சில வருடங்களுக்கு முன்னால் ராமர்பிள்ளை என்றொருவர் ஒரு (தந்திரக்) குச்சியால் கலக்கி தண்ணீரில் மூலிகைப் பெட்ரோலைத் தயாரித்துத் தமிழ்நாட்டையே கலக்கியது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட அதற்கிணையான பரபரப்பை அமெரிக்காவில் கிளப்பியிருக்கிறார் ஒரு இந்தியர். பெயர் Dr.K.R.ஸ்ரீதர். ஆனால் இது ராமர்பிள்ளை போன்ற டுபாக்கூர் கலக்கல் இல்லை. கூகுள், பேங்க் ஆஃப் அமெரிக்கா, வால்-மார்ட், ஈபே போன்ற மாபெரும் நிறுவனங்கள் மிலியன் மிலியன்களாக டாலர்களை நம்பிச் செலவு செய்யுமளவுக்கு நம்பகமான கண்டுபிடிப்பு.
ஸ்ரீதரின் “ப்ளூம் எனர்ஜி” (Bloom Energy- மலரும் சக்தி என்று அர்த்தம்) என்ற நிறுவனம், தற்போதைய மின்சாரத் தேவைக்கான மாற்று எரிபொருள் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. தற்போதைய மின் உற்பத்தி நிலத்தடிப் படிவங்களிலிருந்து கிட்டும் எரிபொருள்களின் (நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு போன்ற ஃபாஸில் எரிபொருள்கள்) போன்றவற்றையே நம்பியிருக்கிறது. அவற்றின் இருப்பு குறைவாகிக் கொண்டுவரும் வேளையில், அந்த எரிபொருட்களின் கார்பன் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் வேளையில், இந்த மாற்று எரிபொருளின் வரவு ஒரு நம்பிக்கை வெளிச்சக் கீற்றாகத் தெரிகிறது.
இந்த மாற்று எரிபொருளின் பெயர் – ப்ளூம் எனெர்ஜிப் பெட்டகம் (Bloom Energy Box). இந்த மாற்று எரிபொருள் ‘எரிபொருள் மின்கலம்’ (Fuel Cell) என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘எரிபொருள் மின்கலம்’ என்ற பெயரைக் கேட்டு என்னவோ, ஏதோ என்று பதற வேண்டாம். நம் வீட்டில் தாத்தா உபயோகிக்கும் பெரிய எவர்சில்வர் டார்ச்சிலிருந்து, இப்போது வந்திருக்கும் டிஜிட்டல் கேமரா, சுவரில் தொங்கும் அஜந்தா க்வார்ட்ஸ் கடிகாரம் வரை அனைத்துக்கும் சக்தி தரக்கூடிய எவரெடி, ட்யூரசெல் பேட்டரிகளின் அதிநவீன, மிக மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் ஃபூயல் செல்.
சாதாரண பேட்டரிகளில் ஏற்கனவே சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் வேதியியல் சக்தியை, அது தீரும் வரை மின் சக்தியாக மாற்றம் செய்து உபயோகப்படுத்திக் கொள்கிறோம். ஆனோடு (Anode), கேதோடு (Cathode), எலெக்ட்ரோலைட் இந்த மூன்றும்தான் பேட்டரியாகட்டும், நேற்றைய வரவான ஃபூயல் செல்லாகட்டும் எல்லாவற்றிலும் இருக்கும் அடிப்படைக் கட்டமைப்புகள். இரண்டு பக்கம் இரண்டு மின்சாரம் வழங்கும் குச்சிகள் அல்லது தகடுகள், நடுவே சக்தி கேந்திரம் என்று புரிதலுக்காக எளிமையாக உருவகித்துக் கொள்ளலாம்.
ஃபூயல் செல்களில் இந்த வடிவத்தில் கொஞ்சம் மாறுதல் ஏற்படுகிறது. ஒரு தட்டின் மேல் எரிவாயுவும், இன்னொரு தட்டின் மேல் காற்றும் அனுப்பப்படுகின்றன. காற்றிலிருக்கும் ஆக்ஸிஜன், எரிவாயுவுடன் வேதிவினை புரிந்து மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த வேதிவினையை துரிதப்படுத்த வினையூக்கிகளும் (Catalyst) இந்த ஃபூயல் செல்களில் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. இந்த ஃபூயல் செல் தொழில்நுட்பம் ஒன்றும் புதிய விஷயமல்ல. 1800 களிலேயே கண்டறியப்பட்டு வெற்றிகரமாகச் சோதனையும் செய்யப்பட்டது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாஸா இதை தன்னுடைய அப்போலோ மிஷன், ப்ராஜக்ட் ஜெமினி போன்ற ப்ராஜக்ட்களில் வெற்றிகரமாக உபயோகித்தும் கொண்டது. United Technologies Corporation என்ற அமெரிக்க நிறுவனம் ஃபூயல் செல்கள் வழியாக மின்சாரம் தயாரிப்பதை ஒரு தொழிலாகவே செய்து பெரிய பல்கலைக்கழகங்களுக்கும், ஆராய்ச்சிக் கூடங்களுக்கும் விற்று வருகிறது.
அப்புறம் என்ன புதிதாகச் செய்துவிட்டது ஸ்ரீதரின் ”ப்ளூம் எனர்ஜி” நிறுவனம்?
பொதுவாக ஃபூயல் செல்களில் உபயோகப்படுத்தப்படும் எரிவாயு ஹைட்ரஜன். வினையூக்கி ப்ளாட்டினம் துகள்கள். இரண்டுமே படு காஸ்ட்லியான சமாச்சாரங்கள். இதனால் ஃபூயல் செல்களிலிருந்து மின்சாரம் எடுப்பது நடைமுறைக்கு ஒத்துவராத, பரவலாக உபயோகப்படுத்த முடியாத விஷயமாக இருந்து வந்தது. கடந்த ஐம்பது வருடங்களாக ஃபூயல் செல்களில் நடைபெற்று வந்த ஆராய்ச்சிகள் எல்லாமே குறைந்த செலவு பிடிக்கக் கூடிய, எளிதாகக் கிடைக்கக் கூடிய மூலப்பொருட்களிலிருந்து எப்படி மின்சாரம் உற்பத்தி செய்வது என்பதைச் சுற்றியே நடந்தது.
பத்து வருடங்களுக்கு முன், நாஸாவுக்கு ப்ராஜக்ட்டுகள் செய்துவந்த அரிஸோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr.K.R.ஸ்ரீதரன் தனியாக “ப்ளூம் எனர்ஜி” என்றொரு நிறுவனம் ஆரம்பித்து இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் படு ரகசியமாகவே இருந்து வந்தன. அதன் காரணமாகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இந்நிறுவனத்தைச் சுற்றி இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 24-ஆம் தேதியன்று கலிபோர்னியா மாநில ஆளுநர் அர்னால்ட் ஷ்வாட்ஸ்நேகரின் உற்சாகமான வரவேற்புடன் ப்ளூம் பெட்டகத்தை (Bloom Box) உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதரன்.
ப்ளூம் பெட்டகத்தில் ஹைட்ரஜன் எரிவாயுவுக்கு பதிலாக மாட்டு சாணம், தாவரச் சக்கைகளிலிருந்து கிடைக்கும் உயிரி எரிவாயு (Bio Fuel) உபயோகப்படுத்தப்படுகிறது. உயர் வெப்பத்தில் செயல்படுவதால் ப்ளாட்டினம் துகள்கள் போன்ற விலை உயர்ந்த வினையூக்கிகளுக்கும் வேலை இல்லை. இந்த காரணங்களால் ப்ளூம் எனர்ஜி நிறுவனம் தயாரித்த ஃபூயல் செல்களின் விலை மற்ற ஃபூயல் செல்களைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்தது. உயிரி எரிவாயுவைப் பயன்படுத்துவதால் கார்பன் கழிவுப்பொருளும் அறுதியாகவே இல்லாமல் ஆனது.
ஸ்ரீதரின் அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு புறம் குறைந்த செலவில் மாற்று எரிபொருள் என்று கொண்டாடப்பட்டாலும், இன்னொரு புறம் நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. பலரும் இவ்வளவு விரைவில் கரி எரிபொருளிலிருந்து விடுபடுவோம் என்று நம்பத் தயாராக இல்லை. சிலிக்கான் செராமிக் அட்டையில் செய்யப்பட்ட எலக்ட்ரோலைட் மீது இரண்டு புறமும் தடவப்பட்டிருக்கும் வண்ணப்பொருள் என்னவென்ற ரகசியத்தை ஸ்ரீதரன் இன்னும் வெளியிடவில்லை.
ஆனால் சென்ற வருடத்திலிருந்தே இந்த ப்ளூம் பெட்டி மேலே சொல்லப்பட்ட கூகுள், ஈபே, வால்-மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் வெற்றிகரமாகச் சோதனை வடிவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. நம் வீட்டிலிருக்கும் குளிர்சாதனப்பெட்டி அளவில் இருக்கும் ஒரு ப்ளூம் பெட்டி 30,000 சதுர அடி அளவிலான ஒரு அலுவலகத்துக்கோ, அல்லது நூறு வீடுகளுக்கோ பல மெகா வாட்டுகள் மின்சாரம் சப்ளை செய்ய முடியும்.
இந்த ப்ளூம் பெட்டிகளின் வணிகப்படுத்துதல் குறித்தத் தீவிர விவாதங்களும், திட்டங்களும் நடந்தபடி இருக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவரான கே.ஆர்.ஸ்ரீதர்தான் இப்போது அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் வெறித்துப் பார்த்தபடி இருக்கும் ஆராய்ச்சியாளர். முந்நாள் அமெரிக்க மாகாண செக்ரட்டரி காலின் பொவெலும் ப்ளூம் நிறுவனத்தின் ஒரு உறுப்பினர் என்பது கூடுதல் தகவல்.
சொல்வனத்தின் சென்ற இதழில் நான்ஸி க்ரெஸ் என்னும் எழுத்தாளரின் ஒரு அறிவியல் கதை பிரசுரமாகி இருந்தது. ஆசிரியர் குறிப்பில் அவர் எழுதிய மூன்று புகழ் பெற்ற நாவல்கள் பற்றிய குறிப்பு இருந்தது. அதில் முதல் நாவலான ஸ்பெயினில் பிச்சைக்காரர்கள் (Beggars in Spain) என்னும் நாவலில், இப்படி ஒரு அசாதாரணமான எரிபொருளை- குளிர் உருக்கிணைவு (Cold fusion) வழியே மிக மிகக் குறைவான செலவே ஆகும் ஒரு முறையை – கென்ஸோ யாகாய் எனும் ஒரு ஜப்பானியர் கண்டுபிடிக்கிறார். அன்று ஜப்பான் இன்னும் உச்சத்தில் இருந்த நாடு. சீனா இப்போதிருக்கும் அளவுக்கு பெரியாளாகவில்லை.
இந்தியா அப்போதுதான் தடுக்கி விழுந்து உலகச் சந்தைப் பொருளாதாரம், அரசாங்க அதிகாரிகளின் அட்டகாசப் பொருளாதாரத்தை விடப் பலமடங்கு மேல் என்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தது. அதனால் நான்ஸி க்ரெஸ் இப்படி ஒரு கண்டுபிடிப்பு ஜப்பானியரிடம் இருந்தே வரும் என்று எண்ணி இருக்கக் கூடும். கீழ்ப்படியில் அமர்ந்திருந்த இந்தியாவில் இருந்து இத்தகைய கற்பனை சக்தி எழுந்து வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
1991 இல், எரிபொருளை உலகச் சந்தையில் வாங்க அன்னியச் செலாவணி இல்லாத அளவுக்கு திவால் நிலையில் இருந்த இந்திய அரசு தன்னிடம் இருந்த தங்கக் கட்டிகளை அடமானம் வைத்து எண்ணெயை உலகச் சந்தையில் வாங்கியது. [1] அப்படி ஒரு கேவல நிலையில் இருந்த இந்திய அரசை நரசிம்மராவ் என்னும் ஒரு தென்னிந்தியப் பிரதமர் மீட்டெடுத்து, சந்தைப் பொருளாதாரத்தின் வழியே ஓரளவு தட்டி எழுப்பி நிறுத்தினார். அவரை ஆளும் கூட்டத்து வடக்கிந்தியரும், அவரது மாநிலத்து மக்களும் பின்னாளில் அவமானப்படுத்தி ஒழித்த அவலத்தையும் நாமறிவோம்.
அதே போன்றதொரு எரிபொருள் பிரச்சினை இன்னும் இந்தியாவை விட்டு விலகி விடவில்லை. இந்நிலையில் இப்பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு தென்னிந்தியர் இன்று வெளிவந்திருக்கிறார் என்பது மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. இப்படி இந்திய அறிவியலாளர் உலக அரங்கில் எழுந்து வரவே 20 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
நான்ஸி க்ரெஸ்ஸின் நாவலில் அந்த மலிவு எரிபொருள் எப்படி மொத்த உலகின் சமுதாய அடுக்கு முறைகளையே பொருளற்றதாக்குகிறது என்று விரியும். கே.ஆர்.ஸ்ரீதரின் இந்தப் பெட்டகம் உலக சமுதாயத்தை அப்படி ஒரு நிலைக்குக் கொண்டு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் இந்தியா போன்ற நாடுகள் எண்ணெய் நாடுகளின் கொடும் பிடியில் இருந்து விடுபடவும், கரிக் கழிவால் சூழலும் வெப்ப தட்பமும் சீரழியாமல் இருக்கவும், பெருத்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான எரிபொருளைப் பெறவும் இது போன்ற பாதை விரிப்புகளையே நம்பி இருக்கின்றன. இவர் ஒரு இந்தியர் என்பது இந்தியாவிலேயே இந்த வகை முன்னெடுப்பு நேரலாம் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது. சாதிப்போமா?
——————————————————————————————————–
குறிப்பு:
1] இந்தியப் பொருளாதாரச் சிக்கல் 1991 ஆம் ஆண்டு எப்படி இருந்தது, இந்திய அரசு தங்கக் கட்டிகளை அடமானம் வைத்து எப்படிக் கடன் வாங்கி எரிபொருள் வாங்கியது போன்ற தகவல்களை இந்த ஆய்வுக் கட்டுரையில் காணலாம். http://www.cid.harvard.edu/hiid/530.pdf