கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 2

இக்கதையின் முந்தைய பகுதியை இங்கு வாசிக்கலாம் : கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 1

ஆகஸ்டு

நாளிதுவரை அவன் புன்னகைக்கவே இல்லை. உள்ளூற தன்னியல்பிலேயே அவனிடம் ஒரு சுதாரிப்பு இருந்ததா. மௌன அவதானிப்பு – அடுத்த அதிரடிக்கான தயாரான எதிர்நோக்கு… என் வாழ்க்கை எந்த நொடியிலும் சட்டென நிறம் மாறலாம்… அவன் உதட்டில் இருந்து ஒரு சிறு புன்னகை உதிக்கவைக்க எங்களுக்கு கிட்டத்தட்ட ரெண்டு மாதம் ஆகிவிட்டது. ஒருவழியாக அவன் சிரிக்கத் தெரிந்து கொண்டான். சிலபோது அவன் தலையைக் கீழேபோட்டு கழுத்தை ஒருமாதிரி வட்டமடித்து எங்களைப் பார்த்து அயர்த்தலாய் ஒரு புன்னகையை வீசுவான். எங்கள் கவனத்தைத் தன்பால் இழுக்கிறான் என்று தெரிந்த புன்னகை அது. வாரங்கள் செல்லச் செல்ல குபீர் என்று சிரிப்பாய் வெடித்தான்.

ஆனாலும் இரவுகளில் எங்கள் வழமை மாறக்காணோம். தூக்கிவாரிப்போட எழுந்து கொள்கிறான். சரளா அவனை சாந்தப்படுத்த ஆனமட்டும் முயன்று நம்பிக்கை இற்றுப்போய் இன்டர்காம் பொத்தானை கிர்ர் என அழுத்துகிறாள். நாங்களும் தடால்புடாலென்று தடுமாறி ராத்திரி ராத்திரிகளின் தூக்கமின்மை சேர அல்லது சோர கீழே வருவோம். இருந்த மண்டைக்காய்ச்சலில் குழந்தைக்கான வேலியம் மருந்து, பெடிடோரில், தொடர்ந்து அல்ல, அவ்வப்போது, அதைக் கொடுத்து தூங்கப் பண்ணிவிட்டால் என்ன என்று யோசனை சொல்லியிருக்கிறேன். பத்து வயசு துருதுரு பையனின் அம்மாவான ஷைலா மறுத்திருக்கிறாள். ரொம்பச் சின்னக் குழந்தை அது, சிலசமயம் அப்படி மருந்துகள் வலிப்புவரக் காரணமாகி விடுவது உண்டு, என்றாள். வீட்டில் உதவிக்கு ஆளில்லாமல் ஒண்டியாய் ஒரு தாய் தன் அழுதுவிரைக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பாளோ…

அவன் பல் சார்ந்ததுதான் பிரச்னை என முதலில் மௌரீன் நினைத்திருந்தாள். டாக்டர் தாமஸ் அவனது வாயைப் பரிசோதித்துப் பார்த்தார். முத்தாய் நல்ல நிலையில் வளர்ந்த பற்கள். ஒரு இன்ஃபெக்ஷனும் இல்லை. டாக்டர் தாமஸ் சொன்னார் – பொழுதன்னிக்கும் அவன் தொட்டில்லியே தானே கெடக்கான். அதான் அப்பிடியே தவழ்ந்தாலும், பிறகு வாய்க்குள்ள விரலைப் போட்டு குதப்பினாலும் அழுக்கோ இன்ஃபெக்ஷனோ ஒண்ணும் இல்லை. மத்த பிள்ளைங்களுக்கு வெளிய விடறதே இன்ஃபெக்ஷனை, பல் சொத்தையை வலியை எல்லாம் கொண்டாந்துருது, என்றார்.

ஆக வாய்க்கோளாறு இல்லை என்று ஆனபின், திரும்ப இணையத்தில் புது ஆட்கள், இந்தமாதிரி எதும் பிரச்னையை அவர்கள்குழந்தைக்கு எதிர்கொண்டார்களா, என்னத்தையும் கண்டுபிடித்தார்களா என்று தேடினேன். எழுதவும் செய்தேன். உபதேசம் என்று உப்பு பிரயோசனம் இல்லாததை யெல்லாம் சொன்னார்கள். ஒரு இணையதளம், சுருக்கமாய் எதனால் எல்லாம் இன்ஃபெக்ஷன் எங்கயெல்லாம் வரலாம்… என்று சொன்னது. “இரவில் திகிலடைவது, புதிரான உறக்கச் சலனங்கள்… இவை பள்ளிக்குப் போகுமுன்னான குழந்தைகளிடத்தும், அதற்கும்பெரிய பிள்ளைகளிடத்தும் அப்படி நிகழ்கிறது. எப்பவும் அது உறக்கமற்ற மனசின் ஆழ்ந்த உறக்க சமயத்தில் ஏற்படுகிறது. அநேகமாக அது உறங்க ஆரம்பித்து ஓரிரு மணிநேரத்தில் ஏற்படுகிறது. அந்தத் திகில் சமயங்களில் – பொதுவாக அவை பத்தில் இருந்து நாற்பது நிமிடங்கள் வரை நீடிக்கின்றன… உங்கள் குழந்தை அப்போது படுக்கையில் இருந்து துள்ளியெழும். துவண்டு உடலைமுறுக்கி வீறிட்டழும். வீட்டுக்குள்ளேயே இங்குமங்குமாய் அலைபாயும். அதன் கண் விரியத்திறந்து கிடந்தாலும் அது விழித்துக்கொண்டிருக்கவில்லை. கூட நீங்கள் இருக்கிறதே அவர்கள் பிரக்ஞையில் கிடையாது. கெட்ட கனவு போலல்ல அது, திகில்காட்சிகள் அடங்கியதும் அப்படியே குழந்தை தூங்கிப்போய் விடுகிறது. காலையில் லவலேசமும் திகில் காட்சிகள் நினைவில் இராது. எல்லாக் குழந்தைகளிலும் ஐந்து சதவிகிதம் பேர் இப்படி இரவுத்திகிலில் ஆட்படுகிறார்கள்…“ இது எங்கள் பீமா பற்றி இல்லை, என்றே தோன்றியது. அவன் எங்கள் கைகளில் கொந்தளித்தான், வீறிட்டான். ஆனால் வீட்டில் இங்குமங்குமாக ஓடித்திரியவில்லை. இணையதளம் மேலும் சொன்னது. “அந்தத் திகில் காட்சிகளில் ஊடேபுக நினைக்க வேண்டாம். குழந்தை கத்தி விரைத்து தானே வெளியே எல்லாம் கொட்டிவிடட்டும். தன்னையே காயப்படுத்திக் கொள்கிறானா என்று பாருங்கள். அப்படி இல்லாவிட்டால் அவனை ஆறுதல் படுத்துகிறேன் பேர்வழி என்று பிடிக்கவோ தடுக்கவோ முயல வேண்டாம். நீங்கள் தடுப்பதால் அவன் மேலும் மோசமாக நடந்துகொள்ள நேரிடும். அமைதியாக அவனுடன் உரையாடுங்கள். எந்த விபத்தும் அவனுக்கு ஏற்பட்டு விடாதபடி கவனப்படுங்கள் போதும்.“

இந்த வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோ பாணி அறிவுரையாளர்கள், அவர்களுக்கு பீமாவின் முன்கதை தெரியாது. அவனை நிறுத்தாவிட்டால் தன்னையே புண்ணாக்கிக் கொண்டிருப்பான் அவன். இந்த வயசான காலத்தில் தாமதமாய் நாங்கள் பெற்றோர் ஸ்தானம் அடைந்திருக்கிறோம், ஒரு அனுபவமும் இல்லை, நாங்கள் எங்களுக்குள் பிரச்னையைப் பரிமாறிக் கொண்டோம். பிற பெற்றோர்களிடமும் கலந்துகொண்டோம். ஐரீன் சொன்னாள். இராத்திரி பதறுவது ரொம்ப சாதாரண விஷயம்தான். அவள் பிள்ளை எட்டு வயசிலேயே இப்படி பதறுவான்.

தற்செயலாய்க் கிட்டிய மந்திரம்

அவன் பிரச்னை நரம்புக் கோளாறு அல்ல, உணர்வுபூர்வமானது. அவனுக்கே இதெல்லாம் தானே பழகிக்கொள்ள நாளெடுக்கும். இப்படித் தடுமாற்றங்களில் அமெரிக்கர்கள் நிறைய வைத்தியச் செலவு செய்கிறார்கள். ஆனால் இந்த உணர்ச்சி அலையெழுச்சிகளுக்கெல்லாம் முழு நிவாரணம் என்பது இல்லை. கொஞ்சமாய் சிறு ஆசுவாசம் கிட்டலாம். திகிலுணர்ச்abstract-meditationசி ரொம்ப உள்ளாழத்தில் ஒளிந்திருக்கிறது, எடுக்கிறது சிரமம். ஆனால் விபரீதப் பொழுதுகளில் சட்டென எழும்பி அது கிடுகிடுவென மேலே வருகிறது.

ஒருநாள், தற்செயலாக, அவனை சாந்தப்படுத்தி கைத்தாங்கலாகவே அமைதிப்படுத்தி திரும்ப தூங்கவைக்கிற உத்தியை நான் கண்டறிந்தேன். அவன் அலறிக்கொண்டிருந்தான். உடலை முறுக்கி வில்லென விரைப்புடன் பின்னால் வளைந்தான். சட்டென அது நிகழ்ந்தாலும், உள்ப்பீதி தணியும்மட்டும் திரும்பத் திரும்ப அப்படி அவன் தன்னைப் படுத்திக்கொண்டான். அவன் கண்கள் திறந்திருந்தாலும் இன்னுமேகூட அவன் உறக்கத்தின்பிடியில் தான் இருக்கிறான் என நாங்கள் அறிந்தோம். எப்படியாவது அவனை உசுப்பி எழுப்பி அவன் பீதியைக் கலைத்து நல்லபடியாக பாதுகாப்பாக ஒருபிரச்னையும் இல்லாமல் இருக்கிறான் அவன் என அவனுக்கு உணர்த்திவிட்டால் என்ன, முடியுமா? ஒரு பேயும் பிசாசும் அவனைத் தேடிப் பின்னால் வரவில்லை. கும்மிருட்டில் தலைகுப்புற விழுந்துட்டதாக அவன் விக்கித்துத் தவிக்க வேண்டியதில்லை. அவன் ஒண்டியாய் இல்லை. யாரும் அவனை கைவிட்டுவிடவும் இல்லை. நிச்சயமாக இல்லை. என்றாலும் எதனால் அவனுக்கு இத்தனை நடுக்கம்… அப்படி கிடுகிடுக்கிறாப் போல என்னதான் உள்ளே காண்கிறான்… இராத்திரித் தூக்கத்தில் கலவரப்படுகிறான் அவன், என்பது குழந்தை நிபுணர் கருத்து. தூக்கசமயம் என்ன பயம் எதைக்கண்டு பயம் என்றெல்லாம், சின்ன வயசில் ஒரு மாதிரி, பெரியாளாயிட்டா ஒருமாதிரி என்று பயம் மாறுமா தெரியவில்லை. என்றாலும் பயம் என்பது வரத்தான் செய்கிறது. காத்திருக்கிறது அது.

அன்றைய ராத்திரி இவளும் சரளாவும் சமாளிக்கமுடியாமல் தெம்பே விட்டுப்போய் குறுகி உட்கார்ந்திருந்தார்கள். குழந்தையை கவனித்துக்கொள்ள என்பது என்முறையாகி விட்டது. அவனைக் கையில் வைத்துக்கொண்டு இங்குமங்கும் அலைகிறபோது, மனோரீதியாக வித்தியாசமாய் எதாவது முயற்சி பண்ணிப் பார்த்தால் என்ன என்றிருந்தது. மனுசாள் ஸ்பரிசத்துக்கு அடங்குகிறானில்லை. அந்த வருடலே சும்மா ஒப்புக்குத் தடவலாக ஏனோதானோவாக, தொடுவதிலேயே ஒரு அவசரம்… நெருப்பு அணைக்க நீரை வாரி ஊற்றினாப் போல… இரும்புக் கட்டிலில் அவன் முழித்துக்கொண்டுதான் கிடக்கிறான். பெரியவர்கள் அவனுக்கு துரோகிகள்தான்… பாதுகாவலரோ, ஆபத்பாந்தரோ கிடையாது. ஒரு மனிதக்குரலைவிட, ஸ்பரிசத்தை விட அவனுக்கு எது சிலாக்கியமானதாக சத்தியமானதாக அவன் நம்பக் கூடும்? எது அவனை இந்த இரவு வீறிடலில் இருந்து விடுவிக்கக் கூடும்? எது அவனை இந்த இரவுக்கிலி யெல்லாம் சும்மா, என்று அமர்த்தி, நீ ராசாப்பயல்டா, உனக்காவது பயமாவது எனஆளை பலப்படுத்தக் கூடும்?

அவன் காதில் மெல்ல இப்படிச் சொன்னேன். “ஏய் அப்பு இருக்காண்டா உங்கூட. அப்பு உன்னைப் பாத்துக்குவான். எதுக்கு பயப்படணும், ஏன் பயப்படணும்? உனக்கு என்னன்னாலும் அவன் கவனிச்சுக்குவான். அப்புக்கு உம்மேல எவ்ள பிரியம்டா கண்ணு… பீமா, பாரு அதோ அப்பு… அப்பு அப்பு அப்பு…“

மகா ஆச்சர்யம். அப்பு என்கிற வார்த்தை அவன் தூக்கத்திலும் கனவிலும் உள்ளேபுகுந்து வேலைசெய்கிறது. அப்புமந்திரம் அவனைப் பீதியில் இருந்து விடுதலைபெற உதவியது. மெல்ல அடங்க ஆரம்பித்தான். வீறிடல் விசும்பல்களாயின. முதுகெனும் வில் திரும்ப நேர்கோடாகியது. இறுக்கம் தளர்ந்து ஆழமான மூச்சுகள் நிதானப்பட்டன. உறக்கம் தழுவியது. நல்ல உறக்கத்தில் இருந்த நாய், அது என்ன மாஜிக் செய்துவிட்டது, அதற்கே தெரியாது! பெரிய அப்பு – அதுவே பீமாவின் ஆதுரமான பாதுகாப்பு நிழல். பீமா முதன்முதலாய்த் தொட்ட, கையில் ஏந்திய விலங்கு அது. அந்த விலங்கின் அருகாமையில் அவனுக்கு ஒரு ஆசுவாசம், இதம் கிடைத்தது. விலங்குகள் இயற்கையின் சக்தி கேந்திரங்கள், மனுசாள் நம்மைவிட அவை இயற்கையின் வழிப்பட்டவை. அப்பு தன் சக்தியை குழந்தைக்குப் பரிமாறினாள். அப்பு! – ஒவ்வொரு தடவை அவனை சாந்தப்படுத்தவும் இந்த வார்த்தை அபாரமாய்க் கைகொடுத்தது.

நாளிதுவரை நான் ஒரு சுயநலமான ‘எழுத்தாள வாழ்க்கை‘ வாழ்ந்தாகி விட்டது. யாரைப் பத்தியும் அலட்டிக் கொள்ளாத வாழ்க்கை. இப்போது என் கூட்டில் இருந்து வெளியே வருகிறேன். எல்லாரும் என்னை தனிமைவிரும்பி என்கிறதாய்த்தான் சொன்னார்கள். அதனாலேயே எங்கள் வீட்டு இந்த விருந்தாளியை வாரியணைத்து அன்பைப் பொழிந்தார்கள். எல்லாக் குழந்தைகளையும் போலவே அவனும் உண்டான் செரித்தான் கழிந்தான் உறங்கினான் விழித்தான் அழுதான்… யாராவது ஆறுதல்படுத்த விரும்பினான். அந்த முதல் தொடுகைப் பரிமாற்றம்… அதனால் அவனையிட்டு என் அக்கறை தன்னியல்பாய் குவிய ஆரம்பித்திருந்தது. ஆனால் இன்னமும் அவனை எப்படி அணுகுவது என்பதில் ஒரு தத்தளிப்புதான் எனக்கு. விரைவில் அவன் எங்களைவிட்டுப் பிரிந்து போய்விடுவான். என்றாலும், யப்பா அந்தக் காலத்துல இவன் படுத்தின பாடு, என்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அவன் அறை கீழே. அடிக்கடி எங்கள் படுக்கையறைக்கு மேலே வருவான். நான் பொதுவாக மாடியிலேயே இருந்தேன்… சின்னப் பையன், மாடிப்படிகளில் தானே ஏறிவர முடியாது. நான் தடதடவென்று இறங்கினால், பார்த்துவிட்டு சட்டெனக் கைநீட்டி என்னிடம் தாவுவான். மௌரீன்… தன்னியல்பாகவே தாய்மைபூர்வமானவள். எல்லாப் பொண்ணுகளிடத்தும் இயற்கையாகவே ஒரு தாய்மை உணர்ச்சி ஊறுகிறது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். தங்கள் குழந்தைகளிடமே சமாளிக்க முடியாமல் முழிக்கும் எத்தனையோ அம்மாக்களை, சிநேகிதர்களின் மனைவிகளை நான் கண்டிருக்கிறேன். ஆனால் பீமாவின் உடம்பும் மனசும் சார்ந்து இவள் காட்டும் அபாரமான பரிவும் பொறுமையும்… பீமா அரவணைப்புக்கும் பரிவுக்கும் ஏங்கினான், அதை அவளால் ஒரு தாராளத்துடன் பொழிய முடிந்தது. எனக்குப் பிடிகிடைக்க கொஞ்சம் காலம் எடுத்தது, ஆனால் அதிக காலம் அல்ல, என்றே படுகிறது. இவளது மற்றும் உமாவுடைய சிக்ருஷைகள், அவனை அவர்கள் குளிக்க கிளிக்க வெச்சி சுத்தம் செய்கிறதும் உணவளிப்பதும், கண்டு நான் உள்ளத்தில் பூத்தேன். பூரித்தேன். ஒரு மாதம் இங்கே உமா தங்கினாள், பிறகு அவளுக்கு இல்லம் திரும்புகிறாப் போல ஆகிவிட்டது. பெரும்பாலான சமயங்களில் சரளாதான் அவன்கூடவே இருக்கிறாள். சிலநாள் பகலில், சிலநாள் ராத்திரிகளில் என்று மத்த பணிப்பெண்களுடன் அவளுக்கு முறை அமைகிறது. ஒருத்தரும் நிரந்தரப்படாமல் பெண் பெண்ணாக வேலை என்று வந்துவிட்டு கொஞ்சநாள் வேலை பார்த்துவிட்டு திரும்ப ஊருக்குள் காணாமல் போனார்கள். மாதக்கணக்கில் சிலர். சிலரோ ஒருநாள் ரெண்டுநாள். என்ன குழந்தையோடு கூடச் சேர்ந்து தூங்கணும், அது ஒரு வேலையா என நினைத்து வேலைக்கு வந்தவர்கள், அவனது தூக்கமும் ராத்திரி அழிச்சாட்டியமும் பார்த்துவிட்டு ஓடிவிட்டார்கள். அவர்களின் நல்ல தூக்கத்தில் அவன் அபாயச்சங்கு ஊதினான் போல.

எங்க பிள்ளை, அவனுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. அதை அவன் வெளிப்படுத்தினான். வீல் என்று, அழுகை என்று ஆரம்பிக்காவிட்டால் அவன் சரளாவையோ, கூட இருக்கிற பெண்ணையோ சடையைப் பிடித்து இழுப்பான். சின்னக் கை, சன்னக் கை, ஆனால் என்ன பலமான இறுக்கமான பிடி. அவளோ அல்லது உதவிக்கு என நானோ போய் அவன் கைவிரலை ஒவ்வொன்றாக மெல்ல விடுவிக்க வேண்டும். ஆனால் ஒருவிரலைத் திறந்தால் மத்த விரலை கப்பென்று மூடிக் கொள்வான். அழகான அப்பாவிச் சாயல் கண்களால் எங்களை அவன் பார்ப்பான். ‘என்னாச்சி நான் எதும் திரிசமன் பண்றேனா?‘ பண்ணத்தான் செய்கிறான் என்று தெரிந்த ஆஷாடபூதிப் பார்வை! ருத்ராட்சப்பூனை. கூடியசீக்கிரம் எங்களுக்குத் தெரிந்தது அவனுக்கு கோபம் அநியாயத்துக்கு வந்தது. இந்த ஒட்டுமொத்த உலகத்தையிட்டும் கோபம், அதைக் குற்றம்சொல்ல முடியாதுதான். அவன் உரிமை அது. ஆனால் ஆச்சர்யம் என்னன்னா ஒரு இத்துனூண்டுக் குளுவான், தான் சரியாக மதிக்கப்படவில்லை, என்று அதற்கு எப்படித் தெரிந்தது. அதை நாங்கள் போஷித்து வளர்க்கவில்லை. நிஜத்தில் நாங்கள்தான் அதனால் பேறு பெற்றோம். அவன்இயல்பிலேயே அனுபவம் சார்ந்து சூட்சுமம் சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும், என்று தோன்றுகிறது. எல்லாருக்குமே எல்லா உணர்ச்சிச் சலனங்களும் உண்டு – வெறுப்பு. காதல். கோபம். பொறாமை. பேராசை. அத்தோடு மெத்தனப் போக்கு. உடம்பில் கூழாக எல்லாம் கலந்திருக்கிறது. குழந்தை வளர்கிற சூழலைப் பொறுத்து எதோ ஒரு உணர்ச்சி மேலெழும்பி அவனது குணமாகப் பரிணமிக்கிறது. அவன் குண விசேஷத்தின் படியே அவனது வாழ்க்கையின் பின் அனுபவங்களும் அமைகின்றன. வலி மற்றும் புறக்கணிப்பு – அவையே அவனது கோப குண்டத்தின் யாகத் தீ. திடுதிப்பென்று அவன் உருமினான், தன் வாழ்க்கை எத்தனை மோசமாய் இருக்கிறது, என ஞாபகம் வந்தாப் போல. அதன் காரணம் நாங்களே என அவன் நினைத்தாப் போல. உள்ளூற இருந்த காயம், அதன் வலி, அதனாலேயே கிளம்பியது அந்த உருமல், என நினைத்தோம். மனமே போர்க்களமாய் முட்டிமோதும் உணர்ச்சித் ததும்பல்கள். இறந்த காலம் ஒரு பக்கம், கூடவே எங்களுடனான நிகழ்காலம்… இரண்டுமே அவன் மனதில் இருந்தன. அவனது குமுறல், அதைக் களையாய்க் களைந்தெறிய எங்களுக்கு மாதங்கள் பிடித்தன.

எனது தாற்காலிக மகன், பீமா

இந்தியாவுக்கு வெளியேயான, எனது வெளிநாட்டு நண்பர்களுக்கெல்லாம், மின்னஞ்சலில் எங்கள்வீட்டு குட்டிவிருந்தாளி பற்றி தகவல் எழுதினேன். லண்டன்வாசி எங்களுக்கு ரொம்ப ரொம்ப வருஷ நண்பர் ஒருவர், பிரையோனி, அவன் விருந்தாளி அல்ல, ‘உங்கள் தாற்காலிக மகன்‘ என திருத்தம் கொடுத்தார். மகன், என்ற வார்த்தை… அதுவரை அப்படியான வார்த்தையை பீமாவுடன் இணைத்து நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. இதுவரை எங்கள் இருவரிடம் இல்லாத உறவு – மகன்… அவன் இவன்தானா?

ஆக, பீமா எனக்கு மகனானான்! நான் தந்தையானேன்! தாற்காலிக அப்பா அல்ல, ஒரு குழந்தை – அதற்கு எல்லாமே நிரந்தரமானதுதான், தாற்காலிகம் என்பதே அது அறியாதது. நேரத்துக்குப் பசிக்கிறது, என்பதைத் தவிர காலபபிரக்ஞை அது அறியாதது. காலம் முடிவற்றது… அவன் பார்வையிலும் உணர்ச்சியிலும் பாசாங்கற்ற சத்தியம். அது தரும் நிரந்தரத்தன்மை கொண்ட மதிப்பீடுகள்… அவன் பாசத்தேவைக்கான கைநீட்டலில் நான் சும்மாவாச்சும் பாவனை எப்படி செய்ய முடியும்? பிரையோனியின் கடிதம் வந்து கொஞ்சநாள் ஆகியிருந்தது. நான் கீழேதான் இருந்தேன். காலைச் சிற்றுறக்கம் கலைந்து அவனது அறையில் இருந்து அழுதபடி வெளியே வந்தான் பீமா. இடுப்புக்கச்சை அப்படியே நழுவி இறங்கிக் கொண்டிருந்தது. நோஞ்சானான பூஞ்சையான ஆதரவற்ற மனுசக்குஞ்சு. எனக்கும் அவனுக்கும் இடையே ஒரு அறைநீளத்துக்கு இடைவெளி. நான் குனிந்து கைநீட்ட அவன் ஓடிவந்து என்னிடம் தாவினான். சட்டென தானாக அடங்கியது அழுகை. ஒரு ஆசுவாச மூச்சு. அதுவரை எந்த சிசுவும் குழந்தையும் இப்படி ஆதரவுதேடி ஓடி என்னிடம் வந்தது கிடையாது. பொதுவாக அவர்கள் என்னைப் பார்க்கவும் விரைத்துக்கொண்டு அப்படியே ஸ்தம்பித்து நிற்பார்கள். அல்லது, ‘…ம்மா?‘ என்று பாதுகாப்பு வட்டத்தை நாடுவார்கள். நாப்பி நனைந்திருந்தது. அவன் அறைக்கு அவனை எடுத்துப்போய் மல்லாக்கக் கிடத்தினேன். காலைத் தூக்கி நாப்கினை உருவவும் மாத்திக்கவும் சமத்தாகக் காட்டினான். வெல்க்ரோ பட்டிகளால் நன்றாக ஒட்டி மூடிவிட முடிவதால் எனக்கே நாப்கினை உரிக்க புதிது மாட்ட சுலபமாய் இருந்தது. குனிந்து அவனை முத்தமிட்டேன். கட்டிச்சமத்தாய் அதையும் வாங்கிக் கொண்டான். திரும்ப அவன் எங்களை முத்தமிட நிறையக் காலம் எடுத்தது.

abstract_meditationஅடுத்த சில நாட்கள். அவனுக்கும் எனக்குமிடையேயான உணர்ச்சி வெளிப்பாட்டின் தயக்கமான இடைவெளிகளையும் சாதகங்களையும் யோசிக்க ஆரம்பித்தேன். சொத்தைப்பல் என்றால் மருத்துவர் எத்தனை பூப்போலக் கையாள்வார், அதைப்போல. அகழிபோலும் மகா விரிசல், அதன் ஊடே கடந்துவர முடியாமல் விழுந்தான் பீமா. முன்பு மரியா என்ற பெண்ணை தத்தெடுக்க யோசித்தோம். உடல் ஊனமுற்ற பெண்… அமெரிக்காவில் இங்கத்தயதை விட மேலான வாழ்க்கை அவளுக்குக் கிடைக்குமே என்றிருந்தது. இப்பத்தய உணர்ச்சிகரமான சென்டிமென்ட் எல்லாம் அந்தநேரம் இல்லை. அது அறிவுத்தளத்தின் சிந்தனை. அவளும் இவனைப்போல எங்களுடனேயே இருந்தாள் என்று சொல்ல இயலாது, வருவதும் போவதுமாக இருந்தாள். அந்த தத்தெடுக்கிற விஷயம், திரும்பவும் இப்போது கிளம்பியிருக்கிறது. ஆனால் இப்ப நிலைமை வேறு. நான் பீமாவை விட அறுவது வயது பெரியவன்… என்பதால் இடைவெளியோ இன்னும் பெரிசாய் வாயைப் பிளந்துவிட்டது. மேடும் பள்ளமும் பக்கத்தில் பக்கத்தில் என்கிறாப் போல. சமனப்படுத்துவது எப்படி? எனக்குள் பேசிக் கொண்டேன். அவனுக்குப் பத்து வயசு, அப்போது எனக்கு எழுபது. பதின் வயசில் அவன் திரும்பவும் அநாதையாகிவிடக் கூடும். எங்கய்யாவும் அவரது சகோதரியும் நல்லா வாழ்ந்தார்கள். எண்பதுகளைப் பார்த்தார்கள். எனக்கு குடிப்பழக்கம், புகைப்பழக்கம் எல்லா இழவும் உண்டு. தினசரி டென்னிஸ் ஆடுகிறேன், காலை உலா போகிறேன், அதையும் சொல்ல வேண்டும். பீமாவுக்கு இருபது, என்றால் எனக்கு எண்பது. சந்தேகம் இல்லாமல், மௌரீன் மேலதிக காலம் அவனுடன் இருப்பாள், என்றாலும் எத்தனை வருடம்? இருபத்துச் சொச்ச ஆரம்ப வருடங்களிலேயே திரும்ப அவன் அநாதையாகி விடுவான். அதைவிட சீக்கிரமே கூட, பத்தில் பன்னிரண்டில் பதினைந்தில் கூட, அநாதையாகலாம்.

எனக்கு அப்பப்ப ஜோசியத்தில் நம்பிக்கை தலைகாட்டும், அப்பா வழியிலும், நமது பண்பாட்டு அளவிலும் என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டிருந்தது அது. நான் பிறந்தபோது என் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் இவன் ஒண்ணா பன்னெண்டு வயதில் இறந்துவிடுவான், அதில் தப்பித்தால் ஆயுசு கெட்டிதான்… என்று சொன்னார். ஆனால் ஒரு வருத்தமான விஷயம், என் அம்மா, அகால மரணம் எய்துவாள் என்பதை அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆக அவர் கூற்றை நம்புவதா விட்டுவிடுவதா என்பதை அப்பாவுக்கே நாங்கள் விட்டுவிட்டோம். பத்துக்கு நாலு பழுதில்லாமல்தான் சொன்னார் அவர். சின்ன வயசில் எனக்கு அடிக்கடி உடம்பு படுத்திக் கொண்டுதான் இருந்தது. பன்னிரண்டில் மஞ்சக்காமாலையும் இன்ஃப்ளுவன்சாவுமாய்ச் சேர்ந்து வந்து ஒரு பிடி பிடித்தது என்னை. பிழைத்தது மறு பிழைப்பு. எனது இறுதிமூச்சுக்கு என் குடும்பத்தார் எல்லாருமே என் கட்டிலைச்சுற்றி நின்றது ஞாபகம் இருக்கிறது. அந்த அபாய முன்னறிவிப்பை நான் கடந்தேன். அதிலிருந்து ஜோசியத்தில் லேசாய் ஒரு சபலம். இப்பசத்தைக்கு நான் பல வருடங்களாக எந்த ஜோசியரையும் பார்க்க கொள்ள இல்லை. இடைப்பட்ட காலத்தில் இருவர் நான் எழுபது நடுவில் எண்பதுக்குள் இறந்து போவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். 75. 76. ஒருவேளை எழுபத்தெட்டு, அந்த விடைபெறும் நாள் பீமாவின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது என் மனதில்.

எங்களுடனான பீமாவின் எதிர்காலம் எங்ஙனம் அமையும்? பீமாவின் ஸ்தானத்தில் இருந்து யோசித்துப் பார்த்தேன். வளர்ப்புப் பெற்றோர் இத்தனை கிழங்களாக இருப்பதைப் பற்றி அவன் என்ன நினைப்பான்? பள்ளிக்கூட பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டங்களுக்கு நாங்கள் போகிறோம், அவனது சக நண்பர்களின் பெற்றோர்கள் முன்-இருபது,ழழங்ழH இருபதுகள், அதிகபட்சம் முப்பதுகளில் இருப்பார்கள். அவர்கள் இளைய முகங்களுக்கும் வாழ்க்கையின் பரபரப்பு முறைக்கும் நடுவே நாங்கள் ‘அந்தக்கால‘ ஆத்மாக்கள். குழந்தைகளால் பெற்றவர்களின் நட்புவட்டம் விரிகிறது, எனக்குத் தெரியும். அங்கே எங்களுக்கு இடம் இல்லை. அவர்கள் வேறு தலைமுறை ஆட்கள். ‘வேறு‘ அல்ல, ரெண்டு தலைமுறைக்கு பிந்திய இளைஞர்கள். பீமா சங்கடப்படுவான், வெட்கப்படுவான். அவமானமாய்க் கூட உணரலாம். வேறு உதாரணம் வேண்டாம், நானே உதாரணம், சின்ன வயசில் நானே விசனப்பட்டிருக்கிறேன், அவமானமாய் உணர்ந்திருக்கிறேன். என் வளர்ப்புத்தாய் ஒரு வெள்ளைக்காரி. என் கூட்டாளிகள் அத்தனை பேரின் அம்மாவும் பழுப்புத்தோல்க்காரிகள். பள்ளி விளையாட்டு விழாக்ளிலும், பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டங்களிலும் அவள் தனியாய் துண்டாய் ஒட்டாமல் தெரிவாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. எங்கள் குடும்ப அனுபவங்களை வைத்து ரெண்டு முழு நாவல்களே எழுதியிருக்கிறேன். முதலாவது ‘கௌரவ மேடை‘. பெங்களூருவில் நடக்கும் கதை. நான் அபாரமாய் மதிக்கிற எழுத்தாளர் கிரஹாம் கிரின் அதை வாசித்துவிட்டு நாவல் அவரை ரொம்ப ஆகர்ஷித்தாக ச் சொன்னார். (ஆனால் அதை வெளியே அவர் எங்கும் குறிப்பிடவில்லை, எனக்கும் அவர் கருத்து, என வெளியிட அனுமதி தரவில்லை.) ஆங்கில மதிப்புரையாளர்கள் அதை சிலாகிக்கவில்லைதான். இந்த ஆங்கில ராட்சசி பாத்திரத்தை அவர்கள் கண்டித்தார்கள், எல்லா ஆங்கிலப் பெண்களையுமே நான் கொச்சைப்படுத்தி விட்டதைப் போல. இரண்டாவது நாவல் ‘சொர்க்கத்தில் இருந்து இறங்கும் படிகள்‘. முன்னதைவிட இதில் சுயவாழ்க்கைச் சரக்கு அதிகம். சென்னையில் நிகழ்கிறாப் போன்ற கதை. அதே காரணத்துக்காக அதே மரியாதையே எனக்கு ஆங்கில மதிப்புரையாளர்களிடம் கிடைத்தது. எனக்கு இவற்றில் இருந்து ஒரு பாடம். ஆங்கில சீமான்களை சீமாட்டிகளை நாயக நாயகி என்று சித்தரிக்க வேண்டும். தியாகச்சுடராக, தூயவராக, நிமிர்ந்தவராகவே தான் சொல்ல வேண்டும்.

எலிசபத், அவளும் சுவிகாரம் எடுக்கப்பட்டவள்தான், அவளைப் பார்த்தபோது என் வளர்ப்புத்தாய் நினைவுகள் வந்தன, என்றாலும் முன்பு சொன்னதைப்போல அத்தனை உக்கிரமாக அல்ல. ‘என்னை வளர்த்து ஆளாக்கிய வளர்ப்புப்பெற்றோரை நான் அபாரமாய் நேசித்தேன்‘ என்றாள் அவள். ‘ஆனால் என் பள்ளி நண்பர்களின் பெற்றோரை விட அவர்கள் வயதானவர்கள். எங்கள் பள்ளி விழாக்களுக்குன்னு பழைய கார் எடுத்துக்கிட்டு அவர்கள் அந்த வயதில் வருகிறதைப் பார்க்க என்னமோ மாதிரி இருக்கும்.‘ பீமாவும் நாங்கள் விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என பள்ளிக்கூடம் வரும்போது எங்களையிட்டு இப்படி முகம் சுருங்குவானோ?

வெட்டவெளிக்கு வந்துவிட்ட எலி பதறி ஒளிய இடம்தேடி அல்லாடுவதைப் போல என் மூளையில் யோசனை ஓடிக்கொண்டே இருந்தது. இந்த முதுமையைத் தாண்டிவிட முடியுமா எப்படியாவது? எந்த நீதிமன்றத்திலும் பதினெட்டு மாதக் குழந்தையை அறுபது வயது தம்பதிக்குத் தர சாதகமான தீர்ப்பு கிடைக்காது, எனக்குத் தெரியும். நாற்பதே அதிகபட்ச வயது தத்து எடுத்துக்கொள்ள. இங்கிலாந்திலும் பிற நாடுக்ளிலும், எல்லா இடத்திலும் சட்டம் ஒரேமாதிரி தான். சட்டரீதியாக மாத்திரமல்ல, உளவியல் ரீதியாகவும் எங்களுடைய இந்த வயசுவித்தியாசம் மகா உறுத்தலாய் இருந்தது. எந்தச் சாவிக்கும் திறக்காத வங்கிப் பெட்டகம் போலிருந்தது விஷயம். ஒரு சில நண்பர்கள், வயசானா என்ன, என்று சொன்னார்கள். மெட்ராஸ் நகர வரலாற்று ஆய்வாளர் முத்து இப்படிச் சொன்னார். லண்டனில் இருந்து நிக்கி மேக்கி ஈமெய்ல் செய்தாள்… அவளது பத்து வயதுக் குழந்தையை சுவிகாரம் எடுத்துக்கொண்டபோது அவள்கணவன் குழந்தைக்கு அறுபதுவயசு மூத்தவன், அதாவது எழுபதுவயது அவனுக்கு, என்றாள். ஆனால் கணவனைவிட அவள் வயதில் மிக இளையவள் – அவள் நிலைமை வேறுதான். எனக்கும் மௌரீனுக்கும் அந்தளவு வயசு வித்தியாசம், தத்து எடுக்க சாதகமாய், அமையவில்லை அல்லவா?

எங்களோடு இவ்வாறாக, நாங்கள் அவனிடம் பாசம் பொழிவதை நாங்களே அறியாமல் ஒரு மூணு மாசம் பீமா உடனிருந்தான். இப்ப நினைச்சிப் பார்க்கிறபோது எங்கள்மீதான அவனது நேசம் சத்தியமானது.சிநேகிதர்களிடம் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாப் போல பீற்றிக்கொண்டேன். “பாருங்களேன், விதி சடார்னு இந்தக் குழந்தைக்கு எப்படி கதவுதிறந்திட்டது… ஒரு வெறுப்பிலேயே இவன் பிறந்தான், ஒரு அநாதை இல்லத்தில் கொண்டுபோடப் பட்டான், கண்டெடுக்கப்பட்டு, பிறகு அறுவைச்சிகிச்சையும் ஆனது, இப்ப பார்த்தா பெரிய சந்தடியான வீட்ல எங்களோட…! விதி இப்படியே இனி ஐரோப்பா வரை அவனை அழைச்சிட்டுப் போகுது. அருமையான இளைஞனா தலையெடுத்துருவான்…“ காக்டெயிலிலும், விருந்திலும் சும்மா நேரம்கடத்துகிற பாவனையில் வாய்ஒட்டாமல் இப்படிப் பேசினேன். இப்படி ஒரு விதியை நிர்மாணித்து அவனை அதனோடு பிணைத்து உருட்டி விட்டது யார்? எப்படி அது செயல்படுகிறது, நமது வாழ்க்கையை என்னென்ன மாதிரியான சுழல்கள் நிர்ணயிக்கின்றன? உலகப் பொது விஷயமாக அது இயங்குவதில்லை, ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது அது. யாராவது வெளிநாட்டுப் பெண்கள் வருவார்கள் – அத்தோடு அவன் வாழ்க்கையே முகமும் நிறமும் மாறிப்போய்விடும். அப்படியொரு விதி அவனுக்கு அமையுமா? நேரமும் காலமும் கூடி வந்து, அவன் – ஏமாற்றங்களுடனான இந்தப் சின்னப் பிள்ளை, திரும்பவும் புதிய உலகில் புகுவானா? நான் இந்து மத நியதிகளைப் பின்பற்றுகிறவன் அல்ல, என்றாலும் சில சமயங்களில் கர்மவினை நம்மை ஆட்டுவிக்கிறது என்பதையெல்லாம் நம்ப வேண்டியதாகி விடுகிறது. நாம் கண்டறிந்த வார்த்தைகள் – கர்மவினை. விதி. துரதிர்ஷ்டம். தீயூழ். நல்லூழ். தலையெழுத்து. இன்ஷால்லா… நம்மை, பிறரை ஆட்டுவிக்கிற அலைக்கழிக்கிற சக்திகளைப் புரிந்துகொள்ள அர்த்தப்படுத்திக்கொள்ள நாமே உருவாக்கிக்கொண்ட வியாக்கியானங்கள். பதில்தெரியாத இழப்புக்கான சமாளிப்புகள். இந்த வார்த்தைகள் அர்த்தமற்ற வலிநிவாரணிகள், வியாதியை சொஸ்தப்படுத்தும் சக்தி அவைகளுக்கில்லை. அந்நேர சௌகர்யம். அவ்வளவே. எலும்புமுறிவுக்கான புத்தூர்க்கட்டு. மறுபிறவி என்பதில் நம்பிக்கை இருந்தால், நமது முன்ஜென்ம வினைகளுக்கான பரிசுகளும் தண்டனைகளும் இப்பிறவியில் அனுபவிக்கிறதாகப் படுகிறது. எனக்கு முன்னால், நான் பிறக்குமுன்னால் யாரோ என்னவோ செய்தார்கள் என்று நான் கஷ்டம் அனுபவிக்கவேண்டும், என்பது சரியல்ல. மரணம் சார்ந்து இந்தியச் சிந்தனைமரபு அப்படி இருக்கிறது. இங்கே சில சமாச்சாரங்கள் விதியோடு முடிச்சு போடப்பட்டுள்ளன. அதையிட்டு நாம் செய்ய ஒன்றுமில்லை, செய்ய முடியாது, என்கிறார்கள். மட்டுமல்ல, நம் வாழ்க்கை இன்னும் பல விஷயங்களோடு பின்னிப் பிணைந்துள்ளது என்கிறார்கள். என் கர்மவினையோடு கூடவே என் அம்மாவின் கர்மவினை. அவள் செய்து நான் நட்டாத்தில். எக்குத்தப்பா ஜோசியர்கள் என்னத்தையாவது சொல்வார்கள் என்று பட்டாலும், பீமாவின் ஜாதகத்தை கணித்துவிட்டால் தேவலை என்று இருந்தது. ஒரு மங்கலான ஓவியமாக குத்துமதிப்பாய் அவனது விதியையும் பார்த்திறலாம்… துரதிர்ஷ்டவசமாக, அவனது ஜென்ம நட்சத்திரம், பிறந்த நேரம், எந்த விவரமும் தெரியாது. (பிறந்த தேதி, அது மாத்திரம் பத்தாது.) அவனது ராசி, லக்னத்தை எந்த ஜோசியனும் கட்டம்கட்டிச் சொல்ல முடியாமல் இருந்தது. கைரேகை பார்க்கலாம் என்று பார்த்தேன். ரேகை பார்க்கிற அந்தப் பெண்மணி குழந்தையின் ரேகையைப் பார்க்கமுடியாது என்றுவிட்டாள். அது எனக்குப் பிடித்திருந்தது.அச்சானியமாய் வார்த்தைவிட அவள் தயாராய் இல்லை. அவனது ஜீவ ரேகைகள் இன்னும் உருவாகவில்லை, என்றாள் அவள். எப்படி எங்கே விதி அவனை இழுத்துச் செல்லும், என அறிய நான் காத்திருக்கத்தான் வேண்டும் என்றாகி விட்டது.

அக்டோபர் – வந்தது ஒரு பொறுப்பு

அக்டோபர் பத்தொன்பதாம் நாள் மௌரீன் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தாள். அவள் அலுவலகம் போய் ஷைலாவைப் பார்த்துவிட்டு வந்திருந்தாள்.

“ஒரு தம்பதி பீமாவை சுவிகாரம் கொள்ள வந்திருக்கிறார்கள்“ என்றாள். “காகித வேலைகள் ஜரூராகி விட்டன.“

“எத்தன்னாளா?“ என்று சமாளித்துக்கொண்டு கேட்டேன். எனக்கும் அந்த ஏமாற்றம் தொற்றிக்கொண்டது. சுவிகாரம் சார்ந்து முறையாய் என்னென்ன காகிதங்கள் தேவைப்படும் என்று எனக்குத் தெரியாது.

“கிறிஸ்துமஸ்சோடு அவன் கிளம்பிவிடுவான்…“

“நாமளே சுவிகாரம்னு… எடுத்துக்க முடியாதா…“

“உங்களுக்கு வயசு அறுபதுக்கு மேல. “ மெல்ல ஞாபகப்படுத்தினாள். “எந்த நீதிமன்றத்தி…“

என் வயசு மீது எனக்கே ஆத்திரம் வந்தது. அதுவரை அதை – என் வயசை பெருந்தன்மையாக அங்கீகிரித்தவன்… ஐயோ ஒரு பத்துவருஷம், இருபதுவருஷம் கம்மியா ஆக முடிந்தால் பீமா எங்கள் கையைவிட்டுப் போகமாட்டானே, என்றிருந்தது. அறுபது வயது ஆகிவிட்டால் சுவிகாரம் எடுக்க முடியாது, என்பது கொடுமையாய் இருந்தது, எங்கள் இருவருக்கும் இன்னும் சக்தி அபரிமிதமாய் இருக்கத்தானே செய்கிறது. அதைவிட முக்கியம், எங்களிடம் இந்தக் குழந்தையின் மீது அளப்பரிய நேசம் இருக்கிறது…

பீமாவை வளர்த்துப் பெரியாளாக்கி, ஆக்ஸ்ஃபோர்டு/ கேம்பிரிட்ஜ்/ யேல்/பிரின்ஸ்டன்/ ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்ப, எவ்வளவு சக்தி தேவைப்படும், என்பதை யார் நிர்ணயிப்பது? எல்லா இந்தியக் குடும்பத்தையும் போலவே, எங்கள் குடும்பத்திலும் கல்விக்கு உசத்தியான அந்தஸ்து இருந்தது. ஆக செல்வந்தராயினும், பஞ்சப் பனாதையாயினும் நாங்கள் எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவே விரும்பினோம். சேரிகளில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைத் தாங்களே தேய்த்துக் குளிப்பாட்டி விட்டார்கள். மங்கிப்போன அவர்களது சீருடைகளைத் தோய்த்துக் கொடுத்து, கார்ப்பரேஷன் பள்ளிக்கூட இலவசக் கல்விக்கு அனுப்பி வைத்தார்கள். நாட்டுப்புறங்களில் கூட இந்தியாவெங்கிலும் நெடுஞ்சாலைகளிலோ கிளைச்சாலைகளிலோ பிள்ளைங்கள், அங்கேயும் சீருடை அணிந்து பக்கத்து நகரத்துப் பள்ளிக்கூடங்களுக்கு நடந்து போகிறதைப் பார்க்க முடியும்.

செயல் அளவில் சக்தி என்பது உடல் சக்தி அல்ல. பள்ளியிலும் கல்லூரியிலும் இடம் குறைவாக இருந்து, சேரும் மாணவர் அதிக எண்ணிக்கையில் அமைந்து, தன் குழந்தைக்கு இடம் கிடைக்க இறைஞ்சி மன்றாடி கையைக் காலைப் பிடித்து லஞ்சங்கூட கொடுத்து சேர்க்கிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். பிள்ளைகளோடு அவர்கள் பள்ளிக்குக் கூடவே ஓடுகிறார்கள். பிறகு அடுத்த பள்ளிக்குப் படையெடுப்பு, இடம் கிடைக்கும்வரை ஓயாது இந்தப் படையெடுப்பு. இந்தியக் கல்விமுறை பெருகிவரும் மக்கள்தொகையில், பெருகிவரும் கல்வித்தேவையில் கிறீச்சிட்டு முனகித் தத்தளித்துத் தவிக்கிறது. இங்கே வருடத்துக்கு இருபது மில்லியின் குழந்தைகள் பிறக்கிறார்கள். புள்ளிவிவரப்படி இந்தியாவில் இந்தத் தேவையைச் சமாளிக்க நாளுக்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட வேண்டும்! ச், இந்தியா இன்னும் அதைச் செய்யவில்லை…

அடுத்த பத்துப் பன்னிரெண்டு வருஷம் பீமாவுக்காக பள்ளிக்கூடமும் கல்லூரியுமாக நானும் படையெடுப்பதாக ஒரு காட்சி மனசில் வருகிறது. அவனை இங்குமங்கும் அலைக்கழிக்கிறேன். நல்ல மதிப்பெண்கள் அவன் வாங்க வேண்டாமா, என்று டியூஷன் வேறு வைக்கிறேன். பள்ளிவயசுச் சிறார்கள் இருக்கிற என் சிநேகிதப் பட்டாளம் தவறாமல் இப்படி அல்லாடுகிறது. நகரத்தைப் பிள்ளைகளுடன் பரபரப்பாக ஊடறுத்து அலைகிறார்கள், டியூஷன் வகுப்புக்கு அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்து டியூஷன் முடிய வீட்டுக்குக் கூட்டி வருகிறார்கள். நினைக்கவே பெருமூச்சு வருகிறது…

“இதெல்லாம் உங்களுக்கு முடியுமா?“ என் மனசை யூகித்துவிட்டு மௌரீன் கேட்டாள்.

“ஏன் முடியாது?“ என்றாலும் குரல் உள்ளே இழுத்துக் கொண்டது. எனக்கே என் பதிலில் திருப்தி இல்லை. “இவனை யார் எடுத்துக்கப் போறாங்க? இவன் சிறப்பு கவனம் தேவைப்படுகிற குழந்தை, இவன் பிரச்னை இன்னின்னன்னு அவங்களுக்குத் தெரியுமா?“

“தெரிஞ்சிருக்கணும் கண்டிப்பா. எல்லாம் மருத்துவ அறிக்கையோட நாம குறிப்பெழுதிக் குடுத்திருக்கிறோமே.“ அவளுக்கும் உள்ளூற அடித்துக் கொண்டது. ஷைலாவிடம் அவர்கள் குழந்தைபற்றிய விவரங்களை முழுசாக அறிந்திருக்கிறார்களா என்று பரிசீலிக்க திரும்பத் திரும்பச் சொன்னாள்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே பீமா என்னவோ மழலை மிழற்றியபடி எங்களை அண்டி கைத்தாங்கலாய் நிமிர்ந்தான். திரும்ப அவன் எதிர்காலம் இடம்மாறப் போவதை அறிந்திருக்கவில்லை அவன். செஸ் ஆட்டத்தில் காய் நகர்வதைப் போல… நட்சத்திரங்கள் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்ள மீண்டும் விதி தன் முத்திரையைப் பதிக்க ஆரம்பித்து விட்டாப் போலிருந்தது. அதற்கு ஒருவிதத்தில் அடிகோலியவர்கள் நாங்கள்தான், இன்னொரு விதத்தில் அதன் அடிப்படை அவனது வாழ்வின் துரதிர்ஷ்டமான ஆரம்பம் .

என் பக்கத்தில் வந்த பீமாவின் தலைக்கு மேலாக “இவனை ஏன் தேர்வு செய்தார்களாம்?“ என்று கேட்கிறேன்.

“அவன் படம்… அவர்களைக் கொள்ளை கொண்டுவிட்டதாக, ஷைலா சொன்னாள்…“

அந்தப் புகைப்படம் எனக்குத் தெரியும். ஒல்லியான அப்பிராணிக் குழந்தை, வாரமுடியாத சுருள்சுருளான கேசம், கேமெரா பார்த்த சோக வெறிப்பு. அமெரிக்க கால்பந்தாட்ட ஜெர்சி உடை. எண் 1 என பொறித்திருக்கிறது அதில். குனிந்து பீமாவைப் பார்க்கிறேன். படம் எடுத்த பிறகு இப்போது ஆளே மாறிவிட்டான். கன்னங்கள் பொம்மிவிட்டன. ஒரு தலைஅளவு, ஒரு ஜாண் அளவு வளர்ந்தும் இருக்கிறான் இப்போது. படத்தில் பார்க்கிற அதே அப்பாவியான சோகமான குழந்தை இல்லை இப்போது. அநேகமாக உற்சாகமாகவே வளைய வருகிறான். இருந்தாலும் திடுமென அடிக்கடி துடிப்பு எகிறுகிறது. ஒருநேரம் விளையாடுவான் சிரிப்பான். அடுத்த ஷணமே தலையை உதறி அலறுவான். வாஆஆஆஆஆஆ… என்ன, இந்த அலறல் இப்போது வலியினால் அல்ல. இது எதையாவது அவன்கேட்டு நாங்கள் மறுத்துவிட்டால் வரும் முரண்டு.

பிறகு, என்ன நடந்தது…

பீமா ஒரு வருடம் எங்களோடே இருந்தான். எப்ப பிரிவானோ என்கிற பதைபதைப்பில் நாங்கள் நேசம் பாராட்டி வந்தோம். அவனை சுவிகாரம் கேட்டு வந்த தம்பதியர்கள் எங்களோடு ஒரு ரெண்டுவாரம் போலத் தங்கி அவனுடன் பழகினார்கள். அவன் சகஜப்படவில்லை. எங்களுக்கு குழப்பமாகவும் வேதனையாகவும் ஆகிவிட்டது. விமான நிலையத்துக்கு நாங்கள் அவர்களுடன் போனபோது, அவன் மௌரீனையும் என்னையும் “வா“ என்று கூப்பிட்டான். எங்களால் எப்படிப் போக முடியும்? அடுத்த சிலவாரங்கள் நாங்கள் ஊமையாய் உள்ளேயே புழுங்கித் தவித்தோம். பீமா “இறந்து“ விட்டான். ஒரு ஒருமாத அளவில் எங்களை அவன் கூப்பிட்டுக் கதறிக் கொண்டிருந்ததாக அவனது பெற்றோர்கள் சொன்னார்கள். பிறகு அழுகை அடங்கி, அவன் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தான்.

ஒருவருடம் கழிந்தது. மௌரீனே அவனுக்கு ஞானஸ்னானம் செய்விக்கட்டும் என்று அவர்களோடு தங்க என்னையும் மௌரீனையும் அந்தப் பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்தார்கள். பீமாவின் முதல் பார்வை. குழப்பமான ஒரு செருமல், எப்படியோ இவர்களை நான் அறிவேன்… எப்படி? அவன் குடும்பத்தாருடன் ஒரு நாலுநாள் இருந்தோம். அவனிடம் உயிரையே வைத்திருக்கிறார்கள் அவர்கள் என்பதைப் பார்க்க ஆறுதலாய் இருந்தது. அவனைச் சுற்றியும் தாத்தாபாட்டிகள், அத்தைமாமாக்கள், மற்றும் அவனைக் கொண்டாடுகிற நண்பர் பட்டாளம். எங்களுடனும் அதிகநேரம் அவன் செலவிட ஆரம்பித்தான். எங்களைப்பற்றி எதோ கொஞ்சம் அவன் நினைவில் இருந்தது. ஆனால் எங்களுக்கு அந்த நாலுநாள் போதவே இல்லை. இதுதான் எங்கள் கடைசி சந்திப்பு என்கிறதாக நினைத்திருந்தோம். ஆனால் முடிவு என்று ஒன்று இல்லை, நேசம் மரிக்கும் வரை, அல்லது நாங்கள் மரிக்கும் வரை.

(முற்றும்)

My temporary son
timeri n. murari

திமெரி என். முராரியின் முதல் வேலை கனடாவின் ஆந்தோரியோவில் கிங்ஸ்டன் விக் ஸ்டாண்டர்ட் இதழில் நிருபர். புதிய ஆசிரியர் மாறியபோது என் தோல் நிறத்தால் பணி நீக்கப்பட்டேன், என்று குறிப்பிடுகிறார். பிறகு லண்டன் போய் கார்டியன், சன்டே டைம்ஸ் என பத்திரிகைளிலும் செய்தியிதழ்களிலும் எழுதினார். ‘திருமணம்‘ முதல் நாவல் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் வெளியிடப் பட்டது. இதுவரை 17 நூல்கள், பெரும்பாலும் நாவல்கள். அதிகப் பிரபலமானது தாஜ் நாவல். 14 மொழிகளில் அது மொழிபெயர்ப்பு கண்டது. 2002ல் ஆர்.கே.நாராயணன் விருது இவரது மொத்தமான எழுத்துப் பங்களிப்புக்கு என வழங்கப்பட்டது.

கதைத்தளம் புதிதாய், எழுதவேண்டியதாய் உணரமுடிந்தது. அதன்காரணமாகவே மொழிபெயர்ப்பின் நியாயமும் அமைந்துவிட்டது. கூறியதையே பல சமயங்களில் திரும்பத் திரும்பச் சொல்கிறாப் போல இருக்கிறது, என்றாலும் வாழ்வின் சத்தியம் பேசப்படுவதில் நெகிழ்ச்சிகரமான வாசிப்பு அனுபவம். படிக்கத் தவறவிட முடியாத கதையாகிறது. இதே தலைப்பிலான பெரிய நாவலின் பகுதி இது.