ஐஸ்கிரீம் தின்பவர்களைப் பற்றிய சிலகுறிப்புகள்

ஐஸ்கிரீம் தின்பவர்களைப் பற்றிய சிலகுறிப்புகள்

சூடான சொற்கள்
விரைவில் கரைந்துவிடுமாதலால்
சாப்பிடுபவர்கள்
அவற்றை ஐஸ்கிரீமின் முன் நிறுத்துவதில்லை
ஐஸ்கிரீம் முன் அமர்ந்திருப்பவர்களிடம்
கண்டிப்பாக
உள்ளங்கை குறுவாளோ
துருப்பிடிக்காத நல்ல அரிவாளோ
மறைவாகவோ வெளிப்படையாகவோ
இருப்பதில்லை

ஐஸ்கிரீம் வாங்கித்தருபவர்களும்
அதைப் பெற்றுக்கொள்பவர்களும்
அதைச் சாப்பிட்டு முடிக்க
எத்தனை நாழிகையானாலும்
புன்னகையையும்
மேலும் புன்னகைகளையுமே
ஒருவருக்கொருவர் அளிக்கிறார்கள்

பழைய பகை
வராத கடன்
தீராத ஒற்றைத்தலைவலிகூட
தற்காலிகமாகவேனும்
மனோவேகத்தில்
கரைந்துபோய்விடுகிறது
ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுக்கு

ஐஸ்கிரீம் தின்னும் குழந்தைகள்
கட்டாயமாக
வகுப்பறை சோகங்களையும்
சண்டைகளையும்
படுக்கையறையில்
அம்மா அப்பா கண்ணுக்குத் தெரியாமல்
அவர்களைப்பார்த்து மட்டும்
கண்சிமிட்டும்
மாயப்பேய்களையும்
நினைவிலிருந்து நீக்கிவிடுகிறார்கள்
அங்கங்கே வழியும் கரைசல்களை
உடனுக்குடன் நக்கிவிடவும்
கன்னங்களில் தீற்றிக்கொண்டவைகளையும்
அவர்கள் சட்டை செய்து
சந்தோஷத்தைக் கெடுத்துக்கொள்வதில்லை
ஒரு அவசரக்காரர் சுட்டிக்காட்டாதவரை
பெருகியோடும் குதூகலத்தை
முழுமையாக லயித்துப்போய்விடுகிறார்கள்

பெரியவர்களும்
பெரியவர்கள்போல வளர்க்கப்படும்
குட்டிக்குழந்தைகளும்
தவறாமல் உடனுக்குடன்
காகிதக்கைக்குட்டையால்
துடைத்துக்கொள்கிறார்கள்

காதலிகளைப்போல்
காதலர்கள் தீற்றல்களைச் சுட்டிக்காட்டுவதில்லை
அதையும் ரசித்தவாறே
மாட்டிக்கொண்டுவிட்ட குட்டிப்புளுகை
தற்காலிகமாக
சரிசெய்துவிட்ட திருப்தியே
பெரிதாகப்படுகிறது

ஐஸ்கிரீம் தின்பதை
தொலைவிலிருந்து
கவனிப்பவர்களுக்கும்
அந்த மகிழ்வு
எப்படியோ ஒட்டிக்கொண்டுவிடுகிறது
சிறுவெட்கத்துடன்
மனதுக்குள் புன்னகைத்துக்கொள்கிறார்கள்
உறுதிமொழிகிறார்கள்
உருவெடுக்கும் புதுக்கனவுகளுக்கு
அர்த்தங்களைத் தேட.

தொடர்மழைபெய்ந்து ஓய்ந்த ஓரிரவில்
தினமும்
இரவு எட்டுமணிக்கு
அடுக்ககங்களின் இடையே உள்ள
தரைப்பகுதியில்
மூன்று சக்கர வண்டியை நிறுத்தி
மணி அடிக்கும்
இந்த ஐஸ்கிரீம் விற்பவள்
இன்று முதல்வேலையாக
வண்டியிலிருந்து இறங்கியதும்
கம்பளிச்சட்டையைக் கழற்றி
மடித்து கவனமாக பையினுள்
பொத்துகிறாள்

ஒவ்வொரு தொடர் கொம்பொலிக்கும்
ஒவ்வொரு அடுக்ககமாக
பதினைந்தாவது தளத்திலிருந்து
பரவலாக கீழ்த்தளம் வரை
பார்வையை ஓட்டுகிறாள்

நடுங்கிக்கொண்டும்
ஈரம் சொட்டும் உடைகளோடு
மின்தூக்கியருகில்
விரைபவர்களை
அவள்
தொந்தரவு செய்வதில்லை

இன்றைய எதிர்ப்பார்ப்பை
பூஜ்ஜியத்தில் நிறுத்தினாலும்
ஏதோ ஒரு வீட்டில்
யாரேனும் ஒருவர்
தான் வரவில்லை என்று
நினைத்து
ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாதே
என்பதனால்
இன்றைக்குமட்டும்
கூடுதலாக
சிலமணித்துளிகள் நிற்கிறாள்

மொழியற்ற மொழியை
உதிர்த்தவாறு
மேலேயிருந்து கையசைக்கும் நபர்
தென்பட்டதும்
சுத்தமாக இருக்கும் வண்டியில்
முன்மேடையை மீண்டும் சுத்தம் செய்கிறாள்
கையுறையை கவனமாக அணிந்துகொண்டு
குளிர்பெட்டகத்தில்
எல்லா வகைகளும் தயாராக இருப்பதை
மீண்டும் உறுதி செய்கிறாள்
வேண்டியதைக்கொடுத்த கையோடு
கைதுடைக்கும் காகிதக் கைக்குட்டையை
ஒன்றுக்கு இரண்டாகத் தருகிறாள்

எந்தவித இருமலோ தும்மலோ
இவர்களுக்கு வராதிருக்கவேண்டும்
என்று ரகசியமாக வேண்டிக்கொள்கிறாள்

அவர்கள் சாப்பிட்டதும் தூக்கிப்போடத்
தயாராக குப்பைப்பையை நீட்டுகிறாள்
நல்ல துணியால்
அழுத்தித் துடைத்து குளிர்ச்சியைப்போக்கிவிட்டு
நீட்டுகிறாள் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கான
சில்லரைக்காசுகளை

தெம்பனீஸ் நீச்சலக அரங்குவாயிலின் ஓரத்தில்
தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பவளின் குறிப்புகள்

குழந்தையை அழைத்துக்கொண்டு
தனியாக வரும் அப்பாவோ அம்மாவோ
ஓரிரு கெஞ்சல் அல்லது
அதுவும் இல்லாமலே
ஐஸ்கிரீம் வாங்கித்தந்துவிடுகிறார்கள்
சீனர், மலாய்காரர், இந்தியர் யாரானாலும்சலுகை கட்டணத்தில்
குடும்பமாக
நீந்த வரும் தாத்தா பாட்டிகள்
சிலராயினும்
சுகமின்மை பயங்களை
முற்றிலும் தொலைத்தவர்களாக
தங்கள் வீட்டுக்குழந்தைகளுடன்
குழந்தையாக மாறிவிடுகிறார்கள்
அதெல்லாம் ஒண்ணும் செய்யாது
என்று பேரக்குழந்தை
கண்டிப்பாக கூறிவிடுகிறதுபால்யத்தில் தான் கற்க முடியாமல்போன
நீச்சலை
குழந்தையின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில்
புகுத்திவிட்டவர்கள்
பெரும்பாலும்
உடனடியாக வாங்கித்தந்துவிடுகிறார்கள்
ஒவ்வொன்றும் ஒருவெள்ளிதான்
என்பதுமட்டும் காரணமில்லை

பெரிய உணவகங்களில்
பலத்த வற்புறுத்தல்களுக்கு இடையே
சரியாக சாப்பிடாத குழந்தைகளும்
சாப்பிட்டுப்பழகிய குழந்தைகளும்
புருவங்களை உயர்த்தி
விழிகளை மலர்த்தியவாறு
தானாகவே சாப்பிட்டுவிடுகிறார்கள்
அவர்கள் எதையும் மீதம் வைப்பதில்லை
வாயோரத்தில் சிந்தியதைக்கூட
லாவகமாக நாக்கால் நீட்டி துடைத்துக்கொள்கிறார்கள்

பணிப்பெண்களுடன்
நீச்சல்வகுப்புக்கு வரும்
சிறிய குழந்தைகள்
அவரையும் சாப்பிடச்சொல்லி
கெஞ்சுகிறார்கள்
மறுத்தால்
தன்னுடையதிலிருந்து
மிகச்சிறுதுணுக்கையாவது
கொடுக்காமல் சாப்பிடுவதில்லை

தனியாக வரும்
சற்றே வளர்ந்த குழந்தைகள்
பிஸ்கட்கூம்பிலோ
கிண்ணத்திலோ
ரொட்டித்துண்டிற்கு நடுவில் வைத்தோ
எப்படியாயினும்
துரியான் அல்லது சிவப்புமொச்சை
ஐஸ்கிரீமையே கேட்கிறார்கள்

சொல்லவேண்டாம் என்று முதலில் நினைத்து
இப்போது சொல்லும் ஒரு அடிக்குறிப்பு

அம்மா அப்பா இருவருடனும்
வரும் குழந்தைகளுக்கு
பெரும்பாலும் ஐஸ்கிரீம்
கிடைப்பதில்லை
யாராவது ஒருவர் சரி என்றாலும்
இன்னொருவர்
எப்படியாவது தடுத்துவிடுகிறார்