பட்ஜெட் 2010 – ஒரு பேட்டி

2010ஆம் ஆண்டின் நிதி அறிக்கை (budget) பற்றிச் சில கேள்விகளை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (பெங்களூரு) பேராசிரியர் திரு. ரா.வைத்தியநாதனுடன் உரையாடினோம். பெருகிவரும் தாராளமயமாக்கல், கிராமப் புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயம், உள்கட்டுமானம் போன்ற துறைகள் மீது இந்த பட்ஜெட்டின் கவனம் குறித்து உரையாடல் நீண்டது. அவருடைய பதில்கள் கீழே தொகுத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. மிகக் குறுகிய கால அவகாசத்தில் இவற்றை எமக்கு எழுதிய பேராசிரியர் ரா.வைத்தியநாதனுக்கு சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.

நிதி அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி தன்னுடைய பட்ஜெட் உரையில் 10%-க்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சி வரும் என்கிறார்.  இந்த பட்ஜெட்டினால் அது வருமா?  இன்றைய பணவீக்க நிலையில் இப்படி எல்லாம் பேசுவது வெறும் கனவா அல்லது எதார்த்தமாக சாத்தியமா?

Dr. வைத்தியநாதன்: பொருளாதார வளர்ச்சி, நிதி அறிக்கைகளால் நடப்பதல்ல.  இன்னும் சொன்னால், நிதி அறிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தடைக்கல்லாக வேண்டுமானால் இருக்கலாம். நம் நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் கிட்டத்தட்ட 45% போல கூட்டுப் பங்கு நிறுவனங்களாலும் (partnership), தனிநபர் முதலீட்டு நிறுவனங்களாலும்தான் ஏற்படுகிறது.  அவைதான் நம் பொருளாதாரத்தின் மைய ஊக்குசக்திகள் எனலாம்.  சென்ற வருடம் தவிர, கடந்த பல வருடங்களாக நாம் வருடத்துக்கு 8% அளவில் வளர்ந்து வருகிறோம். இது உண்மையான வளர்ச்சி வீதம்.  சென்ற வருடமும் சுமார் 7% ஆகவே இந்த வளர்ச்சி வீதம் இருந்தது.  வருகிற பத்தாண்டுகளில் நாம் ஆண்டுக்கு 10% த்துக்கு மேலாக வளர்வோம்.

முந்தைய பட்ஜெட்களோடு ஒப்பிட்டால் இதில் வங்கி / நிதித் துறையில் மட்டும் தாராளமயமாக்கல் மேலும் ஊக்குவிக்கப் படுகிறது. ஆனால் கிராமப் புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயம் போன்றவை முந்தைய நிலையிலோ அல்லது அதைவிடக் குறைவான நிலையிலோ இருப்பதாகத் தோன்றுகிறது.  இதன் விளைவு என்னவாக இருக்கும்? இன்று உணவுப் பொருள் விலைவாசி உயர்வு கிட்டத்தட்ட 18%-ஆக இருக்கும் நிலையில் இப்படி கிராமங்களையும், விவசாயத்தையும் இந்த பட்ஜெட் எப்படி அணுகி இருக்கிறது?  இதில் வளர்ச்சிக்கு வழி உண்டா?

விவசாயம் மாநிலத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ள துறை.  இதில் மத்திய நிதி அறிக்கைக்குப் பங்கு குறைவு.  ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் சிறு முதலீட்டு, விளிம்பு நிலை விவசாயம் வளராமல் தேங்கி நிற்கிறது.  நிறுவனமான விவசாயம், பெரும் விவசாயம்தான் வளர்ந்து வருகிறது.  எப்படியுமே நாட்டு மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 20 சதவீதம்தான்.  ஆனால் அந்தத் துறையில் வேலை பார்க்கும் மக்களோ நாட்டின் உழைப்பாளர்களில் 55%  இருக்கிறார்கள்.  இருந்தபோதும், இன்றைய நிலையில் விவசாயக் கூலிவேலைக்கு ஆட்களைக் கண்டுபிடிப்பது சிரமம்.  ஏனெனில் தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டம் (NRGEA- National Rural Employment Gurarantee act), இலவச அரிசித் திட்டம் போன்ற திட்டங்கள் கூலிக்காரர்கள் அருகி வருவதற்குக் காரணங்களாகின்றன.

—oooOOOooo—

இந்த நிதி அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் என்று ஒரு முக்கியமான தொழிலதிபர் சொல்லி இருப்பவை இவை:

1) நிதிப் பற்றாக்குறை இப்போது 6.9%.   இதை 2011 இல் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 5.5% ஆகக் குறைக்கத் திட்டம் என்கிறார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
2) திட்டச் செலவினங்கள 15% உயரும்,  திட்டமிடாச் செலவு 8.6% உயரும்.
3) 2011இல் நேரடி வரிகளை ஒழுங்குபடுத்தும் அறிக்கை (Direct Tax code) அமல்படுத்தப்படும். பொதுச் சேவை வரி (General Services Tax) புதிதாக விதிக்கப்படும்.
4) அடிப்படைக் கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கலும், செலவுத் திட்டமும் உயர்கின்றன.  கல்விச் செலவு உயர்த்தப்பட திட்டம்.  பொது நலச் செலவும் உயரத் திட்டம்.
5) வருமான வரி கட்டுவோருக்கு வரிச் சலுகைகள், ஆனால் மறைமுக வரிகள் உயர்கின்றன.
6) அரசுடைமை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதல் விரைவுபடுத்தப்படும்.

இவற்றை மனதில் கொண்டு எழுப்பப் படும் கேள்விகள் சில கீழே உள்ளன.

—oooOOOooo—

திட்டமிட்ட செலவு என்பது என்ன?  திட்டமிடாச் செலவு என்பவை என்ன?  இவை ஏன் உயர்ந்து கொண்டே இருக்கின்றன?

திட்டமிட்ட செலவுகள் என்பன நிலையான சொத்துகளை நிறுவ ஆகும் செலவுகள்.  உதாரணமாக, பாலங்கள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை நிர்மாணிக்க ஆகும் செல்வு.

நிலைத்த சொத்துக்களை ஏற்படுத்த உதவாத செலவுகள் எல்லாம் திட்டமிடப்படாத செலவினங்கள்.  சம்பளம், கூலி ஆகியன ஒரு உதாரணம்.  தோட்டங்களைப் பராமரிக்க ஆகும் செலவு இன்னொரு உதாரணம். வட்டி கட்டுவதோ, ஓய்வூதியங்களோ  இத்தகைய செல்வுகளே.

2009-10 காலத்தில் (ஏப்ரல் – டிசம்பர்) மொத்தச் செலவு – ஏழரை லட்சம் கோடி ரூபாய்கள் (ரூ. 7,500,000 கோடி).  இதில் திட்டமிட்ட செலவு 2.10லட்சம் கோடி ரூபாய்கள், அதாவது சுமார் 30%தான்.  திட்டமிடப்படாத செலவு என்பது 4.98 லட்சம் கோடி ரூபாய்கள், அதாவது சுமார் 78%.

[ ஏன் உயர்கின்றன என்பதை அடுத்து பார்ப்போம்.]

திட்டமிடாச் செலவுகளை 8.6% ம்,  திட்டமிட்ட செலவுகளை 15% ம் மட்டுமே உயரும்படி கட்டுப்படுத்தப் போவதாக நிதி அமைச்சர் சொன்னது எவ்வளவு தூரம் நம்பத்தக்கது?  நடக்கக் கூடியதா இது?

2009-2010 [மார்ச்-டிசம்பர்] கால இடைவெளியில், பொதுக் கணக்குத் தணிக்கையாளர் (Controller General of Accounts) அலுவலகததில் இருந்து கிட்டுகிற எண்ணிக்கைப் படி, திட்டமிடப்படாத செலவினங்கள் 14.2% உயர்ந்தன. அதற்கு முந்தைய காலகட்டத்தில் (2008-09) அதே செல்வு 44.2% உயர்ந்திருந்தது.  அதற்கு ஒரு காரணம் ஆறாம் சம்பளக் கமிஷனின் அறிக்கை அந்த வருடம் அமல்படுத்தப் பட்டிருந்தது.

2009-10 காலகட்டத்தில் திட்டமிட்ட செலவு அதற்கு முந்தைய காலகட்டத்தை (2008-09)  விட 23% உயர்ந்திருந்தது.

பெரும்பாலான நேரம் திட்டமிடப்படாத செல்வுகள் எக்கச்சக்கமாக எகிறிப் போவதற்கு ஒரு முக்கியக் காரணம் மானியங்கள் (Subsidies) அதிகரிப்பதே.  இவை நிதி அமைச்சர்கள் பட்ஜெட்டில் அளிக்கும் உறுதிகள் காப்பாற்றப் படாமல் போக ஒரு முக்கியக் காரணம்.

நேரடி வரிகளை சீராக்கும் முறையையும் (Direct Tax code), பொது பணிவரியைக் கொணர்வதையும் 2011 இல் அமல்படுத்தப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார்.  இந்த வரிகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?  இந்த வகை வரிகள் எவ்வளவு எளியவை அல்லது வசூலிக்க சுலபமானவை?  இவற்றில் சேதாரம் எத்தனை இருக்கும்?

பொதுப் பணி வரி நாடு தழுவியதான ஒன்று. எனவே, மறைமுக வரிக் கட்டமைப்புக்கு ஒரு சீரான அமைப்பைக் கொணரும். இப்போது மாநிலங்களிடையே வரிவிதிப்பில் நிறைய வேறுபாடுகள் இருப்பதால் மறைமுக வரிகளில் நிறைய ஓட்டைகள் வழியே வரி வசூலிப்பு சக்தி இழக்கிறது.  குறிப்பாக மாநில எல்லைப் பகுதிகளில் சரக்குகள் எளிதே இடம் மாற்றி எந்த மாநிலத்தில் வரி குறைவோ அங்கு இருப்பதாகக் காட்டப்பட்டு விடுகின்றன.  நியாயமாகச் சுங்கவரிகளாலோ, எல்லை தாண்டுவதற்கான வரியாலோ இவை கவனிக்கப் பட வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் மாநில வருமான வரி என்று ஒன்று உள்ளது, இந்தியாவில் அது கிடையாது.  விற்பனைவரி மட்டுமே உள்ளது.  பொது பணிவரி இந்த இடைவெளிகளை நிரப்பி, எல்லா தொழில்துறைகளையும் சமமாகப் பாதித்து நாளாவட்டத்தில் மறைமுக வரி அமைப்பை நேர்ப்படுத்தும்.

கல்வி, கட்டுமான அமைப்பு, மேலும் பொது சுகாதாரம் ஆகிய விஷயங்களில் திட்டமிடப்பட்ட செல்வு என்பது எப்படி இருக்கிறது?  இவற்றில் செலவிடப்படுவதில் எத்தனை பங்கு உண்மையில் மக்களுக்குப் போய்ச் சேருகிறது என்று நினைக்கிறீர்கள்?  என்ன ஒரு 15% இருக்குமா?

முக்கியமாக ஒன்றைக் கவனியுங்கள்.  பொது சுகாதாரம்,  கல்வி ஆகியன மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.  மாநில அரசுகளுடைய கட்டுப்பாட்டில் உள்ளன.  மத்திய அரசுக்குப் பங்கு இங்கு குறைவு.  இத்துறைகளில் சீர்திருத்தம் மாநிலத்தளவில் நிகழ வேண்டும். உதாரணமாக காமராஜ், ராஜாஜி போன்றார் பதவியில் இருந்த காலத்தில், பொது மருத்துவ மனைகளில்தான் தமது சிகிச்சைகளைப் பெற்றார்கள். இன்றோ மருத்துவ மனைகள் கவனிப்பற்றுச் சீர்குலைந்திருக்கின்றன.  எல்லா அரசியல் தலைவர்களும் அரசு மருத்துவ மனைகளிலேயே சிகிச்சை பெற்று வந்தால் இந்த நிலை உடனே மாறி மருத்துவமனைகள் சீராகி விடும்.  அதே போல அவர்களுடைய குழந்தைகள், வாரிசுகள் அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்தால் அந்த நிறுவனங்களின் தரமும் செயல்பாடும் கணிசமாக உயர்ந்து விடும்.

யூரோ கரன்ஸி நிலை மோசமானால் – கிரீஸின் நிதிப் பற்றாக்குறைப் பிரச்சினையால் – இந்தியாவுக்கு அதனால் நன்மையா, தீமையா?  யூரோ, டாலர் ஆகிய இரண்டும் சரிந்தால் இந்தியாவுக்கு நல்லதா அல்லது துன்பமா?  சீனாவின் பொருளாதாரம் மேற்கின் நிதி நிலை வீழ்ச்சியுறுவதால் பாதிக்கப்பட்டால் அது இந்தியாவுக்கு எப்படி பாதிப்பைத் தரும்?  நம் பட்ஜெட்களினால் நம் பொருளாதாரம் பாதிக்கப் படுவதை விட உலகச் சந்தையின் மாறுதல்களே கூடுதலான தாக்கம் கொண்டவை என்று சொல்லி விட முடியுமா?

இந்த நூற்றாண்டு ஆசியாவின் காலம்.  எனவே யூரோவும் டாலரும் வீழ்வது நடக்கவே போகிறது.  சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளே வரும சில பத்தாண்டுகளில் உலகில் பெரும் சக்திகளாக இருக்கும்.

சீனாவோடு ஒப்பிட்டால், நம் அரசின் செயல்பாடு வங்கி, நிதித்துறைகள், கிராமப்புற, விவசாயத் திட்டங்களில் எப்படி இருக்கிறது?

அப்படி ஒப்பிடுவது கடினம்.  ஏனெனில் சீனாவிடம் இருந்து கிட்டும் புள்ளி விவரங்கள் நம்பத்தக்கவையாக இல்லை.  அல்லது கிட்டுவதே இல்லை.  ஆனால் சம்பவங்களில் இருந்து கிட்டும் தகவல்சான்றுகளை வைத்துச் சொன்னால் சீனா இந்த மூன்று துறைகளிலுமே இந்தியாவை விட மேலான நிலையிலும், செயல்பாடு கொண்டதாகவும் இருக்கிறது என்று தெரிகிறது எனலாம்.  ஆனால் ஒரு கால அளவுக்குப் பிறகு இந்தியாவில் தோன்றி இருக்கும் தனியார் செயலூக்கம் இந்தத் துறைகளில் காட்டும் கவனம், இந்த வசதிகளை எளியாருக்கும் கிட்டும்படிச் செய்யும், அந்த முயற்சிகளால் நல்ல முன்னேற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்.

அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது பற்றிப் பல பத்தாண்டுகளாக இந்திய அரசு பேசி வருகிறது.  இதை முடித்து விட்டு அடுத்த கட்டத்துக்குப் போக இந்திய அரசுக்கு ஏன் இத்தனை வருடங்களாகின்றன? 40 வருடமாகக் கட்டிய அமைப்பை 40 வருடங்களானால்தான் விற்று முடிப்பார்களா?

நாம் ஏன் தனியார் மயமாக்க முனைகிறோம் என்பது குறித்துத் தெளிவு பெறுவது அவசியம்.  அரசுடைய நிதிப் பற்றாக் குறையைக் குறைக்கவா? நஷ்டம் தரும் நிறுவனங்களைக் கழித்துக் கட்டவா? மேலும் திறம்பட்ட நிர்வாகத்தை அவற்றுக்குக் கொணரவா? இந்தத் துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடவா? எது நம் குறிக்கோள்?  தனியார் மயமாக்குவது என்பது மட்டுமே ஒரு இலக்காக ஆக முடியாது.  அமைப்பின் எல்லா நோய்களையும் தீர்த்து வைக்க.  பழைய சந்தையே விடை என்ற கோஷங்கள் எல்லாம் அமெரிக்காவிலேயே இப்போது செல்லாக் காசாகி விட்டன.  அமெரிக்கர் கூட அந்தக் கோஷத்தை எழுப்புவதில்லை இப்போதெல்லாம்.  நம் அமைப்பும் மிகவும் குழப்பம் நிறைந்த ஒரு அமைப்பு. நிறைய பேர்களுக்கு இதில் அவரவர் நலன் காக்கும் நோக்கம் உள்ளது.  தவிர அரசு நிறுவனங்களைச் சரியான மதிப்பு போட்டு விற்பது என்பதும் எளிய செயலல்ல.

இந்த வகை அவசர விற்பனைகளில் அரசு குறைந்தது ஏதாவது லாபம் காணுமா?  அல்லது அரசு நிறுவனம் நடத்தி மக்களை மொட்டை அடித்தது போல விற்பனையால் வேறு மறுபடியும் மக்களை ஓட்டாண்டியாக்குமா அரசு?

பொறுமையாகவும், சாமர்த்தியமாகவும் செயல்பட்டு விற்றால், இந்த விற்பனைகள் மக்களுக்கு உதவும்.  ஒரு உதாரணம்:  மாருதி கார் நிறுவன விற்பனை.

பொதுவாக, அரசு என்ன திட்டமிடுகிறதோ, அதை நிறைவேற்றும் என்று நாம் சொல்ல முடியுமா?  அப்படிச் செய்து முடித்தால் விளைவுகள் எப்படி இருக்கும்? செய்ய முடியவில்லை என்றால்?

இந்திய அரசு முன்னை எல்லாம் விட நல்ல நிலையில் உள்ளது-  இப்போது இடது சாரிக் கட்சிகளை அரசு நம்பி இருக்கும் நிலையில் இல்லை என்பது கவனமாக இந்தத் தனியார் மயமாக்குதலை நடத்த வழி செய்கிறது.

—oooOOOooo—

நிதிப் பற்றாக்குறை பற்றிய சில குறிப்புகள் இவை:

யூரோ நாணயப் புழக்கம் உள்ள பகுதிகளில் ஒரு அச்சம் நிலவுகிறது.  கிரீஸ் நாடு இப்போது தன் கடன்களுக்கு வட்டி கட்டக் கூட முடியாத நிலையில் உள்ளது.  சமீபத்திய பன்னாட்டு வணிகச் சரிவு கிரீஸ் பொருளாதாரத்தைச் சரித்து விட்டது.  இதர யூரோப்பிய நாடுகளில் பலவும் பெரும் சரிவை எதிர்நோக்குகின்றன.  அவற்றிலும் வருடாந்திர நிதிப் பற்றாக்குறை மிக அதிகம்.  ஜெர்மன் செய்திப் பத்திரிகை டெர் ஷ்பிகல் இந்த விவரங்களைக் கொடுத்திருக்கிறது- (நாடுகள், நிதிப்பற்றாக்குறை அந்நாடுகளின் மொத்த வருட உற்பத்தியில் எத்தனை பங்கு என்பது சதவீதமாக)
கிரீஸ் – 12.7%
போர்ச்சுகல்- 8%
ஸ்பெயின் – 11.8%
ஃப்ரான்ஸ்- 8.3%
ஜெர்மனி- 3.4%
இதே போல அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட மிக அதிகமான நிதிப் பற்றாக்குறையில் சிக்கி இருக்கின்றன.  சீனாவில் இந்த நிலை எப்படி என்று தகவல் இல்லை. இவற்றை எல்லாம் குறித்து விளக்கம் தேவை.

—oooOOOooo—

நிதிப் பற்றாக்குறை என்பது ஏன் அவ்வளவு அபாயமானது?  அதைக் குறைப்பது ஏதோ உடனடியாகச் செய்யப்பட வேண்டியது என்பது போல எல்லாச் செய்தி நிறுவனங்களும் பேசுவதேன்? இந்தியாவுக்கு 5.5% நிதிப் பற்றாக்குறைதான் இருக்கப் போகிறது என்றால் அது நல்லதா?

பற்றாக்குறை என்பதே பதட்டப்படக் காரணமாகாது. பற்றாக்குறை என்பது கடன் வாங்குவதைச் சுட்டுகிறது.  கடன் வாங்கியதை ஊதாரித்தனமாக, பயனற்ற செலவுகளில் வீணடிக்காமல், நல்ல விளைவு தரும்படி செலவழித்தால் நிதிப் பற்றாக்குறை மூலம் நாட்டுப் பொருளாதாரத்தை இயக்குவது ஒன்றும் தவறில்லை.  நல்ல விதமான செலவால் மக்களுக்கு நன்மை பயக்கும்.  தனி நபர்கள் கூடத்தான் நிதிப் பற்றாக்குறையை சந்திக்கிறார்கள், கடன் வாங்கிச் சமாளிக்கிறார்கள்.  அப்படி வாங்கும் கடனை வைத்து பெரும் தீனிக்கும், மதுபானங்களுக்கும் செலவழிக்காமல், படிப்புக்கோ, வீடு கட்டவோ செலவழித்தால் அது நல்ல விதமான நிதி நிர்வாகமாகத்தானே இருக்கும்?  அதே போல, அரசு எப்படி நிதியைப் பயன்படுத்தியது, உருப்படியான விதமாக முதலீடு செய்ததா என்பதை வைத்துதான் நாம் எதுவும் சொல்ல முடியும்.

இந்திய நிதிப் பற்றாக்குறையை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதில் பெரும்பங்கு எதனால் எழுகிறது?  எரிபொருள் மானியமா, விவசாய மானியமா?  என்ன வகை மானியங்கள் மக்களுக்கு உதவுகிறவை?

இந்திய அரசின் செலவுகளில் முக்கியமான பாகம் வட்டி கட்டுவதும், ஊதியங்களும், ஓய்வூதியங்களும், மானியங்களும்தான்.  முதலிரண்டையும் இன்னும் சில காலமாவது குறைப்பது சாத்தியமில்லை.  எல்லா மானியங்களும் ஏழைமக்களுக்கு உதவக்கூடியவை அல்ல.  பணக்கார விவசாயிகளுக்கும் மானியங்கள் கொடுக்கப்படுகின்றன.  மத்திய வர்க்கமும் சமையல் எரிவாயுவுக்கு மானியம் பெறுகிறார்கள்.

இந்த மானியங்கள் கடந்த 20 ஆண்டுகளில் எப்படி மாறி வந்திருக்கின்றன?  பொருளாதாரத்தைத் திறந்த அமைப்பாக மாற்றத் தீர்மானித்த பிறகு நாட்டுப் பொருளாதாரத்தின் மீது அரசுக்கு இருக்கும் கட்டுப்பாடு குறையவில்லையா?

நாட்டுப் பொருளாதாரத்தின் மீது அரசுக்கு இருக்கும் கட்டுப்பாடு வளரவில்லை எனலாம்.  ஊதியங்களும், சம்பளங்களும் பெரிதும் எகிறி இருக்கலாம் அல்லது வீழ்ந்திருக்கலாம்.  இரண்டும் நடக்கவில்லை.  அதேபோல அரசு [மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, மேற்கு வங்கத்தைத் தவிர] ஓய்வூதியங்களுக்கு என நன்கு வரையறுக்கப் பட்ட சேமிப்பு முறைக்கு மாறி இருக்கின்றன.  இது 2004 ஆம் வருடத்தின் துவக்கத்தில் இருந்து மாறியாயிற்று.  இந்தப் புது ஏற்பாட்டில், உழியர்கள் தம் ஓய்வூதியத்துக்கு என தம் சம்பளத்தில் 10% கட்டுகிறார்கள், அரசு ஒரு 10% இந்தத் தொகைக்கு ஈடாகக் கொடுக்கிறது.  அரசுடைய ஈடான தொகை ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையில் அந்தச் சேமிப்பு நிதியில் போடப்படுகிறது.  இந்தச் சேமிப்பை எப்படி முதலீடு செய்வது என்பதை அந்தந்த ஊழியர்கள் தீர்மானிக்கலாம்.  இது அரசுடைய பளுவைக் குறைக்கிறது.  ஒரு வழியில், நாம் முன்னெப்போதையும் விட இந்த விஷயங்களில் திறமையுடன் செயல்படத் துவங்கி இருக்கிறோம். ஆனால் நமது வழக்கமான மெதுவான ஓட்டத்தில் இயங்குகிறோம் என்பது இருக்கவே இருக்கிறது.  அத்தோடு நாம் எப்போதும் குறையையே  பெரிதுபடுத்திச் சொல்லும் ஒரு ஜனநாயக அமைப்பை அல்லவா வைத்திருக்கிறோம்.

இந்த பட்ஜெட் நிதிப் பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கும்?  நாட்டின் நிதி நலனை இது முன்னேற்றுமா?  நம் நாணயத்தின் மதிப்பை இது எபபடிப் பாதிக்கப் போகிறது?

நிதி அறிக்கைகள் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதாக எப்போதும் பேசும், ஆனால் அவற்றால் ஏதும் செய்ய முடியாது.  பொருளாதாரம் வருடத்திற்கு  8% போலத் தொடர்ந்து பல வருடங்கள் வளர்ந்தால், அரசுடைய வரி வருமானம் உயர்ந்து பற்றாக்குறை ஓரளவு குறையும்.  நாட்டுப் பொருளாதார வளர்ச்சிதான் பற்றாக்குறையைச் சமாளிக்க வழி.  அன்னிய முதலீடு நம் பொருளாதாரத்தில் எப்போதுமே 10 சதவீதத்துக்கு மேல் இருந்ததில்லை.  எனவே அது ஒரு பிரச்சினை என்று சொல்ல முடியாது.  நம் வளர்ச்சி உள்நாட்டு சேமிப்பை நம்பித்தான் மேலெழுகிறது.  நமது சேமிப்பு கிட்டத்தட்ட நாட்டு  மொத்த உற்பத்தியில் 40% ஆக இன்னும் இருக்கிறது ஒரு சாதகமான அம்சம்.

—oooOOOooo—

அரசு வருமானத்தைப் பார்ப்போம்.  இந்திய அரசுக்கு எது முக்கியமான வருமான வழி?  அரசு இந்த வருமானத்தை ஈட்டுவதை எவ்வளவு திறம்படச் செய்கிறது? இதில் கசிவு மூலம் நஷ்டம் நிறையவா, குறைவாகத்தானுள்ளதா?  உதாரணமாக வரிவசூல் செய்வதில் இந்திய அரசு நிர்வாகத் திறமை எப்படிப்பட்டது? எந்த வரி இருப்பதில் அதிக வருமானம் ஈட்டுகிறது?  அந்த வரியை இந்த நிதி அறிக்கை எப்படிக் கையாண்டிருக்கிறது?

சில அடிப்படைகளை நாம் அறிய வேண்டும்.  பொருளாதாரத்தில் அரசுடைய பங்கு (மொத்த உற்பத்தியில்) சுமார் 20 சதவீதமே.  இதில் நிதி அறிக்கையின் தாக்கம் நேர்முக வரிகள் வழியேதான்.  அவை கடந்த பத்தாண்டுகளில் ஓரளவு ஸ்திரப்பட்டு விட்டன.  செலவினங்களைக் குறைக்க முடியாததும் ஒரு பிரச்சினை – ஏனெனில் சம்பளங்கள், ஓய்வூதியங்கள், வட்டி கொடுப்பது, மானியங்கள் ஆகியன எளிதில் குறைக்கப்பட மாட்டாதவை.

நாம் ஏதோ நிதி அறிக்கையால் பெரும் மாறுதல்களைக் கொணர முடியும் என்பது போலப் பேசுவது வெறும் பொருளற்ற நாடகம்.  இது மத்திய வர்க்கத்தினருக்கும், ஊடகங்களுக்கும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே இருக்கிறது.  சாமானிய மனிதர் மீது ஒரு நிதி அறிக்கையின் தாக்கம் நாளாவட்டத்தில் 10% போலத்தான் இருக்கும்.

நேரடி வரிகளின் அடுக்குகளைச் சிறிது குறைத்து, குறைந்தபட்ச வருவாயை உயர்த்தி இருப்பதனால் மொத்த வருமானம் எப்படி பாதிக்கப் படும்?  அரசுக்கு இதனால் மொத்தத்தில் வருமானம் கூடுமா, குறையுமா?  பாதிக்கப் பட்ட மக்களுக்கு இதனால் ஆதாயம் என்று ஒரு தோற்றம் தரப்படுகிறதே, அது நம்பத்தக்கதா?

வரி விகிதங்களில் குறைப்பு, அல்லது வரி அடுக்குகள் அதிகரிப்பு எல்லாம் மொத்த வரி வருமானத்தை அதிகம் பாதிக்காது.  முன்னைவிட விதிக்கப்படும் வரியைச் செலுத்துவது கூடி வருகிறது.  சென்ற வருடம் நடவடிக்கை அதிகரித்ததால், நேரடி வரிகளின் மூலம் வருமானம் வருவதில் நல்ல ஏற்றம் தெரிந்தது.  தேச வருமானம் பெருகப் பெருக வரிவருமானமும் பெருகத்தானே செய்யும்.

சென்ற வருடம் பட்ஜெட்டுக்கு பிறகு பங்குச் சந்தை சரிந்தது.  இந்த முறை  உயர்ந்திருக்கிறது.  இந்த முறை பட்ஜெட் பற்றி அதிகம் எதிர்பார்ப்பு இல்லாததால் அப்படி என்று சிலர் சொல்கிறார்கள்.  இதெல்லாம் உண்மையிலேயே பங்குச் சந்தையைப் பாதிக்கும் காரணங்களா?  அல்லது அரசு சந்தையை இப்படி பாதிக்கத் திட்டமிட்டுச் செய்கிறதா?  இப்படிச் செய்வது அரசு நிறுவனங்களை விற்கும் முயற்சி என்று நாம் கருத முடியுமா?

எதிர்மறையான அம்சங்கள் அறிக்கையில் இல்லை என்பதால்தான் பங்குச்சந்தை உயர்ந்திருக்கிறது.  இந்த நிதி அறிக்கை நடுத்தர மக்களுக்குச் சிறிது உதவி இருக்கிறது, அதனால் அவர்களிடம் இருந்து கூடுதலான சேமிப்பு ம்யூசுவல் ஃபண்ட்ஸ்களில் முதலீடு செய்யப்படும் வாய்ப்பு எழுகிறது.  நன்றாக நடக்கும் அரசு நிறுவனங்கள் விற்கப்படுவதும் பங்குச் சந்தையில் எழுச்சியைக் கொணரும்.

நேர்முக வரியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?  அதை மொத்தமாகக் குறைப்பதே நல்லதா? அல்லது குறிப்பிட்ட தளங்களுக்கு உயர்த்தி பொதுமக்களுக்குக் குறைப்பது நல்லதா?  அல்லது நிறைய மக்களை இதன் தாக்கத்துக்கு உட்படுத்தி சராசரி ரேட்டைக் குறைப்பது மேலான முறையா?  இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய அமைப்பில் எது நல்லது?

மறைமுக வரிகளால் மக்கள் மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க நேர்முக வரிகள்தான் வழி.   மறைமுக வரிகள் மக்களை உடனடியாகத் தாக்குபவை. நேர்முக வரிகளில் நமக்கு இப்போது இருப்பவை, உலகளவில் ஒப்பிட்டால், சராசரி வரிவிகிதம்தான். இதற்கு மேல் இவற்றைக் குறைக்க அவசியம் இல்லை.  இந்தியச் சூழலில் வருட வருமானம் ஒரு லட்சம் என்பதே நல்ல தொகை.  இப்போதுள்ள விலக்குகளை எல்லாம் சேர்த்தால் வருட வருமானம் 3.5 லட்சம் வரை யாரும் ஏதும் வருமான வரி கட்டத் தேவை இல்லாத நிலை இருக்கிறது.  நடுத்தர வர்க்கத்தினருக்கும், மேல்மட்டத்தினருக்கும் அரசுடைய வருமானத்துக்குப் பங்களிக்கும் கடமை இருக்கிறது என்பதை நாம் மறக்கலாகாது.

மது மீது அதிகம் வரி ஏற்றாமல், புகை பிடிப்போரை மட்டும் வரியால் தாக்குவதில் ஏதும் அரசியல் உள்நோக்கு உண்டா, அல்லது புகை பிடித்தலால் நாட்டுப் பொது சுகாதாரத்துக்கு நஷ்டம் அதிகம், மதுவால் அத்தனை இல்லை என்பது உணமையான நோக்கமா?  இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசியல் தலையீட்டுக்கு சக்தி கூடுதல் குறைவு என்பது ஒரு காரணமா?

பார்க்கப் போனால் ஏற்கனவே மதுபானங்கள் மீது உள்ள வரி விகிதம் உச்சத்தில்தான் உள்ளது.  சில பானங்கள் மீது 100% வரி உள்ளது.  ஆனால் இவற்றில் இருந்து  கிடைக்கும் மொத்த வருவாய் புகையிலை வரிகளோடு ஒப்பிட்டால் குறைவுதான்.  ஏனெனில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டில் மிக அதிகமாகவும், பரந்ததாகவும் உள்ளது.  எனவே புகையிலை வரிகள் மதுவரிகளை விடக் கூடுதலாகப் பயன்படுத்தப்படுவது நடக்கிறது.  மேலும் மது வரிகள் மாநிலக் கட்டுப்பாட்டில் வேறு உள்ளதால் – அவை ஆயத் தீர்வையால் (Excise duty) கவனிக்கப்படுகின்றன.  அதனால் அவை மாநில நிதி அறிக்கைகளில்தான் காணப்படும்.

எத்தனை வருடங்கள் அரசு எரிபொருள் விலையைக் கீழே வைத்திருக்க முடியும்?  அல்லது இதைச் சுதந்திரச் சந்தையாக விட்டால் மக்களுக்கு மேலான விலை கிட்டுமா?  இப்போதைய நிலை மக்களுக்கு ஆதாயமான வழியா?  பொதுத் துறையைத் தனியார் மயமாக்கும் பாதையில் எரிபொருள் நிறுவனங்களையும் தனியார் மயமாக்கினால் மக்களுக்கு விலைவாசியில் மேலான நிலை கிட்டுமா?

வளரும் நாடுகளில் இன்னும் ஒரு பத்தாண்டுகளாவது நாம் எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.  குறிப்பாக டீசல், மண்ணெண்ணெய் ஆகியன விலைக் கட்டுப்பாட்டிலிருந்தாக வேண்டி இருக்கிறது.  இந்தியரான கே.ஆர். ஸ்ரீதர் என்பவர் கண்டு பிடிப்பாக ‘ப்ளூம் எனர்ஜி’ என்று  வந்திருக்கிறதே ஒரு புது எரிபொருள் பயன்படு முறை, அது வெற்றி பெற்றால் இந்தியா போன்ற நாடுகளுக்கு நல்லதாக இருக்கும்.  மற்றபடி எண்ணெய் நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக ஆக்கினால் கூட எரிபொருள் கட்டுப்பாடு தொடரவே செய்யும்.

சிதம்பரத்தைப் போலில்லாமல் ப்ரணாப் முகர்ஜி சம்பளக்காரர்களுக்குச் சலுகை கொடுத்ததாக ஒரு பிம்பம் இருக்கிறது.  இது அவர் வங்காளி என்பதாலா, அல்லது ப்ரணாப் சிதம்பரத்தின் பாதையில் இருந்து அவ்வளவு மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துப் பொருளாதாரத்தை நடத்த முயல்கிறாரா? சம்பளக்காரர்களுக்குச் சலுகை கொடுப்பது பொருளாதாரத்தை மேம்படுத்துமா அல்லது இது பொய்த் தோற்றம்தானா?

சிதம்பரம் ஓரளவு சிந்தனாவாதி.  ப்ரணாப் தா வேருள்ள அரசியல்வாதி.  ப்ரணாபிற்கு கீழ்மட்ட வாழ்க்கை பற்றிக் கூடுதலாகத் தெரியும், அதனால் அவர் நடுத்தர மக்களுக்கு ஓரளவு திருப்தியைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.  அதே நேரம் அவர் எரிபொருள் விலைகளை உயர்த்தியது அந்த உயர்வு அவசியம் என்று கருதியே.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் முந்தைய பட்ஜெட்களை விட எந்த விதத்தில் பெரிய மாறுதல் எதையும் கொணர்ந்தது?   அல்லது ஏதும் மாறுதலே இல்லையா?

பொதுவாக நிதி அறிக்கைகள் பெரும் மாறுதல்களைக் கொணர வாய்ப்பில்லை.  ஏனெனில் நிதி அமைப்பில் வருவாயிலும், செலவு வகையிலும் நிறையத் தடைகள் உள்ளன.  அவற்றை மாற்றுவது எளிதல்ல.  இந்த அறிக்கை மத்திய வர்க்கத்தினருக்குச் சற்று உற்சாகம் தந்திருப்பதற்கு ஒரு காரணம் வரிக் குறைப்பு.  அவர்கள் வாக்கு வங்கி ஆயிற்றே.