கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 1

ஜுன்

குழந்தை பீமா ஜுன் மத்தியில் எங்கள் வீட்டுக்கு வந்தான். சரியாய்ச்சொன்னால் ஜுன் பத்தொன்பது அன்று. நான் டென்னிஸ் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தேன். கீழே விருந்தினர்அறையில் அந்தக் குழந்தைக்கென பிரியமாய் பிரத்யேக ஏற்பாடுகள் எதுவும் இல்லை. ஒரு மகாபடுக்கை இருந்தது அங்கே. அதன்மேலேயே மெளரீன் இன்னொரு தனியாள் படுக்கிற மெத்தையை விரித்துப்போட்டு, குழந்தை கீழே விழுந்துவிடாதபடி சுற்றி தலையணை முட்டுக்கொடுத்தாள். ஏற்கனவே அதுதான் என் அலுவலக வேலையறை. எனது மேஜையும் தடுப்பிட்ட கேபினும் வேறு இடம்பிடித்துக் கொண்டிருந்தன அங்கே.

மேலே எங்கள் படுக்கையறைக்கு மாடியேறிப் போனேன். விஸ்தாரமான அறை அது. நல்ல உயரவாகு. நாலாள் படுக்கிற இரட்டைப்படுக்கை. சுவரில் கப்போர்டுகள். தொலைக்காட்சிப் பெட்டி. மூணு அத்தைமார், சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுடன் நானும் இங்கேயேதான் பிறந்தேன். நான் ஜனித்த அதே அறையில் இப்போது படுத்துறங்குகிறேன். என்ன விநோதமான உணர்வு இது. அடுக்ககங்களில் நியூ யார்க்கிலும், லண்டன் போல் பிற நகரங்களிலும் குப்பைகொட்டிவிட்டு திரும்ப நான் பிறந்த இடத்துக்கே வந்திருக்கிறேன்… ரொம்ப சுகமான அனுபவம் ஒருவிதத்தில். கூடவே இன்னொரு பிரமை. நான் வெளியே போகவே இல்லையோ? வெளியே போய்வந்ததாக நான் நினைப்பதெல்லாம் மாயைதானோ?

மெளரீன் படுக்கையில் இருந்தாள். புது அம்மா அவதாரத்தில் ஒரு பெருமிதம். லேசாய் சோகமான முகத்தோடு பக்கத்தில் அந்த சிசு. மளுக்கென்று உடைந்துவிடுமோ என்று பயப்படுத்துகிற வாகில் சவலையான கொசுதேகம். பீமா என்னையே பார்த்தான். கண்ணில் நீர்முட்டி நிற்கிறது. முட்டைவடிவ பெரிய வசீகரக் கண்கள். அடர்த்தியான சுருண்ட கேசத்தில் பொம்பளைச் சாயல். மிருதுவான வட்ட முகம். அவன் ஆணா பெண்ணா என்பது பற்றி ஏற்கனவே சந்தேகந் தட்டியது எல்லாருக்கும். அது ஏன் என்று புரிந்தது. அவன் துயருற்றிருந்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சங்கடத்தில், உடல் உபாதையில் அவன் கலவரம் மேலும் கூடிப்போனது. இப்போது புது இடம், புது மனிதர்கள்… கம்பித்தடுப்பு போட்ட தொட்டில் இல்லை,  ங்கா என்று அழும் பிற சிசுக்கள் எங்கே, அநாதைஇல்லத்தின் பிற பெண்கள்… என இதுவரை காதுக்குப் பழகிய சத்தமே காணோம். இருந்தது இல்லை என்றானபின் இதோ இல்லாதது இருக்கிறது.  யார் இவன் புது ஆள், என்னை வெறித்துக்கொண்டு?

”நம்மகூட கொஞ்சநாள் தங்குவான் இவன், அதாவது உங்களுக்கு ஆட்சேபணை இல்லையின்னா…”
என் அனுமதி தேவை என்பதே எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. பிற கணவன்மாரைப்போல எல்லாம்,  எனக்கு என் வீட்டில் அப்படி ஏதும் அதிகாரம் இருக்கவில்லை. பீமா டென்னிஸ் உடையை நான் கழற்றுவதையே பார்க்கிறான் .

”தாராளமா…” என்றபடி நான் ஒரு ஷவர்க்குளியல் போடப் போனேன். என் முதுகுக்குப் பின்னால் பீமாவின் கண்கள் தொடர்ந்தாற் போலிருந்தது.

”உடம்பு சொஸ்தமாயிட்டா திரும்ப இல்லத்துல கொண்டு விட்டுறலாம்…” என அவள் தொடர்ந்தாள்.

அப்போது அவன் அழ ஆரம்பித்தான். கோபத்தினாலோ, வலியினாலோ அல்ல, சோகமாகத் தன் நிலை பற்றியே அழ ஆரம்பித்தான். ”நான் எங்கருக்கேன்? ஏய் யார் நீங்கல்லாம்? இங்க எனக்கு என்னதான் நடக்குது?” என்கிற குழப்படியில் பீறிட்ட அழுகை என்று நான் நினைத்தேன்.  அவன் அழுவதை யார் குறை சொல்ல முடியும்?  சின்ன, பதினாலு மாச சிசு. அந்தச் சிறு வயதில், அவனுடைய சோகமான வாழ்வில், அவன் ஐந்து பெரும் இட மாறுதல்களைப் பார்த்திருக்கிறான்.

மௌரீன் அவனை வாரியெடுத்து சாந்தப்படுத்த விட்டுவிட்டு நான் குளியலறைக்குப் போனேன். அரைடிரௌசருடன் திரும்பி வந்தேன். ஹாயாகப் படுத்துக்கொண்டு உலகக்கோப்பை கால்பந்தாட்டம் பார்க்கலாம். சிறு தும்மல்களுடன் பீமா எங்களுக்கு இடையே. என்னைப் பார்த்தபடி மெலிந்த தன் கையை மெல்ல அசைத்து நீட்டி எட்டி என் முழங்கையைத் தொட்டான். அப்படியே வருடினான். கொசகொசவென்று முடியடர்ந்த கைகள். அதுவரை ஒரு ஆணை அவன் ஸ்பரிசித்திருக்கவே மாட்டான் என்றிருந்தது எனக்கும், இவளுக்கும். கைமுடியைத் தொட்டதே அவனுக்கு புதுசாய் இருந்திருக்கும். தொடும் கிட்டத்தில் அவனுக்கு இதோ இன்னொரு ஆண்வர்க்கம். அவன் அறிந்த ஆண்கள் எல்லாரும் மருத்துவர்கள். நோயறிய, சோதிக்க என்றே அவனை அவர்கள் தீண்டியிருப்பார்கள்.  அதில் அந்த அன்பின் இதம், ஆதுரம் இருந்திருக்காது. பெண்களே – இல்லத்துப் பெண்கள், தாதிகள், இப்போது மௌரீன் – அவர்களே மானுட அறிமுக அடையாளங்கள். நிறையப் பேரிடம் பரிவை எதிர்பார்த்து அவன் ஏமாந்திருக்கலாம் ஒருவேளை, என்னை ஓர் அவநம்பிக்கைப் பார்வை பார்த்தான். என் புன்னகையில் அவன் தைரியப்பட்டான். கையை மேலும் உயர்த்தி நெஞ்சுமயிர்க் கற்றையைப் பற்றியிழுத்தான். என்றாலும் அந்த முகஇறுக்கம் தளரவில்லை. கண்கள் பதட்டமான துடிப்புடன்தான் இருந்தன. நான் என் கையை அவனைப்பார்க்க நீட்டியபோது சட்டென உள்வாங்கி விக்கி விசும்ப ஆரம்பித்தான். அவனைத் தொட்டு என்னையிட்டு அவன் எக்காலத்தும் விசனம் கொள்ள வேண்டியதில்லை என்று ஆதுரமாய்ப் பேச விரும்பினேன் நான், என்றாலும் அதை மௌரீனே செய்யட்டும் என்று விட்டுவிட்டேன். அவள் அணைப்புக்கு இந்நேரம் பழகியிருந்தான் அவன். ஆனாலும் விநோதமாய் ஓர் உணர்வு – அவன் என்னை நம்ப ஆரம்பித்திருக்கிறான்! என் கையைத் தொட்டு அவன் வருடியபோதே அவனுக்கு என்னையிட்டு ஒரு பாதுகாப்புணர்வு வந்துவிட்டது என்று பட்டது.

அந்த முதல் ஸ்பரிசம், அதுமுதல் அவனுக்கு நான் தந்தை. ஆனால் தந்தைமைக்கான ஒரு அனுபவமும் இல்லாமல் நான் எப்படி அப்பாவாக அவனைப் பராமரிப்பது, அதுவும் இந்தக் காலங்கடந்த நடுவயதுகளில்…? நான் என்ன  செய்ய வேண்டும்? அவனோடு எப்படி பரிமாறிக்கொள்ள வேண்டும்? என் சிநேகிதர்கள் – அவர்களின் பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தபோது மழலையாய், விநோதசொல்லாடல்களுடன் தங்கள் குழந்தைகளோடு உறவாடினார்கள். ”பிங்க்கி விங்க்கி வான்ட்ஸ் ஹர் மில்க்கி வில்க்கி…” (குவா குவா பாப்பா அவ குளிக்க காசு கேப்பா.) எனக்கு வாயைப்போட்டு குதப்பி அப்படி உளரலும், உன்மத்தமுமாய் ஆரஞ்சுமிட்டாய்க் கொண்டாட்டம் போட வரவில்லை. குழந்தை என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனிடம் இன்னும் உருப்படியாய் அறிவோடு எதும் நான் பேச அது எதிர்பார்க்கிறாப் போலிருந்தது எனக்கு. இந்தத் தடுமாற்றத்திலேயே நான் அதனோடு உணர்வுபூர்வமாய்க் கலக்காமல் கூச்சப்பட்டு ஒதுங்கியிருந்தேன். அவனிடம் என்னையிட்டு வேத்துமுகம் இல்லை. ச், எப்படியும் கொஞ்சநாளில் திரும்ப அனாதை இல்லம் போகப் போகிறவன்தானே, என்று நினைத்துக் கொண்டேன்.

பீமாவுக்கு ஒன்பது மணிநேர ஆபரேஷன் நடந்திருந்தது. அவனது மலிவான மேலாடையைத் தூக்கி ஆழமான, பளீரென்றிருந்த காயத்தழும்பை மௌரீன் எனக்குக் காண்பித்தாள். வயிற்றுப்பக்கம் செவேலென்று கோபமான ரத்தச்சிவப்பு. ஆனால் தொடைநடுவே, தெளிவான சின்ன ஆண்குறி. அவனது அடுத்த சில வாரங்கள் முக்கியமானவை, உள்ளே பிரியும் சிறுநீர் வெளியேவராமல் திரும்ப உள்ளேயே பாய்ந்து அதனால் இன்ஃபெக்ஷன் வரலாம். சிறுநீர்ப்பையை பலமாக்கவும், இன்ஃபெக்ஷனைத் தடுக்கவுமாக அவனுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன. குழந்தைகளுக்கான வலிநிவாரணிகளும், ஜுரக்குறைப்பு மருந்துகளும், தூங்கவைக்கிற பெடிக்ளோரைல் மருந்தும் அவனது மருந்தலமாரியில். தினசரி மூணு வேளை. அவற்றை எப்போதும் முரண்டுபிடித்து விட்டே விழுங்கினான். ரொம்ப கவனமாய் அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒண்ணுந் தெரியாத என் பார்வைக்கே அவன் நோய்-வாட்டமாய்த்தான் இருந்தான். அவன் ஆயுசுபூராவும் சிறுநீர்ப் பையில் நீர் தாளாமை அவனுக்குத் தொடரும் என நாங்கள் அறிந்திருந்தோம்.  கடவுளே, அவனது சிறுநீர்ப்பை சீக்கிரம் திராணி கொள்ளட்டும். அவன் சிறுநீர் கழிப்பதும் இயல்பாகட்டும் என்று வேண்டிக் கொண்டோம்.

என் வாழ்க்கையில் குழந்தைகளோ சிறுவர்களோ இல்லை. அவனை எப்படிப் பராமரிப்பது என்பதே எனக்குத் திகைப்பாய் இருந்தது. நாங்கள் நியூ யார்க்கில் இருந்தபோது குழந்தைப்பேற்றுக்கு ஆசைப்பட்டோம். மௌரீன் முழுகாமல் இருந்தாள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாதியில் கரு கலைந்துவிட்டது. டெர்ரி சாலமன் இந்த விஷயத்தில் மருத்துவ நிபுணர். இலண்டனில் அவரிடம் செயற்கைக் கருத்தரிப்பு வழிகளைப் பற்றியும் கேட்டோம். அவர் என்னைச் சோதித்தார். என் விந்துவில் உயிரணுக்கள் குறைவாய் இருப்பதாய்ச் சொல்லி, அது பெரிய விஷயம் இல்லை என்று, பிள்ளை பெற்றுக்கொள்ள பல்வேறு உபாயங்களை அவர் சொன்னார். நானும் மௌரீனும் திரும்ப ஒரு முறை சேர்ந்து அமர்ந்து தீர யோசித்தோம். இந்த மருத்துவ உலகின் அனைத்து சாத்தியங்களையும் சோதித்துப் பார்க்க வேண்டுமா என்ன?  எப்படியாவது குழந்தை பெற்றுக் கொண்டு,  பெற்றோராகியே தீர வேண்டுமென்று நாங்கள் ஒன்றும் பெரும் அவதிப்படவில்லை. தானாக நடந்தால் சரிதான், அப்படி நடக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடும்? எங்களுக்குக் கொஞ்சம் சுயநலமமும் இருந்தது. குழந்தை என்று வந்துவிட்டால் நான் சினிமா எடுப்பவனாகவும் எழுத்தாளனாகவும் இப்படி அலைந்து திரிய முடியாது, என்கிறமாதிரி  இருந்தது. குழந்தையின் பாடுகள்  சிக்கல் இல்லாமல்  போக,  நான் எங்காவது மாசச் சம்பளம் என்கிற மாதிரி ஒரு வேலையில் உட்கார வேண்டும்.   நிஜமான வேலை செய்யவேண்டும், ஒரு நிருபராகவோ பத்திரிகை ஆசிரியராகவோ. எனக்கு அப்படி மூக்கணாங்கயிறில் இஷ்டம் இல்லை. எனக்கு அப்படி குடையை மடக்கிக்கொள்கிற அளவு வயசாகி விட்டதாக இப்போதும் கூட நான் நினைக்கவில்லை. யாருமே அப்படி வயதாகி விட்டதாக நினைப்பதில்லை.  தினம் காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கிறபோதுகூட நான் அப்படி நினைக்கவில்லை, என் முகத்தில் வயசின் வரிகள் தெரியவே செய்கின்றன,  காலம் தலையில் கிரவுண்டு வாங்கிவிட்டது கொஞ்சம்.  என்னையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த சிசு, இதற்கும் எனக்கும் அறுபது வருடங்கள் இடைவெளி. மௌரீன் என்னைவிட ஓரிரு வயதே இளையவள்.  நாங்கள் இப்போது முதிய தம்பதியர்.  இளம் பையன்களும், அழகிய பெண்களும் என்னை சார் என்றும்,  இவளை மேம் என்றுமே அழைக்கிறார்கள்.

கிரிஃபின், அப்பு இரு நாய்கள், அவைகளே எங்கள் குழந்தைகள். அம்மாவும் பெண்ணுமான நாய்கள்.  மிருகங்களுக்குக் கூட விதி என்பதெல்லாம் உண்டோ?  ஒரு காவலாளி கிரிஃபினை வீதியில் பார்த்துவிட்டு இராத்திரி தூக்கம் முழிக்கையில் துணையாச்சு என்று அந்தப் பெண்நாயைக் கூட்டி வந்தான்.  நண்பர்கள் சொன்னார்கள், எத்தனையோ பட்டிகளில் ஒரு நாய்க்கு அதிர்ஷ்டம், அதிர்ஷ்டந் தவிர வேறில்லை… இப்ப பார் குஷன் நாற்காலி சொகுசென்ன, வக்கணையான ரெண்டுவேளைச் சாப்பாடு… பின்னிரவில் கூட மேரி பிஸ்கெட்டுகள். கழுத்துப்பட்டி. உடல் மாலிஷ். குளியல். ஏ/சி அறையில் அக்கடான்னு தூக்கம்.  இந்திய வம்சாவளி சின்ன நாய் அது. பழுப்பு நிற முடி கொண்டது. இதன் மகள் அப்பு இதற்கு உல்டா.  உருவம் பெரியது அப்பு. நல்ல கருப்பு நிறம். கிரிஃபின் ரொம்ப பிரியமான நாய். அப்பு என்னைப் போல. எங்கள் மூதாதையர் வீட்டிலேயே அது பிறந்தது, என்கிறதில் நாங்கள் அதன் மேல் அளப்பரிய பிரியத்தைப் பொழிந்தோம். பீமாவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய ஸ்தானம் வகிக்க இருந்தது அப்பு.

ஆண்பிள்ளை என்கிற தெனாவெட்டெல்லாம் இல்லாதவன் நான். ஆனால் எழுத்தாளனாக சுய-திருப்தி உள்ளவன் நான்.  பிறருக்கு உறுத்தக் கூடிய அளவுக்கு  உரையாடல்களில்  என் பேச்சு எப்பவும் ரத்தினச் சுருக்கம்.  சுபாவத்தில் கூச்சம் உள்ளவன்.   என் எண்ணங்களைப் போலவே என் உணர்ச்சிகளும் என் எழுத்தின் ஊடாகவே வெளிப்படுகின்றன. வழிப்படுகின்றன.  எனக்குக் குழந்தைகள் இல்லை, எனவே ஜனங்கள், ’அவர் புத்தகங்களே அவருடைய குழந்தைகள்’, என்கிறார்கள். ஒருவகையில் அதுவும் சரிதான். எழுத்தாளர்கள் பொம்மலாட்டக்காரர்கள். காகிதத்தில் அவர்கள் பாத்திரங்களை உருவாக்குகிறார்கள். அவர்களின் உணர்ச்சிகளை வடிக்கிறார்கள். கோபம், காமம், காதல், வெறுப்பு, பயம், – எல்லாவற்றையும் வடிக்கிறார்கள். அப்படியான நிறைய உணர்வுக்குவியங்களை நான் நிச்சயம் அனுபவித்திருக்கிறேன். யாருக்குமேதான்,  காதலித்து  நிறைவேறாமல் போவது எத்தனை கொடுமையான அனுபவங்கள், அந்த சுழலில் மாட்டினால் மீள்வது எப்படி… ரணம் ஆற, அந்த இருட்டில் இருந்து வெளியேற மாதக்கணக்கில் சிலபோது வருஷக்கணக்கில் கூட ஆகும். என்னுடைய வாழ்க்கை நாடோடி வாழ்க்கையை ஒத்தது. ஒரு எழுத்தாளனாக கனடா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா என்று இந்த முப்பது வருடங்களாகத் திரிகிறேன். ஒரு குழந்தையை அம்சமாய் வளர்க்கிற அளவில் காசு இன்னும் என் கையிருப்பில் இல்லை. ஆக குழந்தை பற்றி என் சிந்தனையை அடைத்துக் கொண்டு விட்டேன். சிநேகிதர்களின் பிள்ளைகளை சகித்துக் கொண்டிருக்கிறேன், என்றாலும் அவர்களிடம் பாசம் எல்லாம் கொண்டு அணுகியதில்லை. என் ஒண்ணுவிட்ட சகோதரிசகோதர வட்டத்திலேயே நான் அப்படித்தான், தாமரையிலைத் தண்ணீர்தான். அங்கெல்லாம் போய்வருகிறதுதான்,  பேச்சுவார்த்தை உண்டுதான். என்றாலும் பெரியவர்களிடம் எப்படிப் பழகுவது, குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்வது – ரெண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. ஒருமாதிரி உம்மாணாமூஞ்சியாக சங்கடமாக அவர்கள்முன் உணர்ந்தேன். அவர்கள் நான் வந்ததும் வெளியே விளையாட ஓடிவிட்டால், அப்பாடா என ஆசுவாசப்பட்டேன். பீமாவைக் கையில் எடுக்கவே எனக்குப் பதறியது. பச்சிளம் பாலகனை அதுவரை நான் என் கையில் ஏந்தியதே இல்லை. கீழ போட்டுவிடுவோம் என ஓர் உதறல். உடுப்பை நாசமாக்கி விடுமோ என்ற அருவருப்பு வேறு. தெரியாத கைக்கு வந்ததும் சிசுக்கள் பயந்து அழுது சட்டென வாந்தியாகவோ, மூச்சா கக்காவாகவோ நனைத்து விடுகின்றன நம்மை. இவன் கையும் காலும் வெறும் எலும்பாக இருந்தது. , சதையே காணோம். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் கூட அவை முறிந்துவிடுமோ என்று உள்பதட்டமாய் இருந்தது.

இராத்திரி நேரத் திகில்கள்

பீமா மாலைப் புட்டிப்பால் அருந்தியதும் ஒருவழியாக அவனைக் கையிலெடுத்துக் கொண்டேன். காத்தாய், தேய்ந்தசோப்பாய் பூஞ்சையாய் இருந்தான். ஒரு சந்தேகமும் சங்கோஜமும் இல்லாமல் என்னிடம் தாவினான், என்னிடம் ஒரு பாதுகாப்புணர்வை அவன் உணர்ந்து  கொண்டிருந்தான். காலால் இறுக்கி ஏதோ முடிந்தமட்டில் என் இடுப்பை வளைத்துக் கொண்டான். இடது கையால் என் தோளைப் பற்றி,  வலக்கையால் என் டீஷர்ட்டை அழுத்தமாய்ப் பற்றிக்கொண்டான். குழந்தைகள் யாரிடம் பாதுகாப்பாக உணர்கிறார்களோ அவர்களிடம்தான் இப்படி நடந்து கொள்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. லேசாய்த் தூளியாட்டல் ஆட்டியபடி நான் அவனைத் தூக்கிக்கொண்டேன். டமால்னு போட்டுருவேனோ என்ற திகில் என்னில், ஆனால் அவன் ஆள் கெட்டிக்காரன், என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.

எங்க வீடு குழந்தைகளுக்கு அத்தனை சிலாக்கியமானது அல்ல. ரெண்டு படி ஏறித்தான் வீட்டுக்குள் நுழைகிறாப் போலிருக்கும். ஒவ்வொரு தளமும் வெவ்வேறு உயரம், எங்களையே லாத்தி விட்டுவிடும். மாடிப்படிகள், கொஞ்சம் ஏறி, பிறகு சமதளம், திரும்ப ரெண்டாம் மாடி ஏற்றம்… வீட்டின் பெயர் தேவசோலை. பெரிய புராதன வீடு. பதினாறடி உயரக் கூரை. சுவர் ஒண்ணொண்ணும் ரெண்டடிப் பருமன். எங்கள் கொள்ளுத்தாத்தா 1911 வாக்கில் அதைக் கட்ட ஆரம்பித்தார். எங்கள் தாத்தா அதைக் கட்டி முடித்தார். யாராவது கட்டட வடிவமைப்பாளரிடம் கேட்டுக் கட்டினார்களா என்றே தெரியவில்லை, ஒழுங்கற்று அறை அறையாய்க் கிடந்தது திட்டம் இல்லாமல்.

இந்தக் குட்டிவிருந்தாளிக்கு நாங்கள் இந்தப் படுக்கையும் மருந்தும் பாலும் தவிர தருவதற்கு என எதுவும் இங்கே இல்லை. இந்தப் படுக்கையும் அவனுக்கு பாதுகாப்பாக இல்லை என மௌரீன் யோசித்ததால், ஐரீனிடமிருந்து ஒரு தொட்டில் கேட்டு வாங்கினாள். பிறந்த குழந்தைக்கானதை விட சற்று பெரிதாய் உள்ளேயே விளையாட எனச் செய்தது. அவள் குழந்தைகள் அதில் கிடந்து விளையாடி இப்போது தொட்டிலுக்கும் பெரிதாய் வளர்ந்து விட்டார்கள். அடியில் கம்பிகளே இருந்தன அதில் இப்போது, சிதிலப்பட்டிருக்கலாம் – பிளைவுட் வாங்கி வந்தேன். மௌரீன் டன்லப்பில்லோ மெத்தை அந்த அளவுக்கு என்று புதுசாய் வாங்கினாள். கவனமாய் அவனது படுக்கை தயாரானது.ஆனால் அவனைப் படுக்கைக்குள் விடப் போனபோதே பீமா தலையை உயர்த்தி ஒரே அழுகை. படுக்கையில் போட்டால் காலை வானத்துக்குத் தூக்கிக்கொண்டு ஒரு முரண்டு. படுக்கையில் கால் வைக்கமாட்டேன் என்று பிடிவாதம். இத்தனைநாள் பூராவும் இதேமாதிரி இரும்புத் தொட்டில்லதானே இருந்தேன், திரும்பவுமா… மாட்டேன், என்கிற முரண்டு. இந்தக் கம்பிகள் ஜெயில் கம்பிகள் போல இருந்ததோ அவனுக்கு. அவன் சிறையில் இருந்து வெளியே வரத் துடித்தான். தானாகவே அதன் இடைவெளி வழியே அவன் உள்ளே நுழைய நிறைய மாதங்கள் பிடித்தன.  அது கூட உள்ளே கிடக்கிற பொம்மைகளை எட்டி எடுக்கப் போனதோடு சரி.  அந்தத் தொட்டில் விளையாட்டு சாமானெல்லாம் போட்டு வைக்கும் இடமாக இருந்தது, சீக்கிரமே அவனுக்கு நிறையவே விளையாட்டு சாமான்களும் சேர்ந்தாயிற்று.

எங்களது மாலைப் பழக்கங்கள்,  எங்களைப் போல வயதான தம்பதியருக்கானவை.  வெளியே எங்கும் போகவில்லையென்றால் கூடத்தில் அமர்ந்து பானம் அருந்துவோம். அன்றைய நாள் பற்றி பேசிக் கொண்டிருப்போம். எதாவது வாசிப்போம். நான் என் அப்போதைய வேலைக்காய் எதும் குறிப்புகள் தயாரித்துக் கொண்டிருப்பேன், அநேகமாக ரெண்டாவது மிடறில் மூளை சுறுசுறுப்பாகும். பக்கத்தில் எப்பவும் என் ஸ்டீரியோவில் இசை. மேற்கத்திய கிளாசிகல் இசை எங்கள் இருவருக்குமே பிடிக்கும், என்றாலும் ஜாஸ், இந்திய இசைகூட வைத்திருக்கிறோம். இந்திய இசை என்றால் சாஸ்திரிய மற்றும் பாப் ரெண்டுமே – ஏ.ஆர்.ரகுமான் போல… வைத்திருக்கிறோம். ’தில் ஸே’ நல்ல இசை. என் நாடகத்தில் அதன் ஒன்றிரண்டு பகுதிகளைக் கூட எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறேன்.’தி ஸ்கொயர் சர்க்கிள்’ (வட்டமான சதுரம்) நாடகத்தை நானே இயக்கினேன்.  லெஸ்டர் வைக்கோல் சந்தை தியேடரில்  (Leicester Haymarket Square Theatre) அரங்கேறியது அது. பீமாவை உறக்கம் அரவணைக்குமுன் எங்களுடன் அவன் இருந்தால், நல்ல கவனத்துடன் அவன் இசையைக் காதாரக் கேட்டான். அதை கவனித்துவிட்டு அவனுக்கு இசைபொதிந்த பொம்மைகளை வாங்கிப் போட்டோம். பழைய ஜுக் பாக்ஸ் போன்ற பொம்மைகளை அவன் விரும்பினான். பொத்தான்களுடன் ஒரு ராட்சஸ ஆமை. பொத்தான் பொத்தானாய் அழுத்த விதவிதமாய் இசை கிளம்பும். குழந்தைகளுக்கான கம்ப்யூட்டர், ஒரு எலெக்ட்ரானிக் கீபோர்டெல்லாம் வாங்கிப் போட்டோம். எல்லாவற்றிலும் விதவிதமான மெட்டுக்கள். எல்லாவற்றையும் மாற்றி மாற்றி இயக்கி தொடர்ந்து இசை கேட்டுஅவற்றின் பேட்டரிகளையே காலி பண்ணினான் பீமா. ஆனால் ’தில் ஸே’வை நான் போட்டால் படபடவென்று தவழ்ந்து வந்து இசையை ஆஃப் செய்தான். பாஹொ (Bach),  ரவிஷங்கரோ வைத்தால் ஒண்ணு ரெண்டு நிமிடம் உட்கார்ந்து காதுகொடுத்தான். கைவேலையை மறந்து கவனித்தான். ஆனால் ‘தில் ஸே’ என்றாலே எப்போது அதைப் போட்டாலும், கொஞ்சமும் சகிக்காது அவனுக்கு.

அந்த ராத்திரியும், அடுத்த ஆறு மாத ராத்திரிகளிலும் அவன் ஏன் சரியாகத் தூங்குவதில்லை, என அறிந்துகொண்டோம். தெருவுக்கு உள்ளடங்கிய வீடு எங்களது, என்பதால் சந்தடியிராது. அவன் அறை நிசப்தமாய் இருந்தது. ஒரு மின்விசிறி அவனைக் குளிர்வித்தது. அவன் உருண்டு புரள நிறையத் தலையணை அடுக்குகள். உமா பக்கத்தில் படுத்துக் கொண்டாள். எங்கள் அறையின் இன்டர்காம் இரவு ஒருமணிக்கு எங்கள் தூக்கத்தில் விர்ரிட்டது. நானும் அவளும் கீழே ஓடிவந்தோம். பீமா வீறிட்டுக் கொண்டிருந்தான். அவன் அழுகையை அமர்த்த உமா எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. கைமீறிய நிலையில் எங்களைக் கூப்பிட்டிருந்தாள். நிறுத்தாத அழுகை, விடாத அழுகை, அந்தச் சின்னக் குழந்தையின் மூச்சுத் திறன் அயர வைத்தது. அவனைக் கையில் வைத்தபடி அவன் அழுகையை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதே தாளமுடியாதிருந்தது. பதறித் துடித்துக் கதறும் குழந்தையை உதற முடியாமல் நாமும் அதனுடன் படபடப்பாய் மாட்டிக் கொள்கிறாப் போல ஆகிவிட்டது. உடலை முறுக்கி வில்லாய் வளைந்தான் அவன், அவன் முதுகெலும்பே தெறித்து விடுமாய் பயமாய் இருந்தது. மௌரீன் அவனை சமாதானப்படுத்த முயன்றாள். முடியவில்லை. பிறகு நான் முயற்சி செய்தேன். குழந்தையைத் தூக்கிக்கொண்டு முன்னே பின்னே நடந்தோம் இருவரும்… எதோ பாடினோம், காதோடு என்னென்னவோ பேசி உற்சாகப் படுத்தினோம், ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டோம்… என் செல்லமே தங்கமே பட்டே மணியே … எதுவும் பலனளிக்கவில்லை. அதே விக்கல் வீறிடல் விரைத்துக் கொள்ளுதல்… இல்லத்திலும் இப்படி சமாதான முயற்சிகள் வியர்த்தமாயிருக்கும் என்று தோன்றியது. அவனது வலி உபாதைக்கு அந்த அழுகை ஓரளவு வேண்டியும் இருக்கலாம் அவனுக்கு. ஆனால் எவரும் அவனைத் தூக்கிக் கொஞ்சி இப்படி ஆறுதல்படுத்த முயன்றிருப்பார்களா தெரியவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோய் உபாதை நீங்கினாலும், அறுவையின் வலி… அவன் உள்புண் ஆறவும் நரம்புகள் திரும்பச் சேர்ந்துகொள்ளவும் சில வாரங்கள் எடுக்கும், அதுவரை வலி இருக்கத்தான் இருக்கும், என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். வலிநிவாரணிகளும் டானிக்குகளும் முழுப் பலன் தந்ததாகச் சொல்வதற்கில்லை. ஒரு மணிநேர அளவுக்கே தூங்குவான், அதற்குள் உடம்புதற விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிடுவான். உடம்பு தேறத்தேற வலி அடங்கிவிடும். ஆனால் இந்த அழுகை… அது வலியினால் மட்டுமல்ல, என நாங்கள் அறிந்தோம்.

இருளைக் கண்டால் அவனுக்குப்  பீதி, அதுதான் விஷயம். இந்த அப்பிராணியை எந்த மாதிரியான கனவுகள் வெருட்டும், தெரியவில்லை. உடம்பு உதற பதறித் துடித்து, விடாத அழுகை அழுகிறாப் போல அப்படி எதைப் பார்க்கிறான் கனவில்? தேவைக்கு அதிகமாகவே அவன் இடர்ப்பட்டு விட்டான் தன் வாழ்க்கையில்… நிராகரிப்புகள், தனிமை, வலி. மற்ற எந்த அநாதையையும் விட இவனுக்கு இந்த அவஸ்தைகள் அதிகமாய்க் கூட இருக்கலாம். அவனைக் கையில் எடுத்து அரவணைத்தபடி நடை போடுகிறபோது கூட அவன் அரைமயக்கத்தில் கனவுப்பிரமைகளின் பிடியிலேயே சஞ்சாரம் செய்துகொண்டிருந்தான். அழுது விக்கித் தவித்து இருந்த கொஞ்சநஞ்சத் திராணியையும் தொலைத்துவிட்டு போத்தல் பால் அருந்தி அடங்குவான் ஒரு ஒருமணி நேரம்… போத்தல் பாலை முழுசாய் உறிஞ்சிக் குடித்துவிடுவான். அப்படியே கண்சொருக மீண்டும் உறக்கத்தில் அமிழ்ந்து விடுவான். ஆழ்ந்த உறக்கம் முழு உறக்கம் அவன் உறங்கியதே கிடையாது. ஒவ்வொரு நடுநிசியிலும் அல்லது அதிகாலை மூணு நாலுமணி… அந்தளவில், ஆத்மா ஆக அடியாழத்தில் அடங்கியிருக்கிற வேளை அது (எஃப் ஸ்காட் ஃபிட்ஜெரால்ட் சொன்னது.) அவனோ தத்தளித்து விழித்துப் பதறியழுதான். யப்பா, அந்த முதல் ஆறு மாசங்கள்… இளம் பெற்றோர் படும் அத்தனை பாடுகளும் நாங்களும் அனுபவித்தோம். எங்களால் எவ்வளவு தாக்குப்பிடிக்க முடியும் என்றே ஆகிவிட்டது. அவனது வலி சார்ந்த முதல் சிணுக்கத்தில் கூட நாங்கள் சுதாரித்து விழித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தோம்.

நாளுக்கு இருபத்திநாலு மணிநேரமும் அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் இரண்டு பெண்களை ஷிஃப்ட் அடிப்படையில் வேலைக்கு வைத்துக்கொண்டோம். இல்லத்தில் இருந்து மௌரீன் உமாவை அழைத்துக் கொண்டாள், உமாவுக்கு அவனுடைய பால்குடிப் பழக்கங்கள் தெரியும். எப்பவும் அவள் அவன்கூட இருக்கிறதால் அவனுக்கும் ஓர் ஆறுதல் இருந்தது. வீட்டு உபகாரங்களுக்கு என்று இளம் பெண்களை அனுப்புகிற தனியார் நிறுவனம் ஒன்றில் மௌரீன் விசாரித்தாள். மூணு மாதம் அதே மருத்துவமனையில் பயிற்சி முடித்து வீட்டிலும் மருத்துவத் தேவைகளைப் பார்த்துக் கொள்கிற அளவில் பெண்கள் கிடைத்தார்கள். கொஞ்சநாள் பொறுத்திருங்கள், குழந்தைப் பராமரிப்பில் தேர்ச்சியுள்ள ஒரு பெண் தற்போது வேறு வேலையில் இருக்கிறாள், தருகிறோம் என்றார்கள். அவள் வந்ததும் உமாவுக்குக் கொஞ்சம் ஆசுவாசம். மருத்துவமனையில் இருந்து பீமாவை அழைத்துக்கொண்டு வந்த அதே சாயந்தரத்தில் அந்த சரளாவும் வேலையமர்ந்தாள். சரளா பகலில் பீமாவைப் பார்த்துக் கொண்டால், உமா ராத்திரிகளில் கவனித்துக் கொள்ளலாம். சரளா அழகான, ஸ்தனம் பெருத்த பெண். இருபது வயசு. குடும்பம் பார்த்துச் செய்யும் கல்யாணத்துக்குத்  தயார் வயது. செங்குன்றத்தில் இருந்தாள் அவள். எங்கள் வீட்டில் இருந்து ஒரு ரெண்டுமணி நேர பேருந்துப் பயணம்.

முதலில், மௌரீன்  இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினாள்.  பீமாவைப் பார்த்துக்கொள்ள ஆயாக்கள் இருந்தார்கள். அவளுக்கோ சிறுவர் நல மேம்பாட்டு இல்லங்களின் (Cheshire homes) நிர்வாகம்,  தட்சிணசித்ரா கூட்டம் (அதைப் பற்றி பின்னால் சொல்கிறேன்.) எல்லாம் இருந்தன. ஓ.டபிள்யூ.சி.யில் (வெளிநாட்டு மாதர் சங்கம்) அவள் நிதியாளர். பீமாவின் செலவை ரூபாய் பைசா குறையாமல் கணக்கெழுதினாள். ரெண்டாம் நாளோ மூணாம் நாளோ சரளா வரவில்லை, அப்போதுதான் பீமாவைப் பார்த்துக் கொள்கிற வேலை தனக்கிருக்கிறது என்றே உணர்வு தட்டியது அவளுக்கு. குழந்தைன்னா என்னன்னே அறியாதவள். ஐரீனிடமும் அருணாவிடமும் குழந்தைப் பராமரிப்பு பற்றிப் புத்தகங்கள் வாங்கி அவசரமாக வாசித்தாள். வாசிக்கவே முடியவில்லை அவளால், மனசில் ஏறினால்தானே… டாக்டர் ஸ்பாக்கைப் (Dr.  Benjamin Spock) பற்றி மட்டும்தான் எனக்குத் தெரியும். ஆனால் உலகெங்கும் தாய்மார்கள் நடுவே அவருக்கு மதிப்பு சரிந்து போயிருந்தது.

அந்த முதல் சில நாட்களில் பீமாவை நான் அதிகம் பார்க்கவில்லை. பாலைக் குடித்தான். மருந்துகள் எடுத்துக் கொண்டான். தூங்கினான். எல்லாவற்றையும் நான் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் மெல்ல அவன்பாட்டுக்கு குணமாகி வந்தான், நான் என்பாட்டுக்கு என் வேலைகளில் இருந்தேன். ஒரு மும்பைக்கொலை பற்றிய கட்டுரைநூல் நான் எழுத ஏற்றுக் கொண்டிருந்தேன். பீமா வருகையால் மும்பை செல்வதை ஒருசில வாரம் தள்ளிவைத்தேன். இது தவிர ஒரு திரைப்பட வேலையும், எழுதிக் கொண்டிருக்கிற ஒரு நாவலுமாய் மாற்றி மாற்றி வேலைகள் இருந்தன. நான் முழுக்க என்வேலையாய் வளைய வந்தேன். பீமாவோ என்னையே கவனித்துக் கொண்டிருந்தான்.  நான் எப்ப அவன் கண்ணில் படுவேன் என்கிறாப் போல எதிர்பார்த்திருந்தான். அவன் பார்வையில் நான் தட்டுப்பட்டதும் வீல் என ஒரு அழுகை, கைநீட்டி என்னை அழைப்பான். எப்பவுமே அவன் பிடிச்சால் உடும்புப்பிடி.  அவனது ஆயா தூக்கிக் கொண்டிருக்கும்போது,  பக்கத்தில் நான் போனாலே என் சட்டையை கப்பெனப் பற்றிக் கொள்வான். மூர்க்கப்பிடி முதலைப்பிடி. ”அப்பறமா, பீமா,  அப்புறமா வரேன்.” என்று அவனைச் சமாதானம் செய்தபடி நான் அந்தக் கையை  விடுவிப்பேன்.  ஆனால் குழந்தைகள் வாழ்வில் அந்தக் கணம், அதுதான் முக்கியம். அப்பறமாவது சப்பரமாவது. பெருஞ்சோகமாய் அழுகை ராகமெடுப்பான். யாராவது ஆயா வந்து அவனைத்தூக்கி என் காதுகேட்காத தூரத்துக்கு எடுத்துச் செல்வார்கள். இன்னும் தவழ ஆரம்பிக்கவில்லை அவன், எல்லா இடத்துக்கும் அவனைத் தூக்கித்தான் அழைத்துச்செல்ல வேண்டும். தரைக்கம்பளத்தில் அவனை விட்டால் உருளுவான், இல்லை,  எழுந்து உட்கார்ந்து மென்மையான பொம்மைகளுடன் விளையாடுவான். பகலில் மூணு போத்தல் பால், ராத்திரி வீறிட்டலறி விழித்துக் கொள்கையில் சமாதானம் செய்ய  இன்னொரு மூணு போத்தல் என்று அருந்தினான். ஒரு குழந்தைக்குப் பால் மாத்திரம் போதுமா? குழந்தைக்கான போஷாக்கு மிக்க உணவுப் பழக்கம் பற்றி எங்களுக்குத் தெரியாது, தெரிந்த நண்பர்களிடமெல்லாம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டாள் மௌரீன். கூழான உணவு வகைகள் – கோழி பிராத், பிஸ்கெட்டுகள், ரஸ்க்குகள். இந்தியாவில்  உடனடிக் குழந்தையுணவு வகைகள் கிடைப்பதில்லை. எங்கள் சமையல்காரன் எதிராஜ், அவரால் சமையலறையில் என்ன செய்ய முடியுமோ அதைக் குழந்தைக்குத் தந்தோம்… சாதம், கூட மையாய் நசுக்கிய காய்கறிகள் என ஆரம்பித்தோம். அதன்பிறகு கோழிக்கறித் துண்டுகளும், பிற புலால் வகைகளும்.

அவன் வந்த முதல் சில வாரங்களில் நான், பீமா ”எங்கள் விருந்தாளி,” என்றே ஒட்டாமல் குறிப்பிட்டு வந்தேன்.  இரவுநேரம் நண்பர்களுடன் மொத்தமாய்ச் சாப்பிட நேர்கையில்  பேச்சு அவனைப் பற்றியும் வரும். என் நட்பு வட்டாரத்தில் பீமா உடம்பைத் திறந்தாப் போலவே, அவனது வாழ்க்கையையும் திறந்து வைத்தேன் நான். புறக்கணிக்கப் பட்ட ஒரு குழந்தைக்கு நீங்கள் செய்கிற உபகாரம் ரொம்ப உயர்ந்த தர்ம சிந்தனை, என அவர்கள் சொன்னார்கள். எல்லாம் மௌரீனோட நல்ல மனசுதான், என்று தவறாமல் நானும் எடுத்துச் சொன்னேன். அந்தக் குட்டி விருந்தாளிக்கு நான் இடங் கொடுத்தேன், அவ்வளவே. அவனைத் தொடர்ந்து ‘விருந்தாளி’ எனவே நான் குறிப்பிட்டு வந்தேன், அணுகி வந்தேன், ஒரு இடைவெளியுடன்.

ஆனால் அவனுக்கு? நான் விருந்தளிக்கிறவன் அல்ல. நான் அவன் அப்பா. இல்லாத அவன் அப்பா நான்தான். அவன்  தொட்டுணர்ந்த அப்பா. அவனைவிட்டு விலகியிருப்பதான என் பாவனையில், அவனது இதயத்துக்கும், ஆத்மாவுக்கும் வஞ்சனை செய்தேன் நான். ஆனாலும் உள்ளூற நான் அவன்சார்ந்த நெருங்கிய இணைப்பைக் கொண்டிருந்தேன், அதையிட்டு மேலதிகம் அக்கறையான சிந்தனையைச் செலுத்தவில்லை. தூரத்தில் அவன் அறையிலேயோ தோட்டத்துப் பக்கமிருந்தோ. வீட்டில் எங்கிருந்தாலும் அவன் அழுதால் எனக்கு உணர முடிந்தது. என் சூட்சுமம் சுதாரித்தது. அப்போது யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் பேச்சு, பாதியில் அப்படியே அது அறுபட்டது.  உடனே அவனைப் பார்க்க சமாதானப்படுத்த என்று துடிப்புடன் நான் போனேன். தொட்டடுத்த வீட்டில் இன்னொரு குழந்தை, கிட்டத்தட்ட இதே வயசு, இதே அழுகை… வாஆஆஆ… ஆனால் எப்படியோ எனக்கு வித்தியாசம் தட்டியது. எப்படி எனக்கே தெரியாது. யோசித்துப் பார்த்தால் இந்த அநாதைக் குழந்தையையிட்டு நான் அக்கறைப்படாமல் இல்லை என்று புரிகிறது. ஆனாலும் என்ன, கூடிய சீக்கிரம் அது கிளம்பிப் போய்விடும்.

ஒவ்வொரு பிரியமும் ஆரம்பமும், முடிவுமே கொண்டதுதான். வித்தியாசமான ஆரம்பமும் வித்தியாசமான முடிவும். சில சமயம் அது மெல்ல உள்ளே உருக ஆரம்பிக்கிறது, ரெண்டு பேர் மத்தியில். அபூர்வமாய் சில பரிவுகள் அந்தக் கணத்துச் சத்தியங்களாகி காலம் கடந்த நினைவுச் செதுக்கல்களாகி விடுகின்றன. அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். அவர்கள் உள்ளத்திலும் இதயத்திலும் சந்தேகம் துளியும் கிடையாது. நுழையாது. எனக்கோ நித்தியகணம்தான், அந்தத் தொடுதல் கணம்… அப்போது தக்கணத்தில் என்னால் அதை உணரக்கூடவில்லை என்றாலும் கூட அது நித்தியகணம்தான். ச், சின்னக் குழந்தைதானே, என நான் நினைத்தேன். திரும்ப அது தன் இரும்புக் கட்டிலுக்கும், பழக்கமான தன்சாரார் சார்ந்த அறைக்கும் போய் அடையப் போகிற குழந்தை, என நினைத்தேன்.

ஆனால் நான் என் உணர்ச்சிகளை அறிந்ததை விட, பீமா தன் உணர்ச்சிகளை மேலாக அறிந்திருந்தான். பார்த்த கணத்தில் பீரிடும் அன்பு அவனுடையது. குழந்தைகளையிட்டு, குறிப்பாக பால்மணம் மாறா பாலகர்களையிட்டு நான் ஏதும் அறியாதவன், என்பதால் இந்த பார்த்தகணத்து உவகைப்பொங்குதல், நான் அறியாதது. குழந்தை சட்டென்று சூதுவாது கவியாமல் தன் மனசில் இருந்து சிரித்துவிட முடிகிறது. அவன் இதயத்துக்கும் செயலுக்கும் இடைவெளி குறைவுதான். உடனே இதோ என அவை செயல்பட்டு விடுகின்றன. என் நண்பன் சுப்பு, இப்போது தாத்தாவாகி விட்டான் அவன், அவன் சொல்லுவான் – அறிவிலும் உணர்ச்சியிலுமே கூட வளர்ந்த மனுசாளை விட குழந்தைகள் மற்றும் சிசுக்கள் மேன்மையானவை. என்னிடம் வர அவன் காட்டிய துடிப்பு எனக்கு உபத்திரவமாய்ப் பட்டது, என்றாலும் அவனது குஞ்சு இதயம் ஏமாற்றத்தில் வறண்டுவிடவில்லை. தன் நெஞ்சறிந்ததை பொய்யாய்க் கொள்ளாதவன் அவன். நான்தான் மனசைப் போட்டு உழட்டிக் கொண்டிருக்கிறேன்…
வளர்ந்த மனிதன் நான், என் இந்த அறுபது வயதிலும்,  எப்படி உணர்ந்தேன் என்று அறுதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை எனக்கு. என் உள்ளப் பாதை பல உறவு முறிவுகளால் களேபரமாகி குண்டும் குழியுமாய்க் கிடக்கிறது. கட்டுக்கோப்பு இல்லாத குடும்பத்தின் கடைசிப் பிள்ளை நான் என்கிற அளவிலும் என் இந்தத் தெளிவின்மையைச் சொல்லவேண்டும். காலங்கடந்து கல்யாணம் செய்துகொண்டேன் நான். தலையெழுத்து என்னும்படி நான் மௌரீனைச் சந்தித்ததும் ஒரு விபத்துபோலவே அமைந்தது. அப்போது நான் நியூ யார்க்கில் வசித்து வந்தேன். லண்டனுக்கு ஒரு கட்டுரைநூலை உருமாற்றி ஒரு திரைப்படத்துக்காய் வடிவமைக்கிற வேலை இருந்தது. புத்தகத்தின் பெயர் ‘நவீனக் காட்டுமிராண்டிகள்’ (The New Savages). ஹ்யூ ஹட்சன் என்கிற ஆங்கிலத் திரைப்பட இயக்குநர் தந்த வேலை. ஒரு நண்பனுடன் தங்கிக்கொள்கிறாப் போல நான் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். மௌரீன் (சந்தர்ப்பவசமாக, அவளுமே ஒரு ஹட்சன்தான்!) ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து அவளும் அதே நண்பனுடன் தங்குகிறதாக அந்த நண்பன் குழப்படி பண்ணிவிட்டான். நான் ஒரு  சோஃபாவில் ஒண்டிக்கொள்ள வேண்டியதாகி விட்டது. அந்த அசௌகரியத்துக்குப் பின், இப்போது இந்த மண வாழ்க்கையில் எனக்கு சௌகர்யந்தான். அமைதிதான். இப்படியே வண்டி ஓடிட்டா போதும், வேறு எதையும் எதிர்பார்க்கவும் இல்லை, வேணவும் வேணாம், என்றிருக்கிறது.
அதனால் நான் நிம்மதியாக இருந்தேன்.  நான் வலுவானவன். பீமா இளைத்தவன், நோஞ்சான். ஏற்கனவே நிறைய கெட்ட விஷயங்களைச் சந்தித்து குப்புறத் தட்டிவிடப் பட்டவன். இனியாவது அவன் பாதுகாப்பாய் உணர வேண்டும், என நான் விரும்பினேன். அரவணைப்பும் ‘நான் இருக்கேன்‘ என்கிற மாதிரியான தெம்பு தருவதும் நான் அவனுக்கு அளிக்க வேண்டும் என நினைத்தேன். என் சொந்த மனச் சலனங்களையே நான் எவ்வளவு அசட்டையாக எடைபோட்டிருக்கிறேன், அது அப்போது எனக்குத் தெரியாது.

ஜுலை – ஒரு தீர்மானம்

நான்கு நாட்களுக்கும், உறக்கந் தொலைத்த நான்கு இரவுகளுக்கும் பிறகு நானும் மௌரீனும் பீமாவை அப்படியே எக்கேடும் கெடு, என்கிறாப் போல இரும்புக் கட்டிலில் அநாதை இல்லத்தில் கொண்டு கிடத்திவிட்டு வந்துவிட முடியாது என்கிற முடிவுக்கு வந்தோம். உடல் தீரியாகவும், உணர்வு தீரியாகவுமே கூட மெல்ல அவன் தேறி வந்தான். திரும்பக் கொண்டு விட்டுவிடுவது அவனுக்குப் பின்னடைவைத் தான் தரும்… இன்னமும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாகவே அவனிடம் இருந்தது. சட்டுச் சட்டென்று சளியும் தடுமனும் மூச்சிளைப்பும் பிடித்துக் கொண்டது. இல்லத்தில் வியாதிக்குப் பஞ்சமில்லை. அவன் நிலவரத்தில் இன்ஃபெக்ஷனிலேயே செத்துப் போவான் போலிருந்தது.

‘சிறப்பு கவனம் தேவைப்படும்‘ குழந்தையெனவே அவன் அறியப்பட்டான். அதாவது, வெளிநாட்டினருக்கு அவன் தத்துக் கொடுக்கப்படலாம், அவ்வளவில் இந்திய அரசாங்கம் அவனுடைய தத்து ஆவணங்களை விரைந்து முடித்துக் கொடுக்கும், பிரச்சினைகள் இராது. ஓரிரு வாரங்களில் அப்படி யாரும் கேட்டு வருவார்கள், தத்தெடுத்து விடுவார்கள் என நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

பீமா திரும்ப ஒரு பிரியச் சுழலில் அமிழ்ந்தான். இம்முறை அப்புவிடம்.

இந்தத் தயக்கமுள்ள கருப்பு நாயிடம் அவன் மனதைப் பறிகொடுத்தான், என்பது மட்டுமல்ல, அவன் பேசிய முதல் வார்த்தை – அது ‘அப்பு‘ தான். அதை உச்சரிப்பது அவனுக்கு சுலபமாய் இருந்தது. போகப்போக அவனது பிற மழலைச் சொற்களும் அதை அனுசரித்தே அமைந்தன…ஆனால் அப்பு அவனுடைய அன்பைத் திருப்பிக் கொடுக்கவில்லை, அதற்குக் கூச்சம். ஒதுங்கி ஒதுங்கிப் போனது. அவன் விடவில்லை. அவளைப் பின்தொடர்ந்து தவழ்ந்து போனான். சில சமயம் அப்புவை நான் பிடித்து வைத்துக்கொண்டு பீமாவிடம் தழுவிக்கொள்ள நீட்டினேன். சின்னக் கைகளுக்குக் கொள்ளாதபடி அவள் பெரிய உருவம்தான். ஆனாலும் அவளைத் தழுவிக் கொள்கையில் அவன் முகத்தில் என்ன அழகான ஆனந்தச் சிரிப்பு, இந்த வாழ்க்கையின் அர்த்தத்தையே அறிந்து அனுபவிக்கிற ஆனந்தம் அது. இல்லத்தின் கதவுகளுக்குள் அவன் இதுகாறும் முடக்கப்பட்டுக் கிடந்தவன். அவன் ஸ்பரிசித்த, அதுகூட அல்ல பார்த்த… முதல் பிராணி அப்புதான். நாய் வளர்க்கும் நண்பர்களிடம் அப்பு பற்றி எங்கள் கவலையை நாங்கள் பகிர்ந்து கொண்டிருந்தோம். அம்மா இருந்தவரை அவள் சுதந்திரமாய் இருந்தாள். கீழ்த்தளத்தில் சோபாவுக்குக் கீழே  தனியே படுத்துக் கொள்ளும். கிரிஃபின் இறந்துபோனாள். இவள் அப்படியே ஒடுங்கி எங்கள்சார்பாகிப் போனாள். அறையறையாக எங்கள் பின்னாலேயே வரும். நாள்பூரா என் வாசிப்பறை – கூடத்தில் படுத்துக் கொள்ளும். அல்லது எங்கள் படுக்கையறைக்கே கூட வரும். எல்லா உயிருக்கும் உணர்வுச் சலனங்கள் இருக்கத்தான் செய்கிறது… அந்த முதல் மாதங்களில் தன் சோகத்தை அப்பு எங்களிடம் பகிர்ந்துகொண்டதாகவே தோன்றியது. இத்தனை நாளாக எங்கள் குழந்தையாக வளைய வந்தது அது, இப்ப பார்த்தால், ஒரு மனுசக் குஞ்சு அந்த இடத்துக்குப் போட்டியாக வந்திருக்கிறது!

வாஸதவத்தில் பீமா இங்கே வருமுன் நாங்கள் அப்புவுக்குத் துணையாக இன்னொரு குட்டியை எடுத்துவரலாமா என்றுகூட  நண்பர்களிடம் பேசினோம். ஐய, பாசத்துக்குப் போட்டியாத்தான் அது இந்தப் புதிய வரவை எடுத்துக்கொள்ளும், வேணாம் என்றார்கள். குறும்பு, விளையாட்டுன்னு இதை அந்தப் புதுவரவு வம்புக்கிழுத்தால் இதுக்குத் திராணி இருக்கணுமே, சோக சோப்ளாங்கியால்ல இது இருக்கு என்றார்கள் அவர்கள். ரொம்பச் சிறுசு அது. அதுக்கு எவ்வளவு நேசம் காட்ட முடியுமோ அவ்ள நேசம் நாமளும் பொழியணும், அவ்வளவும் அதுக்கும் தேவையா இருக்கு. இப்போது அதன்மேல் பாசமழை பொழியும் ஒரு குழந்தை.  இன்னொரு பக்கம் தற்சமயம் அதை லேசாய் உதாசீனப் படுத்தும், இடதுகை அரவணைப்பு செய்யும் நாங்கள்… இரண்டின் நடுவே அப்பு. நாங்கள் அப்புவைக் கொஞ்ச ஆரம்பித்தால் டக்கென்று தவழ்ந்து எங்களுக்கும் அப்புவுக்கும் நடுவே பீமா நுழைந்தான். நாங்கள் பீமாவைச் சீராட்டுவதாகத் தெரிந்தால் அப்பு ஊடே புக வந்தது.

குழந்தைகளைப் பற்றி நான் ஏதும் அறியேன். அத்தனைக்கு கவனித்துப் பார்த்ததும் இல்லை. எந்தப் புது விஷயத்தையிட்டும் அவர்கள் காட்டும் மலர்ச்சி, பிரமிப்பு – நான் அறிந்ததில்லை.  குழந்தைக்கு எதுவும் புதுசு, எல்லாம் புத்தம் புதுசு. அதுவரை அது அறியாதது, அப்படியொன்றை அது நினைத்தே பார்க்காதது அது. சாதாரணங்களிலேயே குழந்தைகளுக்குக் கிடைக்கும் அந்தத் திகட்டல்,  வாய்பிளந்த ஆர்வ எழுச்சி, வளர்ந்த நமக்கு இல்லை. அபூர்வ விஷயங்களிலேயே கூட நமக்கு அந்த புளகாங்கிதம் கிடையாது. வான்வெளி ராக்கெட்டுகள் ஒவ்வொரு பகுதியாக கழண்டு கொள்ளுதல், எரிமலைக் குமுறல்கள், குண்டுகள் மேலிருந்து விழுதல்… இதை கவனிக்க ஆச்சர்யம் உண்டு, ஆனால் பிரமிப்பு கிடையாது. விஸ்தாரப்பட்டு விரிந்துகொண்டே வரும் பீமாவின் உலகில் முதல் ஆனந்தம் புஷ்பங்கள். அவற்றின் வண்ணங்கள். சிவப்பு, பழுப்பு, மஞ்சள் எல்லாம் அந்த இலைப்பச்சை நடுவே. எல்லாம் அவன் கண்ணை வசீகரித்தன. அவற்றைப் பறித்து தினசரி அவனிடம் நாங்கள் நீட்டினோம்.  கைக்கொள்ளும் அளவு அவன் அவற்றை வாங்கிக் கொண்டான். சரளாவும் இதர பெண்களும் பூக்களைக் காதில் அணிந்தார்கள், கூந்தலில் சூடிக் கொண்டார்கள். பீமா அதையெல்லாம் பார்த்திருந்ததால், அவனும் புஷ்பங்களைக் காதில் அடைத்துக் கொண்டான். ஒரே சிரிப்பு. அதைப் பிடுங்கி பின் அவன் காதுபின்னால் நாங்கள் செருகிவிட்டோம்!

எங்கள் வீடு தெருவில் ஒரு ஐம்பதடி உள்ளே இருந்தது. ஒரு காலை உலாவலின்போது அவனை நான் தூக்கிக்கொண்டு தெருவுக்கு வந்தேன். வீட்டுக்குள்ளிருந்து அவனது முதல் வெளிப்பயணம் அதுதான். அப்போது அந்தத் தெரு வழியே ஐந்து எருமைகள்  எங்களை சாவகாசமாய்க் கடந்து நடையிட்டன. கண் விரிய வாய்பிளக்க அதைப் பார்த்தான் பீமா. ஓர் எழுத்தாளனாக இதை நான் எழுதியிருந்தால் – பீமாவின் வாய் பிளந்தது -சங்கடத்துடன் அந்த வரியை அடித்திருப்பேன். ஆனால் அவன் தாடை அப்படி கீழே இறங்கியது. அதை அப்போது பார்த்தேன். ஒரு பதினாறு மாத இந்தியக் குழந்தை – அதுவரை எருமைமாட்டையோ பசுவையோ பார்த்திருக்கவே இல்லை என்பதையே என்னால் அதுவரை நம்ப இயலவில்லை. ஓர் அமெரிக்க, ஐரோப்பியக் குழந்தை, இதே வயதில் ஒரு காரையோ தொலைக்காட்சிப் பெட்டியையோ பார்த்ததேயில்லை என்றால் நம்புகிறாப் போலவா இருக்கிறது. அதைப் போலத்தான் இதுவும்… அவன் எதும் கிராமத்தில் இருந்திருந்தால் தினசரி எருமையும் பசுவும் கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருந்திருக்கும். சென்னையில் இப்படி எருமைகளை யார் கண்டுகொள்ளுவார்கள், சட்டை செய்வார்கள்… அது ஒரு குழந்தைக்கு ஆகாவென்றிருந்தது!
இதே பிராயத்து மற்ற குழந்தைகள் அவரவர் அப்பா அம்மா துக்கிக்கொண்டு வெளியே வர நிறையக் காட்சிகளைக் கண்டிருக்கும். பீமா இல்லத்துக் கட்டிலில் இருந்தவன், வெளியுலகம் அவனுக்குத் தெரியாது. ஓர் இல்லத்தில் இருந்து மற்றதற்கு மாறும்போது, அல்லது மருத்துவனைகளுக்கு சோதனைக்கூடங்களுக்கு என்று அவன் போயிருந்தாலும் யார் மடியிலாவது கிடந்திருப்பான். தடதடத்து ஓடும் வாகனத்தின் மேற்கூரையே அவனது காட்சிக்குக் கிடைத்திருக்கும். அந்த சோம்பலான சொகுசுகொண்டாடும் மிருகங்களை பீமா அடைந்த பரபரப்பினால் நானும் சரியாகக் கவனிக்க ஆரம்பத்தேன். கைகாலை உதைத்து “அப்பு… அப்பு“ என்று நைநீட்டிக் காட்டி பின்னால் போகச் சொன்னான் பீமா.

மௌரீன் சமூகப் பணியாளர் சரளாவிடம் பீமாவை தத்து தருகிற ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாள். அவனது தற்போதைய உடல்உபாதைகள், அவனுக்கு எடுத்த சோதனைகள், அவனுக்கு நடந்த அறுவைச் சிகிச்சை – ஆயுசுபரியந்தம் அவன் எதிர்கொள்ளப் போகிற பிரச்னைகள்… சரளா சார்பில் மௌரீனே ஒரு அறிக்கை எழுதினாள். அவனது பின்னணி பற்றி, அவனது உடல் உபாதை, வெற்றிகரமான சிகிச்சை… பிறகு உடலரீதியாகவும் மனரிதியாகவும் அவன் தேறி வந்து கொண்டிருப்பதையும் அதில் குறிப்பிட்டாள். எங்களுடன் அவன் தற்போது வசித்து வருவதை அவள் குறிப்பிடவில்லை. மெல்ல அந்த அறிக்கை,  அவன் புகைப்படத்துடன் ஐரோப்பிய தத்தெடுக்கும் நிறுவனங்களுக்கு சுற்றுக்கு விடப்படும். அவன் முதலில் இருந்த இல்லத்தில் இருந்து தனக்குத் தெரிந்த இன்னொரு இல்லத்துக்கு அவனை எழுத்துப்படியே மாற்றிக் கொண்டாள். இந்த இல்லத்தில் அவள் சொல்வாக்கு செல்வாக்கு பெற்றிருந்தது.

இந்த கைவிடப்பட்ட சின்னக் குழந்தைக்கு ஒரு நல்ல பாதுகாப்பான வீடு அமைய வேண்டும் – அப்போது எங்கள் யோசனையெல்லாம் அதுதான். எங்காவது அவன் அமைதியுடன் தன் குழந்தைப் பருவத்தை உற்சாகமாய்க் கொண்டாட வேண்டும். வாலிப வயசுக்கு வர வேண்டும். பெரியாம்பளையாக ஆக வேண்டும். பின் காதலால் மொய்க்கப்பட்டு அமிழ்த்தப்பட்டு முதுமையைக் காண வேண்டும்.
சரளா அந்த அறிக்கையில் கையெழுத்திட்டாள். அது உலகம் பூராவும், இந்தியா பூராவும் அனுப்பிவைக்கப் பட்டது.

தமிழ்நாட்டின் ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனத்தில் இருந்து இன்னொரு சமூகநலப் பணியாளரான இளம் பெண் எங்களைப் பார்க்க வந்தார். பீமா பற்றிய அறிக்கையை வாசித்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன் குழந்தையை நேரில் பார்க்க அவள் வந்திருந்தாள். நாப்கினை அகற்றி அறுவைச் சிகிச்சைத் தழும்புகளை மௌரீன் அவளுக்குக் காட்டினாள். அவள் கையில் இருந்த மருத்துவ அறிக்கையில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப் பட்டன. புகைப்படத்தையும் எடுத்து ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள்.

அந்த அறிக்கைக் காகிதத்தில் அவள் ‘இந்தியாவுக்குத் தத்து எடுக்க முடியாது‘ என்று எழுத்தில் குறிப்பிட்டாள். இந்தியாவில் இருந்து அவனை நாடுகடத்தும் வார்த்தைகள்! அதன் காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இந்திய கலாச்சாரம் சார்ந்த, இந்திய தம்பதியர் சார்ந்த விஷயம் அது. இந்திய மக்கள் தத்து எடுப்பது தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் அவர்கள் ஆரோக்கியமான ,  குறையற்ற குழந்தையையே வாங்கிப்போக முன்வருகிறார்கள். தனி கவனம் தேவைப்படும் குழந்தைகள் அவர்களுக்கு வேண்டாம். அது ஒரு சுமை என அவர்கள் நினைத்தார்கள். அது மாத்திரம் அல்ல,  பீமா பிற்காலத்தில்  தந்தையாக ஆகமுடியாமல் போக வாய்ப்பிருந்தது. இந்தியப் பெற்றோர்கள், பேரன் பேத்தி பார்க்க ஆசைப்படுகிறார்கள். இந்திய வரலாறிலும் சமூகத்திலும் நிறைய தத்து எடுத்துக்கொள்ளுதல் நிகழ்ந்திருக்கிறது. உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைப்பேறில்லாத மகாராஜாக்களும் நவாபுகளும் சொந்த உறவுவட்டத்திலேயே தத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜோத்பூரில் நிகழ்ந்ததாக ஒரு கதை. மகாராணியோடு  சேர்ந்துண்ண விருந்துக்கு அழைக்கப்பட்ட நிறையக் குழந்தைகளில் ஒரு கிராமத்துப் பையனும் இருந்தான். மகாராணி சாப்பிடுவதை அவன் கவனித்துக்கொண்டு தானும் அதேபாவனையில் அந்த விருந்தைச் சாப்பிட்டான் . அதுவே தகுதியாகி, மகாராணியின் வாரிசாகி அடுத்த மஹாராஜாவாக ஆனான் அவன்! பல பொருளாதார நிலைகள், பல ஜாதிகளிலும் இருந்து குழந்தையில்லாத தம்பதிகள் தங்கள் சொந்தத்திலேயே நிறையக் குழந்தைகள் உள்ளவர்களிடம் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்கிறார்கள்.

“தனி கவனம் தேவை“ என்கிற மந்திரச் சொற்கள்தான் பீமா இந்தியாவை விட்டு வெளியேறக் கிடைத்த பாஸ்போர்ட்.  நிறைய இந்தியர்களின் கனவு அது, இந்தியாவை விட்டு வெளியே செல்வது என்பது உண்மைதான்! என் பதினெட்டாவது வயதில் நிறைய இந்தியர்களைப் போலவே நானும் மேல்படிப்புக்காக இந்த நாட்டைவிட்டு வெளியேறினேன். எல்லாருக்கும், ஏன் எனக்கேகூட ஆச்சர்யம், பின்னால் நான் இந்தியா திரும்ப விரும்பினேன். என்னுடைய ஒவ்வொரு நண்பனின், உறவுக்காரனின் பெண்ணோ பிள்ளையோ, ஒருவரோ இருவரோ அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்தில், ஐரோப்பாவில் … என்று இருக்கிறார்கள். ‘மந்திர நாயனம்‘  வாசித்தவன் (Pied Piper), தன் இசையால் ஊரின்  எலிகளைக் கிளப்பிக் கொண்டு போனாற்போல, நம்மவர்களை எல்லாம் ஏதோ இழுத்துப் போயிருக்கிறது.

பீமாவுடனான இந்த ஆரம்பகட்டப் பரிச்சயத்தில், அவனது தற்போதைய இடர்கள் – அவைதான் எங்களுக்கு கண்ணில் பட்டன. பெற்றோர்கள் நிராகரிப்பு. ஒரு அநாதை இல்லத்தில் வந்து அடைந்தது. இத்தனை அவஸ்தைப்பாடுகளும் தாண்டினால், பொன்னாய் ஒரு வாய்ப்பு – வெளிநாட்டு வாசம்!

“தடை நீக்கச் சான்றிதழ் வரணும்“ என்றாள் ஷைலா. தத்து எடுக்கும் வழிமுறைகளைப் பற்றிச் சொன்னாள். “அதன்பின் ஒரு அறுபது நாட்கள் நாம காத்திருக்க வேண்டியிருக்கும். குழந்தையின் பெற்றோர் அதற்குள் மனசுமாறலாம் என்று அறுபது நாள் அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அந்தப் பெற்றோர் தங்கள் நிஜப் பெயர்தான் தந்திருக்கிறார்களா என்றே நமக்குத் தெரியாது. எப்படி அதைச் சரிபார்ப்பது? ஒருதடவை வெளிநாட்டில் இருந்து தத்து எடுக்க வந்த தம்பதியர் நிஜப் பெற்றோரைச் சந்திக்க விரும்பி, ஒரு கிராமத்துக்கு வந்து விசாரித்தோம். எங்களுக்குச் சொன்ன பெயரில் அங்கே தம்பதியர் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் அந்தக் குழந்தையைப் பெற்றவள் – அவள் எங்களைச் சந்தித்து நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் இரண்டாவது முறை திரும்பி வந்து மேலும் தகவல் சேகரித்தபோதும் அதே பெண்மணி வந்து மௌனமாய் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையைக் கொடுத்து விட்டவர்கள் என்று அவர்கள் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.”
(அதனால்தான் நான் பிற்பாடு பீமாவின் பூர்வீகமாக இருந்திருக்கக் கூடிய ஒரு கிராமத்துக்குப் போயிருந்தபோது, அவனது பெற்றோரைச் சந்திக்க முடியும் என்றோ, அவர்கள் தம் குழந்தையைக் கொடுத்து விட்டதை அங்கீகரிப்பார்கள் எனவோ எதிர்பார்க்கவில்லை. )

ஷைலா அருமையான பெண்.  உடலாலும், உணர்வுகளாலும் பூமாதேவிக்கு நிகர்.   அமெரிக்காவில் சமூகப்பணியில் மேநிலைப் பட்டம்  பெற்றவள். அவளைச் சுற்றி இதமான கதகதப்பும் மந்தகாசமும் கதிர் வீசின. புத்தனின் பொறுமை அவளுக்குத் தேவையாயிருந்தது.  ஒரு குழந்தையைத் தத்து எடுக்க, கணக்கற்ற காகிதங்களை, ஆவணங்களை பல நிர்வாக அமைப்புகளிலிருந்தும், நீதிமன்றங்களிலிருந்தும் போய் வாங்கி வர வேண்டி இருந்தது.   பதினைந்து ஆண்டுகளாக இந்தப் பணியாற்றியதில் அவளிடம் நிறைய கதைகள் இருந்த்ன பகிர்hந்து கொள்ள.   இத்தனைக்குப் பிறகும்,  நகைச்சுவை உணர்வு குன்றாமல், அதேசமயம் இந்த அநாதைப் பிள்ளைகளிடத்தில் ஆதுரமும் பெற்றிருந்தாள்.

“அப்பறம்… இந்த அறுபது நாட்கள் கழித்து, இதை ஒரு சுற்றறிக்கையாக மாநிலத்துக்குள் பல்வேறு தத்துப் பணி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்புவோம். மாநிலத்துக்குள்ளேயே யாராவது தத்து எடுத்துக்கொள்வார்களா என்று பார்க்க. அதற்காக ஒரு முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். பிறகு, யாரும் இல்லாத பட்சம், இந்த சான்றிதழையும், குழந்தை பற்றிய தகவல்களையும் ‘காரா‘ வுக்கு -(CARA-சென்ட்ரல் அடாப்ஷன் ரிசோர்சஸ் ஏஜென்சி- Central Adoption Resources Agency) -தில்லிக்கு அனுப்புகிறோம்.  அங்கிருந்து வெளிநாட்டுத் தம்பதியர் ஒரு குழந்தையைத் தத்து எடுக்க அனுமதி கிட்ட வேண்டும்.

ஆக, பீமாவின் கோப்பு தில்லியில் இருந்த  ‘காரா’ அமைப்புக்கு அனுப்பப் பட்டது.   அவன் வாழ்ந்த பதினைந்து மாதங்களில் அவனைப் பொறுத்த எந்தத் துண்டு காகிதமும், சேமிக்கப்பட்ட தகவல்களும் அந்தக் கோப்பில் போகும்-  எந்த மருத்துவச் சான்றிதழுக்கும் மும்மூன்று பிரதிகள். அறுவைச்சிகிச்சை விவரங்கள். அதன் பாடுகளில்இருந்து அவன் தேறிய விவரங்கள். மௌரீனின் அறிக்கை. தத்து எடுக்கத் தேவையான சான்றிதழ். அத்தோடு இந்தத் தடை நீக்கச் சான்றிதழ், ஒவ்வொன்றுக்கும் ஒரு நோட்டரி பப்ளிக் மேற்பார்வைக் கையெழுத்து.  எல்லாக் காகிதங்களிலும் குழந்தையின் படம் நோடரியுடைய முத்திரையுடன்  போகும். ’காரா’ அனுமதி இல்லாமல் ஒரு குழந்தையும் வெளிநாட்டுக்கு அனுப்பப் படவோ, தத்தாகப் போகவோ இயலாது. இதெல்லாம் விதிமுறை, ஒரு கோட்பாட்டளவில்.  ஆனால் சட்டத்துக்குப் புறம்பான தத்துகள் நடக்கின்றன. காரா அனுமதிச் சான்று  அளிக்க ஒரு ரெண்டு வாரம் போல எடுத்துக் கொள்கிறது என்று எங்களுக்குத் தெரிய வந்தது.

தற்செயலாக எங்களுக்கு ஒரு நண்பன் சென்னையில் இருந்தான், ஒரு ஐரோப்பியன். அவன் நாட்டிலேயே தத்துக்குத் தயாராக இருப்பதைப் போடலாமே என்று தன் நாட்டை சிபாரிசு செய்தான்.  அந்த நாட்டின் மீது எங்களுக்கு அபிமானம் உண்டு என்றாலும், அங்கே வளர்ந்தால், பீமா வயதுக்கு  மீறிய முதிர்ச்சி கொண்ட பதின்பருவ மகனாக வளருவான் என்று நாங்கள் நினைத்தோம்.  இங்கே உறவுக்காரர்களைப் பார்க்க வருகிற அமெரிக்க இளைஞர்களை நான் அவ்வண்ணம் பார்த்திருக்கிறேன். அவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், ஆனால் அவர்களிடம் உறுத்துகிற வகை அமெரிக்கச் சாய்வு தட்டும்… ஸ்பெய்ன் பற்றி நினைத்தோம். எங்கள் இருவருக்கும் பிடித்த  நாடு, ஜனங்கள். டென்மார்க்கும் எங்களுக்கு ஏற்புதான்.

நண்பனின் யோசனைப்படி நான் இணையத்தில் மேய்ந்தேன். அவன் நாடு வளமானது. நிலையான குடியரசு ஆட்சிமுறை. இந்தப் புதிய சீக்கு, தீவிரவாதம்… அண்டாத நாடு. நாளும் மோசமாகிக் கொண்டே வரும் இந்த உலகத்தில் அமைதியான சிறு தீவு.
ஆக இந்த முடிவை பீமாவுக்காக எடுத்தோம். அவன் முழு வாழ்க்கை சார்ந்தும் எடுத்தோம். இந்த ஐரோப்பிய நாடு, இதுதான் அவனுக்கு ஆகப் பாதுகாப்பான புகலிடம். அமைதிப் பூங்கா.  அந்த நாட்டில் இருந்து ஒரு தம்பதி அவனைத் தத்து எடுக்க முன்வர வேண்டும், அது இருக்கவே இருக்கிறது.

(தொடரும்)

_____________________________________________________________________________________

குறிப்பு:
இந்தக் ’கதையை’ எழுதியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிமரி என். முராரி (Timery N. Murari).  பல நாடுகளில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். நாவலாசிரியர், திரைக்கதையாளர், படத் தயாரிப்பாளர், நாடகாசிரியர், நாடகங்களை இயக்கியவர்.
இக்கதையை Nth position என்கிற ஒரு வலைப் பத்திரிகையில் பார்த்தோம்.  அங்கிருந்து எடுத்து, நல்ல மொழிபெயர்ப்பாளரும், தானே ஒரு நன்கறியப்பட்ட கதாசிரியருமான திரு.ஷங்கரநாராயணனிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டோம்.  இடையில் திரு.முராரி இந்தியாவில், அதுவும் சென்னையில் தற்போது வசிக்கிறார் என்று அறிந்து வலையில் தேடினால் அவர் இந்தியாவை வைத்து நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்று தெரிந்தது.  எழுதி அனுமதி கேட்டோம்.
இக்கதையைத் தமிழில் மொழிபெயர்க்கத் திரு முராரி தன் அனுமதியைச் சொல்வனத்துக்கு அளித்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி.
இக்கதை அவருடைய ‘My Temporary Son’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பகுதி என்பதை இங்கு வெளியிடச் சொன்னார்.
அப்புத்தகத்தின் விவரங்கள்: My Temporary Son, Penguin India, 2005, paperback. Rs. 250 (சமீபத்து விலை).

இது புனைகதை போல எழுதப்பட்டாலும் கதை இல்லை.  திரு. முராரியும், மனைவி மௌரீனும்  சில மாதங்கள் வளர்க்க நேரிட்ட ஒரு அனாதை இல்லக் குழந்தை அவர்கள் வாழ்வில் என்ன பாதிப்பு கொணர்ந்தான் என்பதை விவரிக்கிறார்.  இந்திய தத்தெடுப்பு சட்டங்களின் பல அடுக்குச் சிக்கல்கள், பன்னாட்டுத் தத்து, உள்நாட்டுத் தத்தெடுப்பு போன்ற பல முக்கியமான விஷயங்களைப் பற்றியும் எளிய சுவாரசியமான நடையில் இப்புத்தகம் பேசுகிறது.  45 வயதுக்கு மேலான பெற்றோருக்கு தத்துக் கொடுக்க இந்தியச் சட்டம், தத்து நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்பதால் முராரி, மௌரீன் தம்பதியர் அக்குழந்தையை பிறருக்கு விட்டுக் கொடுக்கிறார் என்பதை இப்புத்தகம் விளக்கும்.  வாசகர், பத்திரிகை விமர்சனங்களை இப்பக்கத்தில் காணலாம்.  இது ஒரு உணர்ச்சி மிக்க ஆனால் எங்கும் மிகைப்படுத்தப்படாத வித விவரிப்பைக் கொண்ட புத்தகம்.
http://www.timerimurari.com/reviewofgod.htm

இதை ஜீவத்துடிப்புடன் திறம்பட மொழிபெயர்த்துள்ள எஸ். ஷங்கரநாராயணனுக்குச் சொல்வனத்தின் நன்றி.