ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள்

1)
கொண்டாடத் தெரியவில்லை மனிதர்களுக்கு
கூர்விழிக்கனவின் உட்குளிரில்
கூவியழைக்கக் குரலில்லை.
கவனத்தின் சாளரத்தில்
காற்றுக்கு மஞ்சமிட
அகல் ஒளி அரும்புகள் தூவி
ஆய்ந்திட மிருதுவாய்
அன்பின் ஸ்வாசங்கள் இல்லை.
பேய்க்காற்று கொண்டு
பிழைபட்டுத் தடுமாறும் மனங்கள்
கழைக்கோலின் உச்சியில்
கட்டைபோல் ஸ்தம்பித்த கணங்கள்
உடைபட்ட உணர்ச்சியின் உதிரப்புனலில்
நீந்திவரும் குரோதமும் துக்கமும்
மனப்பிணம் கைக்கொண்டு
மாறாடி எதிர்ந்தன.
எங்கெங்கும் வெட்டும்
எதிர்விழி மின்னல் கொடு நெய்த
இருள் போர்த்திய மடியில்
அயரும் உணர்வு
ஆய்ந்தது உலகின் சேதியும் ஆதியும்.

2)

நான் போய் நின்றால்
எதிர்வீட்டில் யாராவது
வந்து நிற்பது வழக்கம்.
பல்லாண்டுகளுக்கு முன்
ஒரு சிறு பையன்
பிறந்த மேனிக்கு வந்து நிற்பான்;
என்னைப் பார்ப்பான்;
சிரிப்பான்;
சீண்டுவான், அழகு காட்டுவான்.
என்ன ஆயிற்று அந்தப் பிள்ளை?
பாலன், இளைஞன்
மனிதன் என்று
காலை, பகல், இரவு
என்னாமல் எதிர்வீட்டில்
எனக்கு எதிர்வந்து
நின்ற அந்த நபர்கள்
என்ன ஆனார்கள்?
இப்பொழுதும் ஒருவர்
வந்து நிற்கிறார்.
யாரிவர்?
ஒரு நாள்
போய் நின்றால்
எவரும் வந்து நிற்கவில்லை
என்றால்..
நான் நிற்பது நிஜமா?
அன்றேல்..
எதிரில் வீடிருப்பதுதான் நிஜமா?

3)
மூட்டை முடிச்சுகள்
இறைந்து கிடக்கின்றன.
வண்டி சென்றுவிட்டது.
யாருடையவை இவை?
இவற்றின் சொந்தக்காரர் யார்?
விட்டுச் சென்றவை சில
பேர் ஒட்டி
ஒலி பெருக்கிகளில் அடிபடுகின்றன.
சில..பெயர் தெரியாமல்
கிடங்கில் தம்மிடம்
தேடுகின்றன
விட்டுச் சென்றவை
வந்து சேர்ந்தவையோடு.
ஏதோ ஒரு சமயம்
கெடு முடிந்தவை
ஏலம் போகும்;
உருமாறும், அழியும்.
தேடிவந்தால் சொந்தம்
தொடரும்.
வண்டிகள் வரும்;
வந்தவை போகும்;
மூட்டை முடிச்சுகள்
யாருடையவை?
விட்டுச் சென்றவை
வந்து சேர்ந்தவையோடு.
kirgizpazyrikhorseman
4)
கடலை.
இரண்டு ரூபாய்.
கையில் ஏந்தலாம்.
இடுப்பில் அமர்ந்த
குழந்தை கேட்கச்
சுமந்த குழந்தை
தொட்டுக் கேட்டுக்
கேட்டுத் தொட்டுச்
சுற்றி வந்தும்
சேர்ந்த எட்டணா
நீட்டிய கையில்
விற்கும் குழந்தை
கொட்டிச் சென்றது
குறைப்பங்கு கடலையும்
ராஜகம்பீரமாய்
ஒரு நுனிச் சிரிப்பும்.
இனி ஏந்தலாம்
மற்றவர் கைகளில்
கடலை.
kirgizpazyrikhorseman
5)
நம்மைத் தாண்டி உலகம்
ஒரே கணம்.
ஒவ்வொருவரும்
ஒரு விழுகல் எழு அலை.
விரையும் வட்டமாய்
அவரவர் வாழ்க்கை.
வட்ட ஸ்பரிசமாய்ச்
சமுதாயச் சலனம்.
விழு கற்களும் எழு அலைகளும்
நேருக்கு நேரே
தொட்டுக் கொள்வதில்லை.
அற்புதங்கள் நிகழலாம்
யாரையும் கேட்காமல்.

One Reply to “ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள்”

Comments are closed.