ஹெட்லீ, மதானி – The Departed

2006-ஆம் வருடம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘The Departed’ திரைப்படத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. அமெரிக்கக் காவல்துறைக்கு விண்ணப்பித்த லியானார்டோ டி காப்ரியோ, காவல்துறையால் ஒரு பெரும் கள்ளக்கடத்தல் கும்பலிடம் உளவாளியாக அனுப்பப்படுகிறார். ஆனால் அந்தக் கொள்ளைக்கும்பலின் தலைவரான ஜாக் நிகல்ஸனும், தன்னுடைய உளவாளி ஒருவரை அமெரிக்கக் காவல்துறையில் ஊடுருவ வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் எப்படி கண்ணாமூச்சி ஆடி, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. கடைசிவரை இருக்கை நுனியிலே அமர வைத்த விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இத்திரைப்படத்தின் மூலம் “Infernal Affairs” என்ற ஹாங்காங் நாட்டுத் திரைப்படம்.

The Departed திரைப்படத்தில் உளவாளியாக அனுப்பப்பட்ட டி-காப்ரியோ காவலராக விண்ணப்பித்திருந்தவர். சில நேரங்களில் சிறு குற்றங்களில் பிடிபடும் குற்றவாளிகளை ஒரு பெரும் கூட்டத்தைப் பிடிக்கும் உளவாளிகளாக அனுப்புவதும் உண்டு. இப்படி உளவாளிகளாக மாற ஒத்துக்கொள்ளும் குற்றவாளிகளுக்கு, அவர்களின் தண்டனை வெகுவாகக் குறைக்கப்படும். கை ரிட்சீ (Guy Ritchie) என்ற பிரிட்டிஷ் இயக்குநரின் இயக்கத்தில் வெளிவந்த ’RockNRolla’ திரைப்படம் இப்படிப்பட்ட கைதி – உளவாளியைப் பின்னணியாகக் கொண்ட படு விறு,விறுப்பான திரைப்படம்.

இந்தத் திரைக்கதைகளை மிஞ்சும் பல உளவாளிக்கதைகள் நிஜத்திலும் நடந்திருக்கின்றன. அப்படிப்பட்டதொரு உளவாளிக்கதையோ என்று பல வல்லுநர்களும் சந்தேகித்துக் கொண்டிருப்பது சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் ‘டேவிட் ஹெட்லீ’ (David Headley) யின் கதையை. 49 வயதாகும் டேவிட் ஹெட்லீ பிறந்தது அமெரிக்காவின் வாஷிங்டனில். ஹெட்லீயின் இயற்பெயர் தாவூத் சையத் கிலானி. அப்பா சையத் சலீம் கிலானி ஒரு பாகிஸ்தானியர். அவர் அமெரிக்காவின் ’Voice of America’ என்ற அமெரிக்க அரசாங்கத்தின் வானொலி நிறுவனத்தில் பணி புரிந்தவர். இந்த வானொலி நிறுவனத்தின் அடிப்படை அம்சம் – அமெரிக்காவைப் பற்றிய நல்லவிதமான பல செய்திகளைப் பரப்புவது. அம்மா செரில் ஹெட்லீ அமெரிக்கர்.

சலீம் கிலானி, தன் மனைவியுடனான பிரிவுக்குப்பின் தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் சொந்தநாடான பாகிஸ்தானுக்குச் செல்கிறார். அங்கே ராணுவப்பள்ளியில் சேர்ந்து படிக்கிறான் சிறுவன் சையத் கிலானி. கிலானிக்குப் பதினேழு வயதாக இருக்கும்போது அவனை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறார் அவனுடைய அம்மா செரில் ஹெட்லீ. செரில் ஹெட்லீ ஃபிலடால்ஃபியா நகரில் “Khyber Pass” (கைபர் கணவாய் – நல்ல பெயர்! இந்தக் கணவாய் வழியாகத்தான் ஆரிய வந்தேறிகள் உள் நுழைந்ததாகப் பல இந்திய அறிவுஜீவிகளால் நம்பப்படுகிறது.) என்ற உணவகத்தை நடத்தி வந்தார். பெரும் போதைப்பழக்கம், பல ஆண் நண்பர்களுடன் தவறான தொடர்புகள் என்று செரில் ஹெட்லீ வாழ்ந்த சூழலில் வளர்ந்தான் சையத் கிலானி.

1998-இல் அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஹெராயின் கடத்திச் செல்ல முயற்சித்தபோது அமெரிக்கக் காவல்துறையால் கைது செய்யப்பட்டான். பிடிபட்டபோது தன் குற்றங்களை ஒத்துக்கொண்ட சையத் கிலானி, பல அமெரிக்க- பாகிஸ்தானிய போதைப்பொருள் கூட்டங்களைக் காட்டிக்கொடுத்தான். கிலானியின் ஒத்துழைப்பில் மகிழ்ந்த அமெரிக்க போலிஸ் அவனுடைய தண்டனையை வெகுவாகக் குறைத்தது. அவனைத் தன்னுடைய உளவாளியாக்கி பாகிஸ்தானிலிருக்கும் போதைப்பொருள் நெட்வொர்க்கைச் சிதைப்பதற்காகப் பாகிஸ்தான் அனுப்பியது அமெரிக்கா.

இங்கேதான் அமெரிக்காவின் “உளவாளி” யுக்தி தோல்வி அடைந்தது. பாகிஸ்தானுக்குப் போன கிலானி, தீவிரவாத இயக்கங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டான். முன்பே தன்னுடைய அமெரிக்க அம்மாவின் முறையற்ற வாழ்க்கை மீது இருந்த வெறுப்பால், அதன் நேரெதிர் கட்டுப்பெட்டிச்சூழலான அடிப்படைவாத இஸ்லாத்தால் கவரப்பட்டான் கிலானி என்றும் கூறப்படுகிறது. லஷ்கர்-எ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களோடு நெருக்கமான தொடர்பு கிலானிக்குக் கிட்டியது. இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு அமெரிக்கத் தொடர்பு தேவையாக இருந்தது. உளவாளியாகப் போனவன், அமெரிக்காவைக் குறித்து உளவு சொல்லும் ஆளானான்.

அமெரிக்கா இப்படிப்பட்ட உளவு நடைமுறையில் அடிபட்டது இது ஒரேமுறையல்ல, முதல் முறையுமல்ல. சிஐஏ வுடன் கூட்டணி வைத்து ரஷ்யர்களைத் தாக்கிய பல ஆஃப்கானிய இஸ்லாமியத் தீவிரவாதிகளும் சரி, ஒசாமா பின் லேடனும் சரி முன்னாள் கூட்டாளிகள், பின்னாள் எதிரிகள்.  வெகு சமீபத்தில் கடந்த ஜனவரியில் ஆஃப்கானிஸ்தானில் ஏழு அமெரிக்க எதிர்த்தீவிரவாத அதிகாரிகளும், ஒரு ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த அதிகாரியும் ஒரு தற்கொலைத் தாக்குதலில் பலியானார். தற்கொலைத் தாக்குதலை நடத்தியவன் Humam Khalil Abu-Mulal al-Balawi என்ற 36 வயதான ஜோர்டான் நாட்டுப் பிரஜை. அல்-பலாவி ஜோர்டான் நாட்டிலிருந்து அல்-கொய்தா ஆதரவு இணையக்குழுமத்தை நடத்திவந்தவன். ஜோர்டான் நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டவன்.

அவன் தீவிரவாதிகளுக்கு எதிராக மாறிவிட்டதாக நம்பிய ஜோர்டான் அரசாங்கம், அமெரிக்காவிடம் “இப்படி ஒரு நம்பகமான ஆள் இருக்கிறான், இவனை ஆஃப்கானிஸ்தானுக்கு உளவாளியாக அனுப்புவோம்” என்று சொன்னது. அதன்படியே ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டான் அல்-பலாவி. அல்-கொய்தா நெட்வொர்க்கில் ஊடுருவி அல்-கொய்தாவின் நம்பர்-2 ஆளான அய்மன் அல் சவாரியைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதுதான் அவனுக்குத் தரப்பட்ட வேலை. ஒருவருடமாக ஆஃப்கானிஸ்தானில் இருந்த அவன், ஜனவரியில் ஒரு முக்கியமான தகவலை அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்ல வேண்டும் என்று அவர்களை நேரில் சந்தித்தான். அப்போது அவன் நடத்திய தற்கொலைத்தாக்குதலில் அத்தனை பேரும் பலியானார்கள். அத்தாக்குதலில் இறந்த ஜோர்டான் நாட்டு அதிகாரி வெறும் அரசு அலுவலர் மட்டுமில்லை, ஜோர்டான் நாட்டின் அரசகுடும்பத்தைச் சேர்ந்த மிகவும் முக்கியமான புள்ளி.

இப்படி அமெரிக்காவால் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் உளவாளிகள், தீவிரவாதிகளுக்கே விசுவாசமாக நடந்து கொள்வது அமெரிக்காவைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இப்போது சையத் கிலானியின் கதைக்கு வருவோம். லஷ்கர்-எ-தொய்பா தொடர்புகளோடு அமெரிக்காவுக்குத் திரும்பிய சையத் கிலானிக்கு இப்போது மேற்குலகெங்கும் ஒரு தீவிரவாத நெட்வொர்க் கிடைத்தது. அதில் ஒருவன் கனடாவில் வசித்து வந்த ஹூசைன் ரானா. அமெரிக்காவிலிருந்து பல நாடுகளுக்கும் எளிதாகச் சென்று வருவதற்காகத் தன் பெயரை டேவிட் ஹெட்லீ என்று மாற்றிக்கொண்டான் சையத் கிலானி. ரானாவும், கிலானியும் இணைந்துப் பல தீவிரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டனர்.

சென்ற அக்டோபரில்(October 2009) முகமதுவைப் பற்றிய கார்ட்டூன்களை வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹெட்லீ திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து நடந்த விசாரணைகள் ஹெட்லீக்கும், மும்பை தாக்குதல்களுக்கும் தொடர்பிருந்ததைத் தெரியப்படுத்தியது. இந்நிலையில் சென்ற ஒருவாரமாகவே டேவிட் ஹெட்லீ, மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகத் தன் குற்றங்களை ஒத்துக்கொண்டு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பான் என்று பரபரப்பாக இருந்தது.

இந்நிலையில்தான் இந்திய அரசு வட்டாரங்களில் 2002-இல் பாகிஸ்தானுக்கு போதைப்பொருள் உளவாளியாக அனுப்பப்பட்ட ஹெட்லீ, உண்மையில் தீவிரவாதிகளை ஊடுருவ அனுப்பப்பட்ட உளவாளி, ஆனால் அந்தத் திட்டம் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்ற பேச்சு எழுந்தது. இதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது CIA. நேற்று தன் குற்றங்களை ஒத்துக்கொண்டு மரணதண்டனையிலிருந்தும், இந்தியாவுக்கு விசாரணைக்கு அழைத்து வருவதிலிருந்தும் தப்பினான் ஹெட்லீ.

இந்தியா முழுவதும் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டது, இந்தியாவிலிருந்த அமெரிக்கர்களைக் கொல்லத் திட்டமிட்டது, லஷ்கர்-எ-தொய்பாவுக்கு உதவி செய்தது, டென்மார்க் பத்திரிகை அலுவலகத்தைத் தகர்க்கத் திட்டமிட்டது என அத்தனை குற்றங்களையும் ஒத்துக்கொண்டான் ஹெட்லீ. மும்பை தாக்குதல்களுக்கு முன்பு பலமுறை இந்தியாவுக்கு வந்திருக்கிறான் ஹெட்லீ. சிறுவர்கள், பெண்கள் உட்பட பல யூதர்கள் பலியான நாரிமன் இல்லத் தாக்குதலைத் திட்டமிடுவதற்காக, ஒரு யூதரைப் போல் வேடமணிந்து நாரிமன் இல்லத்துக்கே வந்திருக்கிறான் ஹெட்லீ. 2007-இல் தன்னுடைய மனைவியுடன், தாஜ் ஹோட்டலிலும் தங்கியிருந்திருக்கிறான்.

புனே பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பிலும் ஹெட்லீயின் பங்கு இருப்பதாக இப்போது சந்தேகிக்கப்படுகிறது. ஹெட்லீயை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை செய்யவும் இந்தியா முயற்சிக்கும் என்றும் தெரிகிறது. ஆனால் என்ன செய்துவிடமுடியும் இந்தியாவால்? மும்பை தாக்குதலில் உயிரோடு பிடிபட்ட, அதற்கான வீடியோ ஆதாரம் உள்ள அஜ்மல் கசாபை விசாரிப்பதையே இந்தியா இன்னும் ஒழுங்காகச் செய்து முடிக்கவில்லை. அவன் ஒரு சிறுவன், அதனால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கசாபுக்காக வாதாடக்கூட நம்மூரில் ஆட்கள் இருக்கிறார்கள்.

ஒருவிதத்தில் ஹெட்லீ அமெரிக்காவிலேயே தன் குற்றத்தை ஒத்துக்கொண்டது கூட நல்லதுதான். இந்தியாவுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டிருந்தால், அவனுக்காக வாதாடி, அவனை விடுதலை செய்வதற்காக நம் அறிவுஜீவிகள் போராடியிருப்பார்கள். இன்று வெளியான செய்திக்குறிப்பின்படி நசீர் என்ற லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாதி, கோவை குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்ட சத்தர் பாய் அப்துல் நாசர் மதானியுடன் தனக்கிருக்கும் தொடர்புகளை வெளியிட்டுள்ளான். ஆனால் இதே மதானியை ஏதோ மகாத்மாவைப்போல தூக்கிப்பிடித்தன நம் பெரும்பத்திரிகைகளும், சிறுபத்திரிகைகளும், சிறுபத்திரிகை அறிவுஜீவிகளும். சில அறிவுஜீவிகள் இந்த மகாத்மாவை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து இயக்கமெல்லாம் நடத்தின. மதானியின் விடுதலையை நம் பெரும்பத்திரிகைகளும், சிறு பத்திரிகைகளும் ஒரு வெற்றிவிழாவைப் போலக் கொண்டாடின.

இந்த மாத அம்ருதா இதழுக்குத் தந்திருக்கும் பேட்டியில் அ.மார்க்ஸ் தீவிரவாதத்தைக் கண்டிக்கும்போது, இந்துத் தீவிரவாதத்தைக் கண்டிக்கும் அளவுக்கு, இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் கண்டிக்க முடியாது, ஏனென்றால் அது சிறுபான்மையினர்களின் தீவிரவாதம் என்றெல்லாம் பிதற்றுகிறார். மதானியை விடுதலை செய்யக்கோரிக் கையெழுத்திட்டவர்களில் அ.மார்க்ஸும் ஒருவர். மதானியின் விடுதலைக்காக உத்வேகத்துடன் செயல்பட்டவரும் இவர்.

இதையெல்லாம் விட மிகப்பெரிய நகைச்சுவை, புனே பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு இந்துத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என ‘சந்தேகித்து’ ஹிந்து நாளிதழ் வெளியிட்ட கட்டுரைதான். நாளையோ, அடுத்த வாரமோ அந்த குண்டுவெடிப்பின் உள்விவரங்களையும் ஹெட்லீயே வெளியிடலாம். ஏற்கனவே இந்த குண்டுவெடிப்பு நடந்த பேக்கரிக்கும் ஹெட்லீ வந்துபோன விவரம் இப்போது வெளிவந்துள்ளது.

தீவிரவாதத்தை இப்படி வெளிப்படையாகவே ஆதரித்துவரும் நம் அறிவுச்சூழலில், ஹெட்லீ போன்ற ஒரு கொடுந்தீவிரவாதியை இந்தியாவில் வைத்து விசாரித்தால், ஒரு வருடத்தில் அவன் வெளியே வந்து, ஆண்டிப்பட்டியிலோ, ஆல்வரிலோ தேர்தலில் நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவன் அமெரிக்காவிலேயே இருந்து, தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலங்கள் மூலம் நம் அறிவுஜீவிகளுக்கு அஜீரணம் தருவதே நல்லது.

“The Departed” திரைப்படத்தில், “உளவாளி இங்கேதான் எங்கேயோ இருக்கிறான். பேராசை பிடித்த, பெருங்குற்ற உளவாளி” என்று டி-காப்ரியோவை சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டுச் செல்வார் ஜாக் நிகல்ஸன். நாம் அந்த வார்த்தைகளை சந்தேகத்தோடு சொல்லத் தேவையில்லை.