அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டங்களைப் (American Civil War) பற்றி பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கலாம். “மார்ட்டின் லூதர் கிங்” என்றவுடன் இன்னும் சட்டென்று நினைவுக்கு வரும் போராட்டங்கள் இவை. 1955-ஆம் ஆண்டிலிருந்து 1968-ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்க-அமெரிக்கக் குடிமக்கள் நடத்திய இப்போராட்டங்கள், சமுதாய அங்கீகாரம், வாக்களிக்கும் உரிமை இவற்றை முன்வைத்து நடைபெற்றன. 1800-களில் பல ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்கு பிடித்து வரப்பட்டனர். சுரங்க வேலைகள், கடுமையான உடல்வலு தேவைப்படும் வேலைகளுக்கு இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் அமெரிக்காவின் தெற்குப்பகுதி மாகாணங்களில் அடிமை வாணிபம் சட்டப்பூர்வமான ஒன்றாகக் கூட இருந்தது.
1865-இல் ஏற்பட்ட பிரிவினைப் போருக்குப்பின் கருப்பின மக்களையும் சமமாக நடத்த வேண்டும் எனச் சில சட்டத்திருத்தங்கள் அரைமனதாகக் கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த சட்டத்திருத்தங்களில் விஷமத்தனமாகப் பல இணைப்புகளும், திருத்தங்களும் செய்யப்பட்டன. கருப்பின மக்களுக்குக் கல்வியையும், சுகாதாரத்தையும் தருகிறோம் என்று அவர்களுக்கென்று தனியாகப் பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டப்பட்டன. கருப்பின மக்கள் இந்த ‘சிறப்பு’ வசதிகளைத் தவிர வேறெதையும் பயன்படுத்த முடியாது. பொதுக்கழிப்பறை கூட அவர்களுக்கென்று தனியாகக் கட்டப்பட்டது. கருப்பின மக்களுக்கென்று ஓட்டுரிமை தரப்பட்டாலும், அதில் செய்யப்பட்ட பல திருத்தங்கள் அவர்களிடமிருந்த ஓட்டுரிமையைப் பறித்தது.
Gerrymandering என்று சொல்லப்படும் ஒருவகை தேர்தல் மோசடி 1812 இலிருந்தே அமெரிக்காவில் இருந்து வந்தது. அது முதலில் வெள்ளையரிடையே, மாநில சுயாட்சி வேண்டுவோருக்கும், மத்திய அரசின் வலுவைக் கூட்ட விரும்புவோருக்குமிடையே உள்ள அதிகாரப் போட்டியைச் சமாளிக்க உருவான ஒரு உத்தி. ஆனால் பிற்பாடு கருப்பர்களுக்கு வாக்குரிமை எல்லாம் கிட்டி, பெயரளவுக்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டபோது, அவர்கள் தவறியும் அரசு அதிகாரங்களில் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக இந்த ஜெர்ரிமாண்டரிங் முறை பயன்படுத்தப்பட்டது. ஜெர்ரிமாண்டரிங் என்பதன்படி, ஒரு சமூகக் குழுவினர் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளை உடைத்து அதில் பகுதிகளை நிலப்பரப்பால் எந்தத் தொடர்பும் இல்லை என்றால் கூட வேறு பகுதிகளோடு இணைத்து விடுவார்கள். கருப்பர்கள் வாழும் பகுதிகளை இப்படி சில்லு சில்லாகப் பிரித்து பல வெள்ளையர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இணைத்துவிடுவார்கள். இதனால் கருப்பின மக்களின் அதிகாரம் பரவலாகத் தகர்த்தெறியப்படும்.
இந்த விஷமத்தனமான திருத்தங்கள், வெள்ளை உயர் மனப்பான்மை இவற்றுக்கு எதிராக 1900-களின் ஆரம்பத்திலிருந்தே புகைச்சல்கள் இருந்தாலும், 1955-ஆம் ஆண்டு இப்போராட்டங்கள் ஒருங்கிணைப்பட்டுத் தீவிரமடைந்தன. அடுத்த பதிமூன்று வருடங்கள் நடந்த இப்போராட்டங்கள், ‘அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டங்கள்’ என்றறியப்படுகின்றன. இப்போராட்டத்தின் முகமாக அறியப்படுபவர் மார்ட்டின் லூதர் கிங். மால்கம் எக்ஸ் (Malcolm X), ரோஸா பார்க்ஸ் (Rosa Parks) போன்றவர்கள் பிரபலமாக வெளியில் அறியப்பட்ட தலைவர்கள்.
ஆனால் இதே போராட்டத்தில் வேறு விதமாகப் பங்களித்த, ஆனால் வெளியில் பிரபலமாக அறியப்படாத இன்னொருவரும் இருக்கிறார். அவர் சென்ற மாதம் (மார்ச் 11, 2010) மறைந்த சார்லஸ் மூர் (Charles Moore) என்ற புகைப்படக்கலைஞர். சார்லஸ் மூர் வேண்டுமானால் வெளியில் அறியப்படாதவராக இருக்கலாம். ஆனால் அவர் எடுத்த புகைப்படங்கள் அமெரிக்க சிவில் போராட்டங்களின் மாபெரும் ஆவணங்களாக விளங்குபவை. போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே உலகின் பல பகுதிகளிலும், பல பத்திரிகைகளிலும் வெளியாகி, கருப்பின மக்களின் அவல வாழ்வை உலகுக்குச் சொன்னவை.
2005-ஆம் வருடம் நான் அயர்லாந்திலிருந்தபோது, அமெரிக்க சிவில் போராட்டங்களின் 50-ஆம் வருட நினைவை முன்னிட்டு, உள்ளூர் நாளிதழ் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அந்த சிறப்புமலரிலிருந்த புகைப்படங்கள் அனைத்தும் சார்லஸ் மூர் எடுத்தவை. ஒரு சுவரைப் பிடித்தபடி ஒண்டியிருக்கும் மூன்று கருப்பின இளைஞர்கள் மீது போலிஸ் அதிவேகமாக நீரைப் பாய்ச்சியடிப்பதைப் பதிவு செய்த கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்று என்னை வெகுவாக பாதித்தது. முதுகைத் துளைத்துப் போகும் ஒரு நீள இரும்புக்கம்பியைப் போல, அந்த நீர்ப்பாய்ச்சல் வெகு தெளிவாகப் பதிவாகியிருந்தது. ஓரளவே புகைப்படத்தில் தெரியும் முகங்களும் அந்த வலியைத் தெளிவாகப் பதிவு செய்திருந்தன.
கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் முக உணர்ச்சிகளைத் தெளிவாகக் கொணர்பவை. பல வண்ணச் சேர்க்கைகளும், தொழில்நுட்பத் திருத்தங்களும் சாத்தியமாகும் இந்த டிஜிட்டல் காலத்தில் கூட, கருப்பு-வெள்ளையில் மட்டுமே புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். எந்த ஒரு ஆரம்பநிலை ஆர்வலரையும் போல, என் கவனமும் பெருமளவில் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மீது அப்போது இருந்தது. அந்த ஆர்வம் இயல்பாகவே என்னை சார்லஸ் மூர் எடுத்த அமெரிக்க சிவில் போராட்டப் புகைப்படங்கள் பக்கம் இழுத்துச் சென்றது.
1931-ஆம் ஆண்டு அலபாமாவில் வெள்ளை இனத்தில் பிறந்த சார்லஸ் மூர், பள்ளிப்படிப்பை முடித்தபின் மூன்று வருடங்கள் அமெரிக்கக் கடற்படையில் வேலை பார்த்தார். அதன்பின் முறையாகக் கல்லூரியில் புகைப்படக்கலையைப் பயின்ற இவர், சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக புகைப்பட இதழியல் (photo journalism) துறைக்கு வந்ததாகக் கூறுகிறார். கருப்பின எழுச்சியின் கொதிமையமாக இருந்த மாண்டகோமரியில் (Montgomery) சார்லஸ் மூரின் நண்பர் செய்தித்தாள் நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த செய்தித்தாளில் பணியாற்றிப் பல போராட்டங்களைத் தன் புகைப்படங்களில் பதிவு செய்தார் சார்லஸ் மூர்.
சார்லஸ் மூரின் நிறுவனத்துக்கு வெகு அருகிலிருந்த சர்ச்சில்தான் மார்ட்டின் லூதர் கிங்கும் பணியாற்றி வந்தார். ஒருநாள் புகைப்படமெடுப்பதற்காக அந்த சர்ச்சுக்குச் சென்றபோது லூதர் கிங்கின் பேச்சை சார்லஸ் மூர் கேட்க நேர்ந்தது. “அவர் குரல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவர் பேச்சில் ஒரு மாபெரும் உத்வேகம் இருந்தது. ஒரு தலைவராவதற்கான எல்லா தகுதிகளும் அவரிடம் இருந்ததை நான் கண்டேன். அவர் சாதாரணமாக சர்ச்சில் வேலை செய்யக்கூடியவர் இல்லை, ஒரு மாபெரும் மக்கள் தலைவராகப் போகிறார் என்பதைக் கண்டுகொண்டேன். நான் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கையை லூதர் கிங்கின் பேச்சு எனக்குத் தந்தது. என் சிறுவயதிலிருந்தே நிறத்தின் காரணமாகவோ, இனத்தின் காரணமாகவோ இன்னொருவரைத் தாழ்வாகப் பார்க்கக் கூடாது என என் தந்தை எனக்கு சொல்லித் தந்திருந்தார். அந்த வார்த்தைகளின் உண்மையை நான் மார்ட்டின் லூதர் கிங்கின் பேச்சில் கேட்டேன்” என்று சொல்கிறார் சார்லஸ் மூர்.
அதன்பின் பலமுறை மார்ட்டின் லூதர் கிங்கைப் படம்பிடித்திருக்கிறார் சார்லஸ் மூர். ஆனால் அவற்றில் மிகவும் புகழ்பெற்ற புகைப்படம் ஒன்று இருக்கிறது. ஒரு காவல்நிலையத்தில் மார்ட்டின் லூதர் கிங்கை காவலர்கள், மோசமாகக் கையாண்டு சிறைக்குள் தள்ளுவதைப் பதிவு செய்த படம் அது. அப்போது மார்ட்டின் லூதர் கிங் புகழ்பெற்றிருந்தபடியால், அமெரிக்காவெங்கும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது இப்புகைப்படம்.

இப்புகைப்படமும், நான் முன்னர் குறிப்பிட்ட நீர்ப்பாய்ச்சல் புகைப்படமும் வெகுவாகக் கவனிக்கப்பட்டன. அதன்பின் சார்லஸ் மூரின் புகைப்படங்களுக்கென்று தனி கவனம் ஏற்பட்டது. நீர்ப்பாய்ச்சல் புகைப்படம், சென்ற நூற்றாண்டின் சிறந்த நூறு புகைப்படங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டது. “அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது எதிர்கால சந்ததியினர் இப்படிப்பட்ட துன்பம் சூழ்ந்த சூழ்நிலையில் வளரத் தேவையில்லை என்ற ஆசுவாசம் ஏற்படுகிறது” என்கிறார் சார்லஸ் மூர். அப்புகைப்படத்திலிருக்கும் பெண் கேரோலின் மக்கின்ஸ்ட்ரியும் (Carolyn McKinstry), சார்லஸ் மூரும் பிற்காலத்தில் நண்பர்களானார்கள்.
சார்லஸ் மூரின் பெரும்பலம் அவர் ஏற்படுத்திக்கொண்ட நட்புவட்டமாக இருந்தது. துயரத்திலிருந்த பல கருப்பின மக்களை அவருக்கு நேரடியாகவே தெரிந்திருந்தது. அந்த நட்பு வெறும் தொழில் சார்ந்ததாக இல்லாமல், உண்மையான உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்தது. சார்லஸ் மூர், தன்னுடைய நண்பர் இதழாளர் மைக்கேல் துர்ராமுடன் (Michael Durham) இணைந்து, சர்ச்சுகளிலும், காவல் தடுப்புகளிலும் ஒளிந்திருந்து பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.
தெருவில் கோஷமிட்டபடிச் சென்ற போராளிகள் மீது காவலர்கள் நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைப்பது, இரண்டு வெள்ளை இன ஆட்கள் கருப்பினப் பெண்களை உருட்டுக்கட்டையால் தலையில் அடிப்பது போன்ற புகைப்படங்கள் பலத்த அபாயங்களுக்கு நடுவே எடுக்கப்பட்டவை. சில வெள்ளை இன அதிகாரிகள், தங்கள் கல்லூரியில் சேரவிருக்கும் முதல் கருப்பு மாணவரை எப்படித் தாக்குவது என்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்திருந்து எடுத்த புகைப்படமும் பிரபலமான ஒன்று. தொடர்ந்த போராட்டங்கள் காரணமாக 1968-ஆம் ஆண்டு, கருப்பின மக்களுக்கும் நியாயமான ஓட்டுரிமை கிடைத்தது. சார்லஸ் மூர் எடுத்த அமெரிக்க சிவில் போர் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு “Powerful Days” என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.

அமெரிக்காவுக்குள் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்களுக்கு அவர்கள் எங்கே கொண்டுவரப்பட்டார்கள், எதற்காகக் கொண்டுவரப்பட்டார்கள் என்ற எந்த விபரமும் தெரியாது. அவர்கள் அடிமைகளாக ஒரு வியாபாரியிடம் விற்கப்பட்டவர்கள். தங்கள் குடும்பங்கள், இசை, கலை – என எல்லாவற்றிலிருந்தும் பிரித்து எடுக்கப்பட்டு இன்னோர் இடத்தில் நடப்பட்டவர்கள். அச்சூழலிலிருந்து அவர்கள் மீண்டு, தங்களுக்கான சுயமரியாதையையும், கெளரவத்தையும் மீட்டுக்கொண்ட மாபெரும் வரலாறு சென்ற நூற்றாண்டில் நடந்திருக்கிறது.
அதிகாரமும், பணபலமும் இன்னும் ஏதோ ஒரு ரூபத்தில் எல்லா நூற்றாண்டுகளிலும் எளிய மக்களைத் துன்புறுத்தியபடியேதான் இருக்கிறது. இன்றுமே ஜெர்ரிமாண்டரிங் முறை அமெரிக்காவிலிருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை. கருப்பர்கள் வாழும் பகுதிகள் பிரிக்கப்பட்டு குடியரசுக் கட்சியினர் அதிகம் வாழும் பகுதிகளோடு இணைக்கப்பட்டுவிடுகின்றன.
குடியரசுக் கட்சியில் பெரும்பான்மையினர் வெள்ளை மேலாதிக்கம் வேண்டும் மனோபாவம் கொண்ட ‘பெருமக்கள்’. ஆனால் அந்தப் பெரும்பான்மையினரும் பொருளாதாரத்தில் அடிநிலையில் இருக்கும் வெள்ளையர்கள். அக்கட்சியில் தலைமை வகிக்கும் வெள்ளையருக்கும் இவர்களுக்கும் பொருளாதார, பண்பாட்டு ரீதியில் குறைவான ஒற்றுமையே உண்டு. இந்தத் தொகுதி உடைப்பால் பல பத்தாண்டுகள் கருப்பின, ஹிஸ்பானிய இனத்து மக்கள் நாடாளுமன்றம், பாராளுமன்றம் ஆகியவற்றில் தம் குழு சார்ந்த பிரதிநிதிகளை நிறுத்தி வெற்றி பெற முடியாதிருந்தார்கள். ஆனாலும், சமீபகாலங்களில் இந்தத் தொகுதி உடைப்பு முறையைப் பயன்படுத்தி கருப்பர், ஹிஸ்பானிய இனத்து மக்கள் குழுவினருக்குச் சாதகமான தொகுதிகளை உருவாக்கவும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இப்போது வெள்ளையர் நடுவேயும் ஜெர்ரிமாண்டரிங் முறையை ஒழிக்க வேண்டும் என்று பேச்சு எழத் துவங்கி உள்ளது.
அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் பணமும், மத வெறியும், நிறம், இனம் சார்ந்த உயர் மனப்பான்மையும் எளிய மக்களை கைப்பொம்மைகளாக்கி தொடர்ந்து விளையாடியபடியேதான் இருக்கும். சார்லஸ் மூர் பதிவு செய்திருப்பவை நூலை மீற முயற்சித்த சில பொம்மைகளின் நிழல்கள். அமெரிக்கக் குடியுரிமைப் போருக்குப்பின் சார்லஸ் மூர், வியட்நாம் போர், வெனிசூலா – ஹைட்டி கலவரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தார். மார்ச் 11, 2010 அன்று தன்னுடைய 79-ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார்.
“நான் என் புகைப்படங்களை எனக்குப் பின்னால் விட்டுச் செல்கிறேன். என் மறைவுக்குப் பின்னால் அவை பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கும்படி செய்யவேண்டும். முக்கியமாகப் பள்ளிகளுக்கு. பள்ளிக்குழந்தைகள்தான் நம் எதிர்காலம். சிறுவயதிலிருந்தே நாம் செய்த மாபெரும் பிழைகளை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். அப்பிழைகள் இனி எப்போதும் நிகழக்கூடாது.” – என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் சார்லஸ் மூர்.
அமெரிக்கக் குடியுரிமைப் போரின் பல முக்கியமான தருணங்களைப் பதிவு செய்த இவரின் ஒரேயொரு கலங்கலான உருவப்படத்தைத் தவிர, வேறெதுவும் அச்சு ஊடகத்திலோ, இணையத்திலோ பரவலாகக் கிடைப்பதில்லை என்பது இன்னொரு வரலாற்று முரண்நகை. (அந்த உருவப்படத்தை கட்டுரையின் ஆரம்பத்தில் பார்க்கலாம்).
குறிப்புகள்:
1) சார்லஸ் மூர் எடுத்த பிற புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்:
http://news.bbc.co.uk/2/hi/in_pictures/8569716.stm
2) சார்லஸ் மூர் குறித்ததொரு ஆவணப்படம்:
http://video.google.com/videoplay?docid=-4242786686933713169#