அந்த ஒரு சம்பவம், எல்லாவற்றையும் இழந்தேன்

“எதுவேண்டுமானாலும் நிகழ்கின்ற உலகம், உரிமையைப் பறிகொடுத்த சமூகம், உடன்பிறப்பை இழந்த குடும்பம், உணர்வில்லாமல் நடமாடும் மனிதம், இதுதான் உலகம்; …இதுதான் உலகம் இந்தக் கொடூரமான உலகத்தின் புதிரான வாழ்க்கை மேடையில் நம்மைப் போன்ற உயிருள்ள ஜடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்போடு மிரண்டு போன கண்கள் நாளைய உதயத்திற்காக ஏங்குவதை என்னால் உணர முடிகிறது. இன்று வாழ்க்கை என்பது விளையாட்டு அரங்கம், அந்த அரங்கத்தில் நம்மை போன்ற அப்பாவிகளெல்லாம் பந்துக்கள், வன்முறை என்றொருவன் இந்த அப்பாவிப் பந்துகளை எட்டி உதை உதைக்கிறான், தாங்கமுடியாத வலியால் துடித்து உருண்டோடும் ஒவ்வொரு பந்திலிருந்தும் காற்று வெளியேறி சப்பையாகிவிடுகிறது. இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழும் அப்பாவியை ஒரு கோழையென்று சொல்லிக் கொள்வதில் தப்பில்லை.

சந்தோஷமான தருணங்களைத் தொலைத்துவிட்டேன். ஆனால் இன்றும் அந்த நொடிகளை நினைவுபடுத்திக் கொள்ளும் போது அந்த கொடூரமான சம்பவம் மட்டும் தான் என்னுடைய நினைவுக்கு வருகிறது. அந்த சம்பவத்தை நினைக்கும் போது என்னுடைய நாடிகள் படபடவென்று துடிக்கின்றன, இதயம் வலிக்கிறது, கண்ணீரில்லாமல் கண்கள் வரண்டுவிட்டன, நெஞ்சம் உறைந்து விட்டது”.

delhi-bomb-blast1இவை பதிமூன்று வயதுச் சிறுமியின் டைரியில் எழுதப்பட்டிருந்தவை. வார்த்தைகள் ஒவ்வொன்றும் படித்தவரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதனை எழுதுவதற்கு எத்தகைய சம்பவம் அந்தப் பிஞ்சு மனதை பாதித்திருக்குமென்று யோசிக்க வேண்டும். அவளுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள அந்தப் பெண்ணை நேரில் சந்தித்தேன். அவளுடைய உலர்ந்த உதடுகளிலிருந்து வார்த்தகைள் வர மறுத்தன. அடக்கி வைத்திருந்த துயரத்தை சட்டென்று வெளியேற்ற முயலுவது போல அவளுடைய குரலின் த்வனியை உணர முடிந்தது. இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழும் தீபாவளிப் பண்டிகையின் இரண்டு நாட்களுக்கு முன்பு (அதாவது 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று) புது தில்லியில் மூன்று இடங்களில் தொடர்குண்டுகள் வெடித்தன. மக்களை அச்சுறுத்தவும், அவர்களுடைய சந்தோஷத்தை கெடுப்பதற்காகவும் தீவிரவாதிகள் அந்த வன்முறையை செயல்படுத்தினார்கள். பஹார்கஞ்சிலுள்ள இரயில் நிலையத்தினருகே மாலை சுமார் 5.35 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. பஹார்கஞ்சில் 48 நபர்கள் உயிரிழந்தார்கள், 50க்கும் மேல் படுகாயம் அடைந்தார்கள்.

பிறகு 6.00 மணிக்கு கோவிந்தபுரியின் பெரிய பேருந்து நிலையத்திலுள்ள ஒரு பேருந்தில் பொருத்தப்பட்ட குண்டு வெடித்துச் சிதறியது. ஐந்து நிமிடங்கள் கழித்து சரோஜினி நகர் மார்க்கெட்டில் குண்டுகள் வெடித்து 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தார்கள். 43 நபர்கள் படுகாயம் அடைந்தார்கள். குண்டுகள் வெடித்ததால் மார்க்கெட்டிலுள்ள பல துணிக்கடைகள் தீபிடித்துக் கொண்டன. கடையிலிருந்த ஜனக்கூட்டம் எரிந்து சாம்பலானது. அந்தச் சம்பவத்தில் தன்னுடைய பெற்றோர்களை இழந்ததைப் பற்றி அந்தப் பெண்ணின் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். அவளுடைய வார்த்தைகள் அன்று நடந்த சம்பவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டின.

“தீபாவளிப் பண்டிகைக்காக புதுத்துணிமணிகள், மேலும் தேவையான பொருட்களை வாங்குவதற்காக நானும், தம்பியும் பெற்றோர்களுடன் சரோஜினி நகர் மார்க்கெட்டுக்கு சென்றோம். எங்களோடு பக்கத்து வீட்டுக் குடும்பமும் இணைந்து கொண்டது. வீட்டிலிருந்து சந்தோஷமாக கிளம்பிய என்னுடைய பெற்றோர்களையும், நண்பரின் குடும்பத்தையும் மரணதேவன் இன்னும் சிறிது நேரத்தில் அரவணைத்துக் கொள்வானென்று தெரிந்திருந்தால் நிச்சயமாக மார்க்கெட்டுக்குப் போவதைத் தடுத்திருப்போம்.

india-blasts-460b_978214cஒவ்வொரு கடையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது, அன்று எண்ணற்ற தலைகளைத்தான் மார்க்கெட் வீதியில் பார்க்க முடிந்தது. கூட்டமான கடையில் நுழைந்து புதுத்துணிமணிகளை வாங்கியபிறகு என்னுடைய பெற்றோர்களும், நண்பரின் குடும்பமும் குளிர்பானங்கள், பழச்சாறுகள் விற்கப்படும் கடையை நோக்கிச் சென்றார்கள். கூட்டத்தின் நெரிசலால் அரையடி தூரத்தையும் ஊர்ந்து கொண்டுதான் செல்ல வேண்டும். அந்தக் கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பின்பக்கமாக திடீரென்று இடிவிழுந்தது மாதிரி சத்தம் கேட்டது. ஜனங்களுடைய அலறல் சத்தமொன்றும் கேட்டது. பதட்டத்தோடு அங்குமிங்கும் மக்களுடைய ஓட்டத்தைப் பார்த்தேன். எங்கள் குடும்பமும், நண்பரின் குடும்பமும் சென்று கொண்டிருந்த பாதையின் இடப்புறத்தலிருந்த ஒரு கடையின் பக்கத்திலிருந்து குண்டுகள் வெடித்துச் சிதறின.

தம்பியை தூக்கிக் கொண்டிருந்த என்னுடைய தந்தை வலப்புறத்தில் அவனை வேகமாக தூக்கி எறிந்தார். தாயின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்த என்னை வலப்புறத்தில் பலமாக வெகு தூரத்தில் தள்ளிவிட்டாள். அதன்பிறகு என்னுடைய பெற்றோர்களின் உடல்கள் தனித்தனியாகப் பிரிந்து கிடந்ததைப் பார்க்கமுடிந்தது. என்னுடைய தாயின் உடலும், தலையும் தனித்தனியாக சிதறிக் கிடந்தன. தந்தையின் அங்கங்கள் வெவ்வேறு திசையில் சிதறிக் கிடந்தன. அன்றைய குண்டுவெடிப்பு நண்பரின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் இரத்தக் கறைகள், சதைப் பிண்டங்கள். தம்பியின் அழுகைச் சத்தம் எங்கிருந்தோ கேட்டது. பலமாக விழுந்ததால் எழுந்திருக்க முடியாமல் தவழ்ந்து கொண்டே தம்பியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

உருத்தெரியாமல் சிதைந்து கிடக்கும் சதைப்பிண்டங்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு இருவரும் அழுது கொண்டிருந்தோம். அங்கு வந்த காவல்துறை அதிகாரி உறவினர்களின் தொலைபேசியின் எண்கள் ஏதாவது தெரியுமா என்று கேட்க, பாட்டிவீட்டு எண்களைக் கொடுத்தேன். செய்தியைக் கேட்டவுடன் என்னுடைய தாயின் பெற்றோர்கள் ஓடோடி வந்து எங்களை அரவணைத்துக் கொண்டார்கள். வீதியில் கிடந்த மகளின் முண்டமான உடலையும், மருமகனின் அங்கமில்லாத உடலையும் பார்த்து கதறிக்கதறி அழுதார்கள். வீட்டுக்கு வந்தபிறகும் தம்பியின் அழுகை நின்றபாடில்லை, அன்று நடந்த கொடூரமான சம்பவத்தை என்னுடைய நான்கு வயதான தம்பியால் ஜீரணிக்க முடியவில்லை. உலகத்தில் சர்வசாதாரணமாக குண்டுகள் வெடிக்கின்றன, அப்பாவிகள் பலியாகிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள அன்று அவனுடைய மனம் பக்குவமடையவில்லை. தள்ளாத வயதில் இந்த முதியவர்களின் கைகளில் மாபெரும் பொறுப்பை இறைவன் ஒப்படைத்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டில் மும்பையில் நிகழ்ந்த வன்முறையில் இவர்களுடைய பிள்ளைவீட்டுக் குடும்பமும் பலியானது. இந்த வயதில் இப்படியொரு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவர்களிடம் கடவுள் கடுமையாக கோபம் கொண்டிருக்கிறார்” என்று சொல்லி முடித்தாள்.

“மரணதேவனைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை
எங்களைப் பார்த்து மரணதேவன் பயப்படுகிறான்”

என்று அந்தச் சிறுமியின் டைரியில் குறிப்பிட்டிருந்த எழுத்துக்கள் என்னுடைய நினைவுகளை விட்டு அகலவில்லை. அவளுடைய டைரியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தாயின் அழகான முகத்தை
இன்றும் பார்க்கிறேன்
அவளுடைய மடியின் கதகதப்பை
இன்றும் உணருகிறேன்
அவளுடைய அன்பான வசவுகளை
இன்றும் கேட்கிறேன்
தந்தையின் ஈரமான மனதோடு
இன்றும் உறவாடுகிறேன்
அவருடைய மிடுக்கான தோற்றத்தை
இன்றும் ரசிக்கிறேன்

இந்த நினைவுகளுடன் மிச்சமுள்ள
வாழ்க்கைக் காற்றை சுவாசிக்கிறேன்
அதற்குரிய தெம்பையும், தெளிவையும் பெற
இறைவனிடம் வேண்டுகிறேன்
வருங்கால வாழ்க்கையில் ஒரு
நம்பிக்கையை எதிர்பார்க்கிறேன்
அந்த நம்பிக்கையில் அவநம்பிக்கை
உருவாகாமலிருக்க பிரார்த்திக்கிறேன்.

ஆசிரியர் குறிப்பு:

புது தில்லியில் வசித்துவரும் சந்தியா கிரிதர் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல இணைய இதழ்களிலும், அச்சு இதழ்களிலும் எழுதி வருபவர்.