அந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா?

மத்திய கேபினெட், அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்தான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அடுத்து நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவு வைக்கப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

இது தொடர்பாக ஒரு கேள்வி-பதில் விவாதம்.

1. இந்தியாவில் பட்டப் படிப்புச் சான்றிதழை யார் கொடுக்க முடியும்?

பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்தின்கீழ் வரும் இந்த நிறுவனங்கள் மட்டுமே பட்டப் படிப்புச் சான்றிதழைக் கொடுக்கத்தகுதி பெற்றவை. இவற்றில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்பவை சமீபத்தில்தான் உருவாக்கப்பட்டன்.

2. யார் பல்கலைக்கழகங்களை உருவாக்கமுடியும்?

மாநில அரசுகளும் மத்திய அரசும் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம். சில நேரங்களில் தனியார் உருவாக்கிய கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டதுண்டு.

3. தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளனவா?

சில மாநிலங்கள் (உண்மையில் சொல்லப்போனால் சில சில்லுண்டி மாநிலங்களான சத்தீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், திரிபுரா ஆகியவை) சட்டம் இயற்றி தனியார் அமைப்புகள் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம் என்றன. இதன் விளைவாக மாட்டுக் கொட்டகையையே பல்கலைக்கழகக் கட்டடம் என்று காட்டும் அசிங்கங்கள் நடந்தேறின. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கின்போது இந்தச் சட்டங்கள் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பல பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் சில (தனியார்) பல்கலைக்கழகங்கள் இன்னமும் தொடர்ந்து நடக்கின்றன.

4. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் என்ன வித்தியாசம்?

logoபல்கலைக்கழகங்கள் கீழாக பல கல்லூரிகள் அங்கீகாரம் பெற்று பாடம் நடத்தி, கடைசியில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டச் சான்றிதழை மாணவர்களுக்குத் தரமுடியும். இந்தக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாகவும் இருக்கலாம், தனியார் கல்லூரிகளாகவும் இருக்கலாம். பல்கலைக்கழகமும் தானாகவே நேரடியாகப் பாடங்களை நடத்தி பட்டங்கள் தரமுடியும். பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி எனப்படும் அஞ்சல்வழிக் கல்வி வாயிலாகவும் பட்டங்கள் தரலாம்.

நிகர்நிலையில் அதற்குக் கீழாக வேறு எந்தக் கல்லூரியும் அங்கீகாரம் பெற்று நடத்தமுடியாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகமே நேரடியாகப் பாடங்களை நடத்தி, பட்டங்கள் தரவேண்டும். அஞ்சல்வழிக் கல்வி நடத்தமுடியாது என்றும் நினைக்கிறேன்.

தனியார் பல்கலைக்கழகங்கள் பற்றி முழுமையான தகவல் என்னிடம் இல்லை என்றாலும் அடிப்படையில் இவற்றுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்று தோன்றுகிறது. நிகர்நிலை அந்தஸ்து பல்கலைக்கழக மானியக் குழுவினால் நேரடியாகத் தரப்படுகிறது. தனியார் பல்கலைக்கழக அந்தஸ்தை சில மாநிலங்கள் சட்டங்கள் மூலம் தருகின்றனர்.

சமீபத்தில் கர்நாடக மாநிலம் ஆர்டினன்ஸ் மூலமாக அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் என்ற தனியார் அமைப்புக்கு பல்கலைக்கழக அந்தஸ்தைக் கொடுத்துள்ளது.

5. பல்கலைக்கழகங்கள் (நிகர்நிலை, தனியார்…) லாபம் சம்பாதிக்க அனுமதி உண்டா?

இல்லை. எந்தக் கல்வி அமைப்புமே சட்டத்தின்படி லாபம் சம்பாதிக்க முடியாது. எல்லாமே அறக்கட்டளைகளாகத்தான் நிறுவப்படவேண்டும். ஆனால் உண்மையில் சிறிய பள்ளிக்கூடம் முதல் தனியார் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வரை லஞ்சம், டொனேஷன், அமைப்பிலிருந்து பணத்தை சொந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்துவது என்று அனைத்தும் நடக்கின்றன.

6. பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் யார் கட்டுப்படுத்துவது?

இப்போதைக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுனிவெர்சிடீஸ் கிராண்ட்ஸ் கமிஷன்) என்ற அமைப்புதான் மேலே உள்ளது. அது தனியார் பல்கலைக்கழகமோ, நிகர்நிலையோ, மாநில, மத்திய அரசு அமைத்த பல்கலைக்கழகமோ எதுவாக இருந்தாலும் சரி. நாடாளுமன்றத்தால் நேரடியாக உருவாக்கப்பட்ட சில அமைப்புகள் மட்டும் விதிவிலக்கு: உதாரணம் ஐஐடிக்கள்.

ப.மா.கு தவிர, ஆல் இந்தியா கவுன்சில் ஆஃப் டெக்னிகல் எஜுகேஷன் (ஏ.ஐ.சி.டி.இ) எனப்படும் அமைப்பு பொறியியல் கல்லூரிகள்மீது தனி ஆதிக்கம் செலுத்தி, இந்தக் கல்லூரிகளில் தேவையான வசதிகள் இருக்கின்றனவா என்று கண்காணிக்கிறது. அதேபோல மெடிகல் கவுன்சில் ஆஃப் இந்தியா மருத்துவக் கல்லூரிகளை அதிகப்படியாகக் கண்காணிக்கிறது. சட்டக் கல்விக்கும் அப்படியே ஓர் அமைப்பு உள்ளது. ஆனாலும், எப்படியும் இந்தப் படிப்புகளை அளிக்கும் கல்லூரியோ, நிகர்நிலையோ, பல்கலைக்கழகமோ, பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழும் வரும்.

7. அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பற்றிய சட்டம் எந்தவிதத்தில் வித்தியாசமாக இருக்கலாம்?

பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மேற்படி அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்குமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால், இப்போதைக்கு நமக்கு எந்தத் தகவலுமே தெரியாது.

இந்தியாவுக்கு வரும் அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தம் லாபத்தை வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்ல முடியாது; உள்ளே நுழைவதற்கே 50 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்ற தகவல்கள் மட்டுமே இப்போதைக்குத் தெரியும்.

8. அந்நியப் பல்கலைக்கழகங்கள் வருவது நல்லதா, கெட்டதா?

முதலில் இந்தியாவில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இன்று ஒன்றாம் வகுப்பில் சேரும் 100 பேரில் 11 அல்லது 12 பேர்தான் கல்லூரிக்குப் போய்ப் படிக்கிறார்கள். அவர்கள் படிப்பதற்கே வேண்டிய அளவு கல்லூரிகள் இல்லை; பெரும்பாலானோர் அஞ்சல் வழிக் கல்விதான் பயிலுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் எத்தனை பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் அமைக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

அடுத்து, அந்நியப் பல்கலைக்கழகங்களை ஆதரித்து வரவேற்பதற்குமுன், இந்தியாவின் தனியார் துறையையே கல்வி நிலையங்களை உருவாக்க வரவேற்கலாமே? அதற்குமுன் ஏன் வெளிநாடுகளைப் போட்டி போட்டுக்கொண்டு வரவேற்கவேண்டும்? அல்லது ஒரே நேரத்தில் இந்திய தனியார் துறை, அந்நிய பல்கலைக்கழகங்கள் என அனைவரையும் வரவேற்கலாமே?

9. கல்வி மூலம் லாபம் பார்க்க அனுமதிக்கலாமா?

தவறே இல்லை. உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடம் ஆகியவற்றைத் தருபவர்கள்கூட லாபம் பார்க்கும்போது கல்வி தரும் இடத்தில் மட்டும் ஏன் லாபம் பார்க்கக்கூடாது?

லாபம் இல்லை என்ற நிலையில் மூவர் மட்டுமே கல்வித் துறைக்குள் வருகிறார்கள். ஒருவர்: அரசு. இரண்டாமவர்: மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற தர்ம சிந்தனையுள்ள தனி மனிதர்கள், அறக்கட்டளைகள், மத அமைப்புகள். மூன்றாமவர்: திருடர்கள், பொறுக்கிகள், அரசியல்வாதிகள். இந்த மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். ஜாலியாக சட்டத்தை ஏய்த்து, பணத்தை கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை என்று மாற்றி உள்ளிருந்து வெளியே எடுத்துவிடுகிறார்கள். இந்த மூன்றாம் நிலையில் இருப்பவர்கள்தான் இன்று அதிகமாக கல்வியில் நுழைகிறார்கள்.

லாபம் செய்யலாம் என்ற நிலை வரும்போது நியாய சிந்தனை உள்ள பலரும் கல்வித் துறையில் நுழைவார்கள். திருடர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

10. அந்நிய நிறுவனங்களால் ஆபத்தா?

முதலில் அந்நிய நிறுவனங்களைக் கண்டு பயப்படும் நிலையில் நாம் இன்று இல்லை. தொழில்துறையில் இந்தியா வந்துள்ள அந்நிய நிறுவனங்கள் எல்லாம் இந்திய நிறுவனங்களை எந்த வகையிலும் அழித்துவிடவில்லை. அந்நிய நிறுவனங்கள் வருவதால் நாம் நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நல்ல ஆராய்ச்சிகள் நடக்கும் என்று நம்பகமாகச் சொல்லமுடியாவிட்டாலும் சிவப்பு நாடாத் தொந்தரவு இருக்காது என்ற நம்பிக்கையில், நல்ல, தரமான ஆராய்ச்சி நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

11. அந்நிய நிறுவனங்களின் கல்வித் தரம் எப்படி இருக்கும்?

இது பற்றி இப்போது எந்த வகையிலும் கருத்து சொல்லவே முடியாது. மோசமான தரம் கொண்ட சில நிறுவனங்கள் வரலாம். உயர்ந்த தரம் உள்ள நிறுவனங்களும் வரலாம்.

12. இட ஒதுக்கீடு?

இட ஒதுக்கீடு முதற்கொண்டு பல விஷயங்கள் சட்ட முன்வரைவில் எப்படி இருக்கின்றன என்பதைப் பொருத்தே தீர்மானிக்கமுடியும். இந்த அந்நிய பல்கலைக்கழகங்களை யார், எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்பதுதான் முக்கியம். இவற்றை ஒருவித ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ போலப் பார்ப்பது மிகவும் தவறான நடவடிக்கையாகப் போய் முடியும்.

13. இவற்றால் இந்தியக் கல்விக்கு ஏதேனும் நன்மையா?

அப்படி பெரிய அளவு நன்மை எதுவும் வந்துவிடப்போவதில்லை. உண்மையில் இந்திய உயர்கல்வியில் உள்ள எந்தப் பிரச்னையையும் இவை தீர்க்கும் என்று தோன்றவில்லை.

இந்தியாவுக்கு எண்ணற்ற கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வேண்டும். அவற்றை வெளிநாட்டுக்காரன் வந்து கொடுத்துவிடப் போவதில்லை. அரசாலும் முடியாது என்பது கடந்த 60 ஆண்டுகளில் தெரிந்துவிட்டது. தனியாரால் மட்டுமே முடியும். அதாவது இந்திய தனியாரால். அதனைச் செயல்படுத்துவதே இந்திய அரசின் பிரதான நோக்கமாக இருக்கவேண்டும். இன்று 100-க்கு 11/12 பேர் கல்லூரிக்குப் போவதற்கு பதில் 25 பேராவது போகவேண்டும் என்று அரசு நினைத்தால் இப்போது இருப்பதுபோல் இரண்டு மடங்கு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வேண்டும். இதனை அமெரிக்காக்காரனா செய்துகொடுக்கப்போகிறான்? இந்தியன்தான் செய்தாகவேண்டும். இந்தக் கல்லூரிகள் எல்லாம் ஆங்கிலத்திலா அடித்து முழக்கிக் கிழிக்கப் போகின்றன? எல்லாம் அந்தந்த மாநில மொழியில்தான் பெரும்பாலும் இருக்கவேண்டும். அதனை ஆஸ்திரேலியாக்காரனா செய்துகொடுக்கப்போகிறான்?

வெறும் கற்றுக்கொடுத்தல் மட்டும் போதாது. ஆராய்ச்சி மனப்பான்மையைக் கொண்டுவரவேண்டும். இதில் வேண்டுமானால் அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒரு டிரெண்டைக் கொண்டுவரலாம். இந்தியாவில் மருந்துக்கும் ஆராய்ச்சி என்பது நடைபெறுவதில்லை.

மற்றுமொரு முக்கிய விஷயம்… எல்லாவற்றையும் மையத்தில் ஓர் அமைப்பு கட்டுப்படுத்துவது என்பது மாறவேண்டும். முதலில் பல்கலைக்கழக மானியக் குழு என்பதையே ஒழிக்கவேண்டும். மாறாக, ஒவ்வொரு மாநிலமும் அதனதன் கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, தன்னிச்சைப்படி நடக்கலாம் என்று மாற்றம் கொண்டுவரவேண்டும். அடுத்து மாநில அளவில் தமிழக அரசு செய்வதுபோல் குருட்டுத்தனமான ஒற்றைப் பாட முறையை (சமச்சீர் கல்வி) கொண்டுவராமல், பல பாடத் திட்டங்கள், பல பரீட்சைகள் என்று இருக்கவேண்டும்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வெற்றிகரமாக இயங்குவதே அவற்றை மேலிருந்து கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு இல்லாமல் இருப்பதுதான். சில கட்டுப்பாடுகள் தேவை; அவற்றை மாநில அரசு அமைப்புகளே செய்துகொள்ளலாம்.

கட்டுரையாளர் பத்ரி சேஷாத்ரி கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர்களில் ஒருவர். இந்தியக் கல்வித்துறையின் போக்குகளைக் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். இவருடைய பிற கட்டுரைகளை இங்கே படிக்கலாம்: http://thoughtsintamil.blogspot.com/