அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி…

எஸ்.பி.பி யின் கொஞ்சல் குரலை கேட்டுக்கொண்டு, எஸ் எம் எஸ் அனுப்பும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் நம்மிடையே ஏராளம். தொடர்கதையில் ‘அடுத்த வாரம்…’  போடுவதை போல, சர்வ சாதாரணமாய், ‘ஃபேஸ் புக்கில் இரவு சந்திப்போம்’, அல்லது, ஓர்கூட்டில் அல்லது டிவிட்டரில் தொடர்கிறார்கள். நண்பர்கள் அதிகம் இருப்பதை காட்டிக் கொள்ள, மற்றும் மின் அரட்டை அரங்கம் நடத்த இந்த இணைய சமாச்சாரங்கள் மிக தேவையாக நினைக்கிறோம். இந்த ஜந்துக்களால் சில நன்மைகள் இருந்தாலும், கூடவே சில அந்தரங்க அபாயங்களும் நாம் அறியாமலே நம்மை தொடர்கின்றன. நண்பரை பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்கு, நண்பரின் நண்பரின் நண்பரை பற்றித் தெரியுமா? இது சமூக வலையமைப்பு மென்பொருளின் (Social Networking software) தீயமுகம். இது போன்று பல மின்னணு அந்தரங்க சமரசங்கள் (electronic privacy compromises) பற்றிய அலசலே இக்கட்டுரையின் நோக்கம்.

கூகிள், ஆப்பிளிடம் சரணம்

pic1மார்ச் 1, 2010, : கூகிள் நிறுவனம், பல அமெரிக்கர்களிடம் மன்னிப்பு கேட்டது. எதற்கு? அவர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்காமல் அலட்சியப் படுத்தியதற்கு. அப்படி என்ன செய்து விட்டது கூகிள்? உதாரணத்திற்கு. நீங்கள் விடுமுறையின் போது என்ன நீச்சல் உடை வாங்க வேண்டும் என்று உங்கள் தோழியை கேட்டு ஜிமெயிலில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பீர்கள். உங்கள் தோழியின் பதிலை படிக்கும் போது நீச்சல் உடை விளம்பரத்தை கவனித்தீர்களா? கூகிளுக்கு உங்கள் அந்தரங்கமான நீச்சல் உடை பற்றி தெரிய என்ன தகுதி? விளம்பரம் என்று சொல்லிக்கொண்டு நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையயும் படிக்கப்படுகிறது. ஒரு சொற்ப, ஆனால் மோசமான செய்தி. கூகிள் டாக் என்ற உடன் செய்தி பரிமாற்ற மென்பொருளில் நீங்கள் எழுதும் வார்த்தைகள் சேமிக்கப் படுகின்றன. தேடப்படுகின்றன. அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி?

மார்ச் 1, 2010 : ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவி மிக பிரபலமடைந்த நிலையில் அதன் பாதுகாப்பின்மை அனவருக்கும் பிடிபட தொடங்கியுள்ளது. டைகர் ஸ்கிரிப்ட் என்ற மென்பொருள் வந்துள்ளது. அனுப்பி 30 வினாடிக்குள் ஒரு செய்தியை படித்தபின் (படித்தவ்ரிடம், அனுப்பியவரிடம்) அழித்துவிடலாம். இது டைகர் உட்ஸ் காதல் விவகாரத்திலிருந்து வந்த குறும்பு மென்பொருள்! அந்தரங்கம் யாவுமே, இப்படி இப்படி!

pic32009 ஆண்டின் கடைசியில் வெளி வந்த ‘பா’  திரைப்படத்தில் 12 வயது ஆரோ வேடத்தில் நடிக்கும் அமிதாப், பள்ளிக்கு வந்த எம் பி மீது கோபம் கொண்டு, அவரை இணையத்தில் தேடுகிறார்.. ”கூகிளிடமிருந்து தப்பி எங்க போகப் போகிறார்” என்று அவரை தேடி, அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதாக காட்சி. நசைச்சுவை நன்றாக இருந்தாலும், சற்று வேறு விதமாக யோசிப்போம். கூகிள் மூலமாக எம் பி யை அடைந்து அவருக்கு எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவருடைய அந்தரங்கம் சமரசப்படுத்துவது உண்மை. ஆரோவின் நோக்கம் சிறு பிள்ளைத்தனமானது. ஆரோவிற்கு பதிலாக ஒரு பயங்கரவாதியும் அதை செய்ய முடியும். 12/26/08 அன்று, மும்பை தாக்குதல்கள் நடந்த போது, தொலைக்கட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. பயங்கரவாதிகள் தொலைக்காட்சி இல்லாத எங்கோ இருந்து விட்டால் பாவமே என்று, சி என் என் அதை இணையத்திலும் காட்டிய வண்ணம் இருந்தது! நம் பாதுபாப்பு துறையினரின் அந்தரங்கம் சமரசப்படுத்தப்பட்டது.

சிங்கார சென்னையில் நடக்கும் ஒரு கற்பனை 2013 உரையாடல்:
கபாலி: “சர்யான தொயில் தெரியாத கத்துகுட்டியாக் கீற. ஒன் ரோதன தாங்கல சிங்காரம். பெயில் குட்து வெளில கொண்டுவரதுக்குள்ள பெண்டு நிமிருதில்ல”.
சிங்காரம்: “மன்னிச்சுகண்ணே. அப்பால இது மாரி நடக்காது. சூடம் மேல சத்தியம்!”
கபாலி: ”பெரிய சத்தியம் பண்ற மூஞ்சியப் பாரு. செய்ர திருட்டுத் தொயில்ல சுத்தம் வேணும்டா. எதுக்குடா உனக்கெல்லாம் ஒரு தொட கம்பூட்ட்ரு அப்றம் கைபோனு.குடுத்து ரெய்னிங் வேற?’
சிங்காரம்: ”மெய்தாண்ணே. அந்த கூகிள் என்னது – ஸ்டீர்ட் வ்யூ சரியா புரியல. வயக்கம் போல தொயில் செய்யப் போய் மாட்னது என் தப்புதான். மன்னிச்சு விடுண்ணே!”
கபாலி: “யார்ரா, கம்ப்யூட்டர் கண்ணாயிரத்தை. வரச் சொல்லு. இனிமே தொயிலுக்கு யார் போனாலும் ஸ்டீர்ட் வ்யூ பாத்து, சரியான சந்து வயியா போய் அள்ளிகினு வரனும், சரியா. சிங்காரம், நம்ம குமாரப் பாரு.. போன தப, சரியா ஸ்டீர்ட் வ்யூ பாத்து, அந்தம்மா நகைகடத்தனமா இருந்தத கவனிச்சு, சுட்டியா அள்ளினா பாரு. புத்தி யூஸ் பன்னு தலைவா.. ”.

சற்று மிகையான உரையாடல்தான். ஆனால் கூகிள் ஸ்டீர்ட் வ்யூ (Street View – Google Maps) மிகவும் சர்ச்சைக்குரிய மென்பொருள். ஒரு இடத்திற்கே போகாமல், அந்த இடத்தின் முகவரி மட்டுமே இருந்தால், காரின் மூலம் அந்த வீதியில் பயனித்தால், எப்படி இருக்கும் என்று விடியோவே இருந்த இடத்திலிருந்தே பார்க்கலாம். ஒரு முகவரியின் எல்லாப் பக்கங்களிலும் என்னவென்ன கட்டிடங்கள் மற்றும் நில அமைப்புகள் இருக்கின்றன என்று பயன திட்டமிட உருவாக்கப்பட்ட மென்பொருள். நான் மேலே சொன்ன திருட்டு விஷயத்திற்கும் சத்தியமாக திட்டமிடலாம். ரொம்ப கவலை வேண்டாம். இன்னும் இந்திய நகரங்கள் ஸ்டீர்ட் வ்யூவில் வரவில்லை. ஆனால், உங்களின் அந்தரங்கம் எப்படி எப்படியோ பறிபோக வாய்ப்புள்ளது.

பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. நம் அரசியல் சட்டம் இயற்றியவர்கள் நம்முடைய அந்தரங்கத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். இன்று பயங்கரவாதத்தை காரணம் காட்டி அரசாங்கங்களும் அத்து மீற சட்ட வியூகங்கள் ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகின்றன. இதனால் சாதாரண மனிதர்கள் அவர்கள் அறியாமலே பாதிக்கப்படுகிறார்கள்.

ஆரம்ப அசட்டுத்தனம்

மனிதர்கள் ஆப்பிரிக்காவில் உருவானவர்கள் என்ற தியரிப்படி பார்த்தால், நமக்கு ஆப்பிரிக்கர்கள் உறவுக்காரர்கள் தானே? 90 களில் அப்படி எனக்கு பல ஆப்பிரிக்க உறவுக்காரர்கள். கேள்வியே படாத ஆப்பிரிக்க தேசத்தில் சர்வாதிகாரி பல கோடி டாலர்கள் சொத்தை அனுபவிக்காலமல் மண்டையை போட, அவரின் சொத்தை அனுபவிக்க 50/50 முறையில் எனக்கு திடீரென்று நெருக்கமான ஆப்பரிக்கர் ஒருவர் என் அமெரிக்க டாலர் வங்கி கணக்கு எண்ணை அன்புடன் மின்னஞ்சலில் கேட்பார். இவர்கள் கேட்கும் விதம் மிகவும் உண்மையானதாக ஆரம்பத்தில் தோன்றும். அடுத்த நாளே, இன்னொரு ஆப்பிரிக்க தேச சர்வாதிகாரி மண்டையைப் போட, இன்னொருவர் உங்களது நெருக்கமான உறவினராக துடிப்பதைப் பார்த்து உஷாராகி விடுவீர்கள். பிறகு, உங்களுக்கு மனதில் தோன்றும் கேள்வி, ‘இவர்களுக்கு என் மின்னஞ்சல் முகவரி எப்படி கிடைத்தது?’.  இது ஆரம்ப கால அந்தரங்க தாக்குதல். ஒரு இணைத்தள சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பட்டியலை திருடிவிட்டால், இப்படி ஒரு பொது மின்னஞ்சலை அனுப்புவது எளிது. ஏமாந்தவர்களிடம் சுருட்டலாம். ஆனால் இன்று இது ஒரு பெரிய தொழிலாகி பல மடங்கு இயக்கத்திறமையுடன் செயல்படத் தொடங்கிவிட்டன.

pic2இப்படி அசட்டுத்தனமாக தொடங்கிய அந்தரங்க ஆக்கிரமிப்பு, சில வல்லுனர்கள் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தது மாறி, ஒரு பொது பிரச்சினையாய் மேலை நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இணைத்தள நுகர்வோர் (Internet users)  அதிகரிக்க இப்பிரச்சினையும் வளர்ந்துவிட்டது. வளரும் நாடான இந்தியா இதற்கு விதி விலக்கல்ல. பலர் அதிக அனுபவமின்றி இணையத்தில் மேய்வதால் இப்பிரச்சினை புதியவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, தன் பிள்ளை, பெண்கள் மேலை நாடுகளில் வசிப்பதால், இந்திய பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் போன்ற விஷயங்கள் தேவைபடுகின்றன. பேரன் பேத்தியை பார்க்க பிகாஸா என்று தொடங்கி, தன்னை அறியாமலே ஸ்கைப் மற்றும் மெஸசஞ்சர் போன்ற உடன் தொடர்பு மென்பொருள் வரை வளர்ந்து மேலை நாட்டவருக்கும் நமக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இந்தியாவில் ஐஃபோன் போன்ற புதிய கைதொலைபேசிகள் மிகவும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. பொதுவாக, கம்பியற்ற தொலைதொடர்பில் பாதுகாப்பு, கம்பி வழியே இணைதளங்களை உபயோகிப்பதை விட சற்று குறைவுதான். அடுத்த சில ஆண்டுகளில் கம்பியில்லா விவர தொலைதொடர்பு (wireless data communication)  இந்தியா போன்ற நாடுகளில்தான் பரிசோதனை செய்யப்படும். காரணம், 50 கோடி கை தொலைபேசிகள் உள்ள நாடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இது என்னவோ, மேல் நாட்டு பிரச்சினை என்று நாம் ஒதுக்கி வைக்க முடியாது.

அடுத்த கட்ட தாக்கம்

pic4புதிதாக மின்னஞ்சல் அனுப்ப தொடங்கியவர்கள் சில ஆரம்ப கால அனுபவங்கள் தவிர்க்க முடியாதது. யாரோ ஒருவர் வரிந்து கட்டிக்கொண்டு உங்களுக்கு வயக்ரா தேவை என்று சில பல போலி இணைதளங்களை காட்டி  தீவிரமாக பிரசாரம் செய்வார். கடலூரில் இருக்கும் உங்களுக்கு, கனடாவில் மருந்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று உப்பு சப்பில்லாத மின்னஞ்சல் அனுப்புவார். சில நாட்களில் இது ஒரு புதிய மீடியாவின் இரைச்சல் என்று புரிந்துவிடும். ஆனால், பல புதியவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு சரியாக அறிந்து கொள்ளாமல் பல மின்னஞ்சல்களை முன்னோக்கம் (forward)  செய்வதுதான். நோக்கியா இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு முன்னோக்கி அனுப்புவதால் இலவச கைதொலைபேசி தருகிறார்கள் என்று அப்த்தமான அறிவுப்புகள், உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிந்து கொள்ள நடத்தும் மோசடி. மின்னஞ்சலில் பிள்ளையார் படமும் அதே மோசடிதான். பக்தி வயப்பட்டால் கோவிலுக்கு செல்லுங்கள் – முன்னோக்கி அனுப்பாதீர்கள்.

நிறைய பூச்சாண்டி காட்டியாகிவிட்டது. சற்று பேயையே சந்திப்போமே!

இருமுக ராட்சசன்

இந்த அந்தரங்க பிரச்சினைக்கு இரு முகங்கள் : 1) தனிப்பட்ட அந்தரங்கம் 2) பொது அந்தரங்கம்.

தனிப்ப்ட்ட அந்தரங்கத்தில் பல விஷயங்களை உள்ளன. உங்களது உறவுகள், பொருளாதார, மற்றும் மருத்துவ விஷயங்கள். இதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? பொதுவாக, தனியார் நிறுவனங்கள், உங்கள் அந்தரங்கத்தை உபயோகித்து பல பொருட்களை நீங்கள் விரும்பாமலே வாங்க வைப்பதில் முயற்சி செய்யலாம். உங்கள் மருத்துவ அந்தரங்கங்களை அறிந்து சில மருத்துவ வசதிகள் உங்களுக்கு மறுக்கப் படலாம். உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் அரசாங்க எண்ணை பயன்படுத்தி உங்களுக்கு மிக பெரிய நிதி இழப்பு ஏற்படலாம்.

அதென்ன பொது அந்தரங்கம்? அரசாங்கம் ச்ம்மந்தப்பட்ட ரகசியங்கள், பயங்கரவாத விஷயங்கள், பொது இடங்களில் உங்கள் நடத்தை விவரங்கள். இதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? பயங்கரவாதத்தை காரணம் காட்டி, உங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படலாம். பொது ஒழுங்கு என்ற பேரில் அரசாங்கம் உங்களை தர்மசங்கடப் படுத்தலாம். பயங்கரவாதத்தினால். விமான நிலயங்களில், தனிப்பட்ட தேடல்கள் சற்று அந்தரங்கத்தை உதாசீனப்படுத்துவதை இன்று நாம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டோம்.

பாதுகாப்பு வேண்டுமா அல்லது அந்தரங்கம் வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, பாதுகாப்பே நமக்கு பெரிதாகப் படுகிறது. பொது நலன் வேண்டுமா அல்லது அந்தரங்கம் வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, பொதுநலனே நமக்கு பெரிதாகப் படுகிறது. அதே போல, பயங்கரவாத ஒடுக்க்மும் தனி மனித உரிமைகளும் வைத்துப் பார்த்தால், தனி மனித உரிமைகள் மறக்கப்படுகின்றன. நிறைய பணம் கொடுத்து மென்பொருள் வேண்டுமா அல்லது விளம்பர வரவால் உருவான இலவச மென்பொருள் வேண்டுமா? இலவச மென்பொருளின் விலை உங்கள் அந்தரங்கம் என்று கூகிள் இன்று ஒப்புக் கொள்கிறது.

மின்னணு அந்தரங்கம் என்பது ஒரு விஸ்தாரமான துறை. இதை நாம் இரு முகங்களாக பிரித்தாகிவிட்டது. தனிப்பட்ட அந்தரங்க பகுதியில், சில தொழில்நுட்பங்களை அலசுவோம்: 1) RFID என்ற நுட்பம். இது நுகர்வோர் பொருள் வாங்கும் வழக்கங்களை மாற்றும் முயற்சி. இத்தொழில்நுட்பத்திற்கு ஒரு பொது அந்தரங்க தாக்கு முகமும் உண்டு. 2) ஆரோக்கிய அந்தரங்கம்.  மரபணு சோதனைகள் மற்றும் காப்புரிமை பற்றி அலசுவோம் 3) Phishing என்ற நிதி மோசடி செய்யும் அந்தரங்க தாக்குதல்கள்.

பொது அந்தரங்க பகுதியில், சில தொழில்நுட்பங்களை அலசுவோம்: 1) ஒட்டுக் கேட்தல்.  உங்களுக்கு தெரியாமல் உங்கள் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதன் விளைவுகளை ஆராய்வோம் 2) மெய் வருடல் தொழில்நுட்பம் – இதை பையோமெட்ரிக் வருடல் (biometric scanning) என்றும் சொல்வார்கள். 3) விடியோ கண்காணிப்பு. இத்தொழில் நுட்பத்தால் வரும் அந்தரங்க மீறல்களை அலசுவோம்.

மிக புத்திசாலித்தனமாக நம் அந்தரங்கங்கள் இவ்வாறு பறி போவதை எத்தனை பேர் உணருகிறோம்? சமீபத்தில், ஒரு இந்திய குடும்பத்தின் இணைய உபயோக முறை என்க்கு மிகவும் வினோதமாக பட்டது. குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் ஒரே மின்ஞ்சல் முகவரி. வீட்டிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும் அண்ணன், தங்கை என்று அனைவரும் ஒரே கடவுக்சொல் (password)  உபயோகிக்கிறார்கள்! குடும்பத்தில் ரகசியங்கள் ஏதும் இல்லை என்று பெருமை வேறு. இவர்கள் மின்னஞ்கல் உடைக்கப்பட்டால், குடும்பமே தெருவில் வந்தது போல அல்லவா?

மின்னணுவியல் துறத்தல்

enemy-of-the-state1998 ஆம் ஆண்டு வெளி வந்த ஹாலிவுட் திரைபடம் ‘The Enemy of the State’. மிக விறுவிறுப்பான இப்படத்தில் வில் ஸ்மித் ஒரு தொழிலாளர் வழக்கறிஞர். அவரின் மனைவிக்காக பரிசு வாங்கும் இடத்தில் ஒருவர் மிகவும் பகிரங்கமாக அரசாங்கத்து அதிகாரிகளால் கொலை செய்யப் பட்ட போது எடுத்த ஒரு விடியோவை அவரிடம் விட்டுச் சென்று மண்டையை போடுவார். பாவம் வில், ஓடு ஓடென்று படம் முழுவதும் ஓடுவார். ஹாலிவுட் மசாலாக்கள் தடவப்படிருந்தாலும், இப்படத்தில், அவருடைய அந்தரங்கம் பறிக்கப்படுவதை மிக அழகாக் காட்டியிருப்பார்கள். அவருடைய ஒவொரு பேச்சும் ஒட்டுக் கேட்கப்படும். அவருடைய வங்கிக் கணக்கு காலி செய்யப்படும். அவருடைய கிரெடிட் கார்ட உறையவைக்கப்படும். அவருடைய அடையாளமே மாற்ற்ப்படும். அவருடைய பல அரசாங்க பதிவுகள் மாற்றப்பட்டு அவரை ஒரு குற்றவாளியாக்கும் மின்னணு முயற்சிகள் அவரை பைத்தியமே பிடிக்கும் வகையில் காட்டியிருப்பார்கள். அவர் படும் அல்லல்கள் இப்படத்தின் கதை.

pic570 களில் முதன் முறையாக டில்லி செங்கோட்டை அருகே நெரிசல் மிக சாந்தினி செளக் அனுபவம் மிக அசாதாரணமானது. சென்னை மூர் மார்கெட் போலல்லாமல் அன்புடன் ஏமாற்றுவார்கள். பயணப்பை (travel bag) ஒன்று அழகாக இருக்க, உடைந்த இந்தியில் விலை விசாரித்தேன். விலை மிக அதிகமாக கடைக்காரர் சொன்னதால், வேண்டாம் என்று விட்டுவிட்டு நடையைக் கட்டினேன். பத்தடி நடந்தவுடன் கடைக்காரர் தொடர்ந்தார் – விலை பாதியாகியது. எனது பொருளின் தரம் பற்றிய சந்தேகம் இரட்டிப்பாகியது! வேண்டாம் என்று இன்னும் பத்தடி நடக்கையில் கடைக்காரர் என்னைத் தொடர்ந்து விலையை கால்வாசியாக்கினார். விட்டால் போதுமென்று அடுத்த தெருவுக்குள் நடக்க ஆரம்பித்தேன்.

சொல்லி வைத்தாற்போல் இன்னொரு கடைக்காரர் பயணப்பை ஒன்றை என்க்கு வேறு விலையில் தொடங்கி விற்கப் பார்த்தார். என்க்கு சந்தேகம், ‘என் நெத்தியில் பயணப்பை வாங்குபவன் என்று எழுதி ஒட்டியிருக்கிறதா?’. எப்படி இவர்கள் என்னை துரத்துகிறார்கள்? விட்டால் போதுமென்று செளக்கின் வேறு பகுதிக்கு விரைந்தேன்.

pic6உங்களை உதறவிடாமல் மின்னணுவியலால் தொடர்ந்தால் எப்படி இருக்கும்? வில் ஸ்மித் போல ஓட வேண்டியதுதான். அப்படிப்பட்ட சமாச்சாரம் RFID. (Radio Frequency Identification Tag)  வானொலி அலைவரிசையில் வேலை செய்யும் நுட்பம் இது. 1999 ல் இதன் ஆரம்பம் என்னவோ சரக்கு விவரம்  எடுப்பதற்காக (inventory control)  உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னால், பட்டை குறியீடு (bar code) நியமான UPC (Universal Product Code)  உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. RFID வந்த பிறகு சரக்கு விவரமெடுத்தல் இயக்கத்திறமை மிகவும் முன்னேறியது. வால் மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், நுகர்வோர் பொருள் தயாரிப்பாளர்களை RFID நியப்படி பொருள்களை அடையாளம் காட்டினால்தான் வங்குவோம் என அடம் பிடிக்கத் துவங்கின. இதற்கும் டிஜிட்டல் அந்தரங்கத்துக்கும் என்ன சம்மந்தம்? உள்ளது, விளக்குவோம்.

முதலில் இந்த RFID எப்படி வேலை செய்கிறது? பொருளின் மேலே ஒரு நுண்ணிய மின்னணு சிப் மற்றும் ஆண்டெனா அடக்கம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட எண் – இதை ‘டேக்’ (Tag)  என்று அழைக்கிறார்கள். இந்த Tag ஐப் படிக்க ஒரு படிக்கும் மின்னணு கருவி (RFID electronic reader)  தேவை.  இதில் உள்ள வசதி என்னவென்றால், ஒரு நூறு அடி வரை தள்ளியிருந்தவாறு படிக்கும் மின்னணு கருவி Tag ஐப் படித்துவிட முடியும். இதனால் பல அன்றாட வேலைகள் சுலபமாகிறது. கால்நடை, நுகர்வோர் பொருட்கள், மற்றும் தயாரிப்பு சம்மந்தமான கச்சா பொருட்களை நிர்வகிப்பது எளிதாகிறது. பட்டை குறியீடு போலல்லாமல், பல பொருட்களை ஒரே நேரத்தில் படிககவும் முடியும்.

முதன்மையான பயனை நீட்டி வேறு விதத்தில் பயன்படுத்த முற்படுகையில் வந்தது வினை. இந்த நுட்பம் விற்பனையாளர்களின் கனவு. உதாரணத்திற்கு, ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டில் பல முக்கிய இடங்களில் படிக்கும் கருவிகளை வைத்துவிட்டால், உங்களின் வாங்கும் முறைகள் நீங்கள் அறியாமலே பதிவு செய்யப்படலாம். பொருட்கள் ஒவ்வொன்றிலும் Tag  உள்ளதால், அதை நீங்கள் எடுக்கும் போது எளிதாக பதிவு செய்யலாம். அந்த நிறுவனத்தின் கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால் கேட்கவே வேண்டாம். எந்த பொருட்களின் மேல் நாட்டம் கொண்டு வாங்காமல் விட்டீர்கள் என்று உங்கள் வாங்கும் ஜாதகமே விற்பனையாளர் கையில்.

pic8விற்பனையாளர்களின் நெடுநாள் கனவு இது: உங்கள் வீட்டின் வெளியே உங்களுக்காக ஒரு குப்பை தொட்டி ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உபயோகித்த பொருட்களின் உறைகளை அதில் எறிவீர்கள்.  விற்பனையாளர் ஒரு படிக்கும் கருவி தாங்கிய வண்டி ஒன்றை உங்கள் வீதிவழியே அனுப்புவார். உங்கள் குப்பைதொட்டியில் உள்ள tags ஐ படித்தால், உங்கள் குடும்பம் வாரத்திற்கு எத்தனை பால், ரொட்டி, முட்டை, கோக் உபயோகிக்கிறீர்கள் என்று கணித்துவிடலாம். உங்கள் அருகில் உள்ள சூப்பர் மார்கெட் உங்களது உணவுப் பொருட்களை தகுந்த மாதிரி அனுப்பி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்வார்கள். சில விற்பணையாளர்கள் ஒரு படி மேலே போய், உங்களது குளிர்சாதன்ப் பெட்டியில் இப்படி ஒரு படிக்கும் கருவியை நீங்கள் நிறுவினால், இன்னும் மேல் என்று ஆசை காட்ட முயன்று வருகிறார்கள். உங்களின் தேவைகள் உங்கள் கையில் இருக்காது. ஆசை காட்டி, தேவைக்கு மேல் பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடத் திட்டம்தான் இது.

வில் ஸ்மித் துரத்தப்படுதல் ஒன்றுமில்லை

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் உல்கிலேயே மிகப் பெரிய நில எல்லை. மிக அதிக பன்னாட்டு வியாபாரம் நடக்கும் எல்லையும் இதே. வேலை காரணமாய் இரு நாடுகளிலிருந்தும் எல்லை நகரங்களில் வசிப்போர் எல்லையை நாள்தோரும் கடக்கிறார்கள். அமெரிக்கர்களுக்காக ஒரு வசதியை சில எல்லை மாநிலங்கள் கொண்டு வந்தன. அமெரிக்கர்கள் தன்னிச்சையாக இந்த  வசதியை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு எல்லை கடவை எளிதாகும். அதாவது, கார்களில் லைஸன்ஸ் தகடில் RFID பொருத்திவிட்டால், எல்லையில் நிற்கவே வேண்டாம். நூறு அடிக்கு முன்னமே நீங்கள் வருவதை எல்லை ஏஜண்ட் படிக்கும் கருவியில் படித்து, உங்களை கடக்க விடுவார். விளைவுகளை அறியாமல், பல அமெரிக்கர்கள் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டார்கள். இத்தனை வசதி வாய்ந்த விஷயத்தில் என்ன விளைவு இருக்க முடியும்?

pic9எல்லை ஏஜண்டைப் போல திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள் அனைவரும் ஒரு படிக்கும் கருவியை வைத்துக் கொண்டால், உங்களது நடவடிக்கைகளை வேவு பார்க்கலாம். எங்கெல்லாம் கிரெடிட் கார்டு உபயோகிக்கிறீர்கள், எந்த வங்கியில் கணக்கு வைதிருக்கிறீகள் – எல்லாம் மிக எளிதாக ஏமாற்றுக்காரர்கள் கையில். அவ்வளவு எளிதா இது? நம்ப மாட்டீர்கள், அவ்வளவு எளிது. பல்வேறு பொருள் கிடங்குகளிலும் உபயோகப்படுத்தும் நுட்பம் இது. இதில் எந்த வித பாதுகாப்பும் இல்லை – அமெரிக்க எல்லை ஏஜண்டுகள் உபயோகிக்கும் (EPCGlobal Gen2) RFID முறையில்.

பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை முக்கிய ஆணவங்களுக்கு கொண்டு வர திட்டம் தீட்டி வருகின்றன. பல பாதுகாப்பு வல்லுனர்கள் புதிய ஆணவங்களின் பாதுகாப்பின்மையை சுட்டிக்காட்டுவதுடன் தகர்த்தியும் காட்டியுள்ளார்கள். இங்கிலாந்து, மற்றும் ஜெர்மனீய பாஸ்போர்டுகள் இதில் அடக்கம். இந்த ஓட்டைகள் பல நாடுகளை RFID ஐ தழுவுவதிலிருந்து குறைக்கக் காணோம். உதாரணமாக மலேசியா 25 மில்லியன் தேசிய கார்டுகளை அதன் குடிமக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. கதார் அரசு இப்படிப்பட்ட ஒரு கார்டில் விரல் ரேகையுடன் வழங்கத் தொடங்கியுள்ளது. சீனா மிகப் பெரிய RFID திட்டம் ஒன்று தொடங்கியுள்ளது – அதன் 130 கோடி குடிமக்களுக்கும் மின்னணு கார்ட் வழங்குவது திட்டத்தின் குறிக்கோள்.

மற்ற நாடுகள் அமெரிக்கா போலல்லாமல் ஓரள்வுக்கு பாதுகாப்புடன் உள்ள நியத்துடன் (ISO 14443) RFID நுட்பத்தை உபயோகிக்கின்றன. சீன அரசுடைய  கெடுபிடி சற்று அதிகம். அந்த கார்டில் மற்ற நாட்டைவிட விவரம் அதிகம். உங்கள் பெயர், பாலினம், மதம், குழந்தைகளின் எண்ணிக்கை, தொலைபேசி எண், வேலை நிலை எல்லாம் பதிவு செய்யப்படும். ஜனங்களின் எல்லா விவரங்களையும், அவர்களது நடவடிக்கைகள் மற்றும் இயக்கத்தை இப்படி கண்காணித்த வண்ணம் இருக்கிறது. எங்கே அந்தரங்கம்?

அரசாங்கங்கள் இதைக் கட்டுப்படுத்த அதிகம் நடவடிக்கை எடுப்பதில்லை. தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சட்டங்களும் சரியாக நிறுவப்படவில்லை. இன்நிலையில் RFID நுட்பத்தால் தனியொருவர் அந்தரங்கம் மிகவும் பாதிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது.

ஆரோக்கிய அந்தரங்கம்

வளர்ந்த நாடுகளில் தனி நபரின் ஆரோக்கியம் மிகவும் அந்தரங்கமான ஒன்று. நம் கலாச்சாரம் சற்று வேறுபட்டது. உதாரணம், 2002 ல் வந்த ‘பஞ்ச தந்திரம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நாயராக வரும் ஜெயராமின் மகனுக்கு இருதயத்தில் ஓட்டை என்று படம் முழுவதும் நகைச்சுவை என்ற பேரில் ஊருக்கொல்லாம் தம்பட்டம் அடிப்பது நம் கலாச்சாரம். சமுதாய சூழலில் மற்றவர்களுக்கு வந்துள்ள நோய்களை பற்றி அதிகம் வம்படிக்கிறோம்.

இவ்வாறு, பொதுவாக ஆரோக்கிய மற்றும் நோய்களைப் பற்றி பேசுவதன் விளைவுகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படுவதில்லை. 1990 களில் மனித மரபணுத் திட்டம் (human genome project)  இந்த வழக்கங்களை மாற்றும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை தந்தது. பல தீர்க்க முடியாத நோய்களின் காரணம் மரபணு கோளாறுகள் என்பதை இன்று நாம் அறிவோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் (இந்தியாவிலும் இது நகர்புறங்களில் தொடங்கி விட்டது) ஆரோக்கியத்துக்குக் கவனிப்பு வேண்டுமானால் ஆரோக்கியக் காப்புரிமை தேவை. பொதுவாக, காப்புரிமை கொடுப்பதற்காக சில பல ஆரோக்கியம் பற்றிய கேள்விகளை உங்களிடம் ஒரு ஆலோசகர் கேட்பார். உங்களின் பதில்படி (உங்களின் நினைவாற்றலைப் பொருத்து) காப்புரிமையின் சட்ட திட்டங்கள் முடிவெடுக்கப்படும். இதில் ஆலோசகர் முக்கியமாக ஆராய்வது உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகள் பற்றியே (Preexisting conditions). உதாரணத்திற்கு, உங்களுக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தால், அது காப்புரிமைக்குள் அடங்காது. அந்த இருதய நோயை காப்புரிமையில் சேர்க்க அதிக கட்டணம்  (premium) கட்ட வேண்டும்.

pic10இன்று ஓரளவுக்கு சாதுரியமாய் பேசி நீங்கள் உங்களுடைய ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகளை ஆலோசகரிடமிருந்து மறைக்கலாம். உங்களது மின்னணு ஆரோக்கிய பதிவு, அதாவது இ.ஹெச்.ஆர் (Electronic Health Record)  ஆலோசகர் கையில் கிடைத்தால், உங்கள் ஜல்லியடி பலிக்காது. அவை டாக்டரின் கிறுக்கல் கையெழுத்தில் உங்களிடமோ, மருத்துவரின் அலுவலகத்திலோ இருக்கும் வரைதான் உங்களது பொய்கள் செல்லும். உங்களது இ.ஹெச்.ஆர் யாரிடம் இருக்க வேண்டும் என்பது மிக சர்ச்சைக்குரிய விஷயம். கனடா, டென்மார்க் போன்ற நாடுகளில், அரசாங்கம் நோயாளிகளின் பக்கம். அமெரிக்காவில் இழுத்தடிக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், சில காப்புரிமை நிறுவனங்கள், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகளை வைத்து, உங்களுக்கு காப்புரிமை அளிக்க மறுக்கலாம். உங்களுக்கு ஆரோக்கிய கவனிப்பு மறுக்கப்பட்டதற்கு சமம் இது.

சில அரிதான நோய்கள் முழுவதும் குணப்படுத்த முடியாமல் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு இன்னமும் சவாலாக இருக்கின்றன. இவைகள் பெரும்பாலும், மரபணுக் கோளாறுகள் (genetic disorders). உதாரணம், CF  என்று அழைக்கப்படும் Cystic Fibrosis  மற்றும் MD  என்று அழைக்கப்படும் Muscular Dystrophy  போன்ற நோய்கள். தமிழ் சினிமாவில் வரும் ரத்தப் புற்றுநோய் (Leukemia) இதில் உண்டா என்று அனாவசிய ஆராய்ச்சி வேண்டாம்! ஒருவருக்கு மரபணு சோதனை (genetic test) செய்தால், அவருக்கு இவ்வகை மரபணுக் கோளாறு வர வாய்ப்புண்டா என்று சொல்லிவிட முடியும். மேல்வாரியாக பார்த்தால் இது நல்ல முன்னேற்றம். இன்று 2000 க்கு மேற்பட்ட மரபணுச் சோதனைகள் கருவிலிருந்து தாத்தா வரை செய்கிறார்கள். இவ்வகைச் சோதனைகளால், சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய குழந்தைகள், பேரன் பேத்திகள் அனைவருக்கும் நோய் வர வாய்ப்புண்டா என்றும் சொல்லிவிடலாம்.

இந்த மரபணுப் பரிசோதனை அறிக்கை யாரிடம் இருக்க வேண்டும் என்பது மிக சர்ச்சைக்குரிய விஷயம். காப்புரிமை நிறுவனத்திடம் அறிக்கை கிடைத்தால், குடும்பத்திற்கே மருத்துவக் காப்பு மறுக்கப்படலாம். வேலை தேடும் கம்பெனியிடம் கிடைத்தால், வேலையே மறுக்கப்படலாம். இது ஒரு வகை மரபணுப் பாகுபாடு (genetic discrimination)  உருவாகும் அபாயம் உள்ளது. இன்றைக்கு இது பெரிய பிரச்சினையில்லை. ஆனால் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில், சீக்கிரத்தில் இது விஸ்வரூபம் எடுக்கலாம். மருத்துவ அந்தரங்கம் மிகவும் சீரியஸான விஷயம்.

One Reply to “அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி…”

Comments are closed.