வழித்துணை நாய்கள்

இந்தியாவிலேயே நாய் கடித்து இறப்பவர்கள் பெங்களூரில்தான் அதிகம் என்று ஒரு புள்ளிவிவரம் இருப்பதாகக் கூறுகிறார்கள். எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தெருவுக்கு பத்து நாய்கள் இருப்பதென்னவோ உண்மை. நான் இங்கே வேலைக்கு சேர்ந்த புதிதில் என்னுடன் ஒரு சர்தார்ஜியும் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து ரொம்ப லேட்டாக வந்த சர்தார்ஜியைப் பத்து நாய்கள் சுற்றி நின்று “உர்ர்ர்ர்” என்று முறைத்து சுற்றிவளைத்துக் கொண்டன. என்ன செய்வதென்று புரியாமல் ஒரு சில நிமிடங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்த சர்தார்ஜி, சட்டென்று சுதாரித்துக்கொண்டு, கையிலிருந்த பையை தலைக்கு மேல் சுற்றிக்கொண்டே “ஏ……” என்று கத்திக்கொண்டு ஒரே பாய்ச்சலாக வீட்டுக்குள்ளே பாய்ந்துவிட்டார். சர்தார்ஜி என்ன செய்கிறார் என்று புரியாமல் குழம்பிப்போன நாய்கள் இயல்பு நிலைக்கு வரவே சில நிமிடங்கள் பிடித்திருக்கும்! எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூட நாய்களைப் பற்றி கொஞ்சம் பயத்துடனே ஜெயமோகனிடம் சொல்வதாக “நினைவின் நதியில்” புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். “ராத்திரி லாட்ஜுக்கு போறப்ப அப்படியே வழிமறிச்சிடும். சென்னை நாய்கள்ட்ட நம்மூர் நாய்கள்ட்ட இருக்கற ஒரு இதம் இல்லை. மொரட்டு நாய்கள். பேர் கூட நம்மூர் நாய்களுக்கு கோலப்பன், செவத்த பெருமாள்-னு வைக்கலாம்னா, அதுகளுக்கு பக்கிரி, கபாலின்னுதான் வைக்க முடியும்…”

இப்படி நாய்களைப் பற்றி துரத்தல் கதைகளாகவே கேள்விப்படிருந்த எனக்கு இவை பார்வையற்ற மனிதர்களை வழிநடத்திச் சொல்லவும் பயன்படும் என்று தெரியவந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அயர்லாந்தில் “பண உதவி செய்யுங்கள்” என்ற அறிவுப்புடன் ஊரெங்கும் வைக்கப்பட்டிருந்த “வழித்துணை நாய் இயக்கம்” (Guide Dog Association) சிலைகள் வழியாகத்தான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது.

அயர்லாந்தில் மட்டுமல்லாமல் பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பரவலாக இருக்கும் இந்த வழித்துணை நாய்கள் இயக்கம் மூலம் நிறைய பார்வையற்ற மக்கள் பயனடைந்து வருகிறார்கள். நன்றாகப் பயிற்சியளித்து பழகப்பட்ட நாய்கள் பார்வையற்ற மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கூட்டிச் செல்லுதல், எதிரே யாரேனும் வந்தால் ஒதுங்கி வழிவிடுதல், செய்தித்தாட்கள், சாப்பிடும் தட்டுகள் போன்ற சிறு சிறு பொருட்களை எடுத்துவருதல் போன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட நாய்களைக் குட்டியாக இருக்கும்போதிலிருந்தே பயிற்சியளித்து, அதன் பார்வையற்ற எஜமானரிடம் ஒப்படைக்கும் பணியைத்தான் இந்த வழித்துணை நாய் இயக்கங்கள் செய்து வருகின்றன.

பார்வையற்ற மனிதர்களுக்கு உதவியாக நாய்களைப் பயன்படுத்தும் உத்தி எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சரியாகத்தெரியவில்லை. ஒரு பார்வையற்ற மனிதனை நாய் ஒன்று வழிநடத்திச்செல்லும் சிற்பம் கொண்ட பழங்காலத்தைச் சேர்ந்த மரப்பலகை ஒன்று கிடைத்திருக்கிறது. 1819-இல் , ஜோஹன் வில்ஹெல்ம் க்ளெய்ன் (Johann Wilhelm Klein) என்ற ஆஸ்திரியர் வியன்னாவில் வழித்துணை நாய்களுக்கானப் பயிற்சிப்பள்ளியை நடத்தினார். நாய்களைப் பழக்குவதைப் பற்றி ஒரு புத்தகம் கூட வெளியிட்டார். இருந்தாலும் அதன்பின் நூறு ஆண்டுகள் வரை நாய்களைப் பழக்கும் திட்டத்தில் எவரும் அவ்வளவு தீவிரமாகக் கவனம் செலுத்தவில்லை.

முதல் உலகப்போரில் (1914-1918) விஷ வாயுத் தாக்கி பல்லாயிரக்கணக்கான ஜெர்மானியப் போர்வீரர்கள் கண்பார்வை இழந்தார்கள். அப்படிப்பட்ட வீரர்களுக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்த ஒரு மருத்துவர் ஒரு நாள் ஒரு பார்வையிழந்த வீரருடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரோ கூப்பிடவே தன்னுடைய நாயை அந்த வீரருக்குத் துணையாக விட்டுவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்க்கையில் அவருக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில், அந்த நாய் போர் வீரரைப் பள்ளம்-மேடு பார்த்து ஜாக்கிரதையாக ‘வாக்கிங்’ கூட்டி சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த மருத்துவருக்கு இவ்வாறு நாய்கள் மூலம் பார்வை இழந்த மக்கள் பயன்பெற முடியும் என்பது உறைத்தது. நிறைய ஆராய்ச்சிகள் செய்து 1923-இல், அந்த மருத்துவர் ஜெர்மனியில் ஒரு நாய்கள் பயிற்சிப்பள்ளி ஆரம்பித்தார்.

அதன்பின் பத்தாண்டுகள் கழித்து இந்தப் பயிற்சிப்பள்ளியைப் பற்றி ஸ்விட்சர்லாந்தில் இருந்த யூஸ்டிஸ் (Eustis) என்றப் பெண்மணிக்குத் தெரியவர அவர் மூலமாகவே அமெரிக்காவிற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த வழித்துணை நாய்கள் உத்தி பரவத்தொடங்கியது. பெரும்பாலும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் மட்டுமே அவற்றின் பழகும்தன்மை காரணமாக வழித்துணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் 1930-களில் இங்கிலாந்து ஜெர்மன் ஷெப்பர்டுகளுக்குப் பதிலாக லாப்ரடார் வகை நாய்களைப் பயன்படுத்தியது என்றால் எந்த அளவுக்கு அங்கே ஜெர்மானியர்கள் மேல் வெறுப்பிருந்திருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்!

நாய்களைப் பழக்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. மிகவும் குட்டியாக இருக்கும்போதே இப்பள்ளிகள் நாய்களுக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்து விடுகின்றன. மூலை முடுக்குகளை சுற்றி சுற்றித் திரும்புவது நாய்களின் ஒரு தனிப்பட்ட குணாதிசயம். ஆனால் இது உடன் நடப்பவருக்கு மிகவும் சிரமம் தரும் வேலை. எனவே நாய்களை முதலில் நேர்க்கோட்டில் செல்லப் பழக்கப் படுத்துகிறார்கள். பின்னர் நாய்களுக்கு போக்குவரத்தை அனுசரித்து செல்லும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் கட்டளை இட்டால் அதன்படி செல்லும் பயிற்சி. பின்னர் இந்த நாயைப் பணிக்கு அமர்த்திக்கொள்ளும் எஜமானருடன் நாயைப் பழக வைப்பார்கள். நாய் தன் எஜமானருடன் சகஜமாக ஒரு வருடம், இரண்டு வருடங்கள் கூட ஆகலாம். எஜமானருடன் நன்றாகப் பழகிய பின்தான், அவர் நாயைத் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள். இத்தனைப் பயிற்சிகளுக்குப் பின்னர், எதிரே வாகனம் வரும்போது, எஜமானரே ரோட்டைக் கடந்து செல்லச் சொன்னால்கூட, அந்த நாய் வண்டி போன பின்தான் ரோட்டைக் கடக்கும்!

இப்படிப்பட்ட நாய்களுக்கும் அதன் எஜமானர்களுக்கும் இடையிலான பந்தம் மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று. சில நாய்கள் 10 வருடம் – 15 வருடங்கள் கூட ஒருவருக்கு வழித்துணையாக இருந்திருக்கின்றன. அயர்லாந்தின் அத்லோன் (Athlone) நகரைச் சேர்ந்த ஹீ (Hugh) என்ற கண் பார்வை இழந்தவர் வழித்துணை நாயின் உதவியால் இன்று தொலைபேசியைக் கையாளும் வேலையை வெற்றிகரமாகச் செய்து வருகிறார்! “நான் போகும் எல்லா இடங்களுக்கும் என் நாயை அழைத்துச் செல்கிறேன். சர்ச் உட்பட. உலகத்திலேயே பாவ மன்னிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரே நாய் என் லிசாவாகத்தான் இருக்கும்” என்கிறார் சிரித்துக்கொண்டே.

ஆனால் இப்படிப்பட்ட வழித்துணை நாய்கள் திட்டத்தை இந்தியாவில் செயல் படுத்துவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. முதலில் இந்த நாடுகளைப் போல் நம் நாட்டில் பாதசாரிகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கிடையாது. லாரி, பஸ், சைக்கிள், சிறுவர்கள் ஓட்டும் டயர் வண்டி முதற்கொண்டு அத்தனைக்கும் பிறகுதான் பாதசாரிகள் சாலையில் நடமாட முடியும். வெளிநாடுகளில் அப்படியே தலைகீழ். யாரேனும் பாதசாரி சாலையைக் கடக்கிறார் என்றால், கார்கள் புடைசூழ அமைச்சரே வந்தாலும், பாதசாரி சாலையைக் கடக்கும்வரை கார்கள் நின்று வழிவிடும்!

சாலைகளும் இங்கே அத்தனை சீரானவை கிடையாது. கண்ணிருக்கும் மனிதர்களுக்கே இங்கே சாலையைக்கடப்பது பெரும்பாடாக இருக்கிறது. நாய்கள் ஒரு ஆளை நகர்த்திச் செல்வதென்றால் சும்மாவா! பொதுப்பணித்துறை, டெலிஃபோன், சாக்கடை இவற்றுக்கெல்லாம் வெட்டப்பட்ட ரோட்டைக் கடப்பதற்கு பயிற்சி தரவேண்டும் என்றால் நாய்களுக்கு ஆயுசு பத்தாது என்றே தோன்றுகிறது! ஒருவேளை இத்தனையும் மீறி இந்தியாவிலும் செல்லுபடியாகும் படி யாரேனும் நாய்களுக்கானப் பயிற்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தக்கூடும். அதுவரை ராம.நாராயணன் படங்களிலோ, நாய்க்கு பயந்து ஓடிப்போன சர்தார்ஜியைப் பற்றிய நினைவுகளிலோ மூழ்கியிருப்போம்.