அங்காடித்தெரு – ஒரு பார்வை

2003011100900201‘அந்த ஃபாண்டா கலர் புடவையை எடுங்க. இதில்லைங்க, இந்த மஞ்சக் கலர் பார்டர் போட்டிருக்குமே அது.’ விற்பனையாளர் கஷ்டப் பட்டுத் தேடி எடுத்து வந்தால் அதை விரித்துப் பிரித்து ஆராய்ச்சி செய்து பார்த்த பின்னால்தான் அதே கலர் அதே பார்டர் புடவையை சென்ற தீபாவளிக்கு எடுத்தது நினைவுக்கு வரும், உடனே கேட்ட கலரும் பார்டரும் மாறி அந்த ஊதா கலர் ஷிஃபானை (Chiffon) எடுங்க என்று ஆர்டர் மாறிக் கொண்டேயிருக்கும். ஜவுளிக்கடைக்குப் போக நேரும் பெரும்பாலான பெண்களின் மனோநிலை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான, துவக்கத்திலே இருந்தே திருப்தியற்ற தன்மை உடையது. தம்மிடம் மாட்டிக் கொள்ளும் அந்த புடவை விற்பனையாளர் மயக்கமடைந்து விழும் நேரத்தில், புத்தி பேதலித்து நிற்கப் போகும் தருணத்தில்தான், இந்தப் பெண்களுக்கு, நான்கு மணி நேரம் கழித்து, அந்தக் கடையில் இருக்கும் ஆயிரக்கணக்கான புடைவகளில் எந்தப் புடவையுமே திருப்தி அளிக்கவில்லை என்ற ஞானோதயம் பிறக்கும். இப்படிப்பட்ட ஊழியர்களை நம் அன்றாட வாழ்வில் பல இடங்களிலும் சந்தித்தே வருகிறோம் இருந்தாலும் அவர்களைப் பற்றி அவர்கள் உணர்வுகள் அவர்களின் வேலைச் சூழல்கள் குறித்து அவர்கள் பின்புலம் குறித்து சிந்திக்க தோன்றியிருக்காது அல்லது நமக்கிருக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளில் அதையெல்லாம் பற்றி யோசிக்க நேரமுக் கிட்டியிருக்காது, அங்காடித் தெரு போல ஏதாவது ஒரு சினிமா வந்து எடுத்துச் சொல்லும் வரை அவர்கள் குறித்து நமக்கு எந்தவித அனுகூலமான பார்வையும் கூட இருந்திருக்காது.

பல்வேறு காரணங்களினால் ஜவுளிக்கடை விற்பனையாளர்கள் மட்டுமின்றி எந்தவொரு கடை ஊழியர்களுமே பரிதாபத்துக்குரியவர்களே. ஜவுளிக் கடைகள், இப்பொழுது நவீனமாக அனைத்துச் சாமான்களையும் ஒரே கூரையின் கீழ் விற்கும் பல்பொருள் அங்காடிகளாக, மருந்துக் கடைகள், எலக்ட்ரிக் சாமான்கள், வீட்டுப் பொருட்கள், பலசரக்கு பொருட்கள், இரும்பு மற்றும் உலோகச் சாமான்கள், உணவுப் பொருட்கள் என்று இன்றைய வாடிக்கையாளர்களின் அசுரப் பசியைத் தீர்க்கும் விதமாக பல்வேறு ஒருகூரையின் கீழ் அனைத்தும் கிட்டும் ராட்சசக் கடைகள் எல்லா பெரு நகரங்களிலும் முளைத்து வருகின்றன. இந்தப் பெரும் கடைகளின் ஆள் தேவைகளும் நாளுக்கு நாள் கூடுகின்றன. இந்தக் கடைகள் எல்லாம் நமது பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளங்களாக, சுபிட்சத்தின் குறியீடுகளாக, பொதுப் புத்தியில் உணரப்படுகின்றன.

இது போன்ற கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சாலையோர ஒர்க்‌ஷாப் பணியாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள், தெருவில் விற்கும் சிறு வணிகர்கள், மொத்த விற்பனை நிலையங்களில் வேலைபார்ப்போர், தனியார் பள்ளிக் கல்லூரி ஆசிரியர், ஊழியர்கள் என்று இந்தியா முழுவதுமே எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உள்ளாகாமல், மோசமான வேலைச் சூழல்களில், சுகாதாரக் கேடான இடங்களில், குறைந்த ஊதியங்களுக்கு வேலை பார்க்க நேரும் அபாக்யசாலிகள் கோடிக்கணக்காக இருக்கிறார்கள். இந்தியாவின் ஒட்டு மொத்த வேலைகளிலும், இந்த வகைக் கட்டமைக்கப்படாத துறை ஊழியர்களின் (Unorganized Sector workers) ஒருபோதும் நிரந்தரமாகாத வேலைகளே பெரும்பான்மையாக விளங்குகின்றன. இவ்வகை வேலைகளே கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களைப் பசிக் கொடுமையில் இருந்து பாதுகாக்கின்றன.

இந்த வேலைகளுக்கும் கூட செல்ல முடியாதவர்களுக்கும், இவற்றை நெருங்கக் கூட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும் பசியிலும் வறுமையிலும் சிக்கிச் சாக வேண்டிய நிலை நம் நாட்டில் நிலவுகிறது. மோசமான பணிச் சூழலாக இருந்த பொழுதிலும், ஆரோக்யத்தை பாதிக்கும் சுகாதாரக் கேடுகளில் செய்ய வேண்டிய வேலைகளாக இருந்த பொழுதும், மானம், மரியாதை இழந்து அடிமைகளாக வேலை செய்ய நேரிட்ட பொழுதும், இது போன்ற வேலைகளை நோக்கி வேறு வழியே இன்றி கோடிக்கணக்கான இளைஞர்கள் விளக்கை நோக்கிப் பறக்கும் விட்டில் பூச்சிகளாக அனு தினமும் கிளம்பிச் சென்று கொண்டேயிருக்கிறார்கள். வறுமை, கடன் தொல்லை, பசிக் கொடுமைகளில் சிக்கிக் குடும்பமே பூண்டோடு அழிய நேரிடுவதற்குப் பதிலாக ஏதாவது ஒரு வேலை என்று மக்கள் போக வேண்டி வருகிறது. சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்தியாவில் ஏனிந்த நிலை என்று இந்தியாவின் நல்ல கல்வி பெற்ற, பெரிய, மத்திய வர்க்கம் யோசிப்பதாகவே தெரியவில்லை. ஆள்வோரைப் பற்றி நாம் பேசக் கூட வேண்டாம். ஒட்டுண்ணிகளுக்கு அத்தகைய கரிசனம் எப்படி எழும்?

இந்த வகையிலான முறை சாரா ஊழியர்கள் இந்தியாவின் அவியலான பொருளாதாரத்தின் அச்சாணி போன்றவர்கள். ஆனால் இவர்களுக்காக அக்கறை கொள்வோர் யாரும் கிடையாது. முறைப் படுத்தப் பட்ட அமைப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குத்தான் யூனியன்களும், கட்சிகளும் போராடும். முறைப் படுத்தப் பட்ட நிர்வாகங்களில் பணி புரிவோருக்கு மட்டுமே அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஊதியம், விடுப்பு, மருத்துவம், ஓய்வூதிய வசதி, காப்பீடு (இன்ஷூரன்ஸ்) எல்லாம் கிட்டும். இது போன்ற முறைப் படுத்தப் படாத நிரந்தரமற்ற ஊழியர்களுக்காக அரசாங்கம் விதித்த சட்ட விதிகள், இந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்த போதிலும் அவை அனேகமாக நடை முறைப் படுத்தப் படுவதில்லை. வீட்டு வேலை செய்பவர்கள், ப்ளாட்ஃபாரக் கடைக்காரர்கள், சினிமாவின் அன்றாடத் தொழிலாளர்கள், மதிய சாப்பாடு கொண்டு தரும் டப்பாவாலாக்கள் ஆகியோருக்குக் கூட அமைப்பு ரீதியான சங்கங்கள் இருக்கின்றன ஆனால் தனியார் கடைகள், சிறிய அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு எந்தவித தொழிலாளர் நலச் சங்கங்கங்களோ, அவர்கள் நலனுக்காகக் கேள்வி எழுப்பும் அமைப்புகளோ கிடையாது. இதுதான் இவை போன்ற அமைப்புசாரா ஊழியர்களின் நிலை. இந்த ஆதரவற்ற நிலையே இவர்களின் முதலாளிகள் இவர்களை மனிதாபிமானமற்ற முறையிலும் மோசமான சூழல்களிலும் வேலை வாங்க முடிகிறது. இது ஒரு வகையான நகர்ப்புற கொத்தடிமைத்தனமே.

கொத்தடிமை என்றால் எங்கோ பீஹார் சுரங்கங்களில் தரகர்களிடம் விற்கப்பட்டு பணி செய்ய நேரும் அடிமைகள் மட்டும் என்று நமக்கு ஒரு விதப் பிம்பத்தை நம் ஊடகங்களும், சினிமாக்களும் உருவாக்கி வைத்துள்ளன. ஆனால் கொத்தடிமை என்பது நம் அன்றாடம் காணும் வியாபார நிறுவனங்களில், நமக்கு எவ்வித குற்ற உணர்வையும் ஊட்டாமல், நம் கண் முன்னே நம் தெருக்களில் நடப்பவை என்ற உண்மை நமக்கு உறைப்பதேயில்லை. அவர்கள் நமக்கு என்றும் ஒரு பொருட்டாகவே இருந்தது கிடையாது. நாம் அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் தனியார் பஸ் ஊழியர்கள், நமக்கு டீ மற்றும் உணவு சப்ளை செய்யும் சர்வர்கள், நாம் வாங்கும் கடைகளில் நமக்குச் சாமான்கள் எடுத்துத் தரும் உதவியாளர்கள், தனியார் மருத்துவமனைகள், நம் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்/ஊழியர்கள், கேளிக்கைகளுக்காக நாம் செல்லும் தியேட்டர்கள், ஹோட்டல்கள், லாட்ஜுகள் என்று பல இடங்களிலும் ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கான கொத்தடிமைகளை நான் அன்றாடம் நம் தினசரி வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டேயிருக்கிறோம்.

’80களில் இவை போன்ற பல வியாபார நிறுவனங்கள் பலவற்றுக்கும் அக்கவுண்ட்டிங் மற்றும் விநியோகக் கணக்குகளைச் செய்ய என நான் தயாரித்திருந்த ஒரு மென்பொருளை நிறுவ வேண்டி அந்நிறுவ்னங்களுக்குச் செல்ல நேரிட்டது. அப்பொழுது அங்கு பணியாற்றும் ஊழியர்கள், அந்த முதலாளிகள், அவர்களை நிர்வாகம் செய்யும் சூப்பர்வைசர்கள், அவர்கள் கப்பம் கட்ட நேரும் அரசு அதிகாரிகள் என்று இந்த வியாபார நிறுவனங்களின் அனைத்துத் தள மனிதர்களோடும் பழகி, அவர்களின் நிலைகளை நெருங்கி அறியும் சந்தர்ப்பமும் கிட்டியது. வாழ்க்கை என்பது எல்லோருக்கும் நேர்கதியாக அமைவதில்லை என்பதையும், அன்றாட வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி மட்டும் மனிதர்கள் சந்திக்கும் போராட்டங்கள் ஏராளம் என்பதையும் நேரடியாக உணரும் அனுபவம் கிட்டியது. என் அனுபவத்திற்கு பிறகு இவர்கள் குறித்த என் பார்வையே மாறியது.

ஏனெனில் எனக்கு அந்த அனுபவங்களில் புரிந்தது இதெல்லாம் – ஒரு கடையில் நூறு ஊழியர்கள் இருந்தால் அனைவருக்கும் பலவகைக் காப்பீடு போன்ற குறைந்த பட்ச பாதுகாப்புகளைச் செய்ய வேண்டியது நிர்வாகத்தின் கடமை. சட்டம். ஆனால் அவை போன்ற சட்டங்கள் மிக எளிதாக வளைக்கப் படவும், மீறப் படவும் ஊழல் உதவுகிறது. தொழிலாளர் நல விதிகள், சுகாதார விதிகள், பணியாளர் விதிகள், பாதுகாப்பு விதிகள், சம்பள விதிகள், விடுப்பு விதிகள் என்று அனைத்து விதமான விதிகளும், மீறப் படுவதற்காக மட்டுமே அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு, அந்த விதிகளை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு வருமான வாய்க்கால்களாகச் செயல்படுகின்றன. நிறுவனங்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஆயுள் பாதுகாப்பு, உடல்நல பாதுகாப்பு முதலியவற்றை அந்தந்த அரசு நிறுவன கண்காணிப்பாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விடுவதன் மூலம் தவிர்த்து விடுகின்றன. சட்டம் இருந்தும் இல்லாதது போலத்தான் ஆகிறது.

ஒரு ஜவுளிக் கடையில் காலை முதல் இரவு வரை நின்று கொண்டே துணிகளை விரித்து, பிரித்து, மடக்கி, அடுக்கி, பேசி, குழைந்து, தணிந்து, கெஞ்சி வேலை பார்த்து விட்டு இரவு உறிஞ்சிப் போடப்பட்ட சக்கைகளாக வீட்டுக்குத் திரும்புவதே வாழ்க்கையாக மாறிப் போனவர்களின் கதைகள் ஓரளவுக்கு வசதியான வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதைவையே. அத்தகையச் சூழ்நிலையில் வேலை பார்க்கும் ஒரு ஜவுளிக் கடை விற்பனைப் பெண்ணை விட தெருவில் கடும் கோடை வெயிலில் தலைச் சுமையாக காய் கறி விற்கும், சைக்கிளில் கட்டி தெருத் தெருவாகக் கூவி அலுமினியப் பாத்திரம் விற்கும், நடைபாதையில் சாமான்கள் விற்கும் எண்ணற்ற விற்பனையாளர்களின் வேலை எவ்வளவோ சுதந்திரமானதும் பாதுகாப்பானதாகவும் மானம் மரியாதை உடையதாகவும் இருக்கும் என்பேன்.

அப்படி எனக்குக் கிடைத்த நேரடி அனுபவங்களை ’அங்காடித் தெரு’ என்ற திரைப்படத்தில் மறுபடி ஒரு புனைகதையாகப் பார்த்தேன். இந்தச் சினிமா மேற்படி அவலங்களில் ஒரு பகுதியையாவது அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றிருக்கிறது.

*** *** ***

angadi-theru

சினிமா என்பது சரிகைக் கனவை விற்கும் ஒரு தொழில் மட்டுமே என்ற எண்ணத்திலேயெ பெரும்பாலும் சினிமா உலகம் இயங்கி வருகிறது. கூடுமான வரையில் யதார்த்தத்தில் இருந்து விலகியிருக்கவே இந்தக் கனவு வியாபாரிகள் முயல்கிறார்கள். சினிமாவில் ஏழையாக, உழைப்பாளியாகக் காண்பிக்கப் படும் ஹீரோக்கள் கூட மேக்கப் கலையாத தோற்றத்துடனும், அலங்கார வீடுகளிலும் மட்டுமே காட்சியளிப்பர். இப்பொழுது சற்று அந்த நிலை மாறியிருந்தாலும் கூட காதல், வன்முறை, யதார்த்திற்கு ஒவ்வாத கதைகள் காட்சிகள் நிரம்பியதாகவே நம் தமிழ் சினிமா இருந்து வருகிறது.

சினிமாக்களில் காண்பிக்கப்படும் இடங்களும், சூழல்களும் எதார்த்தத்துடன் உறவற்று இருக்கின்றன. நிஜத்தைத் தொட இந்தக் கனவு வியாபாரிகள் அஞ்சுவது போலவே, யதார்த்தை சினிமாவில் பார்ப்பதற்கு சாமான்ய மனிதர்களும் விரும்புவதில்லை. எனவே யதார்த்தச் சித்திரங்களை எடுக்கத் துணிந்த சினிமாக்காரர்களும் இருப்பதில்லை. மீறி ஒருவர் இருவர் வந்தால் அவர்கள் ஒரே படத்தில் போட்ட துணியைத் தவிர வேறேதும் எஞ்சாமல், காணாமல் போய்விடுகிறார்கள். ஜெயகாந்தன் போன்ற வெற்றிகரமான எழுத்தாளர்களுக்கே, திரும்பி வரவோ, மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளவோ தோன்றாதபடி, அப்படி ஒரு பாடம் கற்பித்த பெருமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உண்டு.

மலையாளத்தில் இந்தச் சிக்கலை ஓரளவுக்கு மீறியிருப்பதினாலேயே யதார்த்த உலகை அவர்களால் ஓரளவுக்குக் காட்ட முடிகிறது. தமிழ் சினிமா உலகில் யதார்த்த உலகைக் காட்டி, மக்களின் மனசாட்சியுடன் பேச முயலும் திரைப்படங்கள் மிக மிக அரிது. ஜானகி விஸ்வநாததின் குட்டி, ஜெயகாந்தனின் உன்னைப் போல ஒருவன், பாலு மகேந்திராவின் வீடு என்று அபூர்வமாக ஒரு சில திரைப்படங்களே துணிவுடன் எடுக்கப் படுகின்றன. அந்த வரிசையில் நான் மேலே விளக்கிய முறைசாராத, நிறுவனப் படுத்தப் படாத, சட்ட திட்டங்களுக்கு விதிகளுக்கு உட்படாத நவீன பல்லடுக்கு வியாபார நிலையங்களில் வேலை பார்க்க நேரும் கொத்தடிமைகளின் அவல உலகத்தை நிர்வாணமாக முகத்தில் அறைய, பார்ப்போரின் மனசாட்சியை உலுக்க எடுக்கப் பட்டுள்ள ஒரு சினிமா, ’அங்காடித் தெரு’.

ஒரு அடுக்குமாடி பல்பொருள் அங்காடியில் பணி புரிய, திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்காட்டில் இருந்து கொத்தடிமையாகக் கொணரப் படும் இளைஞர்களின் கதையினைச் சொல்வது மூலம் இது போன்ற நிறுவனங்களில் உள்ள மனிதாபிமானமற்ற நிர்வாகப் போக்குகளையும் மனிதர்களையும் இந்தத் திரைப்படம் மூலமாக அம்பலப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். பாட்டாளிகளுக்காகப் போராடுவதாக வாய் கிழியப் பேசும், பெரும் கட்சிகள், பெரும் யூனியன்கள் செய்ய முடியாத ஒரு வேலையை, பெரும் பத்திரிகைகள், பெரும் தொலைக்காட்சிகளின் புலனாய்வு நிருபர்கள் செய்யத் துணியாத, செய்ய விரும்பாத செயலைச் செய்து காட்டி உள்ளார் வசந்தபாலன்.

தமிழ் சினிமா என்பது டெக்னாலஜியின் துணை கொண்டு நிகழ்த்தப்படும் ஒரு பிருமாண்டமான பொழுது போக்குச் சமாச்சாரம் என்ற விதியில் இருந்து வெளி வந்து, சமூக அவலங்களையும் அதன் யதார்த்தம் கெடாமல் சொல்வதற்கு சினிமா என்னும் மீடியாவையும் பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்து, முறைசாரா ஊழியர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக் கொணரத் துணிந்திருக்கிறார்.

ரெயில் நிலையம், விமான நிலையம், ஹோட்டல்கள், மருத்துவ மனைகள், அரசு அலுவலகங்கள், உற்பத்தி நிலையங்கள் என்று ஒரு தளம் ஒரே சூழலில் நிகழும் நிகழ்வுகளை மட்டும் கொண்டு கதைகள் அமைப்பதில் ஆர்தர் ஹெய்லி போன்ற ஆசிரியர்கள் புகழ் பெற்றவர்கள். தமிழிலும் அது போன்ற களம் சார்ந்த நாவல்களை பி வி ஆர் (சென்ட்ரல்), ஜெயமோகன் (ஏழாம் உலகம்), பாலகுமாரன் (இரும்புக் குதிரைகள்) போன்றோர் முயன்றிருக்கிறார்கள். ஹிந்தியில் மதுர் பண்டார்கர் தொடர்ந்து களன் சார்ந்த திரைப்படங்களை எடுத்து வருகிறார். சாந்தினி பார் (பார்களில் நடனம் ஆடும் மங்கைகளின் சூழல் சார்ந்த சினிமா), பேஜ் 3 (பத்திரிகை அலுவலகக் களன் சார்ந்த ஒரு சினிமா), டிராஃபிக் சிக்னல் (பரபரப்பான டிராஃபிக் சிக்னலில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் வெளிக்காட்டும் சினிமா) என்று எடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழில் இது போன்ற ஒரு குறிப்பிட்டக் களனைத் தேர்வு செய்து அதன் பின்னால் உள்ள பிரச்சினைகளை அலசும் சினிமாக்கள் எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. காதல், தாதாக்களின் வன்முறை நிறைந்த சண்டைகள், அபத்தமான அதிகப்பிரசங்கித்தனமான வசனங்கள் நிறைந்த குடும்பப் படங்கள் போன்ற உற்பத்திகளில் இருந்து தமிழ் சினிமா உலகம் இந்த சினிமா மூலம் ஒரு அடி யதார்த்த உலகினை நோக்கி முன்னெடுத்து வைத்திருக்கிறது.

படத்தின் பலம்- தேர்ந்தெடுத்துள்ள பிரச்சினையின் வீரியம், கதை நடைபெறும் களனில் உள்ள யதார்த்தம், நம்பகத்தன்மை, நடிகர்களின் தேர்வு, காத்திரமும், அங்கதமும் கூடிய வசனம், தேர்ந்த இயக்கம் ஆகியன.

angaditheruதேரிக்காட்டுக் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞனாக வரும் மகேஷும், ஏழ்மையின் காரணமாக அந்தப் பெரிய கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் சேர்மக் கனியாக வரும் அஞ்சலியும் தேர்ச்சியுடன் இயக்குனரால் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அந்தப் பெண்ணின் முக பாவனைகள், உடல் மொழிகளும், காட்சிக்கு ஏற்ப சட்டென்று மாறும் நடிப்பும் நல்லதொரு நடிகையை நமக்குக் காட்டுகின்றன. ஒரு இடத்தில் அவளை அவளது மேலாளர் ஒரு திரைக்குப் பின்னால் தள்ளிக் கொண்டு போய் நாயைப் போல அடித்து, பாலியல் பலாத்காரமும் செய்து விட்டுப் போன பின்பு, அழுத கண்களுடன், கூனிக் குறுகி, மீண்டும் தன் இடத்தில் வந்து நின்று வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் உடைகளை எடுத்துப் போட்டுக் கொண்டே தன் துயரத்தினை மறைத்து கொண்டு சிரித்துப் பேசும் விற்பனையாளராக மாறும் ரசவாதத்தை மிக நேர்த்தியாக நிகழ்த்துகிறார் இந்த இளம் நடிகை. புதுமுகமான மகேஷும், பாத்திரத்தின் தீவீரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்.

படம் முழுவதும் உடன்குடி போன்ற வறட்சிப் பிரதேசத்தில் இருந்து கருத்த, மெல்லிய, சத்துக் குறைந்த, வறுமையில் வாடிய மனிதர்களைத் தேர்ந்தெடுத்து படத்தில் துணை நடிகர்களாகப் பயன் படுத்தியிருப்பதும், அந்தப் பகுதி நாடார் இன மக்கள் பரவலாகப் பயன் படுத்தும் பெயர்களையே கதாபாத்திரத்திரங்களுக்கு அளித்திருப்பதும் இயக்குனர் சாதாரண விஷயத்திற்குக் கூட கொடுத்திருக்கும் கவனிப்பையும், அவரது நோக்கத்தின் கூர்மையையும் உணர்த்துகிறது. புது முகங்களும் இயல்பான நடிகர்களும் படத்தின் யதார்த்தத்தையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறார்கள். பல கட்சிகளுக்குத் தாவிய, முதிர்ந்த அரசியல் அனுபவம் உள்ள திறமையான பேச்சாளரான பழ.கருப்பையா, கடை முதலாளியான அண்ணாச்சியாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். பல கட்சிகளில் அவர் அசல் வாழ்விலேயே நடித்துக் கிடைத்த அனுபவங்கள் சினிமா நடிப்பிற்கும் வெகுவாக கை கொடுத்திருக்க வேண்டும். இவர்களுடன் முக்கியமாக உலகின் மிக நெரிசலான தெருக்களில் ஒன்றாகிய ரெங்கநாதன் தெருவும் கூட நடித்துள்ளது.

பெரும் பல்பொருள் அங்காடிகளில் நடக்கும் பல்வேறு ஊழல்கள், மனிதாபிமானம் இல்லாத செயல் பாடுகள், ஊழியர்கள் மேல் நிகழ்த்தப்படும் பலாத்காரங்கள், பாலியல் வன்முறைகள், அலுப்பும், சலிப்பும் நிலவும் கடுமையான வேலைச் சூழலின் நடுவே ஊழியர்களுக்குள் நிகழும் பரிமாற்றங்களில் கிடைக்கும் அல்ப சந்தோஷங்கள், காதல்கள், காமங்கள், கடினமான வன்முறைச் சூழலை எதிர் கொள்ள அவர்கள் கையாளும் தந்திரங்கள் என்று சுருக்கமான பல காட்சிகள், அங்காடிகளில் நம் பார்வைக்கு பின்னால் இயங்கும் உலகினை சட்டென வெளிக்காட்டுகின்றன. குறிப்பிடத்தக்க ஒரு காட்சி ஒரு விற்பனைப் பெண்ணுக்கும் ஒரு விற்பனைப் பையனுக்கும் இடையில் ஏற்படும் காதல்.

இருவருக்குள்ளும் பிரியம் ஏற்பட்டு, கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, வன்முறையைப் பயன் படுத்தி ஊழியர்களை அடக்கி வைத்திருக்கும் கண்காணிப்பாளரின் கண்களில் பட்டு விட அவன் இருவரையும் கண் மண் தெரியாமல் அடிக்கிறான். அப்பொழுது அந்த இளைஞனுக்கோ, காதல் எல்லாம் பறந்து போய் தன் இருப்பும் தன் வேலையும், அது கொடுக்கும் குறைந்த பட்ச சம்பளமும், அது தரும் சிறிய வாழ்வாதாரமும் மட்டுமே குறியாகப் போய் அந்தப் பெண்ணைக் கை கழுவி, அவளுக்கு வேசி பட்டமும் அளித்து விடுகிறான். இந்தக் கொந்தளிப்பான சூழலை எதிர் கொள்ள முடியாத, அந்தக் கரிய, வறிய அநாதரவான பெண் குமுறிக் கொந்தளித்து அவமானத்திலும், வேதனையிலும் உணர்ச்சியால் கொந்தளித்து, கடையின் உயர் மாடிக் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து மரிக்கிறாள். அந்த சில நிமிடக் காட்சிகளில் அந்த நடிகர்களின் வெகு யதார்த்தமான நடிப்பும், வசனமும் நம்மைப் பதற வைக்கின்றன.

சினிமா முடிந்த பின்பும், பல நாட்களுக்கு நம்மை உறக்கம் மறக்கச் செய்யும் உணர்ச்சிகரமான சித்திரிப்பு. ஒரு வலுவான சிறுகதை அந்தச் சினிமாவில் ஒரு காட்சியாக மாற்றப் பட்டிருக்கிறது. உக்கிரமான ஒரு காட்சி அது. அதில் நடித்திருக்கும் நடிகை மிக இயல்பாக நடித்திருந்தார். இந்த ஒரு காட்சி மூலமாகவே பல்வேறு விஷயங்களை நுட்பமாக இயக்குனரும், வசனகர்த்தாவும் உணர்த்தி விடுகிறார்கள். கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வேலை தேடி வரும் பெரும்பாலான இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், உறுதியும் இருப்பதில்லை. நிர்வாகத்தையோ மேல்தட்டு ஊழியர்களையோ சார்ந்தே இருந்து விடுவார்கள். தான் வேலை பார்க்கும் இடமே உலகம் என்ற நினைப்பில் அதை விட்டால் வாழ்வே இருண்டு விடும், அழிந்து விடுவோம் என்ற அச்ச உணர்வே அவர்களிடம் மிஞ்சியிருக்கும். அதன் காரணமாக தங்கள் சுயமரியாதையை அடகு வைத்து அடிமையாகவும், அச்சத்துடனும் பயந்து பயந்து இயங்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனையும் அவனது பாதுகாப்பற்ற உணர்வையும், தான் கொண்ட காதல், தன் சுயமரியாதை அனைத்தையும் இழக்க நேரும் ஒரு பரிதாபகரமான தருணத்தையுமே இந்தக் காட்சி உக்கிரமாக உணர்த்துகிறது. படத்தில் வரும் முக்கியமான காட்சி அது.

பல ஒரு நொடிக் காட்சிகள் கவனமாகச் செதுக்கப் பட்டுள்ளன. முகம் மறைத்து, கண் மட்டுமே வெளியே தெரியும் ஒரு பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண் ஏக்கக் கண்களுடன் ஒரு பட்டுப் புடவையை எடுத்துப் பார்ப்பதும், அழுகிப் போன கால்கள் மூலமாக நாள் முழுவதும் நிற்கக் கோரும் அந்த வேலையின் அபாயத்தைக் காண்பிப்பதும், மனிதர்களை மட்டுமே நம்பி இயங்கும் ஒரு உலகத்தை ரெங்கநாதன் தெரு வியாபாரிகளின் சிறு சிறு செயல்களைக் கூர்மையான வசனங்கள் மூலம் வெளிப்படுத்துவதும் என்று படம் முழுவதும் நுட்பச் சித்திரங்கள், ஆரம்ப காட்சியின் பொழுது அடுத்த வேளை இருப்பிற்கு இடமற்ற, சோற்றிற்கு வழியற்ற இருவரும் தங்கள் காதல் தரும் மகிழ்ச்சியில் மட்டுமே தற்காலக் கவலைகளை மறந்து அந்த மழைக்கால சென்னை நகர இரவு நேரத் தெருக்களின் ஆடிப் பாடும் காட்சி வாழ்க்கை என்பது தற்காலக் கவலைகள் துன்பங்களையும் தாண்டி கொண்டாடத் தக்கது என்ற அழகிய உண்மையை மிக அழகாகச் சொல்லும் காட்சி. அங்கம் இழந்து மருத்துவமனைகயில் சிகிச்சை பெற்று வரும் ஏழைகளின் ’ஆன்ம அறுவடைக்காக’ மிஷனரிகள் வரும் ஒரு காட்சி ஏழாவது உலகம் கதையில் வரும். அதே காட்சி இந்தப் படத்திலும் ஒரு நொடியில் வந்து பல நுட்பமான விஷயங்களைத் தொடாமல் தொட்டுச் சென்றிருக்கிறது.

ஊழியர்களின் பிரச்சினைகள் மட்டும் இன்றி இந்தக் கடைகள் போன்ற ராட்ச அங்காடிகளினால் ஏற்படும் குப்பை கூளங்கள், அதன் காரணமாக ஏற்படும் சூழல் கேடுகள், பெரும் நகரங்களுக்கு தொடர்ந்து கிராமங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்வதினால் ஏற்படும் இட நெருக்கடிகள், இருப்பிட வசதிக் குறைவுகள், தூய்மையான வாழ்விடம் கிடைக்காத நெருக்கடிகள், இட்டாமொழி போன்ற கண்ணுக்குத் தெரியாத கிராமங்களில் வாழ நேரும் மனிதர்களின் இருத்தல் சார்ந்த பிரச்சினைகள், அவர்களுக்கு ஊர்களின் அருகாமையில் உரிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தாமல் அனைத்து புதுத் தொழிற்சாலைகளையும் சென்னையிலேயே உருவாக்குதலின் அபத்தங்கள், நகரச் சேரிகளில் அவலங்கள் என்று ஏராளமான சமூகப் பிரச்சினைகள் பற்றிய உணர்வுகளை இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் எழுப்பி பல நாட்கள் நம்மை எண்ண உளைச்சல்களுக்குத் தள்ளுகின்றன.

ஊழியர்கள் சாப்பிடும் இடத்தில் சாப்பாட்டுக்காகவும் தட்டுக்காகவும் போர்க்களம் போல, மிருகங்கள் போல அடித்துக் கொள்வதும், அவர்கள் தங்கும் இடத்தின் சுகாதாரமற்ற சூழலும், கழிப்பிடங்களும், கேரளத்திற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப் படும் தமிழ் நாட்டுப் பசுக்கள் போல நூற்றுக்கணக்கானோர் ஒரே கொட்டடியில் நெருக்கமாக அடை பட்டுக் கிடக்கும் கொடுமையும் மனதைக் கலங்க அடிக்கின்றன. கிஞ்சித்தும் மனிதாபிமானமற்ற மிருகங்களாக மட்டுமே பேராசை கொண்ட இந்த வகையில் ஊழியர்களை வைத்திருக்கும் கடை முதலாளிகள் இருக்க முடியும் என்பதை, மனத்தைப் பதற வைக்கும் காட்சிகள் உணர்த்துகின்றன. இந்தக் காட்சிகள் மட்டும் உண்மையானால் இந்த மிகக் கேவலமான மனித உரிமை மீறலை இந்தப் படம் வெளி வந்த பின்னராவது மாற்றிக் கொள்ள முதலாளிகள் முன் வர வேண்டும் அல்லது அரசாங்கமாவது அவர்களை விதிகளின் படி ஊழியர்களை நடத்த வைக்க அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், இந்தப் படத்தைக் காண நேர்ந்து மனசாட்சி உலுக்கப்படும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் இது போன்ற கொடுமையான சூழலில் தங்கள் ஊழியர்களை ஈடுபடுத்தும் முதலாளிகளிடம் தங்கள் கண்டனத்தைச் சொல்ல வேண்டும்.

நாம் வாங்கும் பொருட்கள் சுத்தமானதாகவும் விலை குறைவானதாகவும் தரமானதாகவும் இருந்தால் மட்டும் போதாது அதை நமக்கு விற்கும் அந்தச் சேவையை நமக்கு அளிக்கும் ஊழியர்களின் கண்ணியமும், பாதுகாப்பும் முக்கியம் என்பதை ஒவ்வொரு வாடிக்கையாளரும் உணர வேண்டும். நாம் சாப்பிடும் உணவின் ருசியிலும் திருப்தியிலும் அதை சமைத்தவர்களின் திருப்தியும் அதன் மூலப் பொருட்களை அளிப்பவர்களின் சந்தோஷமும் திருப்தியும் கூட அடங்கியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

படத்தின் மிக முக்கியமான பலம் அதன் வசனகர்த்தா. கனமான, சோகங்களும், உணர்ச்சிகரமான காட்சிகளும் நிறைந்த ஒரு சினிமாவை சோர்வில்லாமல் பார்க்க வைத்திருப்பது ஜெயமோகனின் வசனங்களே. நுட்பமான பல வசனங்கள் நம்மை அதிர வைக்கின்றன, காட்சிகளுக்கும் நடிப்பிற்கும் பெரும் பலம் சேர்க்கின்றன. அவரது அங்கதக் குத்தல்களும் நகைச்சுவைகளும் படத்தின் உக்கிரத்தை சற்று மட்டுப் படுத்தி இலகுவாக்குகின்றன. தேவையான இடங்களில் அழுத்தமான வசனங்களும், ஒரு சில இடங்களில் மௌனமும், சிறிய சின்ன வாக்கியங்களுமாக சினிமாவை ஜெயமோகன் உரையாடல்கள் நகர்த்திச் செல்கின்றன.

”என் தங்கச்சி அந்த அண்ணன் யாருன்னு கேட்டுக்கிட்டே இருந்தாள்.”
“ நீ என்ன சொன்னே?“
“நான் சிரித்துக் கொண்டேன்.”
இதை விட அழகாக ஒரு காதலை எப்படி வெளிப்படுத்த முடியும்?

வட்டார வழக்கை ஜெயமோகன் சரளமாகக் கையாள்கிறார். ஒரு திறமையான எழுத்தாளரை, ஒரு இயக்குனர் எப்படிப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு முமாதிரி. இதற்கு முந்தைய ’நான் கடவுள்’ படத்தில் கூட ஜெயமோகனின் திறமையும் படைப்பாற்றலும் இந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. சினிமாக்களில் நகைச்சுவை என்பது கவுண்டமணி செந்தில், விவேக் வடிவேலு போல கதையுடன் சேராமலே தனித்துத் துருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற தமிழ் படங்களின் எழுதப் படாத விதியை ஜெயமோகன் தன் வசனங்கள் மூலம் மாற்றியுள்ளார். நகைச்சுவை என்பது இயல்பாக நாம் அன்றாடம் பேசும் மொழியிலும், வாழ்வின் தருணங்களிலும் என்பதை தனது அங்கதமும், மென் நகைச்சுவையும் கூடிய வசனங்கள் மூலம் படம் முழுவதும் வெளிப்படுத்துகிறார். தமிழ் படங்களில் வசனகர்த்தாவின் பங்களிப்பை மறுபார்வைக்கு உட்படுத்தி ஒரு மாறுதலைக் கொணர்ந்திருக்கிறார் ஜெயமோகன்.

மொத்தத்தில் நாம் அன்றாடம் புழங்கும் இடங்களில், நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களுக்கு சமூகப் பிரச்சினைகள் குறித்து ஒரு பிரக்ஞை வர வேண்டும் என்று தோன்றி அதை ஒரு நல்ல சினிமாவாகவும் எடுக்கப்பட்ட ’அங்காடித் தெரு’ தமிழில் பாராட்டத்தக்க, வரவேற்கத்தக்க ஒரு முயற்சி. கட்சிகளும், யூனியன்களும், ஊடகங்களும், மனித உரிமை இயக்கங்களும் சொல்ல முன்வராத, அப்படிச் சொல்வதனால் அவர்களுக்கு எந்தவித ஆதாயங்களும் கிட்ட வாய்ப்பு கொடுக்காத, ஆதரவில்லாத, அப்பாவி ஏழைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் கூடச் சொல்லத் தோன்ற வேண்டும் என்று தோன்றிய இயக்குனர் வசந்த பாலனுக்கு என் மரியாதை கலந்த பாராட்டுதல்கள் உண்டு. அதை ஒரு ரசிக்கத்தகுந்த ஒரு தரமான படைப்பாக உருவாக்கியிருப்பதினால் அது மக்களிடம் பரவலாகச் சென்றடையும்.

(அடுத்த இதழில் – பகுதி 2: அங்காடித்தெரு: சில குறைகளும், இன்னும் சில சமூகப்பார்வைகளும்)