பில்லா

Be aware of God
Beware of Dog

சித்தார்த் ஜான்சன் வீட்டு வாசல் கேட்டில் இப்படி எழுதியிருக்கும்.

நாய்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. காலை தூக்கிக்கொண்டு கம்பத்தின் மீது ‘உச்சா’ போவதைப் பார்த்திருக்கிறேன்; அவ்வளவு தான். நைட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது பின்தொடர்ந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் நடப்பது போல பாவனை செய்வேன். ‘குரைக்கிற நாய் கடிக்காது’ என்பார்கள். கடிக்கும் போது நாயால் எப்படிக் குரைக்க முடியும்?  அதனால் அப்படிச் சொல்லியிருப்பார்கள். கடிக்கும் என்ற வார்த்தையை “கடி+ க்க் + உம்” என்றும் எழுதலாம். ஆங்கில இலக்கணத்தில் இதை ஸ்டிராங் வெர்ப்(Strong verb) என்கிறார்கள். தமிழில் வல்வினையாம். சொற்களுக்கு நடுவில் “க்க்” வந்து வார்த்தையை வல்வினையாக்குகிறதாம். இப்பொழுது நீங்களே ‘அக்’கென்று கடித்துப் பாருங்கள்; ‘க்க்’ சத்தம் வரும். (உடனே ‘அக் அக்’னு கடிச்சுப் பார்க்காதீங்க.) கடைசியில் ‘உம்’ விகுதியில் முடிவதால் எதிர்காலமாகிறது. ‘உம்’ விகுதி பற்றி நாய்க்குத் தெரியாத காரணத்தால் பில்லா வந்த அன்றே என்னைக் கடித்தது. வால்வினையால் வந்த வல்வினை.

என்ன பில்லாவா? என்று கேட்கநினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்; சொல்கிறேன். அதற்குமுன் சித்தார்த் ஜான்சனைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும்.

சித்தார்த் ஜான்சன் என் கிளாஸ்மேட். ஒரே செக்ஷன். ஸ்கூலில் அட்டண்டஸ் எடுக்கும்போது டீச்சர், ‘சித்தார்த் ஜான்சன்’ என்று கூப்பிடுவதைத் தவிர, அவன் வெறும் ஜான்சன்தான். அவனுடைய அப்பா பெயர் சண்முகம். செட்டியார் என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சர்ச் போக ஆரம்பித்தார். ஒரே காம்பவுண்டுக்குள், எங்கள் வீடு, அவன் வீடு என்று மொத்தம் ஒன்பது வீடுகள் இருந்தன. அந்த காம்பவுண்டே செட்டியாருக்குச் சொந்தம். எங்கள் வீட்டிலிருந்து ஜான்சனுடையது ஐந்தாவது வீடு. பெரிதாக இருக்கும். வீட்டுக்குமுன் வேலி போட்டு தோட்டத்தின் நடுவில் பெரிய துளசி மாடம் இருக்கும். துவாதசியன்று பாட்டி, “செட்டியார் வீட்டிலிருந்து கொஞ்சம் துளசி எடுத்துண்டுவாடா” என்பாள். செட்டியார் வீட்டு வாசலில் இடது பக்கம் ஒரு நார்த்தங்காய் மரம், முதல்மாடி வரை வளர்ந்து நிற்கும். ”நார்த்தங்கா மரம் இல்லை, இது சாத்துக்குடி மரம்” என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். அது காய் காய்த்து யாரும் பார்த்ததில்லை; அதனால் அது என்ன மரம் என்று யாருக்கும் தெரியாது. சரி, எதற்கு சாத்துக்குடி மரம் பற்றி இப்பொழுது சொல்கிறேன் என்றால், நான் ஸ்கூல் விட்டு வந்தபோது சாத்துக்குடி மரத்தின் கீழேதான் ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது.

என்ன கூட்டம் என்று பார்க்க அங்கே போனபோது பில்லாவைப் rjpபார்த்தேன். கன்றுக்குட்டி சைஸுக்கு இருந்தது. எழுந்து நின்ற போது ஜான்சன் அப்பாவின் இடுப்பு லுங்கிவரை இருந்தது. “எங்க வீட்டுக்கு நாய் வரப் போகுது” என்று ஜான்சன் முந்திய வாரம் சொல்லியிருந்தான். “பேர் பில்லா” என்று அதற்கு அட்வான்ஸாக நாமகரணம் பண்ணியிருந்தான். சின்ன பாமரேனியன் நாய்க் குட்டி வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கன்றுக்குட்டி சைஸுக்கு இருந்ததைப் பார்த்த்தும் கொஞ்சம் உதறலாக இருந்தது. “ஒஸ்தி ஜாதி. ராஜபாளையம்!” என்று ஆளாளுக்குப் பேசிக்கொண்டார்கள்.

பில்லா முக்கால்வாசி பிரவுன் கலராக இருந்தது. கருகின அப்பம் மாதிரி மூக்கு. நாக்கை நீட்டிக்கொண்டு ‘ஹ ஹ’ என்று பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டு, எச்சில் எலாஸ்டிக் மாதிரி ஒழுகிக்கொண்டு இருந்தது. கழுத்துப் பட்டையிலே கொக்கி போட்டு சங்கிலியால் சாத்துக்குடி மரத்தில் கட்டி இருந்ததால் மரத்தைச் சுற்றி பிரதட்சணம் செய்துகொண்டிருந்தது. முதுகுப் பகுதியில் எலும்புகள் தெரிந்தன. அலுமினியத் தட்டில் இருந்த பால் சாதத்தை தான் உண்ணாமல் ஈக்களுக்கு மொய்க்கக் கொடுத்துவிட்டு, எங்கள் எல்லோரையும் பார்த்து குலைத்தது. காலை நீட்டி இரண்டு பக்கமும் உடம்பை வளைத்து சோம்பல் முறித்து கொட்டாவி விட்டபோது ஒருவித சூடான வாசனை வந்துகொண்டு இருந்தது. ஜான்சன் அதைத் தடவியபடியே பெருமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நாய் எப்படிடா இருக்கு?” என்று கேட்டான் ஜான்சன்.

“ஹும். பொம்பளை நாய்க்கு எப்படிடா பில்லானு பேர் வைப்ப?”

“உனக்கு எப்படி வைச்சாங்களோ அதே மாதிரி தான்… போடாங்ங்..” என்று முறைத்தான்.

பில்லாவை அன்றே மீண்டும் தனியாகச் சந்திப்பேன் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஜான்சன் முறைத்தவுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். கிரிக்கெட் எல்லாம் விளையாடிக் களைத்து வீட்டிற்கு வந்து ராத்திரி சாப்பிடுவதற்கு முன்தான் என் ஜியாகரபி புஸ்தகத்தை காப்பி செய்துவிட்டு தருகிறேன் என்று முன்தினம் வாங்கிய ஜான்சன் திரும்பத் தரவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.. அவன் வீட்டிற்கு நான் சென்றபோது, சாத்துக்குடி மரத்தின் கீழே பில்லா படுத்துக்கொண்டிருந்தது. நடுக்கமாக இருந்தாலும், கட்டித்தானே இருக்கிறது என்று தேற்றிக்கொண்டு, ஓசைப்படாமல் மெதுவாக படிமேல் கால்வைத்தபோது  கடித்துவிட்டது.

என்ன நடந்தது என்று விவரிப்பது கஷ்டம்; இருந்தாலும் சொல்கிறேன்.

மெதுவாகத்தான் படியில் ஏறினேன். ஏறும் போது காலுக்கடியில் என்னவோ இருக்கிறதே என்று  நினைப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வாலை மிதித்திருக்கிறேன். பில்லா அப்படியே ‘குபீர்’ என்று என் மீது பாய்ந்தபோது நான் “ஐயோ” என்று கத்திக்கொண்டு ஓடப் பார்த்தேன்.  பயத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். பில்லா கடித்துவிட்டது. நான் போட்ட அலறலைக் கேட்டு எல்லோரும் வீடுகளிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். லைட் பக்கம் போய்ப் பார்த்தபோது முழங்காலில் சின்னதாக இரண்டு இடத்தில் நாயின் பல் பட்டு ரத்தம் வெளியே வரலாமா யோசிப்பதாக இருந்தது. எனக்கு உடம்பு உதறல் எடுத்தது. யாரோ தண்ணிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பில்லா என்னைப் பார்த்து  “உர் உர்” உருமிக்கொண்டிருந்தது.

“நம்ம பில்லா கடிக்காதே, நீ என்னப்பா செஞ்சே?” என்று அதனுடன் பலபத்து வருடங்கள் பழகியவர்போல் கேட்டார் செட்டியார்.

“வாலை மெதுச்சுட்டேன்னு நினைக்கிறேன்…”

என்னை நாய் கடித்த விஷயம் காம்பவுண்ட் முழுக்க தெரிந்து வீட்டுக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் வெளியே வந்துவிட்டார்கள்.

“அடடா பல்லு பட்டிருக்கே”

“இரண்டு இடத்துல பட்டிருக்கு பாருங்க”

“உடனே சைல்ட் ஜீசஸ் ஆஸ்பத்திரி கூட்டிகிட்டு போங்க. யாராவது டாக்டர் இருப்பாங்க”

பில்லா குலைத்துக்கொண்டிருந்தது.

“முதல்ல சோப்பும் டெட்டாலும் போட்டு அலம்புங்க”

“சோப்பு, மஞ்சள் போடுங்க சரியா போய்டும்”

“மாமி அது கட்டிக்குப் போடறது. தொப்புளைச் சுத்தி ஊசி தான் இதுக்கு ஒரே டிரீட்மெண்ட்”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாய்க்கு தடுப்பு ஊசி எல்லாம் போட்டிருக்கு, ஒண்ணும் பயப்படாதீங்க” என்றார் செட்டியார்.

“இருந்தாலும் பெரிய நாய், டாக்டர் கிட்ட போய் ஒப்பீனியன் கேட்டுடறது நல்லது பாருங்கோ.”

பாட்டி அதற்குள் வந்து “ஏண்டா பொஸ்தகம் வாங்கிண்டு வந்தப்பறம் சாப்பிடறேன்னு சொல்லிட்டு போனே, என்னடா ஆச்சு?” என்றாள்.

“நாய் கடிச்சுடுத்து பாட்டீஈ..” என்று அழ ஆரம்பித்தேன்.

“கட்டால போக, எந்த நாய் கடிச்சுது?” என்றாள்.

“பில்லா”

“கட்டால போக” என்று திரும்பவும் திட்டிவிட்டு “எங்கே காமி” என்று என் காயத்தைப் பார்த்த போது அது கன்னிப் போயிருந்தது.

அதற்குள் செட்டியார் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு வந்து, “பாட்டி ஒண்ணும் ஆகாது, இவனை நானே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போய்ட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, என்னைப் பின்னாடி உட்கார வைத்துக்கொண்டு போனார்.

டாக்டர், காலை பார்த்துவிட்டு கடிபட்ட இடத்தை ஸ்பிரிட் மாதிரி மஞ்சள் கலர் திரவத்தில் தோய்த்த பஞ்சால் துடைத்தார்.

கடித்த இடம் சின்னதாக வீங்கியிருந்தது. பார்க்க மாவிளக்கில் எண்ணை மாதிரி இருந்தது.

கடித்த இடத்தைச் சுற்றி அழுத்திக்கொண்டே, “இஸ் இட் பெயினிங்?” என்று கேட்டார்.

கேட்பது அவர் அழுத்தியதையா, அல்லது நாய் கடித்ததையா?  என்று புரியாமல் தலையாட்டி வைத்தேன்.

“எந்த நாய்?”

“எங்க வீட்டு நாய்தான்” என்றார் செட்டியார்.

“கிராஸ் பிரீடா?

“நோ நோ. பியூர் ராஜபாளையம், இன்னிக்குத் தான் வீட்டுக்கு வத்துச்சு. போன மாசம் தான் நாய்க்கு தடுப்பு ஊசி எல்லாம் போட்டது”

அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டே டாக்டர், “நத்திங் டு வொர்ரி. இருந்தாலும் ப்ரிகாஷனரியா நாலு நாளைக்கு ஊசி போட்டுக்கோ, என்ன?” என்று என்னைப் பார்த்துச் சிரித்தபடியே சொல்லிவிட்டு குப்பறப் படுக்க வைத்தார்.

“பெரிய ஊசியா?” என்று டாக்டரிடம் நான் கேட்பதற்குள் “ஆஆ” என்று கத்த வேண்டியிருந்தது.

நாய்க்கடியைவிட பின்பக்கம் அதிகமாக வலிக்க ஆரம்பித்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வரும்போது செட்டியார் ‘கோல்ட் ஸ்பாட்’ வாங்கித் தந்தார்.

வீட்டுக்கு வரும்போது என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கூட்டம் என் வீட்டு முன்பு இன்னமும் இருந்தது.

“எதுக்கும் ஒருவாரம் நாயை வாட்ச் பண்ணுங்க, செத்து கித்து போச்சுனா ரொம்ப சீரியஸ்” என்று ஆரம்பித்தார்கள்.

“மாமி இரண்டு நாளைக்கு ஸ்கூல் கீல் எதுவும் வேண்டாம். பேசாம ரெஸ்ட் எடுக்கட்டும். அப்படியே இவன் மேலேயும் ஒரு கண்ணிருக்கட்டும். வெறி கிறி பிடிச்ச நாய் கடிச்சுதுனா நாமளும் நாய் மாதிரி கத்துவோமாம். என் அக்கா பையன் ஒருத்தன் இப்படித்தான்… உப்பிலியப்பன் கோயில் பக்கத்தில நாய் கடிச்சு…”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது” என்றாள் பாட்டி.

பக்கத்து வீட்டு மாமா “சோடா கிடைக்கலை, ஜிஞ்சர் தான் கிடைச்சது” என்று எனக்கு வாங்கித் தந்தார்.

“அவனுக்கு எதுக்கு ஜிஞ்சர், வயிறு நல்லாதானே இருக்கு” என்று பாட்டி சொன்னதை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

“தொப்புளை சுற்றி ஊசி போடலையா? அப்பறம், எங்கே போட்டா?” என்ற பேச்சு, “நாளைக்கு கவாஸ்கர் எப்படி விளையாடப் போறான்”, “இந்தியா ஃபாலோ ஆன் வாங்குமா?” என்று மாறி எல்லோரும் வீட்டுக்குப் போகும்போது “உடம்பைப் பார்த்துக்கோடா” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எதிர்வீட்டு மாமா “இப்ப உடம்புக்கு என்னடா பண்றது?”

“கொல்லப்பக்கம் போகணும்” என்று கிளம்பினேன்.

தொடர்ந்து நாலு நாள் “நேத்திக்கு எந்த சைடுல போட்டேன்” என்று கேட்டுவிட்டு டாக்டர் போட்ட ஊசியும்,  வீட்டிற்குத் திரும்பி வரும்போது செட்டியார் தயவால் கோல்ட் ஸ்பாட்டும் கிடைத்தது.

துவாதசி அன்று துளசி பறிக்கும் வேலை நின்றது. பாட்டியே சின்னதாக துளசிக் கன்று ஒன்றை வீட்டுக்குப் பின்புறம் வளர்த்தாள். எப்பவாவது செட்டியார், “என்ன தம்பி எப்படி இருக்க” என்று விசாரிப்பார். அடுத்த ஒரு வாரத்துக்கு பாட்டி தினமும் காலையில் ’பில்லா எப்படி இருக்கு’ என்று பார்த்துவிட்டு வருவாள். இரண்டு வாரத்தில் கடித்த இடம் அரித்துவிட்டு பிறகு ஆறிவிட்டது. சில சமயம் சாக்ஸ் போடும் போது தழும்பு சின்னதாகத் தெரியும்.

ஆறு மாதம் ஆகியிருக்கும். ஒரு நாள் ஸ்கூல் போகும்போது, ஆட்டோவில் பில்லாவை அழைத்துக்கொண்டு போவதைப் பார்த்தேன். மாலை ஸ்கூல்விட்டு வந்தபோது, செட்டியார் வீட்டு முன்பு கூட்டமாக இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தபோது பில்லா படுத்திருந்தது. மாலை போட்டிருந்தார்கள். ஈக்கள் சுற்றிக்கொண்டிருந்தன. வீட்டுக்குள் ஜான்சன் அழுவது கேட்டது.

“அல்சேஷன் வாங்கித் தரேன்” என்று செட்டியார் சமாதானம் செய்துகொண்டிருந்தார்.

சட்டை இல்லாமல் வந்த இரண்டு பேர், “எங்க தோண்டலாம்?” என்று கேட்டு, தோண்ட ஆரம்பித்தார்கள். கூட்டம் கூட ஆரம்பித்தது.

சாத்துக்குடி மரத்தின் கீழே பெரிய சதுரமாகக் குழி தோண்டினார்கள்.

“எப்படி திடீர்னு ?” என்று விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்.

“கொஞ்சம் நாளா சரியா சாப்பிடலை..” என்று சொல்லிக்கொண்டு இருந்தா செட்டியார்.

“இந்த நாய்தானே உன்னைக் கடிச்சது?” என்று ஒருவர் அசந்தர்ப்பமாக என்னை விசாரித்தார்.

பில்லாவை சாத்துக்குடி மரத்துக்குக் கிழே புதைத்தார்கள். பூ போட்டார்கள். பால் ஊற்றினார்கள். ஒத்தை செங்கலை நிற்க வைத்தார்கள்.

“பால்காரன் தெரு முனையில வந்தா, இதுக்கு எப்படியோ தெரிஞ்சிடும், கரக்டா குலைக்க ஆரம்பிக்கும்”

“தினமும் ஆபீஸ் போகும் போது என்னைப் பார்த்து இரண்டு காலையும் மேலே தூக்கும்”

“நம்ம காம்பவுண்டுக்கே பாதுகாப்பா இருந்தது” என்று பேசிவிட்டு போனார்கள்.

கோடை விடுமுறைக்கு ஊருக்கு போய்விட்டு வந்தபோது, ஹாலில் ஒரு கூடை நிறைய சாத்துக்குடி இருந்தது. பாட்டி “செட்டியார் வீட்டில கொண்டு வந்து கொடுத்தா. வீட்டில காய்ச்சதாம்” என்றாள்.

One Reply to “பில்லா”

Comments are closed.