திருமதி எஞ்சோகுவும், அவளுடைய மகளும் எதிர் எதிரே மேஜை முன் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டு இருந்தனர். தேநீர் அருந்தும் அந்நேரத்தில் மட்டுமே மனதில் காழ்ப்பு, கசப்பு இல்லாமல் இருவரும் நெருக்கமாக இருப்பது வழக்கம்.
சாதாரணமாக அவர்களுக்குள் ஒத்துக்கெள்வது இல்லைதான். விக்டோரியா தீவில் புதியதாகத் தொடங்கப்பட்டு இருக்கும் அலங்காரக்கடைக்கு இருவரும் செல்லலாம் என்றோ, முக அலங்காரம் செய்துகொள்ள டிட்டியின் இடத்துக்குப் போகலாம் என்றோ தாய் எஞ்சோகு சொன்னால். ‘நீ ஒரு தேர்ந்த கொழுப்பு ஏறிய பண்ணையார் கூட்டத்துப் பெண்,’ என்று சோஷீனை அடிக்கடி சொல்வது உண்டு. அது மட்டும் அல்ல. நைஜீரியா பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் போது, தேர்ந்த நடனக்காரியப் போல தாய் ஆட்டம் போடுபவள் என்றும் மகள் வசை பொழிவாள். ஏதோ தான் மட்டும் விரல் நகங்களைச் சீராக்கும் பணியை அந்த நேரத்தில் விட்டுவிட்டு, நாட்டு நலன்களுக்காக நேரத்தைச் செலவிடுபவள் போல சோஷீனை பேசுபவள். லாகோஸ் நகரில் வாழும் அவர்கள் ஒருசமயம் மனம் ஒன்றி இணைந்துதான் இருந்தார்கள். கல்லூரி மேற்படிப்புக்காக சோஷீனை அமெரிக்கா சென்று வந்தபிறகு இப்போது இப்படி வெகுவாக மாறிவிட்டாள்.
அதே சமயம் இந்த தேநீர் அருந்தும் நேரம் மட்டும் விதிவிலக்கு. மனத்தாங்கலுக்கு அதிகம் இடம் இருக்காது. இருந்தாலும், சோஷீனுக்கு தேநீர் சம்பந்தமாகக் கறந்த பால் கூடாது. அமெரிக்காவிலிருந்து அவள் திரும்பி வந்ததும், அந்த வாரத்துக்கான கறந்த பால் அட்டைப் பெட்டிகளை ஆசை ஆசையாகத் தாய் எஞ்சோகு வாங்கி வைத்திருந்தாள். தரமான கறந்த பாலை மகள் வெகுவாக விரும்புவாள் என்பதான எண்ணம். சாதாரணமாக எப்போதும் பவுடர் பாலைத்தான் அவர்கள் உபயோகிப்பது வழக்கம். ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்ததும், கறந்த பால் வேண்டாம் என்று சோஷீனை ஒதுக்கிவிட்டாள். ஷாப் ரைட் என்ற கடையில் வாங்கிய இறக்குமதியான பால் அது என்றும், அப்படிக் கறந்த பால் ஒன்று இருப்பதையே அறியாத நைஜீரிய மக்கள் இடையே இருந்துகொண்டு அந்தப் பாலைப் பயன்படுத்துவது தகாது என்றும் கூறினாள். உள்ளூர் டப்பா பாலே தனக்குப் போதும் என்றும் சொன்னாள்.
மகளுடைய இந்த பேச்சைக் கேட்டுத் தாய் தன் வருத்தத்தை வெளியே காட்டாமல், ‘அப்படி இல்லையடீ, பெண்ணே! உள்ளூர் டப்பா பால் என நீ நினைத்து இருப்பதும், இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடரிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான். நைஜீரியத் தண்ணீர் மட்டுமே பவுடருடன் சேர்க்கப்பட்டு உள்ளது. அவ்வளவுதான்’ என்றாள்.
தாயின் பேச்சைக் கேட்டு சோஷீனை வியப்பு அடைந்தாள். இருந்தாலும், அது நம்நாட்டுப் பால்தான். அதுதான் வேண்டும் என்றாள். ‘நம்நாடு’ என்று அவள் சொன்னதில், அவளுக்கு ஏதோ ஒருவித பக்தி, பற்று இருப்பதாகத் தாய்க்குப் புலப்பட்டது. ஆகவே கறந்த பால் அட்டைப் பெட்டியைத் தள்ளி வைத்துவிட்டு, பீக் நிறுவனத்தின் காய்ச்சித் திடமான பால் டப்பாக்களை வாங்கி வைத்தாள். டப்பா மேலாக இரு துளைகள் இட்டு, நூலான பால் கோப்பைகளில் சரிய, இருவரும் எதிர் எதிரே அமர்ந்து தேநீர் பருகினர்.
அப்படி அமர்ந்து தேநீர் பருகிய ஒரு நேரத்தில், அமராச்சி கிராமத்திலேயே தன் திருமணம் நடைபெற வேண்டும் என்று சோஷீனை சொன்னாள். அந்த கிராமத்தில் அவர்களுடைய பழைய சொந்த வீடு இருக்கிறது. நகர்ப்பள்ளியில் கல்வி கற்ற நாட்களில், விடுமுறையின் போது கிராமத்துக்குச் சென்று, அந்த வீட்டில் இருந்து கொண்டு விளையாடியவள் சோஷீனை. அந்த இளமைப் பருவ நினைவுகளோடு அங்கே திருமணம் செய்து கொள்வது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்று சோஷீனை நம்பினாள்.
நகர்ப்புற திருமண மண்டபங்கள் என்னதான் ஆடம்பரமாக, ஜாஜ்வல்யமாக அலங்கரிக்கப்பட்டாலும், அந்த நாட்டுப்புற வீட்டுக்கு அவை இணை ஆக மாட்டா என்பது அவளுடைய தீர்மானமான நம்பிக்கை.
அவளுடைய பேச்சைக் கேட்டதும், தேநீர் அருந்திக் கொண்டு இருந்த தாய்க்கு சட்டென்று புரை ஏறிற்று. செருமிக் கொண்டாள். திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்ய ஏற்கெனவே தரகுக்காரியிடம் சொல்லிவிட்டாள் தாய். செயின்ட் மேரீஸ் சர்ச்சில் திருமணம் என்பது ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுவிட்ட சமாச்சாரம். வரும் விருந்தினர்களை உபசரித்து உட்கார வைப்பதற்கான சிறந்தகூடம் அது.
மாறாக அமராச்சி கிராமத்து வீடு மிகப் புராதனமானது. மேடான இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டுக்கு, ஏற்றமான புழுதிமண் தரையில் நடந்து செல்ல வேண்டும். மேலும், இவை மழை நாட்கள். புழுதி மண் பாதை சேறும் சகதியுமாக மாறும். வரும் விருந்தினர்களான வனிதையர்களின் மிதியடிகள் அசுத்தமாகும். அது மட்டும் அல்ல. கிராமப்புறத்து திருமணம் என்றால் மதிப்பு இருக்காது. சேற்று நீரும், தேக்கமுமாக அந்த சூழ்நிலை விருந்தினர்களை முகம் சுளிக்கச் செய்யும். சொல்வதானால், பலரும் இத்திருமணத்துக்கு வர விருப்பப்பட மாட்டார்கள். வெட்கக்கேடு. லாகோஸ் நகரில் உள்ள உற்றார், உறவினர், நண்பர்கள் வீடுகளில், அலங்கார விடுதிகளில் சந்தித்துக் கொள்பவர்கள், அவளைப் பற்றியும், இத்திருமணம் குறித்தும் ஏளனமாகப் பேசிக் கொள்வார்கள். திருமதி ஃபெர்னாண்டெஸ்கோல் ஒருத்தி போதும். வாயைக் கோணியபடி, நாட்டுப்புறத் திருமணம் என்று ஏகத்தாளமாகப் பேசுவாள். அப்படி அவள் பேசுவதைத் தன் முன் திரைப்படக் காட்சியாக எஞ்சோகுவாஸால் நினைத்துப் பார்க்க முடிகிறது.
தேநீரை ருசித்தபடி நிதானமாகத் தன் மனதுக்கு இசைந்தவனை நினைத்துப் பார்த்துக் கொண்டாள் சோஷீனை. திருமணத்துக்கு ஏற்ற இடம் அமராச்சி கிராமம்தான் என்று அவன்தான் வற்புறுத்திச் சொன்னான். தனது கிராமம் குறித்து விவரமாக அவனிடம் கூறி இருந்தாள். அவனுக்குப் பட்டது தனக்கு ஏன் படவில்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போது, வியப்பு ஏற்பட்டது.
தன் தேநீர்க் கோப்பையை எஞ்சோகு மேஜைமீது வைத்தாள். மகளின் காதலன் கென்யா நாட்டவன். மந்தமான கண்கள். உச்சரிக்க முடியாத ஒரு பெயர். இப்படி அமராச்சி கிராமத்தில் திருமணத்தை வைத்துக் கொள்வோம் என்று யோசனை கூறியது அவனாகத்தான் இருக்க வேண்டும். மனதுக்கு வேதனையாக இருக்கிறது. இப்போதே திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்ற மட்டுக்கு அப்படி ஒன்றும் சோஷீனுக்கு வயது ஆகிவிடவில்லை. இன்னும் சற்று இளைஞனான ஒரு அமெரிக்கனை இவள் தேர்ந்து எடுத்து இருக்கலாம். இல்லை, ஒரு எக்போனாவ, நைஜீரியனைத் தேர்ந்து இருக்கலாம். நல்ல காலமாக தன் கருத்தை அவள் சோஷீனிடம் தெரிவிக்கவில்லை. தன்னுள் எண்ணங்களை அடக்கி அழுத்தி, அமராச்சி கிராமம் திருமணத்துக்கான வகையில் ஏற்ற இடம் இல்லை என்றுமட்டும் சொன்னாள். வரும் விருந்தினர்களுக்கு இடம் போதாது என்று தெரிவித்தாள்.
தாயை நோக்கிப் புன்னகை காட்டினாள் சோஷீனை. அந்த நேரத்தில் அவளுக்கு தான் தாயாகவும், தாய் மகளாகவும் தோன்றியது. ‘என்னைச் சேர்ந்த விருந்தினர்கள் ஒரு இருபது பேர்தான் வருவார்கள், அம்மா!’ என்றாள். மற்றபடி நானூறு பேர் வந்தாலும் வராவிட்டாலும் தனக்குக் கவலை இல்லை என்று சொன்னாள்.
மேலும் இரு கோப்பைகள் தேநீர் கலந்தபடி மகளின் விருப்பத்துக்கு இசைவு தெரிவித்தாள் எஞ்சோகு. அவளுடைய ஒரே மகள் அவள் விருப்பப்படி நடப்பதுதான் உசிதம் எனப்பட்டது. அதேசமயம் திருமணச் சடங்குகளை ‘பார்பீச்’சில் செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுவாளோ என்பதான அச்சமும் மனதுள் எழுந்தது. நைந்த ஆடை உடுத்தி கடல் கரையில் நடமாடும் மனிதர்கள். அந்த இடம் அவளுக்கு வெறுப்பைத் தந்தது.
கல்வி கற்க சோஷீனைனை அவள் அமெரிக்கா அனுப்பாது இருந்து இருக்கலாம். தாயின் விருப்பத்துக்கு மாறாக ஓஹியோ நகர் னியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தாள். ஆறு ஆண்டுகள் கல்விக்குப் பின் இப்போது நாடு திரும்பி இருக்கிறாள். வந்ததும் வராததுமாக, ஒரு கென்யா நாட்டு இளைஞனைதான் மணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்தாள். புலால் உண்பதை விட்டுவிட்டாள். வீட்டில் பணியாற்றும் பசங்களிடம் அவர்களுடைய ஊதியம் என்ன என்று கேட்டு, அவர்களைத் திகைக்க வைத்திருக்கிறாள். தன் தலைமுடியை ரப்பர் கொண்டு இணைத்தாற் போல, சுருள்சுருளாக வனலித்து இருக்கிறாள். அவை ஆட்டமான ஆட்டம் போடுகின்றன.
தொடக்கத்திலேயே மகளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் தனக்குப் புலப்பட்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் எஞ்சோகுவிடம் எழுந்தது. மகளைக் காண முதல்முதலாக அவள் அமெரிக்கா சென்ற நாள்கள் அவை. அங்கே கல்லூரியில் கண்ட காட்சிகள் அவளைத் திகைக்க வைத்தன. வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள் ரப்பர் செருப்பு அணிந்து இருந்தனர். இது பற்றி தனது கருத்தை மகளிடம் தெரிவித்த போது, ‘அம்மா, அவை ரப்பர் செருப்புகள் அல்ல; சாண்டல்கள். இந்தப் பக்க வேனில் காலங்களில் அவற்றை அணிவதுதான் வசதி’ என்றாள் சோஷீனை. குளியல் அறைச் செருப்புகளுக்கு அமெரிக்காவில் சாண்டல் என்ற பெயரோ என்று எஞ்சோகு நினைத்துப் பார்த்துக் கொண்டாள். சாண்டல் என்ற பெயரைப் பெற்றதாலேயே அவை குளியல் அறைச் செருப்புகள் ஆகிவிடாவோ என்றும் தன்னுள் சொல்லிக்கொண்டாள். மாணவர்கள் பொறுப்பு அற்று இருப்பதாகப்பட்டது. அது அவளை அச்சுறுத்தியது. இத்தனைக்கும் செல்வந்தர் வீட்டு மக்களே அந்த பல்கலைக்கழகத்தில் கற்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். கல்லூரிக்குச் செலுத்துவதான கட்டணம் அந்த அளவுக்கு மிதமிஞ்சியதாக இருந்தது. வந்து பார்க்கும்போதுதான், வித்தியாசம் புரிகிறது. இந்த இளம் வயதில் தொளதொளத்த டிசட்டையுடன், நிறம் இழந்த பாசி மணி மாலைகளை கழுத்தில் மாட்டிக் கொண்டு மாணவர்கள் திரிந்தனர்.
ஆனால் அப்போதுகூட தன் மகளைப் பற்றி மட்டமாக எஞ்சோகு எண்ணிவிடவில்லை. தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் வெகுவாக மாறிவிடுவாள் என்று நினைத்துப் பார்த்ததும் இல்லை. மகளை சீரும் சிறப்புமாகக் கட்டுப்பாட்டுடன் வளர்த்து இருக்கிறோம். எந்த ஒரு மாற்றுக் கலாச்சாரமும் அவளை பாதிக்காது என்றுதான் எண்ணி இருந்தாள்.
தொடக்கப் பள்ளி முடிவுற்றதும், உயர்நிலைப் பள்ளியில் கற்க இங்கிலாந்துக்கு சோஷீனை அனுப்பவேண்டும் என்று அவள் திட்டமிட்டு இருந்தாள். இங்கிலாந்தில் செல்டன்ஹாம் மகளிர் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம். அவளுடைய தோழி பலர் தங்கள் மகள்களை அந்தக் கல்லூரிக்கு அனுப்பி இருந்தனர். திட்டம் கை கூடவில்லை. அவளுடைய கணவர் சம்மதிக்கவில்லை. பள்ளிக் கல்விக்கு சோஷீன் வெளிநாடு செல்லக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அங்கே கல்வி கற்றுத் திரும்பிய நைஜீரிய இளைஞர்கள் தங்கள் இன மக்களையே ‘அந்த ஆள்கள்’ என்று கீழ்த்தரமாகக் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டினார். பள்ளி இறுதிவரை தன் மகள் நைஜீரியா நாட்டில் இருந்துகொண்டு கற்க வேண்டும். அப்போதுதான் நாட்டுப் பற்று அவளது மனதுள் வேர் ஊன்றும் என்றும் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
அதுமட்டும் அல்ல. பள்ளிப்படிப்பு முடிந்ததும், மகள் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பதும் அவளுடைய விருப்பமாக இருந்தது. அமெரிக்காதான் உலகின் வருங்கால வழிகாட்டி என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. நைஜீரிய மக்கள் தங்களுடைய காலனிய காலத்து அடிமை மனப்பான்மையைத் துறந்து, முழுமையான விடுதலை பெற்றவர்களாக உணர்ந்தாக வேண்டும் என்றும் கூறினார்.
அப்போது கணவருடைய இந்த கருத்துக்களைப் புறக்கணித்து இருக்க வேண்டும் என்று எஞ்சோகுவுக்கு இப்போது தோன்றியது. இன்று அவர் உயிரோடு இருந்து இருந்தால், சோஷீன் எந்த அளவுக்கு அந்நியமாக மாறிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டு இருப்பார்.
————-
திருமணத்துக்கான சடங்குகளைத் திட்டமிடும் தரகுக் காரிகையை எஞ்சோகு சந்தித்த தினத்தில், அவளுடைய நடவடிக்கைகள் மனநிறைவு அளிப்பதாக இல்லை. மஞ்சள் பூசினாற்போல சரும நிறமும், டாம்பீகமான கைப்பையும் எரிச்சல் ஊட்டின. இருந்தாலும் திருமணத்தைச் சிறப்பாக நடத்தித் தருவதற்காக அவளையே ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. தன் மகள் திருமணத்துக்கு இவளையே திருமதி ஃபெர்னாண்டஸ்கோல் நியமித்து இருந்தது காரணம். அந்த திருமணத்துக்கு எஞ்சோகு சென்று இருந்தாள். ஏற்பாடுகளில் எந்த ஒரு குறையும் அவள் காணவில்லை.
பழம் பெருமை மிக்க லாகோஸ் நகர் குடும்பத்தில் பிறந்தவள் ஃபெர்னாண்டஸ்கோல். அவளுடைய முன்னோர் பிரேசில் நாட்டவர். அப்படி ஒரு ‘பிரேசில்’ மண்மணம் உள்ளவரா என்று சந்திப்பவர்களை முகர்ந்து பார்ப்பது போலப் பார்த்து, இல்லை என அறிந்து முகம் சுளிப்பவர்கள் இவர்கள். அப்படியான ஒரு கருத்து சிறு பிள்ளைத்தனமாக எஞ்சோகுவுக்குப் பட்டது. தென் அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான பிரேசிலில் தங்கள் முன்னோர் அடிமைகளாக இருந்தனர் என்பது குறித்து ஒருத்தியால் எப்படித்தான் பெருமையாக எண்ண முடிகிறதோ என்றும் இருந்தது. இப்படி ஃபெர்னாண்டஸ்-கோல் குறித்து மனதில் ஓர் எண்ணம் இருந்தாலும், அவளைச் சந்திக்கும்போது, தான் நாகரிகம் அதிகம் கற்காத நாட்டுப்புறத்தவள் என்ற எண்ணம் எஞ்சோகுவின் மனதில் எழத்தான் செய்கிறது. அவள் முன் நிற்கும்போது, தன் தலைமுடியைப் படிய வைப்பதும், ஆடையைத் தட்டி சரி செய்து கொள்வதுமாக தன்னிலை மறந்து செயல் நேரிடுகிறது.
அதே நேரத்தில் எல்கோயி மனமகிழ் மன்றத்தில் ஃபெர்னாண்டஸ்-கோலைச் சந்திக்க நேரிடும்போதெல்லாம் இருவரும் புன்முறுவல் காட்டி நட்புடன் பழகுகின்றனர். இருந்தாலும், பரம்பரைச் செல்வந்தர் குடும்பத்தில் உதித்தவள் இல்லை, எஞ்சோகு புதுப்பணக்காரிகை என்ற எண்ணம் ஃபெர்னாண்டஸ்-கோலுவிடம் இருந்தாலும், ஒட்டிப் பழகத்தான் வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் இருப்பதும் எஞ்சோகுவுக்குப் புரிந்தது. அந்த கணங்களில் தானும் அவளுக்கு இணையான அந்தஸ்து கொண்டவள் என்பதை திருமதி ஃபெர்னாண்டஸ்-கோலிடம் உணர்த்த வெகுவாகப் பாடுபட வேண்டியும் இருந்தது.
இந்த நிலையில், சோஷீன் திருமணம் கிராமத்தில் நடைபெற இருக்கிறது. இதை திருமணத் தரகுக் காரிகையிடம் சொன்னபோது, இந்த தனது மாற்றுத் திட்டம் குறித்து, எப்படி எல்லாம் ஃபெர்னாண்டஸ்-கோலிடம் தரகுக்காரிகை வம்பு பேசிச் சிரிப்பாள் என்பதை எஞ்சோகு நினைத்துப் பார்த்தாள். மனது தாளவில்லை.
திருமணத் தரகுக்காரிகை சற்று கறார் ஆன ஆள்தான். செலவுகளுக்கு உடனடியாக முன்பணம் வேண்டும் என்று கண்டித்து சொல்லிவிட்டாள். யிங்கா ஃபுட்ஸ் அண்டு ஈவென்ட்ஸ் உணவு ஆக்கி விநியோகிப்போர் லாகோஸ் பகுதியில் மட்டுமே செயல்படுவதாகவும், அதனால் வேறு ஓர் உணவு தயாரிப்பவரை ஏற்பாடு செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தாள்.
பணம் எடுக்க சோஷீனுடன் எஞ்சோகு வங்கிக்குச் செல்ல வேண்டி இருந்தது. வங்கியின் தாழ்வாரத்தில் ஒசாஸெஸ்ஸின் மகள்கள் இருவரையும் கண்டாள். இங்கிலாந்தில் அவர்கள் கல்வி கற்றுத் திரும்பிய பிறகு, அவர்களுடைய பேச்சு பிரிட்டிஷ் உச்சரிப்பில் மாறி இருந்தது. ‘குட் ஆஃப்டர் நூன்’, ‘ஆன்ட்டி’ என்பதான சொற்கள் எல்லாம் நுனி நாக்கில் இருந்து வந்தன. ஆனால் ஒன்று, அவர்கள் அப்படி ஒன்றும் அவளுடைய மகளின் அழகுக்குப் பாதிஅளவு கூட ஈடாக இல்லை. உடலைப் பிடிப்பதான ஜீன்ஸ்ஸூம், குதிகால் உயரமான மிதியடிகளும், தோள்களிலிருந்து நழுவும் மடிப்புகளுடன் ஆனதுப்பட்டாவும் அணிந்து இருந்தாலும் பார்வைக்குப் பாமரர்களாகவே தெரிந்தார்கள்.
இந்த ஒசாஸெஸ் பெண்களை சோஷீன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. வங்கி ஊழியரின் அலுவலைக் கவனித்தபடி நின்று இருந்தாள். அவர் பெயர் ஜான் என்பதாக சட்டையில் மாட்டி இருந்த அட்டை அறிவித்தது. பணத்தாள்கள் எண்ணும் யந்திரத்தில் கட்டுத்தாள்களைத் திணிப்பதில் அவர் ஈடுபட்டு இருந்தார். தரவேண்டிய தொகை எண்ணி முடிக்கப்பட்டதும், எடுத்து தாள்களை ஒரு ப்ரெளன் காகிதத்தில் சுற்றி, பவ்யமாகத் தலை தாழ்த்தி எஞ்சோகுவிடம் கொடுத்தார்.
பெற்றுக்கொண்டு எஞ்சோகு, காகிதத்தைப் பிரித்து, அதில் இருந்து இரண்டாயிரம் நெய்ராக்களை எடுத்து அந்த வங்கி ஊழியரிடம் கொடுத்தாள். ‘மேடம்’ என்று அவளை மதிப்புடன் விளித்துப் பணத்தைத் தந்ததற்காகவும், ‘தாங்க் யூ’ என்று சொன்னதற்காகவும் ஆன வெகுமதி அது.
வெளியே வந்து எஞ்சோகுவின் காரில் இருவரும் ஏறி அமர்ந்தார்கள். அப்படிப் பணம் ஜானுக்கு கொடுத்தது தப்பு என்று தாயிடம் சோஷீன் சொன்னாள். உடனடியாக மகளுக்கு பதில் ஏதும் எஞ்சோகு சொல்லவில்லை. இருக்கையில் சாவதானமாக இருக்கைக் கச்சை கட்டிக் கொள்வதில் கவனம் செலுத்தியபடி இருந்தாள். ஓட்டுநரிடம் லெக்கி நகருக்குப் போகுமாறு பணித்தாள். அதன்பின் மகள் பக்கம் திரும்பி, அப்படி தான் கொடுத்த பணம் மனதாற விரும்பித் தந்தது என்றும், சாதாரண வெகுமதிதான் என்றும், இதுக்கு முன் தனக்கு கால, தேச, வர்த்தமான நிலை தெரியவில்லை என்று சோஷீன் குறை கூறியதையும் தெரிவித்தாள். இப்போது நிலை உணர்ந்து தான் செயல்பட்டதாகச் சொன்னாள். போதுமான ஊதியம் பெறாத ஓர் ஊழியனுக்கு மனதாறக் கொடுப்பதான வெகுமதி அது. அது தவறா?
தாயின் இந்த பதிலைக் கேட்ட சோஷீன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். போதுமான ஊதியம் இல்லையாம்! உணவு விடுதியில் பரிமாறும் சிப்பந்திக்கே வறுத்த முழுக்கோழி தருவது போல இருக்கிறது, என்றாள். அதே நேரத்தில் ஸ்தம்பித்து நின்ற வாகன நெரிசல்களுக்கு இடையே புகுந்து காருக்கு கார் வந்து நின்று ஜன்னல் வழியாகப் பிச்சைக்காரர்கள் கை நீட்டினர். ஒட்டி உலர்ந்த எலும்பான முகங்கள். பார்வையில் நம்பிக்கையுடன் கெஞ்சினர். கடவுள் காப்பார், கடவுள் காப்பார். கடவுள் காப்பார்!
தற்காப்புக்காகத் தான் சற்று கடுமையாக மகளுடன் பேசி விட்டோமோ என்று எஞ்சோகு நினைத்துப் பார்த்துக் கொண்டாள். காரின் உள் குளுமை அதிகமாக இருக்கிறதா என்று சோஷீனிடம் கேட்டாள். இல்லை என்றாள் சோஷீன். அமராச்சி கிராமத்து வீட்டில் திருமணம் நடைபெற இருப்பதால், ஏற்கெனவே திட்டமிட்டதை மாற்ற வேண்டி இருக்கிறது என்றும், கிராமத்து அந்த வீட்டில் எப்படியான அலங்காரங்கள் செய்யலாம் என்று மகளிடம் யோசனை கேட்டாள். தன் தோள்களைக் குலுக்கிவிட்டு, அப்படி ஏதும் தனக்குத் திட்டம் இல்லை என்று சோஷீன் சொன்னாள். திருமணத் தரகுக் காரிகை ஒரு குஷிப் பேர்வழி என்று தாய் கருதுவது போலவும், அவளை மகிழ்விப்பதில் தாய் கருத்தாக இருப்பதாகவும் அவளுக்குப்பட்டது.
வாகன நெரிசல் நீங்கிய அந்த நேரத்தில், நகர்ந்து கொண்டு இருக்கும் வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்லும் ஒரு விற்பனை ஆசாமியைப் பார்த்தபடி எஞ்சோகு காரில் உட்கார்ந்து இருந்தாள். தலை சற்று விண், விண் என்று வலிப்பதாகப்பட்டது. திரும்பிப் பார்த்து, சிக்கன் ரிபப்ளிக் உணவு விடுதிமுன் காரை நிறுத்தலாமா என்று சோஷீன்னிடம் கேட்டாள். அங்கு சாலட்கள் சாப்பிடலாம்.
சரி, வேண்டாம் என்று எதுவும் சொல்லாமல் சோஷீன் தலை அசைத்து வைத்தாள். அவளுடைய பார்வை ஜன்னலுக்கு வெளியே நிலைகொண்டு இருந்தது. உணவு விடுதி எதிரே கார் நின்றது. தன் இருக்கையிலிருந்து ஓட்டுநரிடம் சோஷீன் எங்களுடன் சாப்பிட வாங்க என்று சொன்னாள். உடனே தாயின் பக்கமாகத் திரும்பி, அந்த மனிதன் இன்று காலையில் இருந்து ஏதும் சாப்பிடவில்லை என்றாள்.
அப்படி என்றால், நாம் ஏதாவது வாங்கிக்கட்டி வந்து அவனிடம் கொடுத்துவிடலாம் என்று எஞ்சோகு கூறினாள். கூர்ந்து தாயைப் பார்த்தபடி, ஓட்டுநர் வந்து நம்முடன் உட்கார்ந்த உணவு கொள்ளத்தான் வேண்டும் என்றாள் சோஷீன்.
சினத்தோடு மகளை நோக்கினாள் எஞ்சோகு. அவள் முகத்தில் அறைய வேண்டும் என்று இருந்தது. பிடித்து காரிலிருந்து மகளை வெளியே தள்ள வேண்டும்! தரையில் தள்ளி மிதிக்க வேண்டும்!
இவர்களுடைய விவாதத்தை ஓட்டுநர் கண்டான். என்ன செய்வது என்று தெரியாமல் மனதுள் குழம்பினாள். கை, கால்கள் விலவிலத்தன. காரின் எஞ்சினை நிறுத்திவிட்டு, இறங்குமாறு அவனிடம் எஞ்சோகு கூறினாள்.
இருக்கையில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்தாள். உடலில் வியர்வை கண்டது. கார் எஞ்சின் நின்று விட்டதால் குளுமை இல்லை. மகளை நோக்கினாள். வாயிலிருந்து வார்த்தைகள் வெடித்தன. ‘உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய். ஓட்டுநருடன் சிக்கன் ரிபப்ளிக்கினுள் நுழைந்து மேஜை முன் சேர்ந்து உட்கார்ந்தால், அவனுக்கு நல்லது செய்வதாக இருக்கும் என்று நினைக்கிறாய். ஆனால் உன் உள் மனது அப்படிச் சொல்லவில்லை. அப்படிச் செய்து உன்னை நீ உயர்த்துக் கொள்வதான பாவ்லா அது. அவன் உன்னுடன் உட்கார்வது அவனுக்கு இம்சை தருவதாகத்தான் இருக்கும். உன் அந்தஸ்துக்கு அவனை நீ உயர்த்திவிட முடியாது. இந்த விவரம் உனக்குத் தெரிவதாக இல்லை. கல்லறையில் உறையும் உன் தகப்பனார் இந்த ஏடாகூடமான உன் நடவடிக்கையை உணர்ந்து தன் தலைமுடியைப் பிய்த்து வாயுள் அடைத்துக் கொள்ளவும் செய்வார்!
தாயின் இந்த வார்த்தைகளைக் கேட்டு நிலை தடுமாறினாள் சோஷீன். ‘கொழுத்துப் போன உன் பண்ணைத்தனத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டாயே!’ என்றாள். ‘உலகில் எல்லாமே சரியாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று நெருப்புக்கோழி எண்ணுமாம். அதுபோல இருக்கிறது உன்பேச்சு.’
காரின் கதவைத் திறந்தாள் எஞ்சோகு. ஓட்டுநரைப் பார்த்து காரினுள் வந்து உட்காரும்படி சைகை காட்டினாள். அவன் அமர்ந்ததும், வீட்டுக்குக் காரைச் செலுத்துமாறு கூறினாள். வீடு திரும்பும் போது தாயும் மகளும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டில் அன்று இருவரும் சேர்ந்து உட்கார்ந்து உணவு கொள்ளவில்லை. தேநீரும் அருந்தவில்லை. திருமணம் காரணமாக அமராச்சி கிராமம் செல்லும் நாள்வரை இருவரும் உரையாடவில்லை.
—————
திருமண நாள் அன்று எஞ்சோகு அமராச்சி கிராம வீட்டில் இருந்தாள். பண்ணை வீடு அது. தன்னுடைய இரு கை பேசிகள் வாயிலாக யார் யாருடனோ மாற்றி மாற்றிப் பேசியபடி இருந்தாள். பணியாள்களை அதட்டி விரட்டி வேலை வாங்கினாள். சிவப்பு, நீல ரிப்பன்கள் கட்டிய நாற்காலிகள் வரிசையைச் சரிபார்த்தபடி வளைய வந்தாள். இக்ஸோரா, செம்பருத்தி செடிகளுடன் ஆன புதர்களை வெட்டி சரிசெய்து அழகு படுத்துவதைக் கண்காணித்து நேர்படுத்தினாள். வீட்டுக்கு வரும் புழுதியான பாதையில் சரளைக் கற்கள் சமனாகப் பரத்தில் இருப்பதைப் பார்வை இட்டாள். கஸெபோ (*கஸெபோ: குடில். நான்கு பக்கமும் திறந்துள்ள சதுரமான, மூங்கில் தப்பைகள் கொண்டு கட்டிய கூம்பு வெளிவிடுதி.) சற்று சாய்ந்து இருப்பதாகப்பட்டது. சரி செய்து கொண்டிருந்த ஆளை அவள் தேடியபோது, அவன் அங்கே இல்லை.
கையேந்தி உணவு பரிமாறுவதற்கான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மேஜைகளைச் சுற்றி வந்தாள் எஞ்சோகு. அவை திருப்திகரமாக இல்லை என்று திருமணத் தரகுக்காரிகையான திட்டமிடுபவள் கூறினாள். மேகங்கள் சூழ்ந்த வான்வெளி கருத்து வருவதாகப்பட்டது. தன்னுடைய மூச்சுக்காற்று ஏனோ சீராக இல்லை என்பதாகவும் எஞ்சோகுவுக்குப்பட்டது.
ஏற்கெனவே திருமதி ஃபெர்னாண்டஸ்-கோல் தொலைபேசியில் சொல்லி இருந்தாள். இனுகு விமான தளத்தில்தான் இருப்பதாகவும், நாட்டின் அந்தப் பகுதியில் அப்போது இருப்பது தனக்கு மிக்க மகிழ்ச்சி தருவதாகவும் சொன்னாள். அவளுடைய குரலில் இருந்து அவள் மெனக்கெட்டு பொய் சொல்வதாக எஞ்சோகுவுக்குப்பட்டது. தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது அவளுடைய குரல்.
மாடியில் தன் திருமணத் தோழியருடன் சோஷீன் உரையாடியபடி இருந்தாள். ஃப்ரெஞ்சிபானி மரத்திலிருந்து கொய்து வரப்பட்ட மலர்களைச் சரமாகத் தொடுப்பதிலும் அவளுடைய கவனம் இருந்தது. வெப்பத்தால் துவண்ட மலர்கள். அடுத்த ஒரு மணி நேர அவகாசத்துக்குள் திருமண சடங்குகளுக்கான புத்தாடைகள் அணிந்து தயார் ஆக வேண்டும். ஆனால் அவள் ஏனோ பரபரப்பு ஏதும் இன்றி, வேறு யாருக்கோ திருமணம் என்பது போல, பூக்களைத் தொடுத்துக் கொண்டு இருந்தாள். இந்த அவளுடைய பொறுப்பு இன்மையைக் கண்ட தாய் எஞ்சோகுவுக்கு கடுப்பு ஏற்பட்டது. தன் திருமணத்தின் போதுகூட ஒரு பெண் இப்படி ஏனோதானோ என்று இருப்பாளோ என்று இருந்தது.
லாகோஸ் நகரில் இருந்து முடி அலங்கரிப்பவள் வந்தாள். சோஷீனின் முடி குறித்து தாய்க்கு எப்போதுமே மன வேறுபாடு உண்டு. சுருட்டிச் சுருட்டி தொங்க விடப்பட்ட முடிகள். முடி அலங்கரிப்பவள் பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகிறாளோ என்று இருந்தது. ஒரு சமயம் இருவர் இடையே முடிபற்றி விவாதம் எழுந்த போது, தன் முடி தன் தலையில் வளர்வதாகவும், அதே சமயம் பார்வைக்குச் சுருண்டாதாகத் தெரியும் தாயின் முடி பிளாஸ்டிக் கோர்க்கப்பட்டது என்றும் நையாண்டி செய்தாள். வழக்கமாகக் கூறும் ‘கொழுத்த பண்ணைத்தனம்’ என்று குறை கூறும் பாணியில் மகளின் குரல் இருப்பதாகப்பட்டது.
எக்கேடு கெட்டுப்போ என்பதான எண்ணத்துடன் எஞ்சோகு குளிக்கச் சென்றாள். குளித்துக் கொண்டு இருக்கும்போது, அறைக் கதவை யாரோ தட்டினார். திருமணம் திட்டமிடுபவள் குரல் வந்தது. மேகங்களால் வானம் மிகக் கருத்து வருவதாகவும், மழை வராது இருப்பதற்கான மந்திர உச்சாடனத்துக்கு ஏற்பாடு செய்யும்படியாக சோஷீன் சொன்னதாகவும் கூறினாள். எஞ்சோகு யோசித்துப் பார்த்தாள். கொட்ட இருக்கும் மழையை மனிதரால் நிறுத்த முடியுமோ? அதீத மூட நம்பிக்கை எனப்பட்டது. திருமணம் திட்டமிடுபவள் காதுபட, வேண்டாம் என்றாள். அப்படி மழை வந்தால், வருவோர் அனைவரும் வீட்டினுள் இருந்து கொள்ள முடியும் என்று கூறினாள். சற்று நெருக்கடியாகத்தான் இருக்கும். வசதிக் குறைவுதான். ஓட்டு சார்புடன் ஆன கூரை கொண்ட தாழ்வாரம் இருக்கிறது. வருபவர்கள் நாற்காலிகள் போட்டு உட்கார முடியும்.
அறையுள் ஆடை அணிந்து கொண்டு இருந்த போது சோஷீன் வந்தாள். கதவைத் தட்டிவிட்டு வரவேண்டாமோ ஒரு பெண்! வார்த்தைகளை மகள் கொட்டினாள். எஞ்சோகுவுக்கு எரிச்சலாக இருந்தது. கதோலிக ஜெபமாலை உருட்டி உச்சாடனம் செய்வது போல, மழையை நிறுத்துவதற்கான மந்திர உச்சாடனமும் மூடநம்பிக்கைதான் என்றாள். தூயவீதி என்பதான பெயரில் குவாலிடி வீதி இருப்பதும் மூட நம்பிக்கை என்றாள். எது அறிவார்த்த நம்பிக்கை, எது மூட நம்பிக்கை என்பதைத் தீர்மானிப்பது அவளுடைய உரிமை என்றும், சாக்லெட் விதைகளால் தயாரிக்கப்படாத சாக்லெட் போன்றது அது என்றும் பொரிந்து கொட்டினாள். வானில் இருந்து கொண்டு நல்வாழ்த்துக்களை அருளும் மூதாதையர், மழை நிறுத்தத்துக்கான மந்திர உச்சாடனம், ஆனந்த மயமான இறைவன் இருப்பதான கருத்து என்ற நம்பிக்கைகளைக் கொண்டு இருப்பதற்குத் தனக்கு உரிமை உண்டு என்றாள்.
மகளுடைய இந்த நம்பிக்கைகள் பற்றியதான பேச்சு எஞ்சோவுக்கு எரிச்சல் தருவனவாக இருந்தன. அந்த நேரத்தில் அவளுடைய கணவரின் ஞாபகம் வந்தது. இறை நம்பிக்கை அற்றவர் அவர். அதே சமயம், அமராச்சியில் இந்த கிராமாந்திர வீடு கடவுள் அருளால் தனக்குக் கிடைத்தது என்று சொல்வார்.
இந்த குவாலிடி வீதியின் நியதி அப்படி. ஒரு சமயம் அவளும் அவளுடைய கணவரும் மகளுக்காக ஒரு ஊதா நிற தகர டப்பா நிறைந்த பெப்பர் மின்ட்களை வாங்கி வந்தனர். சோஷீன் வயது அப்போது எட்டு இருக்கலாம். டப்பாவை திறந்து அப்படியே மகளிடம் தந்தனர். மாடிக்கு எடுத்துச் சென்ற சோஷீன், விதவிதமான வர்ணக் காகிதங்களால் சுற்றப்பட்டு இருந்த பெப்பர் மின்ட்களை மாடியில் இருந்து மழைபொழிவதாகச் சரித்தாள். அந்த மழையை நிறுத்துவதற்காக, மந்திர உச்சாடனம் செய்யும் நபரை அழைத்துவர எஞ்சோகு ஏற்பாடு செய்தாள். குடுகுடு கிழடாக இருந்த அந்த மனிதர் வீட்டின் பின்புறம் தரையில் உட்கார்ந்து, தீ வளர்த்து, ஜின் அருந்தியபடி மந்திரம் சொல்லிவிட்டு, மழை வராது எனச் சொல்லிச் சென்றார்.
————
விருந்தினர்கள் திருமணத்துக்கு வரத்தொடங்கினர். மணப்பெண்ணின் தோழியர் தயார் ஆனார்கள். அவர்களுடைய உதடுகள் வண்ணப் பூச்சால் மினுமினுத்தன.
குடும்பத்தினருடன் ஒனிட்ஷா ஓட்டலில் இருந்து மாப்பிள்ளைப் பையனான கென்யன் வந்தான். செனகல் நாட்டுப் பாணியில் காஃப்டன்(காஃப்டன்: அராபிய ஆண்கள் அணியும் கணுக்கால் மட்டுக்குமான நீண்ட அங்கி.) அணிந்து இருந்தான். காலர்களில் பூ வேலைப்பாடு தெரிந்தது. அதுதான் சற்று அவனை நாகரிகம் அறிந்தவனாக எஞ்சோகுவுக்குப் புலப்படுத்தியது. இருந்தாலும் இந்தத் திருமணத்துக்காக என்று அவன் சட்டை, கோட்டு, டை, கால்ச் சராய் அணிந்து இருந்தால், பாங்காக இருந்துஇருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.
தனது கழுத்தில் தொங்கும் வைரப் பதக்கத்தை எஞ்சோகு தொட்டுப் பார்த்துக் கொண்டாள். இந்த நாட்டுப்புறக் கும்பல் இடையேதான் தனித்து இருப்பதாகத் தோன்றியது. இது உன்னைப் பற்றிய கதை என்று எவரோ கொடுத்ததை வாசித்துப் பார்க்க, கதையில் அவளைப் பற்றி ஏதும் இல்லாததை உணர்வதைப் போல, அந்நேரநிலைமை இருப்பதாக எண்ணிக் கொண்டாள்.
மாடித் தாழ்வாரத்தில் சோஷீன் நின்றபடி இருந்தாள். வர்ணம் அழிந்து துரு ஏறி சிதிலமான இரும்புக்கிராதி அருகில் நின்று, வானத்தைப் பார்த்தபடி இருந்தாள். மென்காற்றில் அவளுடைய சுருட்டு முடிகள் மேலும் கீழுமாக அசைந்து ஆடின. மை இடப்பட்டு இருந்தன கண்கள். கால்களின் ஆடுசதை வரை மறைப்பதான ஆடை.
அத்திருமண நாள் விசேஷ நாளாக எஞ்சோவுக்குப் படவில்லை. உற்சாகம் தருவதாக இல்லை. மகளின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணோம். இன்னும் கொஞ்சம் அழகாக அலங்காரம் பண்ணிக்கொண்டு பளிச் என்று உடுத்திக் கொள்ளேன் என்று மகளிடம் சொல்லிப்பார்த்தாள். அவள் காது கொடுப்பதாக இல்லை.
‘உனக்கு ஞாபகம் இருக்கிறதா, அம்மா!’ என்றாள் சோஷீன். தகப்பனார் அவளுடன் ஃப்ரான்சிபானி மரத்தில் ஏறியதையும், மரம் ஏற அவளுக்கு இருந்த அச்சத்தைப்போக்க முயன்றதையும், அன்று வெப்பம் கடுமையாக இருந்ததும், கழிவறை கம்மோடுவில் உட்கார்ந்த போது, அது சூடாக இருப்பதை உணர்ந்ததையும், முந்திரிப் பருப்பைச் சுடுகிறேன் என்ற பெயரில் வீட்டையே தந்தை கொளுத்த இருந்ததையும் வேகவைத்த நத்தைகளை உண்டபிறகு, தான் குதித்துப் பண்ணிய ஆர்ப்பாட்டத்தையும் தாயிடம் சொன்னாள்.
அந்த விடுமுறை நாள்களை நினைவு கூர்ந்த போது, அவை கசப்பாக அமைந்து இருந்தது எஞ்சோகுவின் கவனத்துக்கு வந்தது. அந்த விடுமுறை நாட்களில் அவளுடைய தோழியர் லண்டன் சென்று இருந்தார்கள். தன் குடும்பத்தினர் அமராச்சி கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்ற அவளுடைய கணவர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
மகளிடம் வந்தாள் எஞ்சோகு. மார்பு மீது கைகளைக் கட்டியபடி மெளனமாக சோஷீன் இருந்தாள். அச்சமயத்தில் மகள் தன்னுடன் நெருங்கி, இணக்கமாக இருப்பதாகத் தாய்க்குப்பட்டது. வளர்ந்து பெரிய மனுஷி ஆன பிறகு நிகழ்வதான நெருக்கம். குழந்தைப் பருவத்தில் அவளுடைய முகத்தில் தோன்றிய அவ்வப்போதைய வியப்புகளை இப்போது எஞ்சோகு கண்டாள்.
திருமணம் திட்டமிடுபவள் வந்தாள். மூகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதாகச் சொன்னாள். தன் கையிலிருந்த மலர்ச் செண்டை அவளிடம் உயர்த்திக் காட்டினாள் சோஷீன். எங்கோ ஐரோப்பாவிலிருந்து வரவழைத்த மலர்களும் ஃப்ரான்சிபானி மலர்களும் சேர்த்துக் கட்டிய மலர்ச்செண்டு அது. தாயிடம், செண்டு மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா என்றும் கேட்டாள். இல்லை என்று எஞ்சோகு சொன்னாள். இருவரும் மாடியிலிருந்து படிகளில் இறங்கினர்.
எதிர்பார்த்த பலத்த மழை பெய்யவில்லை. லேசான தூறல் போட்டுவிட்டு அடங்கியது. சூழ்நிலையை இதப்படுத்திய தூறல். வானில் மேகங்கள் கலையத் தொடங்கின.
அச்சமயம் எஞ்சோகுவின் அருகில் திருமணம் திட்டமிடுபவள் வந்து நின்றாள். நடனத்துக்கான பாடலை சோஷீன் மாற்றிவிட்டதாகச் சொன்னாள். நிகழ்ச்சிக்கு வைத்து இருந்த ‘நோ ஒன் பி லைக் யூ (*’நோ ஒன் பி லைக் யூ : உனக்கு நிகர் எவரும் இல்லை என்று மணமகனை உயர்த்துவதான பாடல்.) என்ற பாடலை நீக்கி விட்டு, ‘ஸ்வீட் மதர்(*’ஸ்வீட் மதர்’ : இனிய அன்னை என்பதான தாயை உயர்த்துவதான பாடல்.) என்பதான பாட்டுக்கு நடனம் ஆட இருப்பதாகத் தெரிவித்தாள்.
———
கதாசிரியர் பற்றிய குறிப்பு:
இந்த அழகான சிறுகதையைத் தந்த சிமாமந்தா கோஸி அடிச்சீ நைஜீரிய நாட்டுப் பெண்மணி. இவருடைய படைப்புகள் பல ஏறக்குறைய முப்பது மொழிகளில் ஆக்கம் பெற்று இருக்கின்றன. பல பத்திரிகைகளும் படைப்புகளை வெளியிட்டு உள்ளன. தி நியூயார்க்கர், இந்தா, ஸோட்ரோப், தி ஃபைனான்ஷியல் டைம்ஸ் என்பதான பத்திரிகைகளுக்கு மொழி பெயர்த்து வெளியிட்டதில் பங்கு உண்டு ‘ஹாஃப் ஆஃப் எ எல்லோ சன்’ (மஞ்சள் சூரியனின் ஒரு பாதி) என்ற இவருடைய நாவல், ப்ராட் பாண்ட் பரிசு பெற்று உள்ளது. அது மட்டும் அல்லாமல், நேஷனல் புக்ஸ் கிரிடிக்ஸ் சர்க்கிளின் விருதுக்கான பட்டியலில் முதல் இடத்தையும் அந்நாவல் பெற்றது.
‘பர்பிள் ஹைபிஸ்கஸ்’ என்ற இவரது முதல் நாவல் காமன்வெல்த் எழுத்தாளர்களின் பரிசையும் வென்றது. மேலும் இதே நாவலுக்கு ஹர்ஸ்டன்/ரைட் லெகசி விருதும் கிடைத்துள்ளது. ‘தி திங் அரெளண்ட் யுவர் நெக்’ (உன் கழுத்தைச் சுற்றிய அந்தப் பொருள்) என்பது இவருடைய சமீபத்திய நாவல். மகார்தர் ஃபெளண்டேஷன் ஃபெலோஷிப் பட்டத்தை இவர் 2008-ம் ஆண்டு பெற்றார். ஐக்கிய அமெரிக்க நாட்டிலும், நைஜீரியாவிலுமாக இவர் வசித்து வருகிறார்.
சொல்வனம் வெளியிடும் சிமமண்டா அடிச்சியின் இரண்டாவது சிறுகதை இது. முதல் சிறுகதையான ‘சிறை எண் 1’ -இல் அடிச்சியைப் பற்றிய விரிவான குறிப்பைப் படிக்கலாம்
இக்கதையைத் தமிழ் மொழியில் தந்த ம.ந.ராமசாமி, 2008-ம் ஆண்டுக்கான ‘நல்லி-திசை எட்டும்’ மொழிபெயர்ப்பு இலக்கிய விருது பெற்றவர்.