வைரம்

உலகின் மிகப் பெரிய வைரம் 1905 ஆம் வருடம் ஜூன் 25-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் “ப்ரீமியர்” வைர சுரங்க நிலையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் எடை 3106 காரட் (சுமாராக 620 கிராம் – அரைக்கிலோவுக்கு மேல் எடை.) அவ்வளவு பெரிய மிக அரிய வைரத்தை உடைத்துச் சின்ன வைரங்களாக்கும் பொறுப்பு ஆம்ஸ்டர்டாம் நகரில் இத்துறையில் தலை சிறந்த நிபுணர்களாக விளங்கிய ஆஸ்ஷெர் சகோதர்களிடம் (Asscher Brothers) கொடுக்கப்பட்டது. ஜோஸஃப் ஆஷெர் (Joseph Asscher) கொடுத்த ஒரு ‘தட்டு’ வைரத்தை மிகத் துல்லியமாக இரு சம பாகங்களாகப் பிரித்தபோது சந்தோஷத்திலும், அதிக மன அழுத்தத்திலும் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இது தெரிந்துதானோ என்னவோ முன்னெச்சரிக்கையாக அவர் வேலை முடியும் வரை ஒரு மருத்துவரையும், நர்ஸையும் தன்னருகிலேயே நிற்கச் சொல்லியிருந்தார்.

உலகின் மிகப்பெரிய வைரம் தென்னாப்பிரிக்காவில் கிடைத்திருந்தாலும் 1866-ஆம் ஆண்டு வரை உலகின் ஒரே வைரக்கிடங்கு இந்தியா மட்டுமே. கி.மு 296-இல் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில் வைரத்தைப்பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. 1300களில் இந்தியாவிலிருந்து மேற்கு ஆசியா மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு வைர ஏற்றுமதி ஆரம்பிக்கப்பட்டது. வெனிஸ் அப்போது ஐரோப்பியாவின் ஒரு முக்கியமான வர்த்தக மையமாக விளங்கியது. இந்திய வைரங்கள் பட்டை தீட்டப்படாத இயல்பு நிலையில் வெனிஸுக்கு அனுப்பப்பட்டன. இவ்வைரங்கள் அருகிலிருந்த சிறு சிறு ஐரோப்பிய நகரங்களில் பட்டை தீட்டப்பட்டன. அது போன்ற சிறு நகரங்களில் ஒன்றுதான் இன்று உலகின் வைரம் பட்டை தீண்டும் தொழிலில் முதன்மையாக விளங்கும் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரம். இத்தனைக்கும் வைரம் பட்டை தீட்டும் தொழிநுட்பம் இந்தியர்களிடமிருந்துதான் பிற நாடுகளுக்குச் சென்றது. ஆனால் இத்தொழில்நுட்பம் ஆண்ட்வெர்ப் நகரத்தில் நவீனக் கருவிகளின் உதவியால் பன்மடங்கு நுணுக்கப்படுத்தப்பட்டது. 1300-1400 ஆண்டுகளிலேயே இப்படி என்றால் இந்தியா ஆங்கிலேயரின் காலனியாக மாறியவுடன் என்ன நடந்தது என்று சொல்லவா வேண்டும்! கோயில், அரண்மனை, பேரரசன், சிற்றரசன், மந்திரி முதல் உள்ளூர் கணக்குப்பிள்ளை வரை ஓரிடம், ஒரு மனிதர் மீதமில்லாமல் அத்தனை பேரிடமிருந்தும் வைரங்களை உருவிக்கொண்டு போனார்கள் ஆங்கிலேயர்கள். (கோஹினூர் வைரக்கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே.) அது மட்டுமில்லாமல் இந்தியாவின் வைரச் சுரங்கங்களும், வைரம் கிடைத்து வந்த கோதாவரி ஆற்றுப்படுகைகளும் ஆங்கிலேயர்களுக்கு எழுதி வைக்கப்படாத சொத்தாகின.

இது போதாதென்று 1866-இல் இன்னொரு ஆங்கிலேயக் காலனி நாடான தென்னாப்பிரிக்காவிலும் வைரச்சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏக்கர் கணக்கிலான வைரச்சுரங்கங்களை ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கினார்கள் ஆங்கிலேயர்கள். இந்த வைரச்சுரங்கங்களிலும் உள்ளூர் மக்களையே அடிமைகள் போல வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். ஏற்கனவே இந்திய வைர வணிகம் மூலம் பலமாகியிருந்த ஆண்ட்வெர்ப், ஆம்ஸ்டர்டாம் நகரங்கள் இந்த வைரங்கள் பட்டை தீட்டப்படப் பேருதவியாக இருந்தன.

இங்கேதான் இன்னொரு பிரச்சினை ஆரம்பமாகியது. வைரக்கல் மிகக் குறைவாகக் கிடைத்ததால்தான் அதன் விலையும் மதிப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க சுரங்கங்களிலிருந்து டன் கணக்கில் வைரங்கள் கிடைக்க ஆரம்பிக்கவும், வைரத்தின் மதிப்பு கடும் சரிவைச் சந்திக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டது. இவ்வாறு வைரத்தின் மதிப்பு குறைந்து போவதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த தென்னாப்பிரிக்க ஆங்கிலேய வியாபாரிகளால் 1888-இல் ஏற்படுத்தப்பட்டக் கூட்டமைப்புதான் ‘டீ பியர்ஸ்’ (De Beers) என்னும் அமைப்பு. இப்போது உலகெங்கிலும் கிடைத்து வந்த வைரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அதன் விலை தங்கத்தின் விலை அளவிற்குக் குறைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த ‘டீ பியர்ஸ்’ அமைப்பின் காரணமாகவே இதுவரை உலகில் வைரத்தின் விலை வீழ்ச்சியைச் சந்தித்ததே இல்லை (ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர). இப்படி ஒரு , மறைவான தனியார் சிறுகுழுதான் (Cartel) உலகெங்கிலும் வைர உற்பத்தியையும், சந்தை மதிப்பையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த அமைப்பின் கீழ் உலகின் பெரும்பாலான வைர வியாபாரிகள் ஒன்று சேர்ந்து விலை குறையாமல் கட்டுக்குள்ளேயே இருக்கும்படி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (அத்தனை பேரும் ஆங்கிலேயர்கள்!) யூரோப், ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அமைப்பு வெவ்வேறு பெயர்களில் தன்னுடைய கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டது. அதுமட்டுமல்லாமல் டன் கணக்கில் வைரங்கள் கிடைக்கும் அத்தனை தென்னாப்பிரிக்கச் சுரங்கங்களும் இந்தக் கூட்டமைப்புக்குச் சொந்தமானது.

இன்று உலகெங்கும் ஆடம்பரத்தின் சின்னமாக இருக்கும் வைரத்தின் மதிப்பு ‘டீ பியர்ஸ்’ பின்னிய மாயவலை மட்டுமே என்றால் நம்புவது கடினம்தான். ஆனால் அதுதான் உண்மை. 1930-ஆம் ஆண்டுகளின் இறுதியில் உலகெங்கும் நிலவிய கடும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வைரத்தின் விலை வேகமாக சரிய ஆரம்பித்தது. ஆனால் இன்னொரு புறமோ ஆப்பிரிக்காவின் சுரங்கங்களிலிருந்து வைரம் அள்ள அள்ளக் குறையாமல் வந்து கொண்டேயிருந்தது. அப்போது ‘டீ பியர்ஸ்’-ன் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் 29 வயதே நிரம்பிய ஹாரி ஓப்பன்ஹைமர் (Harry Oppenheimer). விலையைக் குறைக்காமல் வைரத்தின் விற்பனையைத் தூக்கி நிறுத்த வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி வைரம் பற்றிய மதிப்பை மக்கள் மனத்தில் பண்மடங்கு அதிகப் படுத்தவேண்டும், அதே சமயம் அதை வாங்கவேண்டுமென்ற உத்வேகமும் பொதுமக்களிடையே எழ வேண்டுமென்று முடிவு செய்து அதற்கான பொறுப்பை N.W.அயர் (N.W.Ayer) என்ற அமெரிக்க விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைத்தார் ஓப்பன்ஹைமர்.

N.W.அயர் நிறுவனம் மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியது. ஹாலிவுட் நட்சத்திரங்கள், பிரிட்டிஷ் அரச குடும்பம் எனப் பிரபல்யமானவர்களை வைத்து வைரம் பற்றிய வண்ணமிகு விளம்பரங்களை மக்களிடையே பரப்பியது. வைரம் அன்பின் அடையாளம்; ஒரு ஆண்மகன் காதலிக்குத் தன் அன்பின் பரிசாக வைரத்தைத் தர வேண்டும் போன்ற கருத்துகளை மக்களிடம் தீவிரமாக விதைத்தது. மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் வைரங்களைப் பற்றி கருத்தரங்கங்கள் நடத்தியது. இப்படிப்பட்ட விளம்பரங்களால் திருமண நிச்சயங்களில் வைர மோதிரம் பரிமாறிக்கொள்வது என்ற சம்பிரதாயம்உருவாகத் தொடங்கியது. சில வருடங்களில் இந்த வைர மோதிர சடங்கு மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கியது. N.W.அயர் கருத்தரங்குகளால் பெரிதும் உந்தப்பட்ட பள்ளிச் சிறுவர்களும், இளைஞர்களும் தங்கள் திருமணச் சடங்குகளில் வைரம் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள்.

1960-ஆம் ஆண்டு வரை ஜப்பானில் திருமண நிச்சயம் என்பது மிக எளிய நிகழ்ச்சி. ஆனால் தொடர்ந்து செய்யப்பட்ட விளம்பரங்கள் மூலம் பத்து வருடங்களில் 60 சதவிகித நிச்சயங்கள் வைரத்துடன் நடைபெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

மேலும் வைரத்தை அன்பின் அடையாளமாக உருவகப்படுத்திய A.N.அயர் நிறுவனம் அன்பு நிலைத்திருப்பது போலவே ஒருவர் பரிசாகப் பெற்ற வைரமும் கடைசி வரை அவருடனே இருக்க வேண்டும்என்ற ரீதியில் வைரத்திற்கு நெடுநாளைய உணர்வுபூர்வ மதிப்பைத் தன்னுடைய ‘என்றென்றும் வைரம்’ (Diamond Forever) என்ற வரலாற்றுப் புகழ் வாய்ந்த விளம்பரத்தின் மூலம் தேடித்தந்தது. இதனால் மக்கள் வைரத்தை மறு விற்பனை செய்வது என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனதால் வைரத்திற்கான இரண்டாம் சந்தை (Secondary market) இல்லாமலே போனது. இதனால் விற்பனையில் எப்போதுமே புதிய வைரங்களே புழங்கி வந்தன!

இவ்வாறு ஒருபுறம் வைரம் ஒரு ஆடம்பரப் பொருளாகவும், கெளரவம் மற்றும் செல்வாக்கின் சின்னமாகவும் மக்கள் மனதில் பதிந்து கொண்டே இருக்க, இன்னொரு புறம் அதன் உற்பத்தி பெருகிக் கொண்டே இருந்தது. ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகளான நமீபியா, போத்ஸ்வானா, காங்கோ, அங்கோலா ஆகியவற்றிலும், தென்னமெரிக்க நாடுகள், சைபீரியா, ஆஸ்திரேலியா என்று உலகெங்கிலும் வெவ்வேறு நாடுகளில் வைரங்கள் சுரங்கங்களிலும் (செயல்படாமல் அமிழ்ந்துபோன எரிமலைகளே வைரச்சுரங்கங்கள்!), ஆற்றுப்படுகைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த அத்தனை நாட்டு அரசாங்கங்களுடனும் ரகசியமாகவோ, வெளிப்படையாகவோ வைர விற்பனைக்கான ஒப்பந்தம் செய்து கொண்டது ‘டீ பியர்ஸ்’. இதனால் இந்த அரசாங்கங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் தருகிறேன், சைபீரியாவில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது நாடு கம்யூனிஸ்ட் ரஷ்யாவாக மாறி இருந்தது. ரஷ்யர்கள் குறைந்த விலைக்கு வைரத்தை விற்க ஆரம்பித்தால் அது உலகின் மற்ற நாடுகளில் வைர விலையை பாதிக்கும். டீ பியர்ஸோ ஒரு ரகசிய, ஏகபோக முதலாளிய நிறுவனம். நியாயமாகப் பார்த்தால் கம்யூனிஸ்ட் ரஷ்யா ஒரு ஏகபோக முதலாளி நிறுவனத்தின் பிடியில் இருந்து உலகச் சந்தையை விடுவிக்கவே முயல வேண்டும். ஆனால் துவக்கத்தில் இருந்து கடைசி வரை பணத் தட்டுப் பாட்டிலேயே சிக்கி இருந்த கம்யூனிஸ்டு ரஷ்யா தன் நலனைத்தான் பார்த்துக் கொண்டது. வைரங்களைக் குறைந்த விலையில் விற்பது ரஷ்யாவிற்கும் நஷ்டம்! அதனால் ரஷ்யா ‘டீ பியர்ஸ்’ அமைப்புடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்த்தத்தின்படி ரஷ்ய அரசாங்கம் அத்தனை சைபீரிய வைரங்களையும் ‘டீ பியர்ஸ்’ அமைப்பில் உறுப்பினராக உள்ள வைர விற்பனை நிலையத்திடம் மட்டுமே விற்கும். அதன்பின் இந்த வைரங்களை பொதுமக்களிடம் விற்பனை செய்வதை ‘டீ பியர்ஸ்’ பார்த்துக்கொள்ளும். இத்தனைக்கும் ‘டீ பியர்ஸ்’ ரஷ்யாவுக்கு எதிரான ஆங்கில-அமெரிக்க அமைப்பு. அதனால் என்ன? கொள்கையெல்லாம் காற்றில் போகட்டும். காசுதானே முக்கியம்!

ரஷ்யாவே இப்படி என்றால் ஏழை ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! வன்முறை, பெரும் குழப்பம், ராணுவக் கொடுங்கோலாட்சி என்று பலவிதமான அலங்கோலங்களுக்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில், அரசியல் தலைவர்கள் தம் நலனைப் பார்த்து ஏதேதோ ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கொள்ளை அடித்துப் போனார்கள். ஆனால் பாதிக்கப்பட்டது ஆப்பிரிக்க ஏழை மக்கள்தான். உணவுக்கே வழியில்லாத, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்வில் சிக்கிய அவர்களிடம் மிகவும் சொற்ப சம்பளத்தில் இந்த சுரங்கக் கம்பெனிகள் கடுமையான உயிரைப் பணயம் வைத்து செய்யும் வேலைகளை வாங்குகின்றன. இன்னும் சில இடங்களில் ஏழைச் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் கண்டுபிடிக்கும் வைரங்களைப் பிடுங்கிக்கொண்டு கொன்றுவிடும் கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவெங்கும் அரசுடைய கட்டுப்பாட்டுக்குள் அடங்காது, உள்ளூர் சண்டியர்கள் கட்டுப்பாட்டில் ஆங்காங்கு நடத்தப் படும் சுரங்கங்கள் இருக்கின்றன.

இது தவிர இந்த குழப்பமான நாடுகளில் பலவகைத் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன. அந்தத் தீவிரவாத அமைப்புகள் தாங்கள் செயல்படுவதற்கான பணத்திற்காக இது போன்ற சுரங்கங்களைக் கைப்பற்றி வைரங்களைக் கள்ளச் சந்த்தையில் விற்கிறார்கள். அதில் கிடைக்கும் பணத்தில் பல நாடுகளிலும் ரத்தக் களரியாகக் கலவரம் நடத்துகிறார்கள். இவ்வாறு தீவிரவாதிகள் விற்கும் வைரங்களுக்கு ‘ரத்த வைரங்கள்’ (Blood Diamonds) அல்லது ‘மோதல் வைரங்கள்’ (Conflict Diamonds) என்று பெயர்.உலகை ரத்தக் களரியாக்கியே தீருவேன் என்று முனைந்திருக்கும் ஒசாமாவின் கூட்டம் கூட இந்த வைரக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக வதந்தி உலவுகிறது. ஆயுதங்கள் வாங்க பணத்தை நாடு விட்டு நாடு மாற்றுவது கடினமாக இருக்கிறது, ஒரு சிறு பொட்டலம் வைரம் கடத்துவது எளிது, அதன் மதிப்பும் சந்தையில் ஏராளம். அதனால் கிட்டும் ஆய்தங்களும் ஏராளம்.

லட்சக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் இறப்பதற்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் ஐ.நா அமைப்பு ‘கிம்பர்லி சான்றிதழ் திட்டம்’ (Kimberley Certification Process) என்ற ஒரு திட்டத்தை 2003-இல் கொண்டுவந்தது. அதன்படி காங்கோ, அங்கோலா போன்ற நாடுகளின் ஒப்புதல் பெறாத சுரங்கங்களிடமிருந்து வைரங்கள் வாங்குவதில்லை என்று ஐ.நா-வின் அத்தனை உறுப்பு நாடுகளும் ஒத்துக்கொண்டன. இதிலும் ‘டீ பியர்ஸ்’-க்குத்தான் லாபம். கிம்பர்லி சான்றிதழ் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அத்தனை சுரங்கங்களும், விற்பனையாளர்களும் ‘டீ பியர்ஸுடன்’ நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள்!

இவ்வாறு ‘இரத்த வைரங்கள்’ தடுக்கப்படுவதால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரத்தைச் சேர்ந்த வைரப் பட்டை தீட்டும் யூதர்கள். ஆண்ட்வெர்ப் நகரம் உலகின் மிகப்பெரிய சட்டரீதியான வைர விற்பனை செய்யும் நகரம் மட்டுமல்ல; உலகின் மிகப்பெரிய வைரத்தின் கள்ள சந்தையும் அதுதான்! இக்கள்ளச் சந்தையைத் தடை செய்வதற்காக ஏராளமான விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் ‘உலக வைர விற்பனை நிலையம்’ விதிக்க வைர வியாபாரம் செய்வது முன்பு போல அவ்வளவு எளிதாக இல்லை.

ஆண்ட்வெர்ப்பில் நான் தங்கியிருந்த தெருவிலிருந்து இரண்டு தெரு தள்ளிதான் ரயில் நிலையத்தைப் பார்த்த மாதிரி வைர மார்க்கெட் இருக்கிறது. முன்பெல்லாம் அப்பகுதிகளில் நடந்து போனால், ஏதோ ப்ளாக்கில் சினிமா டிக்கெட் விற்பது போல் ‘வைரம் வேண்டுமா?’ என்று கறுப்பர்கள் நம் காதுகளில் கிசுகிசுப்பார்கள்!

ஆண்ட்வெர்ப்பின் மொத்த வைர வியாபாரமும் இரண்டே இரண்டு சமூகப் பிரிவினர்களிடம்தான் இருக்கிறது. ஒரு பிரிவினர் கடந்த 700 வருடங்களாக அங்கே வியாபாரம் செய்து வரும் யூதர்கள். இன்னொரு பிரிவினர் 50 வருடங்களாக வியாபாரம் செய்து வரும் குஜராத்தி இந்தியர்கள். 50 வருட குஜராத்திகள் 700 வருட யூதர்களை வைர விற்பனையில் முந்தி வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

ஆண்ட்வெர்ப்பின் சென்ற வருட வைரவிற்பனையான 23 பில்லியன் யூரோக்களில் இந்தியர்களின் பங்கு மட்டுமே 15 பில்லியன் யூரோக்கள்! (இந்திய மதிப்பில் 90,000 கோடி!) கடந்த மே மாதம் நடந்தஆண்ட்வெர்ப் வைர விற்பனை மையத்திற்கான தேர்தலில் மொத்தம் ஆறு இடங்களில் ஐந்தை இந்தியர்கள் வென்றிருக்கிறார்கள். இதெல்லாம் வைர விற்பனையில் இந்தியர்களின் வளர்ந்து விட்ட ஆதிக்கத்தைக் காட்டுகிறது.

பொதுவாகவே ஆண்ட்வெர்ப்பில் குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், வைர விற்பனைக்கெதிரான கெடுபிடிகள், யூதர்களுக்கெதிராகப் பெருகிவரும் மொராக்க முஸ்லிம் குடியேறிகளின் தொல்லைகள், மேலும் யூரோப்பில் பொதுவாக வளர்ந்து வரும் யூத எதிர்ப்பு மேலும் அவர்கள் மீதான வெறுப்பு ஆகியவற்றால் யூதர்கள் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்து கொண்டிக்கிறார்கள். இதனால் கடந்து இருபது வருடங்களில் ஆண்ட்வெர்ப் நகரத்தில் யூதர்களின் மக்கள்தொகை பத்தில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது.

இன்னொரு புறம் வைர விற்பனை செய்யும் இந்தியர்கள் அனைவரும் உறவினர்கள். ஒரு நிறுவனம் குடும்பமாக வேலை பார்த்து வருவதால் தொழிலில் பாதுகாப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் யூதர்களைப் போலல்லாமல் இந்தியர்கள் எந்த விதமான மாற்றத்தையும் அனுசரித்துப் போகும் மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆண்ட்வெர்ப் வைரத்தொழில் நசிந்து போக நேர்ந்தால் உடனடியாக உலகின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து போவதற்கு இப்போதே தயாராக இருக்கிறார்கள்.

ஆண்ட்வெர்ப்பிலிருந்து இந்தியா வருவதற்கு முன்னால் அம்மாவுக்கு வைரம் வாங்கி வரலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே வாங்கியிருந்த நண்பர்கள் சொல்லக்கேட்டு ஒரு குஜராத்தி வைர வியாபாரியிடம் பேசினேன். கடைக்கு வந்து வாங்கிச் செல்லுமாறு கூறினார்.

கடை என்றால் நம்மூர் கடைகள் போலக் கிடையாது. அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு வீட்டில் அலுவலகம், கடை, ஓய்வெடுக்கும் அறை என எல்லாம் ஒன்றாக இருக்கும். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அத்தனை வீடுகளிலுமே இது போல்தான் வைர விற்பனை நடைபெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் அந்தக் குடியிருப்பு இருந்த தெரு முழுவதுமே இது போல் வைர விற்பனை செய்யும் கடைகள், வீடுகளால் நிரம்பியது. அதனால் மொத்தத் தெருவிற்கும் இரும்புத் தடுப்புகள், ரகசிய கேமராக்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என ஏகப் பாதுகாப்பு!

அப்படிப்பட்ட ஒரு கூட்டமான, ஆனால் மிகப் பாதுகாப்பான இடத்தில் அவரை சந்தித்து வைரம் வாங்கினேன். இந்தியர்களாக இருந்தாலும் சிரித்துப் பேசினாலும், பேரம் பேசாமல், கறாராக வியாபாரம் செய்கிறார்கள்! இல்லாவிட்டால் அத்தனை தூரம் வளர்ந்திருக்க முடியுமா?

வைரம் வாங்கிக்கொண்டு, இத்தனை சின்ன பொருளுக்க்கு, அவ்வளவு விலையா என்ற கனத்த மனதுடனும், விலை உயர்ந்த பொருளை வைத்திருப்பதால் படபடப்புடனும், சட்டைப் பையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டே மாடியிலிருந்து கீழிறங்கி வந்தேன். அந்த மனநிலையிலும், நான் இறங்கி வெளியே வருகையில் அத்தனை நவீனமான அந்தக் குடியிருப்பில் நான் படித்த வாசகம் என்னை மீறி அடக்கமுடியாமல் சிரிக்க வைத்தது.

அந்தக் குடியிருப்பின் தபால் பெட்டி மேல் எழுதியிருந்தது:

“இது குப்பைத்தொட்டி அல்ல!”