அமிலமான கடல்கள்
உலகம் விவசாயச் சமூகங்களிலிருந்து தொழிற்சாலைச் சமூகங்கள நிறைந்ததாகி விட்டது. விளைவு, கரி அமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) உலகில் எங்கும் பெருகி வருகிறது. இத்தனை காலமாக உலக சமுத்திரங்கள் இந்த வாயுவை ஒரு மணிக்கு பத்து லட்சம் டன் போல கிரஹித்துக் கொண்டு இருக்கின்றன. விளைவு, கடல் நீரில் அமிலம் கூடுகிறது, கடல் வாழ் உயிரினங்கள் பிழைப்பது அரிதாகி வருகிறது. இதுவரை நமக்கு ஏற்கனவே தகவல் தெரிந்திருக்கும். புதுத் தகவல்- சமுத்திரங்கள் உலகில் உள்ள சப்தத்தையும் இத்தனை நாட்களாக விழுங்கி வந்திருக்கின்றன. அமிலமான கடல்கள் சப்தத்தை அடக்கும் சக்தியை இழக்கின்றன. விளைவு, கடல் வாழ் உயிரினங்களுடைய வாழ்க்கை மேலும் துன்பமாகிறது. உலக வணிகம் கடல் போக்குவரத்தை நம்பி இருப்பது அதிகரிக்கும் அதே நேரம் இந்தக் கப்பல்கள் வெளிப்படுத்தும் கரியமில வாயுவும், சப்தமும் கடல்களை அமிலமாக்கி, சப்த வெளியாக்கி கடல்வாழ் உயிரினங்களை அழிக்கின்றன. என்னென்ன விதங்களில் இந்த மாறுதல்கள் நேர்கின்றன? இக்கட்டுரையில் காணலாம்.
சீனாவில் வேலையில்லா திண்டாட்டம்
சீனா உலக மகா சக்தியாகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு சாரார் எக்காளமிடுகிறார்கள். இந்தியாவிலேயே இந்தியா மோசம், சீனா நம் தலைமை என்று அரசியல் கோஷத்தைக் கொண்ட மனிதர்கள் கட்சிகள் நடத்துகிறார்கள். சுய வெறுப்பு இந்தியரிடம் அத்தனை உள்ளது. சீனர்கள் தம்மை உலகத் தலைமைக்கானவர்கள் என்று பல நூறாண்டுகளாகவே கருதி வருகிறார்கள். சீனா உண்மையில் எங்குள்ளது? உலகத் தலைமையருகேவா, அல்லது ஏற்கனவே தலைமையைக் கைப்பற்றி விட்டதா? இதெல்லாம் நெடிய சர்ச்சைகளில் கூட எளிதில் தீர்க்கப் பட முடியாதவை. ஒவ்வொரு தலைப்பாக எடுத்துப் பேசினால் கொஞ்சம் தெளிவு கிட்டலாம். உதாரணமாக, சீனாவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிகக் குறைந்து வருகின்றன என்பது இப்போது தெரிகிறது. இது ஏன் என்ற விவாதம் ஒன்று இதோ. இதில் இருந்து காரணங்கள் என்ன, விளைவுகள் என்ன என்று நமக்குக் கொஞ்சம் தெரிய வரும். இப்பிரச்சினைகள் இந்தியாவிலும் உள்ளன, ஆனால் நாம் இந்த அளவு கூட தெளிவோடு அப்பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதில்லை. சமூக நீதி என்ற கோஷத்தை வைத்துக் கொண்டே வண்டி ஓட்டும் ஏராளமான அரசியல் சுரண்டல்வாதிகள்தாம் இங்கு எங்கும் வியாபித்திருக்கிறார்கள்.
உலகின் சிறந்த கண்டுபிடிப்பு!!
உங்கள் வீட்டில் ஒரு 12-14 வயதுப் பையன் இருந்தால் இந்தக் கேள்வியை ஒரு தடவையாவது அவனிடம் இருந்து கேட்டிருப்பீர்கள். ‘உலகத்திலேயே பெரிய கண்டுபிடிப்பு என்ன?’. உங்களுடைய இயல்பு, பொது அறிவு, அரசியல் சார்பு, அறிவியல் ஞானம், வரலாற்றறிவு இதெல்லாம் உடனே ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு பெரும் அளவில் யோசித்து இதற்குப் பதில் சொல்லச் சிரமப் பட வேண்டாம். சில பதில்கள் ஸ்டாக் வைத்திருந்தால் போதும். ஒன்று நெருப்பு, இன்னொன்று சக்கரம், பிறகு விவசாயம், சமையல், குளியல், இப்படி… ஒரு சமீப காலத்துப் பதில்- பீன்ஸ் அல்லது பருப்பு வகைத் தாவரங்கள். ஏனெனில் புரதச் சத்து சரியாகக் கிடைக்காமல், வேட்டையாடும் திறனற்ற மக்கள் கூடப் பிழைத்திருக்க உதவியவை இவை என்பது ஒரு வாதம். சமீபகாலத்துச் சிறுவர், இளைஞர்கள் ‘கம்ப்யூட்டர்’, ‘மைக்ரோ சிப்’, ‘இண்டர்நெட்’, ‘ஃபேஸ்புக்’ என்றெல்லாம் கதை விடுவார்கள். இந்தப் பெண் கட்டுரையாளரோ, தனக்குப் பிடித்த பெரிய கண்டுபிடிப்பு என்று எதைச் சொல்கிறார் தெரியுமா? உங்களால் ஊகிக்கவே முடியாது. நகைச்சுவையோடு எழுதி இருக்கிறார், அதனால் நீங்கள் பாத்ரூமில் நீர் பிரிக்கும் நேரத்தில் இக்கட்டுரையைப் படிக்க முடியலாம். முடித்ததும் உங்களுக்கே தெரியும் இவர் எதை ஆகப் பெரிய கண்டுபிடிப்பு என்று சொல்வாரென்று. இதைப் படித்து நம் தமிழ்ப் பெண்ணியவாதிகள் சிலருக்குச் சிரிப்பதா, கோபிப்பதா என்று தெரியாமல் போகலாம்.
உலகின் முதல் துறைமுக அமைப்பை கட்டியது இந்தியர்கள்?1
ஃபோராம்னிஃபெரா ஒரு நுண்ணுயிரி. லோதல் ஒரு ஹரப்பா பண்பாட்டு மையம் – அகழ்வெடுக்கப்பட்டது. உலகின் மிகப்பழமையான கப்பல் நிற்குமிடம் (Shipyard) லோத்தலில் உள்ள ஒரு அமைப்பு என அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் கூறியதை பெரும்பாலான மேற்கத்திய அகழ்வாராய்ச்சியாளர்கள் மறுத்தே வந்துள்ளனர். பொதுவாக மேற்கத்திய பாடநூல்களிலும் ஆராய்ச்சி கட்டுரைகளிலும் இந்த அமைப்பை so-called “ship yard” என்றே குறிப்பிடுவது வழக்கம். இந்த அமைப்பு நீர் சேகரிக்கப் பயன்பட்ட அமைப்பு அவ்வளவுதான் என்கின்றனர் இவர்கள். ஆனால் ஃபோராம்னிஃபெரா அளவுகளை ஆராய்ந்து லோத்தலில் இருக்கும் அமைப்பு கப்பல்கள் நிற்கும் இடமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.
திருட்டு, தடயம், மரபணு
ஒரு அருங்காட்சியகத்தில் பெரிய கொள்ளை நடந்தது 20 வருடம் முன்பு. கிட்டத் தட்ட 30 கோடி டாலர்கள் மதிப்புள்ள அரிய ஓவியங்களைத் திருடர்கள் திருடிச் சென்றனர். ரெம்ப்ராண்ட், வெர்மீயர், மானே, எட்கர் டெகாஸ் என்னும் உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் மிக அரிய ஓவியங்களை சட்டகங்களில் இருந்து கிழித்து எடுத்துப் போனார்கள் இரண்டு திருடர்கள். 20 வருடங்களில் ஒரு தடயமும் கிட்டவில்லை. அந்த ஓவியங்கள் இன்னும் கள்ளச் சந்தையிலும் வந்ததாகத் தகவல் இல்லை. சமீபத்தில் போலிஸார் அந்தத் திருடர்கள் விட்டுச் சென்ற பல பொருட்களிலிருந்து மரபணுக்களைத் திரட்டி டிஎன் ஏ ஆய்வு மூலம் அவர்களை அடையாளம் காண முடியுமா என்று பார்க்கின்றனர். ஒரு சாம்பிள் கிட்டினால் அதிலிருந்து ஒரு மனிதனின் எலும்பு அமைப்பு, முகம் எல்லாம் கூட ஊகிக்கப் பட முடியும் என்கிறார்கள். அந்தத் தகவல் இதோ.
அடையாளம் காட்டும் பாக்டீரியா கிருமிகள்
மேலே உள்ள செய்தி துணுக்குடன் சம்பந்தமுள்ள இன்னொரு விஷயம். இது நம்மை எல்லாம் பாதிக்கும். சமீபகாலமாக இண்டர்நெட் மையங்கள் இந்தியாவில் எங்கும் பயங்கரவாதிகளே நடத்துவனவாகவோ, அல்லது பயங்கரவாதிகளுக்கு வசதியான ஒளிவிடங்களாகவோ ஆகி இருப்பதை நாம் அறிவோம். நிறைய மத அடிப்படைவாதிகள், மாவோயிஸ்டுகள் போன்ற பெருங்கொலைகாரர்கள் இந்த வகை மையங்களை நடத்துவதை ஒரு போர்வையாகக் கொண்டு இந்தியாவை அழிக்க முயல்கிறார்கள் என்று செய்திகள் கிட்டுகின்றன. சமீபத்தில் ஒரு தொழில் நுட்ப முன்னேற்றம் போலிஸாருக்கு உதவலாம் இந்தக் கொலைகாரர்களைக் கைப்பற்ற. விசைப்பலகையில் நாம் விட்டுச் செல்லும் பாக்டீரியா கிருமிகளை வைத்து யார் விசைகளைத் தட்டினார்கள் என்று கண்டு பிடிக்க முடியும் என்று இப்போது தெரிகிறது. மேலும் தகவல்களுக்கு இக்கட்டுரையைப் படிக்கவும். 1990 இலிருந்த குற்ற உளவு முறைகள் அல்ல இப்போது நம்மிடம் இருப்பவை என்கிறார்கள் போலிஸார்கள். இது ஒரு பரிணாம வளர்ச்சியாம்.