பிற மனிதர்கள்

“காலம் இங்கே உருகி ஓடும்” என்றது அந்தப் பைசாசம்.

அதைப் பார்த்த உடனேயே அது பைசாசம் என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. இது நரகம் என்று அவனுக்குத் தெரிந்த மாதிரியே இது பைசாசம் என்பதும் தெரிந்து போயிற்று. அந்த இரண்டுமே வேறேதாகவும் இருந்திருக்க ஏதுவில்லை.

நீண்ட அறை, பைசாசம் தூரத்து மூலையில் புகைகிற நெருப்பருகே காத்திருந்தது. கருஞ்சாம்பல் நிறப் பாறைச் சுவரில் ஏராளமான பொருட்கள் தொங்கின. அவற்றை நெருங்கிப் போய்ப் பார்ப்பது கூட அவ்வளவு புத்திசாலித்தனமாக இராது, நிச்சயம் ஏதும் சுகம் தராது. கூரை தாழ்ந்திருந்தது. தரையோ விசித்திரமான விதத்தில், இல்லாத மாதிரித் தெரிந்தது.

”கிட்ட வா,” என்றது பைசாசம், அவன் போனான்.

வெறும் குச்சி மாதிரி இருந்தது பைசாசம், நிர்வாணம் வேறு. எங்கும் ஆழமான தழும்புகள்,  கடந்த காலத்தில் ஏதோ நீண்ட நாட்கள் அடிக்கப் பட்டு, தோலெல்லாம் உரிந்து போயிருந்தது போலத் தெரிந்தது. காதுகளே இல்லை, ஆணுமில்லை, பெண்ணாகவுமில்லை. உதடுகள்  பட்டினி கிடந்து பழகிய துறவியின் மெல்லிய உதடுகள். கண்கள் பிசாசுக் கண்கள்: போகக் கூடாத இடத்துக்கெல்லாம் போய், பார்க்கக் கூடாததெல்லாம் பார்த்த கண்கள், அவை நோக்கியபோது அவன், தான் ஒரு ஈயைவிடக் கேவலமானவன் என்பதாக உணர்ந்தான்.

“அடுத்தது என்ன நடக்கப் போகிறது?” என்றான் அவன்.

“இப்பவா,” என்றது பைசாசம், அதன் குரலில் வருத்தமோ, மகிழ்ச்சியோ ஏதுமில்லை, பீதியூட்டக் கூடிய, ஆழ்ந்த சலிப்புதானிருந்தது, “உனக்குச் சித்திரவதை.”

“எவ்வளவு நேரம்?”

பைசாசம் பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியது. சுவரை ஒட்டி நடந்தது, ஒவ்வொரு கருவியாகப் பார்த்துக் கொண்டே போயிற்று. சுவரின் ஒரு கோடியில், மெலிய விரிந்த கம்பிகளால் ஆன குதிரைவால் சவுக்குபோல ஒன்று தொங்கியது. தன் மூன்று விரல் கையால் அதை எடுத்தது பைசாசம். திரும்பி நடந்து வந்தது. அதை மிக மரியாதையோடு கொண்டு வந்தாற்போலிருந்தது. அந்தக் கம்பி நுனிகளைத் தணல் கங்குகளில் விரித்து வைத்தது. அவை கொதிக்கத் துவங்கியதை உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

”இது கொஞ்சம் கூட மனிதத்தன்மையே இல்லாத கொடுமை.”

“ஆமாம்.”

சவுக்கின் கம்பி நுனிகள் மஞ்சள் ஒளியோடு கொதித்துச் சுட்டன.

பைசாசம் தன் கையை உயர்த்தி முதல் சவுக்கடியைக் கொடுக்குமுன், சொன்னது,”இன்னொரு நேரத்தில் இந்தக் கணத்தைப் பரிவோடு நினைத்துக் கொள்வாய்.”

“நீ ஒரு பெரும்பொய்யன்.”

“இல்லை,” என்றது பைசாசம். “அடுத்த கட்டம் இருக்கிறதே,” சவுக்கை வீசி இறக்கும் தருவாயில் அது விளக்க ஆரம்பித்தது, ”இதை விட மோசம்.”

சவுக்குக் கம்பியின் கொதித்த நுனிகள் மனிதனின் முதுகில் வெடிச்சத்தத்தோடு இறங்கின, ஏதேதோ பொசுங்கிய சப்தத்தோடு, அவனுடைய விலை உயர்ந்த துணிகளைக் கருக்கிப் பிய்த்தன, கந்தலாகக் கிழித்தன, அவை அடித்த போதெல்லாம், அதுவும் பட்ட இடத்திலேயே மறுபடி அடித்துக் கிழித்தன, அவன் பெரும் ஓலத்தோடு அலறினான்.

அந்த அறையின் சுவர்களில் இருநூற்றுப் பதினொன்று கருவிகள் தொங்கின. நேரம் கடக்கையில் ஒவ்வொன்றையும் அவன் அனுபவித்தான்.

இறுதியாக, ’லாஸரீனுடைய பெண்’ எனப்பட்ட ஒன்று, அவனால் மிக நெருக்கமாக உணரப்பட்ட ஒரு கருவி, சுத்தம் செய்யப்பட்டு, இருநூற்றுப் பதினொன்றாவது ஸ்தானத்தில், திரும்ப மாட்டப்பட்ட போது, சிதைந்த தன் உதடுகளினிடுக்கால் அவன் திக்கித் திணறிக் கேட்டான், “இனிமேல் என்ன?”

“இப்பதான்,” பைசாசம் சொன்னது,”நிஜமாகவே வலி ஆரம்பம்.”

ஆமாம், ஆரம்பித்தது.

அவன் அதற்கு முன் செய்ததில் பலவற்றையும் செய்யாமல் இருந்திருக்கலாம். தன்னிடமும், பிறரிடமும்- அவன் சொன்ன எத்தனையோ பொய்கள். அவன் சுமத்திய எத்தனையோ சிறு காயங்கள், எல்லாப் பெரும் புண்கள். ஒவ்வொன்றும், அங்குலம் அங்குலமாக, சிறு விவரங்கள் கூட விடப்படாமல், அவனிடமிருந்து வெளியே இழுக்கப் பட்டன. மறதி என்று அவன் தனக்குப் போர்த்தியிருந்த ஒரு பாதுகாப்பைப் பைசாசம் கிழித்துப் போட்டது. எல்லாவற்றையும் உரித்து உண்மை வரைக்கும் கொண்டு போயிற்று. வேறெதையும் விட அதுதான் வலித்தது.

“அந்தக் கதவைத் தாண்டி அவள் போனபோது நீ என்ன நினைத்தாய் என்று எனக்குச் சொல்லு,” என்றது பைசாசம்.

“என் இதயம் உடைந்தது என்று நினைத்தேன்.”

“கிடையாது,” சிறிதும் வெறுப்பே இல்லாமல் பைசாசம் பேசிற்று,”நீ அப்படி நினைக்கவில்லை.” எந்த உணர்ச்சியும் இல்லாத கண்களால் அவனை உற்றுப் பார்த்தது, அவன் தன் பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

“நான் வந்து…, என்ன நினைத்தேனென்றால்…, அவளுக்கு இனிமேல் நான் அவளுடைய சகோதரியோடு படுத்துக் கொண்டிருந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ள வழி இல்லை என்றுதான்.”

பைசாசம் அவன் உயிரை அக்கக்காகப் பிரித்து எடுத்தது. கணம் கணமாக, படுமோசமான ஒவ்வொரு சம்பவத்தையும் உருவியது. இதெல்லாம் ஒரு நூறு வருடம் நீடித்தாற்போலிருந்தது, இல்லையில்லை, ஆயிரம் வருடங்கள் போல நீண்டது- அவர்களுக்கென்ன, அந்த சாம்பல் நிற அறையில், கால நெருக்கடி என்று ஏதும்தான் இல்லையே, எல்லா நேரமும் இருந்ததே. இறுதியில் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பைசாசம் சொன்னது சரிதான். உடலால் சித்திரவதைப்பட்டது எவ்வளவோ அன்பாக, துன்பமே இல்லாதது போல இருந்தது.

இதுவும் முடிந்தது.

முடிந்த உடன், மறுபடி துவங்கியது. இந்த முறை அவனிடம் தன்னைப் பற்றிய ஒரு சுயப் பிரக்ஞை இருந்தது, முந்தின தடவை அது இருக்கவில்லை. எப்படியோ, இந்த சுயப் பிரக்ஞை எல்லாவற்றையும் மிகக் கொடுமையாக ஆக்கியது.

இப்போது, அவன் பேசும்போது, தன்னையே கடுமையாக வெறுத்தான். முடித்தபோது, ஒரு ஆயிரம் வருடங்கள் ஆகியிருந்தன, இந்த முறை அவன் வேண்டி விரும்பியதெல்லாம், அந்தப் பைசாசம் சுவற்றுக்குப் போய், அங்கு இருந்த தோலை உரிக்கும் கத்தியையோ, கழுத்தை நெரிக்கும் கிடுக்கியையோ, எலும்புகளை முறிக்கும் திருகாணியையோ கொண்டு வராதா என்று ஏங்கினான்.
“மறுபடி,” என்றது பைசாசம்.

அவன் பெரும் ஓலமிட்டான். நெடுநாட்கள் அவன் கத்திக் கதறிக் கொண்டிருந்தான்.

அவன் எல்லாம் பேசி முடித்தபின், “மறுபடியும்,” என்றது பைசாசம், ஏதோ இதுவரை எதுவுமே பேசப்படாதது போல.

வெங்காயத்தை உரிப்பது போல இருந்தது. இந்த முறை தன் வாழ்க்கையைப் பார்க்கையில் அவன் எதற்கும் விளைவுகள் உண்டு என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டான். தான் செய்தவற்றின் விளைவுகளைப் பார்த்தான்; செய்யும்போது குருடனாக இருந்து செய்தவற்றைக் கவனித்தான்; உலகை எப்படி எல்லாம் அவன் புண்படுத்தினான் என்பதை அறிந்தான்; அவன் சந்தித்த, எதிர்கொண்ட, பார்த்துமிராத எத்தனையோ பேர்களை எப்படி எல்லாம் அவன் சேதம் செய்தான் என்பதைத் தெரிந்து கொண்டான். கற்றதில் மிகக் கொடுமையான, துன்பமான பாடம் இது.

ஒரு ஆயிரம் வருடங்கள் கழிந்தன, “மறுபடியும்,” என்றது பைசாசம்.

தரையில் கூனி, மண்டியிட்டு அமர்ந்தான், கணப்பருகே. முன்னும் பின்னும் ஆடியபடி, கண்களை மூடியபடி, தன் வாழ்வுக் கதையைச் சொன்னான். சொல்லும்போது அதை முழுமையாக மறுபடி அனுபவித்தபடி பேசினான். பிறப்பிலிருந்து, இறப்பு வரை, எதையும் மாற்றாமல், எல்லாவற்றையும் எதிர்கொண்டபடி. தன் இதயத்தைத் திறந்து வைத்தான்.

அவன் முடித்த போது, அங்கேயே அமர்ந்திருந்தான். கண்கள் மூடி இருந்தான். “மறுபடி,” என்று சொல்லப் போகும் குரலை எதிர்பார்த்தபடி. ஆனால் ஏதும் கேட்கவில்லை. கண்களைத் திறந்தான்.

மெதுவாக எழுந்து நின்றான். தனியாக நின்றதை உணர்ந்தான்.

அறையின் மறு கோடியில் ஒரு கதவு இருந்தது. அவன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அது திறந்தது.

ஒரு மனிதன் கதவு வழியே தாண்டி வந்தான். அவன் முகத்தில் பீதி கூத்தாடியது. ஆனால் கூடவே அகங்காரமும், ஆணவமும்  இருந்தன. அம்மனிதன், மிக விலை உயர்ந்த துணிகளை அணிந்தவன், பல அடிகளைத் தயக்கத்தோடு எடுத்து வைத்து அறைக்குள் வந்தான், நின்றான்.

அந்த மனிதனைப் பார்த்த போது, அவனுக்குப் புரிந்தது.

“காலம் இங்கே உருகி ஓடும்,” என்று புதிதாய் வந்தவனிடம் அவன் சொன்னான்.

-o00o-

மூலம்: “Other People” by Neil Gaimon, 2001, October/November issue of ‘The Magazine of Fantasy & Science Fiction.’

நீல் கே(ய்)மன் இங்கிலீஷில் இன்று எழுதும் எழுத்தாளர்களில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர். ‘மண்மனிதன்’ (Sandman) என்று இவர் எழுதிய ஒரு சித்திர நாவல் வரிசைகளிலிருந்து, திரைக் கதைகள், சிறுவர் நாவல்கள், அதிகற்பனை நாவல்கள் என்று பல வகைப் புனைவுகள். பல வயதினரையும் இலக்காக வைத்து எழுதிய பல வகைப் புனைவுகளும்  பிரபலமானதால் மேற்கின் இலக்கிய உலகில் அபூர்வமான திறமை உள்ளவர் என்று அறியப்படுகிறார். இவரைப் போன்ற பல வகைப் புனைகதைகளை எழுதி வெற்றியும், அங்கீகாரமும் பெற்றவர்கள் வெகு சிலரே. ரே பிராட்பரி, எச்.ஜி.வெல்ஸ், எட்கர் ஆலன் போ போன்ற சில ஆசிரியர்கள் நினைவுக்கு வருவர். அவர்களை ஒத்த ஆகிருதி உள்ளவர் இவர் என்பது திண்ணம்.

இந்தக் கதையில் வரும் ’லாஸரீனின் பெண்’ என்ற சித்திரவதைக் கருவி என்ன வகை என்ற விவாதம் வலையில் இன்னமும் நடக்கிறது. ஒரு பதில்- சோரம் போன கணவனுக்குக் கிட்ட வேண்டிய தண்டனையை அக்கருவி நிறைவேற்றும். அக்கருவியை மிக நெருக்கமாக அனுபவித்தான் என்று கெய்மன் எழுதியதன் உள்ளடக்கம் அதுதான் என்று வாசகர் ஒருவர் வாதிடுகிறார். கெய்மனிடம் இருந்து ஏதும் விளக்கமில்லை. ஆனால் விவிலியக் கதையான லாஸரஸுடன் ஒரு விதத்தில் தொடர்புள்ளது என்பது ஊகிக்கப்படலாம்.  மறுபடி மறுபடி உயிர்த்தெழும் ஒரு நபரின் வாழ்வை விவிலியம் கருணையின் குறியீடாக்குகிறது, இங்கோ அதே தலைகீழாக்கப் பட்டு, பெரும் துன்பத்துக்குப் பாதையாகக் காட்டப் படுகிறது என்று ஊகிக்கலாம்.