சிறு பிள்ளைக் குறும்பு

ted-hughes-001பிரிட்டிஷ் கவிஞர்களில் 20 நூற்றாண்டில் குறிப்பிடத் தக்க ஒரு கவிஞர் டெட் ஹ்யூஸ்.

இவருடைய முன்னாள் மனைவி சில்வியா ப்ளாத், இவருடன் பிணங்கி மண முறிவு செய்து சில வருடங்களில் பெரும் புகழ் எய்தியதோடு அல்லாமல், தம் மண வாழ்வின் துன்பங்களுக்கு டெட் ஹ்யூஸைக் காரணமாகச் சுட்டியது இவருடைய மேலெழுச்சிக்கு நிறைய தடையாயிற்று.  ஆனாலும் சில்வியா ப்ளாத்தின் கவிதையின் உக்கிரத்துக்கு ஹ்யூஸும் ஓரளவு தீனி போட்டு வளர்த்தார் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.  பிரிந்து போன ப்ளாத் தனி வாழ்வில் மன அழுத்தம் தாங்காமல், தற்கொலை செய்து கொண்டதும் மறுபடி ஹ்யூஸ் சில காலம் நிழலில் பதுங்கி இருக்க நேர்ந்தது.

இறுதியில் இவரது கவிதைகள் மறுபடி வெளிச்சமாகி, இங்கிலாந்தின் தேசியக் கவிஞராக ஒரு வருடம் இருந்தார்.  1930 இலிருந்து 1998 வரை வாழ்ந்த ஹ்யூஸ் இரண்டாம் உலக யுத்தம், 50-70களில் இங்கிலாந்தின் வீழ்ச்சி, பின் ஒரு தற்காலிக எழுச்சி, மறுபடி அதன் சரிவின் துவக்கம் என்ற நான்கு பெரும் வரலாற்று நிகழ்வுகளூடே வாழ்ந்தவர்.  இறக்கும் வருடங்களில் இங்கிலிஷ் புனைவிலக்கியம் பெருமளவும், மேற்கில் குடியேறிய பிற நாகரிக, நாட்டு மக்களின் கையில் போயிருந்ததைப் பார்த்தவர்.  ஆனாலும் இன்னும் இங்கிலிஷ் கவிதை என்ற ஒரு இடம் அனேகமாக இங்கிலீஷைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடமோ, அல்லது ஐரிஷ், அமெரிக்கர், கனடியர் போன்ற இதர, ஆங்கில நாகரிகம் பரவிய மேற்கு நாட்டினரிடமோதான் இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.

டெட் ஹ்யூஸின் கவிதை நூல்களில், ’மழையில் பருந்து’(The Hawk in the Rain), மூர் நகரம் (Moortown), ஆறு(River) ஆகியன முக்கியமானவை. ஹ்யூஸின் கவிதையில் இயற்கை பெரும்பங்கு வகிக்கிறது.  மிருகங்கள், பறவைகள் ஒரே நேரம் குறியீடுகளாகவும், தம்மளவிலும், வாழ்வியக்கத்தில் அசாதாரணங்களைத் தம் சாதாரண இயக்கத்தின் வழியே நம் அறிதலில் நுழைப்பவைகளாகவும், மரபுகளைப் பார்த்து ஏளனம் செய்யவோ, அல்லது குறும்பாகப் பார்க்கவோ உதவுபவையாகவும் வலம் வருகின்றன.

எனக்குப் (மொழிபெயர்ப்பாளர்) பிடித்த பறவையான காகத்தை இவர் நிறைய பாடி இருக்கிறார். தான், தன் இளமையில், மிருகங்களை வேட்டையாடியதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடும் ஹ்யூஸ், ஒரு பேட்டியில், அந்த அனுபவங்கள் தம்மை மாற்றி மிருகங்கள் மீது அபிமானம் உள்ளவராகத் தன்னை ஆக்கியதைக் குறிப்பிடுகிறார்.  அதன் பிறகு உயிர்ப்புடன் உள்ள மிருகங்களை மையமாக்கிக் கவிதை எழுதத் துவங்கியதாகச் சொல்கிறார். மிருகங்களையும், இயறகையையும் இவர் பெருமளவு மையப்படுத்தி எழுதியதற்காக ஓரங்கட்டப்பட்டும், உயர்த்திப் பிடிக்கப்பட்டும் இருந்திருக்கிறார்.  அவர் போக்கில் தான் எழுதுவதை எழுதிக் கொண்டே இருந்ததில் இறுதியில் ஒரு சமன நிலை இவரைக் குறித்து எழுந்திருக்கிறது.  மிருகங்களின் சாரத்தைக் கைப்பற்ற முயன்றதாக இவரே சொல்கிறார்.

சாரம் என்று ஏதும் இல்லை என்னும் சென்ற சில பத்தாண்டுகளில் கோலோச்சிய இலக்கிய, சமூகவியல், அரசியலியல் கருத்தியலான, நவீனக் கடப்பு வாதம் இவ்ரை வெறுத்ததா என்று தெரியவில்லை.  வேறு காரணங்களுக்காகவேனும் இவரை அவர்கள் வெறுத்திருக்கக் கூடும்.  எழுத்தை மையமாகக் கொண்ட ஒரு கருத்தியலுக்கு மிருகங்களின் அடங்காத, விமர்சனத்துக்குட்படாத இயற்கைத் தன்மை வெறுப்பு ஏற்றவே செய்யும் என்பதால் இதைச் சொன்னேன்.

சாராம்சமாகச் சொன்னால், மனிதனும் இயற்கையும் கொண்ட உறவில் மனிதன் எப்படித் தொடர்ந்து மிருகங்களிடம் இருந்து விலகி நின்று தத்தளிக்கிறான் என்பதை ஒரு இருப்புச் சிக்கலாக ஹ்யூஸ் திரும்பத் திரும்பச் சித்திரிக்கிறார் என்றும், மானுடரிடம் ஆழ்ந்த உள்ளுணர்வு சார்ந்த ஒரு இயக்கம் உள்ளது அதை அவர்கள் வலுக்கட்டாயமாகத் துணிக்க, சிறைப்படுத்த முயன்று தோற்கிறார்கள் எனவும் ஹ்யூஸ் சொல்கிறார் என்றும் பலவிதமாக விமர்சகர்கள் இவர் கவிதைகளை வருணிக்கிறார்கள்.

___________000________________000___________________

சிறு பிள்ளைக் குறும்பு

ஆன்மா ஊறாத உடலங்களாய்க் கிடந்தனர் ஆணும், பெண்ணும்.
மந்தமாய் வாய்பிளந்து, முட்டாள் விழிப்போடு, ஜடங்களாய்
ஏடனின் பூக்கள் மீதுபரமபிதா யோசித்துக் கொண்டிருந்தார்.

பெரும்சுமைப் பிரச்சினை, இழுத்துப் போட்டது உறக்கத்துள் அவரை.

காகம் சிரித்தது.
கடவுளின் ஒரே மகனை, அப்புழுவைக் கடித்து
நெளியும் இரு துண்டுகளாக்கியது.வால்பாதியை ஆணுக்குள் திணித்தது,
காயப்பட்ட முனையை வெளியே தொங்க விட்டு.

தலைப் பாதியை, தலையை முன்னே விட்டுப் பெண்ணுக்குள் திணித்தது.
புழு ஆழமாய், மேல் நோக்கி நகர்ந்து போயிற்று
அவள் கண்கள் வழியே வெளியைப் பார்க்க.

தன் வால்பாதியை விளித்தது, சீக்கிரம்,      சீக்கிரம் வந்து சேர்,
ஏனெனில் ஓ, எவ்வளவு வலிக்கிறது.

ஆண் விழித்தான் புல் மீது இழுக்கப்படுகையில்.
பெண் விழித்தாள் அவன் வருவதைப் பார்த்தபடியே.
ஏதாயிற்றென இருவரும் அறியார்.

பரமபிதா தூங்கிக் கொண்டேயிருந்தார்.

காகம் சிரித்துக் கொண்டே இருந்தது.

***                    ***                  ***

முழு நிலாவும், சிறு பெண் ஃப்ரீடாவும்

குளிர்ந்த ஒரு சிறு மாலை சுருங்கியதொரு நாயின் குரைப்பாய்,
ஒரு வாளியின் டங்குடங்காய்-

கேட்டபடி நீயும்.

பனித்திவலையின் தொடுகைக்கு, விறைப்புடன் காக்கும் ஒரு சிலந்திவலை.
உயர்த்தப்பட்ட வாளி, விளிம்பு தொட்டு நிரம்பி அசையாமல்- கண்ணாடியாய்
ஒரு முதல் நட்சத்திரத்தை மயக்கிப் பூகம்பமாக்க.

தூரச் சந்தில் வீடு திரும்பும் பசுக்கள், வேலிச் செடிகளுக்குச் சுடுமூச்சு
வளைய மாலைகள் போட்டு-
இருண்டதோர் ரத்த ஆறு, பாறைகள் பல,
பாலை  சிந்தாமல சமன் செய்து.

‘நிலா!’ நீ கூவுகிறாய் திடீரென, ‘நிலா! நிலா!’

நிலவோ பின்னெட்டி நிற்கிறது, வியப்பில் ஒரு ஓவியன் பார்ப்பது போல
தன் படைப்பு

ஆச்சரியப்பட்டுத் தன்னைச் சுட்டுவதை.

***                    ***                  ***

காகம் முன்னை விடக் கருப்பாய்

பரமபிதா, மனிதன் மீது அருவருப்பெழ,tanzanian-crows
பரமண்டலத்தை நோக்கித் திரும்பினார்,
ஆணோ, பரமபிதா மீது வெறுப்பு கொண்டு,
ஏவாளை நோக்கித் திரும்பினான்,
எல்லாம் உடைந்து சிதிலமாவது போலிருந்தது.

ஆனால் காகம் …                              காகம்
காகம் ..               எல்லாவற்றையும் இழுத்துப் பிடித்தது,
பரமண்டலத்தையும் பூமியையும் ஆணியடித்து இணைத்தது.

எனவே மனிதன் இரைந்தான், ஆனால் பரமபிதாவின் குரலில்.
ப்ரமபிதாவும் ரத்தம் சிந்தினார், ஆனால் மனிதனின் ரத்தமாய்.

பிறகு பரமண்டலமும் பூமியும் கிறீச்சிட்டன இணைப்பிடங்களில்
அங்கேயோ எல்லாம் அழுகிப் புரையோடி நாறியது-
மீட்டெடுப்பால் கூடக் காக்க முடியாத பயங்கரமாய்.

வேதனையோ குறையவில்லை.
மனிதனால் மனிதனாயிருக்க முடியவில்லை, பரமபிதாவால்
பரமபிதாவாயிருக்க முடியவில்லை.

வேதனை

பெருகியது.

காகம்

இளித்தது.

உரத்துக் கரைந்தது: ”இது என் படைப்பு,”

வெற்றிக் கருங்கொடியாய்த்  தானே  பறந்தபடி.

***                    ***                  ***

நீர் எப்படி விளையாட ஆரம்பித்தது

நீர் வாழ விரும்பியது
சூரியனிடம் போயிற்று திரும்பியது அழுதபடி
நீர் வாழ விரும்பியது
மரங்களிடம் போயிற்று அவை எரிந்தன அது திரும்பியது அழுதபடி
அவை உளுத்தன அது அழுது திரும்பியது
நீர் வாழ விரும்பியது
பூக்களிடம் போயிற்று அவை வதங்கின அது அழுதபடி
திரும்பியது
அது வாழ விரும்பியது
அது கருப்பையிடம் போயிற்று குருதியைக் கண்டது
அது அழுதபடி திரும்பியது
அது கருப்பையிடம் போயிற்று கத்தியைச் சந்தித்தது
அது அழுதபடி திரும்பியது

அது கருப்பையிடம் போயிற்று புழுக்களையும், அழுகலையும் பார்த்தது
அழுதபடி திரும்பியது தான் சாக விரும்பியது

காலத்திடம் போயிற்று கற்கதவு வழியே போயிற்று
அழுதபடி திரும்பியது
சூனியத்தைத் தேடி எல்லா வெளியிலும் போயிற்று
அழுதபடி திரும்பியது அது சாக விரும்பியது

அழ இனித் தன்னிடம் ஏதும் இல்லை என்றாகும்வரை

எல்லாவற்றுக்கும் அடியில் அது கிடந்தது

முற்றிலும் களைத்துப் போய் முழுத் தெளிவாய்.