அங்காடித்தெரு – ஒரு பார்வை – பகுதி 2

சென்ற பகுதியில் அங்காடித் தெரு என்ற சினிமா கிளறிய சில சமூகப் பொருளாதார சிந்தனைகளையும், அப்படத்தின் சில சிறப்புகளையும் பார்த்தோம். இத்திரைப்படத்தில் சில  சிறு குறைகளும் இருக்கின்றன.

at2

வலுவான களனையும், பிரச்சினைகளையும் சொல்வதற்கு,  நிரூபிக்கப்பட்ட ஒரு இயக்குனருக்குக் கூட காதலைத்தான் முக்கியக் கருவாக நிறுத்த வேண்டி வருகிறது. இந்த இடத்தில் மதுர் பண்டார்கர் மற்றும் கேரள இயக்குனர்களுக்குக் கிடைத்த சுதந்திரம் வசந்த பாலனுக்குக் கிட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.

வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை அவள் பெரிய பெண்ணாகி விட்டாள் என்பதற்காக ஆச்சாரமான ஒரு பிராமணப் பெண், அந்தப் பெண்ணை நாய்கள் அடைக்கப் பயன்படுவது போன்ற கொட்டடியில் தங்க வைப்பதாகப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. பிறரைத் தாழ்வாக நடத்துவதாக வரும் பாத்திரத்தில் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் அந்தக் காட்சிக்கு ஒரு நம்பகத்தன்மையும் தேவையான அழுத்தமும் கிட்டும் என்று இயக்குனர் எண்ணியிருக்கலாம். நகரங்களில் வாழும் ஒரு சில குடும்பங்களில் இன்னும் உயர்சாதி மனப்பான்மையும் ஆணவ உணர்வும் இருப்பதை மறுப்பதற்கும் இல்லை. சில ஆச்சாரமான பிராமண வீடுகளில் மாதவிலக்கான பெண்களுக்கு ஓய்வு அளித்து தனியே ஒரு அறையில் தங்க வைப்பது இன்றும் ஒரு சில இடங்களில் நடக்கலாம். பழைய வீடுகளில் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக அடைசலான ஒரு சிறிய அறை இருக்கும் அதை “தூரமானாள் உள்” என்று அழைப்பார்கள். ஆனால் இக்காலத்தில் அப்படி தனி அறை ஒதுக்குவது எல்லாம் நகர்ப்புற சிறிய வீடுகளில் சாத்தியமில்லை. அப்படி வழக்கொழிந்து வரும் ஒரு வழக்கத்தை இயக்குனர் வீட்டு வேலைக்கு வரும் சிறு பெண்களை எப்படிக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்பதை உணர்த்த இயக்குனர் வலுவாகப் பயன் படுத்திக் கொண்டுள்ளார்.

ஆனால் இயக்குனர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. அது போன்ற வீடுகளில் ஆச்சார உணர்வுள்ள பெண்கள் தங்கள் வீட்டுப் பெண்களையும்-சொந்தப் பெண்களையும், மருமகள்களையும் கூட-அதே இடத்தில்தான் தங்க வைப்பார்கள் என்பதை. அது வீட்டு வேலைக்காரப் பெண்ணிற்கு மாத்திரம் உரிய இடம் அல்ல. அந்த மாமிக்கே மாத விலக்கு வரும் பொழுது அவரும் கூட அதே இடத்தில்தான் ஒதுங்குவார் என்பதுதான் உண்மை நிலமை. இப்பொழுது வெகுவாக அந்தப் பழக்கம் மறைந்து வருகிறது. அந்த நாட்களின் பொழுது பெண்கள் சமையலில் ஈடுபடாமல் ஒதுங்கி ஒரு அறையில் ஓய்வெடுப்பதுடன் நின்று விடுகிறது. அந்த வழக்கமும் வேலைக்குப் போகும் மகளிரிடம் அகன்று விட்டது என்பதே உண்மை நிலை. ரசிகர்களிடம் எதிர்மறை பாத்திரங்களிடம் ஆத்திர உணர்வை ஊட்ட இவை போன்ற கொடூரமான வில்லத்தனமான சித்தரிப்புக்களைப் பயன் படுத்துவது பழைய சினிமா உத்திகள். ஏற்கனவே தமிழ் நாட்டின் திராவிட இயக்கங்களினால் கடும் இனவெறுப்புக்கு உள்ளாகி வரும் ஒரு ஜாதியைச் சார்ந்தவராக அந்த கொடூர மனம் உள்ள ஒரு பிராமணப் பெண்ணைக் சித்தரித்திருப்பது தமிழ் நாட்டில் ஒரு சில கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஜாதீயக் காழ்ப்புக்கு மேலும் தூபம் போடுபவையாகவே அமையும்.

BN18906தமிழ் சினிமாவின் விதிப்படி பாவ மன்னிப்பு, அன்பே சிவம் பாணியில் இந்த சினிமாவிலும் கூட இந்து மதத்தைச் சேர்ந்த, அதுவும் தன் பக்தியை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக்கூடிய ஒருவரையே பெரும் வில்லனாகக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் அண்ணாச்சியின் பேராசையும் மனிதாபானமின்மையும் அவர் பக்தியினால் வருவது கிடையாது. அவர் மதம் அவருக்கு அதைச் சொல்லித் தருவதும் கிடையாது. இருந்தாலும் அவரது பக்தி பல இடங்களில் அழுத்தமாகக் கேலி செய்யப் பட்டிருப்பது மதம் சார்ந்து வியாபார உரசல்கள் பெருகி வரும் சூழலில் எதிர் மறையான ஒரு சில விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். காதல், ஜாதி, மதம் என சில முன் தீர்மானிக்கப்பட்ட தமிழ் சினிமா சூத்திரங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது ‘அங்காடித்தெரு’வின் பெரிய பலவீனம்.

இது போலவே கருங்காலி என்று அழைக்கப்படும் அந்தக் கண்காணிப்பாளர், கொடூரமான வன்முறை மிகுந்த ஒரு ஆளாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். அவரும் அந்தக் கடையில் ஒரு ஊழியரே என்பதும், அவரும் அதே கடையில் கிட்டத்தட்ட 12 மணி நேரம், குறைவான சம்பளத்துக்கே பணிபுரிய வேண்டும் என்பதை அவரது வில்லன்தனமான சித்திரிப்பினால் மறந்து விடுகிறோம். இது போன்ற சூப்பர்வைசர்களும் பெரும்பாலும் லிங்கம், சேர்மக்கனி போன்ற விற்பனையாளர்களில் இருந்தோ அல்லது முதலாளியின் வறியவரான ஒரு தூரத்து உறவில் இருந்தோதான் உருவாகுகிறார்கள். அந்தக் கொடூரத்தையும், வன்முறையையும் அச்சூழல் உருவாக்குகிறது. கடையின் முதலாளியும் கொடூரமான ஒரு வில்லனாகவே காட்டப்படுகிறார். சினிமாவில் வரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் எல்லாம் அழுத்தமாக கருப்பு வெள்ளையாக முழு கெட்டவன் அல்லது முழு நல்லவனாக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாத் திரைப்பட விதியின்படி அந்த அண்ணாச்சியும் பெரும் வில்லனாகவே உருவகப் படுத்தப்பட்டுள்ளார்.

இவை போன்ற சித்திரிப்புகள் முதலாளித்துவத்தை எதிர்க்கும் நக்சல்களுக்கும், கம்னியுஸ்டு தோழர்களுக்கும் அவர்கள் நிலையை வலுப்படுத்த உதவலாமே ஒழிய, யதார்த்தத்தைச் சித்தரிப்பதாக இருக்காது. அந்தக் கடை முதலாளியான அண்ணாச்சியும் ஒரு ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து வளர்ந்து இவை போன்ற அனைத்து பிரச்சினைகளைச் சந்தித்து இன்று நூற்றுக்கணக்கான பேர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ஒரு பெரும் நிறுவனத்தை உருவாக்கியியுள்ளார் என்ற உண்மை அந்த வில்லன் பாத்திர வார்ப்பில் அடிபட்டுப் போய்விடுகிறது. அவரிடம் மனிதாபிமானம் மிச்சமில்லாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் அவரது கடின உழைப்புக்கும் முன்னேற்றத்திற்கும் அவர் இன்றைய பொருளாதாரத்துக்கு கொடுக்கும் ஆதாரத்தையும் இந்த சினிமா முழுக்க அவரது வில்லத்தனத்தின் பின்னால் மறைத்து விடுகிறது. ஏழாவது உலகத்தில் வரும் பண்டாரத்திற்குக் கூட ஒரு மென்மையான மறுபக்கம் இருக்கும் என்று காண்பிக்கப்பட்டிருக்கும்.

தமிழ் சினிமாவில் என்றுமே திருநெல்வேலி வட்டார வழக்கு என்பது ஒரு காமெடி சமாச்சாரமாகவே இருந்து வருகிறது. ஏலே, போலே, வாலே என்று வசனத்தில் இருந்து விட்டாலே அதைத் திருநெல்வேலி வட்டார வழக்கு என்று நினைத்துக் கொண்டு பேசுவது தமிழ் சினிமாவின் காமெடிகளில் ஒன்று. அப்படியில்லாமல் அங்காடித்தெருவில் வட்டார வழக்கு நன்கு கையாளப்பட்டிருந்தது. ஆயினும் சிறிது சினிமாத்தன நெல்லைத் தமிழ் உலவியது. ஓரளவுக்கு சினிமா வகை நெல்லை த் தமிழில் பேசியதே கூட பலருக்கும் அதன்வேகத்தால்  புரியவில்லை என்று சொன்னார்கள். வியப்பாக இருந்தது.

—ooOOOoo—

palm_tamil_nadu

இந்தச் சினிமா மற்றுமொரு முக்கியமான சமூக அவலத்தையும் சுட்டிக் காட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் மிகவும் வறண்ட பாலைவனங்களே. தாமிரவருணி நதி பாயும் வளமையான நீர்ப்பாசனப் பகுதிகளைத் தவிர்த்து, மீதம் இருக்கும் நிலப் பரப்புகளில் பனை மரங்கள் நிறைந்த தேரிக்காடுகளும் வறண்ட நிலங்களும் அமைந்துள்ளன. இந்தத் தேரிக்காட்டுப் பகுதிகளில் மண் சிவந்த நிறத்தில் இருக்கும். உடன்குடி, நாசரேத், குரும்பூர் போன்ற, திருச்செந்தூருக்கு அருகில் உள்ள வறண்ட ஊர்கள் இவை. இந்த வறண்ட பிரதேசங்களில் இருந்து பள்ளிப் படிப்பு முடித்த பின், அடுத்து வேறு என்ன செய்வது என்று தெரியாமல், இளைஞர்கள், அனேகமாக ஆண்கள், மும்பைக்கும், சென்னைக்கும் ஏதாவது வேலை தேடிக் கிளம்பிச் சென்று கொண்டேயிருக்கிறார்கள். கல்கத்தாவுக்கு யாரும் போவதாகத் தகவலில்லை, ஏன் அப்படி?  இடதுசாரி இயக்குநர்கள் யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டு ஒரு படம் எடுக்கலாமே? இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் வறுமையின் காரணமாகக் கூலியின் பொருட்டு நடு இரவில் கள்ளச்சாராயத்தைச் சுமந்து சென்று போலீஸாரிடம் மாட்டிக் கொள்ளும் வண்ணநிலவனின் சிறுகதை ஒன்று இந்தப் பகுதிகளில் நிலவும் வறுமையைச் சொல்லும்.

இந்தப் பிரதேசங்களில் நிறைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் பெரும் தொழில்கள் அதிகம் இல்லை. விவசாயத்திற்கும் அதிக வழியில்லை. அருகே இருக்கும் தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெரலைட், துறைமுகம், ஆறுமுகநேரியில் உள்ள தாரங்கதாரா கெமிக்கல்ஸ் போன்ற ஒரு சில பெரும் தொழில் நிறுவனங்களே இந்தப் பகுதியில் அமைந்துள்ளன. அதிலும் ஸ்பிக் நிறுவனம் முன்பு போல இல்லை. ஆக பள்ளிப் படிப்பை முடித்த, முடிக்காத அனைவருமே வேறு நகர்ப்புறங்கள் நோக்கியே பிழைப்பு தேடி இடம் பெயர வேண்டியுள்ளது. ஸ்டெரிலைட்டை எதிர்த்துப் போராடிய அரசியல் கட்சிகளோ, டாடா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய கட்சிகளோ அந்தப் பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து எவ்வித அக்கறையும் காண்பித்ததில்லை. இந்தப் பகுதியில் உள்ள அரிய வகை மணலைத் தோண்டி எடுப்பதற்காக டாடா நிறுவனம் முயன்ற பொழுது ஆளும் தி.மு.க கட்சி டாடாவுக்கு ஆதரவாக அவர்களுக்கென நிலத்தைக் கையகப்படுத்த முயன்றது. எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு கருத்துக் கணிப்புக் கேட்கிறோம் என்று கோமாளிக் கூத்தடித்தன. ஆனால் ஒரு கட்சி கூட இது போன்ற வறண்ட நிலப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்குவது குறித்து மட்டும் அக்கறை காட்டியது இல்லை. அந்தப் பிரச்சினையையும் இந்த சினிமா மறைமுகமாகத் தொட்டுச் செல்கிறது. எதையும் நடக்க விடாமலோ, முன்னேறாமலோ தடுப்பதில் வல்ல இக்கட்சிகள், ஆக்க வேலைகளுக்கு எந்தப் போராட்டமும் நடத்துவதில்லை.  ஏனெனில் அதில் என்ன லாபம் கிடைக்கும்?  உழைக்காமல், சுரண்டத்தானே கட்சிகள்.

இதே பகுதிகளைச் சேர்ந்த சில நாடார் சமூகப் பிரமுகர்கள் பிழைப்புத் தேடி வெளியேறி தங்களது கடின உழைப்பாலும் தங்கள் இனத்திற்கேயுரிய வியாபார முனைப்பாலும், சந்தையில் தற்செயலாகப் பொருந்திய அதிர்ஷ்டத்தினாலும் இன்று நூற்றுக்கணக்கான கோடிகள் புரளும் பெரும் நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி முளைத்த பெரும் நிறுவனங்களில் இரண்டு சென்னை ரெங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் வியாபார நிறுவனமும், சரவண பவன் ஹோட்டல்களும். இவை தவிர கோவை மதுரை போன்ற இடங்களில் சங்கிலித் தொடர் சூப்பர் மார்கெட்டுக்களைத் தொடங்கியிருக்கும் கண்ணன் ஸ்டோர்ஸ், மதுரை, நெல்லை சென்னை பகுதிகளில் பிரபலமான எவர்சில்வர் பாத்திரக் கடைகள் போன்ற இன்னும் பல மாபெரும் வியாபார நிறுவனங்களும் கூட இதே பகுதியைச் சேர்ந்த நாடார் சமூக வியாபாரிகளால் துவங்கப் பெற்றவையே. இவர்கள் தங்கள் நிறுவனத்திற்குத் தேவையான வேலையாட்களை பெரும்பாலும் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களாகவும், தங்கள் ஊர் பக்கத்திலிருந்துமே கொண்டு வருகிறார்கள். அவர்களைச் சிறு வயதிலேயே வேலைக்கு எடுத்து கடைகளில் அமர்த்துகிறார்கள். அதிலிருந்து இயல்பாகவே வியாபார முனைப்பு உள்ள பலரும் சுய வியாபாரங்களையும் தொடங்கவும் செய்கிறார்கள்.

இந்தப் படத்தில் சொல்லப் படாத, ஆனால் நாம் உணர வேண்டிய முக்கியமான ஒரு செய்தியும் உண்டு. அரசாங்கம் அளிக்கும் இட ஒதுக்கீடு என்பது இந்தச் சமுதாயத்தில் உள்ள ஏற்கனவே முன்னேறிய வகுப்பினரால் மட்டுமே தொடர்ந்து அனுபவிக்கப்படுவதும், இந்தச் சினிமாவில் வரும் லிங்கம், சேர்மக்கனி, மாரி முத்து போன்ற, மிக வறிய நிலையில் இருக்கும் குழுவினரை அடைவது இல்லை என்பதும். ஒரே ஜாதியைச் சேர்ந்த இருவகுப்பாரையும் பொருளாதார அடிப்படையில் இல்லாமல், ஒரே தகுதியுள்ளவரெனக் கருதி இட ஒதுக்கீடு வசதியை அளிப்பது ஏழை மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரசாங்கம் செய்யும் ஒரு ஏமாற்று வேலையாகும்.

அப்படித் திருநெல்வேலிக்குக் கிழக்கே திருச்செந்தூர் பகுதிகளில் இருந்து முன்பெல்லாம் இந்தியா முழுவதும் வியாபாரம் செய்யவும், பிழைப்பு தேடியும் சென்ற இளைஞர்களை இப்பொழுது தமிழ் நாட்டிற்குள்ளேயே உருவாகும் எண்ணற்ற விற்பனை வாய்ப்புகள் விழுங்கிக் கொள்கின்றன. இவை போன்ற அங்காடிகளில் தங்களை ஒப்படைத்துக் கொள்ளும் இளைஞர்கள் சிலர் ஒரு வித மாயச்சுழலில் சிக்கிச் சுற்றி வருகிறார்கள். சிலர் வெளியேறிச் சுயதொழில் துவங்குகிறார்கள். இரு தரப்பினரையுமே இந்த சினிமா அடையாளம் காண்கிறது. இதில் எடுபிடியாக வேலைக்குச் சேரும் சிறுவர்கள், சில வருடங்களுக்குப் பிறகு அடுத்தபடியாக சூப்பர்வைசராகவோ, கொள்முதல் செய்யும் பணியாளராகவோ பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்தப் பணிகள் எவையும் எந்தவிதமான நிறுவன நெறிகளுக்குட்பட்டு முறையாகக் கிட்டுவன அல்ல.  எதேச்சாதிகாரமாக நடத்தப்படும் இந்த அமைப்பில் எவருக்கு ஏன் பணி உயர்வு என்பதெல்லாம் மர்மம்தான். இவர்களுக்குக் காலப்போக்கில் கல்யாணம், பிள்ளைகள் படிப்பு போன்ற செலவுகளுக்காக வழங்கப்படும் கடன்களைத் திருப்பச் செலுத்த முடியாமல் நிரந்தரமாக எழுதப்படாத அடிமைகளாகவே தங்கள் மீத வாழ்வையும் தொடர்ந்து விடுகிறார்கள். இந்தச் சுழலில் இருந்து விடுபட்டு ஒரு சிலரே ஒரு சரவண பவன் ராஜகோபால் அண்ணாச்சியாகவோ, ஒரு செல்வரத்தினமாகவோ, ஒரு திருபாய் அம்பானியாகவோ உருவாகிறார்கள்.

பெரும்பாலான அடுக்குமாடி விற்பனை நிலையங்கள் பேராசை ஒன்றே குறியாகத் தங்கள் ஊழியர்களை மனிதாபிமானமில்லாமல் மோசமான பணிச் சூழலில் வேலை வாங்குவதாகச் சொல்கிறேன் என்பதால் அவற்றைத் தடை செய்ய வேண்டும், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இவை போன்ற, ஏதோ வேலை வாய்ப்பை உருவாக்கும், பெரும் பல்பொருள் அங்காடிகள் உருவாகக் கூடாது என்றும் கூறவில்லை. இந்தியாவில் பல்கிப் பெருகும் நுகர்வோர் கலாச்சாரமும், அதை ஈடுகட்டக் கிளம்பியிருக்கும் சங்கிலித் தொடர் விற்பனை நிலையங்களும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குகின்றன. ஆகவே நிச்சயம் நமது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வாங்கும் சக்தி அதிகரிப்பிற்கு ஏற்ப, பெருகி வரும் மக்கள் தொகைக்கு வேலைவாய்ப்பு அளிக்க இவை போன்ற நவீன விற்பனை நிலையங்களும் தனியார் நிறுவனங்களும் நமக்கு அவசியம் தேவையே. பெருவணிக நிறுவனங்கள் தங்களைச் சுய பரிசோதனை செய்து, விற்பனைத் தொழிலாளர்கள் சுயகெளரவத்தோடு வேலை செய்யமுடியும் மனிதாபிமானமுள்ள நிர்வாகத்தினை அளிக்க வேண்டும் அதற்கு இது போன்ற சினிமாக்கள் ஒரு கண் திறப்பாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

கம்னியூஸ்டுகள் ரிலையன்ஸை எதிர்ப்பது போல, நான் இது போன்ற வியாபார நிறுவனங்களை கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை. என் அச்சம் எல்லாம் இது போன்ற நிறுவனங்கள் கம்னியூஸம் போன்ற பொருளாதார வளர்ச்சிக்கு எதிரியான இயக்கங்களின் பிரச்சாரத்துக்கு உதவும் ஆயுதமாக மாறி விடக் கூடாது என்பதுதான். அது நடைபெறாமல் தடுப்பது தனியார் முதலாளிகளின் கைகளில்தான் இருக்கின்றது. நாற்பதாண்டு காலமாக மக்களை வதக்கிய அரசு மையப் பொருளாதாரத்தினால் நம் மக்கள் வாழ்வை இருட்டிய வறுமையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு பொருளாதாரத்திலும், தம் வாழ்விலும் இப்போது சிறிது வெளிச்சத்தைக் காணத் துவங்கி இருக்கிறார்கள். இந்த வளர்ச்சி ஏற்றத் தாழ்வுகளும், அநீதியான லாபக் குவிப்பும், அறம் பிறழ்ந்த சமூக நெறிகளையும் கொண்டே ஏற்பட்டிருக்கிறது. இன்னமுமே பெரிதும் வறுமை நிலவும் நாட்டில், நுகர்வுத் திறன் என்பது இன்னமும் பெருகவில்லை. வளமும் இன்னும் ஆழமடையவில்லை, பரவலாகவில்லை. ஆனால் உலகில் இப்படி ஒரு களேபரமான கட்டத்தைக் கடக்காமல் எந்தப் பொருளாதார அமைப்பும் வளநிலை பெறவில்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.  உழைப்பாளர் சொர்க்கத்தைப் படைப்பதாகப் பாவலா செய்யும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தைப் பிடித்ததும் செய்யும் முதல் வேலை தொழிலாளர் அமைப்புகளை ஒடுக்கி, எதிர்ப்பைக் காட்ட விடாமல் உற்பத்திக்கு அடிமைகளாக அவர்களை ஆக்குவதுதான் உலகெங்கும் நடந்திருக்கிறது.  ஜனநாயக அமைப்புகளில் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்சம் தம் நலன்களைப் பாதுகாக்க தொழிற்சங்கங்களாவது நடத்த முடிகிறது.  வேலை நிறுத்தம், கோரிக்கைப் போராட்டம் ஆகியனவாவது நடத்திச் சிறிது முன்னேற்றத்தை அவ்வப்போது பெற முடிகிறது.

மாவோயிஸ்டுகளும், மார்க்ஸிஸ்டுகளும் இந்தப் படத்தை ஆரவாரத்துடன் வரவேற்கும் பொழுதே, இப்படத்தை அவர்கள் ஒரு பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்ற ஐயம் உறுதியாகிறது. அண்ணாச்சியின் மனிதாபிமானம் மேலான ஒரு விமர்சனம், முதலாளித்துவத்திற்கு எதிரான பிரச்சாரமாக மாற்றப்படுகிறது. அந்த அண்ணாச்சியும் கூட கடுமையான வறுமையைக் கடந்தும், கடுமையான உழைப்பின் விளைவாகவுமே இத்தகைய ஒரு பெரும் வியாபார நிறுவனத்தை உருவாக்கி இத்தனை வேலை வாய்ப்புக்களை அளித்துள்ளார் என்ற செய்தி இந்தப் படத்தில் இலேசாகவேனும் சொல்லப் பட்டிருந்தால் அது போன்ற எதிர்மறைப் பிரச்சாரத்திற்கு இந்தப் படம் துணை சேர்த்திருக்காது. இதை விடப் பல்லாயிரம் மடங்கு கடுமையான கொத்தடிமைச் சூழல் நிலவி வரும் சீனாவை, கம்னியுஸ்டு அரசாங்கமே உழைப்பாளிகளை அடக்குமுறை செய்து மோசமான சூழலில் இருத்தி வந்த ஒரு தேசத்தை தங்கள் ஆதர்ச தேசமாகவும் பாட்டாளிகளின் சொர்க்கமாகவும் கருதும் தோழர்கள் இது போன்ற சினிமாக்களை வரவேற்பது மோசமான நகை முரண்.

எந்தவொரு வியாபார நிறுவனமுமே சிறியவையாகவும், சந்தையில் பலத்த போட்டியைச் சந்திப்பதாக இருக்கும் பொழுதும், வாடிக்கையாளர்களைச் சற்று மரியாதையுடன், சேவையிலும் தரத்திலும் சற்று அக்கறையுடன் நடந்து கொள்ளும். போட்டி இல்லாமல் போனாலோ, அல்லது நகரத்தின் முக்கியமான இடத்தில் கடை வைக்க இடம் கிட்டி நிலைத்து விட்டாலோ அல்லது நிறுவனம் கட்டுக்கடங்காமல் வளரும் பொழுதோ வாடிக்கையாளர்களைக் கேவலமாக நடத்தும் போக்கும், மண்டும் கூட்டத்திடம் அலட்சியமாக, அகம்பாவத்துடன் நடந்து கொள்ளும் போக்கும், விலைகளில் ஏமாற்றுதல், குறைந்த தரத்தில் கொடுத்தல் போன்றவையும் வளர்ந்து விடும். அதற்கு ஒட்டு மொத்த உதாரணம் சென்னையில் பூதாகரமாக வளர்ந்திருக்கும் ராட்சச ஒரு கூரைப் பலபொருள் அங்காடிகள்.

சில ஆண்டுகள் முன் வரை, இந்த வணிக நிறுவனங்கள் பற்றிய பல புகார்கள், கொலைக் குற்றசாட்டுக்கள் உட்பட, பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. பெண்களைச் சந்தேகத்தின் பேரில் உடைகளை அவிழ்த்து அவமானப் படுத்தி சோதனை செய்தார்கள் என்ற கிரிமினல் புகார்களும் இக்கடைகள் மீது எழுந்த வண்ணம் இருந்தன. அடாவடியான பேச்சு, மரியாதையின்மை, அக்கறையின்மை, அலட்சியம், உதவி செய்ய விருப்பமின்மை போன்ற பல புகார்கள் எழுந்தாலும் இக்கடைகள் அமைந்திருக்கும் இடம் காரணமாக இங்கு கூட்டம் என்றுமே நிரம்பி வழிகிறது. என் உறவினர்களும், நண்பர்களும் இந்த வணிக நிறுவனங்களில் பல கசப்பான அனுபவங்களை சந்தித்திருக்கிறார்கள். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கூட இப்படி ஒரு அலட்சிய மனப்பான்மை, மரியாதையின்மை ஏன் காலப் போக்கில் உருவாக்கியிருக்கிறது என்பதை அறிய இந்த சினிமா ஓரளவுக்கு உதவுகிறது.

பொதுவாக ரீடெயில் கடைகளில் வேலை பார்க்கும் ஆட்களுக்கு 2000 முதல் அதிக பட்சம் ஒரு சிலருக்கு மட்டும் 5000 வரை சம்பளம் இருக்கும். கடைகள் அனைத்துமே நீளமான, நெருக்கமான, அடைசலான, இருட்டான உட்புறங்களைக் கொண்டவை. ஒழுங்கான காற்றுப் போக்கும், கழிவறைகளும் இருக்காது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் ஆரோக்கியக் குறைவான பெண்கள், காலையில் தூரத்தில் உள்ள தம் இருப்பிடங்களில் இருந்து கிளம்பி, புளிமூட்டை அடைசல் பஸ்களில் நசுங்கிக் கசங்கி வந்து சேர்வார்கள். இந்த வகைக் கடைகளோ, சற்றும் காற்றோட்டம் இல்லாத புழுக்கமான இடங்களாகவும், கிட்டத்தட்ட சுண்ணாம்புக் காளவாய்கள் போல இருக்கும்.

supermarket2குளிர்பதன வசதி என்பது வாடிக்கையாளர்கள் அதிகம் வரும் சமயங்களில் இயங்கும்; அதுவும் அத்தனை கூட்டத்திற்கு போதுமானதாக இருக்காது. பிற சமயங்களில் வெறும் பெடஸ்டல் ஃபேன்கள் மட்டுமே வைக்கப் பட்டிருக்கும். மின்சாரத் தடை அதிகம் உள்ள கடும் கோடை காலங்களில் அந்த ஃபேன்களும் இயங்காது. காற்று புகாமல் அடைத்து, நூற்றுக்கணக்கான மக்கள் கூடும் பொழுது சுற்றாத தேக்கக் காற்றால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளும் நிறைந்து, பணி செய்ய உரிய சூழல் இல்லாத கடைகள் இவை. இவற்றில்தான் அந்தப் பணியாளர்கள் ஒரு நாளில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டி வருகிறது. பெரிய கடைகளில் சற்று விசாலமான இடங்கள் இருந்தாலும் கூட அளவுக்கதிகமாக கூட்டம் வரும் பொழுது அதில் பல மணி நேரம் பணியாற்றுவது என்பது மூச்சுத் திணறலான ஒரு வேலையே. இருந்தாலும் வாடிக்கையாளர்களான நமக்கு அந்தப் பணியிடம் குறித்தோ அங்கு பணிபுரிபவர் நிலை குறித்தோ எந்தவித அக்கறையும் இருப்பதில்லை. நமக்குப் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிட்டி, சற்று மலிவாக இருந்தால் போதுமானவையாக இருந்து விடுகிறது.

நாமும் நம்மை அறியாமலேயே, முதலில் சொன்ன ஜவுளி எடுக்கப் போகும் மத்திய வர்க்கப் பெண்கள் போலவே, இந்த ஊழியர்களை ஏதாவது ஒரு விதத்தில் அலட்சியமாகவும், அவமரியாதையாகவும் நடத்தியிருக்கவும் வாய்ப்பும் இருக்கிறது. நாம் படிக்கும் பத்திரிகைகளோ, நாம் காணும் சினிமாக்களோ அவர்களின் வாழ்க்கையின் யதார்த்தமான அவலங்கள் குறித்தோ சொல்ல முயன்றதும் இல்லை அதில் அவர்களுக்கு எந்தவித லாபமும் இல்லை, ஏனெனில் நாம் அத்தகைய சித்திரிப்புகளை விரும்பியிருப்போமா என்பது சந்தேகமே. நம் கண் முன் நடப்பதே நமக்குத் தோலிலோ, அறிவிலோ உறைக்கவில்லை என்னும்போது, ஊடக விரிப்பு மட்டும் என்ன செய்து விடும்? அம்மக்களின் வாழ்க்கை புனைகதையாக, நாடகத் தன்மையோடு தொகுக்கப்பட்டு, அவலச் சுவையும், அங்கதமும், கேளிக்கையும், ரொமான்சுமாகப் பல  நூறுதடவைகள் நம்முன் இத்தனை வருடங்களில் சித்திரிக்கப்பட்டிருந்தால் ஒருவேளை நாம் கவனிக்க முற்பட்டிருப்போமோ என்பது யோசிக்கத்தக்கது. தமிழர் சிந்தனையே நாடகத்தனம் இல்லாவிடில் தூண்டப்படுவதில்லை. எதார்த்தம் உறைக்காத பிறவிகள் நாம்.

எப்பொழுதாவது ஒரு ஜெயகாந்தனும், ஒரு நாஞ்சில் நாடனும், ஒரு திலீப் குமாரும் இந்த முறைசாரா ஊழியர்களின் அல்லல்கள் பற்றி எழுதியதைப் படிக்க வாய்க்கும் சிலரை விட்டால், இந்த இவர்களின் அவலமான வாழ்க்கைச்சூழல் பெருவாரியினரின் மனசாட்சியை உலுக்கியதே இல்லை எனலாம். இத் தொழிலாளர்களைப் பற்றிய அக்கறையுடன் மேற்சொன்ன நாடகத் தன்மைகளைக் கலந்து ‘அங்காடித் தெரு’ சொல்வதினாலேயே இது மற்ற திரைப்படங்களில் இருந்து தனித்துத் தெரிகிறது.

இதைப் பார்க்கையில் நமக்குத் தோன்றும் முதற்கேள்வி, இவ்வளவு எளிதாகக் காணக் கிடைக்கும் ஒரு பெரும் சோக நாடகத்தை ஒரு திரைப்படமாக்கத் தமிழ் சினிமாவுக்கு ஏன் இத்தனை வருடங்கள் ஆயின என்பதுதான். இப்போதுமே நம் மக்கள் இத்தகைய சினிமாவைப் பார்த்து முழு ஈடுபாட்டுடன் அதைக் கவனிப்பார்களா என்பது குறித்தும் எனக்கு ஐயம் உண்டு. எனவே, இந்த நிகழ்வு குறிஞ்சிப்பூவாக இருக்குமா, அல்லது நித்திய மல்லியாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

—ooOOOoo—

அடுத்த முறை ஒரு பெரும் வணிக வளாகத்தில் கால் கடுக்க நின்று பணிபுரியும் ஒரு ஊழியரிடம், அவருடைய வேதனைகளை நம்மால் தீர்க்க முடியாமல் போனாலும் கூட, உம் பிரச்சினைகளை, உம் வேதனைகளை நானும் அறிவேன் நண்பரே என்பதாக நட்புடன் புன்னகைத்து, சிறிதேனும் மனிதாபிமானம் கலந்த அக்கறையையும் அன்பையும் புரிதலையும் காட்டுவோம் என்ற தூண்டுதலை பொதுமக்களிடமும்,  அதை விட முக்கியமாக தம் ஊழியர்களின் வாழ்வில் நலத்தை தம்மால் முடிகிறவரை கூட்டுவோம் என்று கருதத் துவங்கும்  மன மாற்றத்தை வியாபார முதலாளிகளிடமும் இப்படம்  ஏற்படுத்தினால் அதுவே ஒரு சாதனையாகவே இருக்கும்.