(சென்ற இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி இது. இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்).
விபூதி கொடுத்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று கிடைத்ததை சுருட்டும் சாமியார்களை பற்றி அறிந்து இவர்களை தவிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஆனால், இணையத்தில் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பெறத் துடிக்கும் மோசடிக் கூட்டம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.
உங்களிடமிருந்து நீங்கள் அறிந்தும் அறியாமலும் மிக சாதுரியமாய் உங்களது அந்தரங்க நிதி சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களைப் பெறும் முயற்சிகளுக்கு ‘ஃபிஷிங்’ (phishing) என்கிறார்கள். பொதுவாக ‘ஃபிஷிங்’ முறைகள் பல தொடர்பு மீடியாக்கள் மூலம் செய்யப் பட்டாலும் (கடிதம் மற்றும் தொலைபேசி) இக்கட்டுரையில் இணையத்தில் நடப்பவை பற்றி சற்று அலசுவோம்.
ஆப்பிரிக்க சர்வாதிகாரி பெரிய சொத்தை விட்டு விட்டு மண்டையை போடும் சமாச்சாரம் நினைவிருக்கிறதா? அதன் வளர்ந்த, முதிர்ந்த மோசடி வடிவம்தான் ‘ஃபிஷிங்’ . பொதுவாக, இவர்கள் அனுப்பும் கடிதம் ஒரு பெரிய நிதி நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதைப் போல தோன்றும். இம்மாதிரி நடிப்பு மின்னஞ்சல்களை பல்லாயிரம் பேருக்கு அனுப்புவார்கள். மிக சாதுரியமாய் எழுதப்பட்ட மின்னஞ்சல். ஆயிரக்கணக்கான அஞ்சல்கள் அனுப்புவதில் சில ஏமாளிகள் கிடைத்தாலே இவர்களுக்கு வெற்றி. மின்னஞ்சல் அனுப்ப அதிகம் செலவொன்றும் இல்லை.
அப்படி உங்களிடமிருந்து என்ன எதிர்பார்கிறார்கள்? பெரிதாக ஒன்றும் இல்லை – உங்களது கிரெடிட் கார்டு எண், அதன் பாதுகாப்பு எண், உங்களது வங்கிக்கணக்கின் கடவுச்சொல் (password) , உங்களது அரசாங்க எண், அல்லது உங்களது தாயின் பிறப்புப் பெயர். இதை வைத்து என்ன செய்வார்கள்? முதலில் உங்களது கிரெடிட் கார்டில் சில சின்ன சில்லரைப் பரிவர்த்தனைகள் செய்து சரி வருகிறதா என்று பார்ப்பார்கள். பிறகு, முடிந்த வரை சுருட்டல்தான். இதே போல ‘பே பால்’ (Pay Pal) போன்ற வசதிகளின் எண் மற்றும் கடவுச் சொல் கிடைத்து விட்டால், சில பல டிவி, குளிர்சாதன பெட்டி, சோபா என்று உங்கள் செலவில் புதுக் குடித்தனமே ஆரம்பித்து விடுவார்கள்!
எப்படி உஷாராவது? முதலாக, உங்கள் பெயர் முருகன் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உங்களது வங்கியின் சின்னம் (logo) நிஜம் போலவே இருக்கும். ஆனால், ‘அன்பான வாடிக்கையாளரே’ என்றுதான் தொடங்குவார்கள், ‘அன்பான திரு முருகன் அவர்களே’ என்று எழுதுவதில்லை. உடனே உஷார்! இவர்களது மின்னஞ்சலில் உங்கள் வங்கி அனுப்புவது போலவே ஒரு இணைப்பு (link) வேறு தருவார்கள். உங்களது நலன் மேல் அக்கறையுடன் , ”உங்கள் கிரெடிட் கார்டில் மோசடி நடந்திருப்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. தயவு செய்து கீழே உள்ள இணைப்புக்கு சென்று உங்களது உண்மையான எண் மற்றும் பாதுகாப்பு எண்களை பதிவு செய்து விடுங்கள்!” என்று அன்பை பொழிவார்கள். அப்படியே நீங்கள் ”திரு. முருகன் அவர்களே” இல்லாததைக் கவனிக்காவிட்டாலும், இணைப்பின் மேலே மெளசை மேவ (க்ளிக் செய்யாதீர்கள்) விடுங்கள். இவர்களது இணைத்தளத்தின் முகவரி மூலம் (உங்கள் வங்கி இணைத்தள முகவரி இருக்காது) குட்டு அடிபடும். இது இரண்டாவது உஷார்.
இது போன்ற மின்னஞ்சலுக்கு சரியான இடம் ஸ்பாம் (Spam) என்ற விசேஷ குப்பைத்தொட்டி. ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்கள் வங்கியை அழைத்து பேசுங்கள். மேற்கத்திய வங்கிகள் இது போன்ற ஏமாற்றுக்கார பரிவர்த்தனைகளை மென்பொருள் கொண்டு உடனே (24 மணி நேரத்துக்குள்) பிடித்து, கார்டு சொந்தக்காரரைத் தொடர்பு கொண்டு உங்களது பரிவர்த்தனையா என்று விசாரிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் என் வங்கியைத் தொடர்பு கொண்டு இந்தியா செல்வதைத் தெரிவிப்பேன். இல்லையேல், மியூசிக் லேண்டில் கணக்கர் அலுத்துக் கொள்வதைக் கேட்க வேண்டி வரும், ‘அரை ட்ராயரும், தண்ணி பாட்டிலும் எடுத்துட்டு ஃபாரின்லிருந்து வந்துர்றாங்க. கிரெடிட் கார்ட் மட்டும் உதைக்குது!”
ஒட்டுக் கேட்தல்
தமிழ் சினிமாக்களில், கதாநாயகி, காதலனுடன் மாடியில் பேசுவதை கீழே அவரது அப்பா ஒட்டுக் கேட்பார். உடனே கதாநாயகியைத் தரதரவென்று இழுத்து கொண்டு ஒரு படுக்கையறையில் தள்ளி கதவை சாத்துவார். அதென்ன, அத்தனை இந்திய சினிமா கதாநாயகிகளும் மல்லாக்கவே படுக்கையில் விழுந்து அழுகிறார்கள்? இதைப் பற்றி யாராவது ‘சொல்வனத்தில்’ ஆராய்ச்சி செய்தே ஆக வேண்டும்! பிறகு கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் கைத் தொலைபேசியில் உரையாடல் தொடர்கிறது! கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கைத்தொலைபேசியில் ஒட்டுக் கேட்பது சற்று கடினம். சிம் கார்டை வேறு மாற்றி பேசுபவரின் அடையாளத்தைக் கண்டு கொள்வது மிகவும் கடினமாக்கப் படுவதை நாம் பல சினிமாக்களில் பார்க்கிறோம்.
கணினியும் தொலைதொடர்பியலும் கல்யாணம் செய்த காலம் போய், இணையத் தொலைதொடர்பு (Internet Telephony) என்ற குழந்தையே பிறந்துவிட்ட காலம் இது. ஒட்டுக் கேட்பது ஒரு அந்தரங்க மீறல். கை தொலைபேசி போன்ற கருவிகளில்லாத காலத்தில் இருந்தே ஒட்டுக் கேட்தல் (wire tapping) நடந்து வரும் ஒரு சமாச்சாரம். ஒட்டுக் கேட்பதற்கு சட்டப்படி ஒரு தேடுதல் ஆணை (warrant) தேவைப் பட்டது. ஆரம்ப காலத்தில், தொலைபேசிப் பரிமாற்றம் (phone exchange) வழியாக ஒரு மனித உதவியுடன் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வந்தன. தொலைபேசிப் பரிமாற்றத்தில் ஒரு சிறு மாற்ற்ம் மூலம் இருவர் பேசுவதை பாதுகாப்பு மற்றும் சட்ட நிர்வாகப் பணிமணைகள் கேட்க முடிந்தது. ஓரளவுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்க இது தேவையாகவும் இருந்தது.
நிலமை ரொம்ப மாறிவிட்டது. கைத்தொலைபேசித் தொழில்நுட்பம் மிகவும் மதிநுட்பமிக்கதாக ஆகிவிட்டது. அத்தோடு இணையத் தொலைதொடர்பு இன்னும் ஒட்டுக் கேட்பதை கடினமாக்கிவிட்டது. ’இன்னிக்கு டான்ஸ் வ்குப்பில் என்ன சொல்லிக் கொடுத்தா உங்க டீச்சர்?’ என்று சென்னையில் உள்ள பாட்டி, மேஜிக் ஜாக்கில் மயாமியில் உள்ள பேத்தியை விசாரிப்பாள். இணையம் மூலமாகப் பேசும் பாட்டியின் தொலைபேசி எண்ணை பார்த்தால். பாஸ்டனிலிருந்து பேசுவதைப் போலத்தான் சொல்ல முடியும். இது இணைய தொழில்நுட்ப விந்தை. (Local Number Portability என்ற இடமற்ற நுட்பம்) இதே போல பெய்ரூட்டில் வாழும் ஒரு ஹெஸ்புல்லா தீவிரவாதி தன் அமெரிக்கக் கூட்டாளியுடனும் எதையாவது தாக்கத் திட்டம் போட முடியும். சிக்கல் என்னவென்றால், இரு பேச்சாளர்களிடையே, சில பல தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் உள்ளன. மயாமி உரையாடலை எடுத்துக் கொள்வோம். சென்னை நகரத்தில் உள்ள பல இணைய சேவை நிறுவனத்தில் ஒன்றின் மூலமாக உரையாடலின் ஆரம்பம். பிறகு மேஜிக் ஜேக் நிறுவனம். இத்தனைக்கும் பாட்டிக்கு, ஒரு பாஸ்டன் நகர எண்ணிலிருந்து தான் அழைப்பது தெரியாது. பிறகு, மயாமியில் உள்ள பல இணைய சேவை நிறுவனத்தில் ஒன்றின் மூலமாக உரையாடலின் முடிவு. நடுவில், சாட்டிலைட்,, மைக்ரோவேவ், கோஆக்ஸ் போன்ற சிலபல தொட்ர்பு இடை சமாச்சாரங்கள். எப்படி ஒட்டுக் கேட்பது? தேடுதல் ஆணை என்பது உள்நாட்டு சட்ட ஆணை. தோற்றத்தில் உள்நாட்டு உரையாடல் போல தோன்றினாலும், இது ஒரு பன்னாட்டு உரையாடல்.
ஸ்கைப் போன்ற வசதிகள் இதை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இரு ஸ்கைப் பேச்சாளர்கள் இடையே தொலைபேசி எண்ணே தேவையில்லை. சதி செய்கிறார்களா அல்லது வியாபாரம் பேசுகிறார்களா என்றே சொல்ல முடியாது. இந்த வளர்ச்சி ஓரளவுக்கு தனிப்பட்டோர் அந்தரங்கக் காவலுக்கு வெற்றி என்று கொண்டாலும், பொது நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. இந்த விஷயத்தில் இரு பக்கம் இருப்பது தெளிவு. தனி மனித அந்தரங்கம், நம் அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளத்தால், இது ஒரு ஜனநாயகப் பிரச்சினை. பயங்கரவாதத்தால், இது ஒரு பாதுகாப்புப் பிரச்சினையும்கூட. உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளில் அதிக சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு முக்கிய விஷயம் இது.
மெய் அந்தரங்கங்கள்
காவல் துறையினர் குற்றங்களைக் கண்டுபிடிக்க 100 ஆண்டுகளுக்கு மேலாகக் கைரேகையை உபயோகித்து வருகிறார்கள். அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (homeland security) ஒரு படி மேலே போய், பயணிகள் சிலரிடம் பத்து விரல் ரேகைகளையும் பெற்றுக் கொண்டு அவர்களது நாட்டுக்குள் அனுமதிக்க முடிவெடுக்கிறார்கள். விரல்கள் ஒவ்வொருக்கும் வெவ்வேறு ரேகையுண்டாம். ஒரு விரல் ரேகையை ஏமாற்றி விடலாம். ஆனால் பத்து விரல் ரேகைகளை வைத்து ஏமாற்றுவது சற்று கடினம். பல உயர் பாதுகாப்பு தளங்களில் பத்து விரல் ரேகையுடன் எண்ணைப்பசை மற்றும் உஷ்ணம் கொண்டு ப்ளாஸ்டிக் பித்தலாட்டம் நடக்கிறதா என்று மிக சக்தி வாய்ந்த வருடிகள் முடிவெடுக்கின்றன. புதிய மடிக்கணினிகளில் கைரேகை வருடிகள் (scanner) வரத் தொடங்கிவிட்டது. இதைப்பற்றி அதிகம் பேசப்படாத சமாச்சாரம் இது: ஒரு ஆயிரம் வருடல்களில் 5 வருடல்களாவது தவறு செய்ய வாய்ப்புள்ளது. சமுதாயப் பார்வையில் கைரேகை என்பது குற்றங்களுடன் சேர்த்து பார்க்கப்படுகிறது. ஒருவரின் கைரேகை எடுக்கப்பட்டால், அவரைப் பற்றிய மதிப்பீடு கீழிறங்குவது இயல்பு. இது மாறுவது மேற்படி நடைமுறைகள் பரவலானால் ஏற்படலாம். ஆனால் மேற்படி நடைமுறைகள் இந்த மதிப்பீடுகளுக்கு வணங்கி மாறுதல்களை அடைவதும் நேருமா என்று பார்க்க வேண்டும்.
முக வடிவு வருடிகள் (Facial Scan) பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், முகவடிவு மாறக்கூடியது. தாடி, மீசை வளர்த்தாலோ, அல்லது சிகை அலங்காரம் மாறினாலோ வருடிகள் குழம்பி தப்பு முடிவெடுக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் முகவடிவு கைரேகை மற்றும் இதர நுட்பங்களுடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தனியாக முடிவெடுக்க உகந்த நுட்பமில்லை. இதுவும் குற்றவாளிகளை தேட காவல்துறையினர் உபயோகிக்கும் முறைகளில் ஒன்று.
கருவிழி வருடிகள் (iris scanning) பல உயர் பாதுகாப்பு தளங்களில் சில வருடங்களாக உபயோகப்படுத்தப்படுகிறது. பல ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். கை ரேகையுடன் கருவிழி (ஸ்டார் ட்ரெக்கில் புளித்துப் போன விஷயமிது!) வருடலும் செய்தவுடன் ஒரு வினோதk கதவு வழக்கத்துக்கு மாறாக புதுக் கோணத்தில் திறக்கும்! கருவிழிகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுமாம். முக வடிவு அளவு இல்லாவிட்டாலும், கருவிழி வருடல்களிலும் தவறு நேர வாய்ப்புள்ளது. அத்தோடு, இப்புதுமை வருடி செயலாக்கு அல்காரிதம் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. நீதி மன்றத்தில் செல்லாது. பொது மக்களுக்கு இதன் செயல்முறைகள் வெளியிடப்படுவதில்லை.
மனிதக் குரல் வைத்து பாதுகாக்கும் துறை இப்பொழுதுதான் வந்துள்ளது. ‘சிவாஜி’, ரஜினிக்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். ஜலதோஷம் பிடித்தால் குழம்பி விடும்!
இது போன்ற மனித உறுப்புகள் வழி வருடல்கள் பயோமெட்ரிக் வருடல் (biometric scanning) என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இம்முறை வருடல்கள் ஒரு தனியார்/அரசு நிறுவனத்தின் அனுமதிப்புக்கு (authentication) உகந்த நுட்பங்களே. பரந்த திரளுக்கு இவற்றைப் பயன்படுத்துகையில் சிக்கல்கள் எழலாம்.
விமான நிலையங்கள் மற்றும் பல பொது இடங்களில் செய்யப்படும் வருடல் பதிவுகள் (scanned electronic records) ஒரு தனி நபர் சொத்து. பாதுகாப்புக்காக செய்யப்பட்டாலும் மின்னணுப் பதிவாக இருப்பதால் எளிதில் திருடப்பட வாய்ப்புள்ளது. தவறான கைகளில் சிக்கினால் இதைக் கொண்டு ஒரு அப்பாவிக்குப் பல சிக்கல்கள் ஏற்படுத்த முடியும். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் மூச் – அதிகம் பேசுவதில்லை. கைரேகை சமாச்சாரம் குற்றங்களை ஆய்ந்து தண்டனை அளிப்பதறகு என்று நாம் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மற்ற பயோமெட்ரிக் விஷயங்களில் பொதுமக்களை, நம்மைக் கலந்து ஆலோசிக்காமல் ரகசியத்தில், அவசரமாக முடிவெடுப்பது சற்று உறுத்தத்தான் செய்கிறது. ஓரளவுக்கு இது அரசாங்கங்கள் தனிநபர் அந்தரங்க உரிமைமீது நடத்தும் தாக்குதல்தான். ஜனநாயக முறையில் நாம் வாக்களித்து அமர்த்திய அரசாங்கமே சட்டத்தை உபயோகித்து, பாதுகாப்பைக் காரணம் காட்டி இப்படி செய்வது நவீன வாழ்க்கையின் சோகம்.
விடியோ கண்காணிப்பு
விடியோ காமிராக்கள் மிக மலிந்து விட்டதால், அவற்றின் பழைய உபயோகங்கள் சற்று பழகிவிட்டன. வளரும் குழந்தையின் வளர்ச்சிக் குதூகலங்கள், பழைய நண்பர்களுடன் சந்திப்பு என்று எழுதத் தொடங்கினால் பலர் அடுத்த கட்டுரையை படிக்கப் போய்விடுவார்கள். மேற்கத்திய நாடுகளில் சர்வ சாதாரணமாக ஒவ்வொரு நாளும் நடக்கும் நடைமுறை ஒன்றை பார்ப்போம்:
1. காலை மணி 6:00: சாமிநாதன் தன் காரை கராஜிலிருந்து வெளியே எடுக்கிறார். அவரது அடுத்த வீட்டு விடியோ விழித்து அவரின் செயல்களை பதிவு செய்கிறது.
2. காலை மணி 6:05: சாமிநாதன் சிவப்பாகி விட்ட ஒரு போக்குவரத்து விளக்கைக் (traffic light) கடக்கிறார். சிவப்பு விளக்கைப் பார்க்காமல் கார் ஓட்டுகிறாரா என்று ஒரு விடியோ அவரது காரை மீண்டும் பதிவு செய்கிறது.
3. காலை மணி 6:10: சாமிநாதன் ஒரு பெட்ரோல் பம்பிற்குள் சென்று காருக்கு பெட்ரோல் நிரப்புகிறார். காசு கொடுக்காமல் ஓடிவிடுவாரோ என்று விடியோ காமிரா அவரை பதிவு செய்கிறது.
4. காலை மணி 6:20: சாமிநாதன் அவரது வங்கியின் ஏடிஎமில் பணமெடுக்க செல்கிறார். அவரது முழு பரிவர்த்தனையையும் ஒரு சின்ன விடியோ காமிரா பதிவு செய்கிறது.
5. காலை மணி 6:20 முதல் 6:50 வரை: சாமிநாதன் ஒரு சின்ன டிவி நட்சத்திரமாகப் போகிறார். அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஒரு பெரிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து ஒரு 30 கி.மி. பயணிக்கிறார். ஒவ்வொரு 5 கி.மி.க்கும் ஒரு விடியோ காமிரா அவர் வேக எல்லைக்கு மேல் பயணிக்கிறாரா என்று பதிவு செய்கிறது. இது போக்குவரத்து நெரிசல் நிர்வாகத்துக்கும் உபயோகிக்கப்படுகிறது.
6. காலை மணி 6:55: சாமிநாதன் காஃபிக் கடை ஒன்றுக்குள் நுழைகிறார். அங்கும் அவரை பதிவு செய்ய ஒரு விடியோ தயார்.
7. காலை மணி 7:05: சாமிநாதன் அவருடைய கம்பெனி கார் நிறுத்துமிடத்திற்கு உள்ளே வருகிறார். கம்பம் ஒன்றுக்கு ஒரு விடியோ காமிரா அவர் எங்கு நிறுத்தினாலும் பதிவு செய்யத் தயாராக இருக்கிறது.
8. காலை மணி 7:10: சாமிநாதன் அவருடைய கம்பெனி நுழைவில் அவருடைய அடையாள ப்ளாஸ்டிக் அட்டையை ஒரு வருடியில் சறுக்குகிறார். அங்கும் ஒரு விடியோ காமிரா அவரது செயலை பதிவு செய்கிறது.
இது சாதாரண அன்றாட மேற்கத்திய நாட்டுக் காலை. மேலே சாமிநாதன் அவரது அலுவலகத்திற்குள் நுழையவே இல்லை. குறைந்தபட்சம் 13 முறை படமெடுக்கப்பட்டுள்ளார் (அவர் தாண்டிய சில பல போக்குவரத்து விளக்குகளை இங்கே விட்டு விட்டோம்).. சற்று யோசியுங்கள். அவர் என்ன கமலஹாசனா? அவரிடம் யார் அனுமதி கேட்டார்கள்? பார்க்கப் போனால் பாப்பராட்ஸி தொடரும் ஹாலிவுட் நடிகைக்கும், சாதாரண மனிதருக்கும் அதிக வித்தியாசமில்லை. சாதாரணமானவரின் புகைப்படத்தை யாரும் அச்சடித்துக் காசு பண்ணுவதில்லை. இத்தனைக்கும், படமெடுத்த பாதி காமிராக்கள் சாமிநாதனின் வரிப்பணத்திலிருந்து வாங்கியவை! இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொது இடங்களில் விடியோ கண்கானிப்பு அதிகரித்து வருகிறது. தனியார் துறையில் பாதுகாப்புக்காக உபயோகம் செய்யப்படும் கண்காணிப்பைப் பற்றி நாம் இங்கு பேசப் போவதில்லை.
பொதுவாக விடியோ கண்காணிப்பு பொது மக்களின் பாதுகாப்புக்காக் செய்யப்படுவதாக அரசாங்கங்கள் சொல்கின்றன. இதில் ஓரளவுக்கு உண்மையுண்டு என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக, 1994ல் அமெரிக்கா ஓக்லஹொமாவில் நடந்த குண்டுத் தாக்குதலுக்கு முக்கிய துப்பு, ஒரு ஏடிஎம் காமிரா என்பதை அறிவோம். லண்டன் பாதாள ரயில் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விடியோ காமிராக்கள்தான் உதவின. போலிஸார் எல்லா குற்றம் நடக்கின்ற இடங்களிலும் இருக்க முடியாதே? குற்றம் செய்வதே போலிஸார்தானே என்பீர்கள். அது வேறு விஷயம்!
விடியோ கண்காணிப்பு பற்றிய பொது விவாதம் சற்று சிக்கலானது. சில இடங்களில் காமிராக்கள் இருப்பது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும், அதுவே மிகையானால் பாதுகாப்பே சற்று பயமாக மாறுவது வினோதமானது. “உங்களிடம் மறைக்க ஒன்றும் இல்லையெனில் ஏன் பயப்பட வேண்டும்” என்பது ஒரு வாதம். ஆனால் இவ்வாதம் முக்கியமான ஒரு கோணத்தை புறக்கணிக்கிறது. “தனியொருவரின் அந்தரங்கம், அரசியல் சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்டது. ஏன் அரசாங்கம் அன்றாட வாழ்க்கையில் ஊடுறவ வேண்டும்?” என்பது மிக முக்கியமான கேள்வி. மேலும் எல்லாரையும் எப்போதும் சந்தேகத்துடன் இந்தக் காமிராக்கள் பார்க்கின்றன என்பது சமூகத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது? மக்களை நம்ப முடியாது என்று கருதும் சமூகத்தின் இயல்பு என்ன வகை?
பொது இடங்களில் ஏறக்குறைய அந்தரங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை சற்று ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே படுகிறது. மிகப் பெரிய விளையாட்டு போட்டிகள் நடக்குமிடங்களில் (ஒலிம்பிக், ஓடிஐ,, சூப்பர் பெளல்) குற்றவாளிகளை பிடிக்க, குற்றங்களை தவிர்க்க விடியோ சாதனங்கள் உதவுகின்றன. இவ்விடியோ பிம்பங்களுடன், முக வடிவு கண்டறிதல் ( face recognition technology) தொழில்நுட்பமும் இணைந்தால், விளைவுகள் கவலைக்கு இடமளிக்கிறது. குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் மட்டுமே இந்த அரசாங்க தகவல் தளத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும் என்று யாரும் உத்தரவாத்ம் கொடுப்பதில்லை. இதே நுட்பம்தான் நமது விமான/ரயில் நிலயம் மற்றும் பல முக்கிய பொது இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. காமிரா தொழில்நுட்பம் வளர்ந்து, காமிராக்கள் சுழன்று மற்றும் ஜூம் செய்து துல்லியமாய் படமெடுக்கும் திறனை பெற்றுவிட்டன. குத்து மதிப்பான ஒரு உருவத்தை மென்பொருள் கொண்டு துல்லியமாக்கும் திறமையும் இன்று வந்துவிட்டது.
விளைவு – தேவைப்பட்டால், உங்களின் ஒவ்வொரு பொது இயக்கத்தையும் அரசாங்கத்தால் கண்கானிக்க முடியும்.
கனடா போன்ற வளர்ந்த நாடுகளில், பொது மக்களின் அந்தரங்க பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் Privacy Commissioner என்ற ஒரு உயர்பதவி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் எதை, எங்கிருந்து, எப்பொழுது, எப்படி கண்காணிக்கலாம் ஆகிய விதிமுறைகளை இந்த அமைப்பு வெளியிட்டு அமலாக்கவும் செய்கிறது. ஓரளவுக்கு இது போன்ற அமைப்புகள் பொது மக்களைத் தேற்றினாலும் அரசுடைய செயல்கள் குறித்த சந்தேகம் முழுவதும் நீங்கியதாகப் படவில்லை.
சில உருப்படியான யோசனைகள்
1. கிரிக்கெட் ரசிகரா நீங்கள்? டெண்டுல்கரே கேட்டாலும் உங்கள் கடவுச்சொல்லை கொடுக்காதீர்கள்.
2. கடவுச்சொல்லை சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள். சும்மா மகன் பேரை வைத்துக் கொள்ளாதீர்கள். இதற்கு பல நல்ல முறைகள் இருக்கின்றன. உதாரணம், நீங்கள் கடந்த பத்து வருடங்களில் 7 வீதிகளில் வசித்திருக்கலாம். அந்த 7 வீதிகளின் முதல் எழுத்தை, உங்களுடைய திருமண வருடத்தோடு இணைத்து ஒரு கடவுச்சொல்லை தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது. குடும்பத்து உறவினரிடம் இக்கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
3. ஒரு இணைத்தளத்தில் பதிவு செய்து அத்தளத்தை நிறைய உபயோகிக்க விருப்பமா? பதிவு செய்த உடனே அத்தளம் உங்களுக்கு அனுப்பும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை அழித்துவிட்டு, கடவுச்சொல்லை ஒரு முக்கிய புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
4. ஆர்குட்டில் தெரியும் என்று உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை மூன்றாமவரிடம் (நான்காமவர், ஐந்தாமவரும் இதில் அடங்கும்) பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
5. என்னிடம் ரகசியமே இல்லை என்று உங்கள் புகைப்படம் மற்றும் முகவரியை பகிரங்கமாய் ஃபேஸ்புக்கில் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள்.
6. கூகிள், ஹாட்மெயில், யாஹு போன்ற இணைய அமைப்புகள் பல்வேறு சேவைகளை வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு, உங்களுக்கு ஜிமெயில் கணக்கு ஒன்று உண்டு என்று வைத்துக் கொள்வோம். அதற்கான Profile ஒன்று ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பள்ளி நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஒரு கூகிள் குழு ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். அதே கூகிள் Profile மீண்டும் உபயோகிக்கப்படும். பள்ளி நண்பர்களுக்காக உங்கள் முகவரி, புகைப்படம், உங்கள் நாய்க்குட்டியின் பெயர் என்று சகலத்தையும் கொட்டித் தீர்ப்பீர்கள். உங்களின் அத்தனை கூகிள் சம்பந்தப்பட்ட தொடர்பிலும் இத்தனை விவரங்களையும் சம்மந்தப்பட்டவர்கள் பார்க்கலாம். மிக யோசித்து உங்கள் Profile ஐ உருவாக்குங்கள்.
7. உங்கள் வங்கிபோல பாசாங்கு செய்யும் மின்னஞ்சல் வந்தால் வங்கியை அழைத்து விசாரியுங்கள்.
8. நீங்கள் கடும் சிவ பக்தரா? திருவண்ணாமலை செல்லுங்கள். அனாவசியமாக சிவன் படத்தை மின்னஞ்சலில் முன்னோக்கி அனுப்பாதீர்கள்.
9. மறைந்த ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பணக்கார சர்வாதிகாரிகள் உங்கள் ஸ்பாம் குப்பைதொட்டியில் இருக்க வேண்டியவர்கள்.
10. கனடாவில் குறைந்த விலை மருந்துகள், வயாக்ரா, இலவச நோக்கியா -மறக்காமல் உங்கள் ஸ்பாம் குப்பைதொட்டியில். முடிந்தால் ஸ்பாம் காப்பு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள்.
11. இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்ல. படித்த ஏமாற்றுக்காரர்கள் அதிகம் உலவும் இடம் இணையம்.
12. பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையா? உங்கள் இணைத்தள முகவரி https:// என்று ஆரம்பிக்கிறதா என்று பார்க்கவும். கடைசியில் உள்ள ‘s’ பாதுகாப்பான இணைத்தளத்தை குறிப்பது. (Secure http – SSL encrypted). வங்கிக்கணக்கு மற்றும் ஏடிஎம் எண்கள் அல்லது பே பால் (Paypal), மற்றும் கிரெடிட் கார்ட், அரசாங்க எண் (Social Security Number) எதையும் கொடுக்குமுன் நீங்கள் கவனித்துப் பார்த்தால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆசையாய் அண்ணன் மகள் சிடி விற்கிறாள் என்று http:// துவங்கும் இணைத்தளத்தில் உணர்ச்சிவசப்பட்டு கிரெடிட் கார்ட் எண்ணை கொடுக்காதீர்கள்.
13. அரசாங்கம் ஏதோ ஒரு சலுகையைத் தீவிரமாக பிரச்சாரம் செய்தால் அந்தரங்கம் பற்றி சற்று யோசித்து முடிவெடுங்கள்.
14. ஆஸ்பத்திரியில் சகட்டு மேனிக்கு (என்ன பொருத்தம்!) மரபணுச் சோதனைகள் எடுத்தால், அறிக்கையை யாரிடம் அனுப்புவார்கள் என்று விசாரியுங்கள். காசு கொடுக்கும் உங்களுக்கு அறிக்கையை கொடுக்கக் கோருங்கள். தகவலைப் பெறும் நபர்களைக் குறைந்த பட்ச எண்ணிக்கைக்குக் குறுக்க முயலுங்கள்.
முடிவுரை
எஸ்.பி.பி யின் பாடலை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்:
அந்தரங்கம் யாவுமே, சொல்வதென்றால் பாவமே
ஏழையின் தனிமையை (காதலை) மாளிகை அறியுமா?
இக்கட்டுரையை படித்து சிலரேனும் தங்கள் இணைய/ஷாப்பிங் வழக்கங்களை சற்று மாற்றிக் கொண்டால், அல்லது அந்தரங்கக் கோணத்தில் தங்களது நிதி, சுகாதார, அரசாங்க விஷயங்களை யோசித்தால், வெளியிட்ட பயன் ‘சொல்வனத்தை’ அடையும்.
———————————————————————————————————————
பதிப்பாசிரியர் குறிப்பு: எழுதிய பயனோ திரு.ரவி நடராஜனையே சேரும்!