத்துடன் தான் ராஷொமோன் துவங்குகிறது. இப்படி மிகவும் நுணுக்கமான காட்சி அமைப்புகள் அகிராவின் எல்லா படங்களிலும் கிடைக்கின்றன. இவரது ஆரம்ப கால திரைப்படங்களில் க்ளோஸப் காட்சிகள் மிகவும் பிரதானமானவை. உணர்ச்சிகளை வார்த்தைகளாக அல்லாமல் உடல் மொழிகளாலே வெளிப்படுத்தும் குணம் மிக்கதாக அமைகின்றன. இதற்கு காரணம் அகிராவின் ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து கிடைக்கிறது – பேசா படங்களின் மூலம் திரைப்பட உலகத்திற்குள் நுழைகிறார்கள் அகிராவும் அவரது மூத்த சகோதரர் ஹைகோவும். பேசா திரைப்படங்கள் மூலம் திரைப்படங்கள் பற்றிய அறிவைப் பெற்ற அகிராவின் திரைப்படங்களில் உடல் மொழி பிரதானப்படுவது இயற்கை தானே.

அகிராவின் படங்கள் பெரும்பாலும் ஜப்பானை, அதன் பாரம்பரியம் சார்ந்த விஷயங்களை கருவாகக் கொண்டவை. சாமுராய் திரைப்படங்களின் தின்னிகரில்லாத பிரம்மா என்று அகிராவை சொன்னால் மிகையில்லை. சாமுராய்கள் பற்றிய ஒரு பிம்பத்தை ஜப்பானியர்கள் அல்லாத ஒரு சமுகத்திற்கு புரியும் படியாக சமகாலத்தில் தோற்றுவித்த பெருமை அகிராவிற்கே. அவர் பிறப்பால் ஒரு சாமுராய் என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும் அகிராவின் திரைப்படங்களில் ஜப்பானிய தன்மை அவர் காலத்திய ஜப்பானிய இயக்குனர்களின் திரைப்படங்களைக் காட்டிலும் சற்றே குறைவாகவே தென்பட்டது. இதற்கு காரணம் உண்டு.

மாக்ஸிம் கார்கி, ஷேக்ஸ்பியர், லியவ் டால்ஸ்தொய், தாஸ்தொயெவ்ஸ்கி என்று பல தரப்பட்ட மேலை நாட்டு இலக்கியவாதிகளால் பாதிக்கப்பட்டவர் அகிரா. இவர் மேல் நாட்டு இலக்கியங்களை ஜப்பானிய சூழ்நிலைக்கு பொருந்தும் வகையில் மாற்றி எடுத்த படங்களை பட்டியலே இட்டு விடலாம் –  யோஜிம்போ (Red Harvest என்ற அமெரிக்க நாவல்), Throne of Blood (ஷேக்ஸ்பியரின் Macbeth), இகுரு (லியவ் டால்ஸ்தொயின் The death of Ivan Ilyach), The lower Depths (மாக்ஸிம் கார்கியின் The lower depths),  Bad sleep well (ஷேக்ஸ்பியரின் Hamlet), Ran (ஷேக்ஸ்பியரின் King lear) மற்றும் The Idiot (தாஸ்தொயெவ்ஸ்கியின் The Idiot). இதன் காரணமாகவே இவரது திரைப்படங்களில் உரையாடலில் ஒரு இலக்கியத் தன்மை இருக்கும். நிறைய உவமைகளும், உருவகங்களும் உரையாடலில் வரும். மேல் நாட்டு இலக்கியங்களை அடிப்படையாக வைத்து அவற்றுக்கு முற்றிலுமாக ஜப்பானிய வடிவம் தந்து எடுத்த திரைப்படங்கள் மேலை நாட்டவர்களால் வரவேற்கப்பட்டன. இந்த திரைப்படங்கள் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஒரு புள்ளியகவே செயல்பட்டன.

நியோ ரியலிஸ இயக்குனரான டி சீகா, மற்றும் இத்தாலிய இயக்குனர்களான ஃபெடரிகோ ஃபெல்யீனி, பெர்னார்டோ பெர்டோலுச்சி (The last emperor),  ஸ்வீடிஷ் இயக்குனரான இங்மர் பெரிமான் (Ingmar Bergman), மற்றும் ஹாலிவுட் இயக்குனர் பலருக்கும் ஆதர்சமாகவே விளங்கினார் அகிரா.  மார்ட்டின் ஸ்கொர்ஸீஸி அகிராவின் ஒரு திரைப்படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் (Dreams-இல் வான் காஃப் (Van Gogh) கதாபாத்திரத்தில் நடித்தவர் இவரே). அவர் மட்டுமல்ல ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லூகஸும் அகிராவின் படைப்புகளால் பெரிதும் உந்தப்பட்டிருக்கிறார். தனது ஸ்டார் வார்ஸ் படத்தின் துவக்க காட்சிக்கான உத்வேகத்தை “The hidden Fortress” என்ற அகிராவின் படத்திலிருந்தே பெற்றதாக ஜார்ஜ் லூகஸ் சொல்கிறார். ஜார்ஜ் லூகஸின் இந்த ஆதர்சம் பிற்காலத்தில் அகிரா தன் தற்கொலை முயற்சிக்குப் பின் திரைப்படம் எடுக்கும் போது பெரிதும் உதவியது. ஆம், திரைப்படங்களில் தனது கதாபாத்திரங்களைக் கூட தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்காத அகிரா (இகுருவில் தனக்கு கேன்சர் இருப்பது தெரிந்தும் வாட்டனபே தற்கொலையை மறுக்கிறார், அதே போல ரான் திரைப்படத்திலும் ஹராகிரி செய்து கொள்ள முற்படும் ஹிடேடோராவிற்கு வாள் இல்லாத உறை மட்டுமே கிடைக்கும்) தன் வாழ்க்கையில் ஒரு புள்ளியில் தற்கொலை தான் முடிவு என்ற எண்ணத்திற்கு வந்திருந்தார்.

அதிலிருந்து அவர் மீண்டு திரைப்படம் உருவாக்க மேற்கத்திய இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்கும், ஜார்ஜ் லூகஸும் பெருமளவு உதவியிருக்கின்றனர். அகிரா குரோசவாவின் Dreams உருவாவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அகிராவின் மேல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கும், ஜார்ஜ் லூகஸிற்குமிருந்த ஆதர்சம். ஸ்பீல்பெர்க் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர். அந்த திரைப்படங்களில் வரும் தந்திர காட்சிகளில் ஜார்ஜ் லூகஸின் பங்கும் இருக்கிறது. அதே போல காகேமூஷா என்று ஒரு திரைப்படம் – அதை தயாரித்தவர்களுள் ஒருவர் ஜார்ஜ் லூகஸ். மேலும் ஸ்டார் வார்ஸ் வெற்றியை கொடுத்த ஜார்ஜ் லூகஸுக்காக 20th century fox நிறுவனம் இந்த திரைப்படத்தில் முதலீடு செய்ததோடு மட்டுமில்லாமல் அதை விநியோகிக்கவும் செய்தார்கள். இதை ஜார்ஜ் லூகஸே பேட்டிகளில் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அந்த அளவிற்கு அவர்களுக்கு அகிரா மேல் அபிமானம் இருந்தது.

மேற்கால் ஆதர்சமாக கொண்டாடப்பட்ட கிழக்கின் திரை கலைஞர்களுள் முதன்மையானவர் அகிரா. கலாசாரத்தாலும் பண்பாட்டாலும் இரு வேறு துருவங்களான கிழக்கையையும் மேற்கையும் ஒரே நேர்கோட்டில் இணைத்த பெருமை அகிராவிற்கு உண்டு. அகிரா திரைப்படங்கள் மூலம் மனிதர்களை அவர்களது உணர்வுகளை தொட விழைந்தார் – அவரது இலக்கு ஜப்பானியர்கள் மட்டுமே அல்ல. உலகில் எங்கெங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் தன் திரைப்படங்கள் மூலம் தொட நினைத்தார் – அந்த சாதனையை தன் திரை மேதமையின் மூலம் அகிரா சாதித்தும் காட்டினார். இதுவே அவரது வாழ்வின் குறிகோளாகவும் இருந்திருக்கக்கூடும்.